என் மலர்
ஆன்மிகம்
- குருபகவான் கைகளை கூப்பிய நிலையில் அமர்ந்த கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.
- தல தீர்த்தமாக ‘தாயார் குளம்’ உள்ளது.
கும்பகோணம் பகுதியில் அமைந்துள்ளதைப் போலவே காஞ்சிபுரத்திலும் பழமையான நவகிரக தலங்கள் அமைந்துள்ளன. அத்தகைய தலங்களில் குரு பரிகார தலமாக விளங்குவது, காஞ்சி மாநகரின் தென்திசையில் வேகவதியாற்றின் வடகரையில் பிள்ளையார்பாளையம் பகுதியில் உள்ள அருள்மிகு கமலாம்பிகை உடனுறை ஸ்ரீ காயாரோகணேஸ்வரர் திருக்கோவில் ஆகும்.

தல வரலாறு
கோவில்களின் நகரமான காஞ்சியில் அமைந்துள்ள எண்ணற்ற சிவத்தலங்களுள் மிக்க சிறப்புடைய தலங்கள் மூன்று. அவை திருவேகம்பம், கச்சபேசம் மற்றும் காயாரோகணம் ஆகும். இத்தலங்கள் முப்பெருந்தேவியராகிய காமாட்சி, சரஸ்வதி, லட்சுமி ஆகியோர் தவம் செய்து வழிபட்ட பெருமை உடையவை.
இவற்றுள் காஞ்சிக்கு உயிரென சிறந்த உத்தம கோவிலாக தவத்திரு மாதவச் சிவஞான சுவாமிகள் உரைப்பது காயாரோகணம். காயம் என்றால் 'உடம்பு'. ஆரோகணம் என்றால் 'ஏற்றிக் கொள்ளுதல்'.
ஈசன் ஒரு சமயம் பிரம்மன் மற்றும் திருமால் ஆகியோரின் இறுதிக்காலத்தில் அவர்களை ஒடுக்கி, அவர்களின் திருஉடலைத் தம் தோள்மீது தாங்கி நடனம் செய்ததால், இத்தலம் காயாரோகணம் என்ற பெயரைப் பெற்றது என்கிறது இத்தல வரலாறு.
லட்சுமி தேவி, காயாரோகணேஸ்வரரை வில்வத்தால் அர்ச்சனை செய்து திருமாலைத் தன் கணவனாகப் பெற்றாள். குரு பகவான் வேகவதி ஆற்றின் தென்கரையில் உள்ள 'தாயார்குளம்' என வழங்கப்படும் காயாரோகணத் தீர்த்தத்தில் நீராடி காயாரோகணேசுவரரை வழிபட்டு, தேவர்களுக்குக் குருவாகும் வரம் பெற்றார்.
இதனால் இக்கோவிலில் லட்சுமி மற்றும் குரு பகவான் ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகள் அமைந்துள்ளன. எமன், காயாரோகணேசுவரரை பூஜை செய்து தென்திசைக்குத் தலைவனாகும் பேறு பெற்றான். இத்தலத்திற்கு வந்து வழிபடுவோர் செல்வம், அறிவு மற்றும் வீடுபேறும் பெறுவர் என்பது ஐதீகம்.

கோவில் அமைப்பு
இத்தலம், நுழைவு வாசலுடன் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. நுழைவு வாசலில் குரு பகவான், பிரம்மா, சிவபெருமான், விஷ்ணு, பார்வதி தேவி சிற்பங்கள் அமைந்துள்ளன.
நுழைவுவாசலைக் கடந்து உள்ளே நுழைந்தால் மூன்று நிலை ராஜகோபுரத்தைக் காணலாம். உள்ளே பலிபீடமும், நந்தியும் தரிசனம் தருகின்றன.
கருவறையில் மூலவர் காயாரோகணேஸ்வரர் கிழக்கு திசை நோக்கி அமைந்து, லிங்க சொரூபத்தில் காட்சி தருகிறார். கருவறையின் பின்புறச் சுவற்றில் சோமாஸ்கந்தர் சிற்பம் காட்சி தருகிறது.
கோட்டங்களில் விநாயகப்பெருமான், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீபிரம்மா மற்றும் துர்க்கை ஆகிய தெய்வங்கள் காட்சி தருகின்றனர். துர்க்கைக்கு எதிரில் சண்டிகேஸ்வரர் சன்னிதி அமைந்துள்ளது.
கருவறை கஜப்பிருஷ்ட வடிவத்தில் அமைந்துள்ளது. இத்தகைய வடிவமைப்பு, தொண்டை மண்டலத்திற்கே உரிய சிறப்பாகும். தெற்கு திசை நோக்கி அமைந்த தனிச் சன்னிதியில் கமலாம்பிகை என்ற திருநாமத்துடன் அம்பாள் காட்சி தந்து அருள்கிறார்.
சுற்றுப்பிரகாரத்தில் ஸ்ரீகற்பக விநாயகர், வள்ளி தேவசேனா சமேத ஆறுமுகன், ஸ்ரீமகாலட்சுமி, நவகிரகங்கள், ஸ்ரீபைரவர், சூரிய பகவான் ஆகியோரின் சன்னிதிகள் அமைந்துள்ளன. கோவிலுக்குள் நுழைந்ததும் இடதுபுறத்தில் காணப்படும் மண்டபத்தில் நால்வர் சன்னிதி, நாகர்கள் சன்னிதி உள்ளன.

மேலும் 'மாவிரத லிங்கங்கள்' என அழைக்கப்படும் ஆறு சிவலிங்கத் திருமேனிகள் உள்ளன. அதில் இரண்டு ஆவுடையாருடனும், நான்கு ஆவுடையார் இன்றியும் காணப்படுகின்றன.
இந்த சிவலிங்கங்களை 'மாவிரத முனிவர்கள்' என்று அழைக்கப்படும் ஆறு முனிவர்கள் வழிபட்டதாகக் கூறப்படுகிறது. மாவிரத லிங்கங்களுக்கு அருகில் ஸ்ரீபாலமுருகன் நின்ற திருக்கோலத்தில் அருள்கிறார்.
'குரு பார்க்க கோடி நன்மை' என்று சொல்வார்கள். நவகிரகங்களில் குருபகவான் அதிக நன்மைகளை தருபவர். ஆங்கிரஸ மகரிஷியின் மகனாக பிறந்தவர் குருபகவான். சிறந்த அறிவாற்றலால் 'பிரகஸ்பதி' என்ற பட்டத்தை பெறக்கூடிய அளவிற்கு உயர்ந்தவர்.

கோவிலுக்குள் மேற்கு திசை நோக்கி அமைந்த ஒரு தனி சன்னிதியில் தேவகுரு, பிரகஸ்பதி, நவகிரகங்களில் ஒருவரான குருபகவான் கைகளைக் கூப்பிய நிலையில் அமர்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளி உள்ளார்.
குரு பகவானின் அருள் இருந்தால் ஒருவருக்கு திருமண யோகம் மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வியாழக்கிழமைகளில் குரு பகவானை வழிபடுவது சிறப்பானதாகும். இத்திருக்கோவில், பக்தர்களால் 'குரு கோவில்' என்று அழைக்கப்படுகிறது.
குரு பகவான் வருடந்தோறும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுகிறார். இது 'குரு பெயர்ச்சி' எனப்படுகிறது. இந்ந நாளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.
இந்த கோவிலின் தல விருட்சமாக 'வில்வ மரம்' உள்ளது. வில்வத்தின் இலை, காய், பழம் முதலானவை நோய்களை நீக்கும் சக்தி வாய்ந்த ஒரு மருந்தாகும். இக்கோவிலின் தல தீர்த்தமாக 'தாயார் குளம்' உள்ளது.
மகாலட்சுமித் தாயார் அமைத்த தீர்த்தம் என்பதால் 'தாயார் குளம்' என்று அழைக்கப்படுகிறது. இது லட்சுமிகுண்டம், குருவார தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது.
பொதுவாக குளங்கள் நான்கு மூலை அமைப்புடையதாக அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இத்தலத்தின் தீர்த்தம் முற்றிலும் வித்தியாசமாக ஐந்து மூலைகளுடன் ஐங்கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்த்தத்தில் நீராடுபவர்களுக்கு செல்வமும் ஞானமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
தாயார் குளத்தின் மேற்குக் கரையில் எமதர்மராஜன் நிறுவி வழிபட்ட தருமலிங்கேசர் கோவில் அமைந்துள்ளது. நெய்தீபம் ஏற்றி தருமலிங்கேசரை வழிபட மரண பயம் நீங்கும் என்பது ஐதீகம்.
திருப்பணிகள்
சோழர்களின் காலம் தொடங்கி தற்போது வரை அவ்வப்போது இக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. கச்சிப்பலதனியும் ஏகம்பத்தும், கயிலாய நாதனையே காணலாகும் என்ற அப்பர் பெருமானின் பதிகத்தாலும், புராண வரலாறுகளாலும் இத்தலம் மிகப்பழமையான தலம் என்பது தெரிகிறது.இங்கு சோழர்கள் காலத்திய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இந்த கல்வெட்டுகள் சிதைந்த நிலையில் உள்ளன.
முக்கிய விழாக்கள்
இத்தலத்தில் நாள்தோறும் ஐந்து கால பூஜைகள் நடைபெறுகின்றன. வியாழக்கிழமைகளில் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. குரு பெயர்ச்சி காலத்தில் லட்சார்ச்சனையும், அர்ச்சனையும், குருப் பெயர்ச்சி விழாவும் நடைபெறுகின்றன. நவராத்திரி, சிவராத்திரி மற்றும் தனுர்மாத அபிஷேகங்களும் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன.
பிரதோஷம் மற்றும் மகாசிவராத்திரி முதலான விழாக்களும் வழக்கமாக நடைபெறுகின்றன. இக்கோவில் தினமும் காலை 7 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 07.30 மணி வரையும் பக்தர்களின் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
பெரிய காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பிள்ளையார்பாளையம். இந்த பகுதியில் முடங்கு வீதியில் இக்கோவில் அமைந்துள்ளது.
- தன் படைப்புகள் எல்லாவற்றையும் அனுபவிக்க, மனிதனைப் படைத்தார்.
- கடவுள், மனிதர்களை நல்வழிப்படுத்த இறைவாக்கினர்களை அனுப்பினார்.
உலகம் எங்கும் உள்ள கிறிஸ்தவ மக்கள், சிலுவையில் அறையப்பட்டு இயேசு மரித்த நாளை புனித வெள்ளி (இன்று) யாக அனுசரிக்கிறார்கள். இந்த நேரத்தில் இயேசு யார்? அவர் எதற்காக தன் உயிரைக் கொடுத்தார்? அதற்கு பின்னால் இருக்கக்கூடிய அடிப்படையான காரணத்தைப் பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

இறைவன் இந்த உலகைப் படைத்தார். தன் படைப்புகள் எல்லாவற்றையும் அனுபவிக்க, மனிதனைப் படைத்தார். அந்த மனிதனை, தன் சாயலில் இருக்கும்படியாகவே உருவாக்கினார். ஆனால் மனிதனோ, இறைவன் செய்த நன்மைகளை மறந்து வழிதவறிச் சென்றான்.
இதை அறிந்த கடவுள், அவனை நல்வழிப்படுத்த இறைவாக்கினர்களை அனுப்பினார். அவர்கள் சொன்னதையும், மனிதர்கள் கேட்கவில்லை. எனவே கடவுள் தம் ஒரே மகனான இயேசுவை பூமிக்கு அனுப்பினார். இதனையே ``கடவுள் தம் ஒரே மகனையே அனுப்பும் அளவுக்கு உலகின் மீது அன்பு கூர்ந்தார்" என்று விவிலியத்தில் வாசிக்கிறோம்.
மனிதர்களை நல்வழிக்கு திருப்பும் இந்த திட்டப்படி, இயேசுவானவர் கன்னி மரியாளின் வயிற்றில் தூய ஆவியால் கருவுற்றார். பெத்லகேமில் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார். நாசரேத்தில் வளர்ந்து பொதுப்பணி செய்தார். அதுவும் தேவையில் இருக்கும் மக்களைத் தேடிச் சென்று உதவினார். 'சிறைபட்டோர் விடுதலை அடையவும், பார்வையற்றோர் பார்வை பெறவும்' தன்னை அர்ப்பணித்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்றார். சட்டத்தை தூக்கிப் பிடித்த யூத சமூகத்தினரிடம், மனிதத்தை மையப்படுத்தும்படி வலியுறுத்தினார். அதனால் யூதர்களின் பெரும் எதிரியாக சித்தரிக்கப்பட்டார்.
தன்னோடு இருந்த சீடர் ஒருவரால், காட்டிக் கொடுக்கப்பட்டார். அதற்கு முன்பாக இயேசு, தன்னுடைய சீடர்களின் பாதங்களை கழுவினார். இதன் மூலம் 'பணிவிடை பெறுபவன் அல்ல.. பணிவிடை புரிபவனே தலைவன்' என்ற தத்துவத்தை முன்னிறுத்தினார்.
இயேசுவை கைது செய்தவர்கள், அவர் தலையில் முள் கிரீடம் சூட்டி, சிலுவையை சுமக்க வைத்தனர். அப்போது பல அருவருக்கத்தக்க செயல்களைச் செய்து, இயேசுவை துன்புறுத்தினர்.
ஆனால் இயேசு, அவை அனைத்தையும் கோபம் கொள்ளாது ஏற்றுக்கொண்டதுடன், "தந்தையே.. இவர்களை மன்னியும்" என்று தன்னை துன்புறுத்தியவர்களுக்காக இறைவனிடம் மன்றாடினார். இயேசு, தன்னுடைய உச்சக்கட்ட அன்பை வெளிப்படுத்திய தருணம் இது.
பிலாத்து என்பவன் இயேசுவிடம் , "அப்படியானால் நீ அரசன்தானோ?" என்று கேட்டான். அதற்கு இயேசு, "அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன். இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்"என்று பதில் கூறினார் (யோவான்: 18:37). இவ்வாறு மக்களிடையே இருந்த ஒவ்வொரு தருணத்திலும், உண்மையை மக்களுக்கு அறிவித்தபடியே இருந்தவர் இயேசுபிரான்.
அன்பால் மக்களை தன்வசப்படுத்தி, உண்மையின் பக்கம் நின்று, அநீதிக்கு எதிராக குரல் கொடுத்த இயேசு ஒரு புரட்சியாளர். அவரை பின்பற்றும் நாமும் உண்மையின் பக்கம் நிற்போம்!
பகைவரையும் அன்பு செய்வோம்! அதுதான் இயேசுவின் ரத்தம் சிந்தப்பட்ட, 'புனித வெள்ளி' தினத்திற்கு பெருமை சேர்ப்பதாக அமையும்.
- சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
- திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமாள் கிளி வாகன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு சித்திரை-5 (வெள்ளிக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: பஞ்சமி பிற்பகல் 2.26 மணி வரை பிறகு சஷ்டி
நட்சத்திரம்: மூலம் முழுவதும்
யோகம்: அமிர்தயோகம்
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி உற்சவம் ஆரம்பம். ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் தெப்போற்சவம், திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமாள் கிளி வாகன சேவை. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தி னியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்த ருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீ பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோயிலில் அபிஷேகம் கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம் பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக் குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் மரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம் திருமாலி ருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தர வல்லித்தாயார் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்த ராஜப்பெருமாளுக்கு காலையில் திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-இன்பம்
ரிஷபம்-உயர்வு
மிதுனம்-மகிழ்ச்சி
கடகம்-விவேகம்
சிம்மம்-உற்சாகம்
கன்னி-பயணம்
துலாம்- பக்தி விருச்சிகம்-முயற்சி
தனுசு- தெளிவு
மகரம்-அமைதி
கும்பம்-சுபம்
மீனம்-உண்மை
- வராகர் திருமாலின் தசாவதாரங்களில் மூன்றாவது அவதாரமாகும்.
- கடன்கள் தீர்ந்து செல்வ வளம் பெருகவும் வராகர் அருள்வதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
வராக மூர்த்தி மனித உடலும், வராக முகமும் கொண்ட திருமாலின் தசாவதாரங்களில் மூன்றாவது அவதாரமாகும். வராக மூர்த்தியின் உருவத்தை ஆதிவராகம், யக்ஞவராகம், பிரளய வராகம் என்று மூன்றாகக் குறிக்கின்றனர். லட்சுமியையும் பூதேவியையும் தன்னுடன் கொண்டிருப்பவர் லட்சுமி வராகர், பூவராகர் என வணங்கப்படுகிறார்.
"பூமியைக் கைப்பற்றிய இரண்யாட்சன் என்ற அசுரன், அதை கடலுக்கடியில் எடுத்துச் சென்றான். திருமால் வராக அவதாரம் எடுத்து, இரண்யாட்சனுடன் பல ஆண்டுகள் போர் புரிந்து வென்றார்' என்கிறது வரலாறு.
சிம்ம விஷ்ணு அரிகேசரிவர்மன் என்னும் பல்லவ மன்னனுக்கு பெருமாள் காட்சி தந்ததால், ஆதிவராக பெருமாள் கோயிலை மாமல்லபுரத்தில் குடைவரை கோயிலாக அவன் அமைத்துள்ளான்.
திருவிடந்தைப் பெருமாளை அரிகேசரிவர்மன் தினமும் வணங்கி, அன்னமிட்டதன் பிறகே உணவு உண்பது பழக்கம். ஒருநாள் திருமால் தாயாருடன் மனித உருவில் வந்து மன்னனிடம் உணவு கேட்டார். மன்னன் சொல்லியும் இறைவன் கேட்காததால், அவர்களுக்கு அன்னம் படைத்தான்.
திருமால் வலது தொடையில் தாயாரை அமர்த்தி லட்சுமி வராகராகச் சேவை சாதித்தார். தலசயனப் பெருமாளுக்கும் முந்தைய மூர்த்தி என்பதால், இவர் "ஆதிமூர்த்தி' என்று அழைக்கப்படுகின்றார்.

மூலவர் ஆதிவராகர் வர்ண கலாப மூர்த்தியாக நின்ற திருக்கோலத்தில், இடது திருவடியின் கீழ் ஆதிசேஷன், மனைவி வணங்கியபடி இருக்க, மேற்கு நோக்கியபடி, பிராட்டியை வலப்பக்கத்தில் ஏந்தி காட்சி அளிக்கிறார். ஆகையால் இவர் "வலவெந்தை பெருமாள்' ஆகிறார். திருவிடந்தை திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது.
"என்+தந்தை=எந்தை' என்பது அவர் திருநாமம். வராகமூர்த்தி தமது இடப்பக்கத்தில் பூமிதேவியை ஏந்திய கோலமாகக் காட்சி தருதலால் "இடஎந்தை' எனப்படுகிறார். மூலவர் தினம் ஒரு கன்னியை ஆண்டு முழுவதும் திருமணம் செய்ததால், "நித்ய கல்யாணப் பெருமாள்' என்று அழைக்கப்படுகிறார்.
கருவறையில் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுகமண்டலத்தோடு இடது மடியில் தாயாரை அமர்த்தி அவரின் காதருகே சரம ஸ்லோகம் உபதேசிக்கும் கோலம்.
பெருமாளின் இடது திருவடி ஆதிசேஷன் தம்பதியினரின் சிரசில் படுமாறு அமைந்துள்ளது. இவரை தரிசிப்பவர்களுக்கு ராகு-கேது தோஷ நிவர்த்தியும் ஏற்படுகிறது.
திருமலை முதலில் வராகரின் கோவிலாகவே இருந்தது. அங்கே புஷ்கரணிக்கு ""வராக சுவாமி புஷ்கரணி'' என்று பெயர். கரைமேல் ஆதிவராக சுவாமி கோவில் உள்ளது.
சீனிவாசர் இருக்க இடம் கொடுத்ததாக வரலாறு. ராமானுஜர் வராகப் பெருமாளுக்கு ஒரு உற்சவ மூர்த்தியையும் பிரதிஷ்டை செய்து, ஒருநாள் அத்யயன உற்சவம், வராக ஜெயந்தி உற்சவத்தை நடத்தினார். திருமலையில் வராகர் தோன்றிய ஐப்பசி திருவோணத்தன்று சிறப்பாக உற்சவம் நடத்தினார்.
கடலூர் மாவட்டத்துக்கு உள்பட்ட ஸ்ரீமுஷ்ணம் கோவில் கரு வறையில் சாளக்கிராமத்தினாலான சிறிய வராகப் பெருமாள் இடுப்பில் கை வைத்துக் கொண்டு கம்பீரமாகக் காட்சி தருகின்றார். மூலவருக்கு தினமும் திருமஞ்சனம் செய்யப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் குபேரன் ஆதிவராகரை பிரதிஷ்டை செய்ததாக வரலாறு கூறுகிறது. ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் சந்நிதிக்கு பின்புறத்தில் ஞானபிரான் சந்நிதியில் லட்சுமி வராகர், காஞ்சி வரதராஜர் கோவில், மதுரை கள்ளழகர் கோவிலில் கும்பகோணம் திருமலைவையாவூர் ஆகிய இடங்கள் தவிர பிற இடங்களிலும் தனி சந்நிதிகள் உள்ளன.
நிலப் பிரச்னைகள் தீரவும் கடன்கள் தீர்ந்து செல்வ வளம் பெருகவும் வராகர் அருள்வதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
சித்திரை மாத கிருஷ்ண பட்சத்தில் பஞ்சமி திதியில் பன்றி உருவத்தில் பலத்துடன் பூமியைக் கொம்புகளில் சுமந்தவாறு நாராயணன் தோன்றிய தினம் தான் "வராக ஜெயந்தி'. இந்த ஆண்டு வராக ஜெயந்தி நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
- தினமும் ஒருகால பூஜை நடத்தப்படுகிறது.
- ஆதிகேது தனி சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார்.
சோழவள நாட்டில் எண்ணற்ற சிறப்பு வாய்ந்த ஆலயங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்றாக செம்பங்குடி ஆலயமும் திகழ்கிறது. இக்கோவிலின் இறைவன் நாகநாத சுவாமி, அம்பாள் கற்பூரவல்லி தயார். இங்கு ஆதிகேது தனி சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். தோஷங்களில் இருந்து விடுபட சிறந்த தலமாக விளங்கும் இந்த ஆலயத்தை பற்றி இங்கு பார்ப்போம்.

தல வரலாறு
அமிர்தம் வேண்டி தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தனர். அதில் கிடைத்த அமிர்தத்தை தேவர்களுக்கு பகிர்ந்தளித்தார், மகாவிஷ்ணு. விப்ரசக்தி என்னும் அசுரனுக்கும், இரணியனின் தங்கை சிம்ஹிக்கும் பிறந்தவன் ஸ்வபானு.
அசுர குலத்தவனான ஸ்வபானு, தேவர் வடிவம் பூண்டு அமிர்தத்தை உண்டான். இதை குறிப்பால் உணர்ந்த சந்திர - சூரியர்கள், அந்த அசுரனின் தலையில் ஒங்கி அடித்தனர். இதனால் அவனது தலை சிரபுரம் என்னும் சீர்காழியிலும், உடல் செம்பாம்பினன்குடி என்னும் செம்பங்குடியிலும் விழுந்தது.
அமுதுண்டதால் அந்த இரண்டு உடல் பாகங்களும் இரண்டு பாம்புகளாக மாறின. அவை, சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, ஈசனை நோக்கி கடும் தவமிருந்தன. அவர்கள் முன் எழுந்தருளிய சிவனிடம், "அகில உலகத்தையும் ஆட்டிப்படைக்கும் வரமும், சந்திர - சூரியரை விழுங்கும் பலமும்" வேண்டும் என வேண்டினர்.
ஈசன், சூரிய - சந்திரர்கள் உலக உயிர்களுக்கு இன்றியமையாதவர்கள். அவர்கள் இன்றி உலகம் தத்தளிக்கும் என்றார். இருப்பினும், கிரகண காலங்களிலும், அமாவாசையிலும் அவர்களை விழுங்கும் திறன் பெற அருள்பாலித்தார். மேலும் இருவருக்கும் கிரக பதவியும் வழங்கினார். அவர்களே ராகு - கேது ஆவர்.

சிவந்த மனித உடலும், பாம்பின் தலையும் கொண்ட கேதுவின் வடிவம், இங்கு குடி கொண்டதால் இத்தலம் செம்பாம்பினன்குடி ஆனது. இதுவே மருவி செம்பங்குடி என்றாகி உள்ளது. இந்த ஆலயமே ஆதி கேது தலமாக போற்றப்படுகிறது.
அருணாசலக் கவிராயரின் சீர்காழி தலபுராணத்தில் இப்பதி செம்பாம்பினன்குடி என்றும், கேதுபுரம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. திருநாவுக்கரசர் அருளிய ஆறாம் திருமுறையில், மனித இடர்களைப் போக்கும் தலங்களுள் ஒன்றாக விளங்கும் இத்தலத்தை வைப்புத்தலமாக போற்றியுள்ளார்.
ஆலய அமைப்பு
ஊருக்கு சற்று ஒதுங்கிய இடத்தில் ஆலயம் அமையப்பெற்றுள்ளது. சுற்றிலும் வயல்வெளிகள், ரம்மியமான சூழலில் தோரண வாயிலின் நேராக ஈசனது சன்னிதி அமைந்துள்ளது. விதானத்தில் அம்மையப்பர் தரிசனம் கிடைக்கும்.
மகா மண்டபம், அர்த்த மண்டபம் கடந்து சென்றால் கருவறையுள் சிறிய திருமேனியுடன், ஸ்ரீ நாக நாத சுவாமி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். ஆதியில் கேது பூஜித்த லிங்கம் என்பதால் 'கேதீஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகிறார். பல ஜென்ம நாக தோஷங்களையும் நொடிப்பொழுதில் நீக்கி, பக்தர்களுக்கு சுகத்தை அருள்கிறார்.
ஆலய வலம் வரும்போது, முறையான கோஷ்ட தெய்வங்களோடு, தனி சன்னிதிகளில் வீற்றிருக்கும் கணபதி, கந்தன் மற்றும் கஜலட்சுமியை வணங்க வேண்டும். சுவாமிக்கு வாம பாகத்தில் அன்னையின் சன்னிதி கிழக்கு முகமாக அமைந்துள்ளது.
அம்பிகையாக ஸ்ரீ கற்பூரவல்லி சிறிய திருமேனி கொண்டு காட்சி அளிக்கிறார். இவர் 'திரிபுரசுந்தரி' என்றும் அழைக்கப்படுகிறார். ஆதி கேதுவின் சன்னிதி ஆலய வாயு பாகத்தில் தனியாக சிறிய ஆலயமாக அமைந்துள்ளது.

தினமும் ஒருகால பூஜை நடத்தப்படுகிறது. ஆலய மெய்க்காவலர் உதவியுடன் பகல் வேளைகளில் எப்போது வேண்டுமானாலும் சுவாமி தரிசனம் செய்யலாம். சுவாமிக்கும் -அம்பாளுக்கும் பசும்பாலால் அபிஷேகம் செய்து சிவந்த அல்லி மலர்களால் அர்ச்சனை செய்கின்றனர்.
நைவேத்தியமாக புளியோதரை செய்து படைக்கின்றனர். இவ்வாறு பிரார்த்தனை செய்தால், முன் ஜென்மங்களில் ஏற்பட்ட நாக தோஷங்களில் இருந்து நிவர்த்தி பெறலாம். அதோடு சிறந்த அறிவையும், பேராற்றலையும் பெற்றிடலாம் என்பது நம்பிக்கை.
சிவபக்தியில் சிறந்தும், மோட்ச காரகனாகவும் திகழும் இத்தல ஆதி கேதுவை எமகண்ட வேளையில் அபிஷேகம் செய்து, பல வண்ணங்கள் கொண்ட ஆடையை அணிவித்து, சிவந்த நீர் வகைப் புஷ்பங்களால் அர்ச்சனை செய்து, கொள்ளுப் பொடிசாதம் நைவேத்தியம் படைத்து வழிபட்டு வந்தால், சகலவித பாவங்களில் இருந்தும் விடுபடலாம். சுகபோகங்களோடு, சகல சவுபாக்கியங்களையும் பெற்றிடலாம்.
அமைவிடம்
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகரில் இருந்து திருமுல்லைவாயில் செல்லும் பாதையில் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது செம்பங்குடி.
- அரசியின் விலை மதிப்புமிக்க காதணி ஒன்று காணாமல் போனது.
- சிறையில் அடைக்கப்பட்ட அந்த காவலாளிக்கு ஒரு காதலி இருந்தாள்.
சேர மன்னன் ஒருவன் இந்த பகுதியை ஆட்சி செய்த போது, அரசியின் விலை மதிப்புமிக்க காதணி ஒன்று காணாமல் போனது. அப்போது காவல் பணியில் இருந்த காவலர் ஒருவரின் மீது சந்தேகம் ஏற்பட்டதால், அவரை சிறையில் அடைத்து விட்டனர்.

சிறையில் அடைக்கப்பட்ட அந்த காவலாளிக்கு ஒரு காதலி இருந்தாள். அவள் அதே அரண்மனையில் அரசியின் தோழிகளாக இருந்தவர்களில் ஒருத்தி ஆவாள், அவள் அரசியிடம் ஓடிச்சென்று, "நான் தான் குற்றவாளி. என் காதலருக்கு பதிலாக என்னை சிறையில் அடைத்து விட்டு, அவரை விடுதலை செய்யுங்கள்" என்றாள்.
விசாரணை மன்னன் முன்பாக வந்தது. அப்போது காதலனோ, "அவள் மீது எந்த தவறும் இல்லை, நான்தான் குற்றவாளி எனக்கு தண்டனை கொடுங்கள். அவளை விட்டு விடுங்கள்" என்றான்.
காதலர்கள் இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் இப்படிச் சொன்னதால் யார் குற்றவாளி? என்பதை முடிவு செய்வதில் மன்னன் தடுமாறினான், பின்னர் அமைச்சர் ஒருவரின் ஆலோசனைப்படி உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க முற்பட்டான்.

அதன்படி கரிக்ககம் கோவிலில் ரத்த சாமுண்டி சன்னிதானத்தில் சத்தியம் செய்வித்து, உண்மையை கண்டுபிடிக்கலாம் என்று கருதினர். பொய் சத்தியம் செய்யவர்களுக்கு அம்மன் தண்டனை வழங்குவார் என்பது நிச்சயம் என்பதால் அந்த முடிவு எடுக்கப்பட்டது.
அரண்மனைக்காவலனும், அவனது காதலியும் ஆலய குளத்தில் நீராடி, ஈர ஆடையுடன் ரத்த சாமுண்டி சன்னிதி முன்பாக வந்து நின்றனர். அப்போது பெண் ஒருத்தி அங்கு ஓடோடி வந்தாள். அவள் அங்கிருந்து அரசன் மற்றும் அரசி முன்பாக வந்து நின்று, `சலவைக்கு போட்ட துணியில் அரசியின் காதணி இருப்பதைக் கண்டேன்'.
அப்போது விண்ணில் இருந்து, `இந்த காதணியை என் ஆலயத்தில் இருக்கும் அரசனிடம் கொண்டு போய் கொடு என்ற கரிக்ககம் சாமுண்டி தேவியின் வாக்கு ஒலித்தது. அதனால் இங்கே ஓடி வந்தேன்" என்று கூறி அந்த காதணியை மன்னனிடம் கொடுத்தாள்.
தன் தவறுக்கு வருந்திய மன்னன், அரண்மனைக் காவலனையும், அவனது காதலியையும் விடுவித்து அவர்களிடம் மன்னிப்பும் கேட்டான். அரசியோ, தன்னுடைய இரண்டு காதணிகளையும், கரிக்ககம் சாமுண்டி தேவிக்கே அர்ப்பணம் செய்துவிட்டாள்.
- திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
- சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு சித்திரை-4 (வியாழக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சதுர்த்தி நண்பகல் 1.24 மணி வரை பிறகு பஞ்சமி
நட்சத்திரம்: கேட்டை (முழுவதும்)
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் புஷ்பப் பல்லக்கில் புறப்பாடு. சென்னை ஸ்ரீ சென்ன மல்லீஸ்வரர் விடையாற்று. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. மைசூர் மண்டபம் எழுந்தருளல். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சன சேவை. சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ குருபகவானுக்கும், தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-போட்டி
ரிஷபம்-அன்பு
மிதுனம்-உதவி
கடகம்-நட்பு
சிம்மம்-ஆர்வம்
கன்னி-மேன்மை
துலாம்- உறுதி
விருச்சிகம்-நிம்மதி
தனுசு- பெருமை
மகரம்-நிறைவு
கும்பம்-ஜெயம்
மீனம்-ஆவல்
- ஜமத்கனி எனும் முனிவரின் மனைவியாக திகழ்ந்தவள் ரேணுகா.
- மாரியம்மன் எனும் பெயரில் ரேணுகை அருள்பாலித்து வருகின்றாள்
ஜமத்கனி எனும் முனிவரின் மனைவியாக திகழ்ந்தவள் ரேணுகா. அவள் கற்பில் சிறந்த காரிகை. ஒருநாள் ரேணுகை அவ்வாறு நீரெடுக்கும்போது வான்வழிச் சென்ற கந்தவர் ஒருவரின் நிழல் நீரில் விழக்கண்டதனால் ஒரு நொடிப் பொழுது பிற ஆடவரின் நிழலைக் கண்டதால் கற்புநிலை தடுமாறிப் பசுமட்குடம் நீரில் கரைந்தது. பதறிய ரேணுகை உடனே தம் மனத்தை திண்மை செய்து மீண்டும் மட்குடம் வனைந்து நீர் எடுத்து வந்தாள்.

ரேணுகை சற்று காலந்தாழ்த்தி வந்தமைக்கான காரணத்தை தம் அகக்கண்ணால் உணர்ந்த ஜமதக்னி முனிவர் வெகுண்டார். தன் மகன் பரசுராமனை அழைத்து "கற்பு நிலை வழுவிய நின் தாயை கொன்று விடு என்று கட்டளையிட்டார்.
பரசுராமன் இருதலைக்கொள்ளி எறும்பானான். தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை என்பர். அத்தாயைக் கொல்வதா? தந்தை சொல்மிக்க மந்திரமுமில்லை என்பரே! அத்தந்தை சொல்லை மீறுவதா? என்ன செய்வது! என்று சற்றுத் திணறிய மைந்தன், இறுதியில் தந்தை சொல்லை முதலில் நிறைவேற்ற முடிவு செய்தான். பரசினை எடுத்துக் கொண்டு தாயை நோக்கி ஓடினான்.

மகனிடமிருந்து தப்பிக்கத் தாயும் ஓடினாள். தமையன்மார் தடுத்தனர். தடுத்தவர் அனைவரையும் வெட்டி வீழ்த்தினான் பரசுராமன். இறுதியில் ரேணுகை ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணின் குடிசைக்குள் ஓடி ஒளிந்தாள்.
இரக்கம் உடைய அந்த ஏழைப்பெண் அடைக்கலமாக வந்த அன்னையைக் காக்க எவ்வளவோ முயன்றாள். அவளையும் பரசுராமன் வெட்டி வீழ்த்துகிறான். கடைசியில் தன் அன்னையையும் வெட்டி முடித்து விடுகிறான்.

கட்டளையை நிறைவேற்றிய பரசுராமன், தந்தையிடம் சென்று பணிகிறான். மகனின் கடமை உணர்வைப் பாராட்டிய தந்தை, மகனைப் பார்த்து "நீ வேண்டும் வரங்களைக் கேள்" என்கிறார்.
புத்திசாலியான பரசுராமன், "தந்தையே என்னால் கொல்லப்பட்ட அனைவரும் பிழைத்தெழ வேண்டும்" என்று கேட்டுக்கொள்கிறான். மகனின் சாமர்த்தியத்தையும் நல்ல உள்ளத்தையும் பாராட்டிய தந்தை "அப்படியே ஆகட்டும்" என்றார்.
பரசுராமன் தந்தையின் கட்டளைக்கு இணங்காமல் இருந்திருந்தால் அவனையும் முனிவர் சபித்திருப்பார். இதனை உணர்ந்தே பரசுராமன் தந்தையின் ஆசியையும் பெற்று, இறந்தவர்களையும் பிழைத்தெழுமாறு அனுமதியையும் பெற்றுவிடுகிறான்.
வெட்டுண்ட உடல்களின் மீது நீரைத் தெளித்து இறந்தவர்களைப் பிழைக்கச் செய்கிறான். அப்போது ஒரு விபரீதம் நிகழ்ந்து விடுகின்றது. வெட்டுண்ட தன் தாயின் தலையையும் அவளைக் காப்பாற்ற முயன்று வெட்டுண்ட பெண்ணின் உடலையும் ஒன்று சேர்த்து விடுகிறான்.
அதேபோல் அப்பெண்ணின் தலையையும் தாயின் உடலையும் ஒன்று சேர்த்து விடுகின்றான். இருவரும் உயிர் பெற்று எழுகின்றனர். ஆனால் தலைகள் மாறி உள்ளன. இவ்வாறு தலைகள் மாறியதால் ரேணுகையின் தலை பொருந்தியவளை "மாறி அம்மன்" என்று அழைக்கலாயினர் என்று அப்புராணம் கூறுகிறது.
தலைகள் மாறியதால் ஏற்பட்ட பெயர் என்றால் "மாறி அம்மன்" என்று வல்லின "றி" அல்லவாபோட்டு எழுத வேண்டும். ஆனால் இடையின "ரி" போட்டு "மாரி அம்மன்" என்றுதானே எழுதுகிறோம்.
ஆதலின் மேற்படி புராணக் கதை ரேணுகாதேவிக்கே உரியது. அதைத் தமிழ்நாட்டில் தொன்று தொட்டு மழைக்காக வழிபட்டு வரும் மாரி அம்மனுக்கு இடைக்காலத்தில் சிலர் இணைத்து விட்டுள்ளனர். எனவே ரேணுகை வேறு; மழை தரும் மாரிஅம்மன் வேறு.

ரேணுகையின் வரலாறு இன்னொரு விதமாகவும் கூறப்படுகிறது. ஜமத்கனி முனிவரின் காமதேனுவைக் கவர முயன்ற கார்த்த வீரியார்ஜீனனின் பிள்ளைகள் ஜமத்கனி முனிவரைக் கொன்றனர். இக்காட்சியைக் கண்ட ரேணுகை, கணவனை இழந்த பின் உயிர் வாழ விரும்பாமல், தீ மூட்டி அதில் குதித்துவிட்டாள்.
இந்திரன் வருணனை ஏவி, மழை பெய்வித்து ரேணுகையை எரியாமல் காத்தான். தீக்குண்டத்தில் இருந்து எழுந்த ரேணுகை, தன் உடம்பில் இருந்த ஆடை எரிந்து போய்விட்டதால், வேப்பிலையை ஒடித்து ஆடையாக அணிந்து கொண்டாள்.
ஊர் மக்கள் அவள் பசியைத் தீர்க்கப் பச்சரிசி மாவு, வெல்லம், இளநீர், பானகம் ஆகியவற்றைத் தந்தனர். பின்னர் ரேணுகை தன் கணவன் உடலைக் கண்டு அழுது புலம்பினாள்.

அப்போது சிவபெருமானும், வானோரும் அவளுக்குக் காட்சி தந்தனர். "ரேணுகையே! நீ பராசக்தியின் கலாம்சங்களில் ஓர் அம்சம். இதனை உலகோர் அறிவதற்காகவே இத்திருவிளையாடல். இனி நீ பூவுலகில் மாரியம்மன் எனும் பெயரில் மக்களின் துயர் தீர்த்து வருவாய்!
உன் உடம்பிலுள்ள தீக்கொப்புளங்களே மக்களுக்கு அம்மைக்கொப்புளங்களாக உண்டாகும். அவற்றை நீ அணிந்திருக்கும் ஆடைகளாகிய வேப்பிலைகளால் தீர்த்து வைப்பாய் என்று சிவபெருமான் வரம் அருளினார். அதுமுதல் மாரியம்மன் எனும் பெயரில் ரேணுகை அருள்பாலித்து வருகின்றாள் என்றும் ஒரு வரலாறு வழங்கி வருகின்றது.
பைதுரூபம், பிதுரூபம், மிருதி, மாரணம், முரசனி, நுகம், நமலி, கொடி எனும் எட்டு காரணப் பெயர்களால் ஜோதிட சாஸ்திரத்தில் புகழ்ந்து கொண்டாடப்படும் மகம் நட்சத்திரம் "மகா சக்தி மாரியம்மனின்" திருநட்சத்திரமாகும்.
மாரியம்மனுக்காக ஆற்றும் விசேஷ நிகழ்வுகள், உற்சவங்கள், கால்கோள் விழாக்கள், பாலாலயம், கும்பாபிஷேகம் யாவும் மகம் நட்சத்திரத்திற்கே பொருத்தங்களும், தாராபலனும் பார்த்து நிர்ணயிக்கப்படுகிறது.
- இன்று சுபமுகூர்த்த தினம். சங்கடஹர சதுர்த்தி.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு சித்திரை-3 (புதன்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: திருதியை காலை 11.57 மணி வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம்: அனுஷம் மறுநாள் விடியற்காலை 4.16 மணி வரை பிறகு கேட்டை
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று சுபமுகூர்த்த தினம். சங்கடஹர சதுர்த்தி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் வெள்ளி காமதேனு வாகனத்தில் புறப்பாடு. வீரபாண்டி ஸ்ரீ கவுமாரியம்மன் பவனி. சென்னை ஸ்ரீ சென்னகேசவப் பெருமாள் காலை சூரிய பிரபையில், இரவு சேஷ வாகனத்தில் திருவீதியுலா. பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர், திருநாரையூர் ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார், திருவலஞ்சுழி ஸ்ரீ சுவேத விநாயகர், திருச்சி உச்சிப்பிள்ளையார் ஸ்ரீ மாணிக்க விநாயகர், மதுரை ஸ்ரீ முக்குறுணி பிள்ளையார், உப்பூர் ஸ்ரீ வெயிலுகந்த விநாயகப் பெருமான் கோவில்களில் காலை ஹோமம். ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் திருமஞ்சனம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சனம். ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் பெருமாள் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-வெற்றி
ரிஷபம்-கவனம்
மிதுனம்-அன்பு
கடகம்-உயர்வு
சிம்மம்-வரவு
கன்னி-ஆதரவு
துலாம்- நன்மை
விருச்சிகம்-தெளிவு
தனுசு- புகழ்
மகரம்-நட்பு
கும்பம்-வெற்றி
மீனம்-சாந்தம்
- தேர் ஓடும் ரத வீதிகள் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
- பால் குடம், தீச்சட்டி, பறவைக் காவடி எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
மண்ணச்சநல்லூர்:
சக்தி தலங்களில் முதன்மையான சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை பெருந்திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கிலும், இரவு 8 மணி அளவில் பல்வேறு வாகனங்களிலும் எழுந்தருளினார்.
நேற்று இரவு சமயபுரம் தெப்பக்குளம் அருகே உள்ள சூரப்பநாயக்கர் மண்டபத்தில் அம்மன் எழுந்தருளினார். தொடர்ந்து வெள்ளி குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி மண்டகப்படி உபயம் கண்டருளினார். பின்னர் வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற்றது. இதையொட்டி காலை 10.31 மணிக்கு மேல் 11.20 மணிக்குள் மிதுன லக்னத்தில் அம்மன் தேரில் எழுந்தருளினார்.
அதைத்தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் சக்தி பராசக்தி கோஷம் விண்ணதிர தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் ஓடும் ரத வீதிகள் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
எங்கு பார்த்தாலும் மஞ்சள் ஆடை அணிந்த பெண் பக்தர்கள் திரண்டிருந்தனர். தேருக்கு முன்பாக ஏராளமான பக்தர்கள் பால் குடம், தீச்சட்டி, பறவைக் காவடி ஆகியவற்றை எடுத்து வந்து, தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.
தேரோட்ட விழாவை காண நேற்று காலை முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாத யாத்திரையாகவும், வாகனங்களிலும் பக்தர்கள் வந்து குவிந்தனர். பாதயாத்திரையாக வந்த பக்தர்களூக்கு திருவானைக்காவல், கொள்ளிடம் டோல்கேட், பளூர், சமயபுரம் உள்ளிட்ட இடங்களில், பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் நீர்மோர், குளிர்பானங்கள், குடிநீர், அன்ன தானம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
கோவில் ராஜகோபுரம், மேற்கு, தெற்கு, வடக்கு கோபுரங்கள் மற்றும் கோவில் வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் தலைமையில் 4 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 16 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 31 போலீஸ் இன்ஸ்பெ க்டர்கள், 1263 போலீசார், 275 ஊர்க்கால் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி கொள்ளாமல் இருக்க 'பாக்ஸ் டைப்' அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மீட்பு பணியாளர்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தனர். 2 இடங்களில் தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டிருந்தது.

தேர் சுற்றி வரும்போது மின்வாரிய ஊழியர்களை ஆங்காங்கே நியமித்து மின்சாரத்தை உரிய நேரத்தில் தடை செய்தும், மின் கம்பங்களில் இருந்து செல்லும் மின் கம்பிகளை அகற்றியும் எவ்வித இடையூறும் இல்லாமல் தேர் செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டிருந்தது.
3 வெடிபொருள் சோதனை மற்றும் கண்காணிப்பு படைகள் கண்காணிப்பில் ஈடுபட்டனர். 4 டிரோன் கேமராக்கள் மூலம் சமயபுரம் மாரியம்மன் கோவிலை சுற்றி வெவ்வேறு பகுதிகளில் இருந்து கழுகு பார்வையின் மூலம் கண்காணிக்கப்பட்டது. 50 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் அமைத்து கண்காணிக்கப்பட்டது.
மேலும் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு, போலீசார் பைனாகுலர் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
பக்தர்களின் வசதிக்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மண்ணச்சநல்லூர் செல்லும் சாலையில் சக்திநகர், கரியமாணிக்கம் பிரிவு ரோடு உள்ளிட்ட இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டது.
விழாவை முன்னிட்டு நாளை (புதன்கிழமை) அம்மன் வெள்ளிகாமதேனு வாகனத்திலும், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) அம்மன் முத்துப்பல்லக்கிலும் புறப்பாடாகிறார்.
18-ந்தேதி மாலை அம்மனுக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு வசந்த மண்டபத்தில் தெப்ப உற்சவ தீபாராதனை நடைபெறுகிறது. தேர் முடிந்து எட்டாம் நாளான 22-ந்தேதி இரவு அம்மன் தங்க கமல வாகனத்தில் புறப்பாடாகிறார்.
- இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும்.
- சனிப்பெயர்ச்சி விழா 2025 மார்ச் மாதம் நடப்பதாக பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் 2026-ம் ஆண்டு மார்ச் 6-ந்தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் திருநள்ளாறில் உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் தனி சன்னதியில் அனுக்கிரக மூர்த்தியாக சனீஸ்வர பகவான் அருள் பாலித்து வருகிறார்.
இக்கோவிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும். இதில் நாட்டில் பல்வேறு பகுதியில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சனீஸ்வர பகவானை தரிசனம் செய்வது வழக்கம்.
சனிப்பெயர்ச்சி விழா 2025 மார்ச் மாதம் நடப்பதாக பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆனால் இக்கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவில்லை.
இந்த நிலையில் வரும் 2026-ம் ஆண்டு மார்ச் 6-ந்தேதி காலை 8.24 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பிரவேசிக்கிறார்.
இதனை நேற்று கோவில் நிர்வாகம் சார்பில் நிர்வாக அதிகாரி அருணகிரி நாதன் முன்னிலையில் சிவச்சாரி யார்கள் பஞ்சாங்கம் வாசித்து அறிவித்தனர்.
இதில் சிவாச்சாரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- கோரைக்கிழங்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.
- பெருமாள் சாளக்கிராமத்தால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
கோவில் தோற்றம்:
வைணவத் திருத்தலங்களுள் சுயம்புலிங்கம் போல தானாகவே தோன்றிய தலங்கள் எட்டு என்பார்கள். அவை திருவரங்கம், ஸ்ரீமுஷ்ணம், திருவேங்கடம், சாளக்கிராமம், நைமி சாரண்யம், வானவாமலை, புஷ்கரம், நாராயணம் என்று கூறுவர். இவற்றையே வடமொழியில் `ஸ்வயம் வியக்த சேத்திரம்' என்பர்.
இதில் தனிச்சிறப்பு வாய்ந்தது இந்த ஸ்ரீமுஷ்ணம் திருக்கோவில். 'முஷணம்' என்றால் நமக்குத் தெரியாமல் அபகரித்துச் செல்லுதல் என்று பொருள். இந்த திருத்தலத்துக்கு வரும் அடியார்களின் பாவங்களை எல்லாம் அவர்களுக்கே தெரியாமல் இவ்வூர் அபகரித்து விடுவதால் (முஷணம் செய்வதால்) இவ்வூர் 'ஸ்ரீமுஷ்ணம்' என்று பெயர் பெற்றது.

தல வரலாறு
பெருமாளின் பத்து அவதாரங்களில் சிறப்பு வாய்ந்தது வராக அவதாரம் ஆகும். மகாவிஷ்ணு, வராக (காட்டுப்பன்றி) அவதாரம் எடுத்து, இரண்யாட்சன் என்ற அசுரனிடமிருந்து பூமியை மீட்டார். கடலுக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்த பூமியை, தன்னுடைய இரண்டு கோரைப் பற்களில் தாங்கியபடி மேல் எழுந்து வந்து, மீண்டும் வான்வெளியில் நிலைபெறச் செய்தார் என்கிறது புராண வரலாறு.
தனது ஒரு விழிப் பார்வையால் அரச மரத்தையும், மறு விழிப் பார்வையால் துளசிச் செடியையும் உருவாக்கினார். அவர் உருவாக்கிய அரசமரம், இந்த ஆலயத்தின் பின்புறம் உள்ள நித்ய புஷ்கரணி திருக்குளத்தின் தென்கரையில் உள்ளது. இதுவே தல விருட்சமாகவும் விளங்குகிறது. இங்குள்ள கோவில் விஜயநகர நாயக்கர்களால் கட்டப்பட்டது.
இங்கு பெருமாள் சாளக்கிராமத்தால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஸ்ரீ பூவராகசுவாமி மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். முகம் மட்டும் தெற்கு நோக்கி உள்ளது. அசுரர்களை வென்றதால் ஏற்பட்ட வெற்றிப் பெருமித உணர்ச்சியில் இரு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு முகத்தை நிமிர்த்தி கம்பீரமாக பார்க்கிறார்.
பிள்ளைப்பேறு வேண்டுவோர் நித்ய புஷ்கரணியில் நீராடி, அரசமரத்தைச் சுற்றிவந்து, பூவராகரை உள்ளன்புடன் உருகி வழிபட வேண்டும். பின்னர் ஆலயத்தில் சந்தான கிருஷ்ண மூர்த்தத்தை, கைகளில் வாங்கி மடியில் வைத்து வணங்கினால், குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை யாகும்.
இந்த சிறப்பு வாய்ந்த வராக அவதார கோலத்தில் பெருமாள், பூவராகராக இந்த ஊரில் இருப்பதால் இவரை வழிபடுவது மோட்சத்திற்கு செல்வதற்கான வழி என்கிறார்கள்.
கோவிலின் மூலவரான பூவராக மூர்த்தி கோவிலின் கருவறையில் உள்ளார். கோவில் விமானம் 'பாவன விமானம்' ஆகும். வடபுறத்தில் உள்ள கோபுரத்தின் பக்கத்தில் குழந்தை அம்மன் ஆலயம் உள்ளது. இங்கே அம்புஜவல்லித் தாயாரின் தோழிமார்களுக்கும் இடம் அளிக்கப்பட்டிருக்கிறது.
அர்த்த மண்டபத்தில் உற்சவர் யக்ஞ வராக மூர்த்தி, ஸ்ரீ தேவி-பூதேவியருடன் மேற்கு நோக்கி காட்சி தருகின்றார். உடன் ஆதி வராக மூர்த்தியும், கண்ணனும் எழுந்தருளி உள்ளனர்.

பெருமாள் சன்னிதிக்கு வடக்குச் சுற்றில், பாவை பாடிய ஆண்டாள் சன்னிதியும், பரமபத வாசல் கோபுரம் அருகே மகேஸ்வரி, சாமுண்டி, வராகி போன்ற சப்த மாதர்கள் கோவிலும் உள்ளன.
இவர்களை வேண்டிக் கொண்டு அருகே இருக்கும் வேப்ப மரத்தடியில், குழந்தை அம்மன் சன்னிதியில் விளக்கேற்றி வழிபடுவோரும் உண்டு.
ஸ்ரீ வராக பெருமாளை வணங்குவோர் சிறந்த வாக்கு வன்மை, பெரிய பதவி, நிலைத்த செல்வம், மக்கட்பேறு, நோயற்ற வாழ்வு, நீண்ட ஆயுள் ஆகியவற்றை பெற்று உலகம் போற்றும் வகையில் சிறப்பு பெற்று வாழ்வார்கள் என்று புராணங்களும், சாஸ்திரங்களும் சொல்கின்றன.
குரு, ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து பெருமாளை வணங்கினால் அத்தகைய தோஷங்கள் நிவர்த்தி ஆகும். தவிர புதிய வாகனங்கள் வாங்குவோர் தங்கள் வாகனத்தை இத்தலத்துக்கு கொண்டு வந்து அர்ச்சனை செய்வது வழக்கமாக உள்ளது. இதனை 'வாகனம் படைத்தல்' என்று கூறுகிறார்கள்.
தவிர விபத்துக்குள்ளான வாகனங்களை பழுதுபார்த்து பின்பு இங்கு கொண்டு வந்து பூவராக பெருமாளிடம் வழிபட்ட பின்னரே ஓட்டுகின்றனர். அதனால் பூவராகர் தங்களை உடனிருந்து காப்பார் என்று நம்புகிறார்கள்.

கோவில் சிறப்பு
'முஸ்தா சூரணம்' என்பது கோரைக்கிழங்கு பிரசாதம். ஸ்ரீமுஷ்ணம் பூவராக பெருமாள், பன்றி அவதாரம் எடுத்துள்ள காரணத்தால் அவரது அவதாரத்திற்கு மிகவும் பிடித்தமான உணவாக கோரைக்கிழங்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.
ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி திருக்கோவிலில் மாசி மகம் பிரம்மோற்சவம், மாசி மாதம் பரணி நட்சத்திரத்தன்று தொடங்கி 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்த உற்சவத்தில் சமுத்திரத்திற்கு எழுந்தருளும் முன், தைக்கால் கிராமத்தில் ஒரு மசூதி வழியாகப் பெருமாள் எழுந்தருள்வதும், மசூதி மேட்டில் மேள தாளங்களுடன் பூஜையை ஏற்றுக்கொள்வதும், நவாப்பின் அரண்மனை வரையில் எழுந்தருள்வதும் தனிச் சிறப்பு.
சித்திரை பிரம்மோற்சவ விழாவும் சிறப்பு வாய்ந்தது. இதில் ஒன்பது நாட்கள் பெருமாள் பகல் மற்றும் இரவு நேரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஒன்பதாவது நாள் நடைபெறும் மட்டையடி உற்சவம் விசேஷமானது.
சித்ரா பவுர்ணமி அன்று நண்பகலுக்கு மேல் புஷ்கரணியில் தீர்த்தவாரி நடைபெறும். இதுதவிர ஒவ்வொரு மாதத்திலும் இரண்டு ஏகாதசிகள், பவுர்ணமி, அமாவாசை, மாதப்பிறப்பு நாட்களில் யோக நரசிம்ம சுவாமி பிரகாரத்தில் எழுந்தருள்கிறார்.

அவதார தினமாகிய சித்திரை மாதம் ரேவதி நட்சத் திரத்தில் பூவராகர் எழுந்தருள்கிறார். வைகாசி விசாகத்தில் உற்சவர் கருடவாகனத்தில் பவனி, ஆடிப்பூரத்தில் ஆண்டாள் உற்சவம், ஆவணியில் பத்து நாள் ஸ்ரீஜெயந்தி விழா, உறியடி, புரட்டாசியில் பெருமாள் தாயார் நவராத்திரி கொலு, ஐப்பசியில் தீபாவளி உற்சவம், கார்த்திகையில் திருக்கார்த்திகை சொக்கப்பனை, மார்கழியில் பகல் பத்து இராப்பத்து மற்றும் ஆண்டாள் நீராட்டு, வைகுண்ட ஏகாதசியில் யக்ஞவராகன் வீதி உற்சவம் மற்றும் கருடசேவை, தை சங்கராந்தியில் யக்ஞவராகனுக்கும் ஆண்டாளுக்கும் திருக்கல்யாணம், மாட்டுப்பொங்கலன்று பாரிவேட்டை, தைப்பூசம் அன்று தீர்த்த உற்சவம், பங்குனி உத்திரத்தில் பெருமாள் தாயார் திருக்கல்யாணம், திரு ஊரல் உற்சவம் ஆகியவை சிறப்பாக நடைபெறும்.
தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்காக நடை திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
விருத்தாச்சலத்தில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவிலும், சிதம்பரத்தில் இருந்து 36 கிலோமீட்டர் தொலைவிலும் ஸ்ரீமுஷ்ணம் உள்ளது. இரு ஊர்களில் இருந்தும் ஸ்ரீமுஷ்ணத்துக்கு நகர பேருந்து வசதி உள்ளது.






