என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆடி சுவாதியில் அவதரித்த கருடாழ்வார்
    X

    ஆடி சுவாதியில் அவதரித்த கருடாழ்வார்

    • பறவைகளின் தலைவனான கருடன், விஷ்ணுவின் வாகனமாக திகழ்கிறார்.
    • கோவிலில் கருட பகவானை வணங்கிய பின்பு பெருமாளை வணங்குவதே சிறப்பாக கருதப்படுகிறது.

    1-8-2025 (இன்று) ஆடி சுவாதி

    பெரிய திருவடி என்று அழைக்கப்படும் கருடாழ்வார், ஆடி மாதத்தில் சுவாதி நட்சத்திரம், பஞ்சமி திதியில் அவதரித்ததாக புராணம் கூறுகிறது. பறவைகளின் தலைவனான கருடன், விஷ்ணுவின் வாகனமாக திகழ்கிறார்.

    கசியப முனிவருக்கு கத்ரு, வினதை என்ற இரு மனைவிகள் இருந்தனர். அதில் வினதைக்கு பிறந்தவர் தான் கருடாழ்வார். இவரது சகோதரன் அருணன். இவர் சூரிய பகவானின் தேரோட்டியாக திகழ்கிறார். கசியப முனிவரின் மற்றொரு மனைவியான கத்ருக்கு ஆயிரம் பாம்புகள் குழந்தைகளாக இருந்தனர்.

    ஒரு சமயம் வினதை, வானத்தில் வெள்ளை குதிரை பவனி செல்வதை பார்த்து, அதன் அழகை புகழ்ந்தார். அப்போது கத்ரு, அது முழுமையான வெள்ளைக் குதிரை இல்லை. அதன் வால் கருப்பு என்றாள். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் யார் சொல்வது தவறோ, அவர் மற்றவருக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். இதையடுத்து கத்ரு தனது குழந்தைகளான ஆயிரம் பாம்புகளில் ஒருவரான கார்க்கோடகனை வெள்ளைக் குதிரையின் வாலில் சுற்றி கருப்பு நிறமாக தோன்ற செய்தாள். இதைக் கண்ட வினதை ஏமாந்து, தனது தோல்வியை ஒப்புக் கொண்டார். கத்ருவின் அடிமையானாள். இதையடுத்து கத்ரு, வினதைக்கு பல கொடுமைகள் செய்து வந்தாள்.

    தன் தாயின் நிலைமையை கண்டு வருந்திய கருடன், தன் தாயை விடுவிக்க எண்ணினார். அதற்காக தேவலோகத்தில் இருக்கும் அமிர்த கலசத்தை கொண்டு வந்து தன் தாயை அடிமை வாழ்வில் இருந்து மீட்டதாக புராணங்கள் கூறுகின்றன.

    பெருமாள் கோவில்களில் பெருமாள் சன்னிதியின் முன்பாக கருடன் வீற்றிருப்பார். கோவிலில் கருட பகவானை வணங்கிய பின்பு பெருமாளை வணங்குவதே சிறப்பாக கருதப்படுகிறது. ஆடி சுவாதி நாளில் விரதம் இருந்து கருட தரிசனம் செய்வதாலும், கருடனை வழிபடுவதாலும் சகல தோஷங்களும் நீங்கும், மாங்கல்ய பாக்கியம் நிலைத்திருக்கும், எதிரிகளின் பயம் விலகும், வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

    Next Story
    ×