என் மலர்
ஆன்மிகம்
- அனைத்து சிறப்புரிமை தரிசனங்களும் டிசம்பர் 30-ந்தேதி முதல் ஜனவரி 8-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன.
- வி.ஐ.பி. தரிசனத்திற்கான அனைத்து பரிந்துரை கடிதங்களும் ரத்து செய்யப்படுகின்றன.
திருப்பதி கோவிலில் டிசம்பர் மாதம் 30-ந்தேதி முதல் ஜனவரி 8-ந்தேதி வரை 10 நாட்கள் வைகுண்ட துவார தரிசனத்திற்கான விரிவான ஏற்பாடுகள் மற்றும் விரிவான வழிகாட்டுதல்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை அளித்து, தேவஸ்தானம் பெரும்பாலான சிறப்பு சலுகைகளை ரத்து செய்துள்ளது. வைகுண்ட ஏகாதசி முதல் 3 நாட்களுக்கு ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மீதமுள்ள 7 நாட்கள் நேரடி தரிசனம் வழங்கப்படுகிறது.
முதல் 3 நாட்களுக்கு 1+3 குடும்ப ஒதுக்கீட்டின் கீழ் டோக்கன்கள் ஒதுக்கப்படும், இதில் நான்கு உறுப்பினர்கள் வரை அனுமதிக்கப்படுவார்கள்.
பக்தர்கள் நவம்பர் 27-ந் தேதி காலை 10 மணி முதல் டிசம்பர் 1-ந் தேதி மாலை 5 மணி வரை தேவஸ்தான வலைத்தளம், தேவஸ்தான மொபைல் செயலி அல்லது அரசு வாட்ஸ்அப் பாட் (9552300009) வழியாக பதிவு செய்ய வேண்டும்.
ஆன்லைன் டிக்கெட் தேர்வு முடிவுகள் டிசம்பர் 2-ந்தேதி பிற்பகல் 2 மணிக்கு அறிவிக்கப்படும்.
மீதமுள்ள நாட்களுக்கான தரிசன அட்டவணை மற்றும் டிக்கெட் விற்பனையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 2-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை சர்வ தரிசனத்திற்கு, சாதாரண பக்தர்கள் வைகுந்தம் வரிசை வளாகம்2 மூலம் டோக்கன்கள் இல்லாமல் நேரடியாக சர்வ தரிசனத்தைப் பெறலாம்.
ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகளுக்கு (ஜனவரி 2-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை), ஒரு நாளைக்கு 1,000 டிக்கெட்டுகள் டிசம்பர் 5-ந் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
ரூ.300 கட்டண தரிசனத்திற்கு ஒரு நாளைக்கு 15,000 டிக்கெட்டுகள் டிசம்பர் 5-ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தைகள் உள்ள பெற்றோர், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான அனைத்து சிறப்புரிமை தரிசனங்களும் டிசம்பர் 30-ந்தேதி முதல் ஜனவரி 8-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன.
சுய நெறிமுறை பிரமுகர்களுக்கு மட்டுமே விஐபி பிரேக் தரிசனம் வழங்கப்படும். வி.ஐ.பி. தரிசனத்திற்கான அனைத்து பரிந்துரை கடிதங்களும் ரத்து செய்யப்படுகின்றன. மேலும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி கோவிலில் நேற்று 72,677 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 24,732 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.3.26 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் 12 மணி காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- கோவிலில், முருகப்பெருமானின் சன்னிதி வாசற்படிகள் கலை நயத்துடன் காணப்படுகின்றன.
- மழை, வெயில், காற்று என அனைத்தையும் ஏற்கும் திருமேனியாக சுயம்பு ஐயப்பன் காட்சி தருகின்றார்.
சுவாமி ஐயப்பனுக்கு நாடெங்கிலும் எண்ணற்ற ஆலயங்கள் உள்ளன. ஆனால் சாஸ்தா எனும் சுவாமி ஐயப்பன், சுயம்புவாகத் தோன்றிய ஆலயத்தை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அந்நியர்களின் படையெடுப்பையும் தாக்குப்பிடித்த சுவாமி ஐயப்பன், இன்றும் அதே இடத்தில் எளிமையாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் வழங்கி குறைகளைத் தீர்த்து வருகின்றார். இவருக்கு துணையாக இடது பின்புறம் பெரிய ஆலயத்தில் முருகப்பெருமான் தம் கரங்களில் ஞானப்பழமும், தண்டமும் தாங்கி அருள் வழங்குகின்றார்.
தொன்மைச் சிறப்பு
மூவேந்தர்கள் காலத்தில் சேர மன்னர்களின் ஆட்சியிலும், பின்பு பல்லவர்கள் ஆட்சியிலும் பாலக்காடு பகுதி இருந்துள்ளது. பல்லவர்கள், சேர மன்னர்களுக்கு பிறகு வேறு சமூகத்தினர் சிலர் இப்பகுதியை ஆட்சி செய்தனர். இவர்கள் ஆண்ட பகுதி வள்ளுவ நாடு, கொல்லங்கோடு, பாலக்காடு என மூன்று பிரிவுகளாக இருந்தது. இதில் பாலக்காட்டை சேகரி வர்மா என்ற அரசன் ஆட்சி செய்தான். அதன் பின், இப்பகுதி கி.பி.1757-ல் கோழிக்கோடு அரசனான சாமூத்திரி, ஐதர் அலி, திப்பு சுல்தானை அடுத்து ஆங்கிலேயர் வசமானது.
அந்நியர் ஆட்சியில் சிதைக்கப்பட்ட எண்ணற்ற ஆலயங்களில் ஒன்றாக முடப்பக்காடு ஆலயமும் இருந்தது. ஆனால் இந்த ஆலய வளாகத்தில் எளிய ஆலயமாக இருந்த சாஸ்தா சுயம்புத் திருமேனி ஆலயம் பாதிக்கப்படவில்லை. அதன்பிறகு இந்த ஆலய வளாகம் பல நூறு ஆண்டுகள் கவனிப்பாரற்றுக் கிடந்தது.
இந்நிலையில் அப்பகுதியில் வாழ்ந்த அடியார் பெருமக்கள் இந்த ஆலயத்தின் உண்மை நிலையை அறிய, தேவப் பிரசன்னம் மற்றும் தாம்பூலப் பிரசன்னம் ஆகியவற்றை பார்த்தனர். அதில், இங்கு பழமையான இரண்டு ஆலயங்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டது. அதன்படி பெரிய ஆலயம் சுப்பிரமணியர் ஆலயம் என்றும், சிறிய ஆலயம் சாஸ்தாவின் சுயம்பு வடிவம் என்றும் தெரியவந்தது.
இதனால் மகிழ்ச்சி அடைந்த இவ்வூர் மக்கள், 2017-ம் ஆண்டு ஆலயம் எழுப்பும் பணியில் ஈடுபட்டனர். ஆலயத் திருப்பணியில் கோயம்புத்தூரைச் சேர்ந்த அடியவர் ஒருவர் இந்த ஆலயத்தின் புனரமைப்பிற்கு பெரிதும் உதவினார். அதன் பயனால் இவ்வாலயம் இன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது. சேதம் அடைந்திருந்த சுப்பிரமணியர் சிலையும் அதே கலைநயத்தோடு வடிக்கப்பட்டு பக்தர்களின் வழிபாட்டுக்கு வந்துள்ளது.
கோவில் அமைப்பு
இவ்வாலயம் பாரதப்புழா ஆற்றின் வடகரையில் மேடான பகுதியில் அமைந்துள்ளது. எளிய சுயம்பு சாஸ்தா ஆலயம், பெரிய வடிவிலான சுப்பிரமணியர் ஆலயம், வலது பின்புறம் நாகர்கள் சன்னிதி என அனைத்தும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. தென் கிழக்கில் மருத்துவ குணம் கொண்ட தீர்த்தக்கிணறும், சீரமைப்பை எதிர்நோக்கும் ஒளஷதத் திருக்குளமும் உள்ளன. இத்தலம் மேற்புறம் பிரம்மாண்ட ஆறு, கீழ் புறம் வயலும் மலைகளும் சூழ்ந்து பசுமையான சூழலில் அமைந்துள்ளது.
இவ்வாலயத்தின் தொன்மைக்குச் சான்றுகளாக, இதன் கட்டிட அமைப்பும், சுயம்பு ஐயப்பனின் திருமேனியும் காட்சி அளிக்கின்றன. இந்த ஆலயம் 'வெட்டுக்கல்' எனப்படும் கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள பல்வேறு பழங்கால ஆலயங்களில் இதே அமைப்பு காணப்படுகின்றது. இதற்கு மற்றொரு சான்றாக, இந்திய தொல்லியல் துறையின் நிர்வாகத்தில் உள்ள பட்டாம்பி நகரின் கைத்தளி மகாதேவர் ஆலய வளாகத்தில் உள்ள நரசிம்மர் மற்றும் அனுமன் சன்னிதிகள் உள்ளன.
கோவிலில், முருகப்பெருமானின் சன்னிதி வாசற்படிகள் கலை நயத்துடன் காணப்படுகின்றன. ஒருபுறம் கைலாய வாசலும், மறுபுறம் வைகுண்ட வாசலும் உள்ளது. இவற்றில் சிங்கமும், யானையும் சிற்பங்களாக வடிக்கப்பட்டு உள்ளன. இதே வடிவம் கைத்தளி மகாதேவர் வளாகத்தில் நரசிம்மர் கருவறையில் காணப்படுகின்றது.
முருகனின் சிலா வடிவம் மிகவும் கலைநயத்தோடு உள்ளது குறிப்பிடத்தக்கது. சுப்பிரமணியர் நின்ற கோலத்தில் வலது கையில் ஞானப்பழம் தாங்கியும், இடது கையை இடுப்பில் தாங்கியும் கூடவே தண்டத்தையும் தாங்கியபடி புன்னகை பூத்த முகத்துடன் அருள் காட்சி வழங்குகின்றார்.

ஐயப்பன் சன்னிதி
முருகன் ஆலயத்தின் வலது முன்புறத்தில் எளிய சன்னிதியாக சுயம்பு ஐயப்பன் சன்னிதி அமைந்துள்ளது. ஸ்ரீ கோவில் எனும் கருவறையில் உள்ள ஐயப்பன் திருமேனி, பழமையானது மற்றும் சுயம்பு என்பதை உறுதி செய்கின்றது. இவர் திருமேனியை சுற்றி கேரள பாணி கூரை அமைந்திருந்தாலும், இவரின் மேல் பகுதி மூடப்படாமல் வானம் பார்த்த பூமியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மழை, வெயில், காற்று என அனைத்தையும் ஏற்கும் திருமேனியாக சுயம்பு ஐயப்பன் காட்சி தருகின்றார். இவரின் திருமேனி லிங்க திருமேனி வடிவமாக அமைந்துள்ளது. இதே அமைப்பு கேதார்நாத் சிவபெருமானுக்கும், சிங்னாப்பூர் சனி பகவானுக்கும் அமைந்துள்ளது இங்கே நினைவுகூரத்தக்கது. அந்த வகையில் சுவாமி ஐயப்பனின் அபூர்வக்கோலம் இப்புண்ணிய பூமியில் அமைந்துள்ளது.
இங்குள்ள பழமையான ஒரு கல் விளக்கு, அடியார் ஒருவரால் வழங்கப்பட்டதை உறுதி செய்யும் விதமாக விளக்கின் பாதத்தில் 'திருப்பாததாச கண்ணப்பட்டர்' என்ற மலையாள வரிகள் காணப்படுகின்றது. இக்கோவில், சுவாமி ஐயப்பன் கோவில்தான் என்பதை (16-ம் நூற்றாண்டு) இந்திய அரசின் சென்சஸ் இயக்ககத்தின் பாலக்காடு மாவட்ட கோவில்கள் வெளியீட்டில் குறிப்பிட்டுள்ளது. என்றாலும் கட்டிட அமைப்பு பல்லவர் காலத்தை உணர்த்துகின்றது.
விழாக்கள்
தைப்பூசத்தை மையமாக வைத்து பதினைந்து நாட்கள் பிரம்மோற்சவம், பூரம் விழா எளிமையாக நடத்தப்படுகின்றன. ஆலய பூஜைகளை நரிபட்ட மனா கேசவ பட்டத்திரி பரம்பரையினர் செய்து வருகின்றனர்.
இங்குள்ள இறைவன் தம்மை நாடிவரும் பக்தர்களுக்கு வேண்டிய வரம் அருளும் கண்கண்ட தெய்வமாக விளங்குகின்றார். கேரள மாநிலத்தில் அமர்ந்த கோல ஐயப்பன் ஆலயங்கள் நிறைந்திருந்தாலும் சுயம்பு ஐயப்பன் இவர் ஒருவரே என்பது தனிச்சிறப்பு ஆகும்.
தினமும் மாலை 5 மணி முதல் 7.30 மணி வரை சுவாமி தரிசனம் செய்யலாம். என்றாலும் சுயம்பு ஐயப்பனை எப்போதும் தரிசிக்க ஏதுவாக கருவறைக் கதவுகள் அமைந்துள்ளன. ஆலயப் பணியாளர் வீடும் ஆலயத்தின் அருகில் உள்ளது.
அமைவிடம்
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், பட்டாம்பி வட்டத்தில் முடப்பக்காடு திருத்தலம் அமைந்துள்ளது. பள்ளிப்புரம் - பட்டாம்பி நெடுஞ்சாலையில், பட்டாம்பியில் இருந்து கிழக்கே ஏழு கிலோமீட்டர் தொலைவில், தமிழ்நாட்டின் ஆனைமலையில் உருவாகி கேரளத்தின் இரண்டாவது பெரிய நதியாக விளங்கும் பாரதப்புழா ஆற்றின் தென்கரையில் இவ்வாலயம் அமைந்துள்ளது. பட்டாம்பி வழியே குருவாயூர் செல்லும் அன்பர்கள் அபூர்வ சுயம்பு ஐயப்பனையும் தரிசித்து அருள் பெறலாம்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். எடுத்த காரியத்தை எளிதில் முடிப்பீர்கள்.
ரிஷபம்
கலகலப்பான செய்திகள் வந்து சேரும்நாள். தொழில் முன்னேற்றம் கருதி ஒரு தொகையைச் செலவிடுவீர்கள். உத்தியோக முயற்சியில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.
மிதுனம்
கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். கடமையில் தொய்வு ஏற்படும். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கடகம்
முன்னேற்றம் கூடும் நாள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்அதிகாரிகளின் ஆதரவு உண்டு.
சிம்மம்
கல்யாண முயற்சி கைகூடும் நாள். நீண்டநாளையப் பிரச்சனையொன்று நல்ல முடிவிற்கு வரும். அடுத்தவர் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
கன்னி
வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேரும் நாள். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு. வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படலாம்.
துலாம்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சொத்து பிரச்சனை அகலும். வியாபாரப் போட்டிகள் விலகும்.
விருச்சிகம்
யோகமான நாள். பிறருக்காகப் பொறுப்புகள் சொல்லி வாங்கி கொடுத்த தொகை வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக் கொள்வர்.
தனுசு
விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். வரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். புதிய தொழில் தொடங்கும் திட்டம் நிறைவேறும்.
மகரம்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். எதையும் யோசித்துச் செய்வது நல்லது. பயணத்தால் தொல்லையுண்டு. எதிர்பாராத விரயம் உண்டு.
கும்பம்
வருமானம் திருப்தி தரும் நாள். சொத்துப் பிரச்சனை நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்காது.
மீனம்
யோகமான நாள். செல்வாக்கு மேலோங்கும். காரிய வெற்றிக்கு நண்பர்கள் துணைபுரிவர். உறவினர் வழியில் ஒரு மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும்.
- சஷ்டி விரதம். திருவோண விரதம்.
- திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு கார்த்திகை-10 (புதன்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சஷ்டி இரவு 10.27 மணி வரை பிறகு சப்தமி
நட்சத்திரம் : திருவோணம் இரவு 10.42 மணி வரை பிறகு அவிட்டம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று சஷ்டி, திருவோணம் விரதம், மதுராந்தகம் ஏரிகாத்த கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சன சேவை
இன்று சஷ்டி விரதம். திருவோண விரதம். திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசல நாயகர் காலை பூத வாகனத்திலும் இரவு சுவாமி சிம்ம வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் பவனி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் புறப்பாடு. பழனி ஸ்ரீ ஆண்டவர் பவனி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம்.
திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அலங்கார திருமஞ்சனம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சன சேவை. விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலையில் அபிஷேகம். திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பரிவு
ரிஷபம்-நிறைவு
மிதுனம்-மாற்றம்
கடகம்-நற்சொல்
சிம்மம்-புகழ்
கன்னி-ஓய்வு
துலாம்- யோகம்
விருச்சிகம்-ஆதாயம்
தனுசு- மகிழ்ச்சி
மகரம்-வரவு
கும்பம்-சிந்தனை
மீனம்-கடமை
- திருப்பதியில் தற்போது கடும் பனிப்பொழிவு தொடங்கி உள்ளதால் பக்தர்கள் குளிரில் நடுங்கி வருகின்றனர்.
- திருப்பதியில் நேற்று 68,615 பேர் தரிசனம் செய்தனர்.
திருப்பதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தனர். நேற்று காலை முதல் மேலும் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர். இதனால் பக்தர்கள் தரிசனத்திற்கு தங்கி செல்லும் வைகுந்தம் அறைகள் அனைத்தும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன.
இதனால் கோவிலுக்கு வெளியே நீண்ட தூரம் தரிசனத்திற்காக பக்தர்கள் காத்திருந்தனர். திருப்பதியில் தற்போது கடும் பனிப்பொழிவு தொடங்கி உள்ளதால் பக்தர்கள் குளிரில் நடுங்கி வருகின்றனர்.
திருப்பதியில் நேற்று 68,615 பேர் தரிசனம் செய்தனர். 27,722 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.23 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- இன்று உடனடி முன்பதிவில் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை.
- பக்தர்களின் வருகை அதிகமாக இருந்ததால் கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 16-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. அன்று முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். தினமும் ஆன்லைன் முன்பதிவு மூலம் 70 ஆயிரம் பேர் மற்றும் உடனடி முன்பதிவு அடிப்படையில் 20 ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் உடனடி முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் வருகை கட்டுக்கடங்காமல் இருந்ததால் கடந்த வாரத்தில் சன்னிதானம், பம்பை மட்டுமின்றி மலைப்பாதையிலும் கூட்ட நெரிசல் எற்பட்டது. நெரிசலில் சிக்கி பெண் பக்தர் ஒருவரும் பலியானார்.
இதையடுத்து பக்தர்கள் நெரிசலில் சிக்குவதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் உடனடி முன்பதிவு (ஸ்பாட் புக்கிங்) அடிப்படையில் தினமும் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரமாக குறைக்கப்பட்டது.
மேலும் பம்பை உள்ளிட்ட 3 இடங்களில் செயல்பட்ட உடனடி முன்பதிவு மையங்கள் மூடப்பட்டன. தேவசம்போர்டின் இந்த அதிரடி நடவடிக்கையால் உடனடி முன்பதிவு மூலமாக சாமி தரிசனம் செய்ய வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. சன்னிதானம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்ட நெரிசலும் இல்லை.
உடனடி முன்பதிவு (ஸ்பாட் புக்கிங்) எண்ணிக்கையை பக்தர்களின் வருகைக்கு தகுந்தாற்போல் அதிகரித்துக்கொள்ள தேவசம்போர்டுக்கு கேரள ஐகோர்ட்டு அனுமதி வழங்கியிருந்தது. இதனால் பக்தர்கள் வருகைக்கு தகுற்தாற்போல் "ஸ்பாட் புக்கிங்" மூலமாக அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சபரிமலையில் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்காக கேரள மாநில டி.ஜி.பி. ரவுடா சந்திரசேகர் சபரிமலைக்கு வந்தார். அவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தது மட்டுமின்றி, அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் அவரது தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் உடனடி முன்பதிவு மூலமாக அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையை, பக்தர்கள் வருகைக்கு தகுந்தாற்போல் 7ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
ஆனால் இன்று உடனடி முன்பதிவில் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை. அது 5 ஆயிரமாகவே இருந்தது. ஆனால் ஆன்லைன் முன்பதிவு செய்யாத பக்தர்கள் இன்று அதிகளவில் சபரிமலைக்கு வந்தனர். இதனால் நிலக்கல், பம்பை உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
பதினெட்டாம் படி ஏறி சாமி தரசனம் செய்வதற்காக நின்ற பக்தர்களின் வரிசை சரங்குத்தி வரை காணப்பட்டது. அங்கிருந்து பதினெட்டாம் படியை அடைய பக்தர்கள் 5 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தனர். பக்தர்களின் வருகை அதிகமாக இருந்ததால் கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கார்த்திகை உற்சவம் ஆரம்பம்.
- திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
இந்த வார விசேஷங்கள்
25-ந் தேதி (செவ்வாய்)
* திருப்பரங்குன்றம் ஆண்டவர் கோவிலில் கார்த்திகை உற்சவம் ஆரம்பம்.
* திருவண்ணாமலை அருணாசலேசுவரர் காலை சூரிய பிரபையிலும், இரவு இந்திர விமானத்திலும் புறப்பாடு.
* சுவாமிமலை முருகப் பெருமான் விழா தொடக்கம்.
* பழனி ஆண்டவர் திருவீதி உலா.
* மேல்நோக்கு நாள்.
26-ந் தேதி (புதன்)
* உப்பிலியப்பன் சீனிவாசப் பெருமாள் புறப்பாடு.
* சுவாமிமலை முருகப்பெருமான் இடும்ப வாகனத்தில் திருவீதி உலா.
* சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.
27-ந் தேதி (வியாழன்)
* முகூர்த்த நாள்.
* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கார்த்திகை உற்சவம் ஆரம்பம்.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* மேல்நோக்கு நாள்.
28-ந் தேதி (வெள்ளி)
* பழனி ஆண்டவர் பவனி.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வேதவல்லித் தாயாருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவில் சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.
29-ந் தேதி (சனி)
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி.
* திருவரங்கம் நம் பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், மதுரை கூடலழகப் பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.
* கீழ்நோக்கு நாள்.
30-ந் தேதி (ஞாயிறு)
* முகூர்த்த நாள்.
* திருவண்ணாமலை அண்ணாமலையார் ரத உற்சவம்.
* திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* மேல்நோக்கு நாள்.
1-ந் தேதி (திங்கள்)
* முகூர்த்த நாள்.
* சர்வ ஏகாதசி.
* திருவண்ணாமலை அருணாசலேசுவரர் வெள்ளி விமானத்திலும், இரவு குதிரை வாகனத்திலும் பவனி.
* திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் தலங்களில் 1008 சங்காபிஷேகம்.
* சமநோக்கு நாள்.
- சப்த ரிஷிகள் தவம் செய்ததால், இந்த மலைக்கு ‘தபசு மலை' என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
- கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மூலிகை கலந்த பிரசாதம் வழங்கப்படுவது, இக்கோவிலின் தனிச் சிறப்பாகும்.
புதுக்கோட்டை மாவட்டம் தபசுமலை எனும் ஊரில் சிறிய குன்றின் மேல் அமைந்துள்ளது, தபசுமலை பால தண்டாயுதபாணி கோவில்.
சப்த ரிஷிகள் தவம் செய்ததால், இந்த மலைக்கு 'தபசு மலை' என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவிலில் முருகப்பெருமான், கையில் தண்டத்துடன் நின்ற கோலத்தில் பால தண்டாயுதபாணியாக காட்சி தருகிறார். இவர் முனிவர்களாலும், சித்தர்களாலும் போற்றி வணங்கப்பட்டவர்.
ஒரு காலத்தில் இங்கு முனிவர்கள் வேல் வைத்து வழிபட்டுள்ளனர். அந்த இடத்திலேயே முருகப்பெருமானுக்கு விக்ரகம் அமைத்து பிரதிஷ்டை செய்து, பின்பு கோவில் எழுப்பி மக்கள் வழிபட தொடங்கினர். மலை அடிவாரத்தில் சப்த ரிஷிகளின் சிலைகளும், பீடமும் அமைந்துள்ளன. இந்த பீடங்கள் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கோவிலை அடைய, 75 படிக்கட்டுகளை ஏறி செல்ல வேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மூலிகை கலந்த பிரசாதம் வழங்கப்படுவது, இக்கோவிலின் தனிச் சிறப்பாகும்.
இந்த பிரசாதத்தை சாப்பிட்டால் சர்க்கரை நோய், வயிறு சம்பந்தப்பட்ட நோய் போன்றவை குணமாகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. கிரக தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வீற்றிருக்கும் முருகப் பெருமானை வழிபட்டால் அனைத்து வித தோஷங்களும் நிவர்த்தியாகும் என நம்பப்படுகிறது.
கந்த சஷ்டி திருநாளில் பெண்கள் விரதம் இருந்து தபசுமலையில் வீற்றிருக்கக்கூடிய முருகப்பெருமானை தரிசனம் செய்து, விளக்கேற்றி வழிபட்டால் விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும் என்றும், குழந்தை இல்லாதவர்கள் முருகப்பெருமானின் காலடியில் வைக்கப்பட்ட எலுமிச்சம் பழத்தை சாறு எடுத்து குடித்தால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் பக்தர்கள் கூறுகின்றனர்.
மனவேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதியர், இங்குள்ள முருகப்பெருமானிடம் மனமுருகி பிரார்த்தனை செய்தால் விரைவில் ஒன்றுசேர்வார்கள் என்பது நம்பிக்கை. புதுக்கோட்டையில் இருந்து 17 கி.மீ. தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
பரபரப்பாக செயல்பட்டு பாராட்டு மழையில் நனையும் நாள். அலைபேசி வழித்தகவல் ஆச்சரியம் தரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
ரிஷபம்
சந்தோஷங்களை சந்திக்கும் நாள். விலகிச்சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்து சேரலாம். வீட்டை பராமரிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.
மிதுனம்
சங்கடங்களை சந்திக்கும் நாள். திட்டமிட்ட சில வேலைகளை மாற்றியமைக்க நேரிடலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
கடகம்
நிதி நிலை உயரும் நாள். நேசம் மிக்கவர்களின் பாச மழையில் நனைவீர்கள். வீடு மாற்ற தகவல் இனிமை தரும். உத்தியோகத்தில் இடையூறாக இருந்தவர்கள் விலகுவர்.
சிம்மம்
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பணத் தேவைகள் பூர்த்தியாகும். ஆபணரங்களை வாங்குவதில் நாட்டம் செல்லும்.
கன்னி
விருப்பங்கள் நிறைவேற விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய நாள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது.
துலாம்
மனக்குழப்பம் அகலும் நாள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி தரும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.
விருச்சிகம்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். வருமானம் திருப்தி தரும். தொழில் பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு உண்டு.
தனுசு
வளர்ச்சி கூடும் நாள். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவீர்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு உண்டு.
மகரம்
நீண்ட நாளைய எண்ணங்கள் நிறைவேறும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். பால்ய நண்பர்கள் பக்கபலமாக இருப்பர்.
கும்பம்
உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். பக்கத்து வீட்டாரின் பகைமாறும். கடன்சுமை குறைய புது முயற்சி செய்வீர்கள். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.
மீனம்
நெருக்கடி நிலை அகலும் நாள். பிள்ளைகள் பொறுப்போடு செயல்படுவது கண்டு பெருமைப்படுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும்.
- பழனி ஸ்ரீ ஆண்டவர் திருவீதியுலா.
- திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு, கார்த்திகை-9 (செவ்வாய்க்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : பஞ்சமி இரவு 8.07 வரை பிறகு சஷ்டி
நட்சத்திரம் : உத்திராடம் இரவு 9.56 வரை யோகம் பிறகு திருவோணம் : சித்தயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3.00 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் வடக்கு.
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை.
திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம் முருகன் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்
சுவாமிமலை, திருப்பரங்குன்றம் தலங்களில் முருகப் பெருமான் உற்சவம் ஆரம்பம். திருவண்ணாமலை ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் காலை சூரியப் பிரபையிலும் இரவு சுவாமி இந்திர விமானத்திலும் புறப்பாடு. பழனி ஸ்ரீ ஆண்டவர் திருவீதியுலா. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம். குரங்கணி ஸ்ரீ முத்துமாலையம்மன் பவனி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.
திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். திருநெல்வேலி சமீபம் 3ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுத வல்லித்தாயார் சமேத வைத்தமாநிதிப்பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம் - உழைப்பு
ரிஷபம் - கடமை
மிதுனம் - புகழ்
கடகம் - லாபம்
சிம்மம் - பெருமை
கன்னி - மேன்மை
விருச்சிகம் - ஆதரவு
தனுசு - நலம்
மகரம் - நட்பு
கும்பம் - கடமை
மீனம் - உவகை
- ஐயப்பசாமி பூவுலகில் ராஜசேகரன் மன்னன் மகனாக வாழ்ந்தபோது புலிப்பால் கொண்டு வர காட்டுக்கு சென்றார்.
- யாத்திரை முடியும் போது ஐயப்ப பக்தன் தனக்கென்று கொண்டு போன பொருட்களை எல்லாம் காலி செய்து விடுகிறான்.
ஐயப்ப பக்தர்கள் தன் தலையில் தாங்கி நிற்கும் இருமுடியின் தத்துவத்தை தெரிந்து கொள்வது அவசியம். மணிகண்டன் என்ற நாமத்துடன் ஐயப்பசாமி பூவுலகில் ராஜசேகரன் மன்னன் மகனாக வாழ்ந்தபோது புலிப்பால் கொண்டு வர காட்டுக்கு சென்றார். அப்போது குலதெய்வமாகிய சிவபெருமானை துணைக்கு அழைப்பது போல் 3 கண்ணுடைய தேங்காயை எடுத்துக் கொண்டு போகும்படி மணிகண்டனுக்கு மன்னன் ஆலோசனை வழங்கினார்.
அவரும் அப்படியே செய்தார். அதே பழக்கத்தை தான் இப்போது சபரிமலை யாத்திரை செல்பவர்கள் இருமுடி சுமந்து செல்வதன் மூலம் கடைபிடித்து வருகிறார்கள்.
இருமுடியில் ஒருபுறம் பக்தனுக்கு தேவையான பொருட்கள், யாத்திரை முடியும் போது ஐயப்ப பக்தன் தனக்கென்று கொண்டு போன பொருட்களை எல்லாம் காலி செய்து விடுகிறான். ஆண்டவனின் பதினெட்டு படிகளை கடக்கிறான். ஆண்டவனை நெருங்கும்வரை தான் தனக்கென்று தேவைப்படுகிறது. நெருங்கியவுடன் நமக்கென்று ஒன்றும் தேவை இல்லை, எல்லாம் அவனுக்கே அர்ப்பணம் ஆகி விடகிறது என்பது தான் இருமுடியின் தத்துவம்.
- காலை மற்றும் இரவு நேரங்களில் பஞ்ச மூர்த்திகள் கோவில் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.
- வருகிற 29-ந்தேதி இரவு வெள்ளித் தேரோட்டமும், அடுத்த நாள் 30-ந்தேதி மகா தேரோட்டமும் நடைபெறும்.
திருவண்ணாமலை:
உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று அதிகாலை விநாயகர், முருகர், அருணாசலேஸ்வரர், உண்ணாமலை அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து அருணாசலேஸ்வரர் கோவில் சாமி சன்னதி முன்பு பஞ்ச மூர்த்திகள் அலங்கார ரூபத்தில் எழுந்தருள, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்ப இன்று காலை 6.30 மணிக்கு தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.
இதில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் தர்ப்பகராஜ், போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் ராம்பிரதீபன், அ.தி.மு.க., எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட செயலாளர் டிஸ்கோ குணசேகரன், மாமன்ற உறுப்பினர்கள் டாக்டர் பழனி, பொறியாளர் கணேசன், அண்ணாமலையார் கோவில் தக்கார் டாக்டர் மீனாட்சி சுந்தரம், வக்கீல் அருள்குமரன், ரேடியோ ஆறுமுகம் உள்ளிட்ட சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இன்று தொடங்கிய கார்த்திகை தீபத்திருவிழா 10 நாட்களுக்கு நடைபெறும். காலை மற்றும் இரவு நேரங்களில் பஞ்ச மூர்த்திகள் கோவில் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.
இதில் வருகிற 29-ந் தேதி இரவு வெள்ளித் தேரோட்டமும், அடுத்த நாள் 30-ந் தேதி மகா தேரோட்டமும் நடைபெறும்.
கார்த்திகை தீபத் திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான தீப தரிசன விழா டிசம்பர் மாதம் 3-ந் தேதி நடைபெறும். அன்று அதிகாலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் அண்ணாமலையார் கோவில் தங்க கொடிமரம் முன்பு எழுந்தருளி ஆனந்த தாண்டவம் ஆட 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.
தீப தரிசன நாளில் சுமார் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள அண்ணாமலையை வலம் வந்து வணங்குவர். கார்த்திகை தீப தரிசன பாதுகாப்பு பணியில் 15 ஆயிரம் போலீசார் ஈடுபடுவார்கள்,
தீப தரிசனம் காண வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பான முறையில் செய்யப்பட்டு வருகிறது.






