என் மலர்tooltip icon

    வழிபாடு

    2026 மாசி மாத ராசிபலன் - தனுசு, மகரம், கும்பம், மீனம்
    X

    2026 மாசி மாத ராசிபலன் - தனுசு, மகரம், கும்பம், மீனம்

    • தனுசு ராசிக்கு பாக்கிய அதிபதியான சூரியன் மூன்றாம் இடமான உபஜெய ஸ்தானத்தில் வெற்றி ஸ்தானத்தில் ராகுவுடன் இணைந்து சஞ்சரிக்க போகிறார்.
    • பிறக்கும் மாசி மாதத்தில் சூரியன் தனம் வாக்கு குடும்ப ஸ்தானம் செல்கிறார்.

    தலைமை பதவியை விரும்பும் தனுசு ராசியினரே!

    தனுசு ராசிக்கு பாக்கிய அதிபதியான சூரியன் மூன்றாம் இடமான உபஜெய ஸ்தானத்தில் வெற்றி ஸ்தானத்தில் ராகுவுடன் இணைந்து சஞ்சரிக்க போகிறார். இது வெற்றி மேல் வெற்றியை தரக்கூடிய காலமாகும்.தொழில் உத்தியோகத்திற்காக அடிக்கடி இடம் பெயறுவார்கள். வேதனைகளும் சோதனைகளும், சாதனைகளாக மாறும்.உழைப்பின் மேல் ஆர்வம் குறைந்து அதிர்ஷ்டத்தை நோக்கி பயணிக்கும் எண்ணம் மேலோங்கும்.தந்தையின் ஆலோசனைகளால் பயன் உண்டு.

    பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் குறையும்.அவர்களின் முன்னேற்றத்திற்கு சுப செலவுகள் செய்யலாம். வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீட்டில் குடியேறுவார்கள். சிலர் பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்து வாங்குவார்கள். பூமி, மனை வாங்குவது பற்றிய சிந்தனை மேலோங்கும். பத்திரப்பதிவில் நிலவிய தடை தாமதங்கள் விலகும். தங்கம், வெள்ளி, அதிர்ஷ்ட பணம் கிடைக்கலாம். சொத்து வாங்குவது, விற்பது, திருமணம் போன்ற முக்கிய முடிவுகளை ஒத்திப் போடவும். பொருளாதாரத்தில் நிலவிய ஏற்ற இறக்க மந்த நிலை மாறும்.கூட்டுத் தொழிலில் பலன் உண்டு. குடும்பத்தில் அமைதியும் மகிழ்சியும் நீடிக்கும். குல தெய்வ அருள் கிடைக்கும். அரசியல், ஆன்மீகம், கலை என அனைத்து துறை திறமைசாலிகளும் பிரபலமடைவார்கள்.

    கண், காது, மூக்கு தொடர்பான உபாதைகள் வைத்தியத்தில் சீராகும். திருமணம், குழந்தை பேறு, கல்விச் செலவு, வீடு கட்டும் செலவு, கோவில் பிரார்த்தனை போன்ற சுப செலவு உண்டாகும். வீண் செலவுகளை குறைத்தால் மன அமைதி கூடும். மாணவ, மாணவிகளுக்கு படிப்பில் ஆர்வமும், அக்கறையும் ஏற்படும். மாமனாரால் சிறு சிறு இன்னல்கள் தோன்றி மறையும். உத்தியோகம் அல்லது தொழில் மாற்றங்களை சந்திக்க நேரும்.

    வெளிநாட்டு, அரசு வேலை வாய்ப்பு முயற்சி வெற்றி தரும். பணியில் கவனத்துடன் செயல்பட வேண்டும். குடும்பத்தில் ஏதாவது செலவு இருந்து கொண்டே இருக்கும். வழங்குகளில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆயுள் பயம் அகலும். பண விசயத்தில் யாரையும் நம்பாமல் விழிப்புடன் செயல்பட வேண்டும். இது கிரகண மாதம் என்பதால் மாசி மாதம் முழுவதும் சனிக்கிழமை முன்னோர்களை வழிபட அனைத்தும் நற்பலன்களும் அதிகாரிக்கும்.

    பொருளாதாரம்

    ஒப்பந்தம் அடிப்படையான தொழில்,கமிஷன் அடிப்படையான தொழில்கள் இவர்களுக்கு சிறப்பான பலனைத் தரும். யூட்யூப், இன்ஸ்டாகிராம் போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள் இவர்களுக்கு பல மடங்கு வருமானத்தை கொடுக்கும்.கடன் வாங்கி, அட்வான்ஸ் வாங்கி போனஸில் கடனை கழித்து வாழ்க்கையை ஓட்டிய நடுத்தர வர்க்கத்தினரின் வருமானம் உயரும்.ஜாமீன் கடன் இ.எம்.ஐ சார்ந்த பிரச்சினைகள் ஜாதகரின் வாழ்வை கேள்விக்குறியாக்கும்.

    கடன் வாங்கி சுயதொழில் செய்வதை தவிர்ப்பது நல்லது.சீட்டுப் பணம், ரேஸ், பங்குச் சந்தை மூலம் வருமானம் பெருகும். ஒரு சிலர் பூர்வீகச் சொத்தை விற்று புதிய சொத்துகள் வாங்குவார்கள். பணக்கவலை குறையும் பாக்கிய பலத்தால் தாராளமான வரவு செலவு, பணப்புழக்கமும் உண்டாகும். கைநிறைய பணம் புரள்வதால் புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள்.

    முதலீட்டாளர்கள்

    அறிவு, திறமை இருந்தும் பயன்படுத்தவோ சாதிக்கவோ முடியவில்லையே என்ற மனக்குறை தீரும். உண்மையான உழைப்பிற்கான பலனை அறுவடை செய்யும் நேரம். திடமான நம்பிக்கையும், தெம்பும், உற்சாகமும் அதிகரிக்கும். புதிய முதலீடுகள் செய்து முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். தொழில் தொடர்பான அனைத்து முயற்சிகளுக்கும் வெற்றிமேல் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் நிலவி வந்த எதிர்ப்புகள் விலகும்.மனதில் நிறைவும் நெகிழ்ச்சியும் உண்டாகும். ஒரு சிலருக்கு தந்தையின் தொழிலை எடுத்து நடத்த வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.தொழிலில் உண்டான நெருக்கடிகள் நீங்கும். சிலர் வியாபாரத்தை விரிவு செய்வார்கள்.

    உத்தியோகஸ்தர்கள்

    திட்டமிட்டு வெற்றி பெறுவீர்கள். துன்பங்களும் துயரங்களும் முடிவுக்கு வரப்போகிறது. தன யோகம் சிறப்பாக அமையும். குடும்பத்தில் நிம்மதி கூடும். உத்தியோகத்தில் நிலவிய சங்கடங்கள் விலகும். வேலை இல்லாதவர்களுக்கு திறமைக்கேற்ற வேலை கிடைக்கும். மேல் அதிகாரிகளின் அன்பும், ஆதரவும், பாராட்டும் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படும். வேலைக்காக சிலர் குடும்பத்தை பிரிந்து வெளியூர், வெளிநாடு செல்ல நேரும். அரசு வேலை அரசாங்க பதவி போன்றவைகளும் கிடைக்கும். சுய ஜாதக பலனை சரி பார்க்காமல் தேவையில்லாமல் வேலை மாற்றம் செய்யகூடாது. அரசு அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் இடைக்கால பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் வேலையில் வந்து சேர உத்தரவு வரும்.

    பெண்கள்

    அரசு சார்ந்த துறைகளால் ஆதாயம் உண்டு. அயல்நாட்டு குடியுரிமைக்கு முயன்றவர்களின் விருப்பம் நிறைவேறும். பூர்வீகச் சொத்தை பிரிப்பதில் சர்ச்சைகள் விலகும். லாப ஸ்தான பலத்தால் தடைபட்ட வீடு கட்டும் பணி துரிதப்படுத்தப்படும். புதிய சொத்துக்களின் பத்திரப் பதிவு நடக்கும். வழக்குகளில் வெற்றி உறுதி. பயணங்கள் மிகுதியாகும். வாரிசு இல்லாதவர்களுக்கு புத்திரம் உருவாகும்.

    பிள்ளைகளின் படிப்பு, வேலை, சம்பாத்தியம், திருமணம், புத்திர பாக்கியம் போன்ற பலன்கள் சந்தோஷம் தரும்.கைவிட்டுப் போகும் நிலையில் இருந்த பூர்வீகச் சொத்தின் தீர்ப்பு சாதகமாகும்.கணவன், மனைவி ஒற்றுமையால் மகிழ்ச்சி கூடும்.ஆன்ம பலம் பெருகி ஆரோக்கியத் தொல்லை குறையும். தாய், தந்தையரின் விருப்பங்களையும், அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவீர்கள். காரியத்தடை, மன சஞ்சலம் குறையும். பிள்ளைகள் வழியில் நன்மைகள் பல நடக்கும். பணவரவு, வருமானம் கூடும்.

    சூரிய கிரகணம்

    மாசி 5 (17.2.2026)ல் நடக்கப் போகும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. தனுசு ராசிக்கு 3ம் இடமான வெற்றி ஸ்தானத்தில் சூரிய கிரகணம் ஏற்பட போகிறது.தகவல் தொடர்பு சாதனங்களான பேஸ்புக் யூ டியூப் இன்ஸ்டாகிராம்,பத்திரிக்கை துறை எழுத்துத் துறையினரின் வாழ்வாதாரம் உயரும். இந்த நாளில் ஜாமீன் போடுவது தேவையற்ற வெளியூர் பயணங்கள்,முக்கிய ஒப்பந்தங்கள், சிற்றின்பம் இவைகளை தவிர்த்தால் நன்மைகள் மிகுதியாகும்.

    பாகப்பிரிவினை சார்ந்த விஷயங்களில் உடன் பிறந்தவர்களால் மன உளைச்சல் ஏற்படும் முக்கிய ஆவணங்களை கவனமாக கையாள வேண்டும் யாருக்கும் ஜாமீன் போடக்கூடாது. காதல் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதத்தை பெற்றுத்தருவார். இளைய சகோதரன் சகோதரி போன்றவர்களின் வாழ்க்கை வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை செய்வதன் மூலம் உங்களுக்கு உயர்வு உண்டாகும்.

    சந்திர கிரகணம்

    மாசி 19ம் தேதி (3.3.2026) அன்று சந்திர கிரகணம் நடக்கப் போகிறது. இது பகுதி சந்திர கிரகணமாக இந்தியாவில் சில குறிப்பிட்ட பகுதிகளில் தெரியும். தனுசு ராசிக்கு 9-ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சந்திர கிரகணம் நடக்கப்போகிறது. செய்த தர்மம் தலை காக்கும். சாதிக்கும் தைரியமும் தன்னம்பிக்கையும் மேலோங்கும். முயற்சிகளில் முன்னேற்றத்தில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் விலகும். தடை பட்ட அனைத்து சுப பலன்களும் தேடி வரும். தொழிலில் வெற்றியும், மேன்மையும் லாபமும் உண்டாகும்.

    தேவைக்கு மீறிய கடனை தவிர்க்க வேண்டும். ஆன்மீக, வெளிநாட்டுச் சுற்றுப் பயணம் சென்று வரும் சந்தர்ப்பம் உருவாகும்.உடன் பிறந்த சகோதர, சகோதரிகளின் திருமணம், குழந்தை பேறு போன்ற கடமைகளை முன் நின்று நடத்துவீர்கள்.உடன் பிறந்தவர்களுடன் பாகப்பிரிவினை பேச்சுவார்த்தை, முயற்சி நடக்கும். ஞாபக சக்தி குறைவு சீராகும். காது, மூக்கு தொடர்பான அறுவை சிகிச்சை நடக்கும்.நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தந்தை மற்றும் தந்தை வழி உறவுகளை அனுசரித்து செல்ல வேண்டும். தந்தையின் ஆரோக்கியத்தில் விழிப்பு தேவை.

    பரிகாரம்

    மாசி மாதம் சிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவ வழிபாடு செய்வதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். தடைபட்ட சுப நிகழ்வுகள் இனிதே நடைபெறும்.

    உழைக்கும் ஆர்வம் மிகுந்த மகர ராசியினரே!

    பிறக்கும் மாசி மாதத்தில் சூரியன் தனம் வாக்கு குடும்ப ஸ்தானம் செல்கிறார். மாசி 11 (23.2.2026) முதல் செவ்வாயும் 2ம்மிடம் சென்று ராகுவுடன் இணைகிறார். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் வாக்கிற்கு மதிப்பு, மரியாதை உண்டாகும்.பிரிந்த உறவுகள் மீண்டும் இணைவார்கள். ஆடம்பர விழாக்களில் கலந்து கொள்வீர்கள்.மற்றவர்களால் மதிக்கக்கூடிய நிலையை அடைவீர்கள்.குடும்பத்தில் சுப காரியங்கள் துரிதமாகும்.

    உடல் ரீதியான மன ரீதியான சங்கடங்கள் மறைந்து பாக்கிய பலன்கள் சித்திக்கும். முன்னோர்களின் நல்லாசியும் குல தெய்வ அருளும் உண்டாகும். புனித ஸ்தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். புத்திர பிராப்தம் கிடைக்கும்.தொழில் கூட்டாளிகள் இடையே முறையான ஒப்பந்தம் போட்டு தொழில் நடத்த வேண்டும். பணம் கொடுக்கல், வாங்கலில் பெரிய தொகையை கையாள்வதைத் தவிர்க்கவும். பிள்ளைகளின் கல்வி, திருமணம் என சுப விரயமும் உண்டாகும். அலைச்சல் மிகுந்த பயணம் அதிகரிக்கும். புத்திர பாக்கியம் தடைபட்டவர்கள் செயற்கை கருத்தரிப்பு முறையை அணுக உகந்த காலம்.வயதானவர்கள் வெளிநாட்டில் உள்ள பிள்ளைகளிடம் சென்று செட்டிலாகலாம்.

    உங்களை புண்படுத்திய சகோதர சகோதரிகள் மனம் திருந்துவார்கள்.திருமண வாய்ப்பு தேடி வரும்.தம்பதிகள் ஏதேனும் காரணமாகவோ வெவ்வேறு ஊர்களில் பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்தால் இப்பொழுது ஒன்றாக இணைந்து மகிழ்ச்சிகரமாக இல்லறம் நடத்தலாம்.பிள்ளைகளுக்கு கல்வி ஆர்வம் கூடும். தங்கம், வெள்ளி, வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை அதிகமாகும். புது வீடு கட்டலாம். சுப விரய செலவுகள் ஏற்படும். நிலுவையில் உள்ள பாக்கிகள் வசூலாகும். பழைய கடன்களையும், சிக்கல்களையும் தீர்க்கும் நிலை உருவாகும்.பூர்வீகச் சொத்தில் பாகப் பிரிவினை நடக்கலாம். பேச்சில் நிதானமும் கவனமும் தேவை. காதலர்கள் விட்டுக் கொடுத்து செல்லவும்.

    நீண்ட காலமாக தொல்லை கொடுத்து வந்த குடும்ப பிரச்சனைகள் படிப்படியாக நல்ல முடிவுக்கு வரும்.அவ்வப்போது சிறு சோர்வு, அசதி அலுப்பு தோன்றி மறையும். அடிக்கடி கை கால்களில் உடம்புகளில் வலி இருந்து கொண்டே இருக்கும்.வைத்தியச் செலவு குறையும். கடன்கள் தீர்ந்து மன அழுத்தங்கள் குறையும்.

    பொருளாதாரம்

    பணம் என்பது மனிதனுக்கு வரப்பிரசாதம். போதிய வருமானத்தால் உங்களின் கெளரவம், அந்தஸ்து உயரும்.பணப் புழக்கம் சரளமாக இருக்கும். நேர்வழி, குறுக்குவழி என பணம் பல வழிகளில் பணம் பையை நிரப்பும். சேமிப்புகள் முதலீடுகள் அதிகரிக்கும். விண்ணப்பித்த வீடு, தொழில் முன்னேற்ற கடன் கிடைக்கும்.வீடு மாற்றம் அல்லது வேலை மாற்றம் ஏற்படும். அதிர்ஷ்டம், புதையலை நம்பி கால விரயம் செய்வீர்கள் .தவறான சொத்து அல்லது பயன்படாத சொத்தை கட்டிக்காத்து ஏமாறுவீர்கள். விவசாயிகள், கால்நடையாளர்கள் பண்ணையாளர்களின் தொழில் வளர்ச்சி பிரமாண்டமாகும்.

    உத்தியோகஸ்தர்கள்

    மனம் விரும்பும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கப் போகிறீர்கள்.உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிடைக்கும். புதிய தெம்பு மற்றும் தைரியத்துடன் வீர நடை போடுவீர்கள்.வேலை மாற்றம் நடக்கும்.இழந்த பதவிகள் மீண்டும் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வுடன் கூடிய பணியிட மாற்றம் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். சமூக நலச் சங்கங்களில் பதவி கிடைக்கும். உத்தியோகரீதியான பயணங்கள் அதிகரிக்கும். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பும் ஆதரவும் மகிழ்ச்சியைத் தரும்.பணியில் விரைந்து செயல்படுவதன் மூலம் உயர் அதிகாரிகளின் பாராட்டை பெற முடியும்.

    அரசியல்வாதிகள்

    மக்கள் மத்தியில் செல்வாக்கு பெருகும். லாபம் இல்லாத செயல்களில் ஈடுபட மாட்டீர்கள். அமைச்சர் பதவிக்கு நிகரான பதவி வகிப்பீர்கள். ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்குவீர்கள்.கவுரவப் பதவிகள் தேடி வரும். வேற்று மொழி பேசுபவர்களால் நன்மைகள் தேடி வரும். வேற்று மத நம்பிக்கை கூடும்.

    ராசிக்கு இரண்டில் ராகு எட்டில் கேது இருப்பதால் நடைமுறைக்கு சாத்தியமில்லாத வாக்குகளை கொடுக்கக் கூடாது. பொது இடங்களில் தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்க வேண்டும். சிறு சிறு பிரச்சனைகள் இருந்தாலும் அதை சமாளிக்கும் ஆற்றல் பிறக்கும். மேன்மையான எண்ணங்களும் சீரிய சிந்தனைகளும் பெருகும். முட்டுக்கட்டைகள் அகலும். வாழ்வின் திருப்புமுனையான சம்பவங்கள் நடக்கும். பெண்களுக்கு நிம்மதியான சூழல் நிலவும். குடும்பத்தில் நிலவிய குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும்.

    குடும்பத்தை விட்டுப் பிரிந்துசென்ற உறவுகள் உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்வார் கள். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் குறையும். சிக்னமாக இருக்க முயற்சி செய்வீர்கள். அடமானத்தில் உள்ள நகைகளை மீட்கக் கூடிய சந்தர்ப்பம் கூடி வரும். புதிய அணிகலன்கள் ,அழகு, ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். பெண்களுக்கு மண வாழ்க்கை மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.கணவன், மனைவி ஒற்றுமை மேம்படும் அற்புதமான நல்ல நேரம்.மூத்த சகோதர, சகோதரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு மறைந்து தடைபட்ட பாகப்பிரிவினை சொத்து, பணம் வரும்.

    சூரிய கிரகணம்

    மாசி 5 (17.2.2026)ல் நடக்கப் போகும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. ராசிக்கு 2ம்மிடமான தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரிய கிரகணம் நடக்க உள்ளது. திடீர் அதிர்ஷ்டம் உங்களை வழிநடத்தப் போகிறது. பங்குச் சந்தை மற்றும் யூக வணிகம் உங்களுக்கு அதிர்ஷ்ட லட்சுமியை கண்ணில் காட்டும். ஒரு சிலர் தங்கம் மற்றும் வெள்ளியில் அதிக முதலீடு செய்து சம்பாதிப்பார்கள். விவசாயிகளுக்கும், கால்நடை வளர்பவர்களுக்கு ஏற்ற காலம். தேவையற்ற அலைச்சல், ஆரோக்கிய குறைபாடுகள் உண்டாகலாம்.

    திறமைக்கும், தகுதிக்கு ஏற்ப வேலையில் முன்னேற்றமும், சம்பள உயர்வும் கிடைக்கும். விரும்பிய இடமாற்றம் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. எல்லாம் சரியாக நடந்தால் கூட சிலருக்கு நேரத்திற்கு உண்ண, உறங்க முடியாமல் வெறுமை உணர்வு இருக்கும்.மன நிறைவு இருக்காது. தனியாக அமைதியாக இருப்பதை மனம் விரும்பும். முன் கோபத்தில் பகைமை உருவாகும்.

    சந்திர கிரகணம்

    மாசி 19ம் தேதி (3.3.2026) அன்று சந்திர கிரகணம் நடக்கப் போகிறது. இது பகுதி சந்திர கிரகணமாக இந்தியாவில் சில குறிப்பிட்ட பகுதிகளில் தெரியும். ராசிக்கு எட்டாமிடமான அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் கேது சேர்க்கையுடன் கிரகணம் சம்பவிக்கிறது. வழக்குகள் , அறுவை சிகிச்சை,வெளியூர் வெளி நாட்டுப் பயணம் கொடுக்கல் வாங்கல், வீண் வாக்குவாதங்கள் சண்டை சச்சரவு, தற்பெருமை சுய கௌரவம் எதிர்பார்ப்பது, ஆகியவற்றை தவிர்ப்பதால் இன்னல்கள் குறையும். பெரிய அளவில் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்த்து விடவும்.

    பரிகாரம்


    மாசி மாதம் சிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவ வழிபாடு செய்து வழிப்பட்டால் மன நிம்மதி கூடும்.கடன்கள் தீர்ந்து மன அழுத்தங்கள் குறையும். சிவனுக்கு பச்சை கற்பூரம் அபிசேகம் செய்து வழிபடவும்.

    அன்பிற்கு அடிபணியும் கும்ப ராசியினரே!

    தன் நம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். ஜென்ம ராகுவின் தாக்கத்தால் தொழிலில் சிறு சுணக்கம் ஏற்பட்டாலும் பெரும் பாதிப்பு ஏற்படாது. விரும்பிய பதவி உயர்வு தேடி வரும். பணிச் சுமை கூடும்.புதிய வேலையாட்கள் அமைவார்கள். நிரந்தர வேலை கிடைக்கும். காணாமல் போன கை மறதியாக வைத்த ஆவணங்கள் கிடைக்கும். உங்களின் வெற்றிக்கு வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும். உறவினர்கள், நண்பர்களுக்கு பண உதவி செய்தால் திரும்ப வராது. அதுவே கணவன் மனைவி கருத்து வேறுபாடுக்கு காரணமாக அமையும் என்பதால் கொடுக்கல், வாங்கலில் நிதானம் தேவை.சிலருக்கு அரசின் தொகுப்பு வீடு கிடைக்கும். ஏழரைச் சனி யாருக்கும் திருமணத் தடையை தராது. அதனால் பெரும்பான்மையாக திருமணம் நடந்து இருக்கும்.

    தற்போது ராசியில் ராகுவும் சம சப்தம ஸ்தானத்திற்கு கேதுவும் நிற்பது கோட்சார ரீதியான சர்ப்ப தோஷத்தை ஏற்படுத்துகிறது. சுய ஜாதக .ரீதியாக ராகு/கேது தசை நடப்பவர்கள் உரிய சாந்தி பரிகாரம் செய்த பிறகு திருமணம் நடத்த வேண்டும். ஆனாலும் ராகுவை குரு பார்ப்பதால் விருப்ப விவாகங்கள் அதிகம் நடக்கும்.சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பூர்வீக சொத்துக்களினால் வருமானம் கிடைக்கும். செய்யும் முயற்சிகள் வெற்றியாக அமையும். வாழ்வின் முன்னேற்றப் பாதையை நோக்கி பயணிப்பீர்கள்.

    பொருளாதார பற்றாகுறை அகலும். தவிர்க்க முடியாத சுப விரயங்கள் அதிகரிக்கும். தடை, தாமதம், இன்னல்களை நீக்கி அற்புதமான பலன்களை அள்ளித்தரும்.விற்காமல் கிடந்த முன்னோர்கள் சொத்து விற்கும்.புதிய சொத்து வாங்கும் முயற்சி கைகூடும்.உங்களின் முயற்சிக்கு மனைவியும், பிள்ளைகளும் ஆதரவாக இருப்பார்கள். சுப நிகழ்விற்கான அறிகுறி தென்படும்.புகழ், அந்தஸ்து கவுரவம் நம்பிக்கை,நாணயம் உயரும். பூர்வீகச் சொத்தை பிரிப்பதில் நிலவிய சர்ச்சைகள் விலகும்.பிள்ளைகளின் எதிர்கால நலனுக்கு ஒரு தொகையை முதலீடு செய்வீர்கள். குல தெய்வத்தின் பரிபூரண அருள் கிடைக்கும்.கடன் சுமை குறையும்.

    பொருளாதாரம்

    அனுபவ ஆற்றல் அதிகமாகும். பேச்சை மூல தடமாக கொண்டவர்கள், பேங்கிங் ஆடிட்டிங் டீச்சிங் புரோகிதம்,ஜோதிடம் மந்திர உபதேசம் ஆகியவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். செலவு குறையும். சேமிப்பு கூடும்.வருமானம் பலவித வழிகளில் வந்து கொண்டே இருக்கும்.வெளிநாட்டு பணம் தாராளமாக புழங்கும். சேமிப்பு அதிகரிக்கும். பங்குச் சந்தை ஆதாயம் மற்றும் அதிர்ஷ்ட பணம், பூர்வீகச் சொத்து கிடைக்க வாய்ப்புள்ளது. பங்குச் சந்தை லாபம் சொத்துச் சேர்க்கை,பொன் பொருள் சேர்க்கை மகிழ்ச்சியை அதிகரிக்கும். தவிர்க்க முடியாத சுப விரயங்கள் அதிகரிக்கும். புதிய நிலம் வாங்குவது, வீடு கட்டுவது போன்ற சுப பலன்கள் நடக்கும்.வாகன வசதியை மேம்படுத்துவீர்கள். மறுமணம் நடைபெறும்.

    முதலீட்டாளர்கள்

    இந்த மாசி மாதம் மங்கலத்தையும் புது மாற்றத்தை யும் வழங்கவுள்ளது. வாழ்க்கையே போராட்டமாக இருந்தவர்களுக்கு சீரான தொழில் வளர்ச்சியால் மன நிம்மதியான வாழ்க்கை அமையும். முடங்கி கிடந்த, தடைபட்ட அனைத்து முயற்சிகளும் சிறு முயற்சியில் வெற்றி வாய்ப்பை தேடித்தரும்.மந்தமான தொழில் சூடு பிடிக்கும். இரவு பகல் பார்க்காமல் கடுமையாக உழைப்பீர்கள்.

    ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு பங்குதாரர்களால் வருமானம் உயரும். தொழில் கடனை குறைக்க புதிய வழிபிறக்கும். தேவைக்கு பணவசதி கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். தொழில் லாபங்கள் மறு முதலீடாக மாறும். புதிய தொழில் ஒப்பந்தம், பங்குச் சந்தை முதலீடுகளால் சுப பலன் ஏற்படும்.

    உத்தியோகஸ்தர்கள்

    உங்களின் முயற்சிகள் உடனே பலிதமாகும்.மனதில் தைரியம் குடிபுகும்.இடமாற்றம் ,தொழில் மாற்றம், வேலை மாற்றம், வெளிநாடு வாய்ப்பு என்று நீங்கள் எதிர்பார்த்து காத்து இருந்த மாற்றம் உங்களை தேடி வரும். அரசு உத்தியோகத்திற்கு பணி நியமன ஆணை கிடைக்கும்.

    சக ஊழியர்களால் அதிக நன்மை கிடைக்கும்.வேலை பார்த்த இடத்தில் இருந்து வந்த பிணக்குகள் சீராகும். சிலர் தொழில் மற்றும் உத்தியோக நிமித்தமாக குடும்பத்தை பிரிந்து செல்ல நேரும். இதுவரை அரசுவழி ஆதாயம், உத்தியோகத்தில் இருந்து வந்த தடை தாமதங்கள் சரியாகி விடும். ஏதேனும் காரணத்தால் இதுவரை ஊதியம் வராமல் தடைபட்டு இருந்தால் மொத்தமாக வந்து விடும். மெமோ வாங்கி வேலைக்கு செல்லாமல் இருந்தவர்களுக்கு வேலையில் சேர உத்தரவு வந்து விடும்.

    அரசியல்வாதிகள்

    அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கும், சொல்வாக்கும் உயரும். அரசின் ஒப்பந்தம் கிடைக்கும். கட்சி மேலிடத்தின் ஆதரவு அதிகமாகும். தொகுதி மக்களின் தேவையை நிறைவேற்றுவதை லட்சியமாக கொண்டு செயல்பட வேண்டும். செல்வாக்கை பயன்படுத்தி குறுக்கு வழியில் உங்களை எண்ணங்களை, லட்சியங்களை அடையக்கூடாது.பொதுக் கூட்டத்தில் நிறைவேற்ற முடியாத வாக்குகளை கொடுக்கக் கூடாது. உங்கள் மேல் தொடரப்பட்ட வழக்குகளுக்காக அபராதம் கட்ட நேரும்.பினாமி பெயரில் வாங்கக் கூடிய சொத்துக்கள் பிற்காலத்தில் பயன்படாது என்பதால் சிந்தித்து செயல்பட வேண்டும். சிலருக்கு புதிய நகைகள், ஆபரணங்கள் வாங்கும் யோகம் ஏற்படும்.பெற்றோர்கள் பெரியோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் தெளிவு ஏற்படும்.குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.தம்பதிகளிடம் சுமூக உறவு நிலவும்.

    சூரிய கிரகணம்

    மாசி 5 (17.2.2026)ல் நடக்கப் போகும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. கும்ப ராசியினருக்கு ராசியில் சூரியகிரகணம் நடக்கிறது. இன்றைய நாளில் செயற்கை முறை கருத்தரிப்பு, தூர தேசப் பிரயாணங்களை ஒத்தி வைக்க வேண்டும். கடுமையான பித்ரு தோஷம் உள்ளவர்கள் பித்ரு தர்ப்பணங்கள் செய்யலாம்.தந்தை, தந்தை வழி முன்னோர்களை வழிபடுவதால் வாழ்க்கை ஒளிமயமாகும்.

    சிலர் மன வெறுப்பில் பூர்வீகத்தை விட்டு வெகு தொலைவில் சென்று குடியேற திட்டமிடுவார்கள்.பூர்வீகச் சொத்தை அடைவதில் தடை தாமதம் ஏற்படும். ஆவணங்கள் தொடர்பான பிரச்சனைகள் எழும்.வேலை பார்க்கும் இடத்தில் சக ஊழியர்களுடன் ஏற்பட்ட மனக் கசப்பு மாறும். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் பஞ்சாயத்துக்கள் வரலாம். ஆன்லைனில் பொருள் வாங்கும் மோகம் வங்கி சேமிப்பை கரைத்து விடும்.

    சந்திர கிரகணம்

    மாசி 19ம் தேதி (3.3.2026) அன்று சந்திர கிரகணம் நடக்கப் போகிறது. இது பகுதி சந்திர கிரகணமாக இந்தியாவில் சில குறிப்பிட்ட பகுதிகளில் தெரியும். ராசிக்கு ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தில் சந்திர கிரகணம் நடக்க உள்ளது. தொழில் தொடர்பான புதிய முயற்சிகள், திருமணம், திருமண ஒப்பந்தம், விவாகரத்து வழக்குகளை விசாரித்தல், வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய முடிவுகள்.

    இவைகளை சில நாட்களுக்கு தவிர்க்கவும்.மறைமுக எதிரிகளால் தொல்லைகள் வரலாம்.வாழ்க்கை துணை, நண்பர்கள் தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்களை பகைக்க கூடாது.சிற்றின்பம், நண்பர்கள் சுற்றம் சூலத்துடன் விருந்து உபசாரங்களில் கலந்து கொள்வது அன்றைய நாட்களுக்கு தகாத செயலாகும். சிலருக்கு தொழிலில் சகோதரருடன் பிரிவினை ஏற்படும். சிலருக்கு இளைய சகோதரரின் குடும்பத்தை பராமரிக்கும் நிலை ஏற்படும். பாகப்பிரிவினை நடக்கலாம். நலிந்தவர்களின் வாழ்வாதாரம் உயரத் தேவையான உதவிகளை செய்வது நல்லது.

    பரிகாரம்

    மாசி மாதம் சிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவ வழிபாடு செய்வதால் பாக்கிய பலன்கள் அதிகரிக்கும். தடைகள் விலகி காரியசித்தி உண்டாகும்.

    ஞானத்தில் சிறந்த மீன ராசியினரே!

    புத்திக் கூர்மையுடன் புதிய திட்டம் தீட்டி வெற்றி பெறுவீர்கள். மீன ராசிக்கு 6ம் அதிபதியான சூரியன் 12-ம் மிடமான அயன சயன விரய ஸ்தானத்தில் மறைகிறார்.கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் மகிழ்ச்சியும், சந்தோஷமும் தொடரும். அனுபவப் பூர்வமாக பேசுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. எத்தனை இடர் வந்தாலும் சமாளிக்க முடியும்.தொட்டது துலங்கும். பட்டது பூக்கும்.அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள்.புத்திர பிராப்தம் குல விருத்தி, உயர் கல்வி யோகம், வெளிநாட்டு உத்தியோகம், அரசு உத்தியோகம்,புண்ணிய காரியம் செய்யும் வாய்ப்பு என சுப பலன்கள் நடக்கும்.பேச்சுத் திறமை கூடும். அரிவாற்றலால் சாதுர்யமாக செயல்படுவீர்கள். குழந்தை பாக்கியத்திற்கு ஏங்கியவர்களுக்கு கரு உருவாகும்.பிள்ளைகளால் பெருமையும் நன்மையும் உண்டாகும்.எதிர்காலம் பற்றிய பயம் விலகும்.பிள்ளைகளுக்கு நடைபெற வேண்டிய சுப காரியம் நடக்கும்.

    குடும்பத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கலாம்.குடும்பம் குதூகலமாக இருக்கும். உற்சாகமாக குடும்பத்தினருடன் நேரத்தை செலவு செய்வீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவிகரமாக இருப்பார்கள். ஒரு சிலருக்கு அவர்கள் விரும்பியபடி இட மாறுதல் கிடைக்கும்.வீடு வாகன செலவுகள் அதிகரிக்கும். வழக்குகள் சாதகமாகும்.பூர்வீகச் சொத்தில் நிலவிய இழுபறி நிலை மாறும். பெற்றோர்களின் ஆதரவு மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கைபராமரிப்புச் செலவு அதிகமாகும்.

    வீடு, இடம், வாகனம் வாங்குவீர்கள். நோய்கள், கடன்கள் தீரும் காலமாகும். எதிரிகள் தொல்லை நீங்கும். எண்ணங்கள் நிறைவேறும் காலம்.ராசியை சனி பகவான் கடப்பதால் ஜென்ம சனியின் பாதிப்பால் சிறு சோர்வு, அசதி அலுப்பு அவ்வப்போது தோன்றி மறையும்.விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பூர்வீகச் சொத்தை அதிக செலவு செய்து சீரமைப்பீர்கள். நோய் நொடி சீராகும். ஜென்மச் சனி யாருக்கும் திருமணத் தடையை தராது. அதனால் பெரும்பான்மையாக திருமணம் நடந்து இருக்கும். குடும்பத்துடன் குல தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

    பொருளாதாரம்

    குடும்பத்தில் நிலவிய சலசலப்பு குறைந்து கலகலப்பு மிகுதியாகும். குடும்பத்தில் விருந்துகள், விழாக்கள், விசேஷங்கள் என மனமகிழும் சம்பவங்கள் நடக்கும். பொருளாதாரத்தில் நிலவிய மந்த நிலை மாறும். வீடு, வாகன யோகம் உண்டாகும். வாடகை வீட்டில் வசதித்தவர்கள் புதிய வீடு வாங்குதல், கட்டுதல், பராமரித்தல் என சுப பலன்கள் கூடும். தேக சுகம் கூடும். பழைய கடன்களை அடைக்கலாம். புதிய கடன் பெற்று தொழிலை விரிவுபடுத்தலாம். விவசாயிகள் வாழ்வில் திருப்புமுனையான சம்பவங்கள் நடைபெறும்.பழைய கடனை பைசல் செய்ய புது வழி பிறக்கும். சிலருக்கு விபரீத அதிர்ஷ்ட யோகமான உயில் சொத்து அதிர்ஷ்ட பணம் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது.

    முதலீட்டாளர்கள்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள்.உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும். அரசு வகையில் எதிர்பார்த்த ஆதாயம் மற்றும் உதவிகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். இழுபறியாக இருந்த பணிகள் முடியும்.கடந்த கால சுகமான அனுபவங்களை, சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். தொழில் சீரான சிறப்பான முன்னேற்றம் உண்டு.பேச்சை மூலதனமாக கொண்ட தொழில், கமிஷன் அடிப்படையான தொழில் புரிபவர்களுக்கும் மிக மிக சாதகமான காலம்.

    உத்தியோகஸ்தர்கள்

    புதிய அனுபவம் உண்டாகும். உங்களை தவறாகப் புரிந்து கொண்ட உறவினர்கள், தவறை உணர்ந்து உறவு பாராட்டுவார்கள். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.ஊழியர்களின் சம்பள உயர்வு பிரச்சனை முடிவுக்கு வரும். படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு , ஊதிய உயர்வு கிடைக்கும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிட்டும். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும். எதிரிகளிடம் இருந்து வந்த போட்டி பொறாமைகள் மறையும்.வீடு மாற்றம், வேலை மாற்றம் போன்ற இடப்பெயர்ச்சிகள் நடைபெறும்.

    அரசியல்வாதிகள்

    எதிலும் உங்கள் கை ஓங்கும். எல்லாவிதமான நன்மைகளையும் இக்காலத்தில் அடைய முடியும்.சுப நிகழச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். மருத்துவ உதவியால் உடல் நிலை தேறும்.செல்வாக்கு அந்தஸ்து யாவும் உயரும். நினைத்ததை அடைய முடியும். உங்களுக்குள் வேகமும் தைரியமும் கூடும். சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த பதவியை அடைய முடியும். சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உண்டாகும். சிலர் ஆயுள் காப்பீடு, ஹெல்த் இன்சூரன்ஸ், போன்ற பாலிசி எடுப்பார்கள்.

    பெண்கள்

    பெண்கள் மகிழ்சியாக இல்லறம் நடத்துவார்கள்.பெண்கள் நகைச் சீட்டு, ஏலச்சீட்டு என பணத்தை பெருக்குவார்கள்.திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகன யோகம், தொழில் முன்னேற்றம் போன்ற பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். அடிப்படை வசதிகள் பெருகும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது.சுப செலவுகளுக்கு சகோதர சகோதரிகளின் உதவிகள் கிடைக்கும்.செலவுகளால் நெருக்கடியான சூழல் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். ஆரோக்கிய குறைபாட்டை முறையான வைத்தியத்தில் சரி செய்ய முடியும். கடன் தொல்லை, வாழ்க்கைத் துணையின் பிரச்சினைகள் குறையும். ஆடம்பர செலவுகளை குறைத்து வருங்காலத்துக்காக சேமிப்பீர்கள்.ஜாமீன் கையெழுத்திடுவதைத் தவிர்க்க வேண்டும். தேவையற்ற அலைச்சல் மிகுந்த பிரயாணத்தால் ஆரோக்கிய பாதிப்பு ஏற்படும். குடும்ப பிரச்சனையில் மற்றவர்களின் ஆலோசனையை கேட்டு ஏமாறாதீர்கள்.

    சூரிய கிரகணம்

    மாசி 5 ( 17.2.2026)ல் நடக்கப் போகும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. மீன ராசிக்கு 12ம்மிடமான அயன சயன ஸ்தானத்தில் சூரிய கிரகணம் நடக்கப்போகிறது. கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம்.கெட்டவன் ராகு மறைவு ஸ்தானத்தில் நிற்பதால் சிலருக்கு விபரீத ராஜ யோகம் உண்டாகும். எனினும் முக்கியமான பணிகளை பொறுப்புகளை பிறரை நம்பி ஒப்படைக்க கூடாது.ராகு கேதுக்களின் பாதையில் பூமி, சூரியன், சந்திரன் நேர்கோட்டில் வரும் அந்த நொடிகள் அமானுஷ்யமான விசயங்களை உண்டாக்கும்.

    அந்த நேரத்தில் நாம் இறைவனை சரணடைந்து வழிபட்டால் பல நன்மைகள் உண்டாகும்.கிரகண காலகங்களில் செய்யப்படும் வழிபாடுகள் பல மடங்கு புண்ணியங்களையும் மனோபலத்தையும் தரும். சுய ஜாதகத்தில் உள்ள கிரகண தோஷ வீரிய குறையும்.கிரகணத்தின் போது, ஜபம், தியானம் செய்யலாம் தெரிந்த ஸ்லோகங்களைச் சொல்லிக் கொண்டிருக்கலாம். விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம், சிவ புராணம் சொல்வது, கேட்பது நன்மை தரும்.

    சந்திர கிரகணம்

    மாசி 19ம் தேதி (3.3.2026) அன்று சந்திர கிரகணம் நடக்கப் போகிறது. இது பகுதி சந்திர கிரகணமாக இந்தியாவில் சில குறிப்பிட்ட பகுதிகளில் தெரியும். மீன ராசிக்கு 6ம் இடமான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சந்திர கிரகணம் நடக்கப் போகிறது. இன்றைய நாளில் கடன் தீர்ப்பதால் நிரந்தரமாக கடன் தொல்லை குறையும். அஜீரண சக்தி குறைந்த உணவுகளை சாப்பிடக்கூடாது.கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் நோயாளிகள் கிரகண நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.விலை உயர்ந்த பொருட்கள்,ஆபரணங்கள் நகைகளை கவனமாக கையால வேண்டும். கிரகண கதிர்கள் தாக்காமல் இருக்க உணவுப் பொருட்களில் தர்ப்பையை போட்டு வைக்க வேண்டும்.

    பிறகுக்கும் கடன் கொடுப்பது கடன் பெறுதல் நல்லதல்ல.பல வருடங்களாக தீராத தீர்க்க முடியாத நோய்யுள்ளவர்கள் மிருத்யுஞ்ஜெய மந்திரம், ஸ்ரீ ருத்ரம் படிப்பது கேட்பதால் ஆயுள் ஆரோக்கியம் சார்ந்த பய உணர்வு அகலும்.தாய் மாமா ஸ்தானத்தில் இருப்பவர்களுக்கு ஆடைதானம் வழங்கி ஆசீர்வாதம் பெறுவது நல்லது.

    பரிகாரம்

    மாசி மாதம் சிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவ வழிபாடு செய்வதால் கஷ்டங்கள் விலகும். பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    Next Story
    ×