என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • தஞ்சையில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
    • நேற்று காலை 2-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

    தஞ்சையில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில்.

    1950-ம் ஆண்டு...இத்தலத்தில் கண்கொடுக்கும் காரிகையாய், கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாய், அம்மை நோயை போக்கி அருளும் அம்பாளாய், புண் போக்கும் பொற்புடை தெய்வமாய், தன்னை வணங்கும் அடியார்க்கு இணங்கி அருள்செய்யும் பேரன்னையாய் அருள்பாலிக்கிறாள் அம்பிகை மாரியம்மன்.


    தஞ்சை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் இக்கோவிலில் சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    முன்னதாக இக்கோவிலுக்கு பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் ஆசியோடு, ராஜாராம் ராஜா சஹேப் கடந்த 1950-ம் ஆண்டு, தன் முன்னோர்களுக்கு குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடத்தினார்.

    அதனைத் தொடர்ந்து, 1987-ம் ஆண்டு சுப்பிரமணியன் செட்டியார் உறுதுணையோடு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது. பின்னர், கடந்த 27.6.2004-ம் ஆண்டில் தற்போதைய பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே பெருமுயற்சியால், கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேக விழா விமரிசையாக நடத்தப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து, தற்போது சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு நாளை 10-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மகா கும்பாபிஷேக பெருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது.


    அதன்படி, கடந்த 3-ந்தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜைகளும், 4-ந்தேதி நவக்கிரக ஹோமம், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதியும், தொடர்ந்து, 5-ந்தேதி மகாலட்சுமி ஹோமம், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதியும், முறையே 6-ந்தேதி சாந்தி ஹோமம், மூர்த்தி ஹோமம், பூர்ணாஹூதியும் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பின்னர், 7-ந்தேதி காலை விக்னேஸ்வர பூஜை, கஜ பூஜை நடத்தப்பட்டு, மாலை திருக்குடங்கள் யாகசாலை எழுந்தருளுதல் செய்யப்பட்டு, முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

    தொடர்ந்து சனிக்கிழமை காலை 2-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர், மாலை 3-ம் கால யாகசாலை பூஜைகள், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி நடைபெற உள்ளது.

    முறையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 4-ம் கால யாகசாலை பூஜையும், மாலை 5-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்று, திரவ்யா ஹூதி, பூர்ணாஹூதி முடிவடைந்து, தீபாராதனை நடைபெறும்.

    • அரிட்டாய நாயனார் குருபூஜை.
    • ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் உற்சவம் ஆரம்பம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு தை-27 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: துவாதசி இரவு 8.47 மணி வரை பிறகு திரயோதசி

    நட்சத்திரம்: திருவாதிரை இரவு 7.17 மணி வரை பிறகு புனர்பூசம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் காலை தங்கப் பல்லக்கு சுவாமி அம்பாள் விருஷப சேவை. கோவை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி மயில் வாகனத்தில் பவனி. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் உற்சவம் ஆரம்பம். காஞ்சி ஸ்ரீஉலகளந்தப் பெருமாள் பவனி வரும் காட்சி. அரிட்டாய நாயனார் குருபூஜை, சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. சாத்தூர் ஸ்ரீ வேங்டேசப் பெருமாள் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாதர், பழனி ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோவிகளில் பவனி.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நற்செயல்

    ரிஷபம்-ஆதாயம்

    மிதுனம்-சுகம்

    கடகம்-சுபம்

    சிம்மம்-செலவு

    கன்னி-தாமதம்

    துலாம்- உண்மை

    விருச்சிகம்-களிப்பு

    தனுசு- உழைப்பு

    மகரம்-சுகவீனம்

    கும்பம்-பொறுமை

    மீனம்-பயணம்

    • தை மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.
    • பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது.

    மலையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

    இதில் கார்த்திகை தீப விழாவின்போது மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பவுர்ணமி அன்றும் சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்

    இந்த நிலையில் தை மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

    அதன்படி வருகிற 11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 7.59 மணிக்கு பவுர்ணமி தொடங்கி மறுநாள் 12-ந்தேதி (புதன்கிழமை) இரவு 8.16 மணிக்கு நிறைவடைகிறது. 11-ந்தேதி இரவு பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரமாக கோவில் நிர்வாகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் வருகிற 11-ந்தேதி தைப்பூசம் வருவதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும், பவுர்ணமி கிரிவலம் செல்லவும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் திருக்கல்யாணம்.
    • காஞ்சி உலகளந்தப் பெருமாள் ரதோற்சவம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு தை-26 (சனிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: ஏகாதசி இரவு 9.55 மணி வரை பிறகு துவாசசி

    நட்சத்திரம்: மிருகசீர்ஷம் இரவு 7.47 மணி வரை பிறகு திருவாதிரை

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று சர்வ ஏகாதசி. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் திருக்கல்யாணம். இரவு யானை வாகனத்தில் ராஜாங்க அலங்காரம். கண்ணப்ப நாயனார் குரு பூஜை. காஞ்சி உலகளந்தப் பெருமாள் ரதோற்சவம். பழனி ஸ்ரீ ஆண்டவர் வெள்ளி கேடயத்தில் பவனி. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் பவனி. திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவர், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் திருமஞ்சன அலங்கார சேவை. திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள், திரு இந்தளூர் ஸ்ரீ பரிமள ரெங்கராஜ பெருமாள் புறப்பாடு. மதுரை ஸ்ரீ கூடலழகர், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராக வப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நலம்

    ரிஷபம்-மகிழ்ச்சி

    மிதுனம்-வரவு

    கடகம்-வெற்றி

    சிம்மம்-குழப்பம்

    கன்னி-இன்பம்

    துலாம்- ஆதரவு

    விருச்சிகம்-உண்மை

    தனுசு- உவகை

    மகரம்-லாபம்

    கும்பம்-புகழ்

    மீனம்-கவனம்

    • மூன்று முறை தெப்பத்தை சுற்றி வந்து சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
    • சூரசம்கார லீலை நடைபெற்று வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள்.

    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தெப்ப திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில் வாகனம், பச்சைக்குதிரை வாகனம், வெள்ளி பூத வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.

    விழாவின் ஒன்பதாம் நாளான நேற்று தெப்பம் முட்டுத்தள்ளுதல் மற்றும் தெப்பத் திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது.


    முன்னதாக உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட அபிஷே கங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள தெப்பத்தில் எழுந்தருளினார்.

    அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தெப்ப மிதவையில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருள பக்தர்கள் வடம் பிடித்து தெப்ப மிதவையை இழுத்தனர். மூன்று முறை தெப்பத்தை சுற்றி வந்து சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    இதே போல இன்று இரவில் மின்னொளியிலும் சுவாமிகள் தெப்பத்தில் எழுந்தருளி மூன்று முறை சுற்றி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தொடர்ந்து தங்க குதிரை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி சன்னதி தெருவில் சூரசம்கார லீலை நடைபெற்று வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள். விழா விற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா பாலாஜி, அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், மணிச் செல்வன், பொம்மதேவன் ராமையா மற்றும் கோவில் துணை ஆணையர் சூரிய நாராயணன் மற்றும் பணி யாளர்கள் செய்துள்ளனர். 

    • சுமார் 1 மணி நேரம் அதே இடத்தில் நின்றது.
    • புகைப்படம் எடுத்த போதும் சேவல் அதே இடத்தில் ஒற்றைக்காலில் நின்றது.

    போடி:

    தேனி மாவட்டம் போடியில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இங்கு சஷ்டி, கிருத்திகை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

    மேலும் பங்குனி உத்திரம், தைப்பூசம் போன்ற நாட்களில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம்.

    இக்கோவிலில் தை மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பழம், மஞ்சள் உள்ளிட்ட 16 வகை பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. அப்போது திடீரென கோவிலுக்குள் சேவல் ஒன்று பறந்து வந்தது.

    அந்த சேவல் யாரும் எதிர்பாராத வகையில் கொடிமரம் அருகே சென்றது. பின்னர் கொடிமரத்துக்கும், பலி பீடத்துக்கும் இடையே ஒற்றைக்காலில் ஏறி நின்றது. பக்தர்கள் அனைவரும் முருகப்பெருமானை கைகூப்பி வணங்குவது போல சேவல் ஒற்றைக்காலை தூக்கியபடி சுமார் 1 மணி நேரம் அதே இடத்தில் நின்றது.

    இதைப் பார்த்த பக்தர்கள் பரவசமடைந்ததுடன் முருகனுக்கு அரோகரா என்று கோஷங்கள் எழுப்பினர். ஆனால் பக்தர்கள் கோஷம் எழுப்பியபோதும் தன்னை புகைப்படம் எடுத்த போதும் அதனை பொருட்படுத்தாமல் சேவல் அதே இடத்தில் ஒற்றைக்காலில் முருகப்பெருமானை வழிபடுவது போல நின்றது.

    தமிழ் கடவுளான முருகனுக்கு சேவற்கொடியோன் என்ற பெயர் உண்டு. அவருடைய கொடியில் சேவல் சின்னம் இடம் பெற்றிருக்கும். இதன் காரணமாகவே தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற முருகப்பெருமானுக்கு சேவலை காணிக்கையாக செலுத்துவது வழக்கம்.

    அதன்படி பக்தர் காணிக்கையாக செலுத்திய சேவல் ஒற்றைக்காலில் நின்று கிருத்திகை நாளில் முருகப்பெருமானை மனமுருக வழிபட்ட சம்பவம் பக்தர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    • திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் கூட்டமாக காணப்படுகிறது.
    • வருடம் தோறும் காவடிகள் எடுத்து வருவது வழக்கம்.

    நத்தம்:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி கோவிலில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியதை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். இதனால் பழனி அடிவாரம், கிரிவீதி, சன்னதிவீதி உள்ளிட்ட பகுதிகளில் திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் கூட்டமாக காணப்படுகிறது.

    தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் செட்டிநாடு பகுதிகளான காரைக்குடி, தேவகோட்டை, கானாடுகாத்தான், கண்டனூர் பகுதிகளை சேர்ந்த நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் குழு வருடம் தோறும் காவடிகள் எடுத்து வருவது வழக்கம்.

    10 நாட்கள் இவர்கள் பாதயாத்திரையாக தங்கள் பயணத்தை தொடங்கி வைர வேலை காணிக்கையாக முருகனுக்கு செலுத்துவதுடன் தங்கள் நேர்த்திக்கடன் முடிந்ததும் நடந்தே தங்கள் ஊருக்கு திரும்புவது வழக்கம்.

    அதன்படி இந்த வருடம் கடந்த 2-ந்-தேதியன்று தேவக்கோட்டை நகரப் பள்ளியில் இருந்து காவடிகளுக்கு பூஜை செய்து இக்குழுவினர் புறப்பட்டனர். தொடர்ந்து பல்வேறு ஊர்களை கடந்து இவர்கள் இன்று காலை திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வந்தடைந்தனர்.

    நத்தம் மாரியம்மன் கோவில் அருகிலுள்ள வாணியர் பஜனை மடத்தை அடைந்ததும் அங்கு பூஜைகள் செய்து அம்மனை வழிபட்டனர். பின்னர் பெரியகடை வீதி, மூன்றுலாந்தர், பஸ் நிலையம் வழியாக ஏராளமான மயில்காவடியினர் பழனியை நோக்கி புறப்பட்டு சென்றனர்.

    அப்போது முருகனுக்கு செலுத்தி பூஜை செய்யும் வைர வேல் முன்னே கொண்டு செல்லப்பட்டது. இதை பக்தர்கள் வணங்கி அதற்கு பன்னீர், எலுமிச்சம் பழம், மலர்கள் போன்றவைகளை செலுத்தி வழிபட்டனர்.

    அதைதொடர்ந்து முருகன் புகழ்போற்றும் பாடல்களை பாடி பக்தர்கள் காவடியை சுமந்து சென்றனர். வழிநெடுகிலும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் அவர்களை வரவேற்று வணங்கி வழியனுப்பினர். 

    • பக்தர்கள் குறை தீர்க்கும் 24 தீர்த்தங்கள் உள்ளன.
    • காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களும் இங்கு தீர்த்தமாக உள்ளது.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் குறை தீர்க்கும் 24 தீர்த்தங்கள் உள்ளன. காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களும் இங்கு தீர்த்தமாக உள்ளது.

    1. முகாரம்ப தீர்த்தம் - இதில் மூழ்குவோர் கந்தக் கடவுளின் கருணை அமுதத்தை பருகுவர்.

    2. தெய்வானை தீர்த்தம் - இந்த தீர்த்தத்தில் மூழ்குவோர் ஆடை அணிகலன், போஜனம், தாம்பூலம், பரிமளம், பட்டு, பூ அமளி என்கின்ற இன்பத்தைப் பெறுவர்.

    3. வள்ளி தீர்த்தம் - இந்த தீர்த்தம் ஒருமையுள்ளத்துடன் பிரணவ சொரூபமாய் பிரகாசிக்கின்ற கந்தப்பெருமானின் திருவடித்தாமரையைத் தியானிக்கும் ஞானத்தைக் கொடுக்கும்.

    4. லட்சுமி தீர்த்தம் - இந்த தீர்த்தத்தில் மூழ்குவோர் வட திசைக்கு அதிபரான குபேரனும் அடைவதற்குரிய செல்வங்களைப் பெறுவர்.

    5. சித்தர் தீர்த்தம் - இந்த தீர்த்தத்தில் மூழ்குவோருக்கு காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றங்களும் நீங்கி முக்திக்குத் தடையாகிய உடல், உலக பகைகளை விலக்கி முக்தி வழியை நாடச் செய்யும்.

    6. திக்கு பாலகர் தீர்த்தம் - இந்த தீர்த்தத்தில் மூழ்குவோர் கங்கை, யமுனை, காவிரி முதலிய தீர்த்தங்களை கொடுக்கும் பலனைப் பெறுவர்.

    7. காயத்ரீ தீர்த்தம் - இந்த தீர்தத்தத்தில் மூழ்குவோர் அநேக வேள்விகளை செய்தவர் அடைகின்ற பலன்களைப் பெறுவர்.

    8. சாவித்ரி தீர்த்தம் - இந்தந் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்குப் பிரமாதி தேவர்களாலும் காண்பதற்கு அரிய உமாதேவியின் பொன்னடிகளைப் பூஜித்த பலனைப் கொடுக்கும்.

    9. சரஸ்வதி தீர்த்தம் - இந்த தீர்த்தத்தில் மூழ்குவோர்க்கு சகல ஆகம புராண இதிகாசங்களை அறியத் தகுந்த அறிவைக் கொடுக்கும்.

    10. அயிராவத தீர்த்தம் - இந்த தீர்த்தத்தில் மூழ்குவோர் சந்திர பதாகை, பன்னாவை முதலிய நதிகளில் நீராடியோர் பலனைப் பெறுவர்.

    11. வயிரவ தீர்த்தம் - இந்த தீர்த்தத்தில் நீராடியோர் சரஸ்வதி, சோனை முதலிய நதிகளில் மூழ்கியவர் அடையும் பலனை அடைவர்.

    12. துர்க்கை தீர்த்தம் - இந்த தீர்த்தத்தில் மூழ்குவோர் இம்மையிலே அடையும் துன்பத்தைப் போக்கி நன்மையைப் பெறுவர்.

    13. ஞான தீர்த்தம் - இந்த தீர்த்தம் இறைவனைப் பரவுவோருக்கும் பரவுவதற்கு நினைத்தோர்க்கும் நன்மையைக் கொடுத்தருளும்.

    14. சத்திய தீர்த்தம் - இந்த தீர்த்தமானது களவு, கள்ளுண்டல், கொலை, பொய், என்கின்ற ஐந்துடன், அகங்காரம், உலோபம், காமம், பகை, போஜனப் பிரியம், சாய்தல், சோம்பல், முதலான ஏழு துன்பங்களையும் போக்கும். இன்னும், தூலம், சூக்குமம், அதி சூக்குமம் என்று சொல்கின்ற பாதகம், அதிபாகம், மகா பாதகம் ஆகிய மூன்றினின்றும் நீக்கித் தனது சித்தத்தை நன்னெறியில் நிற்கச் செய்யும்.

    15. தரும தீர்த்தம் - இந்த தீர்த்தமானது தீவினையாகிய வேரைக்களைந்து தேவாமிர்தமாகிய மங்கள கரத்தைக் கொடுத்தருளும் வல்லமை படைத்தது.

    16. முனிவர் தீர்த்தம் - இந்த தீர்த்தத்தில் மூழ்குவோர் ஜகத்ரட்சகனைக்கண்ட பலனைப் பெறுவர்.

    17. தேவர் தீர்த்தம் - இந்த தீர்த்தத்தில் மூழ்குவோருக்கு காமம், குரோதம் லோபம் மோகம் மாச்சரியம் என்னும் ஆறு குற்றங்களை நீக்கி ஞான அமுதத்தை நல்கும்.

    18. பாவநாச தீர்த்தம் - இத்தீர்த்தம் குற்றமில்லாத முனிவர்களால் சபிக்கப்பட்ட சாபங்களை விலக்கி அனைத்துப் புண்ணியார்த் தங்களையும் அளிக்கவல்லது.

    19. கந்தப்புட்கரணி தீர்த்தம் - இந்த தீர்த்தத்தில் மூழ்குவோர் சந்திரசேகர சடாதரனுடைய திருவடியை முடிமிசைச் சூடும் மேன்மையைப் பெறுவர்.

    20. கங்கா தீர்த்தம் - இத்தீர்த்தம் முக்திக்கு ஏதுவாய் பெருமானைத் தரிசித்துப் போற்றுவார் ஜெனனமாகிய பிறவிக் கடலைக் கடக்கும் தெப்பம் போன்றிருக்கும்.

    21. சேது தீர்த்தம் - இந்த தீர்த்தத்தில் மூழ்குவோர்க்குச் சகல பாதகத்தினின்றும் நீக்கி நன்மையைக் கொடுத்தருளவல்லது.

    22. கந்தமாதன தீர்த்தம் - இந்த தீர்த்தத்தில் மூழ்குவோர்க்குப் பாவங்களைப் போக்கி பரிசுத்தத்தைத் தர வல்லது.

    23. மாதுரு தீர்த்தம் - இந்த தீர்த்தத்தில் மூழ்குவோர்க்கு அன்னையைப் போன்று ஆசீர்வதித்து அதிலும் பன்மடங்கு அதிகமாக பலனைக் கொடுக்கும்.

    24. தென் புலத்தார் தீர்த்தம் - இதில் ஒரு தரம் மூழ்கி எள்ளுத் தண்ணீரும் இறத்தவர்களுக்கு இம்மை மறுமையும் சிறந்து விளங்க செந்திலாண்டவன் திருவருட்கரந்து வாழும் பதத்தைத் கொடுத்தருளுவார்.இதில் தற்போது கந்த புஷ்கரணி தீர்த்தம் எனப்படும் நாழிக்கிணற்றில் மட்டுமே பக்தர்கள் நீராடுகின்றனர்.

    • வள்ளி குகைக்குள் ஒளிந்ததற்கு சில கதைகள் கூறப்படுகின்றன.
    • திருச்செந்தூர் முருகனை மீனவர்கள் மச்சான்சாமி என்று உறவு கொண்டாடுகின்றனர்.

    திருச்செந்தூர் கோவிலில் மூன்றாவது பிரகாரத்தில் வடபுறம் கடலை நோக்கி இறங்கினால் வள்ளி ஒளிந்த குகைக்கு செல்லும் வழி உள்ளது. வள்ளி குகைக்குள் ஒளிந்ததற்கு சில கதைகள் கூறப்படுகின்றன.

    வள்ளியை முருகன் சிறையெடுத்து வரும்போது வள்ளியின் தந்தை நம்பிராசன் முருகனை துரத்தினார். அவரிடம் இருந்து பாதுகாப்பதற்காக வள்ளியை இந்த குகையில் முருகன் ஒளித்து வைத்ததாக ஒரு கதை சொல்லப்படுகிறது.


    மற்றொரு கதை என்ன தெரியுமா? தெய்வயானை பரதர் குலத்தில் பிறந்தவள். அவள் கன்னியாகுமரியை ஆண்ட மச்சேந்திரனின் மகள். அவள் அழகைக்கண்ட முருகன் தெய்வயானையை இரவில் கடத்தி வந்து விடுவார். ஓரிடத்தில் வந்து கொண்டிருந்த போது பொழுது விடிந்துவிட்டது. அந்த இடம் விடிந்தகரை என்றானது தற்போது அந்த ஊரை இடிந்தகரை என்கிறார்கள்.

    தெய்வயானையை முருகன் திருமணம் முடிந்து அழைத்து வருவதை அறிந்த வள்ளி, கோபம் கொண்டு இந்த குகைக்குள் சென்று ஒளிந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இதற்கு பரதகுலப்பாண்டிய வம்ச சரித்திரம் சான்றாக கூறப்படுகிறது.

    இதனால் திருச்செந்தூர் முருகனை மீனவர்கள் மச்சான்சாமி என்று உறவு கொண்டாடுகின்றனர். மீன் பிடிக்க கடலுக்குள் செல்லும் போது கோவிலுக்கு நேராக படகு கடக்கும் போது தேங்காய் உடைப்பதையும் ஒரு மரபாக வைத்துள்ளனர்.

    • பழனி ஆண்டவனையே நெஞ்சில் வைத்து பாடியும், ஆடியும் நடந்து செல்வார்கள்.
    • இறைவனிடம் மனம் உருகி வேண்டுதல்கள் செய்து தைப்பூசத் தேரோட்டம் காண்பார்கள்.

    போக்குவரத்து வளர்ச்சியடையாத 18-ம் நூற்றாண்டிலேயே மிகவும் தைரியமாக பல்வேறு வாணிபங்கள் மேற்கொண்டு வாழ்ந்து வந்தவர்கள் நாட்டுக்கோட்டைச் செட்டியார் எனும் நகரத்தார் சமூகத்தினர். சுமார் 450 ஆண்டுகளுக்கு முன் இந்த சமுதாயத்தைச் சேர்ந்த வணிகர் ஒருவர் உப்பு வியாபாரம் செய்து வந்தார்.

    ஒரு கட்டத்தில் அவரது வாணிபம் நலிவடைந்தது. இதனால் பழனி முருகனிடம் தன் வாணிபம் பெருக செட்டியார் மனம் உருகி முறையிட்டார். வாணிபம் நல்லபடியாக நடக்கும் பட்சத்தில் கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை முருகனுக்கே அர்ப்பணிப்பதாக மனதிலே பிரார்த்தனை செய்து கொண்டார். பழனி முருகன் அவருக்கு அருள் புரிந்தார். உப்பு வாணிபம் மேன்மேலும் வளரத் தொடங்கியது.


    செட்டியாரும் தான் வேண்டிக் கொண்டபடி முருகனுக்காக ஒதுக்கிய வருமான பங்கு பணத்தை ஆண்டுதோறும் தன் ஊரில் இருந்து பழனிக்கு பாத யாத்திரையாகவே சென்று கொடுத்தார்.

    முருகனின் கருணை வெள்ளத்தில், அவர் அடுத்து வந்த ஆண்டுகளில் நோன்பிருந்து ஒரு குழுவாக நடைப்பயணம் வந்து ஆண்டுதோறும் வழிபாடு செய்யும் வழக்கத்தை மேற்கொண்டார்.

    இதை அறிந்த மற்ற நகரத்தார்களும் ஆண்டு தோறும் தைப்பூசத் திருநாளில் முருகனை தரிசிப்பதற்காக பல குழுக்களாகப் பாதயாத்திரை மேற்கொண்டு பழனி நோக்கி வந்தனர். இப்படித்தான் பழனி பாதயாத்திரை பிரபலமாகியது.

    ஒரு குழு, பல குழுக்களாகி பல குழுக்கள் நூறாகி, நூறு ஆயிரங்களாகி இன்று லட்சக்கணக்கான மக்கள் தைப்பூசத் திருநாள் விழாவிற்கு செட்டிநாட்டுப் பகுதிகளில் இருந்து பழனி வருகின்றனர்.


    இச்சமூகத்தினர் அனைவரும் தங்கள் ஊர்களில் இருந்து நடந்து குன்றக்குடி வந்தடைந்து அங்கு ஒன்று கூடி குன்றக்குடி முருகப்பெருமான் ரத்தினவேல் துணைக்கு வர காவடிகளுடன் தங்கள் குருவான சாமியாடிச் செட்டியாரின் தலைமையில் பாதயாத்திரை மேற்கொள்கின்றனர்.

    இதேபோன்று பல்வேறு பிரிவினர்களும் காவடி எடுத்து பழனிக்கு நடந்து வருவர். வழியில் நாட்டார் காவடிகள் என்றும், நகரத்தார் காவடிகள் என்றும், நடைப்பயணத்தில் வரும் அனைத்துக் காவடிகளும் ஒன்று சேர்ந்து பாடிக் கொண்டும், ஆடிக்கொண்டும் செல்லும் காட்சிகள் மிகவும் அற்புதமானவை.

    நாள் தோறும் அன்றாடப் பயண முடிவில் ஓரிடத்தில் ஒன்றாகக் காவடிகளை இறக்கி பூஜைகள் செய்து நடைபயணம் மேற்கொள்ளும் பக்தர்கள், பசி, தாகம் தீர்த்து விட்டு மறுபடியும் பயணம் மேற்கொள்வர்.


    இவ்வாறு ஒரு வார காலம், பசி, தாகம், தூக்கம், உடல் வலி, கால்கள் வலி, ஊர், உறவு, வீடு, வாசல் எல்லாவற்றையும் மறந்து ஒரே சிந்தனையுடன் பழனி ஆண்டவனையே நெஞ்சில் வைத்து பாடியும், ஆடியும் நடந்து செல்வார்கள்.

    பழனியை அடைந்ததும் காவடிகளையும் தங்கள் மனபாரங்களையும் ஒன்றாக முருகனிடம் இறக்கி வைத்துப் பூஜைகளும், நேர்த்திக் கடன்களும் செய்து முடிப்பார்கள். அங்கேயே ஓரிரு நாட்கள் தங்கி இறைவனிடம் மனம் உருகி வேண்டுதல்கள் செய்து தைப்பூசத் தேரோட்டம் காண்பார்கள். பிறகு மகிழ்ச்சியுடனும் புத்துணர்ச்சியுடனும் காவடிகளை எடுத்துக் கொண்டு நடந்து ஊர் திரும்புவார்கள்.

    இன்று உலகம் முழுவதிலும் இருந்து வரும் பாத யாத்திரையாளர்கள் பெருகிப் பெருகி ஆண்டுதோறும் தைப்பூசத் திருநாளில் பழனியில் வந்து கூடும் பக்தர்கள் கூட்டம் அளவிட முடியாததாகி விட்டது.

    தமிழகத்தின் பல பாகங்களில் இருந்தும் ஒரு மாதத்திற்கு முன்பே பழனி நோக்கி பக்தர்கள் நடக்கத் தொடங்கி விடுவர். தமிழகத்தின் எந்த கோவிலிலும் பாதயாத்திரை பக்தர்கள் இந்த அளவுக்கு கூடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • குன்றக்குடி ஸ்ரீமுருகப் பெருமான் தங்க ரதத்தில் பவனி.
    • திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் தெப்போற்சவம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு தை-25 (வெள்ளிக்கிழமை)

    பிறை: வளர்பிறை.

    திதி: தசமி இரவு 11.26 மணி வரை. பிறகு ஏகாதசி.

    நட்சத்திரம்: ரோகிணி இரவு 8.41 மணி வரை. பிறகு மிருகசீரிஷம்.

    யோகம்: மரண, சித்தயோகம்.

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். கோவை ஸ்ரீபாலதண்டாயுதபாணி யானை வாகனத்தில் பவனி. குன்றக்குடி ஸ்ரீமுருகப் பெருமான் தங்க ரதத்தில் பவனி. திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் தெப்போற்சவம். காஞ்சி உலகளந்த பெருமாள் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கட்ரமண சுவாமிக்கு திருமஞ்சனம். பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை ஆலயங்களில் அபிஷேகம். லால்குடி ஸ்ரீபிரவிருந்த ஸ்ரீமதி என்கிற பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித்தாயார் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சனம், மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வெற்றி

    ரிஷபம்-நட்பு

    மிதுனம்-உயர்வு

    கடகம்-சுகம்

    சிம்மம்-ஆதரவு

    கன்னி-லாபம்

    துலாம்-புகழ்

    விருச்சிகம்-நலம்

    தனுசு- கீர்த்தி

    மகரம்-அமைதி

    கும்பம்-அன்பு

    மீனம்-கண்ணியம்

    • வேலின் தன்மைகளை உயர்வுபடுத்திக் காட்டியவர் அருணகிரிநாதர்.
    • வேலானது இருளினை அகற்றக் கூடிய சுடரொளிகளான தீ.

    கந்தபுராணத்தில் முருகனின் கையில் இருக்கும் வேல் மகத்துவம் பற்றி கூறப்பட்டுள்ளது. கந்தபுராணம் வேலினைப் புகழ்ந்து கூறியிருப்பதுடன் வேலுக்கும் முருகனுக்கும் இடையிலான தொடர்புகளைத் தெளிவுப்படுத்துகின்றது.

    எனவே வேல் என்னும் குறிப்பு வேட்டையாடல், வேட்டைத் தலைவர், முருகனின் பூசாரி, முருகனின் போர்க்குணம் மற்றும் முருகனை உணர்த்தும் மறைபொருளாக அமைந்துள்ளது.

    வேல் விடுமினையோன், திறல்வேலன், வேல் கொண்டன்று பொருதவீரன், துங்கவடிவேலன், ப்ரசண்ட வடிவேலன், வேல் தொட்ட மைந்தன், அசுரர் தெறித்திட விடும் வேலன் என பலவாறாக முருகனைப் புகழ்ந்துரைக்கும் அருணகிரியார் காலம் முதல் முருகனது வேல் புதிய கோணத்தில் செல்வாக்குப் பெறலாயிற்று, ஆழ்ந்த முருகபக்தரான அருணகிரியார் பாடிய வேல் வகுப்பு, வேல்விருத்தம் ஆகியவை வேலின் முக்கியத்துவத்தை விளக்குகின்றன.


    வேலின் தன்மைகளை உயர்வுபடுத்திக் காட்டிய அருணகிரிநாதர் வேலின் சக்திக்குத் தனிப்பட்ட அர்த்தத்தை வழங்கியுள்ளார்.

    வேலைப்பற்றித் தனித்தனியாகப் பாடிய ஒரே முருக பக்தரும் புலவருமான அருணகிரியார் வேலானது இருளினை அகற்றக் கூடிய சுடரொளிகளான தீ, சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இயற்கைச் சக்திகளை விளக்கக் கூடிய குறியீடெனக் குறிப்பிட்டுள்ளார்.

    வேற்கோட்டம் என்ற சொல்லாட்சியானது, தமிழகத்தில் முருகனைச் சுட்டிக் காட்டக்கூடிய ஒரு அடையாளப் பொருள் என்பதைத் தெளிவுப்படுத்துகின்றது. இன்றும் வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், கோவை மாவட்டத்தில் உள்ள பூராண்டான் பாளையம், மதுரை மாவட்டத்தில் பசுமலைக்கு அருகில் உள்ள குமரகம் ஆகிய இடங்களில் வேல் ஒன்றே நட்டுவைக்கப்பட்டு வணங்கப்படுகின்றது.

    திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் போன்ற முருகன் தலங்களில் உள்ள முருகன் ஆலயக் கோபுரங்களில் பெரிய அளவில் வேல்வடிவ சுடர் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அவை வெகு தொலைவு வரை முருகன் கோவிலின் இருப்பிடத்தைச் சுட்டிக்காட்டுகின்றன.

    மேலும் தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்களில் ஒன்றில் கூட வேல் இல்லாமல் இல்லை. இவை வேல் என்னும் குறியீட்டின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுவதாக உள்ளன.

    தமிழகத்தில் சுந்தரவேல், சக்திவேல், கதிர்வேல், கனகவேல், வடிவேல், குமரவேல், கந்தவேல், ஞானவேல், வேலப்பன், வேல்ச்சாமி, வேலன், வேலாயுதம் போன்ற பெயர்கள் ஆண்களுக்கு அதிகமாகச் சூட்டப்பட்டுள்ளதைக் பார்க்கும் போது வேலின் பெருமையை உணரலாம்.

    ×