என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • 10 ஆயிரம் பேருக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.
    • ஏராளமான பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற வழிபட்டனர்.

    உளுந்தூர்பேட்டை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே காட்டு நெமிலி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பழமையான அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை விழா நடைபெற்றது.

    கோவிலில் இருந்து அங்காளம்மன் அலங்கரிக்கப்பட்டு சிங்க வாகனத்தில் மயானம் நோக்கி புறப்பட்ட போது அங்கு திரண்டு இருந்த ஏராளமான பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற வழிபட்டனர்.

    இதனை தொடர்ந்து அங்காளம்மன் மயானத்திற்கு சென்ற பின்னர் அங்கு ஆடு மற்றும் கோழி பலியிடப்பட்டது. பின்னர் படையல் இடப்பட்ட சுண்டல், கொழுக்கட்டை உள்ளிட்ட பொருட்கள் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    மயானத்தில் திரண்ட நூற்றுக்கணக்கான திருமணமான புதுமண பெண்கள் மற்றும் குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் முட்டிப்போட்டு குழந்தை வரம் கேட்டு வழிபட்டனர்.

    அவர்களுக்கு கோவில் பூசாரி எலுமிச்சை பழம் மற்றும் அங்காளம்மனுக்கு படையலிடப்பட்ட ரத்த சோறு ஆகியவற்றை வழங்கினார்.

    இதே போல் கடந்த வருடங்களில் குழந்தை இல்லாமல் வேண்டிக் கொண்ட பெண்கள் குழந்தை பிறந்தவுடன் மயானத்திற்கு வந்து குழந்தை வரம் கொடுத்த அங்காளம்மனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் குழந்தையை சூறை விட்டு பின்னர் கோவில் பூசாரியிடம் காணிக்கை வழங்கி தங்களது குழந்தைகளை பெற்று சென்றனர்.

    இதேபோல் சுடுகாட்டில் தங்களது முன்னோர்களுக்கு அவர்கள் உயிரோடு இருந்த போது விரும்பி சாப்பிட்ட பழங்கள், கொழுக்கட்டை, சுண்டல், கிழங்கு உணவு பொருட்கள் மட்டுமின்றி குவாட்டர் பாட்டில்கள் , குளிர்பானங்கள், பீடி, சிகரெட் உள்ளிட்டவைகள் வைத்தும் குடும்பத்தோடு வழிப்பட்டனர்.

    மயானக்கொள்ளை திருவிழாவை முன்னிட்டு விழாக் குழுவின் சார்பில் 10 ஆயிரம் பேருக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குரு பெயர்ச்சி, எப்போது வருகிறது?
    • எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

    ரிஷப ராசியில் சஞ்சரித்து வரும் குரு பகவான் மே மாதம் ரிஷப ராசியில் இருந்து இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். மிதுன ராசிக்கு செல்லும் குரு பெயர்ச்சி, எப்போது வருகிறது மற்றும் 2025 குரு பெயர்ச்சி எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.

    ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாகும். இதில் முழுமையான சுப கிரகம் என்று கூறப்படும் குரு பகவான் ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்வார்.

    தற்பொழுது ரிஷப ராசியில் சஞ்சரித்து வரும் குரு பகவான் மே மாதம் ரிஷப ராசியில் இருந்து இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

    மிதுன ராசிக்கு செல்லும் குரு பெயர்ச்சி, எப்போது வருகிறது மற்றும் 2025 குரு பெயர்ச்சி எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்?


    குரு பெயர்ச்சி

    மே மாதம் 15-ந் தேதி வியாழக்கிழமை அன்று இரவு 10:30 மணிக்கு ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு குரு பெயர்ச்சி நடக்கிறது.

    குரு பெயர்ச்சி காலத்தின் போது, எப்போதுமே சில மாதங்கள் குரு பகவான் வக்கிரமாகி பின்னோக்கி செல்வார். ஆனால், 2025 குரு பெயர்ச்சியில், குரு பகவான் வக்கிரம் அடையாமல், அதிசாரம் பெற்று, ,முன்னோக்கி செல்கிறார். அதாவது, குரு பகவான், கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

    குரு அதிசார பெயர்ச்சி 2025 - அக்டோபர் முதல் டிசம்பர் வரை

    குரு பெயர்ச்சி நடக்கும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தையும் நற்பலங்களையும் வாரி வழங்கும். ஆனால் அதே நேரத்தில் 12 ராசிகளுக்கும் ஏதோ ஒரு விதத்தில் நன்மைகளை செய்யும்.

    வருமானம், திருமணம், குழந்தை, வேலை, தொழில் வளர்ச்சி, தொழில் லாபம் உள்ளிட்டவற்றை எந்தெந்த ராசிகளுக்கு கொடுக்கும் என்பது பற்றி பார்க்கலாம்.


    சாதகமாக இருக்கும் 5 ராசிகள்

    ரிஷப ராசி - பண வரவு, தொழில் வளர்ச்சி

    சிம்ம ராசி - லாப குரு, லாபத்தை கொட்டிக் கொடுக்கும்

    துலாம் ராசி - பாக்கிய ஸ்தானத்தில் குரு, அதிர்ஷ்டம் மேலோங்கும்

    தனுசு ராசி - திருமணம் கைகூடும், வாழ்க்கைதுணையால் அதிர்ஷ்டம், நினைத்தது நடக்கும்

    கும்ப ராசி - தொட்டதெல்லாம் துலங்கும்

    குரு பெயர்ச்சி 2025 எதிர்மறை பலன்களைத் தருமா?

    குறிப்பிட்ட இடங்களில் குரு பெயர்ச்சி ஒவ்வொரு ராசிக்கும் நன்மைகளை கொடுக்கும். அதே நேரத்தில், குருவின் பார்வையால் 12 ராசிகளுக்கும் குறிப்பிட்ட இடங்களுக்கான நற்பலன்களும் கிடைக்கும் என்பதால் குரு பெயர்ச்சி முழுவதுமாக ஒரு சில ராசிகளுக்கு கெடு பலன்களைத் தரும் என்று நினைப்பது தவறு.

    • கேரளாவில் உள்ள அம்மன்களுக்கு என்று தனிப்பெயர் எதுவும் கிடையாது.
    • மாசி மாதத்தில் நடைபெறும் 10 நாள் திருவிழா மிகவும் பிரசித்திப்பெற்றது.

    மகாவிஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படுபவர், பரசுராமர். இவரால் 108 சிவாலயங்களும், 108 பகவதி அம்மன் கோவில்களும் நிறுவப்பட்ட இடம்தான், இன்றைய கேரள தேசம். இதனை 'கடவுளின் தேசம்' என்றும் சொல்வார்கள்.

    கேரளாவில், ஏராளமான பகவதி அம்மன் கோவில்கள் இருக்கின்றன. கேரளாவில் உள்ள அம்மன்களுக்கு என்று தனிப்பெயர் எதுவும் கிடையாது. அந்த அம்மன்கள் அனைவரும் அந்தந்த ஊர் பெயருடன் இணைத்து பகவதி என்றே அழைக்கப்படுகின்றனர்.


    கேரளாவில் உள்ள ஒவ்வொரு பகவதி அம்மன் கோவில்களுக்கும் தனிச் சிறப்பு இருந்தாலும், திருவனந்தபுரம் அருகே உள்ள ஆற்றுக்கால் என்னும் இடத்தில் உள்ள பகவதி அம்மன் கோவில் உலகப் புகழ்பெற்றதாக விளங்குகிறது.

    இந்தக் கோவில் மட்டுமின்றி, அங்கு வீற்றிருந்து அருளும் ஆற்றுக்கால் பகவதி அம்மனும் தன்னுடைய அருள் சக்திக்கு சிறப்பு பெற்றவராக திகழ்கிறார். இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் பொங்கல் திருவிழா, உலக பிரசித்திப் பெற்றதாகும்.

    இந்த நிகழ்வில் பல லட்சம் பக்தர்கள், அதுவும் பெண்கள் மட்டுமே திரண்டு பொங்கல் வைத்து அம்மனை வழிபடுவது தனிச் சிறப்பு.

    கோவில் வரலாறு

    சிலப்பதிகாரத்தின் நாயகியும், கற்புக்கரசியுமான கண்ணகியின் அவதாரம்தான், ஆற்றுக்கால் பகவதி அம்மன் என்று கூறப்படுகிறது. தன் கணவன் கள்வன் இல்லை என்பதை நிரூபித்த கண்ணகி, மதுரையை தீக்கு இரையாக்கினாள்.

    பின்னர் அங்கிருந்து கன்னியாகுமரி வழியாக கேரள மாநிலத்தின் கொடுங்கல்லூர் என்ற இடத்திற்குச் செல்லும் வழியில் ஆற்றுக்கால் என்ற இடத்தில் இளைப்பாறினாள். அதன் நினைவாகவே அங்கு ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் அமைக்கப்பட்டதாம்.

    பராசக்தியின் பக்தர் ஒருவர், கிள்ளி என்ற ஆற்றில் நீராடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு தெய்வீக அம்சம் பொருந்திய ஒரு சிறுமி வந்தாள். அந்த பக்தர், சிறுமியை அன்னையின் அம்சமாகவே பார்த்தார். பக்தர் அருகில் வந்த சிறுமி, "ஐயா.. என்னை இந்த ஆற்றின் மறு கரையில் கொண்டு போய் விட முடியுமா?" என்று கேட்டாள்.

    ஆனால் அந்தச் சிறுமியை விட்டுப் பிரிய மனம் இல்லாத பக்தர், அவளை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று, விருந்தளித்து உபசரிக்க எண்ணினார். அதை அந்த சிறுமியிடம் சொல்ல நினைக்கும் போதே, அந்தச் சிறுமி மறைந்து போனாள். வந்தது அம்மன்தான் என்பதை, அந்த பக்தர் உறுதிசெய்தார்.

    அன்று இரவு அந்த பக்தரின் கனவில் தோன்றிய அதே சிறுமி, "தென்னை மரங்கள் அடர்ந்த பகுதியில் மூன்று கோடுகள் தென்படும். அந்த இடத்தில் கோவில் அமைத்து என்னை குடியமர்த்துங்கள்" என்று கூறினாள்.

    மறுநாள் சிறுமி கனவில் சுட்டிக்காட்டிய இடத்திற்குச் சென்ற பக்தர், அங்கு மூன்று கோடுகள் இருப்பதைக் கண்டு ஆனந்தம் அடைந்தார். பின்னர் அந்த இடத்தில் ஒரு சிறிய கோவிலை கட்டி அம்மனை பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.


    இந்தக் கோவிலே நாளடைவில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலாக எழுச்சியடைந்தது என்கிறது இன்னொரு கோவில் வரலாறு.

    பொங்கல் திருவிழா

    இந்த ஆலயத்தில் மாசி மாதத்தில் நடைபெறும் 10 நாள் திருவிழா மிகவும் பிரசித்திப்பெற்றது. மாசி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்தத் திருவிழா, 10-ம் நாள் குருதி தர்ப்பண விழாவுடன் நிறைவுபெறும்.

    முதல் நாள் விழாவில் கண்ணகி கதையை பாடலாகப் பாடி, பகவதி அம்மனை குடியிருத்துவர். கொடுங்கல்லூர் பகவதியை ஆவாகனம் செய்து (அழைத்து வந்து) இந்த பத்து நாட்களும் இங்கே குடியிருக்கச் செய்தவதாக ஐதீகம்.

    மாசித் திருவிழாவின் 9-ம் நாள் விழாவாக பொங்கல் வைக்கப்படும். மதுரையை தீக்கிரையாக்கி வந்த கண்ணகி தேவியை, மன அமைதி கொள்ளச் செய்வதற்காக, பெண்கள் பொங்கல் வைத்து நைவேத்தியம் செய்வதாக இதற்கு காரணம் சொல்லப்படுகிறது.

    மகிஷாசுர வதம் முடிந்து பக்தர்கள் முன் தோன்றிய தேவியை, பெண்கள் அனைவரும் பொங்கல் வைத்து நைவேத்தியம் படைத்து வரவேற்றனர் என்ற மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது.

    இந்த நிகழ்வை மையப்படுத்திதான், மாசித் திருவிழாவின்போது, பொங்கல் வைக்கும் வைபவம் நடத்தப்படுகிறது.


    பொங்கல் திருவிழா அன்று, கோவிலின் முன் பக்கம் அமைக்கப்பட்டிருக்கும் பந்தலில் அமர்ந்து கண்ணகி வரலாற்றில் பாண்டியன் தன் தவறை உணர்ந்து மரணிக்கும் பாடல் பாடப்படும். அது முடிந்ததும் கோவில் தந்திரி கருவறையில் இருந்து தீபம் ஏற்றி வந்து, மேல் சாந்தியிடம் (தலைமை பூசாரி) வழங்குவார்.

    அவர் கோவில் திடப்பள்ளியில் உள்ள பொங்கல் அடுப்பில் தீ மூட்டுவார். பின்னர் அந்த தீச்சுடரை சக பூசாரியிடம் வழங்குவார். அவர் கோவிலின் முன்பு உள்ள பண்டார அடுப்பில் தீ மூட்டுவார். அதைத் தொடர்ந்து மற்ற அனைத்து பொங்கல் அடுப்புகளிலும் தீ மூட்டப்படும்.

    இதற்கான அறிவிப்பாக செண்டை மேளமும், வெடி முழக்கமும், வாய் குரவையும் ஒலிக்கப்படும். ஏனெனில் கோவிலைச் சுற்றி சுமார் 10 கிலோமீட்டர் சுற்றளவில், அதாவது திருவனந்தபுரம் நகரில் சாலை ஓரங்கள், வீட்டு வளாகங்கள் உள்ளிட்ட பல இடங்களில் இருந்தபடி பெண்கள் பொங்கல் வைப்பார்கள்.

    ஒரு ஊரில் ஒரே நேரத்தில் பல லட்சம் பெண்கள் பொங்கல் வைக்கும் சம்பவம் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது. (இந்த பொங்கல் வைக்கும் வைபவம், கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.

    முதன் முறையாக 1997-ம் ஆண்டு நடந்த பொங்கல் விழாவில் 15 லட்சம் பெண்கள் பொங்கல் வைத்தது கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்று சாதனை படைத்தது. பின்னர் 2009-ம் ஆண்டு நடந்த பொங்கல் விழாவில் இந்த சாதனை 30 லட்சம் பெண்கள் பொங்கல் வைத்ததாக பதிவானது.)

    பொங்கல் வைக்கும் நிகழ்வு முடிந்ததும், பிற்பகலில் குறிப்பிட்ட வேளையில் கோவிலில் இருந்து நியமனம் செய்யப்பட்ட பூசாரிகள், புனித நீர் தெளித்து பொங்கல் நைவேத்தியம் செய்வார்கள். அப்போது வானத்தில் இருந்து விமானம் மூலமாக மலர் தூவப்படும்.


    அன்றைய தினம் இரவு ஆற்றுக்கால் பகவதி அம்மன், மணக்காடு என்ற இடத்தில் உள்ள சாஸ்தா கோவிலுக்கு எழுந்தருள்வார். அம்மன் ஊர்வலம் செல்லும் வீதி அனைத்தும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

    ஒவ்வொரு வீட்டிலும் குத்துவிளக்கேற்றி அம்மனை வரவேற்பார்கள். மறுதினம் அதிகாலை சாஸ்தா கோவிலில் பூஜை முடிந்ததும், அங்கிருந்து ஆற்றுக்கால் பகவதி அம்மன் தன் இருப்பிடம் திரும்புவார்.

    இந்த ஆண்டுக்கான பொங்கல் வைக்கும் திருவிழா கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இந்த விழா வருகிற 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடைபெற உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியான பொங்கல் வைக்கும் நிகழ்வு, வருகிற 13-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

    ஆலய அமைப்பு

    இந்த ஆலயம் முழுவதும் செம்புத் தகடால் வேயப்பட்டது. கோவில் ஸ்ரீசக்கரத்தை, ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்திருக்கிறார். கோவில் தூண்கள் மற்றும் சுவரில் மகிஷாசுரமர்த்தினி, காளி, ராஜராஜேஸ்வரி, சிவ-பார்வதி ஆகியோரின் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.

    கோபுரத்தின் ஒரு பகுதியில் கண்ணகியின் வரலாற்றுச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. நுழைவு வாசலின் மேல் பகுதியில் ஆற்றுக்கால் பகவதி அம்மன், தன் நான்கு கரங்களில் கத்தி, கேடயம், சூலம், அட்சய பாத்திரம் தாங்கியும், அரக்கி ஒருத்தியை அடக்கி அவள் மேல் அமர்ந்த கோலத்திலும் அருள்பாலிக்கும் சுதைச் சிற்பம் உள்ளது.

    கருவறையில் இரண்டு அம்மன் சிலைகள் அமையப்பெற்றுள்ளன. மூல விக்ரகத்தில் ரத்தினங்கள் பதித்து தங்க அங்கி சாத்தப்பட்டுள்ளது. மூல விக்ரகத்தின் கீழே அபிஷேக விக்ரகம் உள்ளது.

    அம்மனின் கருவறை 'ஸ்ரீகோவில்' என்று அழைக்கப்படுகிறது. வளாகத்தைச் சுற்றிலும் கணபதி, சிவன், நாகர், தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர் சன்னிதிகள் உள்ளன.


    தாலிப்பொலி

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா நடைபெறும் நாள் அன்று காலையில், 'தாலிப்பொலி' என்ற நிகழ்ச்சி நடைபெறும். சிறுமிகள் பலரும் தங்களை அலங்கரித்துக் கொண்டு அம்மன் சன்னிதியை நோக்கி குடும்பத்துடன் வந்து அம்மனை பூஜித்து திரும்புவார்கள்.

    இதில் பங்கேற்கும் அனைத்து சிறுமிகளும் புத்தாடை அணிந்து, தலையில் மலர் கிரீடம் சூடி, கையில் தாம்பாளம் ஏந்தி, அதில் அம்மனை வழிபடுவதற்காக பூஜை பொருட்கள் வைத்து, சிறு தீபம் ஏற்றிக் கொண்டு வருவார்கள்.

    இவ்வாறு செய்வதால், சிறுமிகளுக்கு நோய், நொடிகள் வராது. அவர்களது அழகும், செல்வமும் அதிகரிக்கும். எதிர்காலத்தில் நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    இந்த ஆலயம் தினமும் காலை 4.30 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    திருவனந்தபுரம் கிழக்கு கோட்டை சிட்டி பஸ்நிலையத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ஆற்றுக்கால் திருத்தலம்.

    • சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
    • திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் தங்கக் குதிரை வாகனத்தில் திருவீதியுலா.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு மாசி-23 (வெள்ளிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: அஷ்டமி நண்பகல் 2.03 மணி வரை பிறகு நவமி

    நட்சத்திரம்: மிருகசீர்ஷம் பின்னிரவு 3.38 மணி வரை பிறகு திருவாதிரை.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். காங்கேயம் ஸ்ரீ முருகப் பெருமான் தெய்வானையுடன் திருமணக் காட்சி. காரமடை ஸ்ரீ அரங்கநாதர் சிம்ம வாகனத்தில் பவனி. குடந்தை ஸ்ரீ சக்கரபாணிப் பெருமாள் கருட வாகனத்தில் புறப்பாடு. நத்தம் ஸ்ரீ மாரியம்மன் பால் காவடி உற்சவம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் தங்கக் குதிரை வாகனத்தில் திருவீதியுலா. ராமேசுவரம் ஸ்ரீ பர்வதிவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் கிளி வாகன சேவை. திருவிடைமருதூர் பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. கரூர் தான்தோன்றி மலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சனம், மாலை ஊஞ்சல் சேவை. பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வெற்றி

    ரிஷபம்-சிறப்பு

    மிதுனம்-ஆதரவு

    கடகம்-ஆக்கம்

    சிம்மம்-வரவு

    கன்னி-போட்டி

    துலாம்- தாமதம்

    விருச்சிகம்-மேன்மை

    தனுசு- உறுதி

    மகரம்-வரவு

    கும்பம்-செலவு

    மீனம்-வாழ்வு

    • தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்.
    • நாளை மறுநாள் அம்மன் மஞ்சள் நீராடுதல், கம்பம் எடுத்தல் நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி கடைவீதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த மாதம் 11-ந் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது.

    18-ந் தேதி கோவில் முன்பு கம்பம் நடப்பட்டு, அதில் பெண்கள் மஞ்சள் நீர் ஊற்றினர். தொடர்ந்து மாரியம்மனுக்கு தினமும் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 3 நாள் தேர்த்திருவிழா நேற்று நடந்தது. இதனையொட்டி காலை பக்தர்கள் கோவிலுக்கு மாவிளக்கு எடுத்து வந்தனர்.

    10 மணிக்கு அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    அதனை தொடர்ந்து 21 அடி உயர வெள்ளித் தேரில் மாரியம்மனும், 12 அடி உயர மரத்தேரில் விநாயகரும் எழுந்தருளினர்.

    இரவு 9 மணிக்கு முதல் நாள் தேரோட்டம் தொடங்கியது. அப்போது பக்தர்கள் பொள்ளாச்சி மாரியம்மா தாயே.. காவல் தெய்வமே... என பக்தி கோஷம் எழுப்பினர்.

    கோவில் வளாகத்தில் தொடங்கிய தேரோட்ட மானது, மார்க்கெட் ரோடு வழியாக வந்து வெங்கட்ராமணன் வீதி சந்திப்பில் நிறுத்தப்பட்டது. தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    தேர்த்திருவிழாவை முன்னிட்டு உதவி போலீஸ் சூப்பிரண்டு சிருஷ்டி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று இரவு 2-வது நாள் தேரோட்டம் நடக்க உள்ளது. இமான்கான் வீதியில் நிறுத்தப்பட்டுள்ள தேர் இரவு 7 மணிக்கு வடம் பிடித்து இழுக்கப்படுகிறது.

    தேர் உடுமலை ரோடு வழியாக வந்து சத்திரம் வீதியில் நிறுத்தப்படுகிறது. நாளை(வெள்ளிக்கிழமை) 3-வது நாளாக தேரோட்டம் நடக்க உள்ளது. தேர் புறப்பட்டு, நிலைக்கு வருதல், அதனை தொடர்ந்து பரிவேட்டை, தெப்பத்தேர் விழா நடைபெறுகிறது.

    நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 8.30 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடுதல், இரவு 9 மணிக்கு கம்பம் எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. 10-ந் தேதி இரவு 8 மணிக்கு மகா அபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    • சந்திரனுக்கு 'சோமன்' என்ற பெயருண்டு.
    • சந்திராஷ்டமம் அன்று வழிபட்டால் அனைத்து சங்கடங்களும் நீங்கும்.

    காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள நவக்கிரக தலங்களில் சந்திரனுக்கான தலமாக விளங்குகிறது, காமாட்சியம்மன் உடனாகிய சந்திரேஸ்வரர் ஆலயம். 'சந்திரேசம்' என்று அறியப்படும் இத்தலம், காஞ்சி புராணத்தில் சோமேச்சுரம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    சந்திரனுக்கு 'சோமன்' என்ற பெயருண்டு. எனவே இத்தல சிவபெருமான், 'சோமசுந்தரன்' என்றும் அழைக்கப்படுகிறார். சர்வ தீர்த்தத்தின் தென் கரையில் இத்தலம் அமைந்துள்ளது.

    'நகரங்களில் சிறந்தது காஞ்சி மாநகரம்' என்று மகாகவி காளிதாசர் போற்றுகிறார். பெரிய காஞ்சிபுரம் பகுதியில் சர்வ தீர்த்தக் கரையின் தெற்கில், வெண்தாமரை மலர்கள் நிறைந்த குளத்தை சந்திரன் உருவாக்கினான்.

    பின்னர் அதன் கரையில் சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து, அனுதினமும் வெண் தாமரையும், குளத்து நீரும் கொண்டு அர்ச்சனை அபிஷேகம் செய்து பூஜித்து வந்தான். அதன் காரணமாக நவக்கிரகங்களுள் ஒன்றாக மாறும் பேறு. பெற்றான் என்று காஞ்சி புராணத்தில் மாத சிவஞான முனிவர் அருளியுள்ளார்.


    புண்ணியம் நிறைந்த வெண் தாமரைக்குளம் அருகில், தற்காலத்தில் வெள்ளைக்குளம் என்று அழைக்கப்படுவதுமான பகுதியில் சந்திரேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.

    இத்திருத்தலத்தில் சிவபெருமானை, வெண் தாமரை கொண்டு வழிபட்ட சந்திரனுக்கும் தனி சன்னிதி இருக்கிறது. இவ்வால யத்தின் தீர்த்தமாக வெள்ளைக்குளம் என்று அழைக் கப்படும் சந்திர தீர்த்தம் திகழ்கிறது.

    கிழக்கு திசை நோக்கி அமைந்த சிறிய திருக் கோவில் இது. முன் மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்புடன் ஆலயம் திகழ்கிறது. சிவபெருமான் இத்தலத்தில் லிங்க ரூபத்தில் சந்திரேஸ் வரர் என்ற திருநாமம் தாங்கி, கிழக்கு திசை நோக்கி எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

    மூலவர் சந்திரேஸ்வரருக்கு பின்புறத் தில் சிவபெருமான்-முருகன்-பார்வதி ஆகியோர் இணைந்து சோமாஸ்கந்த வடிவத்தில் காட்சி தருவது கூடுதல் சிறப்பு.

    கருவறைக்கு வெளியே ஒரு புறத்தில் விநாய கப்பெருமானும், மற் றொரு புறத்தில் வள்ளி தெய்வானை பெருமானும் எழுந் தருளி அருள்பாலிக் கிறார்கள், சந்திரேஸ்வரரை தரிசித்த வாறு நந்திதேவர் அமர்ந்துள்ளார்.

    நந்திதேவருக்குப் பின் பக்கத்தில் பலிபீடம் அமைந்துள்ளது. சுற்றுப் பிரகாரத்தில் விநாயகர் சன்னிதி அமைந்துள்ளது. விநாயகப் பெருமானின் இருபுறங்களிலும் நாக தெய்வங்களின் சிலைகள் உள்ளன. சண்டிகேஸ்வரர் ஒரு சிறு சன்னிதி யில் வீற்றிருக்கிறார்.

    சப்தரிஷிகள் தவம் செய்து ஈசனை வணங்கி பேறு பெற்ற தலம் இது என்கிறார்கள், ஆகையால் இத்தலத் தின் விமானத்தில் சப்த ரிஷிகளான அத்ரி, பிருகு, குத்ஸ, வசிஷ்டர், கவுதமர், காசியபர், ஆங்கிரஸர், அனுசூயா முதலானோர் கதைச் சிற்ப வடிவத்தில் காட்சி தருகிறார்கள். இது வேறெங்கும் காண இயலாத அரிதான அமைப்பாகும்.

    இவ்வாலயத்தில் எழுந்தருளியுள்ள ஈசனை, சந்திரன் வழிபட்ட காரணத்தினால், பன்னிரண்டு ராசிக்காரர்களும் சந்திராஷ்டம தினத்தன்று வழிபட்டால் தங்களுடைய அனைத்து சங்கடங்களும் நீங்கப்பெற்று நன்னிலை பெறுவர் என்பது ஐதீகம்.

    பவுர்ணமி தினத்தன்று இத்தலத்திற்கு வந்து ஈசனையும், சந்திரனை யும் வழிபடுவது சிறப்பாகும். மேலும் சந்திரனுக்குரிய நட்சத் திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய தினங்களிலும் வழிபடுவது சிறப்பு.


    சந்திரன்

    மாதப்பிரதோஷங்கள், மகாசிவராத்திரி முதலான உற்சவங்கள் இத்தலத்தில் நடைபெறுகின்றன. சோம வாரம் மற்றும் பிரதோஷம் இத்தலத்தில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இவ்வாலயம் தினமும் காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    பெரிய காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில், பிள்ளையார் பாளையம் உள்ளது. இங்கு வெள்ளைக்குளம் என்ற பகுதியில், சந்தவெளி அம்மன் கோவிலுக்குப் பின்புறத்தில் உள்ள தெருவில் இத்தலம் அமைந்துள்ளது.

    • ஆலயம் சுமார் 400 ஆண்டுகள் பழமையானது.
    • நாடியம்மாள் என்ற பெயர் பலருக்கும் வைக்கப்படுகிறது.

    தஞ்சை மாவட்டத்தில் சோழ மன்னர்களால் பல கோவில்கள் கட்டப்பட்டிருக்கின்றன. சோழர்களைத் தவிர வேறு சில வழியில் வந்த மன்னர்களும் பல்வேறு ஆலயங்களை அமைத்துள்ளனர்.


    அந்த வழியில் வந்த மராட்டிய மன்னரான சரபோஜி மன்னரால் பட்டுக்கோட்டை நகராட்சியில் கட்டப்பட்டதுதான், பழமையான நாடியம்மன் கோவில். இந்த ஆலயம் சுமார் 400 ஆண்டுகள் பழமையானது.

    இந்த ஆலயத்தில் அருளும் நாடியம்மன் என்ற பெண் தெய்வத்தை, பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் பல ஆண்டுகளாக வழிபட்டு வருகின்றனர். தன்னை நாடி வரு பவர்களுக்கு நல்லதை செய்வதால், இந்த அம்மனை அனைவரும் 'நாடியம்மன்' என்று அழைப்பதாக இவ்வூர் மக்கள் சொல்கின்றனர்.

    ஒன்றிரண்டு தலைமுறைகளுக்கு முன்புவரை இந்த பகுதியில் நாடியம்மாள் என்ற பெயர் பலருக்கும் வைக்கப்பட்டிருந்தது. அந்தப் பெயரும் கூட, இந்த அம்மனின் வழியால் ஏற்பட்டதுதான் என்கிறார்கள்.


    தல வரலாறு

    இந்த நாடி அம்மன் கோவில் உருவானது பற்றிய வரலாறு ஒன்று சொல்லப்படுகிறது. அதை இங்கே பார்க்கலாம். ஒரு முறை தஞ்சை மராட்டிய மன்னரான சரபோஜி மன்னர், காட்டில் வேட்டையாட சென்றார். அப்போது குறிப்பிட்ட ஒரு மிருகத்தை துரத்திக் கொண்டு சென்றபோது, அது பிடிபடாமல் போக்கு காட்டியது.

    மன்னனும் விடாமல் அதை நோக்கி ஒரு அம்பை எய்தான். அந்த அம்பு தாக்கிய நிலையில், அந்த மிருகம் அருகில் இருந்த அடர்ந்த புதருக்குள் போய் ஒளிந்துகொண்டது.

    தாக்குதலுக்குள்ளான அந்த மிருகம், புதரை விட்டு தப்பிச் செல்ல வாய்ப்பில்லை என்று நினைத்த மன்னன், அந்த புதரை நீக்கினான். அப்போது அந்த புதருக்குள் ரத்தம் ஒழுக, அழகிய பிடாரி அம்மன் சிலை ஒன்று தென்பட்டது.

    அந்த சிலையை எடுத்து வந்த சரபோஜி மன்னன், சிலையை சுத்தம் செய்து பட்டுக்கோட்டை பகுதியில் இருந்த சிவன் கோவில் பூசாரிகளை அழைத்து, பிடாரி அம்மனுக்கு என்று தனியாக ஒரு ஆலயத்தை அமைத்து அதில் சிலையை பிரதிஷ்டை செய்தான்.

    அப்போது கோவில் அமைந்த இடம் வனமாக இருந்தது. அந்த வனத்தில் அமையப்பெற்ற பிடாரி அம்மனுக்கு, நித்திய படி பூஜைகளும், விழாக்களும் கொண்டாடும் பொறுப்பு மற்றும் ஆலயத்தை நிர்வகிக்கும் பொறுப்புகளை அவ்வூரைச் சேர்ந்த சின்னான் செட்டியார் என்பவரிடம் சரபோஜி மன்னன் வழங்கினார்.

    ஆரம்பத்தில் காட்டில் கண்டெடுத்த கருங்கல் பிடாரி அம்மன் சிலையை வைத்து வழிபட்டு வந்தனர். பின்னர் சின்னான் செட்டியாரின் முயற்சியின் காரணமாக, பிடாரி அம்மனுக்கு ஐம்பொன் சிலை ஒன்று வடிவமைக்கப்பட்டு, அதை பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினர். இந்த அம்மனே, நாளடைவில் 'நாடியம்மன்' என்ற பெயர் பெற்றார் என்கிறது ஆலய வரலாறு.

    இங்கு ஆண்டுதோறும் பங்குனி - சித்திரை மாதங்களில் இந்த அம்மனுக்கு காப்பு கட்டி திருவிழா நடை பெறுகிறது. திருவிழா காலங்களில் இந்த அம்மன் தனது ஆலயத்தை விட்டு குடிபெயர்ந்து, பெரிய கடை தெருவின் நடுவில் இருக்கும் மண்டகப்படி நடைபெறும் மண்டபத்தில் வீற்றிருப்பாள்.

    கொடியேறி திருவிழா முடிந்த பிறகுதான் மீண்டும் ஆலயம் திரும்புவாள் என்கிறார்கள். இந்த ஆலயத்தில் நடைபெறும் வரகரிசி மாலை, வெண்ணெய் தாழி போன்ற திருவிழாக்கள் சிறப்பானது.

    இந்த நிகழ்வில், வெண்ணெய் பானையுடன் அம்மன் வீதி உலா வரும்போது, பக்தர்கள் பலரும் அம்மனுக்கு பட்டு உடையை சாத்துவார்கள்.


    ஐம்பொன் சிலையானது, திருவிழா காலங்களில் மட்டும் மண்டபத்திற்கு கொண்டுவரப்படும். தவிர ஒவ்வொரு நாளும் மாலை நேரங்களில் மண்டகப்படி நடைபெறும். அனைவராலும் வணங்கப்படும் இந்த அம்மன், நினைத்ததை நடத்தி வைக்கும் சக்தி படைத்தவளாக இருக்கிறாள்.

    அமைவிடம்

    தஞ்சாவூரில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவிலும், அதிராமபட்டினத்தில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தூரத்திலும், பட்டுக்கோட்டையில் இருந்து சுமார் 1½ கிலோமீட்டரிலும் நாடியம்மன் கோவில் அமைந்திருக்கிறது.

    • புற்றுதான் அம்மனாக இருக்கிறது.
    • சந்தனத்தால் அழகான முகம் செய்யப்பட்டு அதுவே பகவதி அம்மனாக காட்சி தருகிறது.

    சபரிமலை ஐயப்ப சுவாமி கோவில் என்றால், ஆண்கள் எப்போது வேண்டுமானாலும் செல்லலாம். 10 வயதுக்கு உட்பட்ட சிறுமியர், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே சபரிமலை அய்யனை தரிசிக்க வரலாம் என்ற கட்டுப்பாடு உண்டு.

    சபரிமலை ஐயப்பனை மாலை அணிந்து விரதம் இருந்து தரிசிக்கச் செல்பவர்கள், இருமுடி கட்டி மலை ஏறிச் சென்று ஐயப்பனை வணங்கி வருவார்கள்.

    அதே போல் பெண்கள் மட்டுமே இருமுடி கட்டி விரதம் இருந்து செல்லும் ஆலயங்களில் ஒன்றுதான், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்.

    புகழ்பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி மாதம் நடைபெறும் விழாவின்போது, பெண்கள் -அதுவும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் அதிக அளவில் விரதம் இருந்து, தலையில் இருமுடி கட்டி வந்து, பொங்கல் வைத்து வழிபட்டுத் திரும்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

    தமிழகத்தைச் சேர்ந்த ஆண்கள், கேரளாவில் உள்ள ஐயப்பனை தரிசிக்க லட்சக்கணக்கில் செல்வதுபோல, அங்குள்ள பெண்கள் பலரும் தமிழகத்தில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மனை தரிசிக்க, மாசி மாதம் இவ்வாலயத்தில் நடைபெறும் திருவிழாவின்போது வருகை தருவார்கள்.

    இவ்வாலயத்தில் புற்று வடிவத்தில் மண்டைக்காடு பகவதி அம்மன் அருள்பாலிக்கிறாள். நெடு நெடுவென வளர்ந்து நிற்கும் புற்றுதான் அம்மனாக இருக்கிறது. வெறும் புற்றை பகவதி அம்மனாக எல்லோராலும் மானசீகமாக முகத்திற்கு நேராக கொண்டு வந்து வணங்குதல் இயலாது என்பதால், அந்த புற்றின் மேல் பகுதியில் சந்தனத்தால் அழகான முகம் செய்யப்பட்டு அதுவே பகவதி அம்மனாக காட்சி தருகிறது.

    அந்த முகத்துக்கு கீழே உள்ள பகுதி சிவப்பு ஆடையால் மறைக்கப்பட்டு அதற்கு முன்னதாக ராணி சேதுலட்சுமிபாய் கொடுத்த வெள்ளி அங்கி வைக்கப்பட்டிருக்கிறது. இரண்டையும் சேர்த்துப் பார்த்தால் பிரமாண்டமாய் அம்மன் உருவம் தெரியும். அதற்கும் சற்று கீழே உற்சவ தேவி விக்கிரகம் வைக்கப்பட்டுள்ளது.


    தலவரலாறு

    முற்காலத்தில் இது ஆடு- மாடுகள் மேயும் மந்தையாக இருந்தது. காட்டுப்பகுதியாக இருந்ததால் 'மந்தைக்காடு' என்று அழைக்கப்பட்டது. அதுவே மருவி 'மண்டைக்காடு' என்றானதாக சொல்கிறார்கள்.

    மண்டைக்காடு அருகே உள்ள சேரமங்கலத்தில் ஆதிசங்கரரின் சீடர் ஒருவர் இருந்தார். அவர் எப்போதும் ராஜராஜேஸ்வரி குடியிருப்பதாக சொல்லப்படும் ஸ்ரீசக்கரத்தை கையில் வைத்திருப்பார். தினமும் இந்த இடத்திற்கு வந்து ஸ்ரீசக்கரத்தை கீழே வைத்துவிட்டு தியானத்தில் ஆழ்ந்துவிடுவார்.

    மாலை வரை தியானத்தில் இருக்கும் அவர், எழுவதற்குள் அவர் மேல் புற்று பரவிவிடும். அப்பகுதியில் ஆடு- மாடு மேய்க்கும் சிறுவர்கள் மாலையானதும் புற்றை கலைத்து அவரை எழுப்பி விடுவார்கள். அவரும் ஸ்ரீசக்கரத்தை எடுத்துக் கொண்டு வீடு திரும்புவார். இது வாடிக்கை.

    ஆனால் ஒருநாள் சீடரால் தரையில் வைத்த ஸ்ரீசக்கரத்தை எடுக்க முடியவில்லை. இவர் தியானத்தில் ஆழ்ந்து என்னவென்று ஆராய 'நான் இங்கேயே இருந்து கொள்கிறேன்' என்று அவருக்கு அம்மனிடம் இருந்து உத்தரவு வந்தது.

    அதனால் அந்த சீடரும் இங்கேயே இருந்துவிட முடிவு செய்து தியானத்தில் ஈடுபட்டார். வழக்கமாக அவரை தியானத்தில் இருந்து எழுப்பும் சிறுவர்களை 'இனி எழுப்ப வேண்டாம்' என்று சொல்லிவிட்டு அப்படியே ஜீவ சமாதியாகி விட்டார்.

    அவர் மேல் புற்றும் வளர்ந்தது. அதுதான் இன்றுவரை வளர்ந்து வளர்ந்து மேருவாக ஆகி இருக்கிறது. ஸ்ரீசக்கரத்தில் இருந்த அம்மன்தான் இங்கே இப்போது பகவதி அம்மனாக காட்சி தருகிறார்.

    காலங்கள் சென்றபின்னர் அப்பகுதியில் ஆடு -மேய்க்கும் சிறுவர்கள், பனை மரத்தின் காயை வைத்து பந்தாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு சிறுவன் அடித்த பனங்காய் புற்றின்மேல் பட்டு புற்று சிறிது சேதமடைந்தது.

    சிறுவர்கள் வந்து பார்த்தபோது புற்றின் சேதமான பகுதியில் இருந்து ரத்தம் பீறிட்டவாறே இருந்தது. சிறுவர்கள் ஊருக்குள் ஓடிப்போய் பெரியவர்களை அழைத்து வந்தார்கள். அப்போது அருள் வந்து ஆடிய ஒருவர், "இந்த புற்றுதான் தேவி பகவதி. அவள் இங்கே வெகு காலமாக இருக்கிறாள். புற்றில் இருந்து வரும் ரத்தத்தை நிறுத்த அங்கே சந்தனத்தை அரைத்து பூசவேண்டும்" என்று அருள் வாக்கு கூறினார்.

    புற்று இருந்த இடத்தின் உரிமையாளரும் அவ்வாறே செய்ய ரத்தம் நின்றுவிட்டது. அந்த இடத்தில் ஒரு ஓலைக்குடிசை போட்டு புற்றை அம்மனாக வழிபட ஆரம்பித்தார்கள். அம்மனை வந்து வழிபட்டவர்கள் நினைத்ததெல்லாம் நடக்க ஆரம்பிக்க பக்தர்கள் கூட்டம் பெருகியது.


    கேரள வழக்கப்படி பெண் தெய்வம் என்றால் அது பகவதிதான். அப்படித்தான் மண்டைக்காடு பகவதியாக மக்கள் வழிபடத் தொடங் கினர்.

    இவ்வாலயத்தின் கொடை விழா கடந்த 2-ந் தேதி தொடங்கியது. இந்த விழா வருகிற 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை நடைபெற உள்ளது. கொடை விழாவின் இறுதிநாளில் நடைபெறும் 'வலிய படுக்கை' என்னும் நிகழ்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    கூடை கூடையாய் பூக்கள், பழங்கள், பலகாரம், வடை, அப்பம், திரளி ஆகியவற்றை, பக்தர்கள் தங்களின் வாயை மூடியபடி ஊர்வலமாக பாத்திரங்களில் எடுத்து வந்து அம்மன் சன்னிதி முன்பாக படைத்து வழிபடுவார்கள்.

    மேலும் இந்த படைப்புக்குரிய சாதம் ஒரே நாளில் தயாரிக்கப்பட்ட புழுங்கல் அரிசியில் சமைக்கப்படுவது என்பது கூடுதல் விசேஷம். வலிய படுக்கை என்ற ஒடுக்கு பூஜையின்போது கோவில் நிசப்தமாக இருக்கும்.

    மாசி மாத திருவிழாவின்போது மட்டுமின்றி, ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளிலும், பவுர்ணமி நாட்களிலும் இவ்வாலயத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர் கோவிலில் இருந்து சுமார், 20 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, மண்டைக்காடு திருத்தலம்.

    • இன்று வாஸ்து நாள் (நாளை காலை 10.32-க்கு மேல் 11.08-க்குள் வாஸ்து பூஜை செய்ய நன்று).
    • தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு மாசி-22 (வியாழக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சப்தமி பிற்பகல் 3.55 மணி வரை பிறகு அஷ்டமி

    நட்சத்திரம்: ரோகிணி மறுநாள் விடியற்காலை 4.37 மணி வரை பிறகு மிருகசீர்ஷம்.

    யோகம்: மரணயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று வாஸ்து நாள் (நாளை காலை 10.32-க்கு மேல் 11.08-க்குள் வாஸ்து பூஜை செய்ய நன்று). மதுரை ஸ்ரீ கூடலழகர் கஜேந்திரமோட்சம், விருத்தாசலம், திருவெண்காடு, திருவொற்றியூர் கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் பவனி. கோவை ஸ்ரீ கோணியம்மன் பாரிவேட்டைக்கு எழுந்தருளல். காரமடை ஸ்ரீ அரங்கநாதர் உற்சவம் ஆரம்பம். சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ குருபகவானுக்கு அபிஷேகம். ஆலங்குடி ஸ்ரீ குருபக வான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக் கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சனம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். குறுக்குத் துறை முருகப் பெருமான் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-மேன்மை

    ரிஷபம்-விவேகம்

    மிதுனம்-உற்சாகம்

    கடகம்-பெருமை

    சிம்மம்-அன்பு

    கன்னி-இன்சொல்

    துலாம்- வெற்றி

    விருச்சிகம்-செலவு

    தனுசு- புகழ்

    மகரம்-வரவு

    கும்பம்-ஆர்வம்

    மீனம்-பக்தி

    • செல்லாண்டியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
    • சேறு பூசிக்கொண்டு ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலமாக வந்தனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி நகரில் காவல் தெய்வமாக செல்லியாண்டி அம்மன் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பொங்கல் மற்றும் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    கடந்த ஆண்டு கோவில் கும்பாபிஷேக திருப்பணி நடைபெற்ற நிலையில் சென்ற ஆண்டு கோவில் மாசி மாத திருவிழா நடைபெறவில்லை.

    கோவில் கும்பாபிஷேகம் டிசம்பர் மாதம் நடைபெற்று முடிந்த நிலையில் 48 நாட்கள் மண்டல பூஜை சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு மாசி மாத பொங்கல் மற்றும் தேர் திருவிழா பூச்சாட்டப்பட்டு கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

    விழாவையொட்டி நேற்று முன் தினம் இரவு முதல் நேற்று மதியம் வரை செல்லாண்டியம்மனுக்கு அபிஷேக விழா நடந்தது. இதில் பவானி, ஈரோடு மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் கருவறைக்கு சென்று பக்தர்கள் கொண்டு வந்த மஞ்சள் நீர் பால் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் தாங்களே அபிஷேகம் செய்தனர்.

    ஈரோடு மாவட்டம் பவானி நகரில் இருந்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரான செல்லியாண்டியம்மனுக்கு பால், இளநீர், மஞ்சள், திருமஞ்சனம் உட்பட பல்வேறு திரவிய ங்களால் மூலவருக்கு ஊற்றி விடிய விடிய சுமார் 15 மணி நேரத்தக்கும் மேலாக பக்தர்களே அபிஷேகம் செய்து சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவையொட்டி முக்கிய நிகழ்ச்சியான சக்தி அழைப்பு நிகழ்ச்சி மற்றும் பொங்கல் விழா இன்று (புதன்கிழமை) காலை கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி காலை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள எல்லை யம்மன் கோவிலில் இருந்து சக்தி அழைத்து வரப்பட்டது.

    மேளதாளங்கள் முழங்கள் குதிரைகளுடன் புதிய பஸ் நிலையம், மேட்டூர் ரோடு, அந்தியூர் பிரிவு உள்பட பல்வேறு ரோடுகள் வழியாக சக்தி அழைத்து வரப்பட்டது.

    இதில் சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு காய்கறிகள், உப்பு, மிளகு, சில்லரை காசுகள் என பல்வேறு பொருட்களை வேண்டுதல்கள் நிறைவேற்றும் வகையில் சூறை வீசப்பட்டது. இதை பக்தர்கள் பலர் போட்டி போட்டு எடுத்துச் சென்றனர்.

    இதைத்தொடர்ந்து உள்ளூர், வெளியூர், வெளி மாநில பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் வருகை தந்து பல்வேறு விதமான வேடங்கள் அணிந்தும், பக்தர்கள் உடலில் சேறு பூசிக்கொண்டு ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலமாக வந்தனர்.

    சிறுவர்கள், சிறுமிகள் என பலரும் சேறு பூசிக் கொண்டு நோய் எதுவும் அண்டாமல் இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

    மேலும் இளைஞர்கள் பலர் அம்மன் உள்பட பல்வேறு வேடங்கள் அணிந்து கொண்டு வந்தனர். பலர் உடலில் வர்ணம் பூசிக் கொண்டு தாயே செல்லாண்டியம்மா என பக்தி கோஷம் முழங்க மேளதாளங்களுக்கு ஏற்ற வகையில் ஆடிக் கொண்டே வந்தனர்.

    இதையடுத்து செல்லாண்டியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இன்று மதியம் பக்தர்கள் ஏராளமானோர் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.

    தொடர்ந்து இன்று மாலை பக்தர்கள் அலகு குத்தி கொண்டு, அக்னி சட்டி எடுத்து வேண்டுதல்களை நிறைவேற்றுகிறார்கள். இதனால் பவானி நகரம் முழுவதும் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்படு கிறது. இதனால் நகரமே விழா கோலம் பூண்டு உள்ளது.

    தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை) திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது.

    • இன்று கார்த்திகை விரதம், சஷ்டி விரதம்.
    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர சகலசாபிஷேகம்

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு மாசி-21 (புதன்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சஷ்டி மாலை 5.47 மணி வரை பிறகு சப்தமி

    நட்சத்திரம்: பரணி காலை 7.10 மணி வரை பிறகு கார்த்திகை மறுநாள் விடியற்காலை 4.54 மணி வரை பிறகு ரோகிணி

    யோகம்: சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று கார்த்திகை விரதம், சஷ்டி விரதம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர சகலசாபிஷேகம், கோவை ஸ்ரீ கோணியம்மன் ரதோற்சவம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் உற்சவம் ஆரம்பம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம். மதுராந்தகம் ஏரி காத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சனம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி புளியங்குடி மூலவர் வள்ளியம்மை கோவிலில் திருமஞ்சனம். ஸ்ரீ ரங்கம் ஸ்ரீநம்பெருமாள், ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் பெருமாள் புறப்பாடு. விருதுநகர், வேதாரண்யம் ஸ்ரீசிவபெருமான் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம். திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்க வாசகர் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-சுகம்

    ரிஷபம்-உதவி

    மிதுனம்-பயணம்

    கடகம்-பக்தி

    சிம்மம்-வெற்றி

    கன்னி-மகிழ்ச்சி

    துலாம்- புகழ்

    விருச்சிகம்-அமைதி

    தனுசு- நன்மை

    மகரம்-ஓய்வு

    கும்பம்-சலனம்

    மீனம்-குழப்பம்

    • அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தின விழா இன்று.
    • ஊர்வலத்தில் சிறுவர், சிறுமிகள் கோலாட்டம் ஆடியபடி சென்றனர்.

    நாகர்கோவில்:

    சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து நேற்று அய்யா வைகுண்டர் விஞ்சை பெற்ற திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் உள்ள பதியில் இருந்து வாகன பேரணி நாகர்கோவிலுக்கு புறப்பட்டது. இந்த பேரணியானது நேற்று இரவு நாகராஜா திடலை வந்தடைந்தது.

    இதேபோல் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்ட வாகன பேரணியும் நேற்று இரவு நாகராஜா திடலை வந்தது. இதைத்தொடர்ந்து அங்கு மாசி மாநாடு நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து அய்யா வைகுண்டரின் அவதார தின ஊர்வலம் நாகராஜா திடலில் இருந்து இன்று காலை 5.10 மணிக்கு புறப்பட்டது. ஊர்வலத்திற்கு பாலபிரஜாபதி அடிகளார் தலைமை தாங்கினார்.

    ஊர்வலத்திற்கு ராஜ வேல், பாலஜனாதிபதி, பையன் கிருஷ்ண நாம் மணி, பையன் அம்ரிஷ் செல்லா, பையன் கவுதம் ராஜா, பையன் கிருஷ்ண ராஜ், பையன் செல்லவடிவு, பையன் நேம்ரிஷ் செல்லா, விஸ்வநாத் பையன், பால. கிருஷ், வைபவ், யுகஜன நேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஊர்வலத்தில் செண்டை மேளம் முழங்க மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அகிலத்திரட்டு ஏந்திய அய்யாவின் வாகனம் முன் சென்றது. அதைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அணிவகுத்து சென்றார்கள்.

    அப்போது காவி உடை அணிந்தும், கையில் காவிக்கொடிகளை ஏந்தியபடி பக்தர்கள் "அய்யா சிவ சிவ.. அரகர அரகரா.."என்ற பக்தி கோஷத்தை எழுப்பினர். மேலும் பல பக்தர்கள் தலையில் சந்தனக்குடம் சுமந்து சென்றனர்.

    ஊர்வலத்தில் ராபர்ட்புரூஸ் எம்.பி. மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஊர்வலம் மணிமேடை சந்திப்பு வழியாக சவேரியார் கோவில் சந்திப்பு பகுதிக்கு வந்தது. அங்கு பிற மதத்தை சேர்ந்தவர்கள் ஊர்வலத்திற்கு வரவேற்பு கொடுத்தனர்.

    பின்னர் ஊர்வலம் கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், வழுக்கம்பாறை, ஈத்தங்காடு, வடக்கு தாமரைகுளம் வழியாக முத்திரி கிணற்றங்கரையை சுற்றி வந்த ஊர்வலம் மதியம் தலைமை பதியை வந்தடைந்தது.


    ஊர்வலத்தில் சிறுவர், சிறுமிகள் கோலாட்டம் ஆடியபடி சென்றனர். ஊர்வலத்தில் குமரி மாவட்டத்தை சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும், கேரளாவில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு மோர், தண்ணீர், பானகாரம் தர்மங்கள் வழங்கப்பட்டது. பல்வேறு இடங்களில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

    அவதார தினத்தை யொட்டி சாமிதோப்பு தலைமை பதிக்கு நேற்று இரவு பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. சாமிதோப்பு ரதவீதிகள் முழுவதும் பக்தர்கள் தலையாக காட்சியளித்தது. இன்று அதிகாலை முதலே பக்தர்கள் முத்திரி கிணற்றில் குளித்துவிட்டு குடும்பத்தோடு அய்யா வைகுண்டரை வழிபட்டனர். சாமிதோப்பு பதியில் தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து அய்யாவை தரிசனம் செய்தனர். அப்போது பக்தர்கள் அய்யாவிற்கு வெற்றிலை, பாக்கு, பழம், பூ ஆகியவற்றை சுருளாக வைத்தனர்.

    அய்யா வைகுண்டர் அவதார தின ஊர்வலத்தையொட்டி சாமிதோப்பிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அய்யா வைகுண்டர் பதியை சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளையும், இரு சக்கர வாகனங்களும் மற்றும் நான்கு சக்கர வாகனங்களும் நுழைய தடை செய்யப்பட்டது.

    இதையடுத்து ஆங்காங்கே போலீசார் பேரிகார்டுகளை அமைத்து வாகனங்களை திருப்பி விட்டனர். இதனால் சாலையோரங்களிலும் அந்த பகுதியில் உள்ள தென்னந்தோப்புகளிலும் கார்களையும், இருசக்கர வாகனங்களையும் பொதுமக்கள் நிறுத்தி சென்று இருந்தனர். 

    ×