என் மலர்
அமெரிக்கா
- விமானப்படை வீரர்கள் நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்றார்.
- அப்போது திடீரென தடுமாறி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் கொலரோடா மாகாணத்தில் விமானப்படை பயிற்சி முடித்தவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா நடந்தது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்க வந்தார். அவரை பேச நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்தனர். உடனே பேச எழுந்த பைடன் கால் இடறி கீழே விழுந்தார்.
உடனே அருகிலிருந்த விமானப்படை வீரர்கள் அவரை கைத்தாங்கலாக தூக்கினர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதன்பின், அதிகாரிகளின் உதவி ஏதுமின்றி, அவர் நடந்து சென்று தமது இருக்கையில் அமர்ந்தார். இந்த சம்பவத்தில் அவருக்கு காயம் ஏற்படவில்லை. நலமாக உள்ளார் என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
விழா மேடையில் போடப்பட்டிருந்த மணல் மூட்டை ஒன்றை மிதித்தபோது கால் தடுமாறி அதிபர் ஜோ பைடன் கீழே விழுந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
விழாவில் அதிபர் ஜோ பைடன் விமானப்படை பயிற்சி முடித்தவர்களுக்கு பட்டமளித்ததுடன், கைகுலுக்கி பாராட்டும் தெரிவித்தார்.
- ராகுல் காந்தி 10 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
- முதலில் சான்பிரான்சிஸ்கோ சென்ற அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
வாஷிங்டன்:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 10 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். முதலில் சான்பிரான்சிஸ்கோ நகரின் சாண்டா கிளாராவில் நடந்த நிகழ்ச்சியில் அமெரிக்கவாழ் இந்தியர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.
இந்நிலையில், வாஷிங்டன் டிசியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தியிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.
அதில், கர்நாடக தேர்தல் வெற்றி பாராளுமன்ற தேர்தலிலும் தொடருமா என கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய ராகுல் காந்தி, எதிர்க்கட்சிகள் நன்றாக ஒன்றுபட்டுள்ளன. அது மேலும் மேலும் ஒன்றிணைந்து வருகிறது. அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். அங்கே நிறைய நல்ல வேலைகள் நடக்கின்றன என்று நினைக்கிறேன். எதிர்க்கட்சிகளுடன் போட்டியிடும் இடங்கள் இருப்பதால் இது ஒரு சிக்கலான விவாதம். எனவே கொஞ்சம் கொடுக்கல் வாங்கல் தேவை. ஆனால் அது நடக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
வரும் 2024 பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் மக்களை ஆச்சரியப்படுத்தும் என தெரிவித்தார்.
- கடந்த டிசம்பர் மாதம் அர்னால்ட் உலகின் முன்னணி பணக்காரர் என்ற அந்தஸ்தை பெற்றார்.
- எலான் மஸ்க்-ன் மொத்த சொத்து மதிப்பு 192.3 பில்லியன் டாலர்கள் ஆகும்.
டெஸ்லா இன்க் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் மீண்டும் உலகின் முதல் பணக்காரர் என்ற அந்தஸ்த்தை பெற்று இருக்கிறார். இவர் பெர்னார்டு அர்னால்டை பின்னுக்குத் தள்ளி மீண்டும் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.
மே 31-ம் தேதி அர்னால்டு LVMH பங்குகள் 2.6 சதவீதம் வரை சரிந்ததை தொடர்ந்து, பணக்காரர்கள் பட்டியலில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. பிரெஞ்சு வியாபாரியான 74 வயது பெர்னார்ட் மற்றும் எலான் மஸ்க் இடையே உலகின் பணக்காரர் யார் என்பதில், இந்த ஆண்டு துவங்கியதில் இருந்தே கடும் போட்டி நிலவி வந்தது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அர்னால்ட் எலான் மஸ்க்-ஐ கடந்து உலகின் முன்னணி பணக்காரர் என்ற அந்தஸ்தை பெற்றார். தொழில்நுட்ப துறையில் பெரும் சரிவு நிலை நிலவி வந்த போது, அர்னால்ட் உலகின் முதல் பணக்காரர் ஆனார். லூயிஸ் விட்டன், ஃபெண்டி மற்றும் ஹெனசி போன்ற பிராண்டுகளை நிறுவியவர் அர்னால்ட்.
கடந்த ஏப்ரல் மாதம் துவங்கியதில் இருந்தே, LVMH பங்குகள் பத்து சதவீதம் வரை சரிவடைந்து வருகின்றன. ஒரு கட்டத்தில் அர்னால்ட் சொத்து மதிப்பு ஒரே நாளில் 11 பில்லியன் டாலர்கள் வரை சரிந்தது.
மறுபக்கம் எலான் மஸ்க் இந்த ஆண்டு 55.3 பில்லியன் டாலர்களை ஈட்டியிருக்கிறார். இதில் பெரும்பாலான வருவாய் டெஸ்லா நிறுவனத்தில் இருந்து கிடைத்தவை ஆகும். ஆஸ்டினை சேர்ந்த எலான் மஸ்க்-ன் மொத்த சொத்து மதிப்பு 192.3 பில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பட்டு இருக்கிறது. அர்னால்ட்-ன் சொத்து மதிப்பு 186.6 பில்லியன் டாலர்கள் ஆகும்.
- உக்ரைன், ரஷியா இடையிலான போர் 15 மாதங்களைக் கடந்துள்ளது.
- இரு நாடுகளிடையிலான போரை நிறுத்த பல நாடுகள் முயற்சித்து வருகின்றன.
வாஷிங்டன்:
உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ம் தேதி போர் தொடுத்தது. இந்தப் போர் தொடங்கி ஓராண்டையும் கடந்துள்ளது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள், தளவாட உதவிகளைச் செய்து வருகின்றன.
இந்நிலையில், உக்ரைனுக்கு புதிதாக சுமார் 300 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை அமெரிக்கா அறிவித்துள்ளது. இதில் ராக்கெட் லாஞ்சர்கள், பீரங்கிக்கான வெடிமருந்துகள் ஆகியவையும் இத்தொகுப்பில் அடக்கம். அதிபர் ஜோ பைடன் இதற்கு ஒப்புதல் அளிக்க முடிவு செய்துள்ளார்.
ரஷியா உக்ரைன் மீது படையெடுக்கத் துவங்கியதில் இருந்து இதுவரை அமெரிக்கா 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பாதுகாப்பு உதவிகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று முற்றிலும் நம்பிக்கை கொண்ட ஒரு குழுவினரால் இந்தியா இயங்குகிறது.
- கடவுளை விட தனக்கு எல்லாம் தெரியும் என்று மோடி நினைக்கிறார்.
அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ நகரில் ராகுல் காந்தி பேசியதாவது:-
தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று முற்றிலும் நம்பிக்கை கொண்ட ஒரு குழுவினரால் இந்தியா இயங்குகிறது. கடவுளை விட தனக்கு எல்லாம் தெரியும் என்று மோடி நினைக்கிறார். கடவுளுக்கு அருகே அவரை உட்கார வைத்தால் இந்த பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என்று கடவுளுக்கே மோடி விளக்கம் கொடுப்பார் என்று நினைக்கிறேன்.
கடவுள் தான் எதை உருவாக்கினேன் என்பதில் குழப்பம் அடைந்து விடுவார்.
இவ்வாறு ராகுல்காந்தி கிண்டலாக பேசினார்.
- ரத்த அழுத்தத்தை கண்காணிக்கும் எளிய, குறைந்த விலை கிளிப்பை அமெரிக்காவின் கலிபோர்னியா சான்டியாகோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
- கிளிப் 3டி அச்சிடப்பட்ட பிளாஸ்டிக் இணைப்பு ஆகும். இது ஸ்மார்ட் போனின் கேமரா மற்றும் பிளாஷ் மீது பொருத்தலாம்.
ரத்த அழுத்தத்தை கண்காணிக்க குறைந்த விலையில் புதிய ஸ்மார்ட் போன்களை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். ஸ்மார்ட் போனின் கேமரா மற்றும் பிளாஷை பயன்படுத்தி பயனரின் விரல் நுனியில் ரத்த அழுத்தத்தை கண்காணிக்கும் எளிய, குறைந்த விலை கிளிப்பை அமெரிக்காவின் கலிபோர்னியா சான்டியாகோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த கிளிப் 3டி அச்சிடப்பட்ட பிளாஸ்டிக் இணைப்பு ஆகும். இது ஸ்மார்ட் போனின் கேமரா மற்றும் பிளாஷ் மீது பொருத்தலாம். ரத்த அழுத்தத்தை அளவிட பயனர், கிளிப்பை அழுத்தும்போது ஸ்மார்ட் போனின் பிளாஷ் விரல் நுனியில் ஒளிரும். பின்னர் ரத்த அழுத்த அளவீட்டை காட்டும்.
இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, இந்த தொழில்நுட்பம் வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு மிகவும் பயனளிக்கும். ரத்த அழுத்த கண்காணிப்புக்கான தடையை குறைக்க மலிவான தீர்வை நாங்கள் உருவாக்கி உள்ளோம். இந்த சாதனம் மற்ற ரத்த அழுத்த கண்காணிப்பில் இருந்து வேறுபடுகிறது. ரத்த அழுத்தத்தை அளவிட பயனர் விரல் நுனியில் கிளிப்பை அழுத்தினால் போதும் என்றனர்.
- அமெரிக்கா முழுவதும் நடந்த தேசிய நினைவு நாள் நிகழ்ச்சிகளில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்தன.
- அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்து வருகிறது. பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடக்கிறது.
வாஷிங்டன்:
அமெரிக்க ராணுவ வீரர்கள் தியாகத்தை போற்றும் வகையில் தேசிய நினைவு நாள் நேற்று கடை பிடிக்கப்பட்டது. நாடு முழுவதும் இதற்கான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தி தேசிய நினைவு நாளை அனுசரித்தனர்.
இந்த நிலையில் அமெரிக்கா முழுவதும் நடந்த தேசிய நினைவு நாள் நிகழ்ச்சிகளில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்தன. 8 மாகாணங்களில் கடற்கரைகள், உயர்நிலைப் பள்ளிகள், மோட்டார் பேரணிகள் ஆகியவற்றில் நடந்த துப்பாக்கி சூட்டில் 16 பேர் பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அமெரிக்கா முழுவதும் ஒரே நேரத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு பாதுகாப்பை பலப்படுத்தினர். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்து வருகிறது. பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடக்கிறது.
துப்பாக்கி கலாசாரத்தை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் துப்பாக்கி சூடு தொடர்ந்தபடியே உள்ளது.
அமெரிக்காவின் பிலடெல்பியாவில் வசித்து வந்தவர் ஜுட் சாக்கோ (வயது21). இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவரது பெற்றோர் கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் இருந்து சுமார் 30 ஆண்டுக்கு முன்பு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். மாணவரான ஜுட் சாக்கோ, பகுதி நேரமாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் ஜுட் சாக்கோ, வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். அவரிடம் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். தன்னிடம் இருந்த பணத்தை ஜுட் சாக்கோ கொடுக்க மறுத்ததால் அவரை சுட்டுக் கொன்று விட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றது தெரிய வந்தது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் ஓகியோவில் பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வந்த ஆந்திராவை சேர்ந்த மாணவர் சாயேஷ் வீரா சுட்டுக் கொல்லப்பட்டார். கொள்ளை முயற்சியை தடுத்த அவரை மர்ம நபர் சுட்டுக் கொன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நாயின் அர்ப்பணிப்பு உணர்வை பாராட்ட பல்கலைக்கழகம் முடிவு செய்தது.
- சான்றிதழை ஜஸ்டின் தனது வாயில் கவ்வியபடி பெற்று செல்லும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது.
அமெரிக்காவில் நியூஜெர்சியில் சவுத் ஆரஞ்ச் பகுதியில் செட்டான் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. புகழ்பெற்ற இந்த பல்கலைக்கழகத்தில் 90-க்கும் மேற்பட்ட பட்டப்பிரிவுகளின் கீழ் மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த பல்கலைக்கழகத்தில் மாற்றுத்திறனாளி மாணவியான கிரேஸ் மரியானி என்பவர் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு பயின்று வந்தார். இவர் வகுப்புக்கு செல்லும் போதெல்லாம் தனக்கு துணையாக ஜஸ்டின் என்ற தனது வீட்டு வளர்ப்பு நாயையும் அழைத்து சென்றார்.
கிரேசுடன் அனைத்து வகுப்புகளிலும் அந்த நாயும் கலந்து கொண்டுள்ளது. எனவே அந்த நாயின் அர்ப்பணிப்பு உணர்வை பாராட்ட பல்கலைக்கழகம் முடிவு செய்தது. இந்நிலையில் கிரேஸ் தனது பாடத்தில் முழுதேர்ச்சி பெற்று பட்டப்படிப்பு முடித்ததையடுத்து அவருக்கு பட்டயச்சான்றிதழ் வழங்கப்பட்டது. அவர் பட்டம் பெற பல்கலைக்கழகத்திற்கு சென்ற போது, கிரேசுக்கு பட்டயச்சான்றிதழ் வழங்கப்பட்டது.
பின்னர் பல்கலைக்கழகம் சார்பில் ஜஸ்டின் நாய்க்கும் அதற்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஆடை அணிவித்து, டிப்ளமோ பட்டம் வழங்கப்பட்டது. அந்த சான்றிதழை ஜஸ்டின் தனது வாயில் கவ்வியபடி பெற்று செல்லும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது.
Seton Hall President Joseph E. Nyre, Ph.D. presents Justin, the service dog for Grace Mariani, of Mahwah, NJ, with a diploma for attending all of Grace's classes at Seton Hall. pic.twitter.com/sZgHD5Fs3X
— Seton Hall (@SetonHall) May 23, 2023
- உடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு தோண்டி எடுக்கப்பட்டது.
- ஏராளமான பொது மக்கள் மற்றும் மிசோரிக்கு சுற்றுலா வந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர்.
மிசோரி:
உலகத்தில் எங்காவது ஒரு இடத்தில் அதிசய சம்பவங்கள் நடைபெறுவது உண்டு. அதுபோல தான் அமெரிக்காவில் உள்ள மிசோரி என்ற சிறிய நகரத்தில் ஒரு அதிசயம் அரங்கேறி உள்ளது.
அங்குள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த வில்ஹல்மினா லான்சாஸ்டர் என்ற கன்னியாஸ்திரி கடந்த 2019-ம் ஆண்டு தனது 95-வது வயதில் மரணம் அடைந்தார்.
அவரது உடல் மரச்சவப் பெட்டியில் வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவரது உடலை வேறு ஒரு இடத்தில் புதைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையொட்டி அவரது உடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு தோண்டி எடுக்கப்பட்டது.
பின்னர் சவப்பெட்டியை திறந்து பார்த்தபோது மற்ற கன்னியாஸ்திரிகள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால் கன்னியாஸ்திரி வில்ஹல்மினா லான்சாஸ்டர் உடல் புதைக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆன போதிலும் அப்படியே கெடாமல் இருந்தது. அவரது தலைமுடி, மூக்கு, உதடு மற்றும் கண்கள் எந்தவித சேதமும் இல்லாமல் இருந்தது.
முகம் சிரித்த முகத்துடன் காட்சிஅளித்தது. பொதுவாக யாராவது இறந்து அவரது உடல் புதைக்கப்பட்டால் சில மாதங்களில் அது எலும்புக் கூடாக மாறிவிடும். ஆனால் அப்படி எதுவும் இல்லாமல் கன்னியாஸ்திரி உடல் இருந்ததால் இந்த தகவல் வேகமாக பரவியது. இதனால் ஏராளமான பொது மக்கள் மற்றும் மிசோரிக்கு சுற்றுலா வந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் கன்னியாஸ்திரி உடலை அதிசயத்துடன் பார்த்தனர். பொதுமக்கள் அவரது பாதத்தை தொட்டு வணங்கினார்கள். இன்று வரை அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது. அதன்பிறகு மீண்டும் அடக்கம் செய்யப்படும். இதனை அந்த நகர மக்கள் இது மிசோரியின் ஒரு அதிசயம் என தெரிவித்து உள்ளனர்.
அவரது உடலுக்கு அருகே ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. தயவு செய்து சகோதரியின் உடலை குறிப்பாக அவரது பாதங்களை தொடுவதில் மென்மையாக இருங்கள் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
- அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் வானில் விண்கலன்களை அனுப்பி பல்வேறு ஆய்வுகளை செய்து வருகிறது.
- புளூட்டோ கோள் மேற்பரப்பில் இதயம் போன்று வடிவிலான பனிப்பாறைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் வானில் விண்கலன்களை அனுப்பி பல்வேறு ஆய்வுகளை செய்து வருகிறது. இந்த விண்கலன்கள் எடுக்கும் வியப்பூட்டும் அரிய வகை புகைப்படங்களை நாசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது.
தற்போது நியூ ஹரிசான்ஸ் விண்கலம் எடுத்த புகைப்படத்தை நாசா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளது. அதில் சூரியனை சுற்றி வரும் 9-வது பெரிய கோளான புளூட்டோ கோள் மேற்பரப்பில் இதயம் போன்று வடிவிலான பனிப்பாறைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதில் மலைகள், பாறைகள், பள்ளத்தாக்கு, பள்ளங்கள் மற்றும் சமவெளி பகுதிகள் அமைந்து இருப்பது போன்று உள்ளது. புளூட்டோவின் மேற்பரப்பு பழுப்பு நிறத்தில் காட்சி அளிக்கிறது. இதனை பார்த்த இன்ஸ்டாகிராம் பயனாளர்கள் இந்த காட்சியை வியந்து பாராட்டி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர் இது அற்புதமான புகைப்படம். இதை படம் எடுத்த நியூ ஹரிசான்ஸ் விண்கலத்துக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
- டெக்சாஸ் மாகாணத்தில் 18 வயது இளைஞர் தனது குடும்பத்தினரை கொன்றதற்காக கைது செய்யப்பட்டார்.
- விசாரணையில், அவர்கள் நரமாமிசம் உண்பவர்கள் என்பதால் பெற்றோர், உடன்பிறந்தவர்களைக் கொன்றேன் என்றார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 18 வயது இளைஞர் ஒருவர் தனது சொந்த குடும்பத்தினரை கொன்றதற்காக கைது செய்யப்பட்டார். சீசர் ஒலால்டே என்ற அந்த இளைஞர் தனது பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோரை கொடூரமான முறையில் கொலை செய்துள்ளான் என போலீசார் தெரிவித்தனர்.
கடந்த செவ்வாயன்று ஒரு நபர் தற்கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அங்கிருந்த சீசர் உள்ளே பலர் இறந்து கிடப்பதாக கூறினார். இதனால் சந்தேகத்தின் பேரில் போலீசார் அவரை கைதுசெய்தனர்.
சீசரின் பெற்றோரான ரூபன் ஒலால்டே, ஐடா கார்சியா, மூத்த சகோதரி லிஸ்பெட் ஒலால்டே மற்றும் இளைய சகோதரர் ஆலிவர் ஒலால்டே ஆகியோரின் உடல்கள் குளியலறையில் மீட்கப்பட்டன. வீட்டின் பல்வேறு இடங்களில் இருந்து அவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று, பின்னர் கழிவறைக்கு இழுத்துச் சென்றிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், தனது குடும்பத்தினர் நரமாமிசம் உண்பவர்கள். அவர்கள் தன்னை சாப்பிட திட்டமிட்டதால் அவர்களை நான் கொன்றேன் என தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- மனித மூளையில் மைக்ரோ சிப்பை பொருத்தி சோதிக்கும் ஆய்வுக்கு அமெரிக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது.
- சோதனையை சில மாதங்களில் நியூராலிங்க் நிறுவனம் தொடங்க உள்ளது.
வாஷிங்டன்:
உலக பணக்காரரான எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம், மனித மூளையில் "சிப்" பொருத்தி கணினியுடன் இணைத்து, நரம்பியல் தொடர்பான நோய்களுக்கு தொழில்நுட்பம் மூலம் மருத்துவ உதவிகளை வழங்க ஆய்வு நடத்தி வருகிறது.
நரம்பியல் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களும், பக்கவாதம், பார்வை குறைபாடு உள்ளவர்களும் ஸ்மார்ட்போன் கணினி போன்ற ஸ்மார்ட் டிவைஸ்களை எளிதாக பயன்படுத்தும் நோக்கத்துடன் அவர்களது மூளையில் மைக்ரோ சிப்பை பொருத்தும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.
இதன் மூலம் கண் பார்வை, பக்கவாதம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சித்து வருகிறது.
இதில் பல கட்ட சோதனையில் குரங்குகளின் மூளையில் 'சிப்'பை பொருத்தி நடத்தப்பட்ட பரிசோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டன.
இது தொர்பான ஆய்வறிக்கைகைளை அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்திடம் நியூராலிங்க் நிறுவனம் சமர்ப்பித்து அடுத்த கட்டமாக மனிதர்களிடம் ஆய்வு மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொண்டது.
இந்த நிலையில் மனித மூளையில் மைக்ரோ சிப்பை பொருத்தி சோதிக்கும் ஆய்வுக்கு அமெரிக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த ஒப்புதலுக்கு அமெரிக்க அரசிடம் நியூராலிங்க் நிறுவனம் பலமுறை விண்ணப்பித்து இருந்தது. ஆனால் அவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது அனுமதி வழங்கி உள்ளது.
இது தொடர்பாக நியூராலிங்க் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, "ஒருநாள் எங்கள் தொழில்நுட்பம் ஏராளமானோருக்கு உதவி செய்ய போவதன் முக்கிய முதல்படிதான் இது.
நியூராலிங்க் குழுவினர் மேற்கொண்ட மிகவும் இன்றியமையாத பணிகளின் காரணமாக அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் இந்த அனுமதியை அளித்திருக்கிறது" என்று கூறியுள்ளது.
மேலும் மூளையில் உள்ள தகவல்களை ப்ளுடூத் மூலம் மின் பொருட்களுக்கு அனுப்புவது குறித்து மேற்கொள்ளப்படும் சோதனையில் பங்கேற்பவர்களை பதிவு செய்யும் பணிகள் குறித்து கூடுதல் தகவல்கள் விரைவில் அளிக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இச்சோதனையை சில மாதங்களில் நியூராலிங்க் நிறுவனம் தொடங்க உள்ளது.






