என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • உடற்பயிற்சி கூடத்தில் மாணவர் வருண் மீது வாலிபர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தினார்.
    • சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வாஷிங்டன்:

    இந்தியாவை சேர்ந்த வருண் (வயது24) என்பவர் அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.

    இந்த நிலையில் அங்குள்ள வால்பரய்சோ நகரில் உள்ள பொது உடற்பயிற்சி கூடத்தில் மாணவர் வருண் மீது வாலிபர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தினார். வருணை கத்தியால் தலை உள்ளிட்ட இடங்களில் சரமாரி குத்தினார்.

    இதில் வருண் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்து தாக்குதல் நடத்திய நபரை பிடித்து கைது செய்தனர். படுகாயம் அடைந்த வருணை மீட்டு போர்ட் வெய்ன் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் வருணின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அவர் உயிர் பிழைப்பதற்கு பூஜ்ஜியத்திலிருந்து 5 சதவீதம் வரை தான் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளன.

    இதற்கிடையே கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் ஜோர்டான் ஆண்ட்ராட் (24) என்பது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அவர் போலீசாரிடம் கூறும்போது, உடற்பயிற்சி கூடத்தில் தெரியாத நபர் மசாஜ் செய்ய கூறினார். இதனால் சற்று வினோதமாக உணர்ந்தேன். எனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தீர்மானித்து நான் அதை தடுப்பதற்கான செயலில் ஈடுபட்டேன் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.
    • ஹமாசுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா தனது ஆதரவை அளித்து வருகிறது.

    வாஷிங்டன்:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 7-ம் தேதி திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

    இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

    ஹமாசுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா தனது ஆதரவை அளித்து வருகிறது.

    இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் நாளை மறுதினம் இஸ்ரேல் செல்கிறார்.

    ஏற்கனவே கடந்த மாதம் 16-ம் தேதி அவர் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டது நினைவிருக்கலாம்.

    • 2022ல் எலான் மஸ்க் $44 பில்லியனுக்கு விலைக்கு வாங்கினார்
    • மஸ்கின் அதிரடி நடவடிக்கைகளால் சந்தை மதிப்பு உயரும் என எதிர்பார்க்கப்பட்டது

    இணையதள பயனர்களின் உரையாடல்களுக்கான பிரபல சமூக வலைதளம், அமெரிக்காவை மையமாக கொண்ட எக்ஸ் (முன்னர், டுவிட்டர்). இந்த வலைதளத்தில் பயனர்கள் தங்கள் கருத்துக்களை செய்தி, புகைப்படம், ஆடியோ, வீடியோ, கோப்பு உட்பட அனைத்து வடிவங்களிலும் பிற பயனர்களுடன் பரிமாறி கொள்ளலாம்.

    2006ல் அமெரிக்காவில் துவங்கப்பட்ட இந்நிறுவனத்தை, கடந்த 2022 அக்டோபர் மாதம், உலகின் நம்பர் 1. கோடீசுவரரும், அமெரிக்காவை சேர்ந்த பிரபல தொழிலதிபருமான எலான் மஸ்க், சுமார் ரூ.3 லட்சத்து 37 ஆயிரம் கோடிக்கு ($44 பில்லியன்) விலைக்கு வாங்கினார்.

    எலான் மஸ்க், 'டுவிட்டர்' வலைதளத்தை விலைக்கு வாங்கியதிலிருந்து அதன் மதிப்பை உயர்த்த பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முன்னதாக அதன் தலைமை செயல் அதிகாரியை மாற்றினார். பிறகு அவர் பல ஊழியர்களை பணி நீக்கம் செய்தார்; ஒரு சிலர் அவரது நடவடிக்கைகள் பிடிக்காமல் ராஜினாமா செய்தனர்.

    தொடர்ந்து மஸ்க், வலைதளத்தின் பெயரை 'எக்ஸ்' என மாற்றினார். எக்ஸ் வலைதள உள்ளடக்கத்தை பயனர்கள் உபயோகப்படுத்த பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார். பல இலவச சேவைகளை நிறுத்திய எலான் மஸ்க், சந்தா முறையில் சேவைகளை மாற்றியமைத்தார்.

    இவரது செயல்முறைகளால் அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு உயரும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், எலான் மஸ்க் விலைக்கு வாங்கி 1 வருடம் கடந்த நிலையில், தற்போது அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ. 1 லட்சத்து 58 ஆயிரம் கோடி ($19 பில்லியன்) என குறைந்துள்ளது. இது அவர் விலைக்கு வாங்கிய விலையை விட பாதிக்கும் கீழே என்பது குறிப்பிடத்தக்கது.

    தனியார் நிறுவனமான எக்ஸை பங்குச்சந்தையில் பதிவு செய்யும் திட்டமிட்டிருந்தார் எலான் மஸ்க். ஆனால், தற்போது அதன் சந்தை மதிப்பு மிகவும் குறைந்திருப்பதால், அதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • ஆம்பர் ரோஸ், 7 வருடங்கள் மைக்கேல் ரிக்கருடன் நட்பில் இருந்தார்
    • சிறைக்கு சென்ற ரிக்கர், 12 நாட்களில் ஜாமீனில் வெளியே வந்தார்

    அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் லின்கன் கவுன்டி பகுதியில் வசித்து வந்தவர்கள் 63 வயதான லெசா ஆர்ம்ஸ்ட்ராங் ரோஸ் (Lesa Armstrong Rose), அவர் கணவர் டெட்டி (Teddy) மற்றும் அவர்களது மகள், ஆம்பர் ரோஸ் (Amber Rose).

    ஆம்பர் ரோஸ், சுமார் 7 வருடங்கள் 36 வயதான மைக்கேல் ஸ்டீவன் ரிக்கர் (Michael Steven Ricker) எனும் ஆண் நண்பருடன் நட்பில் இருந்தார். பிறகு, அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.

    சில மாதங்களுக்கு முன் ரிக்கர், ஆம்பர் ரோஸை தாக்கியுள்ளார். இதனையறிந்த ரோஸின் தந்தை, ரிக்கரை அழைத்து விசாரித்தார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, அது மோதலாக மாறியது. இதையடுத்து ரிக்கர், டெட்டியை துப்பாக்கியால் சுட்டார். இதில் டெட்டி பலத்த காயமடைந்தாலும், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    சம்பவ இடத்தில் இருந்து தப்பிய ரிக்கர், காவல்துறையின் தேடலில் சிக்கினார். கைது செய்யப்பட்ட ரிக்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டாலும், 12 நாட்களில் ஜாமீனில் வெளியே வந்தார்.

    இதையடுத்து சில நாட்களில் ரோஸ் வீட்டிற்கு மீண்டும் ரிக்கர் வந்தார். அப்போது அங்கு ஆம்பர் இல்லை. ஆனால், ஆம்பர் ரோஸின் தாயார் லெஸா இருப்பதை கண்டு அவருடன் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கி கொலை செய்தார். இதில் லெஸா உயிரிழந்தார்.

    இச்சம்பவத்தையடுத்து காவல்துறையினரின் தீவிர தேடலில் மீண்டும் ரிக்கர் சிக்கினார்.

    இந்த துரதிர்ஷ்டவசமான நிகழ்வில் நீதி அமைப்பில் உள்ள சுலபமான வழிகளில் ரிக்கர் போன்றவர் தப்பித்து வந்து மீண்டும் குற்றச்செயலில் ஈடுபடுவதை ஆம்பர் ரோஸ் விமர்சித்துள்ளார்.

    அவர் இது குறித்து கூறியிருப்பதாவது:

    ரிக்கர் எங்கள் குடும்பத்தை தங்கள் குடும்பமாக நினைத்தான். நாங்களும் ரிக்கரை எங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்துத்தான் பழகி வந்தோம். உண்மையில் நான் நீதித்துறையின் மீதுதான் கடுங்கோபத்தில் இருக்கிறேன். ஜாமீனில் வந்தவனால் என் குடும்பத்தினருக்கு ஆபத்து ஏற்படலாம் என தெரிந்தும் காவல்துறை எங்களுக்கு பாதுகாப்பு அளிக்கவில்லை. தேவையற்ற விஷயங்களை குறித்து நீதித்துறை கவலைப்படுகிறது. சிறிதளவு போதை பொருள் வைத்திருப்பவர்கள் எளிதாக ஜாமீனில் வர முடிவதில்லை. ஆனால், கொலைக்குற்றம் சாட்டப்பட்டவன் வெளியே சுலபமாக வந்து மீண்டும் கொலை செய்கிறான்.

    இவ்வாறு ரோஸ் தெரிவித்தார்.

    ஆம்பர் ரோஸின் கருத்துக்களுக்கு சமூக வலைதளங்களில் பல பயனர்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர்.

    • 2017ல் அமெரிக்காவிற்கு உள்ளே வருவதை சில அரபு நாடுகளுக்கு தடை விதித்தார்
    • இஸ்ரேல் அமெரிக்காவின் உற்ற நண்பன் என டிரம்ப் தெரிவித்தார்

    அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது முந்தைய பதவிக்காலத்தில் ஈரான், லிபியா, சோமாலியா, சிரியா, ஏமன் உள்ளிட்ட அரபு நாடுகளிலிருந்து அந்நாட்டு மக்கள் அமெரிக்காவிற்குள் வருவதை தடை செய்யும் விதமாக பல கட்டுப்பாடுகளை புகுத்தினார்.

    ஆனால், டிரம்பிற்கு பிறகு பதவிக்கு வந்த ஜோ பைடன், இந்த உத்திரவுகளை நீக்கி விட்டார்.

    அடுத்த வருடம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. மீண்டும் பதவிக்கு வர மும்முரமாக களமிறங்கியுள்ள முன்னாள் அதிபர் டிரம்ப், நேற்று நிவேடா மாநில லாஸ் வேகாஸ் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குடியரசு கட்சியின் யூதர்களுக்கான கூட்டமைப்பில் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:

    2017ல் நான் ஒரு சில அரபு நாடுகளிலிருந்து மக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதை தடை செய்ய பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்திருந்தது நினைவிருக்கிறதா? 2024 தேர்தலில் வென்றதும் முதல் வேலையாக இந்த கட்டுப்பாடுகளை மீண்டும் கொண்டு வருவேன். பயங்கரவாதிகளை அமெரிக்காவிற்கு வெளியே நிறுத்தி விடுவேன். இஸ்ரேல் அமெரிக்காவின் உற்ற நண்பன். இறுதி வரை இஸ்ரேலுடன் வேறு எந்த நாட்டை காட்டிலும் உறுதியுடன் அமெரிக்கா துணை நிற்கும். இஸ்ரேல்-ஹமாஸ் போர் என்பது மனித நாகரிகத்திற்கும் காட்டுமிராண்டித்தனத்திற்கும் இடையேயான போர்; நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான போர்.

    இவ்வாறு டிரம்ப் கூறினார்.

    • டொனால்ட் ட்ரம்பிற்கு அடுத்த இடத்தில் விவேக் ராமசாமி உள்ளார்
    • மலையேறுதலை போன்ற சவாலான போட்டி இது என பென்ஸ் கூறினார்

    அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

    அமெரிக்காவில், ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் தற்போதைய அதிபராக உள்ளார். வரவிருக்கும் தேர்தலில், அவரை எதிர்த்து குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிட உள்ளார். ஆனால், டொனால்ட் டிரம்ப் மீது பல வழக்குகள் உள்ளதால், அவர் அதிபர் வேட்பாளராக களம் இறங்குவதில் உறுதியற்ற தன்மை நீடிக்கிறது.

    இதனால், அக்கட்சியில் அவருக்கு அடுத்து பல முன்னணி தலைவர்கள் ஆர்வமுடன் நாடு முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி, டொனால்ட் டிரம்பிற்கு அடுத்த இடத்தில் இந்திய வம்சாவளி தொழிலதிபரான விவேக் ராமசாமி முன்னிலை வகிக்கிறார்.

    அந்நாட்டு மரபுப்படி அமெரிக்காவிற்கு உள்ள சிக்கல்கள், அந்நாடு சந்தித்து வரும் சவால்கள், அவற்றுக்கான தங்களது தீர்வுகள் ஆகியவற்றை பல கூட்டங்களில் வேட்பாளர் போட்டியில் இடம்பெறுபவர்கள் விளக்க வேண்டும். இதில் அவர்களுக்கு கிடைக்கும் மக்கள் ஆதரவை பொறுத்து அவர்களுக்கு இறுதி வேட்பாளராக களம் இறங்கும் வாய்ப்பு வழங்கப்படும்.

    குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் (Mike Pence), 2024 அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பி களத்தில் இருந்தார்.

    இந்நிலையில், தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்த மைக் பென்ஸ், அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற குடியரசு கட்சியின் யூதர்களுக்கான கூட்டமைப்பில் கலந்து கொண்டு பேசிய போது, "விரிவான கலந்துரையாடல்கள் மற்றும் சந்திப்புகளுக்கு பிறகு நான் போட்டியிலிருந்து விலகுகிறேன். மலையேறுதலை போன்ற கடினமான சவாலான போட்டி இது என்பது தெரிந்தே இருந்தது. விலகுவதால் எனக்கு எந்த வருத்தமுமில்லை" என அறிவித்துள்ளார்.

    அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி வகித்த போது, அவரது நம்பிக்கைக்குரியவராக கருதப்பட்ட மைக் பென்ஸ், தற்போது போதுமான மக்கள் ஆதரவு இல்லாததாலும், நிதி நெருக்கடியினாலும் இவ்வாறு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் அவரது ஆதரவாளர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

    • விவேக் ராமசாமிக்கு அமெரிக்கா முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது
    • எதிரிக்கு புரிந்த மொழியில் பேச வேண்டும் என்றார் விவேக்

    அமெரிக்காவில் அடுத்த வருடம், அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

    ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடனுக்கு எதிராக குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் களத்தில் உள்ளார். டொனால்ட் டிரம்பின் மீது பல வழக்குகள் உள்ளதால், அவர் வேட்பாளராக நிற்பது உறுதியாகவில்லை. இதனால் அக்கட்சியில் அவருக்கு அடுத்த இடத்தில் களத்தில் உள்ள இந்திய வம்சாவளி தொழிலதிபரான விவேக் ராமசாமி, தீவிரமாக தனக்கென ஆதரவு தேடி பிரச்சாரம் செய்து வருகிறார்.

    இதற்கிடையே பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க, அந்நாட்டின் காசா பகுதியில் இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இப்போரில் இஸ்ரேலை அமெரிக்கா ஆதரிக்கிறது.

    இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில், குடியரசு கட்சியின் யூதர்களுக்கான கூட்டமைப்பில் உரையாற்றிய விவேக் ராமசாமி, இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து பேசினார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    தனது கையில் உள்ள அனைத்து அதிகாரங்களையும், பலத்தையும் பிரயோகித்து ஹமாஸ் அமைப்பினரை இஸ்ரேல் முற்றிலுமாக நசுக்க வேண்டும். இஸ்ரேல் யூதர்களின் நாடு. புனித நோக்கங்களுக்காக, அந்த புனித தலத்தை புனித பரிசாக பெற்றுள்ளனர் யூதர்கள். பலம் எனும் ஒரு மொழிதான் எதிரிகளுக்கு புரியும் என்றால் தன் நாட்டை காக்க இஸ்ரேல் அதனை பிரயோகிக்க தயங்க கூடாது. இரு நாடு தத்துவம் சரிப்படாது என இஸ்ரேல் கருதினால் அதை செயல்படுத்தலாம். பாலஸ்தீனர்களை தங்கள் நாட்டிற்குள் நுழையவும், வசிக்கவும் அரபு நாடுகள் அனுமதிக்க வேண்டும். பாலஸ்தீனர்களை பொறுப்பில் எடுத்து கொள்ள தயங்கி, தங்கள் நாடுகளுக்குள் சேர்க்கவும் மறுத்து, இஸ்ரேலை மட்டும் கண்டிக்கும் வழிமுறையை அரபு நாடுகள் கைவிட வேண்டும். எந்த அரசியல்வாதியும் இந்த உண்மையை பேச விரும்புவதில்லை; ஆனால், நான் பேசுவேன். ஹமாஸ் அமைப்பினரின் 100 முதன்மை தலைவர்களின் தலைக்கு விலை வைத்து மீண்டும் ஒரு "அக்டோபர் 7" சம்பவம் நடைபெறாதவாறு செய்து, தனது நாட்டினருக்கான எதிர்கால எல்லையை பலப்படுத்த இஸ்ரேலால் முடியும் என நான் நம்புகிறேன்.

    இவ்வாறு விவேக் பேசியுள்ளார்.

    காசாவில் ஹமாஸ் அமைப்பினருடனான தங்களது போர் புதிய கட்டத்தை எட்டியுள்ளதாகவும், இனி வான், தரை மற்றும் கடல் என அனைத்து வழியாகவும் தாக்குதலில் ஈடுபட போவதாகவும் இஸ்ரேல் ராணுவ படை தெரிவித்துள்ளது. இப்பின்னணியில் விவேக் ராமசாமியின் இந்த அதிரடி கருத்து அரசியல் விமர்சகர்களால் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

    • கலீல் சவுசா சில மாதங்களுக்கு முன்பு ஒரு லாட்டரி சீட்டு வாங்கினார்.
    • கலீல் சவுசா லாட்டரி டிக்கெட்டை தேடிய போது வீட்டில் உடனடியாக கிடைக்கவில்லை.

    நம்மில் பலர் ஆசையாக வாங்கிய சில பொருட்களை எங்காவது மறந்து வைத்துவிட்டு பின்னர் அதனை தேடி கண்டுபிடிக்க போராடி இருப்போம். அது போன்ற ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அங்குள்ள மாசசூசெட்ஸ் பகுதியை சேர்ந்தவர் கலீல் சவுசா. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு லாட்டரி சீட்டு வாங்கினார். அதனை வீட்டில் எங்கோ வைத்துவிட்டார்.

    இந்நிலையில் சமீபத்தில் தான் அந்த லாட்டரி டிக்கெட்டுக்கு பரிசு அறிவிப்பு நடந்துள்ளது. இதனால் கலீல் சவுசா அந்த டிக்கெட்டை தேடிய போது வீட்டில் உடனடியாக கிடைக்கவில்லை.

    அப்போது தான் அந்த வீட்டின் துப்புரவு பணியாளர் வீட்டை சுத்தம் செய்யும் போது குவளையில் அந்த டிக்கெட் கிடப்பதை பார்த்து அவரிடம் எடுத்து கொடுத்தார். இதனால் கலீல் சவுசா இன்ப அதிர்ச்சி அடைந்தார். அவரிடம் இருந்த டிக்கெட்டுக்கு ஒரு மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.8.34 கோடி) பரிசு கிடைத்துள்ளது.

    இதில் வரிகள் போக அவருக்கு ரூ.5.50 கோடி கிடைக்கும். இதனால் சந்தோஷத்தில் திளைத்த கலீல் சவுசா லாட்டரியில் கிடைத்த பரிசு தொகையில் ஒரு பகுதியை தேவைப்படும் நண்பர்களுக்கு உதவ விரும்புவதாகவும், தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடைகள் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

    • ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடியாக காசாவில் இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது
    • காசா மற்றும் பாலஸ்தீன மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் தீர்மானம் கொண்டு வரப்பட்டது

    ஹமாஸ் தாக்குதலை தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. பெரும்பாலான நாடுகள் காசா மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என குரல் கொடுத்து வருகின்றன.

    ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7-ந்தேதி கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியதால், அரபு நாடுகள் உள்ளிட்டவை இஸ்ரேலுக்கு எதிராக நேரடியாக களம் இறங்க முடியவில்லை. இதனால் ஹமாஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து காசா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல் நடத்தி வருகிறது.

    காசாவில் சுமார் 20 லட்சம் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். பாலஸ்தீன மக்களும் இந்த போரால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் போர் நிறுத்தம் தொடர்பான தீர்மானம் ஐ.நா. சபையில் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது.

    இந்த தீர்மானத்தில், அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாதிகளால் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். பிணைக்கைதிகளை உடனடியாக விடுவிக்க வலியுறுத்த வேண்டும் என அமெரிக்கா ஆதரவுடன் கனடா, தீர்மானத்தில் மாற்றம் கொண்டு முயற்சித்தது. அது நிராகரிக்கப்பட்டது.

    இறுதியாக 193 உறுப்பினர்களை கொண்ட சபையில், தீர்மானத்திற்கு ஆதரவாக 120 பேர் வாக்களித்தனர். 14 பேர் எதிர்த்து வாக்களித்தனர். 45 பேர் கலந்து கொள்ளவில்லை.

    இந்த தீர்மானத்திற்கு ஐ.நா. சபை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் காரணமாக இஸ்ரேல்- ஹமாஸ் இடையில் போர் நிறுத்தம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல் தரைவழி தாக்குதலுக்கு தயாராகி வருகிறது
    • சுமார் 20 லட்சம் மக்கள் காசாவில் தவித்து வருகிறார்கள்

    ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் காசா மீது கடுமையான முறையில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் வரை போர் ஓயாது என இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.

    வான்தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது. இதற்கு முன்னோட்டமாக சில தினங்களாக பீரங்கிகள் மூலமாக காசாவில் சிறுசிறு தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளது.

    இந்த தாக்குதலால் காசாவில் உள்ள சுமார் 20 லட்சம் மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு, மருத்துவ உதவிப்பொருட்கள் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது.

    போர் நிறுத்தத்திற்கு ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன. இந்த நிலையில், காசாவில் பணியாற்றி வந்த உலக சுகாதார மையத்தின் அதிகாரிகள் (Staff), சுகாதார பணியாளர்கள், மனிதாபிமான உதவிகள் செய்யும் பார்ட்னர்கள் ஆகியோர் உடனான தொடர்பை இழந்துவிட்டோம் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.

    காசாவில் உள்ள அனைத்து மக்களையும் உடனடியாக பாதுகாக்க வேண்டும். முழு மனிதாபிமான உதவிகள் கிடைக்கப்பெற செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    அதேபோல் யுனிசெப் தலைவர் ரஸல், "எங்களுடன் பணிபுரியம் சக அதிகாரிகள் உடனான தொடர்பை இழந்து விட்டோம். அவர்கள் பாதுகாப்பு விசயம் எனக்கு மிகவும் கவலை அளிக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

    • டெமன் சானலை லட்சக்கணக்கானவர்கள் பின் தொடர்கிறார்கள்
    • டெமன் மோதியதில் ஜிஎம்சி டிரக், சாலையின் ஓரத்திற்கு தள்ளப்பட்டது

    அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் அட்லான்டிக் கடலை ஒட்டியுள்ள மாநிலம் புளோரிடா (Florida). இதன் தலைநகரம், டல்லஹாசி (Tallahassee)

    இம்மாநிலத்தை சேர்ந்த ஒரு இளைஞர், "ஸ்ட்ரீட் டெமன் பிசி" (Street Demon PC) எனும் புனைப்பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். மிக வேகமாக தனது பைக்கை நெடுஞ்சாலைகளில் ஓட்டி, அதில் சாகசங்களை செய்து காட்டி, அதை நேரிடையாக ஒளிபரப்பு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார் ஸ்ட்ரீட் டெமன். டெமனுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருப்பதால், இவரது சானலை பலர் பின் தொடர்கிறார்கள்.

    இவர், சில தினங்களுக்கு முன் "ஹோண்டா சிபிஆர் 600 ஆர் ஆர்" (Honda CBR 600 RR) அதிவேக சூப்பர் பைக்கில் அம்மாநில அட்லான்டிக் கடற்கரையோரத்தில் உள்ள டேடோனா பீச் (Daytona Beach) பகுதி இன்டர்ஸ்டேட்-95 (Interstate-95) நெடுஞ்சாலையில் சாகசங்கள் செய்து அதை நேரிடையாக தனது யூடியூப் சேனலில் ஒளிபரப்பினார். பைக்கை மணிக்கு 160 கிலோமீட்டருக்கு மேல் வேகத்தில் ஓட்டி, வெறி பிடித்தவரை போல் வேகத்தை அதிகரித்து, சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்களை முந்தி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த "ஜிஎம்சி பிக்அப் ட்ரக்" (GMC Pick-up Truck) ஒன்றின் மீது மோதினார். தாக்குதலின் தீவிரத்தால் சாலையின் வேறு பகுதிக்கு அந்த டிரக் தள்ளப்பட்டது. உடனடியாக கீழே விழாமல் "டெமன்" பைக்கிலிருந்து கையை எடுக்காமல் சிறிது தூரம் சென்றார். அப்போது அவரை கடந்து சென்ற டிரக் அவரது பைக்கின் பக்கவாட்டில் மோதியது.


    இதில் பைக்குடன் தலைகுப்புற கீழே விழுந்தார், டெமன். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினாலும் டெமனுக்கு 20க்கும் மேற்பட்ட எலும்புகள் உடைந்தன. அவரது செயலுக்கு பலர் கண்டனங்கள் தெரிவித்தனர்.




     தனது அதிகாரபூர்வ வலைதளத்தில் பிற வாகன ஓட்டுனர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனத்தை செலுத்திய தனது செயலுக்கு மன்னிப்பு கோரினார் டெமன்.




     


    தமிழ்நாட்டில் சில நாட்களுக்கு முன் யூடியூபர் வாசன் விபத்திற்கு உள்ளானதையும், அவருக்கு ஓட்டுனர் உரிமம் பறிக்கப்பட்டதையும் இதனுடன் தொடர்பு படுத்தி சமூக வலைதளங்களில் பயனர்கள் கருத்து பதிவிடுகின்றனர்.

    • லாட்டரி பரிசு வெல்பவர்கள் 30 சதவீதம் வரி செலுத்த வேண்டும்
    • வென்றவர்களின் தகவல்களை தரும் கடைக்காரர்களுக்கும் கமிஷன் வழங்கினார்

    வடகிழக்கு அமெரிக்காவில் உள்ள மாநிலம் மசாசுசெட்ஸ் (Massachusetts). இதன் தலைநகரம் பாஸ்டன் (Boston).

    1990களின் ஆரம்பத்தில் லெபனான் நாட்டிலிருந்து அமெரிக்காவில் குடியேறி மசாசுசெட்ஸ் மாநிலத்தின் வாடர்டவுன் பகுதியில் வசித்து வந்தவர் 63 வயதான அலி ஜாஃபர் (Ali Jaafar). இவருக்கு யூசெஃப் (Yousef) மற்றும் மொஹமெட் (Mohamed) என இரு மகன்கள் உள்ளனர்.

    அலி செல்போன் பயனர்களுக்காக ஒரு ப்ரீபெய்டு சிம் கார்டு கடை நடத்தி வந்தார். இதன் மூலம் அலிக்கு பலர் அறிமுகமானார்கள்.

    கடந்த 2011ல் பணத்தேவைக்காக அலி ஜாஃபர் ஒரு புதிய திட்டம் தீட்டினார்.

    மசாசுசெட்ஸ் மாநில வருமான துறை சட்டங்களின்படி அம்மாநிலத்தில் லாட்டரி பரிசுச்சீட்டில் பெரும் தொகையை வெல்பவர்கள், சுமார் 30 சதவீதத்திற்கும் மேல் வருமான வரி செலுத்த வேண்டும். இதை தவிர்க்க பரிசை வென்றவர்கள் வழிமுறைகளை தேடி வந்தனர்.

    இதையறிந்த அலி, பரிசுச்சீட்டு வென்றவர்களை தேடிச்சென்று, அந்த பரிசு சீட்டை, வென்ற தொகையை விட குறைவாக கொடுத்து பெற்று கொள்வார். வென்றவர்கள், அரசாங்கத்திற்கு கட்ட வேண்டிய வரித்தொகை சேமிக்கப்படுவதால், இதற்கு சம்மதித்தனர்.

    அந்த பரிசுச்சீட்டை தான் வாங்கியதாக கூறி, சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் காண்பித்து வங்கியின் மூலமாக பரிசுத்தொகையை அலி பெற்று கொள்வார். அத்துடன் தான் பல பரிசுச்சீட்டுகள் வாங்கியதாகவும் அவற்றில் அனைத்திற்கும் பரிசு கிடைக்காமல் நஷ்டம் அடைந்ததாக வருவாய்த்துறைக்கு கணக்கு காட்டி தானும் வரி கட்டாமல் தப்பித்தார்.

    "10 பர்சென்டிங்" (10 Percenting) என அந்நாட்டில் அழைக்கப்படும் இந்த நூதன மோசடியில் உண்மையாக வென்றவர்களுக்கும், பரிசுச்சீட்டு நிறுவனத்திற்கும் ஒரு மறைமுக தரகராக அலி செயல்பட்டார்.

    2011ல் இந்த திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்த அலி, 136 லாட்டரி சீட்டுகளை அந்த வருடம் வென்றதாக காட்டி பணம் பெற்றார். 2012ல், 214 பரிசுச்சீட்டுகளில் வென்றதாக பணம் பெற்றார். 2013ல் தனது இரு மகன்களையும் இத்திட்டத்தில் ஈடுபடுத்தி 867 லாட்டரி டிக்கெட்டுக்கான பரிசுத்தொகையை அலி குடும்பத்தினர் பெற்று கொண்டனர்.

    பரிசுத்தொகை எந்த சீட்டிற்கு விழுந்திருக்கிறது என்பதை கடைக்காரர்கள் அலிக்கு தெரிவிப்பார்கள். இதில் அவர்களுக்கும் ஒரு தொகையை அலி, கமிஷனாக வழங்கினார்.

    அடிக்கடி லாட்டரி பரிசு வெல்லும் அலி குறித்து 2019ல் அம்மாநில லாட்டரி ஆணைய செயல் இயக்குனர் விசாரணை நடத்த உத்தரவிட்டார். அவர்கள் நடத்திய தீவிர விசாரணையில் அலி சிக்கி கொண்டார். இவ்வழக்கில் அவருக்கு 5 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

    இதுவரை அலி குடும்பத்தினர் ரூ.166 கோடி ($20 மில்லியன்) அளவிற்கு மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது. 

    ×