search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ex vice-president"

    • டொனால்ட் ட்ரம்பிற்கு அடுத்த இடத்தில் விவேக் ராமசாமி உள்ளார்
    • மலையேறுதலை போன்ற சவாலான போட்டி இது என பென்ஸ் கூறினார்

    அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

    அமெரிக்காவில், ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் தற்போதைய அதிபராக உள்ளார். வரவிருக்கும் தேர்தலில், அவரை எதிர்த்து குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிட உள்ளார். ஆனால், டொனால்ட் டிரம்ப் மீது பல வழக்குகள் உள்ளதால், அவர் அதிபர் வேட்பாளராக களம் இறங்குவதில் உறுதியற்ற தன்மை நீடிக்கிறது.

    இதனால், அக்கட்சியில் அவருக்கு அடுத்து பல முன்னணி தலைவர்கள் ஆர்வமுடன் நாடு முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி, டொனால்ட் டிரம்பிற்கு அடுத்த இடத்தில் இந்திய வம்சாவளி தொழிலதிபரான விவேக் ராமசாமி முன்னிலை வகிக்கிறார்.

    அந்நாட்டு மரபுப்படி அமெரிக்காவிற்கு உள்ள சிக்கல்கள், அந்நாடு சந்தித்து வரும் சவால்கள், அவற்றுக்கான தங்களது தீர்வுகள் ஆகியவற்றை பல கூட்டங்களில் வேட்பாளர் போட்டியில் இடம்பெறுபவர்கள் விளக்க வேண்டும். இதில் அவர்களுக்கு கிடைக்கும் மக்கள் ஆதரவை பொறுத்து அவர்களுக்கு இறுதி வேட்பாளராக களம் இறங்கும் வாய்ப்பு வழங்கப்படும்.

    குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் (Mike Pence), 2024 அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பி களத்தில் இருந்தார்.

    இந்நிலையில், தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்த மைக் பென்ஸ், அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற குடியரசு கட்சியின் யூதர்களுக்கான கூட்டமைப்பில் கலந்து கொண்டு பேசிய போது, "விரிவான கலந்துரையாடல்கள் மற்றும் சந்திப்புகளுக்கு பிறகு நான் போட்டியிலிருந்து விலகுகிறேன். மலையேறுதலை போன்ற கடினமான சவாலான போட்டி இது என்பது தெரிந்தே இருந்தது. விலகுவதால் எனக்கு எந்த வருத்தமுமில்லை" என அறிவித்துள்ளார்.

    அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி வகித்த போது, அவரது நம்பிக்கைக்குரியவராக கருதப்பட்ட மைக் பென்ஸ், தற்போது போதுமான மக்கள் ஆதரவு இல்லாததாலும், நிதி நெருக்கடியினாலும் இவ்வாறு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் அவரது ஆதரவாளர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

    ×