என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • இந்தியாவில் 10 மாநிலங்களில் மதமாற்ற தடைச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
    • இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் அதிகரித்து வருகிறது என்றார்.

    வாஷிங்டன்:

    2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    இந்தியாவில் 10 மாநிலங்களில் மதமாற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கான தடைச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    சில மாநிலங்களில் கட்டாய மதமாற்றங்களுக்கு எதிராக அபராதம் விதிக்கப்படுகிறது.

    மத சமூகங்களுக்கு தனித்தனி சட்டங்கள் அமைப்பதற்குப் பதிலாக, நாடு முழுவதும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை (யு.சி.சி.) அமல்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி வருகிறார்.

    முஸ்லிம், சீக்கியர், கிறிஸ்தவர் மற்றும் பழங்குடியின தலைவர்கள் மற்றும் சில மாநில அரசு அதிகாரிகள் எதிர்த்தனர்.

    இது நாட்டை இந்து தேசமாக மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதி என்ற அடிப்படையில் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆன்டனி பிளிங்கன் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், இந்தியாவில் மதமாற்ற தடுப்புச் சட்டங்கள், வெறுப்பு பேச்சு மற்றும் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்படுகிறது. சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் அதிகரித்து வருகிறது என தெரிவித்தார்.

    ஏற்கனவே, மனித உரிமைகள் தொடர்பான அறிக்கையிலும் இந்தியாவுக்கு எதிரான கருத்தை அமெரிக்கா கூறியிருந்தது. ஆனால் அந்த அறிக்கையை இந்தியா உடனடியாக நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

    • ஆதரவாளர்கள் அசாஞ்சேவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • அபாயகரமான இடங்களில் பணியாற்றி வருவோர் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியது.

    அமெரிக்க ரகசியங்களை வெளியிட்ட விவகாரத்தில் அந்நாட்டு அரசுடன் ஏற்பட்ட ஒப்ந்தம் காரணமாக விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே நேற்று விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து அவர் ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்றார். அங்கு அவரது ஆதரவாளர்கள் அசாஞ்சேவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    ஜூலியன் அசாஞ்சே சுதந்திரமாக நாடு திரும்பிய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவு துறை அதிகாரி மேத்யூ மில்லர் கருத்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பேசிய அவர், ஜூலியன் அசாஞ்சே பற்றி பேசும் போது அவரது நடவடிக்கைகள் எங்களது கூட்டணியை சேர்ந்தவர்கள் குறிப்பாக ஆப்கனிஸ்தான், ஈராக் என அபாயகரமான இடங்களில் பணியாற்றி வருவோரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியது.

    15 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சம்பவத்தை உலகம் மறந்துவிட்டது. அவற்றை நினைவுகூறும் போது, விக்கிலீக்ஸ் தான் முதன்முதலில் அமெரிக்க ஆவணங்கள், ரகிசய விவரங்கள் உள்ளிட்டவைகளை பொது வெளியில் கசியவிட்டது. அவற்றை உலகமே பார்க்கட்டும் என்று அவ்வாறு செய்தது. இதன் காரணமாக அரசுடன் நேரடி தொடர்பில் இருந்த ஏராளமான அதிகாரிகள் வெளிச்சத்திற்கு வரும் சூழல் ஏற்பட்டது.

    இதைத் தொடர்ந்து விக்கிலீக்ஸ் செய்த சம்பவங்கள் அமெரிக்க தேர்தலில் ரஷிய உளவுத்துறை தலையிட வழிவகுத்தது, என்று தெரிவித்தார். 

    • பள்ளியில் சேர்த்து நன்கு படிக்க வைப்பதாக அவருடைய உறவினர்களிடம் பொய் சொல்லி ஆசை காட்டி சிறுவனை கூட்டி வந்துள்ளனர்.
    • சுமார் 3 ஆண்டுகளாக விடுமுறை எதுமின்றி கொத்தடிமைபோல தம்பதியிடம் அந்த சிறுவன் வேலை பார்த்துள்ளான்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தை சேர்ந்தவர் குல்பீர் கவுர் (வயது 43). இவருடைய மனைவி ஹர்மன்பீரித் கவுர் (31). இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களான இவர்கள் அங்குள்ள நகரில் மளிகை கடை மற்றும் பெட்ரோல் பங்க் நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் இந்தியாவில் இருந்து தன்னுடைய உறவினர் மகனான 18 வயது நிரம்பாத சிறுவனை அமெரிக்கா தம்பதி கடந்த 2018-ம் ஆண்டு அமெரிக்கா அழைத்து வந்துள்ளனர். அவனை இங்கு பள்ளியில் சேர்த்து நன்கு படிக்க வைப்பதாக அவருடைய உறவினர்களிடம் பொய் சொல்லி ஆசை காட்டி சிறுவனை கூட்டி வந்துள்ளனர்.

    அமெரிக்கா வந்தவுடன் அந்த சிறுவனின் பாஸ்போர்ட்டை வலுகட்டாயமாக பிடுங்கி கொண்டு தாங்கள் நிர்வகித்து வந்த பெட்ரோல் பங்க் மற்றும் மளிகை கடையில் வேலை பார்க்க விட்டுள்ளனர். தினமும் 17 மணி நேரம் வேலை, சரியான உணவு கொடுக்காமல் வேலை வாங்கி உள்ளனர்.

    சுமார் 3 ஆண்டுகளாக விடுமுறை எதுமின்றி கொத்தடிமைபோல தம்பதியிடம் அந்த சிறுவன் வேலை பார்த்துள்ளான். வீடியோ கால் மூலம் தனது பெற்றோரிடம் அந்த சிறுவன் பேச முயற்சித்ததையும், தனது மகனை பார்க்க வேண்டும் என அவனுடைய பெற்றோரின் விருப்பத்தையும் ஏதேதோ காரணம் சொல்லி தவிர்த்துள்ளனர்.

    சிறுவனின் பெற்றோர் எப்படியோ நிலைமையை தெரிந்துக்கொண்டு அந்த தம்பதியிடம் இருந்து கடந்த 2021-ம் ஆண்டு தங்களுடைய மகனை மீட்டனர். இதுகுறித்து வர்ஜீனியா போலீசிலும் புகார் கொடுத்தனர். அதன்பேரில் கோர்ட்டு விசாரணை நடந்து வந்தது. அதில் தம்பதி மேல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது.

    இதனயைடுத்து இந்தியாவில் இருந்து சிறுவனை அழைத்து வந்து இங்கு கொத்தடிமைபோல் நடத்திய ஹர்மன்பீரித் கவுருக்கு 11 ஆண்டுகள் 3 மாதமும், அவருடைய கணவர் குல்பீர் கவுருக்கு 7 ஆண்டுகள் 3 மாதமும் சிறை தண்டணை விதித்து கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 1 கோடியே 84 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடாக கொடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    • சிறுநீர் பை அகற்றத்திற்கான அறுவை சிகிச்சை.
    • மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன் வலி நிவாரணிகளை வழங்கினர்.

    அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தை சேர்ந்த நபருக்கு திடீரென தும்மல் ஏற்பட்டபோது அவரது குடல் வெளியே வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    63 வயதான அந்த நபருக்கு 15 நாட்களுக்கு முன்னதாக சிஸ்டெக்டமி என்கிற சிறுநீர் பை அகற்றத்திற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    அடி வயிற்றில் தையல் போட்டிருந்த நிலையில், சில நாட்களுக்கு பிறகு அவை மருத்துவர்களால் அகற்றப்பட்டது.

    இதைதொடர்ந்து, நபர் அவரது குடும்பத்தினருடன் சாப்பிடுவதற்காக உணவகம் ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென தும்மல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, இருமலும் வந்துள்ளது.

    அவர் தும்பிய வேகத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட இடத்தில் இருந்து குடல் வெளியே வந்தது. இதனால், பயந்துபோன நபர் தனது சட்டையால் வயிற்றை மூடிக் கொண்டு ஆம்புலன்சை வரவழைத்தார்.

    மருத்துவ உதவியாளர்கள் விரைவாக வந்து, காயத்தை சரி செய்தனர். அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன் வலி நிவாரணிகளை வழங்கினர்.

    மூன்று சிறுநீரக அறுவைசிகிச்சை நிபுணர்கள், குடல்களை மீண்டும் வயிற்றுக்குள் கவனமாக வைத்து சிறு குடலில் ஏதேனும் காயங்கள் இருக்கிறதா என்று பரிசோதித்தனர்.

    காயங்கள் இல்லாத நிலையில், சம்பந்தப்பட்ட நபருக்கு வெற்றிகரமாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளார்.

    இருப்பினும், தும்மலால் குடல் வெளியேறிய சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆபிரகாமின் 6 அடி உயர மெழுகு சிலையின் தலைபகுதி உருகி கீழே வளைந்துள்ளது.
    • சிலையின் சேதமடைந்த தலைப்பகுதி தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது.

    இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் உட்பட பல நாடுகளில் கடுமையான வெப்பம் நிலவி வருவதால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அமெரிக்காவிலும் வெப்ப அலை தொடர்கிறது. வெப்ப அலையின் தாக்கம் உள்ளூர் மக்கள் மட்டுமல்லாது மெழுகால் செய்யப்பட்ட சிலைகளிலும் காணப்படுகிறது.

    அமெரிக்காவில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக, அமெரிக்காவின் 16-வது ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் மெழுகு சிலை உருகியுள்ளது. ஆபிரகாமின் 6 அடி உயர மெழுகு சிலையின் தலைபகுதி உருகி கீழே வளைந்துள்ளது. இந்த திறந்தவெளி மெழுகு சிலையின் சேதமடைந்த தலைப்பகுதி தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது.


    அமெரிக்காவின் 16-வது குடியரசு தலைவர் ஆபிரகாம் லிங்கன். இவர் அடிமை முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை ஒழிக்க முனைந்தவர்களில் ஒருவர். 1860-ல் மேற்கு மாநிலங்களில் தலைவராக இருந்த இவர் குடியரசுக் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக வெற்றி பெற்றார். அவரை பெருமைப்படுத்தும் வகையில் வாஷிங்டனில் தொடக்கப்பள்ளி வளாகத்தில் 6-அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் ஆபிரகாம் லிங்கனின் மெழுகு சிலை வடிவகைப்பட்டு இருந்தது.

    • அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை 3 மணி நேரமாக தொடர்ந்தது.
    • இதனால் சுதந்திர மனிதனாக நீதிமன்றத்தில் இருந்து ஜூலியன் அசாஞ்சே வெளியில் வந்தார்.

    பிரபல ஆஸ்திரேலிய பத்திரிகையாளராரும் விக்கிலீக்ஸ் இணைய நிறுவனருமான ஜூலியன் அசாஞ்சே கடந்த 2010 ஆம் ஆண்டு ஈராக் மற்றும் ஆப்கனிஸ்தான் போரில் ஈடுபட்ட அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை வெளியிட்டு உண்மைகளை அம்பலப்படுத்தியதன் மூலம் உலக அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியவர் ஆவார்.

     

    இதையடுத்து அவரை தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்க அரசு அறிவித்தது. இதற்கிடையில் பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றில் சிக்கிய அசாஞ்சே கைது செய்யயப்படுவதில் இருந்து தப்பிக்க லண்டனில் உள்ள ஈகுவேடார் அரசின் தூதரகத்தில் தஞ்சமடைந்தார்.

    அசாஞ்சேவுக்கு அடைக்கலம் அளித்து வந்த ஈகுவேடார் அரசு கடந்த 2019 ஆண்டு அதை வாபஸ் பெற்றதை அடுத்து அதுவரை கைதில் இருந்து தப்பித்துவந்த அசாஞ்சேவை பிரிட்டிஷ் போலீசார் கைது செய்து லண்டன் சிறையில் அடைத்தனர். சிறையில் உள்ள அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்கா அரசு பிரிட்டனிடம் கேட்டு வந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு பிரிட்டன் அதற்கு ஒப்புதல் அளித்தது.

    ஆனால் இதை எதிர்த்து அசாஞ்சே தரப்பில் பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால் அமெரிக்காவுக்கு அனுப்பாடாமால் இதுநாள்வரை வரை லண்டன் சிறையிலேயே அசாஞ்சே அடைபட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்து வந்த பிரிட்டன் நீதிமன்றம், அசாஞ்சேவை அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் பட்சத்தில் ராணுவ ரகசியங்களை வெளியிட்ட குற்றத்திற்காக அவருக்கு மரண தண்டனை வழங்கக்கூடாது, குறைந்த பட்ச சிறை தண்டனையே வழங்க வேண்டும் என்ற உத்தரவாதத்தை அமேரிக்காவிடம் கோரியது. அசாஞ்சேவுக்கு ஆதரவாக சர்வதேச சமூகமும் குரல் கொடுத்து வந்தது.

     

    இந்த விவகாரம் இவ்வாறாக புகைந்து வந்த நிலையில் அசாஞ்சே , தன்னை விடுதலை செய்வதாக உத்தரவாதம் அளித்தால் அமெரிக்காவை உளவு பார்த்தது, ராணுவ ரகசியங்களை வெளியிட்டது உள்ளிட்ட குற்றங்களை தான் ஒப்புக்கொள்வதாக தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் ஏற்கப்பட்டதை அடுத்து கடந்த திங்கள் இரவு லண்டன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள அசாஞ்சே இன்று அமெரிக்காவுக்கு கிளம்பினார்.

     

    இதையடுத்து அமெரிக்காவின் பசிபிக் தீவுகள் பிராந்தியமான சைபன் நீதிமன்றத்தில் அசாஞ்சே ஆஜரான நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை 3 மணி நேரமாக தொடர்ந்தது. அப்போது, அமரிக்காவை உளவு பார்த்தது, ராணுவ ரகசியங்களை கசியவிட்டது உள்ளிட்டவற்றை நீதிபதியின்முன் ஒப்புக்கொண்ட அசாஞ்சே, அமெரிக்க அரசியல் அமைப்புச் சட்டத்திலேயே, பேசுவதற்கான சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் தான் செய்தது எப்படி குற்றமாகும் என்று வாதிட்டார்.

    விசாரணையின் இறுதியில் அசாஞ்சே குற்றவாளிதான் என்று தீர்ப்பளித்த நீதிபதி ரமானோ ஏற்கனவே லண்டன் சிறையில் தண்டனைக் காலத்தை அனுபவித்ததால் அவரை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார். இதனால் சுதந்திர மனிதனாக நீதிமன்றத்தில் இருந்து ஜூலியன் அசாஞ்சே வெளியில் வந்தார்.

     

    கடந்த 14 வருடங்களாக தாய் நாடான ஆஸ்திரேலியாவை விட்டு பிரிந்து இன்னல்களுக்கு ஆளான 52 வயதாகும் ஜூலியன் அசாஞ்சே, அமெரிக்காவின் சைபனிலிருந்து சிறப்பு விமானம் மூலம் ஆஸ்திரேலியா திரும்புகிறார். அவரது வருகையை ஆஸ்திரேலிய அரசும் பொதுமக்களும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். அவரது விடுதலைக்காகவும் பத்திரிக்கை சுதந்திரத்துக்காகவும் உலகம் முழுவதும் போராடிய அவரது அபிமானிகள் ஆனந்தக் கண்ணீர் வடிக்கின்றனர். 

    • புளோரிடாவின் தம்பா நகரில் உள்ள ஒரு ஓட்டலில் பூலியோ தங்கி இருந்தார்.
    • ஓட்டலின் கார் நிறுத்தம் அருகே மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர் பூலியோ என்ற சார்லஸ் ஜோன்ஸ் (வயது 26). பிரபல ராப் பாடகரான இவரை சமூகவலைதளத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். இவர் சமீபத்தில் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடினார். இதற்காக புளோரிடாவின் தம்பா நகரில் உள்ள ஒரு ஓட்டலில் அவர் தங்கி இருந்தார்.

    இந்தநிலையில் ஓட்டலின் கார் நிறுத்தம் அருகே மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பூலியோ ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். மேலும் 3 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல ராப் பாடகரான பூலியோ கொல்லப்பட்ட சம்பவம் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

    • பட்டமளிப்பு விழாவில் 105 வயதாகும் கின்னி ஹிஸ்லோப் மிடுக்காக நடந்து வந்து தனது முதுகலைப் பட்டதை வாங்கிக்கொண்டார்
    • 83 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தனது ஆய்வை வெற்றிகரமாக முடித்த கின்னிக்கு முதுகலைப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

    சாதனைகளை நிகழ்த்துவதற்கும் பிடித்த விஷயங்களை செய்வதற்கும் வயது ஒரு தடையில்லை என்பதற்கு உலகம் முழுவதும் பல்வேறு உதாரணங்கள் உள்ளன. சமீபத்தில் உலகின் வயதான ரயில் ஓட்டுநர் என்ற பெருமையை அமெரிக்கவைச் சேர்ந்த 81 வயது மூதாட்டி ஒருவர் பெற்றார். இந்நிலையில் தனது 105 வது அகவையில் உள்ள மூதாட்டி ஒருவர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் வாங்கியுள்ளது அனைவரையும் வாயடைக்கச் செய்துள்ளது.

    அமேரிக்காவில் ஸ்டேன்போர்ட் பலக்லைக்கழகத்தில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் 105 வயதாகும் கின்னி ஹிஸ்லோப் என்னும் அந்த மூதாட்டி மிடுக்காக நடந்து வந்து தனது முதுகலைப் பட்டதை வாங்கிக்கொண்டார். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் 1940 ஆம் ஆண்டு கின்னி தனது இளங்கலைப் பட்டத்தை ஸ்டேன்போர்டில் பெற்றார். அதைத்தொடர்ந்து தனது முதுகலைப் படிப்பை பயிலத்தொடங்கிய கின்னி ஆய்வில் ஈடுபட்டிருந்தார்.

    ஆனால் அந்த சமயத்தில் கின்னியின் காதலன் ஜார்ஜ் இரண்டாம் உலகப்போரில் பணியாற்ற செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் கின்னியின் படிப்பு பாதியில் தடைபட்டது. எனவே தற்போது 83 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தனது ஆய்வை வெற்றிகரமாக முடித்த கின்னிக்கு முதுகலைப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. பட்டத்தை வாங்கிக்கொண்ட கின்னி இதுகுறித்து பேசுகையில், அடக் கடவுளே , இதற்காக நான் வெகு காலமாக காத்திருந்தேன். முயற்சி செய்தால் எல்லோரும் மேல் படிப்பில் வெற்றி பெறலாம் என்று தெரிவித்தார். 

     

    • இந்த சோதனை தொடர்பான அறிக்கையை கடந்த ஜூன் 20 ஆம் தேதி நாசா வெளியிட்டுள்ளது.
    • இந்த ஆய்வானது நாசாவின் DART (Double Asteroid Redirection Test) எனப்படும் அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் நடத்தப்பட்ட முதல் ஆய்வாகும்.

    பூமிக்கு அதிக ஆபத்து விளைவிக்கக்கூடும் என்று என்று அஞ்சப்படும் விண்கல் ஒன்று  பூமியைத் தாக்க 72% சதவீத வாய்ப்புகள் இருபதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த விண்கல் பூமியில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பை தடுக்க இன்னும் நாம் தயாராகாவில்லை என்று நாசா எச்சரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

     

    கடந்த ஏப்ரல் மாதம் நாசாவால் ஒருங்கிணைக்கப்பட்டு, மாரிலாந்தில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் ஆய்வுகூடத்தில் நடத்தப்பட்ட, கிரகங்களின் பாதுகாப்பு தொடர்பான சோதனையில், பூமிக்கு விண்வெளியிலிருந்து ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டது. இந்த சோதனை தொடர்பான அறிக்கையை கடந்த ஜூன் 20 ஆம் தேதி நாசா வெளியிட்டுள்ளது.

     

     

    அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, 'உலகுக்கு வருங்காலங்களில் விண்கற்களால் அதிக ஆபத்து இருந்து வரும் நிலையில் அதிலிருந்து தற்காத்துக்கொள்ள நாம் தயாராக இருக்கிறோமா என்பதற்கு இந்த ஆராய்ச்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இந்த ஆய்வில் இதுவரை மனிதர்களால் கண்டறியப்படாத விண்கலம் ஒன்று பூமியை நோக்கி நகர்வதாகவும் இன்னும் 14 வருடகங்களில் துல்லியமாக 2038 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி பூமியை தாக்கி அதிக சேதங்களை ஏற்படுத்த 72 சதவீதம் வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விண்கலின் எடை, அளவு மற்றும் தன்மைகள் குறித்து ஆய்வில் தெரிந்துகொள்ள முடியவில்லை' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    இந்த ஆய்வானது நாசாவின் DART (Double Asteroid Redirection Test) எனப்படும் அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் நடத்தப்பட்ட முதல் ஆய்வாகும். விண்கற்களால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பூமியைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட தொழில்நுட்பமே DART. இதற்கிடையில், விண்கற்களை தொலைவில் இருந்து பார்க்க NEO Surveyor (Near-Earth Object Surveyor). எனப்படும் இன்பிராரெட் தொலைநோக்கியை நாசா உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது. 

     

    • எத்தனை நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள் மற்றும் துப்பாக்கி சூடு நடத்தியதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் போலீசார் தரப்பில் இருந்து கூறப்படவில்லை.
    • அடுத்தடுத்து நிகழும் துப்பாக்கி சூடு சம்பவங்களால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

    கடந்த சில வாரங்களாக அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்காவின் தெற்கு ஆர்கன்சாஸ் மாகாணத்தில் உள்ள போர்டைஸ் என்ற பகுதியில் சூப்பர் மார்க்கெட்டில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்த நிலையில், தாக்குதலை நடத்தியவர் யார், துப்பாக்கி சூடு கடைக்கு வெளியே நடந்ததா அல்லது உள்ளே நடந்ததா உள்ளிட்ட விவரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை.

    சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூடு நடந்த ஒரு நாள் கழித்து கென்டக்கி லூயிஸ்வில்லியில் உள்ள நைட் கிளப்பிற்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். 7 பேர் காயமடைந்தனர்.

    சனிக்கிழமை நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயங்களுடன் இருவர் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது ஒருவர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. மேலும் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

    மேலும் எத்தனை நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள் மற்றும் துப்பாக்கி சூடு நடத்தியதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் போலீசார் தரப்பில் இருந்து கூறப்படவில்லை.

    அடுத்தடுத்து நிகழும் துப்பாக்கி சூடு சம்பவங்களால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

    • நீங்கள் கல்லூரியில் பட்டம் பெற்றீர்கள் என்றால், உங்கள் படிப்பின் ஒரு பகுதியாக நீங்கள் தானாகவே கிரீன் கார்டை பெற வேண்டும்.
    • முன்னிலை கல்லுரிகளில் பட்டப்படிப்பு முடித்தவர்கள், இங்கு தங்கியிருந்து கம்பெனி தொடங்க வேண்டும் என திட்டமிடுவார்கள்.

    அமெரிக்காவில் படிக்க செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்களுக்கு கிரீன் கார்டு எளிதாக கிடைத்துவிடாது. கிரீன் கார்டு பெற்றால் அமெரிக்காவில் நிரந்தரமாக வசிக்க முடியும். ஏற்கனவே அமெரிக்காவின் அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப் குடியுரிமை விவகாரத்தில் மிகவும் கண்டிப்பாக இருந்தார். வெளிநாட்டினருக்கு விசா வழங்குவது விசயத்தில் மற்ற தலைவர்களுக்கு எதிரான கொள்கை கொண்டவராக இருந்தார்.

    வெளிநாட்டைச் சேர்ந்த பணியாளர்கள் அவர்களுடைய நாட்டிற்கு திரும்பி செல்லக்கூடிய நிலை ஏற்படும் சூழ்நிலையான முடிவுகளை எதிர்கொண்டார். அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே... என்ற கொள்கை கொண்டவர்.

    தற்போது மீண்டும் குடியரசு கட்சி சார்பில் அதிபர் பதவியில் போட்டியிட இருக்கிறார். வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் குடியுரிமை தொடர்பான தனது முந்தைய பேச்சில் இருந்து பின்வாங்கியுள்ளார்.

    போட்காஸ்ட் ஒன்றில் பேசிய டொனால்டு டிரம்ப் இங்கு கல்லூரிகளில் பட்டம் பெறும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில் "நீங்கள் கல்லூரியில் பட்டம் பெற்றீர்கள் என்றால், உங்கள் படிப்பின் ஒரு பகுதியாக நீங்கள் தானாகவே கிரீன் கார்டை பெற வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த நாட்டில் தங்குவதற்கு அவசியமானது கிரீன் கார்டு. இது ஜூனியர் கல்லூரிகளுக்கும் இது அடங்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், "முன்னிலை கல்லுரிகள் அல்லது கல்லூரிகளில் பட்டப்படிப்பு முடித்தவர்கள், இங்கு தங்கியிருந்து கம்பெனி தொடங்க வேண்டும் என திட்டமிடுவார்கள். இந்த திட்டத்தை அவர்களால் செயல்படுத்த முடியவில்லை என்றால், அமெரிக்காவில் படித்துவிட்டு இந்தியா திரும்புவார்கள். சீனா திரும்புவார்கள்.

    இதே அடிப்படையிலான கம்பெனிகளை அவர்களுடைய இடத்தில் தொடங்குவார்கள். அவர்கள் பில்லியனர்களாகி ஆயிரக்கணக்கான மக்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள். அதை இங்கே செய்யலாம்" என்றார்.

    • துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • தாக்குதலை நடத்தியவர் யார், துப்பாக்கி சூடு கடைக்கு வெளியே நடந்ததா அல்லது உள்ளே நடந்ததா உள்ளிட்ட விவரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் தெற்கு ஆர்கன்சாஸ் மாகாணத்தில் உள்ள போர்டைஸ் என்ற பகுதியில் சூப்பர் மார்க்கெட்டில் மர்ம நபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தினார். இதனால் கடையில் இருந்த பொதுமக்கள், ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து அலறியடித்து ஓடினர். பலர் கடையில் இருந்த அறைகளில் பதுங்கி கொண்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியானார்கள். 10 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவரை பிடிக்க முயன்றனர். அப்போது போலீசார் சுட்டதில் அந்த நபர் பலத்த காயமடைந்தார்.

    துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த தாக்குதலை நடத்தியவர் யார், துப்பாக்கி சூடு கடைக்கு வெளியே நடந்ததா அல்லது உள்ளே நடந்ததா உள்ளிட்ட விவரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை.

    போலீசார் கூறும்போது, துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பலத்த காயம் அடைந்துள்ளார். அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றனர். ஆர்கன்சாஸ் கவர்னர் சாரா ஹக்கபி சாண்டர்ஸ் கூறும்போது, போர்டைசில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் கவலை அடைந்துள்ளேன். இதில் விரைந்து செயல்பட்ட அதிகாரிகளுக்கும் மற்றவர்களுக்கும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்த கொடூரமான சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நான் பிரார்த்தனை செய்கிறேன் என்றார்.

    அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×