என் மலர்tooltip icon

    பாகிஸ்தான்

    • அடுத்தடுத்து 4 தடவை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் பாகிஸ்தான் நிலை குலைந்துள்ளது.
    • பாகிஸ்தான் நாட்டை பொறுத்தவரை அண்டை நாடான ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த ஏராளமான அகதிகள் தங்கி உள்ளனர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் சமீப காலமாக பயங்கரவாதிகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்தடுத்து 4 தடவை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் பாகிஸ்தான் நிலை குலைந்துள்ளது. பயங்கரவாதிகள் அகதிகள் போர்வையில் பாகிஸ்தானில் தங்கி இருந்து இந்த தாக்குதலில் ஈடுபடலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    பாகிஸ்தான் நாட்டை பொறுத்தவரை அண்டை நாடான ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த ஏராளமான அகதிகள் தங்கி உள்ளனர். இதையடுத்து ஆவணங்கள் எதுவும் இல்லாமல் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் ஆப்கானிஸ்தான் அகதிகளை வெளியேற்றும் முயற்சியில் பாகிஸ்தான் அரசு தீவிரமாக இறங்கி உள்ளது.

    • பாகிஸ்தானை சேர்ந்த யூ-டியூபரான நவுமன் ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
    • வீடியோ வைரலாகி ஆயிரக்கணக்கான லைக்குகளை குவித்துள்ளது.

    சமூக வலைதளங்களில் தினந்தோறும் ஏராளமான வீடியோக்கள் பகிரப்பட்டாலும், அவற்றில் சில வீடியோக்கள் பயனர்களை மிகவும் கவர்ந்து விடுகிறது. சில வீடியோக்கள் இது எப்படி சாத்தியம் என ஆச்சரியம் கலந்த சந்தேகங்களையும் ஏற்படுத்துகிறது.

    இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த யூ-டியூபரான நவுமன் ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ஒரு சிறுவன் சங்கிலியால் கட்டப்பட்ட புலியை இழுத்து செல்வது போன்ற காட்சிகள் பயனர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

    வீடியோ வைரலாகி ஆயிரக்கணக்கான லைக்குகளை குவித்துள்ளது. சில பயனர்கள் சிறுவனின் துணிச்சலை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டனர். அதே நேரம் பயனர்கள் பலரும் சிறுவனின் செயலை விமர்சித்தும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • பலுசிஸ்தான், கைபர் பக்துன்க்வாவில் 17 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்
    • இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில், விமானப்படை பயிற்சி தளம் மீது தாக்குதல்

    பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் விமானப்படைக்கு சொந்தமான மியான்வாலி பயிற்சி தளம் உள்ளது. பாதுகாப்பு நிறைந்த இந்த தளத்தின் மீது, இன்று காலை ஆயுதமேந்திய பயங்கரவாத குழு திடீரென தாக்குதல் நடத்தியது.

    இதை சற்றும் எதிர்பார்க்காத நிலையில், பணியில் இருந் பாதுகாப்புப்படை வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். இதில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். மூன்று பேர் சுற்றி வளைக்கப்பட்டனர்.

    இருந்த போதிலும், மூன்று விமானங்கள் சேதமடைந்ததாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், பாகிஸ்தான் பாதுகாப்புப்படை நாட்டில் இருந்து பயங்கரவாதத்தை அகற்றுவதில் உறுதியாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே தொடர்ந்து நடைபெற்ற சண்டையில் 9 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

    பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வாவில் சுமார் 17 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சில மணி நேரத்திற்குள் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

    • சம்பவம் தற்கொலைப்படை தாக்குதலா அல்லது வெடிகுண்டு வைக்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை.
    • ஆப்கானிஸ்தானின் எல்லையில் உள்ள சட்டமற்ற பழங்குடி மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ளது.

    வடமேற்கு பாகிஸ்தானில் தேரா இஸ்மாயில் கான் நகரில் காவல்துறையை குறிவைத்து வெடி குண்டு வீசப்பட்டது. இதில், 5 பேர் கொல்லப்பட்டனர். 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    அப்பகுதியில், போலீசார் ரோந்து செல்லும் பாதையில் வெடிகுண்டு வெடித்ததாக போலீஸ் அதிகாரி முகமது அட்னான் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், இந்த சம்பவம் தற்கொலைப்படை தாக்குதலா அல்லது வெடிகுண்டு வைக்கப்பட்டதா என்பது உடனடியாக தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

    டேரா இஸ்மாயில் கான் நகரம் ஆப்கானிஸ்தானின் எல்லையில் உள்ள சட்டமற்ற பழங்குடி மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ளது. இது நீண்ட காலமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இஸ்லாமிய போராளிகளின் தாயகமாக உள்ளது.

    • பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் பிப்ரவரி 8-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
    • இதையடுத்து பொதுத்தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான முஸ்லிம் லீக் கட்சி ஆட்சி நடந்தது. பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் முடிவடைவதற்கு 3 நாட்களுக்கு முன் கடந்த ஆகஸ்டு மாதம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.

    பாகிஸ்தான் அரசியலமைப்பு சட்டத்தின்படி அடுத்த பொதுத்தேர்தல் 90 நாட்களுக்குள் நடத்தவேண்டும். ஆனால் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை நிறைவடையாததால் தேர்தல் தேதி அறிவிப்பு தாமதமாகியது.

    இதற்கிடையில், தேர்தலை விரைந்து நடத்தக் கோரி பல்வேறு தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பான வழக்கு தலைமை நீதிபதி காசிபேஸ் இசா தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் வக்கீல் சஜீல் ஸ்வாதி ஆஜரானார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 29-ம் தேதிக்குள் தொகுதி மறுவரையறை பணிகள் முடிவடைந்து விடும். எனவே பிப்ரவரி மாதம் 11-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என சுப்ரீம் கோர்ட்டில் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனால் தேர்தல் தேதி குழப்பம் முடிவுக்கு வந்தது.

    சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் தேதி அறிவித்த சில மணி நேரங்களில் பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் 3 நாட்களுக்கு முன் 8-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வியை பாகிஸ்தான் தேர்தல் ஆணையர் சிக்கந்தர் சுல்தான் மற்றும் தேர்தல் குழுவினர் சந்தித்து பொதுதேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கு பிறகு பிப்ரவரி 8-ம் தேதி தேர்தல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுத்தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    • ஆகஸ்ட் வரை ஷாபாஸ் ஷெரீப் தலைமையில் இடைக்கால அரசாங்கம் நடைபெற்றது
    • தேர்தலை விரைவாக நடத்த உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கலானது

    கடந்த 2022 ஏப்ரலில், பாகிஸ்தானில் அதுவரை நடைபெற்று வந்த பிரதமர் இம்ரான்கானின் ஆட்சி கூட்டணி கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் முடிவுக்கு வந்தது.

    இதையடுத்து முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் தலைமையில் ஒரு இடைக்கால அரசாங்கம் பொறுப்பேற்றது.

    இவ்வருடம் ஆகஸ்ட் 10 அன்று அந்நாட்டின் பாராளுமன்றத்தை, அதன் காலம் முடிவடையும் 3 நாட்களுக்கு முன்பாகவே, பிரதமர் ஷாபாஸ் அளித்த பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி அரிஃப் ஆல்வி கலைத்தார்.

    அந்நாட்டு அரசியலமைப்பு சட்டத்தின்படி அன்றிலிருந்து 90 நாட்களில் (நவம்பர் 7) பொதுத்தேர்தல் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், அந்நாட்டின் புதிய மக்கள்தொகை விகிதாசார தரவுகளுக்கு ஏற்ப புதிய பாராளுமன்ற எல்லைகளை நிர்ணயிக்கும் மறுசீரமைப்பில், தேர்தல் ஆணையம் தீவிரமாக இருந்ததால், தேர்தல் தள்ளி போடப்பட்டது.

    இதனையடுத்து, பாராளுமன்றத்தின் 336 இடங்களுக்கு தேர்தலை விரைவாக நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்நிலையில், இன்று உச்ச நீதிமன்றத்தில் தங்கள் பதில் மனுவில், அந்நாட்டின் தேர்தல் ஆணைய வழக்கறிஞர், தேர்தல் தேதியை தெரிவித்தார். இதன்படி, வரும் 2024 பிப்ரவரி 11 அன்று அந்நாட்டில் பாராளுமன்றத்திற்கான பொதுதேர்தல் நடைபெறும்.

    அந்நாட்டில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நடத்தும் தெஹ்ரிக்-ஏ-இன்ஸாஃப், முன்னாள் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் நடத்தும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக், முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் பிலவல் பூட்டோ ஜர்தாரி நடத்தும் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை தேர்தல் களத்தில் உள்ளன.

    • வாழ்வாதாரத்திற்காக ஆப்கானியர்கள் பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்தனர்
    • வெளியேற பாகிஸ்தான் விதித்த கெடு நவம்பர் 1-உடன் முடிவுக்கு வந்தது

    1979ல் ஆப்கானிஸ்தானை ரஷியா ஆக்கிரமித்தது. 1979லிருந்து 1989 வரை அமெரிக்க உதவியுடன் ஆப்கானிஸ்தான் ரஷியாவை எதிர்த்து போரிட்டு வந்தது. பல வருடங்கள் நடைபெற்ற இந்த போரின் விளைவாக பொருளாதாரம் சீர்குலைந்து அந்நாட்டில் வேலைவாய்ப்புகள் குறைந்ததால், வாழ்வாதார காரணங்களுக்காக அங்கிருந்து பலர் வெளியேறி பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்தனர்.

    கடந்த 2021ல் ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினர் ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து மேலும் பலர் அந்நாட்டிலிருந்து அண்டை நாடான பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்தனர்.

    இந்நிலையில், சமீப காலமாக பாகிஸ்தானின் பொருளாதார நிலை மிகப்பெரும் சரிவை கண்டுள்ளது. இதனால் அந்நாட்டிற்கு கடன் வழங்கும் உலக நிதி அமைப்புகள் அரசின் செலவினங்களை கட்டுப்படுத்தும்படி நிர்ப்பந்தப்படுத்தி வருகின்றன.

    இதன் தொடர்ச்சியாக தங்கள் நாட்டில் தஞ்சமடைந்துள்ள ஆப்கானிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் பாகிஸ்தான் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. நேற்றுடன் தங்கள் நாட்டிலிருந்து வெளியேற ஆப்கானியர்களுக்கு பாகிஸ்தான் விதித்திருந்த காலக்கெடு முடிவடைந்தது.

    எந்த ஆவணங்களும் இல்லாமல் பாகிஸ்தானில் தங்கியுள்ளவர்கள் முதற்கட்டமாக வெளியேற்றப்படுவார்கள் என்றும் அகதிகளுக்கான அட்டை வைத்துள்ளவர்கள் தங்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது. ஆனால், அட்டை வைத்துள்ளவர்களும் குறி வைக்கப்படுவதாக பல அகதிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    கடந்த 2 மாத காலத்தில் சுமார் 2 லட்சம் ஆப்கானியர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேறி விட்டனர்.

    வெளியேற்றப்படும் ஆப்கானியர்களில் பெரும்பாலானோர் கூலிப்பணிகளில் ஈடுபட்டு வறுமையில் வாழ்ந்து வந்ததால், அவர்களிடம் சேமிப்புகளோ, வேறு பொருட்களோ இல்லாமல் கேள்விக்குறியாகும் எதிர்காலத்துடன் டிரக்குகளில் அடைக்கப்பட்டு ஆப்கானிஸ்தான் எல்லையில் கொண்டு விடப்படுகின்றனர். அவர்களின் கண்ணீர் கதைகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    பெண்களுக்கு கடுமையான கோட்பாடுகளை வலியுறுத்தும் தலிபான் ஆட்சி நடைபெறுவதால் அங்கு செல்ல அஞ்சும் மக்கள், பாகிஸ்தானில் வசிக்க இயலாமல் செய்வதறியாது தவிக்கின்றனர்.

    புலம் பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகள் என சுமார் 4 லட்சம் ஆப்கானியர் பாகிஸ்தானில் வசிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    பாகிஸ்தான் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தலிபான் அரசாங்கம் கோரிக்கை வைத்தது. ஆனால், 40 ஆண்டு காலம் மனிதாபிமான அடிப்படையில் அகதிகளுக்கு இடம் கொடுத்து விட்டதாகவும், இனியும் அதை தொடர முடியாது எனவும் பாகிஸ்தான் திட்டவட்டமாக பதிலளித்தது.

    • பாகிஸ்தானுக்காக விளையாடிய 2-வது இந்து கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா.
    • சுழற்பந்து வீச்சாளரான கனேரியா 15 முறை 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்.

    லாகூர்:

    பாகிஸ்தானுக்காக விளையாடிய 2-வது இந்து கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா. பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருந்த கனேரியா, 15 முறை 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்.

    இந்நிலையில், டேனிஷ் கனேரியா தனது சக வீரரான ஷாகித் அப்ரிடி மீது குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

    பாகிஸ்தான் அணிக்காக டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்திய 4-வது வீரர் நான் தான். கவுண்டி கிரிக்கெட்டிலும் சிறப்பாகவே செயல்பட்டேன். இன்சமாம்-உல்-ஹக், சோயப் அக்தர் போன்ற வீரர்களின் ஆதரவு எனக்கு இருந்தது. ஒரு கேப்டனாக என்னை ஆதரித்த ஒரே நபர் இன்சமாம் தான்.

    ஆனால் ஷாகித் அப்ரிடி மற்றும் பிற வீரர்கள் என்னை மிகவும் பாகுபாடோடு நடத்தினார்கள். அவர்கள் என்னுடன் அமர்ந்து உணவு கூட உண்டதில்லை. மதமாற்றம் செய்வது குறித்து என்னிடம் ஷாகித் அப்ரிடி அதிகமாக பேசுவார். என்னை கட்டாயப்படுத்தி இஸ்லாத்திற்கு மாற்ற முயன்றார். ஆனால் இன்சமாம் உல் ஹக் அப்படி ஒருபோதும் கூறியதில்லை.

    மேலும், கனேரியா தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ஷாகித் அப்ரிடி முன்பு பேசியிருந்த வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அந்த வீடியோவில், ஷாகித் அப்ரிடியின் மகள் வீட்டிலிருக்கும் டி.வி.க்கு இந்து பூஜையான ஆரத்தி எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது மகள் இந்து பூஜை செய்ததற்காக டி.வி.யை உடைத்ததை குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

    • பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி முதல் 2 ஆட்டத்தில் வெற்றி பெற்றது.
    • தற்போது அந்த அணி தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.

    லாகூர்:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியின் நிலைமை மோசமாக இருக்கிறது.

    முதல் 2 ஆட்டத்தில் வெற்றி பெற்ற அந்த அணி, தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோற்றது.

    சென்னையில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் முதல் முறையாக தோல்வியை தழுவியது. இந்தத் தோல்வியால் எஞ்சிய 4 ஆட்டங்களில் வெற்றி பெறவேண்டிய கட்டாயம் பாகிஸ்தானுக்கு உள்ளது.

    ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 282 ரன் குவித்தும் தோற்றது அந்த அணிக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. மோசமான பந்து வீச்சு, பீல்டிங் இதற்கு காரணமாக அமைந்தது.

    இந்நிலையில், இந்த தோல்வியால் கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாமை நீக்க வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் போர்க் கொடி தூக்கியுள்ளனர்.

    இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது:-

    வாசிம் அக்ரம்: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக பாகிஸ்தான் வீரர்கள் பீல்டிங் செய்த விதம் மிகவும் மோசமாக இருந்தது. 282 ரன் என்பது நல்ல ஸ்கோராகும். பந்துவீச்சு மிகவும் சராசரியாகவே இருந்தது. கடந்த ஒரு ஆண்டாகவே பாகிஸ்தான் வீரர்களுக்கு உடல் தகுதி தேர்வு மேற்கொள்ளவில்லை. நவீன கிரிக்கெட் உலகில் நீங்கள் முழு உடல் தகுதியுடன் இல்லையென்றால் கேட்ச் பிடிப்பது எப்படி? பவுண்டரியை எப்படி தடுக்க முடியும்?

    அக்யூப் ஜாவித்: பாபர் அசாமை கேப்டன் பதவியில் இருந்து நீக்கவேண்டும். அவருக்கு பதிலாக ஷகின் ஷா அப்ரிடியை டி 20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான பாகிஸ்தான் கேப்டனாக நியமிக்க வேண்டும். அணியின் எதிர்காலத்துக்கு இது நல்லது. பாபர் அசாம் தன்னை ஒரு சிறந்த கேப்டனாக நிரூபிக்க தவறிவிட்டார்.

    மிஸ்பா-உல்-ஹக்: பாபர் அசாசம் அணியை வழிநடத்துவது மிகவும் சாதாரணமாக இருந்தது. அவரின் பீல்டிங் வியூகம், பந்து வீச்சாளர்களுக்கு அவர் கொடுக்கும் விதம் ஏதோ புதிதாக கேப்டன் பதவியில் இருப்பவர் மேற்கொள்வது போல் இருந்தது. ஹாரிஸ் ரவூப்புக்கு பவர் பிளேயில் பந்துவீச கொடுத்ததால் ஒரு சில பவுண்டரிகளால் அவரது நம்பிக்கை உடைந்துவிட்டது. இதுவும் தவறான முடிவாகும்.

    ரமீஸ் ராஜா, ரஷீத் லத்தீப், முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், சோயிப் அக்தர், மொயின்கான் உள்ளிட்ட முன்னாள் வீரர்களும் பாகிஸ்தான் அணியின் மோசமான ஆட்டத்தையும், கேப்டன் பாபர் அசாமையும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

    • லண்டன் சென்ற நவாஸ் சுமார் 4 வருடங்கள் அங்கேயே வசித்து வந்தார்
    • அவரை மீண்டும் பிரதமராக்க அவர் கட்சியினர் தீவிரமாக செயலாற்றுகின்றனர்

    பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்.

    இவர் கடந்த 2018ல், "அவென்ஃபீல்ட் பிராபர்டீஸ்" (Avenfield Properties) எனும் வழக்கில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அந்நாட்டு பஞ்சாப் நீதிமன்றம், 10 வருட சிறை தண்டனையும், இவ்வழக்கில் தேசிய பொறுப்புக்கூறல் பணியகத்துடன் (National Accountability Bureau) ஒத்துழைக்காதற்காக 1 வருட சிறை தண்டனை என மொத்தம் 11 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி உத்தரவிட்டிருந்தது. அதே வருடம் அல்-அசிசியா எக்கு தொழிற்சாலை ஊழல் வழக்கில் 7 வருட சிறை தண்டனையும் அவருக்கு வழங்கப்பட்டது.

    ஆனால் 2019ல், மருத்துவ சிகிச்சை பெற வெளிநாடு செல்ல வேண்டி அனுமதி கேட்ட கோரிக்கை ஏற்கப்பட்டு அவரது தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து அவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு சிகிச்சைக்காக சென்றார். அப்போதிலிருந்து நவாஸ் ஷெரீப் அங்கேயே வசித்து வந்தார்.

    சுமார் 4 வருடங்கள் கழித்து நவாஸ் ஷெரீப், கடந்த சனிக்கிழமை பாகிஸ்தானுக்கு திரும்பினார். அடுத்த வருடம் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அவரை முன்னிறுத்த அவரது கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று, அவருக்கான தண்டனையை செயலாக்குவதை அரசியலமைப்பு சட்டத்தின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பாகிஸ்தானின் காபந்து அரசாங்க கேபினெட் நிறுத்தி வைத்துள்ளதாக அந்நாட்டின் செய்தி ஒலிபரப்பு துறை அமைச்சர் ஆமிர் மிர் தெரிவித்துள்ளார்.

    இது நவாஸ் ஷெரீப்பின் கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

    • பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது.
    • அங்கு பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நவாஸ் ஷெரீப் சொந்த நாடு திரும்பியுள்ளார்.

    லாகூர்:

    பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப். இவர் கடந்த 4 ஆண்டுக்கு முன் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி லண்டனில் குடியேறினார். இதற்கிடையே வாடகை விமானம் மூலம் நவாஸ் ஷெரீப் சொந்த நாடு திரும்பினார்.

    பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. பொருளாதார சிக்கலில் தவித்து வரும் நிலையிலும், பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையிலும் நவாஸ் ஷெரீப் சொந்த நாடு திரும்பியுள்ளார்.

    இந்நிலையில், பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் லாகூரில் நடந்த பேரணியில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    பல வருடங்களுக்குப் பிறகு இன்று உங்களைச் சந்திக்கிறேன், ஆனால் உங்களுடனான எனது அன்பு உறவும் அதேதான். இந்த உறவில் எந்த வித்தியாசமும் இல்லை.

    இந்தியாவின் அணுகுண்டு சோதனைக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்க விரும்பியபோது, வெளிநாட்டு அரசாங்கங்கள் பெரும் அழுத்தங்களைக் கொடுத்தன.

    அணு ஆயுத சோதனை நடத்தாமல் இருப்பதற்காக முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் நமக்கு 5 பில்லியன் டாலர் தருவதாக கூறினார்.

    ஆனால் அவற்றையும் மீறி 1998-ம் ஆண்டு நாம் அணு ஆயுத சோதனையை நடத்தி இந்தியாவின் அணு ஆயுத சோதனைக்கு தகுந்த பதிலடி கொடுத்தோம் என தெரிவித்தார்.

    • 2019-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு சென்ற நவாஸ் ஷெரீப் அதன்பின் நாடு திரும்பவில்லை
    • ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் சொந்த நாடு திரும்பியுள்ளார்

    பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப். இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி லண்டனில் குடியேறினார். இந்த நிலையில் இன்று வாடகை விமானம் மூலம் சொந்த நாடு திரும்பியுள்ளார்.

    73 வயதாகும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் தலைவரான ஷெரீப் துபாயில் இருந்து இஸ்லாமாபாத் வந்தடைந்தார். அவருடன் அவரது குடும்ப உறுப்பினர்கள், மூத்த கட்சித் தலைவர்கள், நண்பர்கள் உடன் வந்தனர்.

    முன்னதாக, பாகிஸ்தான் நீதிமன்றம் நவாஸ் ஷெரீப்புக்கு பல்வேறு ஊழல் வழக்குகளில் சிறைத் தண்டனை விதித்தது. சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல கோர்ட்டு ஜாமின் வழங்கியது. இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு சென்ற நவாஸ் ஷெரீப், அங்கு சிகிச்சை பெற்றார். ஜாமின் காலம் முடிந்த பிறகும் அவர் பாகிஸ்தான் திரும்பவில்லை. 2019-ம் ஆண்டு முதல் லண்டனிலேயே தங்கிவிட்டார்.

    இதற்கிடையே இந்த ஆண்டு தொடக்கத்தில் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டது. நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஷெபாஸ் ஷெரீப் பிரதமர் ஆனார். இதையடுத்து நவாஸ் ஷெரீப் லண்டனில் இருந்து பாகிஸ்தானுக்கு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டது. ஷெபாஸ் ஷெரீப் கூறும்போது, "நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நவாஸ் ஷெரீப் பிரதமராக பொறுப்பேற்பார்" என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. பொருளாதார சிக்கலில் பாகிஸ்தான் தவித்து வரும் நிலையிலும், பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையிலும் நவாஸ் ஷெரீப் சொந்த நாடு திரும்பியுள்ளார்.

    ×