என் மலர்
உலகம்
- ஹமாஸ் அமைப்பினர் காசாவில் உள்ள சுரங்க பதுங்கு குழிக்குள் உள்ளனர்.
- இஸ்ரேல் படைகளை எதிர்த்து ஹமாஸ் படையினரும் போரிட்டு வருகின்றனர்.
காசா:
இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையே நடந்து வரும் சண்டை 3 வாரங்களை தாண்டி நீடித்து வருகிறது.இந்த போரில் இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,400 பேர் பலியானார்கள்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் கடுமையான தாக்குதல் நடத்தியது. இதில் காசாவில் 3,324 குழந்தைகள் உள்பட 8ஆயிரம் பேர் உயிர் இழந்து விட்டனர்.குண்டு வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் காசாவில் பல கட்டிடங்கள் உருக்குலைந்து விட்டது.
இதுவரை வான் மற்றும் கடல் வழியாக குண்டுகளை வீசி வந்த இஸ்ரேல் ராணுவ படையினர் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தரை வழி தாக்குதலையும் நடத்தி வருகின்றது. காசாவை முற்றுகையிட்டுள்ள இஸ்ரேல் படையினர் பீரங்கி வண்டிகளுடன் நகருக்குள் ஊடுருவி கடுமையான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹமாஸ் அமைப்பினர் காசாவில் உள்ள சுரங்க பதுங்கு குழிக்குள் உள்ளனர். இந்த இலக்குகளை குறி வைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுகளை வீசி வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 450-க்கும் மேற்பட்ட ஹமாஸ் அமைப்பினரின் பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த தொடர் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாக தெரிகிறது. இஸ்ரேல் படைகளை எதிர்த்து ஹமாஸ் படையினரும் போரிட்டு வருகின்றனர். அவர்கள் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
வடமேற்கு காசா பகுதியில் எங்கள் போராளிகள் இஸ்ரேல் படையுடன் எந்திர துப்பாக்கி மற்றும் பீரங்கிகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் மூலம் எதிர் தாக்குதல் நடத்தி வருவதாக ஹமாஸ் படை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் காசாவில் உள்ள மிகப்பெரிய ஆஸ்பத்திரியில் ஹமாஸ் படையினர் தங்களின் ரகசிய தளம் அமைத்துள்ளதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது. இது தொடர்பான சில புகைப்படங்களையும் இஸ்ரேல் வெளியிட்டது. இந்த ஆஸ்பத்திரியில் தான் உயிருக்கு பயந்து 12 ஆயிரம் பொதுமக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இதனால் இந்த ஆஸ்பத்திரி அருகே உள்ள ஹமாஸ் இலக்குகளை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் போர் விமானங்கள் இங்கு தொடர்ந்து குண்டுகளை வீசி வருவதால் ஆஸ்பத்திரியில் பதுங்கி இருக்கும் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.
போர் தீவிரம் அடைந்துள்ளதால் 12 ஆயிரம் பேரையும் உடனடியாக ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறும்படி உத்தரவிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
- ரஷிய விமான நிலைய சம்பவம் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது
- ஹமாஸ் கட்டுப்பாட்டில் காசா இருக்க கூடாது என்றார் வால்டர்ஸ்
இஸ்ரேல்-ஹமாஸ் போர் 23-வது நாளாக தீவிரமடைந்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேல் ஆதரவு நிலையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, ரஷியாவில் உள்ள இஸ்லாமியர்கள் பெருமளவில் வாழும் டஜெஸ்டான் (Dagestan) பகுதியில் உள்ள விமான நிலையத்தில், இஸ்ரேலில் இருந்து வந்த விமானத்திலிருந்து இறங்கி கொண்டிருந்த பயணிகளில் யூதர்களை தேடி சென்ற ஒரு கும்பல், அவர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தியது. பாஸ்போர்ட் விவரங்களை சரிபார்த்து பயணிகளில் யூதர்கள் உள்ளனரா என அந்த கும்பல் தேடிய வீடியோ காட்சிகள் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து ரஷியாவில் உள்ள தன் நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த ரஷியாவை இஸ்ரேல் கோரியுள்ளது.
இந்நிலையில், இஸ்ரேலுக்கான இங்கிலாந்தின் தூதர் சைமன் வால்டர்ஸ் (Simon Walters), ராணுவ வானொலிக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
காசா பகுதி ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருக்க கூடாது. இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஹமாஸை இஸ்ரேல் வெல்ல வேண்டும். ஆனால், இஸ்ரேல் போரில் கடைபிடிக்க வேண்டிய மரபுகளை மீறக்கூடாது. உலகம் முழுவதும் உள்ள யூதர்கள் மீது தாக்குதல் நடைபெறுவது கவலை அளிக்க கூடிய விஷயம். யூத-எதிர்ப்பு குறித்து இங்கிலாந்து மிகவும் வருந்துகிறது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், போரை நிறுத்த கோரியும் நடக்கும் போராட்டங்களில் யூதர்களுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பபட்டது நல்லதல்ல. இங்கிலாந்தில் உள்ள யூதர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு ஆகியவை குறித்து இங்கிலாந்து தனிப்பட்ட கவனம் செலுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- காசா பகுதியில் இஸ்ரேலின் தொடர் தாக்குதல் தீவிரமடைந்து வருகிறது
- பேட்ரியாட், அமெரிக்க ராணுவ தளவாடங்களில் அதி நவீன தொழில்நுட்பம் வாய்ந்தது
ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க, இஸ்ரேல் பாலஸ்தீன காசா பகுதியில் அவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல், தங்கள் நாட்டு எல்லைக்குள்ளும் விரைவில் பரவலாம் என ஜோர்டான் அஞ்சுகிறது. இதனால், தனது நட்பு நாடான அமெரிக்காவின் உதவியை ஜோர்டான் கோரியுள்ளது.
"அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் எங்கள் நாட்டின் வழியாக இஸ்ரேலுக்கு ராணுவ தளவாடங்களையும், உபகரணங்களையும் கடத்துவதாக சமூக வலைதளங்களில் வரும் செய்திகளில் உண்மையில்லை. அதே சமயம், எங்கள் நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதை முறியடிக்க அமெரிக்காவின் பேட்ரியாட் (Patriot) ஏவுகணைகளை எங்கள் நாட்டு எல்லையில் நிலைநிறுத்தி உதவுமாறு அமெரிக்காவை கோரியுள்ளோம்" என இது குறித்து ஜோர்டான் நாட்டு ராணுவ செய்தித்தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் முஸ்தஃபா ஹியாரி கூறினார்.
அமெரிக்காவின் நட்பு நாடுகளின் விருப்பமான ராணுவ தளவாடங்களில், அதி நவீன தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட பேட்ரியாட் ஏவுகணைக்கு எப்போதும் முதலிடம் உண்டு.
சிரியா மற்றும் ஈரானில் இருந்து பயங்கரவாதிகள் ஜோர்டான் நாட்டிற்குள் நுழைவதை தடுக்க கடந்த 2011ல் இருந்து ஜோர்டானுக்கு அமெரிக்கா உதவி புரிந்து வருகிறது. அமெரிக்க ராணுவ நிதியுதவியை பெருமளவில் பெறும் நாடுகளில் ஜோர்டானும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
- புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த விமானம் விபத்தில் சிக்கியது.
- விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
ரியோ பிரான்சோ:
பிரேசிலின் அமேசானாஸ் மாநிலத்தில் உள்ள என்விரா என்ற நகரத்துக்கு சிறிய ரக விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் ஒரு குழந்தை உள்பட 12 பேர் பயணம் செய்தனர்.
புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த விமானம் விபத்தில் சிக்கியது. அங்குள்ள ஏக்கர் மாநிலத்தின் தலைநகரான ரியோபிரான்சிகோ விமான நிலையத்தின் அருகில் அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த ஒரு குழந்தை உள்பட 12 பேரும் பலியாகி விட்டனர். விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரேசிலில் கடந்த 2 மாதங்களில் நடந்த 2- வது விமான விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் நடந்த விமான விபத்தில் 12 பயணிகள் மற்றும் 2 விமான ஊழியர்கள் பலியானார்கள்.
- போரில் அப்பாவி பொதுமக்கள் தங்கள் உயிர்களை இழந்து வருகின்றனர்.
- பொதுமக்களின் பாதுகாப்பு என்பது முதன்மையானது.
வாஷிங்டன்:
காசா மீது நடத்தி வரும் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என இஸ்ரேலுக்கு பல உலக நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால் அதனை நிராகரித்த இஸ்ரேல் தனது போரை தீவிரப்படுத்தி உள்ளது. இந்த போரில் அப்பாவி பொதுமக்கள் தங்கள் உயிர்களை இழந்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்க அதிபர் ஜோபைடன் நேற்று தொலைபேசியில் பேசினார். அப்போது ஜோபைடன் அவரிடம் காசாவில் உள்ள பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய மனிதாபிமான உதவியை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என்றும் அங்குள்ள அப்பாவி பொதுமக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ஐ.நா பொதுச்செயலாளர் ஆண்டோரியோ குட்டரெஸ் நேபாளத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் இறந்த 10 நேபாள மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். பொதுமக்களின் பாதுகாப்பு என்பது முதன்மையானது.
மனித உயிர்களை பாதுகாக்க வேண்டும். மனிதாபிமான உதவிகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று போர் விதிகள் கூறுகின்றன. அந்த விதிகளை யாருக்காகவும் மாற்ற முடியாது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோர் காசாவில் உள்ள மக்களுக்கு உதவிட உலக நாடுகள் முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
- காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதால், பாலஸ்தீன ஆதரவாளர்கள் ஆத்திரம்
- இஸ்ரேலியர்கள் மற்றும் யூதர்கள் வருகை தந்துள்ளனரா என பாஸ்போர்ட் மூலம் சரிபார்ப்பு
ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் நாட்டில் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதனால் இஸ்ரேல் ராணுவம் காசா மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பாலஸ்தீனர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாலஸ்தீனர்கள் தாக்கப்படுவதற்கு எதிராக பல்வேறு நாடுகளில் உள்ள, பாலஸ்தீன ஆதரவாளர்கள் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ரஷியாவில் உள்ள டகேஸ்டன் பிராந்தியத்தின் தலைநகர் மகாசகலா விமான நிலையத்திற்கு நேற்றிரவு இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையத்தில் இருந்து, ரஷியாவின் ரெட் விங்ஸ் விமானம் வந்தடைந்தது.
இதில் நூற்றுக்கும் அதிகமான பயணிகள் இருந்தனர். ஏற்கனவே இஸ்ரேல் மீது கோபத்தில் இருந்த சிலர், கும்பலாக விமான நிலையத்திற்குள் புகுந்தனர். விமானத்தை தரையிறக்க எதிர்ப்பு தெரிவித்தனர். பாலஸ்தீன கொடியுடன் விமான ஓடுதளத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறை மற்றும் விமான நிலைய அதிகாரிகள் கார்களை முற்றுகையிட்டனர். விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளை பிடித்து, அவர்களுடைய பாஸ்போர்ட்களை சரிபார்த்தனர். அப்போது இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவரா? யூத மதத்தைச் சேர்ந்தவர்களா? என பார்த்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
திடீரென கும்பல் ஒன்று விமான நிலையத்திற்குள் புகுந்ததால், பணியாளர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை. சிறிது நேரம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இந்த நிகழ்வால் சிலர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
உடனடியாக விமான நிலையம் மூடப்பட்டது. பின்னர் ஓடுதளத்தில் இருந்து கும்பல் வெளியேற்றப்பட்டனர். எனினும், நவம்பர் 6-ந்தேதி வரை இந்த விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து வரும் விமானங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி வெளியானதும், இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ''போராட்டக்காரர்களிடம் இருந்து இஸ்ரேல் மக்களை ரஷியா அதிகாரிகள் பாதுகாப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
டகேஸ்டன் பிராந்தியம் இஸ்லாமியர் நிறைந்ததாகும்.
- தற்போது இயல்பு நிலைக்கு திரும்பினாலும் கொரோனா குறித்த அச்சம் மக்களிடம் இன்னமும் உள்ளது.
- 341 வகையான பூச்சிகளில் இருந்து எடுக்கப்பட்ட 682 மாதிரிகளில் வைரஸ்களை அடையாளம் கண்டுள்ளனர்.
கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரசின் தாக்கம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்திய கொரோனாவால் லட்சக்கணக்கான வீடுகளில் மரண ஓலம் கேட்டது. ஏராளமானோர் உயிரிழந்தனர், கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.
2-வது அலை, 3-வது அலை என அலை அலையாய் வந்து அச்சுறுத்திய கொரோனா பின்னர் படிப்படியாக கட்டுக்குள் வந்தது. எனினும் அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மக்கள் மீளவில்லை.
தற்போது இயல்பு நிலைக்கு திரும்பினாலும் கொரோனா குறித்த அச்சம் மக்களிடம் இன்னமும் உள்ளது.
இந்த நிலையில் மற்றொரு அதிர்ச்சி தகவலை சீன விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். தெற்கு சீனாவில் அமைந்துள்ள வெப்பமண்டல தீவான ஹைனானில் இதுவரை கண்டிராத 8 வைரஸ்களை சீனாவின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வை சீன மருத்துவ அறிவியல் அகாடமி மற்றும் பீக்கிங் யூனியன் மருத்துவக் கல்லூரியின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர். இந்த வைரஸ் இனங்கள் பெருகினால் மனிதர்களைத் தாக்கும் அபாயம் உள்ளது என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு காரணமான சார்ஸ்-கோவி-2 உடன் தொடர்புடைய வைரசும் இதில் அடங்கும். 341 வகையான பூச்சிகளில் இருந்து எடுக்கப்பட்ட 682 மாதிரிகளில் இந்த வைரஸ்களை அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
இதுகுறித்து விஞ்ஞானி ஒருவர் கூறும்போது "ஹைனானில் வசிக்கும் கொறித்துண்ணி பூச்சிகளிடமிருந்து 700-க்கும் மேற்பட்ட மாதிரிகளை நாங்கள் ஆய்வு செய்தோம், மேலும் 8 வைரஸ்களைக் கண்டறிந்தோம். வைரஸ்களில் ஒன்று, கொரோனா வைரஸின் அதே குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த வைரஸ்கள் கொறித்துண்ணி பூச்சிகளில் காணப்பட்டன, இந்த வைரஸ் எப்போதாவது பரவத்தொடங்கினால் மனிதர்களை அதிகமாக பாதிக்கும் வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தார்
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ்களில், ஒன்று கோவிஎச்.எம்.யு-1 எனப்படும் புதிய கொரோனா வைரஸ் என அடையாளம் காணப்பட்டது. இது கொரோனாவுக்கு காரணமான அதே குழுவைச் சேர்ந்தது. கூடுதலாக, பல புதிய நோய்க்கிருமிகள் வெவ்வேறு வைரஸ் வகைகளில் கண்டறியப்பட்டன. விஞ்ஞானிகள் கண்டுபிடித்த வைரஸ்களில் மஞ்சள் காய்ச்சல் மற்றும் டெங்கு போன்ற வைரஸ்களுடன் தொடர்புடைய இரண்டு புதிய பூச்சி வைரஸ்கள், ஒரு புதிய ஆஸ்ட்ரோவைரஸ், இது வயிற்றுப் பூச்சிகள் போன்ற தொற்றுநோய்களை ஏற்படுத்துவதாக அறியப்படு கிறது. 2 புதிய பார்வோ வைரஸ்கள், இது காய்ச்சலைப் போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கும். 2 புதிய பாப்பிலோமா வைரஸ்கள், அவை பிறப்புறுப்பு மருக்கள் மற்றும் மனிதர்களில் சில புற்றுநோய்கள் போன்ற நிலைமைகளுடன் தொடர்புடைய வைரஸ்கள். ராட்சத எலி மற்றும் சிக்கிம் எலி ஆகிய 2 எலி இனங்களில் புதிய பூச்சி வைரஸ்கள் மற்றும் பார்வோ வைரஸ்கள் இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
- ஆம்பர் ரோஸ், 7 வருடங்கள் மைக்கேல் ரிக்கருடன் நட்பில் இருந்தார்
- சிறைக்கு சென்ற ரிக்கர், 12 நாட்களில் ஜாமீனில் வெளியே வந்தார்
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் லின்கன் கவுன்டி பகுதியில் வசித்து வந்தவர்கள் 63 வயதான லெசா ஆர்ம்ஸ்ட்ராங் ரோஸ் (Lesa Armstrong Rose), அவர் கணவர் டெட்டி (Teddy) மற்றும் அவர்களது மகள், ஆம்பர் ரோஸ் (Amber Rose).
ஆம்பர் ரோஸ், சுமார் 7 வருடங்கள் 36 வயதான மைக்கேல் ஸ்டீவன் ரிக்கர் (Michael Steven Ricker) எனும் ஆண் நண்பருடன் நட்பில் இருந்தார். பிறகு, அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.
சில மாதங்களுக்கு முன் ரிக்கர், ஆம்பர் ரோஸை தாக்கியுள்ளார். இதனையறிந்த ரோஸின் தந்தை, ரிக்கரை அழைத்து விசாரித்தார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, அது மோதலாக மாறியது. இதையடுத்து ரிக்கர், டெட்டியை துப்பாக்கியால் சுட்டார். இதில் டெட்டி பலத்த காயமடைந்தாலும், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
சம்பவ இடத்தில் இருந்து தப்பிய ரிக்கர், காவல்துறையின் தேடலில் சிக்கினார். கைது செய்யப்பட்ட ரிக்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டாலும், 12 நாட்களில் ஜாமீனில் வெளியே வந்தார்.
இதையடுத்து சில நாட்களில் ரோஸ் வீட்டிற்கு மீண்டும் ரிக்கர் வந்தார். அப்போது அங்கு ஆம்பர் இல்லை. ஆனால், ஆம்பர் ரோஸின் தாயார் லெஸா இருப்பதை கண்டு அவருடன் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கி கொலை செய்தார். இதில் லெஸா உயிரிழந்தார்.
இச்சம்பவத்தையடுத்து காவல்துறையினரின் தீவிர தேடலில் மீண்டும் ரிக்கர் சிக்கினார்.
இந்த துரதிர்ஷ்டவசமான நிகழ்வில் நீதி அமைப்பில் உள்ள சுலபமான வழிகளில் ரிக்கர் போன்றவர் தப்பித்து வந்து மீண்டும் குற்றச்செயலில் ஈடுபடுவதை ஆம்பர் ரோஸ் விமர்சித்துள்ளார்.
அவர் இது குறித்து கூறியிருப்பதாவது:
ரிக்கர் எங்கள் குடும்பத்தை தங்கள் குடும்பமாக நினைத்தான். நாங்களும் ரிக்கரை எங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்துத்தான் பழகி வந்தோம். உண்மையில் நான் நீதித்துறையின் மீதுதான் கடுங்கோபத்தில் இருக்கிறேன். ஜாமீனில் வந்தவனால் என் குடும்பத்தினருக்கு ஆபத்து ஏற்படலாம் என தெரிந்தும் காவல்துறை எங்களுக்கு பாதுகாப்பு அளிக்கவில்லை. தேவையற்ற விஷயங்களை குறித்து நீதித்துறை கவலைப்படுகிறது. சிறிதளவு போதை பொருள் வைத்திருப்பவர்கள் எளிதாக ஜாமீனில் வர முடிவதில்லை. ஆனால், கொலைக்குற்றம் சாட்டப்பட்டவன் வெளியே சுலபமாக வந்து மீண்டும் கொலை செய்கிறான்.
இவ்வாறு ரோஸ் தெரிவித்தார்.
ஆம்பர் ரோஸின் கருத்துக்களுக்கு சமூக வலைதளங்களில் பல பயனர்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர்.
- இப்போரில் இதுவரை 110 பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டனர்
- ஹமாஸ் அமைப்பினரை தேடும் போது இஸ்ரேல் ராணவத்தின் மீது தாக்குதல் நடைபெற்றது
அக்டோபர் 7 அன்று இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே தொடங்கிய போர் தீவிரமடைந்துள்ளது. இதுவரை பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் 110 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், 29லிருந்து 31 வரை வயதுடைய 3 பேர் இன்று அதிகாலை நேரத்தில் பாலஸ்தீனத்தின் ரமல்லா பகுதியின் வடமேற்கிலுள்ள பெய்ட் ரிமா, நப்லு பகுதியில் உள்ள அஸ்கர் அகதிகள் முகாம் மற்றும் வடக்கே உள்ள டுபாஸ் நகர் ஆகிய 3 இடங்களில் இஸ்ரேல் ராணுவ படையினரால் கொல்லப்பட்டனர்.
மூன்று இடங்களிலும் ஹமாஸ் அமைப்பினரை தேடும் முயற்சியில் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டு வந்தது. இதில் மறைவிடங்களில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் ராணுவத்தினர் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்கினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் இந்த மூவரும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் சுகாதார துறை அறிவித்திருக்கிறது.
கடந்த 1967ல் இஸ்ரேல்-அரேபிய போர் நடைபெற்ற போது மேற்கு கரை பகுதியை இஸ்ரேல் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. அந்த காலகட்டத்திலிருந்து பாலஸ்தீன போராளிகளை தேடி இஸ்ரேல் வேட்டையாடி வருவது தற்போது வரை தொடர்கதையாகி வருகிறது.
- 2017ல் அமெரிக்காவிற்கு உள்ளே வருவதை சில அரபு நாடுகளுக்கு தடை விதித்தார்
- இஸ்ரேல் அமெரிக்காவின் உற்ற நண்பன் என டிரம்ப் தெரிவித்தார்
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது முந்தைய பதவிக்காலத்தில் ஈரான், லிபியா, சோமாலியா, சிரியா, ஏமன் உள்ளிட்ட அரபு நாடுகளிலிருந்து அந்நாட்டு மக்கள் அமெரிக்காவிற்குள் வருவதை தடை செய்யும் விதமாக பல கட்டுப்பாடுகளை புகுத்தினார்.
ஆனால், டிரம்பிற்கு பிறகு பதவிக்கு வந்த ஜோ பைடன், இந்த உத்திரவுகளை நீக்கி விட்டார்.
அடுத்த வருடம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. மீண்டும் பதவிக்கு வர மும்முரமாக களமிறங்கியுள்ள முன்னாள் அதிபர் டிரம்ப், நேற்று நிவேடா மாநில லாஸ் வேகாஸ் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குடியரசு கட்சியின் யூதர்களுக்கான கூட்டமைப்பில் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
2017ல் நான் ஒரு சில அரபு நாடுகளிலிருந்து மக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதை தடை செய்ய பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்திருந்தது நினைவிருக்கிறதா? 2024 தேர்தலில் வென்றதும் முதல் வேலையாக இந்த கட்டுப்பாடுகளை மீண்டும் கொண்டு வருவேன். பயங்கரவாதிகளை அமெரிக்காவிற்கு வெளியே நிறுத்தி விடுவேன். இஸ்ரேல் அமெரிக்காவின் உற்ற நண்பன். இறுதி வரை இஸ்ரேலுடன் வேறு எந்த நாட்டை காட்டிலும் உறுதியுடன் அமெரிக்கா துணை நிற்கும். இஸ்ரேல்-ஹமாஸ் போர் என்பது மனித நாகரிகத்திற்கும் காட்டுமிராண்டித்தனத்திற்கும் இடையேயான போர்; நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான போர்.
இவ்வாறு டிரம்ப் கூறினார்.
- டொனால்ட் ட்ரம்பிற்கு அடுத்த இடத்தில் விவேக் ராமசாமி உள்ளார்
- மலையேறுதலை போன்ற சவாலான போட்டி இது என பென்ஸ் கூறினார்
அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
அமெரிக்காவில், ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் தற்போதைய அதிபராக உள்ளார். வரவிருக்கும் தேர்தலில், அவரை எதிர்த்து குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிட உள்ளார். ஆனால், டொனால்ட் டிரம்ப் மீது பல வழக்குகள் உள்ளதால், அவர் அதிபர் வேட்பாளராக களம் இறங்குவதில் உறுதியற்ற தன்மை நீடிக்கிறது.
இதனால், அக்கட்சியில் அவருக்கு அடுத்து பல முன்னணி தலைவர்கள் ஆர்வமுடன் நாடு முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி, டொனால்ட் டிரம்பிற்கு அடுத்த இடத்தில் இந்திய வம்சாவளி தொழிலதிபரான விவேக் ராமசாமி முன்னிலை வகிக்கிறார்.
அந்நாட்டு மரபுப்படி அமெரிக்காவிற்கு உள்ள சிக்கல்கள், அந்நாடு சந்தித்து வரும் சவால்கள், அவற்றுக்கான தங்களது தீர்வுகள் ஆகியவற்றை பல கூட்டங்களில் வேட்பாளர் போட்டியில் இடம்பெறுபவர்கள் விளக்க வேண்டும். இதில் அவர்களுக்கு கிடைக்கும் மக்கள் ஆதரவை பொறுத்து அவர்களுக்கு இறுதி வேட்பாளராக களம் இறங்கும் வாய்ப்பு வழங்கப்படும்.
குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் (Mike Pence), 2024 அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பி களத்தில் இருந்தார்.
இந்நிலையில், தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்த மைக் பென்ஸ், அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற குடியரசு கட்சியின் யூதர்களுக்கான கூட்டமைப்பில் கலந்து கொண்டு பேசிய போது, "விரிவான கலந்துரையாடல்கள் மற்றும் சந்திப்புகளுக்கு பிறகு நான் போட்டியிலிருந்து விலகுகிறேன். மலையேறுதலை போன்ற கடினமான சவாலான போட்டி இது என்பது தெரிந்தே இருந்தது. விலகுவதால் எனக்கு எந்த வருத்தமுமில்லை" என அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி வகித்த போது, அவரது நம்பிக்கைக்குரியவராக கருதப்பட்ட மைக் பென்ஸ், தற்போது போதுமான மக்கள் ஆதரவு இல்லாததாலும், நிதி நெருக்கடியினாலும் இவ்வாறு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் அவரது ஆதரவாளர்கள் வருத்தமடைந்துள்ளனர்.
- விவேக் ராமசாமிக்கு அமெரிக்கா முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது
- எதிரிக்கு புரிந்த மொழியில் பேச வேண்டும் என்றார் விவேக்
அமெரிக்காவில் அடுத்த வருடம், அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடனுக்கு எதிராக குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் களத்தில் உள்ளார். டொனால்ட் டிரம்பின் மீது பல வழக்குகள் உள்ளதால், அவர் வேட்பாளராக நிற்பது உறுதியாகவில்லை. இதனால் அக்கட்சியில் அவருக்கு அடுத்த இடத்தில் களத்தில் உள்ள இந்திய வம்சாவளி தொழிலதிபரான விவேக் ராமசாமி, தீவிரமாக தனக்கென ஆதரவு தேடி பிரச்சாரம் செய்து வருகிறார்.
இதற்கிடையே பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க, அந்நாட்டின் காசா பகுதியில் இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இப்போரில் இஸ்ரேலை அமெரிக்கா ஆதரிக்கிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில், குடியரசு கட்சியின் யூதர்களுக்கான கூட்டமைப்பில் உரையாற்றிய விவேக் ராமசாமி, இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து பேசினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:
தனது கையில் உள்ள அனைத்து அதிகாரங்களையும், பலத்தையும் பிரயோகித்து ஹமாஸ் அமைப்பினரை இஸ்ரேல் முற்றிலுமாக நசுக்க வேண்டும். இஸ்ரேல் யூதர்களின் நாடு. புனித நோக்கங்களுக்காக, அந்த புனித தலத்தை புனித பரிசாக பெற்றுள்ளனர் யூதர்கள். பலம் எனும் ஒரு மொழிதான் எதிரிகளுக்கு புரியும் என்றால் தன் நாட்டை காக்க இஸ்ரேல் அதனை பிரயோகிக்க தயங்க கூடாது. இரு நாடு தத்துவம் சரிப்படாது என இஸ்ரேல் கருதினால் அதை செயல்படுத்தலாம். பாலஸ்தீனர்களை தங்கள் நாட்டிற்குள் நுழையவும், வசிக்கவும் அரபு நாடுகள் அனுமதிக்க வேண்டும். பாலஸ்தீனர்களை பொறுப்பில் எடுத்து கொள்ள தயங்கி, தங்கள் நாடுகளுக்குள் சேர்க்கவும் மறுத்து, இஸ்ரேலை மட்டும் கண்டிக்கும் வழிமுறையை அரபு நாடுகள் கைவிட வேண்டும். எந்த அரசியல்வாதியும் இந்த உண்மையை பேச விரும்புவதில்லை; ஆனால், நான் பேசுவேன். ஹமாஸ் அமைப்பினரின் 100 முதன்மை தலைவர்களின் தலைக்கு விலை வைத்து மீண்டும் ஒரு "அக்டோபர் 7" சம்பவம் நடைபெறாதவாறு செய்து, தனது நாட்டினருக்கான எதிர்கால எல்லையை பலப்படுத்த இஸ்ரேலால் முடியும் என நான் நம்புகிறேன்.
இவ்வாறு விவேக் பேசியுள்ளார்.
காசாவில் ஹமாஸ் அமைப்பினருடனான தங்களது போர் புதிய கட்டத்தை எட்டியுள்ளதாகவும், இனி வான், தரை மற்றும் கடல் என அனைத்து வழியாகவும் தாக்குதலில் ஈடுபட போவதாகவும் இஸ்ரேல் ராணுவ படை தெரிவித்துள்ளது. இப்பின்னணியில் விவேக் ராமசாமியின் இந்த அதிரடி கருத்து அரசியல் விமர்சகர்களால் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.






