என் மலர்
உலகம்
- இஸ்ரேல் வான்தாக்குதலில் காசாவில் உள்ள கட்டடங்கள் இடிந்து தரைமட்டம்
- கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களை மீட்க முடியாத பரிதாபம்
அக்டோபர் 7-ந்தேதி தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் வரை, தாக்குதல் ஓயாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் காசா சீர்குலைந்துள்ளது. இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதலை தாக்குப்பிடிக்காமல் கட்டங்கள் இடிந்து விழுந்த வண்ணம் உள்ளது. இதுவரை காசாவில் 8,500-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.
காசாவில் 2.3 மில்லியன் பாலஸ்தீனர்கள் உள்ளனர். இவர்களை உடனடியாக தென்பகுதிக்கு செல்ல இஸ்ரேல் கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால், மக்கள் வெளியேற மறுப்பு தெரிவித்துள்ளனர். தற்போது பாதிக்கும் மேற்பட்டோர், தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி ஐ.நா. நடத்தும் முகாம்களில் தங்கியுள்ளனர். ஐ.நா. பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் தற்காலிக முகாமாக மாற்றியுள்ளது.
இந்த நிலையில், சேதமடைந்த கட்டட இடிபாடுகளுக்குள் பலியான ஆயிரக்கணக்கான பொதுமக்களின் உடல்கள் கிடக்கின்றன. அந்த இடங்களுக்கு சென்று உடல்களை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என பாலஸ்தீன சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐ.நா. பொதுச்சபையில் காசா மீதான போரை நிறுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை விமர்சித்த இஸ்ரேல், போரின் 2-ம் கட்ட நிலை தொடங்கியுள்ளது என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
- இந்த மாதம் இறுதியில் நடைபெறும் அபெக் மாநாட்டின்போது சந்திப்பு நடைபெற இருக்கிறது
- ஆக்கப்பூர்வமான உரையாடல்களை நோக்கமாக கொண்டுள்ளோம் என வெள்ளை மாளிகை அறிவிப்பு
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இந்த மாதத்தின் இறுதியில் அபெக் தலைவர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமை தாங்குகிறார். இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொள்ள இருக்கிறார்.
அப்போது, ஜி ஜின்பிங்கை சந்தித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் கரின் ஜீன்-பியர், நிருபர்களிடம் தெரிவித்தார். மேலும் ''ஜோ பைடன் இந்த சந்திப்பை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார். உங்களுடைய கேள்விக்கு பதில் இருக்கும் என நினைக்கிறேன்'' எனக் குறிப்பிட்டார்.
இந்திய பிரதமர் மோடிக்கும் அபெக் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கேபினட் அளவிலான மந்திரி இந்தியா சார்பில் கலந்த கொள்ள வாய்ப்புள்ளது.
தைவான் தொடர்பான பிரச்சினையில் இரு நாடுகளுக்கு இடையில் மோதல் இருந்து வரும் நிலையில், இந்த சந்திப்பு நடைபெற இருக்கிறது.
- இஸ்ரேல் - ஹமாஸ் போரில் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
- ஹமாஸ் குற்றச்சாட்டுக்கு இஸ்ரேல் இதுவரை பதில் அளிக்கவில்லை.
காசா எல்லையில் அமைக்கப்பட்டு இருந்த அகதிகள் முகாமில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 50 பேர் உயிரிழந்ததாக ஹமாஸ் அமைப்பின் சுகாதார அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இது குறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், "காசா எல்லை பகுதியின் வடக்கு பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த முகாம் ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் 50-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 150-க்கும் அதிகமானோர் காயமுற்றனர். இஸ்ரேல் இந்த தாக்குதல் மூலம் அதிக குடியிருப்புகள் உள்ள பகுதியை குறிவைத்து இருக்கிறது," என்று தெரிவித்து உள்ளது.
இந்த தாக்குதல் குறித்து வெளியான வீடியோவில் இடிந்து விழுந்த குடியிருப்பு பகுதிகளின் இடிபாடுகளில் இருந்து உயிரிழந்தோர் சடலங்கள் மீட்கப்படும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. மீட்பு பணிகள் நடைபெறும் பகுதியில் பலர் ஒன்றுகூடி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். ஹமாஸ் தெரிவித்து இருக்கும் இந்த குற்றச்சாட்டு குறித்து இஸ்ரேல் தரப்பில் இதுவரை எந்த பதிலும் வழங்கப்படவில்லை.
- 2022ல் எலான் மஸ்க் $44 பில்லியனுக்கு விலைக்கு வாங்கினார்
- மஸ்கின் அதிரடி நடவடிக்கைகளால் சந்தை மதிப்பு உயரும் என எதிர்பார்க்கப்பட்டது
இணையதள பயனர்களின் உரையாடல்களுக்கான பிரபல சமூக வலைதளம், அமெரிக்காவை மையமாக கொண்ட எக்ஸ் (முன்னர், டுவிட்டர்). இந்த வலைதளத்தில் பயனர்கள் தங்கள் கருத்துக்களை செய்தி, புகைப்படம், ஆடியோ, வீடியோ, கோப்பு உட்பட அனைத்து வடிவங்களிலும் பிற பயனர்களுடன் பரிமாறி கொள்ளலாம்.
2006ல் அமெரிக்காவில் துவங்கப்பட்ட இந்நிறுவனத்தை, கடந்த 2022 அக்டோபர் மாதம், உலகின் நம்பர் 1. கோடீசுவரரும், அமெரிக்காவை சேர்ந்த பிரபல தொழிலதிபருமான எலான் மஸ்க், சுமார் ரூ.3 லட்சத்து 37 ஆயிரம் கோடிக்கு ($44 பில்லியன்) விலைக்கு வாங்கினார்.
எலான் மஸ்க், 'டுவிட்டர்' வலைதளத்தை விலைக்கு வாங்கியதிலிருந்து அதன் மதிப்பை உயர்த்த பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முன்னதாக அதன் தலைமை செயல் அதிகாரியை மாற்றினார். பிறகு அவர் பல ஊழியர்களை பணி நீக்கம் செய்தார்; ஒரு சிலர் அவரது நடவடிக்கைகள் பிடிக்காமல் ராஜினாமா செய்தனர்.
தொடர்ந்து மஸ்க், வலைதளத்தின் பெயரை 'எக்ஸ்' என மாற்றினார். எக்ஸ் வலைதள உள்ளடக்கத்தை பயனர்கள் உபயோகப்படுத்த பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார். பல இலவச சேவைகளை நிறுத்திய எலான் மஸ்க், சந்தா முறையில் சேவைகளை மாற்றியமைத்தார்.
இவரது செயல்முறைகளால் அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு உயரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், எலான் மஸ்க் விலைக்கு வாங்கி 1 வருடம் கடந்த நிலையில், தற்போது அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ. 1 லட்சத்து 58 ஆயிரம் கோடி ($19 பில்லியன்) என குறைந்துள்ளது. இது அவர் விலைக்கு வாங்கிய விலையை விட பாதிக்கும் கீழே என்பது குறிப்பிடத்தக்கது.
தனியார் நிறுவனமான எக்ஸை பங்குச்சந்தையில் பதிவு செய்யும் திட்டமிட்டிருந்தார் எலான் மஸ்க். ஆனால், தற்போது அதன் சந்தை மதிப்பு மிகவும் குறைந்திருப்பதால், அதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
- சீனக் கப்பல்கள் இலங்கைக்கு வருவது தொடர்பாக இந்தியாவும் அமெரிக்காவும் கவலை தெரிவித்தன.
- சீனாவின் தொடர் ஆதிக்கத்தின் முக்கிய நடவடிக்கையாக இலங்கையின் கடல் வளங்களை ஆராய சீனா ஆராய்ச்சி கப்பலை அனுப்பி வைத்துள்ளது.
கொழும்பு:
இலங்கையின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் சீனா தொடர்ந்து தனது அத்துமீறலையும், ஆதிக்கத்தையும் செலுத்தி வருகிறது.
இதற்கிடையே இந்தியா மற்றும் அமெரிக்கா எழுப்பிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் சீன ஆய்வுக் கப்பலான 'ஷியான் 6' கடந்த 23-ந்தேதி கொழும்புவை வந்தடைந்தது. தனது இரண்டு நாள் ஆராய்ச்சியை இலங்கை கடற்கரையில் இன்று தொடங்க உள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
இலங்கையின் மேற்குக் கரையோரப் பகுதியிலும், இலங்கையின் தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (நாரா) மற்றும் ருஹூனா பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று கொழும்பில் உள்ள வெளி விவகாரத்துறை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கடந்த 2020 டிசம்பரில் சீனாவின் கடல் சார் ஆராய்ச்சிக் கப்பல்களில் ஷியான் 6 என்ற ஆராய்ச்சிக் கப்பல் சேர்க்கப்பட்டது. புவி மற்றும் இயற்பியல் ஆய்வில் கவனம் செலுத்தும் நாட்டின் முதல் அறிவியல் ஆராய்ச்சிக் கப்பலாகக் கருதப்படும் இது சுமார் 80 நாட்களுக்கு கடலில் இயங்கத் திட்டமிடப் பட்டுள்ளது.
13 ஆராய்ச்சிக் குழுக்கள் 28 ஆராய்ச்சி திட்டங்களுடன் 12 ஆயிரம் கடல் மைல்கள் முழுவதும் பயணம் செய்து தனது ஆய்வு பணிகளை சீன கப்பல் செய்ய திட்டமிட்டுள்ளது.
சீனக் கப்பல்கள் இலங்கைக்கு வருவது தொடர்பாக இந்தியாவும் அமெரிக்காவும் கவலை தெரிவித்தன. இது தொடர்பாக இந்த மாத தொடக்கத்தில் பெய்ஜிங்கில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடத்திய பேச்சுவார்த்தையிலும் இந்த விவகாரம் குறித்து பேசப்பட்டது.
கடந்த செப்டம்பரில், இந்தியாவின் முதல் உள் நாட்டில் கட்டப்பட்ட போர்க் கப்பலான 'ஐ.என்.எஸ். டெல்லி' இலங்கைக்கு நல்லெண்ணப் பயணத்தை மேற்கொண்டது. கடந்த வாரம், கொரிய கடற்படையின் ரோக்ஸ், குவாங் கேட்டோ தி கிரேட்' மற்றும் சமீபத்தில், ஜப்பான் கடல் சார் நவீன போர்க்கப்பல் இலங்கையின் வடகிழக்கு கரையோரத்தில் அமைந்துள்ள திரிகோணமலை துறைமுகத்துக்கு வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.
சீனக் கப்பல்களின் வருகை குறித்து இந்தியா பலமுறை கவலை தெரிவித்து வரும் நிலையில், வெளிநாட்டுக் கப்பல்களின் வருகைக்கு நிலையான செயல்பாட்டு நடைமுறை பின்பற்றப்படும் என்று இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் தொடர் ஆதிக்கத்தின் முக்கிய நடவடிக்கையாக இலங்கையின் கடல் வளங்களை ஆராய சீனா ஆராய்ச்சி கப்பலை அனுப்பி வைத்துள்ளது. இது இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகள் இலங்கைக்கு அளித்து வரும் நட்புறவில் விரிசலை ஏற்படுத்துமா? என்ற கேள்வியையும் ஏற்படுத்தி உள்ளது.
- இந்தியாவை சேர்ந்த 700 மாணவர்களை வெளியேறுமாறு கனடா தெரிவித்தது.
- புதிய கொள்கை வருகிற டிசம்பர் 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.
ஒட்டாவா:
அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கல்வி கற்க இந்திய மாணவர்கள் பலர் விண்ணப்பிக்கிறார்கள். இதற்கிடையே சமீபத்தில் ஏஜென்சிகள் மூலம் கனடாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேர்ந்த இந்திய மாணவர்களிடம் போலி ஆவணங்களை அவர்களுக்கு தெரியாமல் கொடுத்து அனுப்பியது தெரியவந்தது.
இதையடுத்து இந்தியாவை சேர்ந்த 700 மாணவர்களை வெளியேறுமாறு கனடா தெரிவித்தது. இந்த மோசடியில் பாதிகப்பட்ட மாணவர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில் மாணவர் விசாவில் வருபவர்களிடம் ஏஜெண்டுகள் செய்யும் மோசடிகளை தடுக்க கனடா அரசு புதிய விதிகளை அறிவித்துள்ளது. அதன்படி கனடாவில் முதுகலை கல்வி கற்பிக்கும் அனைத்து கல்வி நிறுவனங்களும், ஒவ்வொரு விண்ணப்பதாரரின் ஏற்பு கடிதத்தையும் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சகத்துடன் சரி பார்க்க வேண்டும். ஒவ்வொரு கல்வி நிறுவனங்களும் அமைச்சகத்திடம் இருந்து சரி பார்க்கப்பட்ட ஏற்றுக் கொள்ளும் கடிதத்தை பெற வேண்டும். இந்த புதிய கொள்கை வருகிற டிசம்பர் 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து அமைச்சர் மார்க் மில்லர் கூறும்போது, கனடாவுக்கு வரும் பிற நாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த விரும்பவில்லை என்று குறிப்பிட்ட அவர் பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் ஏமாற்றப்படாமல் பாதுகாப்பதே தனது நோக்கம் என்றார்.
இந்த நடவடிக்கை இதற்கு முன்பு மாணவர்கள் ஏமாற்றப்பட்டதைப் போன்ற சூழல் ஏற்படாமல் தடுக்கும் என்பதோடு உண்மையான ஏற்பு கடிதங்களின் அடிப்படையில் மட்டுமே படிப்பதற்கான அனுமதி வழங்கப்படுவதையும் உறுதி செய்யும் என்று கனடா அரசு தெரிவித்தது.
- கொலை செய்யப்பட்ட மேஹக் சர்மா சமீபத்தில்தான் இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு வந்துள்ளார்.
- மேஹக் சர்மா மரணம் குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன்:
இங்கிலாந்தின் தெற்கு லண்டனில் உள்ள குரோய்டனில் இந்தியாவை சேர்ந்த மேஹக் சர்மா என்ற பெண் வசித்து வந்தார். இந்த நிலையில் மேஹக் சர்மா உடலில் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் பிணமாக கிடந்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பெண்ணின் உடலை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஷைலி ஷர்மர் (வயது23) என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர் குரோய்டனின் ஆல்ட்ரீவே பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கொலை செய்யப்பட்ட மேஹக் சர்மா சமீபத்தில்தான் இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு வந்துள்ளார். கைது செய்யப்பட்ட நபர், அவருக்கு தெரிந்தவரா? என்பது குறித்து உறுதிப்படுத்தப்படவில்லை. மேஹக் சர்மா மரணம் குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவரது பிரேத பரிசோதனை இன்று நடைபெறும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
- 70-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர்.
- ஆற்றில் மீட்புக் குழுக்கள் இன்னும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நைஜீரியாவின் வடகிழக்கில் உள்ள கரீம் லாமிடோ மாவட்டத்தில் ஆற்றில் இருந்து மயோ ரனேவா கிராமத்துக்கு படகு ஒன்று சென்றது. இதில் குழந்தைகள், வணிகர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அதிகம் பேர் பயணம் செய்ததால் படகு ஆற்றில் கவிழ்ந்தது. அதிலிருந்தவர்கள் தண்ணீரில் தத்தளித்தனர். மீட்புப் படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 18 பேர் பலியானார்கள். 14 பேரை மீட்டனர். 70-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். அவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ஆற்றில் மீட்புக் குழுக்கள் இன்னும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். படகில் 104 பேர் பயணம் செய்துள்ளனர் என்றனர்.
- இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 9 ஆயிரத்து 500-ஐ கடந்துள்ளது.
- பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
டெல் அவிவ்:
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7-ம் தேதி திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
நேற்றைய 24-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 9 ஆயிரத்து 500-ஐ கடந்துள்ளது.
இஸ்ரேலுடனான தாக்குதலின்போது பலரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர் ஹமாஸ் பயங்கரவாதிகள். பிணைக் கைதிகளை விடுவித்தால் மட்டுமே போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தி இருந்தார்.
இதற்கிடையே, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலைச் சேர்ந்த தலா 2 பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்துள்ளனர். அவர்கள் எகிப்து வழியாக மீட்கப்பட்டனர். மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்படுவதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்தது.
இந்நிலையில், தங்களிடம் பிணைக்கைதியாக இருந்த இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த பெண் வீரர் ஒருவரை ஹமாஸ் அமைப்பினர் நேற்று விடுவித்தது. அவர் மருத்துவ பரிசோதனைகள் முடிந்து நலமுடன் உள்ளார் என இஸ்ரேல் உளவு நிறுவனம் ஷென் பெட் தெரிவித்துள்ளது.
- காசாவில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் உடன்படாது.
- இது போருக்கான நேரம் என்று இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்தார்.
டெல் அவிவ்:
தலைநகர் டெல் அவிவில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு பேசியதாவது:
காசாவில் போர்நிறுத்தம் தொடர்பான இஸ்ரேலின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
நம்பிக்கை மற்றும் வாக்குறுதியின் எதிர்காலத்திற்காக நாம் போராட விரும்புகிறோமா அல்லது கொடுங்கோன்மை மற்றும் பயங்கரவாதத்திற்கு சரணடைவோமா என்பதை தீர்மானிக்க வேண்டிய நேரம் இது.
இஸ்ரேல் இந்தப் போரைத் தொடங்கவில்லை. ஆனால் இந்தப் போரில் கண்டிப்பாக நாம் வெற்றி பெறுவோம். வெற்றி வரும் வரை இஸ்ரேல் காட்டுமிராண்டித்தனத்தின் சக்திகளுக்கு எதிராக நிற்கும்.
பேர்ல் ஹார்பர் குண்டுவெடிப்புக்குப் பிறகு அல்லது 9/11 பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா போர்நிறுத்தத்திற்கு உடன்படாதது போல, அக்டோபர் 7-ம் தேதி பயங்கரமான தாக்குதலுக்குப் பிறகு ஹமாசுடனான விரோதப் போக்கை நிறுத்த இஸ்ரேல் உடன்படாது.
போர்நிறுத்தத்திற்கான அழைப்புகள் இஸ்ரேலை ஹமாசிடம் சரணடைய வேண்டும், பயங்கரவாதத்திடம் சரணடைய வேண்டும், காட்டுமிராண்டித்தனத்திற்கு சரணடைய வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் அது நடக்காது.
இஸ்ரேல் இந்த போரை தொடங்கவில்லை. இஸ்ரேல் இந்த போரை விரும்பவில்லை. ஆனால் இந்த போரில் இஸ்ரேல் வெற்றி பெறும் என தெரிவித்தார்.
- களத்தில் நாங்கள் 600 க்கும் மேற்பட்ட ஹமாஸ் இலக்குகளை குறிவைத்துள்ளோம்.
- அக்டோபர் 7ஆம் தேதி செய்தது போன்று இனி ஒருபோதும் எமது மக்களை காயப்படுத்த முடியாது.
ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் நாட்டில் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதனால் இஸ்ரேல் ராணுவம் காசா மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பாலஸ்தீனர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், போர் குறித்து இஸ்ரேலின் செய்தித் தொடர்பாளர் எய்லோன் லெவி அளித்த பேட்டி ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் தெற்கு இஸ்ரேலை ஆக்கிரமித்து, சுட்டுக் கொன்று, சித்திரவதை செய்து, சிதைக்கப்பட்ட, எரித்து, கற்பழித்து, 1400 பேர் கொல்லப்பட்ட படுகொலை நடந்து 3 வாரங்கள் ஆகின்றன.
இஸ்ரேலிய நகரங்களில் 8,000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஹமாஸ் சுட்டதுடன் அந்தப் போர் தொடர்ந்தது.
அக்டோபர் 7 படுகொலைக்கு பதிலடியாக ஹமாஸை அழிக்கும் எங்கள் பிரச்சாரத்தை நாங்கள் முன்னெடுத்துச் செல்கிறோம்.
காசாவில் குறைந்தபட்சம் 239 பணயக்கைதிகள் இருப்பது பற்றி எங்களுக்குத் தெரியும். குறைந்தபட்சம் என்று எதற்கு கூறுகிறோம் என்றால் காசாவில் பலர் காணாமல் போயுள்ளனர். அவர்கள் ணயக்கைதிகளாக இருக்கிறார்களா அல்லது கொன்று அவர்களின் சடலங்கள் அழிக்கப்பட்டதா என்பது பற்றி தெரியவில்லை.
இதுவரை 10 வயதுக்குட்பட்ட 33 குழந்தைகள், 5 வயதுக்குட்பட்ட 10 குழந்தைகள் உட்பட 239 அப்பாவி மக்கள் பிணையக் கைதிகளாக உள்ளனர். காசா பகுதிக்குள் குழந்தைகள் உள்ளனர். அவர்களின் கண் எதிரில் பெற்றோர்கள் கொல்லப்பட்டனர்.
குழந்தைகளை பெற்றோரின் கைகளில் இருந்து பிடுங்கப்பட்டு காசாவில் உள்ள ஒரு இருண்ட சுரங்கப்பாதையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஹமாஸ் நான்கு பணயக் கைதிகளை விடுவித்தது. இஸ்ரேலிய ராணுவ அழுத்தத்தின் காரணமாக அவர்கள் அதைச் செய்தார்கள்.
மேலும், இந்தியா உட்பட, உலகெங்கிலும் உள்ள இஸ்ரேலின் நண்பர்கள் அனைவரையும் ஹமாஸ் மீது அனைத்து அழுத்தங்களையும் அதன் ஆதரவாளர்கள் மீதும் அழுத்தம் கொடுத்து, எங்கள் பணயக்கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். ஏனெனில் குழந்தைகளை கடத்துவதற்கு எந்த காரணமும் இல்லை. காசா பகுதியில் உள்ள ஒரு இருண்ட சுரங்கப்பாதையில் அவர்களை பணயக்கைதிகளாக மூன்று வாரங்கள் பிடித்து வைத்துள்ளனர்.
எதிர்வரும் நாட்கள் நீண்டதாக இருக்கும், அவை கடினமாக இருக்கும். ஏனெனில் இது மற்றொரு சுற்று மோதல் அல்ல. ஹமாஸ் ராக்கெட்டுகளை வீசும் மற்றொரு சுற்று அல்ல, இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தும். சில நாட்களுக்குப் பிறகு எல்லாம் அமைதியடையும். ஹமாஸ் எங்கள் மீது போரை அறிவித்தது, ஹமாஸ் உலக வரலாற்றில் 9/11 க்குப் பிறகு மிக மோசமான பயங்கரவாத தாக்குதலுடன் போரை அறிவித்தது.
எனவே நாங்கள் காசா பகுதியில் ஹமாஸை முற்றிலுமாக தகர்க்கப் போகிறோம். அதுதான் இந்தப் போரில் நமது இலக்கு. ஒவ்வொரு ஹமாஸ் சுரங்கப்பாதையையும், ஒவ்வொரு ஹமாஸ் ராக்கெட் லாஞ்சரையும், ஒவ்வொரு ஹமாஸ் தளபதியையும், ஒவ்வொரு ஹமாஸையும் பின்தொடர்ந்து செல்கிறோம். பாலஸ்தீனியர்கள் உட்பட பொதுமக்களின் உயிரிழப்புகளை குறைக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து அவர்களை அழிப்பதற்காக நாங்கள் அவர்களை பின்தொடர்கிறோம்.
கடந்த சில நாட்களாக காசா பகுதிக்குள் இஸ்ரேல் படைகள் செயல்பட்டு வருகின்றன. களத்தில் நாங்கள் 600 க்கும் மேற்பட்ட ஹமாஸ் இலக்குகளை குறிவைத்துள்ளோம், இதில் கட்டளை நிலைகள், ஏவுகணை ஏவுதல் மற்றும் சுரங்கங்கள் அடங்கும்.
மேலும் காசா பகுதிக்குள் இருக்கும் ஹமாஸின் ஆளும் மற்றும் பயங்கரவாத உள்கட்டமைப்பு முழுவதையும் அகற்றுவதற்கான பிரச்சாரத்தை நாங்கள் முன்னெடுத்து வருகிறோம். அக்டோபர் 7ஆம் தேதி செய்தது போன்று இனி ஒருபோதும் எமது மக்களை காயப்படுத்த முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஷனி ஒரு பிக்-அப் டிரக்கில் அலங்கோலமான நிலையில் கடத்தி செல்லப்பட்டார்
- ஷனியின் தாய் தன் மகளை மீட்குமாறு இஸ்ரேல் மற்றும் ஜெர்மனியிடம் கோரிக்கை வைத்தார்
கடந்த அக்டோபர் 7 அன்று நூற்றுக்கணக்கான பாலஸ்தீன பயங்கரவாத ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேலுக்குள் நுழைந்து கண்ணில் படுபவர்களை எல்லாம் சுட்டுக் கொன்று, 230க்கும் மேற்பட்ட பலரை சிறை பிடித்து சென்றனர். இந்த தாக்குதலில் 1400க்கும் மேற்பட்ட இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர்களும், பல வெளிநாட்டினரும் உயிரிழந்தனர்.
ஹமாஸ் அமைப்பால் கடத்தப்பட்டவர்களில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர்களுடன் பல வெளிநாட்டினரும் அடங்குவர்.
இந்த தாக்குதலின் போது இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காசா முனை பகுதிக்கும் இடைபட்ட எல்லை பகுதியில் 'சூப்பர் நோவா' (Super Nova) இசைக்கச்சேரி எனும் கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்தது. அங்கும் திடீரென நுழைந்த ஹமாஸ் அமைப்பினர், பலரை கொன்று, சிலரை பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர்.
கடத்தப்பட்டவர்களில் ஜெர்மனி நாட்டை சேர்ந்த 23 வயதான ஷனி லவுக் (Shani Louk) எனும் பெண்ணும் சிக்கி கொண்டார். அவர் ஒரு பிக்-அப் டிரக்கில் (pick-up truck) குப்புற படுக்க வைக்கப்பட்டு, பலவந்தமாக, அலங்கோலமான நிலையில் கடத்தி செல்லப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகின.
இந்த தாக்குதலில் கடுங்கோபமடைந்த இஸ்ரேல் அரசு, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி எடுத்து காசா பகுதி முழுவதும் அவர்களை தேடித்தேடி வேட்டையாடி வருகிறது. இந்த போர் 23-வது நாளாக தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.
தங்கள் வசமுள்ள பணயக்கைதிகளின் நிலை குறித்து எந்த விவரமும் ஹமாஸ் அமைப்பினர் தெரிவிக்கவில்லை. தன் மகளை எப்படியாவது மீட்டுத்தருமாறு ஷனியின் தாய் ரிகார்டா லவுக் (Ricardo Louk) ஜெர்மனியிடமும், இஸ்ரேலிடமும் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில் அவர் கொல்லப்பட்டதாகவும் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டு அடையாளம் உறுதி செய்யப்பட்டதாகவும் இஸ்ரேல் அரசு அறிவித்திருக்கிறது.
இந்த துயரச்செய்தியை கேட்டு அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பினரை எதிர்க்கும் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஷனி கொல்லப்பட்டதற்கு தங்களின் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.






