என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • யாரும் வீட்டில் இல்லை என்பது போல சம்மனை ஒட்டி சென்றுள்ளனர்.
    • நேர்மையான விசாரணைக்கு தயாராகவே இருக்கிறோம்.

    நீலாங்கரை:

    சென்னை நீலாங்கரையில் செய்தியாளர்களை சந்தித்த சீமானின் மனைவி கயல்விழி, பாலியல் குற்றச்சாட்டு மூலம் சீமானை அசிங்கப்படுத்த முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். மேலும் அவர் கூறியதாவது:-

    * சீமான் நேர்மையான தலைவர், மக்களுக்காக போராடும் தலைவர்.

    * யாரும் வீட்டில் இல்லை என்பது போல சம்மனை ஒட்டி சென்றுள்ளனர்.

    * என்னிடம் பேசிவிட்டு சம்மனை ஒட்டி விட்டு சென்றிருக்கலாம். சம்மனை படிப்பதற்காகவே கிழிக்க சொன்னேன். முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்.

    * சம்மன் கொண்டு வரும் தகவல் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.

    * காவல்துறையினரின் செயல்பாட்டை நான் எதிர்பார்க்கவேயில்லை. காவல்துறையினர் திட்டமிட்டே செயல்பட்டனர்.

    * நாங்கள் எதற்கும் துணிந்து தான் இருக்கின்றோம். மனதளவில் எங்களை டிஸ்டர்ப் செய்வதே காவல்துறையின் நோக்கம்.

    * நேர்மையான விசாரணைக்கு தயாராகவே இருக்கிறோம்.

    * கைது நடவடிக்கை தொடர்பாக காவல் ஆய்வாளருக்கு எதிராக மனித உரிமை ஆணையத்தை நாட உள்ளதாக கூறினார்.

    இதனிடையே, நேற்று போலீசார் ஒட்டிய சம்மன் கிழிக்கப்பட்டதை அடுத்து சீமான் வீட்டு வாசலில் பலகை வைக்கப்பட்டுள்ளது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது.
    • பார் வெள்ளி ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கத்தின் விலை சந்தையில் தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. கடந்த 21-ந்தேதி, ஒரு கிராம் தங்கம் ரூ.8 ஆயிரத்து 25-க்கும், ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்து 200-க்கும் விற்பனையானது. அதன்பிறகு, தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து, கடந்த 25-ந்தேதி, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 75-க்கும், ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    மறுநாளே, அதாவது 26-ந்தேதி, விலை குறைந்து ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 50-க்கும், ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது. இந்த நிலையில், தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் குறைந்து, முறையே ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 10-க்கும், ஒரு பவுன் ரூ.64 ஆயிரத்து 80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.7,960-க்கும் சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.63,680-க்கும் விற்பனையாகிறது.



    வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 105 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    27-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,080

    26-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,400

    25-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,600

    24-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,440

    23-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,360

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    27-02-2025- ஒரு கிராம் ரூ.106

    26-02-2025- ஒரு கிராம் ரூ.106

    25-02-2025- ஒரு கிராம் ரூ.108

    24-02-2025- ஒரு கிராம் ரூ.108

    23-02-2025- ஒரு கிராம் ரூ.108

    • சீமான் இன்று போலீசார் விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை என்றால் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
    • விஜயலட்சுமிக்கு கருக்கலைப்பு செய்ததாக கூறப்படும் மருத்துவமனைகளிலும் விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

    சென்னை :

    நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று ஆஜராகவில்லை. இதையடுத்து, சீமான் இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும், தவறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதனிடையே, தருமபுரியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளதால் நாளை (இன்று)போலீஸ் விசாரணைக்கு ஆஜராக மாட்டேன். அடுத்த வாரம் ஆஜராவேன் என்று சீமான் நேற்று தெரிவித்து இருந்தார்.

    சீமான் இன்று போலீசார் விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை என்றால் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில், இன்று மாலை 6 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையில் சீமான் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த வாரம் ஆஜராவதாக கூறிய நிலையில், இன்று மாலையே ஆஜராகி சீமான் விளக்கம் அளிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    நேற்று அளித்த பேட்டியில் இன்று விசாரணைக்கு ஆஜர் ஆக முடியாது என்று சீமான் திட்டவட்டமாக கூறியிருந்த நிலையில், தற்போது அவர் இன்று மாலை விசாரணைக்கு ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இன்று சீமான் விசாரணைக்கு ஆஜர் ஆவாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    இதனிடையே, நடிகை விஜயலட்சுமிக்கு கருக்கலைப்பு செய்ததாக கூறப்படும் மருத்துவமனைகளிலும் விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

    • இன்றைய முக்கியச் செய்திகள்.
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..

    • தேசிய கல்விக் கொள்கை 2020 -ஐ அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது.
    • மொழியை படிப்பதற்கான தேர்வு நமது இளைஞர்களுக்கு இருக்க வேண்டும்.

    சென்னை:

    மும்மொழிக் கொள்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு இருமொழிக்கொள்கையே போதுமானது என்று கூறி வருகிறது. இந்த நிலையில், தேசிய கல்விக் கொள்கை 2020 -ஐ அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக கவர்னர் ஆர்.என்.ரவி எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தென் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்வி, வணிகம், சுகாதாரம், விருந்தோம்பல், இளைஞர் ஸ்டார்ட் அப்கள் மற்றும் பெண் தொழில்முனைவோர், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெருவாரியான உள்ளூர் தலைவர்கள் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களின் மாணவர்களுடன் கலந்துரையாடினேன்.

    ஏராளமான சிரமங்கள் மற்றும் முறைசார் தடங்கல்கள் இருந்தபோதிலும் வாழ்க்கையை சிறப்பாக மாற்றும் இவர்களின் நேர்மறையான ஆற்றலையும் தொழில்முனைவுத் திறனையும் காண்பது ஊக்கமளிப்பதாக இருந்தது. இந்தப் பகுதி, மனித ஆற்றல் மற்றும் இயற்கை வளங்களால் நிறைந்துள்ளது, ஆனாலும் இது புறக்கணிக்கப்பட்டு பின்தங்கியுள்ளது போன்ற உணர்வைத் தருகிறது.

    தொழில்மயமாக்கலுக்கான மிகப்பெரிய சாத்தியக்கூறுகள் இருந்தபோதிலும், இங்குள்ள மக்கள் வாய்ப்புகள் புறக்கணிக்கப்பட்டவர்களாக உணர்கிறார்கள். இளைஞர்களிடையே காணப்படும் போதைப்பொருள்/போதைப்பொருள் துஷ்பிரயோகத்தின் சிக்கல்கள் தீவிரமானவை. ஊடக தலைப்புச் செய்திகளில் இடம்பெறும் திட்டமிடப்பட்ட போராட்டங்களுக்கு மாறாக, தேசிய கல்விக் கொள்கை 2020 -ஐ அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது. மாநில அரசின் கடுமையான இரு மொழிக்கொள்கை காரணமாக அண்டை மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுடன் ஒப்பிடும்போது இந்த பிராந்திய இளைஞர்கள் வாய்ப்புகளை இழந்தவர்களாக உணர்கிறார்கள்.

    துரதிருஷ்டவசமாக ஹிந்தியை எதிர்க்கிறோம் என்ற பெயரில் எந்தவொரு தென்மாநில மொழிகளையும் கூட படிக்க அனுமதிக்கப்படாதவர்களாக அவர்கள் உணர்கிறார்கள். இது உண்மையிலேயே நியாயமற்றது. மொழியை படிப்பதற்கான தேர்வு நமது இளைஞர்களுக்கு இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 



    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பா.ஜ.க. கட்சியை கடுமையாக விமர்சித்து பேசினார்.
    • அரசியல் முடிவுகள் சுயமாக எடுக்கப்படுகின்றன.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்திருக்கிறார். த.வெ.க. கட்சியில் ஆதவ் அர்ஜூனாவுக்கு தேர்தல் பிரச்சார மேலாண்மை பொது செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    சமீபத்தில் த.வெ.க. இரண்டாம் ஆண்டு தொடக்க விழா ஆதவ் அர்ஜுனா மேற்பார்வையில் நடைபெற்றது. இவ்விழாவில் உரையாற்றிய ஆதவ் அர்ஜூனா, தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கட்சிகளை கடுமையாக விமர்சித்து பேசினார்.

    இந்த நிலையில் தன் கணவரின் அரசியல் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை தனித்தனியாக வைத்திருக்க முடிவு செய்துள்ளதாக ஆதவ் அர்ஜூனாவின் மனைவி டெய்சி தெரிவித்துள்ளார்.

     


    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நானும் ஆதவ் அர்ஜுனாவும் எப்போதும் எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையையும் தொழில் வாழ்க்கையையும் தனித்தனியாக வைத்திருக்க விரும்புகிறோம். தொழில் சார்ந்த முடிவுகளும், அரசியல் முடிவுகளும் சுயமாகவே எடுக்கப்படுகின்றன."

    "இதற்கு எங்கள் குடும்பத்துடன் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் இருவரும் தனித்துவமான கருத்துக்களைக் கொண்டுள்ளோம். ஒருவருக்கொருவர் நாங்கள் கொண்டுள்ள தனியுரிமையையும், கருத்துக்களையும் மதிக்கிறோம்."

    "தவறான கருத்துக்களை பரப்புவதை தவிர்க்க வேண்டும். எங்கள் குடும்பத்தை தொழில் மற்றும் பொது வாழ்க்கையில் சிக்க வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்." என தெரிவித்துள்ளார்.

    • எதிர்த்து நின்ற அனைவரையும் முன்ஜாமின் வைப்புத் தொகையை இழக்க வைத்துள்ளார்கள்.
    • எங்களுடைய லட்சிய பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

    சென்னை :

    நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வன்கொடுமை தொடர்பான புகார் வழக்கில், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று ஆஜராகாததால் இன்று காலை 11 மணிக்கு நீங்கள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும். தவறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதனிடையே, தருமபுரியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளதால் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக மாட்டேன் என்று சீமான் நேற்று தெரிவித்து இருந்தார்.

    சீமான் இன்று போலீசார் விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை என்றால் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில், சீமான் மீதான பாலியல் வழக்கில் சட்டம் தன் கடமையை செய்யும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    சீமான் பெரியார் குறித்து பேசிய பிறகு தான் ஈரோடு மண் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு சொந்தம் என்று அந்த மக்கள் தீர்ப்பு அளித்திருக்கிறார்கள். எதிர்த்து நின்ற அனைவரையும் முன்ஜாமின் வைப்புத் தொகையை இழக்க வைத்துள்ளார்கள். ஆகவே அவர் இன்னும் கூட பேசட்டும். இன்னும் இன்னும் நாங்கள் எங்கள் பணியின் வேகத்தை பலமாக்குவோம். 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அறுதி பெரும்பான்மையோடு முதலமைச்சர் சொல்லிய 200 தாண்டி அவரை ஆட்சிக்கட்டிலில் மக்கள் அமர வைப்பார்கள். இதுபோன்ற ஏச்சுக்களையும், பேச்சுக்களையும் கடந்து வந்த இயக்கம் தான் திராவிட முன்னேற்ற கழகம். இதுபோன்று பின்னால் பேசுபவர்கள் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. எங்களுடைய லட்சிய பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்றார். 

    • உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார்.
    • அதிக இடங்கள் கிடைப்பதற்கு அமெரிக்கா கடினமாக முயற்சிக்கும்.

    ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போரை நிறுத்துவதற்காக அமெரிக்கா மற்றும் ரஷியா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார்.

    உக்ரைன் நேட்டோவில் இணைவது தொடர்பான பிரச்சினயே இருநாடுகள் போரில் மோதும் சூழலுக்கு காரணமாக உள்ளது. இந்த நிலையில், உக்ரைன் நேட்டோவில் இணையும் திட்டத்தை மறந்துவிடலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப் முதல் அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "போர் நிறுத்த பேச்சுவார்த்தையின் போது உக்ரனைக்கு முடிந்தவரை அதிக இடங்கள் கிடைப்பதற்கு அமெரிக்கா கடினமாக முயற்சிக்கும்," என்று தெரிவித்தார்.

    இதேபோல் ரஷியா இழந்த பகுதிகளை மீட்பது குறித்து கேள்விக்கு பதில் அளித்த டிரம்ப், " நீங்கள் முயற்சித்து அதனை திரும்ப பெற்றுக்கொள்வீர்கள், சரிதானே? நம்மால் முடிந்த நல்லதை செய்யப் போகிறோம். எங்களால் முடிந்தவரை சிறப்பான ஒப்பந்தம் எட்டப்படுவதை உறுதி செய்வோம். ஆனால், உக்ரைனை பொருத்தவரை நாங்கள் அவர்களுக்கு முடிந்த அளவுக்கு அதிக இடங்களை மீண்டும் கிடைக்க செய்ய முயற்சிப்போம். நாங்கள் முடிந்தவரை அதிக இடங்களை திரும்ப பெற முயற்சிக்கிறோம்," என்று தெரிவித்துள்ளார்.

    • யார் யார் எதை கற்றுக்கொள்ள வேண்டுமோ கற்றுக்கொள்ளட்டும், எதையும் கட்டாயப்படுத்த வேண்டாம்.
    • நான் யாரையும் குறை சொல்லவில்லை.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி தி.மு.க. சார்பில் சென்னை யானை கவுனியில் 'மக்கள் முதல்வரின் மனிதநேய விழா' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா, நடிகர் வடிவேலு, நடிகர் அஜய் ரத்னம், நடிகை குட்டி பத்மினி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு பேசியதாவது:-

    தமிழ் மொழிக்கு சின்ன ஆபத்து. அது வழக்கம்போல் தான் வந்துக்கொண்டு இருக்கிறது. காக்கா, கிளி, மாடு, நாய் எல்லாம் அதனுடையே தாய்மொழியில் கத்துகின்றன. மாட்டை நாய் மாதிரியும், கிளியே காக்கா மாதிரி கத்த சொன்ன என்ன செய்யும். அது வேண்டாம். யார் யார் எதை கற்றுக்கொள்ள வேண்டுமோ கற்றுக்கொள்ளட்டும், எதையும் கட்டாயப்படுத்த வேண்டாம். உங்களை கையெடுத்து கும்பிடுகிறேன்.



    நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு கலாச்சாரம் இருக்கு ஒரு மொழி இருக்கு. அது தான் அடையாளம். ஆனால் எங்களுடைய தமிழ்நாட்டிற்கு தமிழ் தான் அடையாளம். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடி உள்ள இந்த மொழிக்கு எவ்வளவு வலிமை இருந்திருக்கும் என்று பாருங்கள். பழமையான தமிழ் மொழி, முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையில் நிற்கிறது. அவர் சொன்னாரு பாருங்க... என்ன நடந்தாலும் சரி இந்த மொழிக்காக என் உயிரையும் கொடுப்பேன் என்று சொன்னாரு பாருங்க... அந்த ஒரு வார்த்தை தமிழ்நாட்டு மக்கள் மனதை நெகிழ வைத்து உள்ளது.

    தமிழ் மொழியில் சின்ன சின்ன வார்த்தைக்கு கூட அர்த்தம் இருக்கு அடையாளம் இருக்கு எல்லாம் இருக்கு. தங்கமான மொழி. நான் அரசியல் பேசவில்லை என்னுடைய மொழியை பற்றி தான் பேசுகிறேன். இது திமுக மேடை மட்டுமல்ல, தமிழனின் மேடை, தமிழ்நாட்டினுடைய மேடை. நான் யாரையும் குறை சொல்லவில்லை என்றார். 

    • காவலாளி அமல்ராஜ் இடுப்பில் வைத்திருந்த லைசென்ஸ் பெற்ற கைத்துப்பாக்கியை போலீசார் கேட்டனர்.
    • ஒரு கட்டத்தில் துப்பாக்கியை தலைக்கு மேல் தூக்கியதால் போலீசார் பதற்றம் அடைந்தனர்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திரைப்பட இயக்குனராக பணியாற்றியபோது அவருக்கும், நடிகை விஜயலட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது தன்னை சீமான் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி விட்டார் என்று விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு சென்னை வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    சீமான் பற்றி சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன் வைத்து வந்தார். அவர் திடீரென்று சீமான் மீதான புகாரை கடந்த 2012-ம் ஆண்டு திரும்ப பெற்றார். இந்த நிலையில் தன் மீதான இந்த வழக்கை ரத்து செய்வதற்கு வளசரவாக்கம் போலீசாருக்கு உத்தரவிட கோரி சென்னை ஐகோர்ட்டில் சீமான் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    ஆனால் அவருடைய கோரிக்கையை ஐகோர்ட் நிராகரித்தது. மேலும் இந்த வழக்கை விசாரித்து, 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து வளசரவாக்கம் போலீசார் இந்த வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். பெங்களூருவுக்கு சென்று நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்தி வழக்கு தொடர்பான புகைப்படங்கள், 'ஆடியோ' உரையாடல்கள் போன்ற தகவலை சேகரித்ததாக தெரிகிறது.

    இதற்கிடையே சீமானிடம் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு வளசரவாக்கம் போலீசார் கடந்த 24-ந்தேதி சம்மன் அனுப்பி இருந்தனர். அதில் 27-ந்தேதி (அதாவது நேற்று) பகல் 11 மணியளவில் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறி இருந்தனர். ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவரது சார்பில் வக்கீல்கள் ஆஜரானார்கள். சீமான் வெளியூர் சென்றிருப்பதால் அவர் ஆஜராகுவதற்கு 4 வாரங்கள் கால அவகாசம் வேண்டும் என்று அவர்கள் போலீசாரிடம் கடிதம் கொடுத்தனர்.

    இதற்கிடையே சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டின் வெளிப்பக்க கதவில் மீண்டும் சம்மன் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இந்த சம்மன் நோட்டீசை வளசரவாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் கோபி நேற்று பகலில் ஒட்டி சென்றார்.

    அந்த நோட்டீசில், 'நீங்கள் ஏற்கனவே அனுப்பிய சம்மன் பேரில் விசாரணைக்கு ஆஜராகவில்லை. எனவே இந்த சம்மனை ஏற்று 28-ந்தேதி (அதாவது இன்று) காலை 11 மணிக்கு நீங்கள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும். தவறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    போலீசார் சம்மன் நோட்டீசை ஒட்டிவிட்டு சென்ற சிறிது நேரத்தில் அந்த சம்மனை சீமான் வீட்டு பணியாளர் ஒருவர் கிழித்தெறிந்தார். இந்த காட்சி தொலைக்காட்சிகளில் செய்தியாக ஒளிபரப்பானது. இதுகுறித்து நீலாங்கரை போலீசாருக்கு வளசரவாக்கம் போலீசார் தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் சம்மனை கிழித்த சீமான் வீட்டு பணியாளரை கைது செய்வதற்காக நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன்ராஜேஷ் மற்றும் 2 போலீசார் நேற்று பிற்பகலில் சீமான் வீட்டுக்கு வந்தனர்.

    அப்போது வீட்டின் வெளிக்கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இன்ஸ்பெக்டர் பிரவீன்ராஜேஷ் கதவை தட்டினார்.

    உடனே சீமான் வீட்டில் காவலாளியாக பணியாற்றி வரும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தாம்பரத்தை சேர்ந்த அமல்ராஜ் கதவை திறந்து விட்டார். ஆனால் போலீசாரை வீட்டின் உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினார். இதனால் ஆவேசம் அடைந்த இன்ஸ்பெக்டருக்கும், காவலாளிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.

    காவலாளி அமல்ராஜை இன்ஸ்பெக்டர் கைது செய்ய முயன்றார். அப்போது போலீசாருடன் மல்லுக்கட்டினார். சீமான் வீட்டின் வளாகத்துக்குள் போலீசாருக்கும், காவலாளிக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

    இந்த களேபரத்தின் முடிவில் இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசாரும் சேர்ந்து காவலாளி அமல்ராஜின் சட்டையை பிடித்து வெளியே இழுத்து போலீஸ் ஜீப்பில் ஏற்றுவதற்கு அழைத்து வந்தனர். ஆனால் காவலாளி அமல்ராஜ் போலீஸ் ஜீப்பில் ஏற மறுத்தார். இதனால் ஜீப்பில் வைத்தும் மோதல்-தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதற்கிடையில் காவலாளி அமல்ராஜ் இடுப்பில் வைத்திருந்த லைசென்ஸ் பெற்ற கைத்துப்பாக்கியை போலீசார் கேட்டனர். ஆனால் அவர் கொடுக்க மறுத்து துப்பாக்கியை கையில் எடுத்து வைத்துக் கொண்டார். துப்பாக்கியை அவரிடம் இருந்து பறிப்பதில் கடும் மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் துப்பாக்கியை தலைக்கு மேல் தூக்கியதால் போலீசார் பதற்றம் அடைந்தனர்.

    நீண்ட போராட்டத்துக்கு பின்னர் துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். ஒரு வழியாக கடும் போராட்டம் நடத்தி காவலாளி அமல்ராஜை கைது செய்து நீலாங்கரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர், சீமான் வீட்டின் கதவில் ஒட்டப்பட்ட சம்மன் நோடீசை கிழித்ததாக அவரது வீட்டின் பணியாளர் சுபாகர் என்பவரையும் போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

    சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் இந்த பரபரப்பு சம்பவம் நடைபெற்ற சமயத்தில் சீமான் வீட்டில் இல்லை. அவர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.

    அவருடைய மனைவி கயல்விழி மட்டும் வீட்டில் இருந்தார். அவர் பதறியபடி வெளியே வந்தார். அவர் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் முறையிட்டார்.

    ஆனால் போலீசார் காவலாளியையும், பணியாளரையும் கைது செய்து அழைத்து சென்றனர்.

    தனது வீட்டின் காவலாளியை போலீசார் கைது செய்து அழைத்து சென்றபோது, சீமானின் மனைவி கயல்விழி வெளியே வந்தார். போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் நடந்த செயலுக்கு மன்னிப்பு கேட்டார்.

    ஆனால் அதனை ஏற்க மறுத்து இன்ஸ்பெக்டர் கோபத்துடன் காவலாளியை ஜீப்பில் ஏற்றி அழைத்து சென்றார்.

    சீமான் வீட்டில் நடந்த மோதல் சம்பவத்தில் காவலாளி தாக்கியதில் தங்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறி நீலாங்கரை இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ் மற்றும் 2 போலீஸ்காரர்கள், சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று மாலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு, டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதனிடையே கைது செய்யப்பட்ட சீமான் வீட்டு காவலாளியும், பணியாளரையும் சோழிங்கநல்லூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது, நீதிபதி கார்த்திகேயன் இருவரையும், வருகிற 13-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டனர். இதனை அடுத்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் ரசாயன அம்சங்கள் இருப்பதாக புகார் எழுந்தது.
    • சுமார் 251 உணவகங்களில் இட்லி மாதிரியை சேகரித்து ஆய்வக சோதனைக்கு அனுப்பி வைத்தனர்

    பெங்களூரு:

    பெங்களூருவில் உள்ள பெரும்பாலான ஓட்டல்களில் இட்லியை துணி போட்டு வேகவைப்பதற்கு பதிலாக பாலிதீன் போட்டு அதன் மீது இட்லி மாவு ஊற்றி வேக வைக்கப்படுகிறது.

    இதில் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் ரசாயன அம்சங்கள் இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சுமார் 251 உணவகங்களில் இட்லி மாதிரியை சேகரித்து ஆய்வக சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அதில் சுமார் 51 உணவக இட்லி மாதிரிகளில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பது தெரியவந்து உள்ளது. இதையடுத்து இட்லி பாத்திரத்தில் பாலிதீன் பயன்படுத்தி இட்லி மாவை ஊற்றி வைக்க தடை விதிக்கப்படும் என்று கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ் கூறியுள்ளார்.

    • விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை உள்ளது.
    • சில நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார்கள் வந்தன.

    சென்னை:

    சென்னையில் போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே வாகனங்களை மடக்கி, சோதனையில் ஈடுபடுவது வழக்கமாக இருந்து வருகிறது. விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை உள்ளது.

    இவ்வாறு சோதனை நடத்தும் போலீசார், கும்பலாக சாலையில் நின்று வாகனங்களை மடக்குவதால், சில நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார்கள் வந்தன. இதனால், வாகன சோதனையில் ஈடுபடும் போக்குவரத்து போலீசாருக்கு தற்போது திடீர் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    கும்பலாக நின்று போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபடக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாகன சோதனை நடத்தும் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரும், போலீஸ்காரர் மட்டுமே இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    போலீஸ்காரர் வாகனத்தை மடக்க வேண்டும் என்றும், சப் - இன்ஸ்பெக்டர் வாகன ஓட்டிகளிடம் சோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    ×