என் மலர்
விளையாட்டு
- சீன ஓபன் பேட்மிண்டன் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய வீராங்கனை பன்சோத் வெற்றி பெற்றார்.
பீஜிங்:
சீன ஓபன் பேட்மிண்டன் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவின் மாளவிகா பன்சோத், இந்தோனேசிய வீராங்கனை துங்ஜங்கை எதிர்கொண்டார்.
இதில் பன்சோத் 26-24, 21-19 என்ற கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் 2வது சுற்றில் பன்சோத், ஸ்காட்லாந்து வீராங்கனை கில்மோருடன் மோத உள்ளார்.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 181 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 168 ரன்கள் மட்டுமே எடுத்தது.
முல்தான்:
தென் ஆப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி முல்தானில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்தது. முனீபா அலி 45 ரன்னும், நிதா தார் 29 ரன்னும், சித்ரா அமீன் 28 ரன்னும் எடுத்து அவுட் ஆனார்கள். பாத்திமா சனா 37 ரன்னும், அலியா ரியாஸ் 17 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதையடுத்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. அந்த அணியின் சுனே லூவஸ் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். லாரா 36 ரன்னும், அன்னெக் போஸ் 24 ரன்னும் எடுத்தனர். சுனே லூவஸ் 53 ரன்னும், குளோ 30 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 168 ரன்களே எடுத்தது. இதன்மூலம் 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான், தொடரில் 1-1 என்ற சமனிலை பெற்றது.
- 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது.
- இன்று நடந்த 7வது சுற்றிலும் இந்தியா அபார வெற்றி பெற்றது.
புடாபெஸ்ட்:
45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில் இன்று அரங்கேறிய 7-வது சுற்றில் இந்திய பெண்கள் அணி, ஜார்ஜியாவை சந்தித்தது.
இதில் வந்திகா அகர்வால், வைஷாலி ஆகியோர் ஜார்ஜியா வீராங்கனைகளை தோற்கடித்தனர்.
இறுதியில் இந்தியா 3-1 என்ற புள்ளி கணக்கில் ஜார்ஜியாவை வீழ்த்தி தொடர்ந்து 7-வது வெற்றியை ருசித்தது. இதன்மூலம் 14 புள்ளிகள் பெற்றுள்ளது.
இதேபோல் இந்திய ஆண்கள் பிரிவில் குகேஷ், சீனாவின் வெய் யீயை தோற்கடித்தார். மற்ற வீரர்கள் டிரா செய்தனர். இதையடுத்து, இந்திய ஆண்கள் அணியும் 14 புள்ளிகள் பெற்றுள்ளது.
- டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் 107 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஷார்ஜா:
தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஷார்ஜாவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் செய்ய முடிவெடுத்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 33.3 ஓவரில் 106 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் வியான் முல்டர் பொறுப்புடன் ஆடி அரைசதம் கடந்து 52 ரன்னில் அவுட்டானார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விரைவில் வெளியேறினர். 4 வீரர்கள் டக் அவுட்டாகினர்.
ஆப்கானிஸ்தான் சார்பில் ஃபரூக்கி 4 விக்கெட்டும், காசன்ஃபர் 3 விக்கெட்டும், ரஷித் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 26 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. குல்பதீன் நயீப் 34 ரன்னும், அஸ்மதுல்லா ஒமர்சாய் 25 ரன்னும் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தனர்.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தான் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
- முதல் நாள் முடிவில் இலங்கை 302 ரன்கள் எடுத்துள்ளது.
- அந்த அணியின் கமிந்து மெண்டிஸ் சிறப்பாக ஆடி சதமடித்தார்.
கொழும்பு:
நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று காலேவில் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, இலங்கை அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் திமுத் கருணரத்னே 2 ரன்னிலும், பதும் நிசங்கா 27 ரன்னிலும், தினேஷ் சண்டிமால் 30 ரன்னிலும், ஏஞ்சலோ மேத்யூஸ் 36 ரன்னிலும் அவுட்டாகினர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கமிந்து மெண்டிஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.
6வது விக்கெட்டுக்கு இணைந்த கமிந்து மெண்டிஸ், குசால் மெண்டிஸ் ஜோடி 103 ரன்கள் சேர்த்தது. குசால் மெண்டிஸ் அரை சதமடித்து அவுட்டானார். அவரை தொடர்ந்து சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கமிந்து மெண்டிஸ் 114 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், முதல் நாள் முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 302 ரன்கள் எடுத்துள்ளது.
நியூசிலாந்து சார்பில் வில்லியம் ரூர்கே 3 விக்கெட்டும், கிளென் பிலிப்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- தென் ஆப்பிரிக்கா அணியின் நான்கு வீரர்கள் டக் அவுட் ஆகினர்.
- ஆப்கானிஸ்தான் தரப்பில் ஃபரூக்கி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ஷார்ஜாவில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது.
அதன்படி பேட்டிங்கை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் துவக்க வீரர்களான ஹென்ட்ரிக்ஸ் மற்றும் டோனி டி சோர்சி முறையே 9 மற்றும் 11 ரன்களை எடுத்து அவுட் ஆகி வெளியேறினர். அடுத்து களமிறங்கிய கேப்டன் மார்க்ரம் 2 ரன்களில் ஏமாற்றினார்.
இவருடன் களமிறங்கிய ஸ்டப்ஸ் ஐந்து பந்துகளை எதிர்கொண்ட நிலையில், ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகி வெளியேறினார். இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கைல் வெர்ரைன் (10) மற்றும் ஜேசன் ஸ்மித் (0) சொதப்பினர். மற்ற வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆன வியான் முல்டர் நிதானமாக ஆடி அரைசதம் கடந்தார்.
இவரைத் தொடர்ந்து களமிறங்கியவர்களில் ஆன்டில் மற்றும் நிகிடி ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆக மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 33.3 ஓவர்களில் 106 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.
ஆப்கானிஸ்தான் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஃபரூக்கி நான்கு விக்கெட்டுகளையும், காசன்ஃபர் மூன்று விக்கெட்டுகளையும், ரஷித் கான் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
- இந்தியா- வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
- டிக்கெட்டுகள் தினமும் காலை 7 மணிக்கு கவுன்டரில் பெறலாம் எனவும் அறிவிப்பு.
இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 19-ந் (நாளை) தேதி தொடங்குகிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியா- வங்கதேசம் அணிகள் இடையேயான டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இந்தியா- வங்கதேசம் இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெறும் ஒவ்வொரு நாளுக்கும் தனித்தனியாக பயன்படுத்தும் வகையில், டிக்கெட்டுகள் விற்கப்படுகிறது.
அதன்படி, டிக்கெட்டுகள் தினமும் காலை 7 மணிக்கு கவுன்டரில் பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
F,G,H அப்பர் ஸ்டாண்ட் வரிசையில் தலா ஒரு டிக்கெட் ரூ.200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
I,J,K லோயர் ஸ்டாண்ட் வரிசையில் தலா ஒரு டிக்கெட் ரூ.400க்கு விற்பனை செய்யப்படுகிறது.
KMK டெர்ரேஸ் வரிசையில் தலா ஒரு டிக்கெட் ரூ.1000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

- ஐபிஎல் தொடரில் இதுவரை ஒருமுறை கூட பஞ்சாப் அணி கோப்பையை வென்றதில்லை.
- இதற்கு முன்னதாக டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் இருந்தார்.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக, ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 7 ஆண்டுகளாக டில்லி கேபிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரிக்கி பாண்டிங் அண்மையில் அந்த பதவியில் இருந்து விலகினார்.
ஐபிஎல் தொடரில் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத பஞ்சாப் அணிக்கு ரிக்கி பாண்டிங்கின் வருகை உத்வேகமூட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- செம்மண் நிற ஆடுகளம் இந்தியா- வங்காளதேசம் டெஸ்ட் போட்டிக்கு பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்த ஆடுகளம் பவுன்சுடன் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும்.
சென்னை சேப்பாக்கத்தில் செம்மண் நிற ஆடுகளம் இந்தியா- வங்காளதேசம் டெஸ்ட் போட்டிக்கு பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பவுன்சுடன் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும்.
கருமைநிற ஆடுகளம் தான் சுழலுக்கு நன்கு கைகொடுக்கும். ஆனால் சென்னையில் கடுமையான வெப்ப நிலை காணப்படுவதால் ஆடுகளம் சீக்கிரமாக சிதைவதற்கு வாய்ப்பு உண்டு.
அவ்வாறான சூழலில் சுழற்பந்து வீச்சும் முக்கிய பங்கு வகிக்கும் என்று பிட்ச் பராமரிப்பாளர்கள் தெரிவித்தனர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் கண்ணோட்டம்:
இந்தியாவில் உள்ள பழமை வாய்ந்த மைதானங்களில் ஒன்று சேப்பாக்கம் ஸ்டேடியமாகும். 1934-ம் ஆண்டு டெஸ்ட் போட்டி முதல் முறையாக இங்கு நடந்தது.
கடைசியாக இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய டெஸ்ட் சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்றது. தற்போது 3 ½ ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கத்தில் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இந்தியா-வங்காளதேச அணிகள் மோதும் முதல் போட்டி சேப்பாக்கத்தில் நடைபெறும் 35-வது டெஸ்டாகும்.
இதுவரை நடந்த 34 டெஸ்டில் இந்தியா 15-ல் வெற்றி பெற்றது. 7 டெஸ்டில் தோற்றது. 11 போட்டி 'டிரா' ஆனது. ஒரு டெஸ்ட் 'டை' ஆனது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் 1986-ம் ஆண்டு மோதிய போட்டி, 'டை' யில் முடிந்தது. இது வரலாற்று சிறப்புமிக்க டெஸ்டாகும். வெளிநாட்டு அணிகளில் இங்கிலாந்து அதிகபட்சமாக 11 டெஸ்ட் சேப்பாக்கத்தில் விளையாடி உள்ளது. வங்காளதேச அணி முதல் முறையாக இங்கு ஆடுகிறது.
சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணி 2016-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 7 விக்கெட் இழப்புக்கு 759 ரன் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராகும். இந்திய அணி 1977-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 83 ரன்னில் சுருண்டதே குறைந்தபட்ச ஸ்கோராகும்.
கவாஸ்கர் 12 டெஸ்டில் விளையாடி 1018 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். இதில் 3 சதம் அடங்கும். அதற்கு அடுத்தபடியாக டெண்டுல்கர் 970 ரன் (10 டெஸ்ட்) எடுத்துள்ளாா்.
ஒரு இன்னிங்சில் அதிகபட்ச ரன் எடுத்தவர் வீரேந்தர் ஷேவாக். அவர் 2008-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 319 ரன் குவித்தார். அவருக்கு அடுத்தபடியாக கருண் நாயர் 303 ரன் (2016, இங்கிலாந்துக்கு எதிராக) எடுத்து இருந்தார். இந்த இருவர் மட்டுமே சேப்பாக்கத்தில் டிரிபிள் செஞ்சூரி அடித்தவர்கள் ஆவார்கள். டெண்டுல்கர் அதிகபட்சமாக 5 சதம் அடித்துள்ளார்.
கும்ப்ளே 48 விக்கெட் (8 டெஸ்ட்) கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார். ஹர்பஜன்சிங், 42 விக்கெட்டும், கபில்தேவ் 42 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர்.
வினோ மன்காட் 55 ரன் எடுத்து 8 விக்கெட் வீழ்த்தியது இன்னிங்சின் சிறந்த பந்து வீச்சாகும். ஹிர்வாணி 16 விக்கெட் வீழ்த்தியது ஒரு டெஸ்டின் சிறப்பான நிலையாகும்.
- களத்தில் தகராறில் ஈடுபடுவது குறித்து பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் விராட் கோலி கலகலப்பாக பேசியுள்ளனர்.
- இந்த தொடர் இந்திய பயிற்சியாளராக கவுதம் கம்பீருக்கு முதல் டெஸ்ட் தொடராகும்.
இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர வலை பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த தொடர் இந்திய பயிற்சியாளராக கவுதம் கம்பீருக்கு முதல் டெஸ்ட் தொடராகும்.
இந்நிலையில் போட்டிக்கு முன்னதாக கம்பீர் மற்றும் கோலி கலகலப்பான நேர்காணலில் பங்கேற்றுள்ளனர். இவர்கள் இருவரும், ஐபிஎல் தொடரின் போது பலமுறை வாக்குவாதங்களில் ஒருவருக்கொருவர் மோதி கொண்டதை காணலாம். ஆனால் தற்போது ஒரே அணியில் பயிற்சியாளராக கம்பீர் மற்றும் வீரராக விராட் கோலி இந்திய அணியில் ஒன்றாக செயல்பட்டு வருகின்றனர்.
இருவரும் பயிற்சியின் போது சகஜமாக பேசிக்கொள்ளும் வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் களத்தில் தகராறில் ஈடுபடுவது குறித்து பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் விராட் கோலி கலகலப்பாக பேசியுள்ளனர். இதனை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது.
விராட் கோலி: நீங்கள் பேட்டிங் செய்யும்போது, எதிரணியினருடன் சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது, நீங்கள் எப்போதாவது களத்தை விட்டு வெளியே சென்று அவுட் ஆகலாம் என நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா அல்லது அது உங்களை அதிக உந்துதலுக்கு உள்ளாக்கியதா?
கவுதம் கம்பீர்: என்னை விட உங்களுக்கு அதிக வாக்குவாதம் ஏற்பட்டிருக்கும். அந்த கேள்விக்கு என்னை விட சிறப்பாக பதில் சொல்ல உங்களால் தான் முடியும் என்று நினைக்கிறேன்.
விராட் கோலி (சிரிக்கிறார்): நான் சொல்வதை ஒத்துக்கொள்ளும் ஒருவரைத் தான் தேடுகிறேன். தவறு என்று சொல்லவில்லை. குறைந்தபட்சம் யாராவது சொல்ல வேண்டும், ஆம் இப்படித்தான் நடக்கும்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது.
- பாரிஸ் ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
- டைமண்ட் லீக் ஈட்டி எறிதலில் காயத்துடன் பங்கேற்று 2-வது இடம் பிடித்தார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரில் நடைபெற்ற டைமண்ட் லீக் ஈட்டி எறிதலில் காயத்துடன் பங்கேற்று 2-வது இடம் பிடித்தார். ஈட்டி எறிதல் மூலம் உலக அளவில் பிரபலமானவராக வலம் வருகிறார். அவர் இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ரசிகர்களைக் குவித்துள்ளார்.
இந்நிலையில் ரசிகை ஒருவர் நீரஜ் சோப்ராவிடம் போன் நம்பர் கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
டைமண்ட் லீக் ஈட்டி எறிதலில் காயத்துடன் பங்கேற்று 2-வது இடம் பிடித்த அவர் போட்டி முடிந்ததும் ரசிகர், ரசிகைகளுக்கு ஆட்டோகிராப் மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அப்போது இரண்டு பெண் ரசிகைகள் அவரிடம் செல்ஃபி கேட்டனர். அவர்கள் இருவருக்கும் நீரஜ் போஸ் கொடுத்தார். அதில் இரண்டாவது பெண் உங்களது போன் நம்பர் கிடைக்குமா? எனக் கேட்டார். அப்பெண்ணின் கோரிக்கையை நீரஜ் சிரித்த முகத்துடன் மறுத்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
- அர்ஜூன் எரிகாசி, குகேஷ் இருவரும் இதுவரை 5 ஆட்டத்தில் களம் கண்டு 4 வெற்றி, ஒரு டிராவுடன் அணிக்கு வலுசேர்த்துள்ளனர்.
- குகேஷ், உலக சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான மோதல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
புடாபெஸ்ட்:
45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த தொடரில் நேற்று முன்தினம் ஓபன் பிரிவில் நடந்த 6-வது சுற்றில் இந்திய ஆண்கள் அணி 3-1 என்ற கணக்கில் ஹங்கேரியை வீழ்த்தியது. தொடர்ந்து 6 சுற்றுகளிலும் வெற்றிகளை குவித்த இந்தியா 12 புள்ளிகளுடன் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. போட்டியில் நேற்று ஓய்வு நாளாகும்.
இந்த நிலையில் இன்று நடைபெறும் 7-வது சுற்றில் இந்திய ஆண்கள் அணி, 11 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ள சீனாவை எதிர்கொள்கிறது. இந்திய வீரர்கள் அர்ஜூன் எரிகாசி, குகேஷ் இருவரும் இதுவரை 5 ஆட்டத்தில் களம் கண்டு 4 வெற்றி, ஒரு டிராவுடன் அணிக்கு வலுசேர்த்துள்ளனர். பிரக்ஞானந்தாவும் (2 வெற்றி, 3 டிரா) நல்ல நிலையில் உள்ளார்.
இன்றைய ஆட்டத்தில் குகேஷ், உலக சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான மோதல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இவர்கள் இருவர் தான் நவம்பர்- டிசம்பரில் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் நேருக்கு நேர் மோத இருக்கிறார்கள். அதனால் இன்றைய ஆட்டத்தில் யாருடைய கை ஓங்கப்போகிறது என்ற ஆவல் செஸ் பிரியர்களை தொற்றிக் கொண்டுள்ளது.
பெண்கள் பிரிவிலும் இந்திய அணியே ஆதிக்கம் செலுத்துகிறது. 6 ஆட்டங்களிலும் வெற்றி கண்டு 12 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடம் வகிக்கும் இந்தியா 7-வது சுற்றில் ஜார்ஜியாவுடன் (11 புள்ளி) மோதுகிறது. இவ்விரு ஆட்டங்களும் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.






