என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்தியாவுக்காக 99 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி, எம்எஸ் டோனியின் சாதனையை முறியடித்துள்ளார் ரோகித் சர்மா.
    இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இது 1000-வது டி20 கிரிக்கெட் போட்டியாகும். பெருமைக்குரிய இந்த போட்டியில் ரோகித் சர்மாவும் இரண்டு  சாதனைகள் படைத்துள்ளார்.

    இந்திய அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையை இதற்கு முன் (98 போட்டிகளில் விளையாடி) எம்எஸ் டோனி பெற்றிருந்தார்.

    இன்றைய போட்டி ரோகித் சர்மாவுக்கு 99-வது போட்டியாகும். இதன்மூலம் இந்தியாவுக்காக அதிக டி20 போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.

    பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் 111 போட்டிகளில் விளையாடி முதல் இடத்திலும், ஷாகித் அப்ரிடி 99 போட்டிகளில் விளையாடி 2-வது இடத்திலும் உள்ளனர்.

    மேலும், 8-வது ரன்னை எடுக்கும்போது டி20 போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் சாதனையில் விராட் கோலியை முந்தி முதல் இடத்தை பிடித்துள்ளார். தற்போது ரோகித் சர்மா 2452 ரன்கள் அடித்துள்ளார்.
    டெல்லியில் நடைபெற்று வரும் முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் வங்காளதேசத்திற்கு 149 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.
    இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இந்தியாவின் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரோகித் சர்மா முதல் ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்தார். ஆனால் கடைசி பந்தில் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார்.

    அடுத்து வந்த கேல்எல் ராகுல் 17 பந்தில் 15 ரன்கள் அடித்தார். ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடியாக விளையாடி 13 பந்தில் 22 ரன்கள் சேர்த்தார். ஷிகர் தவான் 41 ரன்கள் சேர்த்து ரன்அவுட் ஆனார்.

    ரிஷப் பந்த் 27 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 14 ரன்களும் அடிக்க இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் சேர்த்தது. இதனால் வங்காளதேச அணிக்கு 149 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.
    இந்தியாவின் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடும் தியோதர் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா ‘பி்’ - இந்தியா ‘சி’ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    இந்தியாவின் முன்னணி வீரர்கள் மூன்று (இந்தியா ‘ஏ’, இந்தியா ‘பி’, இந்தியா ‘சி’) பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, நடத்தப்படும் ஒருநாள் கிரிக்கெட் தொடரான தியோதர் டிராபி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.

    ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

    முதல் ஆட்டத்தில் இந்தியா ‘பி’, இந்தியா ‘ஏ’ அணியையும், 2-வது ஆட்டத்தில் இந்தியா ‘சி’ இந்தியா ‘ஏ’ அணியையும் வீழ்த்தியது. 3-வது ஆட்டத்தில் இந்தியா ‘சி’ இந்தியா ‘பி’யை வீழ்த்தியது.

    இரண்டு வெற்றிகள் பெற்ற இந்தியா ‘சி’ மற்றும் ஒரு வெற்றி பெற்று இந்திய ‘பி’  இறுதிப் போட்டிக்கு முன்னேறின. ஒரு வெற்றிக்கூட பெராத இந்தியா ‘ஏ’ தொடரில் இருந்து வெளியேறியது.

    இந்தியா ‘பி’ - இந்தியா ‘சி’ அணிகள் நாளை இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    சீனாவில் நடைபெற்ற டபிள்யூடிஏ பைனல்ஸ் இறுதிப் போட்டியில் எலினா ஸ்விடோலினாவை வீழ்த்தி ஆஷ்லே பார்ட்டி சாம்பியன் பட்டம் வென்றார்.
    டென்னிஸ் தரவரிசையில் முன்னிலையில் உள்ள 8 வீராங்கனைகளுக்கு இடையிலான டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடர் சீனாவில் உள்ள ஷின்சென்னில் நடைபெற்றது.

    குரூப் லீக், அரையிறுதிக்குப் பின் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லே பார்ட்டி, 8-ம் நிலை வீராங்கனையான எலினா ஸ்விடோலினா ஆகியோர்  இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.

    ஆஷ்லே பார்ட்டி

    இன்று இறுதிப் போட்டி நடைபெற்றது. ஆட்டம் தொடங்கியதில் இருந்து ஆஷ்லே பார்ட்டி ஆதிக்கம்  செலுத்தி வந்தார். முதல் செட்டை 6-4 என கைப்பற்றினார். 2-வது செட்டிலும் ஆஷ்லே பார்ட்டியின் ஆதிக்கம் தொடர்ந்தது. 2-வது செட்டை 6-3 எனக் கைப்பற்றி அவர், சாம்பியன் பட்டம் வென்றார்.
    இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் வங்காளதேசம் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
    இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது.

    கேலரியில் ரசிகர்கள்

    வங்காளதேச அணி கேப்டன் மெஹ்முதுல்லா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் ஷிவம் டுபே அறிமுகம் ஆகியுள்ளார்.

    ஷிவம் டுபே

    இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ரோகித் சர்மா, 2. தவான், 3. குருணால் பாண்டியா, 4. ஷிவம் டுபே, 5. சாஹல், 6. ஷ்ரேயாஸ் அய்யர், 7. வாஷிங்டன் சுந்தர். 8. லோகேஷ் ராகுல், 9. ரிஷப் பந்த், 10. தீபக் சாஹர், 11. கலீல் அகமது.
    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி உள்ளூர் நேரப்படி ஆன்டிகுவாவில் நேற்று முன்தினம் நடந்தது.

    இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் ஸ்டெபானி டெய்லர் 94 ரன்னும் (8 பவுண்டரி, 2 சிக்சர்), நடாஷா மெக்லின் 51 ரன்னும் விளாசினர்.

    அடுத்து 226 ரன்கள் இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணி ஒரு கட்டத்தில் 2 விக்கெட்டுக்கு 170 ரன்களுடன் (39.2 ஓவர்) நல்ல நிலையில் இருந்தது. ஆனால் கடைசி கட்டத்தில் இந்திய அணியின் விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன.

    பரபரப்பான கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவை என்ற நிலையில் இறுதி ஓவரை வீசிய சுழற்பந்து வீச்சாளர் அனிசா முகமது முதல் பந்தில் எக்தா பிஸ்த் (0) விக்கெட்டையும், கடைசி பந்தில் பூனம் யாதவ் (0) விக்கெட்டையும் வீழ்த்தி திரிலிங்கான ஆட்டத்தை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்காட்டினார்.

    50 ஓவர்களில் இந்திய அணி 224 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆகி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. தொடக்க ஆட்டக்காரர்கள் பிரியா பூனியா 75 ரன்னும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 41 ரன்னும் எடுத்தனர். கேப்டன் மிதலி ராஜ் 20 ரன்னில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். வெஸ்ட் இண்டீஸ் பவுலர் அனிசா முகமது 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இதே மைதானத்தில் இன்று நடக்கிறது.
    இந்திய கிரிக்கெட் வாரியம் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்த விரும்புவதாக கூறியதுடன், அதை ஏற்றுக்கொள்ள விராட் கோலிக்கு மூன்று வினாடிகளே தேவைப்பட்டது என கங்குலி தெரிவித்துள்ளார்.
    இந்திய அணி இதுவரை பிங்க் பந்தில் விளையாடியது கிடையாது. முதல்முதலாக வங்காளதேசத்திற்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாட இருக்கிறது.

    இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றிருக்கும்போது, ஒரு பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும்படி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டது. அப்போது இந்திய வீரர்கள் போதுமான பயிற்சிகளை மேற்கொள்ளவில்லை. இன்னும் அவகாசம் தேவை, ஆகையால் விளையாட முடியாது என்று கூறிவிட்டது.

    ஆனால், பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி பொறுப்பேற்றதும் இந்திய அணி கேப்டனிடம் பகல்-இரவு டெஸ்ட் போட்டி நடத்துவது குறித்து பேசியுள்ளார். அப்போது உடனடியாக விராட் கோலி சம்மதம் தெரிவித்து விட்டதாக கங்குலி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கங்குலி கூறுகையில் ‘‘நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட் போட்டியை அவர்கள் ஏன் விரும்பவில்லை என்பது எனக்குத் தெரியவில்லை.

    நான் விராட் கோலியுடன் அரைமணி நேரம் பேசினேன். முதல் கேள்வியாக நாம் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நோக்கிச் செல்வது அவசியம் என்றேன். மூன்று வினாடிகளிலேயே, அதை நோக்கிச் நாம் செல்லலாம். நாம் விளையாடுவோம் என்று பதில் அளித்தார்.

    அவர் ஏன் சொன்னார்கள் என்று தெரியவில்லை. ஆனால் விராட் கோலி உண்மையிலேயே ஏற்றுக் கொண்டார். ரசிகர்கள் இல்லாமல் டெஸ்ட் போட்டிகள் நடத்தப்படுவது, டெஸ்ட் போட்டியை முன்னோக்கி எடுத்துச் செல்ல சரியான வழியாக இருக்காது என்பதை அவர் உணர்ந்திருக்கலாம்.

    ஒவ்வொரு டி20 போட்டியின்போதும் கேலரிகள் நிரம்புவது எனக்குத் தெரியும். ஆனால், நேர்த்தியான நிர்வாகத்தால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை பார்க்க மீண்டும் ரசிர்களை வரவழைக்க முடியும்’’ என்றார்.
    டி20 உலகக்கோப்பைக்கான குவாலிபையர் தொடர் இறுதிப் போட்டியில் பபுவா நியூ கினியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது நெதர்லாந்து.
    டி20 உலகக்கோப்பைக்கான குவாலிபையர் தொடர் துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்றது. இதில் நெர்தலாந்து - பபுவா நியூ கினியா அணிகள் இறுதிப்  போட்டிக்கு முன்னேறின.

    நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பபுமா நியூ கினியா 20 ஓவரில் 8 விகெட் இழப்பிற்கு 128 ரன்கள் சேர்த்தது. பின்னர்129 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து களம் இறங்கியது.

    அந்த அணி 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நெதர்லாந்து சாம்பியன் பட்டம் வென்றது.
    சிட்னியில் இன்று நடைபெற்ற ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் மழையால் முடிவு எட்டப்படாமல் போனது.
    ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம், பகர் சமான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பகர் சமான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.

    ஒரு பக்கம் விக்கெட்டுக்கள் வீழ்ந்தாலும் மறுமுனையில் பாபர் அசாம் அரைசதம் அடித்தார். போட்டிக்கு இடையே மழை பெய்ததால் ஆட்டம் 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பாகிஸ்தான் 15 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் சேர்த்தது. பாபர் அசாம் 38 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ஆஸ்திரேலிய அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க், ரிச்சர்ட்சன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

    பின்னர் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி ஆஸ்திரேலியாவுக்கு 15 ஓவரில் 119 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    ஆரோன் பிஞ்ச் தொடக்கம் முதல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆஸ்திரேலியா 3.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை பெய்தது. அதன்பின் போட்டி நடைபெற சாத்தியம் இல்லாததால் கைவிடப்பட்டது. ஆரோன் பிஞ்ச் 16 பந்தில் 37 ரன்கள் எடுத்திருந்தார்.
    வெலிங்டனில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான ஐந்து டி20 போட்டித் தொடரில் கிறிஸ்ட்சர்ச்சில் நடந்த முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதிய 2-வது டி20 ஆட்டம் வெலிங்டனில் இன்று நடந்தது. முதலில் விளையாடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 176 ரன் குவித்தது. தொடக்க வீரர் மார்ட்டின் கப்தில் 28 பந்தில் 41 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), ஜேம்ஸ் நீசம் 22 பந்தில் 42 ரன்னும் (2 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர். ஜோர்டான் 3 விக்கெட்டும், சாம் குர்ரான் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    177 ரன் இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடியது. அந்த அணி 19.5 ஓவர்களில் 155 ரன்னில் சுருண்டது. இதனால் நியூசிலாந்து அணி 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் முதல் போட்டியில் இங்கிலாந்திடம் தோற்றதற்கு அந்த அணி பதிலடி கொடுத்தது.

    நீசம்

    இங்கிலாந்து அணியில் டேவிட் மலன் அதிக பட்சமாக 39 ரன்னும், ஜோர்டான் 19 பந்தில் 36 ரன்னும் (3 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். சான்ட்னர் 3 விக்கெட்டும், சவுத்தி, பெர்குசன், சோதி தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    இந்த வெற்றி மூலம் 5 போட்டிக் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது ஆட்டம் வருகிற 5-ந்தேதி நெல்சனில் நடக்கிறது.
    8-வது சென்னை மராத்தான் பந்தயம் அடுத்த ஆண்டு (2020) ஜனவரி 5-ந் தேதி நடக்கிறது.

    சென்னை:

    சென்னை ரன்னர்ஸ் அமைப்பு 2006-ம் ஆண்டில் இருந்து சென்னையில் ஆண்டுதோறும் மராத்தான் போட்டியை நடத்தி வருகிறது.

    8-வது சென்னை மராத்தான் பந்தயம் அடுத்த ஆண்டு (2020) ஜனவரி 5-ந் தேதி நடக்கிறது. ஸ்கெச்சர்ஸ் நிறுவனம் இதற்கு ஸ்பான்சர் செய்கிறது.

    இந்த போட்டி 4 பிரிவாக நடத்தப்படுகிறது. முழு மராத்தான் (42.195 கிலோமீட்டர்). பெர்பெக்ட் 20 மைலர் (32.186 கி.மீ.), அரை மராத்தான் (21.097 கி.மீ.) மற்றும் 10 மீட்டர் ஓட்டம் ஆகியவை ஆண்கள், பெண்களுக்கு நடக்கிறது.

    இதில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.25 லட்சமாகும். மராத்தான் பந்தயம் அதிகாலை 4 மணிக்கு தொடங்குகிறது.

    இதுகுறித்து போட்டி அமைப்புக்குழு இயக்குனர் செந்தில்குமார் கூறும் போது, “சென்னை மராத்தான் பந்தயம் இந்தியாவில் நடைபெறும் சிறந்த ஓட்டமாகும். இந்தப் போட்டிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது” என்றார்.

    ஐதராபாத்தில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கேரளாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி ஐதராபாத் அணி தனது முதல் வெற்றியை பதிவுசெய்தது.
    ஐதராபாத்:

    10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    ஐதராபாத்தில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ், ஐதராபாத் எப்.சி அணிகள் மோதின.

    கேரளா அணியின் ராகுல் 34-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் கேரளா அணி 1-0 என முன்னிலை பெற்றது. 

    இரண்டாவது பாதியில் ஐதராபாத் அணி வீரர்கள் அபாரமாக ஆடினர். அந்த அணியின் ஸ்டன்கோவிக் 54வது நிமிடத்திலும், பெரைரா 81வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.

    இறுதியில், ஐதராபாத் அணி 2-1 என கேரளா அணியை வீழ்த்தி, தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. 
    ×