என் மலர்tooltip icon

    விளையாட்டு

    புவனேஷ்வரில் நடைபெற்ற ஆண்கள் ஹாக்கி குவாலிபையரில் ரஷியாவை வீழ்த்தி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றது இந்தியா.
    புவனேஷ்வர்:

    ஆண்கள் ஹாக்கி ஒலிம்பிக் குவாலிபையரில் இந்தியா - ரஷியா அணிகள் 2வது லெக்கில் இன்று பலப்பரீட்சை நடத்தின. ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இந்திய வீரர்கள் அதிரடியாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் இறுதியில், இந்திய அணி 7-1 என்ற கோல் கணக்கில் ரஷியாவை வீழ்த்தியது.

    இரண்டு லெக் ஆட்டங்களிலும் பெற்ற ஒட்டுமொத்த கோல்கள் கணக்கின் அடிப்படையில் இந்தியா 11-3 என அதிக கோல்கள் பெற்றது. இதன்மூலம் 2020 டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஆண்கள் ஹாக்கி அணி தகுதி பெற்றது.

    ஏற்கனவே இந்திய பெண்கள் ஹாக்கி அணி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், ஆண்கள் ஹாக்கி அணியும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 
    புவனேஷ்வரில் நடைபெற்ற பெண்கள் ஹாக்கி குவாலிபையரில் அமெரிக்காவை வீழ்த்தி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றது இந்தியா.
    புவனேஷ்வர்:

    பெண்கள் ஹாக்கி ஒலிம்பிக் குவாலிபையரில் இந்தியா - அமெரிக்கா அணிகள் 2வது லெக்கில் இன்று பலப்பரீட்சை நடத்தின.

    ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகளின் ஆட்டம் எடுபடவில்லை.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே அமெரிக்க வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினர். இறுதியில், அமெரிக்க அணி இந்தியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

    அமெரிக்கா இதில் வெற்றி பெற்றாலும், மொத்த கோல்கள் கணக்கின் அடிப்படையில் இந்தியா 6-5 என அதிக கோல்கள் பெற்றது. இதன்மூலம் 2020 டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய பெண்கள் ஹாக்கி அணி தகுதி பெற்றுள்ளது.
    வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டி 20 கிரிக்கெட் போட்டியில், விராட் கோலியை முந்தி ரோகித் சர்மா சாதனை படைப்பாரா என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
    புதுடெல்லி:

    இந்தியா மற்றும் வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டி 20 கிரிக்கெட் போட்டி டெல்லியில் நாளை நடைபெறுகிறது.

    இதற்காக, இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா நேற்று சக வீரர்களுடன் இணைந்து வலைபயிற்சியில் ஈடுபட்டார். அப்போது வலுவாக எறிந்த ஒரு பந்து ரோகித் சர்மாவின் இடது தொடையில் தாக்கி காயத்தை ஏற்படுத்தியதால் பயிற்சியை பாதியில் கைவிட்டு வெளியேறி சிகிச்சை பெற்றார். 

    அவரது காயத்தன்மையை பரிசோதித்த இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ குழு, அவர் உடல்தகுதியுடன் இருப்பதாகவும், முதல் ஆட்டத்தில் விளையாடுவதில் எந்த சிக்கலும் இல்லை என தெரிவித்தது.

    விராட் கோலி

    இந்நிலையில், வங்காளதேசத்துக்கு எதிராக நாளை நடைபெறும் முதல் டி 20 கிரிக்கெட் போட்டியில், விராட் கோலியை முந்தி ரோகித் சர்மா அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனை படைப்பாரா என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

    இந்திய கேப்டன் விராட் கோலி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். விராட் கோலி 67 போட்டிகளில் விளையாடி 2,450 ரன்கள் எடுத்து முதலிடத்தில் இருக்கிறார். அவரை தொடர்ந்து, ரோகித் சர்மா 90 போட்டிகளில் விளையாடி 2443 ரன்களுடன் 2-வது இடத்தில் இருக்கிறார்.

    நாளை நடக்கும் போட்டியில் ரோகித் சர்மா 8 ரன்கள் எடுத்தால், விராட் கோலியின் சாதனையை முறியடித்து அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை படைப்பார் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். 
    டெல்லியில் நாளை நடக்வுள்ள முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியா - வங்காள தேச அணிகளுக்கு 9-வது ஆட்டமாகும்.

    இரு அணிகளும் 20 ஓவரில் நாளை மோதுவது 9-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த 8 ஆட்டத்திலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக கடந்த மார்ச் மாதம் கொழும்பில் நடந்த போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில வெற்றி பெற்று இருந்தது.

    இந்திய அணி அதிக பட்சமாக 180 ரன் குவித்து இருந்தது. வங்காளதேசம் 166 ரன்எடுத்து இருந்தது.

    ரோகித்சர்மா 8 ஆட்டத்தில் 356 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். இதில் 4 அரை சதம் அடங்கும் தவான் 236 ரன் எடுத்து உள்ளார். வங்காளதேச வீரர்களில் சபீர் ரகுமான் 236 ரன்னும் (6 ஆட்டம்), முஷ்பிகுர் ரகீம் 165 ரன்னும் எடுத்து உள்ளனர்.

    வங்காளதேச வீரர்கள் ரூபல் உசேன், அல்அமின் தலா 7 விக்கெட்டும், அஸ்வின் 6 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர்.
    இந்தியா- வங்காளதேசம் அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நாளை நடக்கிறது.
    புதுடெல்லி:

    வங்காளதேச கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் இரண்டு டெஸ்டில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.

    இந்தியா- வங்காளதேசம் அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

    கேப்டன் விராட்கோலிக்கு 20 ஓவர் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ரோகித்சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். பயிற்சியின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. காயம் குணமடைந்ததால் ரோகித்சர்மா விளையாடுவதில் எந்த பிரச்சினையும் இல்லை.

    இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. தற்காலிக கேப்டன் ரோகித்சர்மா, தவான், மனிஷ் பாண்டே, ஷிரேயாஸ் அய்யர், குர்ணல் பாண்டியா, ரி‌ஷப்பந்த், தீபக் சாஹர், வாஷிங்டன் சுந்தர் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    புதுமுக ஆல்ரவுண்டர் ஷிலும் துபே அணிக்கு தேர்வாகி உள்ளார். அவருக்கு 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு வழங்கப்படுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய அணி சமீபத்தில் தென்ஆப்பிரிக்காவுடன் 20 ஓவர் தொடரை சமன் செய்து இருந்தது. சொந்த மண்ணில் விளையாடுவது அந்த அணிக்கு கூடுதல் பலமாகும்.

    வங்காளதேச அணியின் முன்னணி வீரரும், கேப்டனுமான ஷகீப்-அல்-ஹசன் இல்லாதது அந்த அணிக்கு பாதிப்பே. சூதாட்ட தரகர் அணுகியதை ஐ.சி.சி.யிடம் தெரிவிக்காததால் அவருக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மகமதுல்லா தலைமையிலான அணியில் முஷ்பிகுர் ரகீம், முஷ்டாபிகர் ரகுமான், மொஸ்டக் உசேன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    வங்காளதேச அணி சமீபத்தில் சொந்த நாட்டில் நடந்த 3 நாடுகள் 20 ஓவர் போட்டியில் ஆப்கானிஸ்தானுடன் இணைந்து சாம்பியன் பட்டம் பெற்றது.

    டெல்லியில் கடுமையான காற்று மாசு இருப்பதால் அவசர நிலை பிறக்கப்பட்டு உள்ளது. போட்டி நடைபெறும் என்று கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி தெரிவித்தார்.

    காற்று மாசால் வீரர்களின் உடல் நிலைக்கு பாதிப்பு. காற்று மாசு காரணமாக டெல்லி போட்டியை வேறு இடத்துக்கு மாற்றுமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டப்படி அங்கு தான் நடக்குமா? என்ற அச்சம் நிலவுகிறது.

    வங்காளதேச அணியின் பயிற்சியாளர் காற்று மாசு பெரிய பிரச்சினை இல்லை என்று தெரிவித்துள்ளார். வங்காளதேச வீரர்கள் முகமூடி அணிந்து தான் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நாளைய ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இந்தியா: ரோகித்சர்மா (கேப்டன்), தவான், கே.எல்.ராகுல், ஷிரேயாஸ் அய்யர், ரி‌ஷப்பந்த், மனீஷ் பாண்டே, குர்ணால் பாண்டியா, சஞ்சு சாம்சன், கலீல் அகமது, யசுவேந்திர சாஹல், தீபக் சாஹர், ராகுல் சாகர், ‌ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர்.

    வங்காளதேசம்: மகமதுல்லா (கேப்டன்), லிட்டன் தாஸ், சவுமியா சர்க்கார், முகமது நயீம், முஷ்பிகுர் ரகீம், அதீப் உசேன், மொஸ்டக் உசேன், அமினுல் இஸ்லாம், அரபாத் சன்னி, அல்-அமின் உசேன், முஷ்டாபிசுர் ரகுமான், ஷீசைபுல் இஸ்லாம், முகமது மிதுன், தஜில இஸ்லாம், அபு ஹைதா.
    35-வது தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக தடகள அணிக்கு 148 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    சென்னை:

    35-வது தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஆந்திர மாநிலம் குண்டூரில் இன்று முதல் 6-ந் தேதி வரை நடக்கிறது.

    இந்த போட்டிக்கான தமிழக அணியை, தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா அறிவித்துள்ளார். அணியில் மொத்தம் 148 பேர் இடம் பிடித்துள்ளனர்.

    ஆண்கள் அணியில் அருண்குமார் (100 மீட்டர் ஓட்டம்), அவினாஷ் (400 மீட்டர் ஓட்டம்), கவுரவ் யாதவ் (800 மீட்டர் ஓட்டம்), சதீஷ்குமார் (5 ஆயிரம், 10 ஆயிரம் மீட்டர் ஓட்டம்), ஹரேஷ் ராம் (200 மீட்டர் ஓட்டம், 110 மீட்டர் தடை ஓட்டம்), எபிநேசர் (குண்டு எறிதல், வட்டு எறிதல்) உள்பட 72 வீரர்களும், பெண்கள் அணியில் ஷெரின் (100 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல்), ரோஷினி (200, 400 மீட்டர் ஓட்டம்), ஐஸ்வர்யா (100 மீட்டர் தடை ஓட்டம், டிரிபிள்ஜம்ப்), தபிதா (100 மீட்டர் தடை ஓட்டம், நீளம் தாண்டுதல்) உள்பட 76 வீராங்கனைகளும் இடம் பெற்றுள்ளனர்.
    ஷகிப் அல்-ஹசன் விவகாரம் வங்காளதேச அணியின் ஆட்டத்திறனை பாதிக்கும் என்று அதன் பயிற்சியாளர் டொமிங்கோ கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    இந்தியாவுக்கு வந்துள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது 20 ஓவர் போட்டி டெல்லியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி வங்காளதேச அணி வீரர்கள் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். அங்கு காற்றில் மாசு அதிகரித்து ஒரே புகைமண்டலமாக காட்சி அளிப்பதால் சில வீரர்களும், தலைமை பயிற்சியாளர் ரஸ்செல் டொமிங்கோ, சுழற்பந்து வீச்சு ஆலோசகர் டேனியல் வெட்டோரி ஆகியோரும் பயிற்சியின்போது சுவாச கவசம் அணிந்து இருந்தனர்.

    பின்னர் பயிற்சியாளர் ரஸ்செல் டொமிங்கோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    வங்காளதேச அணியின் மிக முக்கியமான வீரராக ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் விளங்கினார். அணியில் அவருக்கு நெருக்கமான நண்பர்கள் நிறைய பேர் உள்ளனர். இப்போது ஷகிப் அல்-ஹசனுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் (சூதாட்ட தரகர் தொடர்பு கொண்டதை மறைத்த குற்றத்துக்காக 2 ஆண்டு தடை) அது சில வீரர்களை வெகுவாக பாதித்துள்ளது. அவர் தவறு செய்து விட்டார். அதற்குரிய பலனை அனுபவிக்கிறார். இருப்பினும் ஷகிப் அல்-ஹசன் விவகாரம் அணியின் செயல்பாட்டை நிச்சயம் பாதிக்கும். அவர் இல்லாதது எங்களுக்கு மிகப்பெரிய இழப்பாகும். ஆனால் அதை மறந்து விட்டு நாங்கள் இந்தியாவுக்கு எதிரான தொடர் மீதும் அடுத்து வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மீதும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

    தனிப்பட்ட முறையில் ஷகிப் அல்-ஹசன் குறித்து அதிகமாக தெரிந்து கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அவர் மீது வீரர்கள் இடையே மிகுந்த மரியாதை இருக்கிறது. பெரும்பாலும் அவர் பேட்டிங்கில் 3-வது வரிசையில் களம் இறங்குவார். தொடக்கத்திலேயே பவுலிங் செய்வார். அல்லது தொடக்க கட்ட பந்து வீச்சை மாற்றும் போது அவர் அழைக்கப்படுவார். ஒவ்வொரு 20 ஓவர் ஆட்டத்திலும் 4 ஓவர்களை கச்சிதமாக வீசக்கூடிய திறமைசாலி. எங்கள் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர். எனவே அவருக்கு பதிலாக பேட்ஸ்மேனை சேர்ப்பதா அல்லது பந்து வீச்சாளரை சேர்ப்பதா? என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும். ஏனெனில் அவரை போன்று பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் அசத்தக்கூடிய வீரர் கிடைப்பது மிகவும் கடினம். சீதோஷ்ண நிலையை பொறுத்து ஆடும் லெவன் அணியை முடிவு செய்வோம்.

    டெல்லியில் நிலவும் காற்று மாசு விவகாரம் குறித்து கேட்கிறீர்கள். கடந்த முறை இங்கு இலங்கை அணி வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியபோது காற்று மாசுபாட்டினால் தடுமாறியதை அறிவோம். வங்காளதேசத்திலும் கொஞ்சம் காற்று மாசு பிரச்சினை உள்ளது. அதனால் எங்களுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியாக இல்லை. வெறும் 3 மணி நேரம் மட்டுமே களத்தில் நாங்கள் விளையாடப்போகிறோம். அதனால் எளிதாகத் தான் இருக்கும். கண்ணில் எரிச்சலோ அல்லது தொண்டையில் வலியோ ஏற்படலாம். அதனால் சமாளித்துக் கொள்ளலாம். யாரும் செத்து விடப்போவதில்லை.

    என்றாலும் போட்டிக்கு உகந்த சீதோஷ்ண நிலை இங்கு இல்லை. இரு அணிகளும் ஒரே மாதிரியான சூழலில் தான் விளையாடப்போகின்றன. ஆட்டம் தொடங்கியதும் அது பற்றி புகார் சொல்வதற்கு எதுவும் இருக்காது.

    இவ்வாறு டொமிங்கோ கூறினார்.
    வலை பயிற்சியின்போது பந்து தாக்கி இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா காயம் அடைந்தார்.
    புதுடெல்லி:

    வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நாளை நடப்பதையொட்டி இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா நேற்று சக வீரர்களுடன் இணைந்து வலைபயிற்சியில் ஈடுபட்டார். 

    வங்காளதேச இடக்கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமானின் தாக்குதலை சமாளிக்கும் வகையில் பயிற்சிக்காக இலங்கையை சேர்ந்த இடக்கை வேகப்பந்து வீச்சாளர் நுவான் அழைக்கப்பட்டு இருந்தார். அவர் வலுவாக எறிந்த ஒரு பந்து ரோகித் சர்மாவின் இடது தொடையில் தாக்கி காயத்தை ஏற்படுத்தியது. இதனால் ரோகித் சர்மா பயிற்சியை பாதியில் கைவிட்டு வெளியேறி சிகிச்சை பெற்றார். 

    அதன் பிறகு மீண்டும் பயிற்சிக்கு வரவில்லை. அவரது காயத்தன்மை குறித்து பரிசோதித்த இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ குழு, அவர் உடல்தகுதியுடன் இருப்பதாகவும், முதலாவது ஆட்டத்தில் விளையாடுவதில் எந்த சிக்கலும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
    அசாமில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நார்த் ஈஸ்ட், கோவா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.
    கவுகாத்தி:

    10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி மற்றும் எப்.சி கோவா அணிகள் மோதின.

    கோவா அணியின் ஹியூகோ பவ்மாஸ் 31-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் கோவா அணி 1-0 என முன்னிலை வகித்தது. 

    இரண்டாவது பாதியில் நார்த் ஈஸ்ட் அணி வீரர்கள் பதிலுக்கு 2 கோல்கள் அடித்து அதிர்ச்சி கொடுத்தனர். இறுதியில், கோவா அணியின் மன்வீர் சிங் 95வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து, நார்த் ஈஸ்ட் - கோவா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்தது. 
    சீனாவில் நடைபெற்று வரும் டபிள்யூடிஏ பைனல்ஸ் டென்னிஸில் பிளிஸ்கோவா, ஸ்விடோலினா அரையிறுதிக்கு முன்னேறினர்.
    சீனாவில் உள்ள ஷென்சென்னில் டபிள்யூடிஏ பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் பிளிஸ்கோவை சிமோனா ஹாலெப்பை எதிர்கொண்டார். இதில் பிளிஸ்கோவா 6-0, 2-6, 6-4 என ஹாலெப்பை வீழ்த்தினார். இதன் மூலம் அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் ஸ்விட்டோலினா கெனின்-ஐ எதிர்கொண்டார். இதில் ஸ்விடோலினா 7-5, 7(12)-6(10) என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    அரையிறுதியில் போட்டிகளில் ஸ்விடோலினா - பென்சிக், ஆஷ்லே பார்ட்டி - பிளிஸ்கோவா பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
    ஒடிசா புவனேஷ்வரில் நடைபெற்ற பெண்கள் ஹாக்கி ஒலிம்பிக் குவாலிபையர் முதல் லெக்கில் அமெரிக்காவை 5-1 என வீழ்த்தியது இந்தியா.
    பெண்கள் ஹாக்கி ஒலிம்பிக் குவாலிபையரில் இந்தியா - அமெரிக்கா அணிகள் முதல் லெக்கில் இன்று பலப்பரீட்சை நடத்தின. ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    ஆட்டத்தின் முதல் கால் பகுதி நேரத்தில் இரு அணி வீராங்கனைகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது காலிறுதி நேர ஆட்டத்தில் இந்தியாவின் கை ஓங்கியது. 28-வது நிமிடத்தில் லிலிமா முதல் கோலை பதிவு செய்தார்.

    அதன்பின் 3-வது காலிறுதி நேரத்தில் ஷர்மிளா ஒரு கோலும், குர்ஜித் இரண்டு கோல்களும் அடித்தனர். இதனால் இந்தியா 4-0 என முன்னிலைப் பெற்றிருந்தது. 4-வது மற்றும் கடைசி காலிறுதி ஆட்டம் தொடங்கியதும் 46-வது நிமிடத்தில் நவ்நீத் கோல் அடிக்க இந்தியா 5-0 என வலுவான நிலையில் முன்னிலைப் பெற்றது.

    ஆறுதலாக அமெரிக்காவின் மேட்சன் 54-வது நிமிடத்தில் கோல் அடிக்க இந்தியா 5-1 என வெற்றி பெற்றது. 2-வது லெக் நாளை நடக்கிறது. இரண்டு லெக்கிலும் யார் அதிக கோல் அடிக்கிறார்களோ அந்த அணி வெற்றி பெறும்.
    கேன் வில்லியம்சனின் பந்து வீச்சு ஆக்சனில் தவறு ஏதும் இல்லை என்று சர்வதேச கிரிக்கெட் கமிட்டி நற்சான்றிதழ் வழங்கியுள்ளது.
    காலே மைதானத்தில் இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் மூன்று ஓவர்கள் வீசி விக்கெட் ஏதும் எடுக்காமல் 9 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

    கேன் வில்லியம்சனின் பந்து வீச்சு ஆக்சன் குறித்து புகார் அளிக்கப்பட்டது. இதனால் அவரது பந்து வீச்சு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

    அப்போது ஐசிசி அனுமதித்துள்ள 15 டிகிரிக்கு மேல் அவரது கை வளையவில்லை என்பது தெரியவந்தது. இதனால் கேன் வில்லியம்சனை தொடர்ந்து பந்து வீச ஐசிசி அனுமதித்துள்ளது.

    ஏற்கனவே 2014-ல் இதுபோன்று புகார் எழுப்பப்பட்டது. அப்போது அவரது பந்து வீச்சில் சில மாற்றங்களை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×