என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்து அணி 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    நெல்சன்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான ஐந்து 20 ஓவர் போட்டி தொடரில் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் நியூசிலாந்து 21 ரன்னில் வெற்றி பெற்றது.

    இந்த நிலையில் இரு அணிகள் மோதிய 3-வது 20 ஓவர் போட்டி இன்று நடந்தது.

    நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன் குவித்தது.

    கிராண்ட்ஹோம் 35 பந்தில் 55 ரன்னும் (5 பவுண்டரி, 3 சிக்சர்), குப்தில் 17 பந்தில் 33 ரன்னும் (7 பவுண்டரி) எடுத்தனர்.

    இங்கிலாந்து தரப்பில் டாம்கரண் 2 விக்கெட்டும், சாம்கரண், மகமூத், பிரவுன், பார்க்கின்சன் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட்டு இழப்புக்கு 166 ரன்னே எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    டேவிட் மலன் 34 பந்தில் 55 ரன்னும் (8 பவுண்டரி, 1 சிக்சர்), வின்ஸ் 39 பந்தில் 49 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். புக்னர் 2 விக்கெட்டும், பெர்குசன், சான்ட்னெர், சோதி தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    இங்கிலாந்து அணி தொடர்ந்து 2 ஆட்டத்தில் தோல்வியை தழுவியுள்ளது.

    இந்த வெற்றி மூலம் நியூசிலாந்து அணி 5 போட்டி கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 4-வது ஆட்டம் வருகிற 8-ந் தேதி நேப்பியரில் நடைபெறுகிறது.
    உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 31-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் 3 நிலைக்கும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) கேப்டனாக இருப்பவர் விராட் கோலி.

    உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழும் அவர் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் அபாரமாக விளையாடி வருகிறார்.

    இதனால் அவர் பல்வேறு சாதனைகளை புரிந்து வேறு எந்த பேட்ஸ்மேனுக்கும் ஈடு கொடுக்க முடியாத அளவுக்கு உச்சத்தில் இருந்து வருகிறார். பேட்டிங்கில் மட்டுமல்லாமல் கேப்டன் பதவியிலும் அவர் மிகவும் சிறப்பான நிலையில் இருக்கிறார். தற்போது வங்காள தேசத்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் விராட் கோலி தனது 31-வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். அவர், மனைவி அனுஷ்கா சர்மாவுடன் நேபாளத்தில் இருக்கிறார். அங்குள்ள மக்களை சந்தித்து அவர் தனது பொழுதை போக்கி மகிழ்ச்சியுடன் இருந்து வருகிறார்.

    வங்காளதேசத்துக்கு எதிரான 2 டெஸ்ட் தொடரில் கோலி விளையாடுகிறார். அப்போது அவர் அணியுடன் இணைந்து கொள்வார்.

    விராட் கோலி சர்வதேச போட்டிகளில் 21 ஆயிரத்து 36 ரன் எடுத்துள்ளார். 82 டெஸ்டில் விளையாடி 7,066 ரன்னும் (26 சதம், 22 அரை சதம்), 239 ஒரு நாள் போட்டியில் விளையாடி 11,520 ரன்னும் (43 சதம், 54 அரை சதம்) எடுத்துள்ளார்.

    72 இருபது ஓவரில் விளையாடி 2,450 ரன் எடுத்துள்ளார். 22 அரை சதம் இதில் அடங்கும். 20 ஓவர் போட்டியில் அவர் இதுவரை சதம் அடிக்கவில்லை.
    தேசிய ஜூனியர் தடகள போட்டியில் 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை தபிதா சாதனையுடன் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.
    குண்டூர்:

    35-வது தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஆந்திர மாநிலம் குண்டூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை தபிதா 13.70 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.

    இதற்கு முன்பு கடந்த ஆண்டில் கேரள வீராங்கனை அபர்ணா ராய் 13.76 வினாடியில் பந்தய தூரத்தை கடந்ததே சாதனையாக இருந்தது. தபிதா நீளம் தாண்டுதலிலும் தங்கம் வென்று இருந்தார். சாதனை படைத்த தபிதா சென்னை பிராட்வேயில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சியாளரும், மத்திய கலால் வரி சூப்பிரண்டுமான நாகராஜனிடம் பயிற்சி பெற்றவர் ஆவார்.
    உலக டென்னிஸ் தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார்.
    பாரீஸ்:

    உலக டென்னிஸ் வீரர்களின் ஒற்றையர் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் வெளியிட்டது. இதன்படி ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் (9,585 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி முதல் இடத்தை பிடித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் 4-ந் தேதிக்கு பிறகு ரபேல் நடால் முதல்முறையாக நம்பர் ஒன் இடத்தை ஆக்கிரமித்து இருக்கிறார்.

    ஒட்டுமொத்தத்தில் 8-வது முறையாக நடால் முதலிடத்தை தனதாக்கி இருக்கிறார். முதல் இடத்தில் இருந்த செர்பியா வீரர் ஜோகோவிச் (8,945 புள்ளிகள்) ஒரு இடம் சரிந்து 2-வது இடத்தை பெற்றுள்ளார்.
    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஆட்டத்தின் சுவாரஸ்யத்தையும், விறுவிறுப்பையும் மேலும் அதிகரிக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.
    மும்பை:

    அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஆட்டத்தின் சுவாரஸ்யத்தையும், விறுவிறுப்பையும் மேலும் அதிகரிக்கும் வகையில் மாற்று வீரரை தேவையான தருணத்தில் களம் இறக்கும் புதிய முறையை அமல்படுத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

    ஆட்டத்தின் போக்கை மாற்றும் வகையில் ‘பவர் பிளேயர்’ என்ற முறையை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதாவது ஆடும் லெவன் அணியில் இடம் பெறாத வீரர் ஒருவர் ஆட்டத்தின் சூழலுக்கு தேவைப்படும் நிலை ஏற்படும் போது களம் இறங்கி விளையாட முடியும். விக்கெட் விழும் போதோ? அல்லது ஓவர் முடிவின் போதே அந்த பவர் பிளேயர் களம் காண முடியும்.
    உதாரணமாக கடைசி ஓவரில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்படும் நிலையில் அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரஸ்செல் ஆடும் லெவன் அணியில் இடம் பெறாமல் வெளியில் இருக்கும் பட்சத்தில் அவரை பவர் பிளேயராக களம் இறக்க முடியும்.

    பந்து வீச்சிலும் இதேபோல் வீரரை மாற்றம் செய்யலாம். எடுத்துக்காட்டாக மும்பை அணி கடைசி ஓவரில் எதிரணியை 6 ரன்னுக்குள் கட்டுப்படுத்த வேண்டிய நிலையில் அந்த அணியின் முன்னணி பவுலர் பும்ரா வெளியில் இருந்தால் அவரை களம் இறக்கி கொள்ள முடியும். இது குறித்து மும்பையில் இன்று நடைபெறும் ஐ.பி.எல். நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் ஆலோசனை செய்து இறுதி முடிவு எடுக்கப்படுகிறது.
    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.
    ஆன்டிகுவா:

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 191 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக பூனம் ராவத் 77 ரன்னும், ஹர்மன்பிரீத் கவு 46 ரன்னும், கேப்டன் மிதாலிராஜ் 40 ரன்னும் எடுத்தனர்.
     
    அடுத்து 192 ரன்கள் இலக்கை நோக்கி களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியினரின் பந்து வீச்சில் சுருண்டனர்.

    50 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 138 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆகி 53 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கேம்பெல் 39 ஸ்டபானிஸ் டெய்லர் 20 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் விரைவில் அவுட்டாகினர்.

    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் வெஸ்ட் இண்டீஸ் அணி 1-1 என்ற கணக்கில் சமனிலை வகிக்கிறது. 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இதே மைதானத்தில் நாளை மறுதினம் நடக்கிறது.
    கேதார் ஜாதவ், ஜெயிஸ்வால் ஆகியோரின் அரை சதம் மற்றும் ஷாபாஸ் நதீமின் அபார பந்து வீச்சால் இந்தியா பி அணி தியோதர் டிராபியை கைப்பற்றி அசத்தியது.
    ராஞ்சி:
       
    இந்தியாவின் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடும் தியோதர் டிராபி தொடரின் இறுதிப் போட்டி ஜார்க்கண்டில் இன்று நடைபெற்றது.

    ராஞ்சியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா ‘பி்’ மற்றும் இந்தியா ‘சி’ அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அந்த அணியின் தொடக்க வீரர்கள் சோபிக்கவில்லை. அடுத்து இறங்கிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 54 ரன்னில் அவுட்டானார்.

    தொடர்ந்து இறங்கிய கேதார் ஜாதவ் நிதானமாக ஆடி அரை சதமடித்தார். அவர் 86 ரன்னில் வெளியேறினார். விஜய் சங்கர் 45 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் களமிறங்கிய கவுதம் கிருஷ்ணப்பா 10 பந்துகளில் 3 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், இந்தியா பி அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் எடுத்தது.

    இந்தியா சி சார்பில் இஷான் போரல் 5 விக்கெட் வீழ்த்தினார். 

    இதையடுத்து, 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா சி களமிறங்கியது. அந்த அணியில் அதிகபட்சமாக பிரியம் கார்க் 74 ரன்கள் எடுத்தார். அக்சர் படேல் 38 ரன்னும், ஜலாஜ் சக்சேனா 37 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், இந்தியா சி அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 232 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

    இந்தியா பி அணி சார்பில் ஷாபஸ் நதீம் 4 விக்கெட்டும், மொகமது சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் இந்தியா பி அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தியோதர் டிராபியை கைப்பற்றி அசத்தியது.
    அமெரிக்காவில் நடைபெற்ற ‘பார்முலா1’ கார் பந்தயத்தில் ஹேமில்டன் 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை பெற உள்ளார்.

    நியூசிலாந்து:

    கார் பந்தய போட்டிகளில் பிரசித்தி பெற்றது ‘பார்முலா 1’ பந்தயமாகும். இந்த ஆண்டுக்கான ‘பார்முலா1’ கார் பந்தயம் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. 19-வது ரவுண்டான அமெரிக்க கிராண்ட் பிரீ பந்தயம் நியூ ஜெர்சியில் நேற்று நடந்தது.

    இந்தப் போட்டியில் பின்லாந்து வீரர் போட்டஸ் வெற்றி பெற்றார். அவர் இந்த சீசனில் பெற்ற 4-வது வெற்றியாகும். ஏற்கனவே ஆஸ்திரேலியன், அசெர் பைசான், ஜப்பான் கிராண்ட் பிரீ பந்தயங்களில் வெற்றி பெற்று இருந்தார்.

    இந்த பந்தயத்தில் இங்கிலாந்தை சேர்ந்த லீவிஸ் ஹேல்மில்டன் 2-வது இடத்தை பிடித்தார். இதன் மூலம் அவர் ‘பார்முலா 1’ பந்தயத்தில் சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தார். அவர் 381 புள்ளிகள் பெற்று உள்ளார். இன்னும் 2 சுற்றுகள் இருப்பதால் ஹேமில்டன் சாம்பியன் பட்டம் பெறுகிறார்.

    போட்டஸ் 314 புள்ளியுடன் 2-வது இடத்திலும், சார்லஸ் லெசிர்க் 249 புள்ளியுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

    ‘பார்முலா1’ கார் பந்தயத்தில் ஹேமில்டன் 6-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். அவர் தொடர்ந்து ‘ஹாட்ரிக்’ பட்டம் பெற்றுள்ளார். ஹேமில்டன் 2008, 2014, 2015, 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் ‘பார்முலா 1’ போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்று இருக்கிறார்.

    ஜெர்மனியை சேர்ந்த மைக்கேல் சுமேக்கர் அதிக பட்சமாக 7 தடவை (1994, 1995, 2000, 2001, 2002, 2003, 2004) பட்டம் பெற்றுள்ளார். 34 வயதான ஹேமில்டன் 6 பட்டம் பெற்று 2-வது இடத்தில் உள்ளார்.

    டெல்லியில் நடைபெற்ற 20 ஓவர் போட்டியில் இந்தியாவை முதல் முறையாக வங்காள தேசம் வீழ்த்தியது குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா கருத்து தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    20 ஓவர் போட்டியில் இந்தியாவை முதல் முறையாக வங்காள தேசம் வீழ்த்தியது.

    டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்னே எடுக்க முடிந்தது. தவான் 41 ரன்னும், ரி‌ஷப்பண்ட் 27 ரன்னும், ஷிரேயாஸ் அய்யர் 22 ரன்னும் எடுத்தனர். சைபுல் இஸ்லாம், அமினுல் இஸ்லாம் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். வங்காள தேசம் தரப்பில் 8 வீரர்கள் பந்து வீசினார்கள்.

    149 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் வங்காளதேசம் ஆடியது.

    அந்த அணி 3 பந்து எஞ்சி இருந்த நிலையில் இலக்கை எடுத்தது. வங்காளதேசம் 19.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 154 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தியாவுக்கு எதிராக அந்த அணி முதல் முறையாக வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றது.

    முஷ்பிகுர் ரகீம் 43 பந்தில் 60 ரன்னும் (8 பவுண்டரி, 1 சிக்சர்), சவுமியா சர்க்கார் 35 பந்தில் 39 ரன்னும் ( 1 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். தீபக் சாஹர், கலீல் அகமது, யசுவேந்திர சாஹல் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    இந்திய அணி வங்காள தேசத்துக்கு எதிராக முதல் முறையாக 20 ஓவர் போட்டியில் தோல்வியை தழுவியது. இதற்கு முன்பு நடந்த 8 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருந்தது. 

    இந்த தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது:-

    148 ரன் என்பது இந்த ஆடுகளத்தில் மோசமானது. பீல்டிங்கில் நாங்கள் செய்த தவறுகளால் வெற்றி வாய்ப்பை இழந்தோம். இதுவே தோல்விக்கு காரணமாக அமைந்தது. மேலும் பல வீரர்கள் அனுபவம் இல்லாதவர்கள் ஆவார்கள். நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.

    நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ்.சில் நாங்கள் தவறு செய்து விட்டோம். வங்காள தேசம் அணி பேட்டிங் செய்த போது நெருக்கடி இருந்தது. இதை நாங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டோம்.

    யசுவேந்திர சாஹல் 20 ஓவர் பேட்டிக்கு ஏற்ற வீரர். அவர் அணிக்கு முக்கியமானவர். எப்படி செயல்பட வேண்டும் என்பதை அவர் புரிந்து வைத்து இருக்கிறார்.

    இவ்வாறு ரோகித்சர்மா கூறியுள்ளார்.

    இந்திய அணியின் பீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. கர்ணல் பாண்ட்யா எல்லை கோட்டில் நின்ற போது முஷ்பிகுர் ரகீம் அடித்த பந்தை எளிதில் கேட்ச் பிடிக்காமல் நழுவ விட்டார். இதே போல் டி.ஆர்.எஸ். முறையை சரியான முறையில் கைமாறி தவறின. இளம் விக்கெட் கீப்பர் ரி‌ஷப்பண்ட் இதில் சிறப்பாக செயல்பட முடியவில்லை. இது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.

    இந்த வெற்றி மூலம் 3 போட்டிக் கொண்ட தொடரில் வங்காளதேசம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 2-வது ஓவர் ஆட்டம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் வருகிற 7-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.

    பிரான்சில் நடைபெற்ற பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நோவக் ஜோகோவிச் டெனிஸ் ஷபோவலோவை வென்று 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
    பாரீஸ்:

    பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி பிரான்சில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் டெனிஸ் ஷபோவலோவை (கனடா) வீழ்த்தி 5-வது முறையாக இங்கு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அவருக்கு ரூ.7¾ கோடி பரிசுத்தொகையும், ஆயிரம் தரவரிசை புள்ளிகளும் கிடைத்தது.

    ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் இத்தகைய ஏ.டி.பி. மாஸ்டர்ஸ் தொடரை ஜோகோவிச் வெல்வது இது 34-வது முறையாகும். இந்த வகையில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் முன்னணியில் (35 பட்டம்) இருக்கிறார். இந்த வெற்றியின் மூலம் ஆண்டின் இறுதியில் நம்பர் ஒன் இடத்தை தக்கவைப்பதை ஜோகோவிச் நெருங்கியுள்ளார்.
    ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டில் நடக்கும் 16 அணிகள் இடையிலான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இறுதி அட்டவணையை ஐ.சி.சி. வெளியிட்டது.
    துபாய்:

    ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்றில் டாப்-6 இடங்களை பிடித்த நெதர்லாந்து, பப்புவா நியூ கினியா, அயர்லாந்து, நமிபியா, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய அணிகள் அடுத்த ஆண்டு நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றன.

    7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2020) அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான இறுதி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது.

    இதன்படி ‘ஏ’ பிரிவில் இலங்கை, பப்புவா நியூ கினியா, அயர்லாந்து, ஓமன் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் வங்காளதேசம், நெதர்லாந்து, நமிபியா, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன. அக்டோபர் 18-ந்தேதி நடக்கும் தொடக்க ஆட்டத்தில் இலங்கை-அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்12 சுற்றுக்கு முன்னேறும்.

    சூப்பர்12 சுற்றிலும் அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு பிரிவில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இரு லீக் சுற்று அணிகள், மற்றொரு பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் இரு லீக் சுற்று அணிகள் அங்கம் வகிக்கின்றன.

    முன்னாள் சாம்பியனான இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை அக்டோபர் 24-ந்தேதி பெர்த்தில் சந்திக்கிறது. அதே நாளில் சிட்னியில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியா, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

    சூப்பர்12 சுற்றில் இருந்து 4 அணிகள் அரையிறுதிக்கு தேர்வாகும். இறுதிப்போட்டி 2020-ம் ஆண்டு நவம்பர் 15-ந்தேதி மெல்போர்னில் அரங்கேறுகிறது.
    டெல்லியில் நடைபெற்ற முதல் டி 20 போட்டியில் வங்காளதேசம் அணி இந்தியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
    புதுடெல்லி:

    இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடைபெற்றது.

    டாஸ் வென்ற வங்காளதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியாவின் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

    ரோகித் சர்மா 9 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். கே.எல்.ராகுல் 15 ரன்னிலும், ஷ்ரேயாஸ் அய்யர் 22 ரன்னிலும் அவுட்டாகினர்.
    பொறுப்புடன் ஆடிய ஷிகர் தவான் 4 1 ரன்னில் வெளியேறினார். 

    இறுதியில், இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 148 ரன்கள் சேர்த்தது.

    இதையடுத்து, 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது. அந்த அணியின் லித்தன் தாஸ், மொகமது நயீம் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

    லித்தன் தாஸ் 7 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய சவுமியா சர்க்கார் நயீமுடன் அதிரடியாக ஆடினார். இருவரும் இணைந்து 46 ரன்கள் சேர்த்த நிலையில் நயீம் 26 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து இறங்கிய முஷ்பிகுர் ரஹிம் சவுமியா சர்க்காருடன் இணைந்து பொறுப்புடன் ஆடினார். கிடைத்த பந்துகளில் ஒன்று, இரண்டு, பவுண்டரி என அடித்தனர். இந்த ஜோடி 62 ரன்கள் சேர்த்தபோது சவுமியா சர்க்கார் அவுட்டானார். சர்க்கார் 39 ரன்னில் ஆட்டமிழந்தார். 

    அப்போது வங்காளதேசம் 18 பந்தில் 35 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை இருந்ததால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இறுதியில், வங்காளதேசம் அணி 3 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. முஷ்பிகுர் ரஹிம் அபாரமாக ஆடி அரை சதமடித்தார். 

    இது இந்தியாவுக்கு எதிரான முதல் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் டி 20 தொடரில் 1-0 என வங்காளதேசம் முன்னிலை வகிக்கிறது.
    ×