என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பிக் பாஷ் நடப்பு சாம்பியன் அணியான மெல்போர்ன் ரெனேகட்ஸ் பாகிஸ்தான் வீரர்களான உஸ்மான் ஷின்வாரி, பஹீம் அஷ்ரஃப் ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ளது.
    ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 லீக் தொடர் வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் அணியான மெல்போர்ன் ரெனேகட்ஸ் பாகிஸ்தானைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் உஸ்மான் ஷின்வாரி, ஆல்-ரவுண்டர் பஹீம் அஷ்ரஃப் ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ளது.

    ஷின்வாரி தொடரின் முதல் ஏழு ஆட்டங்களில் விளையாடுவார். அதன்பின் இங்கிலாந்தைச் சேர்ந்த ஹேரி கர்னி அவருக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்படுவார். உஸ்மான் ஷின்வாரி ஏற்கனவே கடந்த முறை மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். 7 போட்டிகளில் 8 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். ஓவருக்கு சராசரியாக 6.14 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார்.

    முதல் 8 போட்டிகளில் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி விளையாடுவார். பின்னர் அவருக்குப் பதிலாக பஹீம் அஷ்ரப் விளையாடுவார். பஹீம் அஷ்ரஃப் பாகிஸ்தான் சூப்பர் லீக் 2019 சீசனில் 12 இன்னிங்சில் 21 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.
    இந்தியாவைச் சேர்ந்த மோன்டி தேசாய் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. நாளைமறுதினம் (டிசம்பர் 6-ந்தேதி) டி20 தொடர் தொடங்குகிறது.

    இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவைச் சேர்ந்த மோன்டி தேசாய்-ஐ பேட்டிங் பயிற்சியாளராக நியமித்துள்ளது. இவரது பதவிக் காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும்.

    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் இருந்தே பயிற்சியாளர் பதவியை ஏற்க உள்ளார். இவர் ஏற்கனவே கனடா அணியின் தலைமை பயிற்சியாளராகவும், 2018-ல் ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை தகுதிச்சுற்று தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார்.

    சமீபத்தில் முடிவடைந்த ஐசிசி டி20 உலக கோப்பை தகுதிச் சுற்றுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார்.
    உலகின் தலைசிறந்த ஓட்டப்பந்தய வீரர்களில் ஒருவரான யோகன் பிளேக், ஐபிஎல் டி20 லீக்கில் விளையாட ஆசை என்று தெரிவித்துள்ளார்.
    உலகின் தலைசிறந்த ஓட்டப்பந்தய வீரராக திகழ்ந்தவர் உசைன் போல்ட். 8 ஒலிம்பிக் பதக்கம் வென்ற போல்ட், ஓட்டப்பந்தயத்தில் இருந்து ஓய்வு பெற்றபின் கால்பந்து போட்டியில் விளையாட விரும்பினார்.

    இதற்காக புருஸ்சியா டார்ட்மண்ட் அணியில் இணைந்து பயிற்சி மேற்கொண்டார். அதன்பின் ஆஸ்திரேலியா கால்பந்து கிளப் அணியான சென்ட்ரல் கோஸ்ட் மரைனர்ஸ் (Central Coast Mariners) அணிக்காக விளையாடினார்.

    மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரரான யோகன் பிளேக், டோக்கியோ ஒலிம்பிக் தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

    யோகன் பிளேக் சாலை பாதுகாப்பு உலகத் தொடர் டி20 லீக்கை பிரபலம் படுத்துவதற்கான நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்தியா வந்தார்.

    உசைன் போல்டுக்கு கால்பந்து மீது ஆர்வம் இருந்ததுபோல், யோகன் பிளேக்கிற்கு கிரிக்கெட் மீது ஆசை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து யோகன் பிளேக் கூறுகையில் ‘‘நான் இன்னும் இரண்டு ஆண்டுகள் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்வேன். அதன்பின் கிரிக்கெட்டில் விளையாட ஆர்வம் காட்டுவேன். ஆனால் வெஸ்ட் இண்டீஸில் விளையாட விரும்பவில்லை.

    நான் டி20 லீக்கில் விளையாட விரும்புவேன். இது இந்தியாவில் உள்ள அணியாக இருக்கும். அது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அல்லது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியாக இருக்கலாம்.

    கிறிஸ் கெய்ல் ஆர்சிபி அணிக்காக நீண்ட காலம் விளையாடி உள்ளார். எனக்கு பெங்களூர் அணி பிடிக்கும். குறிப்பாக அந்த அணியில் உள்ள விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸும் பிடிக்கும். மேலும், கொல்கத்தா அணியும் பிடிக்கும். ஏனென்றால், கிறிஸ் கெய்ல் அந்த அணிக்காகவும் விளையாடியுள்ளார்.

    கரிபீயன் பிரிமீயர் லீக்கில் ஜமைக்கா தல்லாவாஸ் அணி என்னை அணுகியது. ஆனால் நான் முடியாது என்று தெரிவித்துள்ளேன். அப்போது நான் உலக சாம்பியன்ஷிப்ஸ் தொடருக்காக பயிற்சியில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தேன்.’’ என்றார்.
    நாங்கள் கத்துக்குட்டி அணிதான் என்றாலும், இந்தியா தொடரில் எதுவும் சாத்தியமாகலாம் என பொல்லார்டு தெரிவித்துள்ளார்.
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. டி20 கிரிக்கெட் தொடர் முதலில் நடக்கிறது. முதல் ஆட்டம் ஐதராபாத்தில் நாளைமறுநாள் (6-ந்தேதி) நடக்கிறது.

    வெஸ்ட் இண்டீஸ்  அணியின் கேப்டனாக பொல்லார்டு உள்ளார். இந்திய அணியை விட நாங்கள் பின்தங்கிய நிலையில்தான் (Underdogs) உள்ளோம். ஆனால் எதுவும் சாத்தியம் என்று தெரிவித்துள்ளார்.

    இந்திய தொடர் குறித்து பொல்லார்டு கூறுகையில் ‘‘நாங்கள் கடினமான எதிரணியை எதிர்த்து விளையாட இருக்கிறோம். நாங்கள் அவர்களைவிட பின்தங்கிய அணிதான் (Underdogs). இதில் எந்த பிரச்சனையும் இல்லை.

    நாங்கள் எங்களுடைய திறமை மீது நம்பிக்கை வைத்து திட்டத்தை வெளிப்படுத்துவதை பொறுத்துதான் வெற்றி அமையும். ஒருமுறை நாங்கள் இதில் வெற்றி பெற்றால், எதுவும் சாத்தியமே.

    பீல்டிங், பேட்டிங், பவுலிங் என அனைத்து துறையிலும் சிறப்பாக செயல்படுவது அவசியம். இதில் சரியாக செயல்படும் அணியே பெரும்பாலான நேரம் வெற்றிகளை ருசித்திருக்கும்’’ என்றார்.
    கே.பி.எல். சூதாட்டம் தொடர்பாக கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினர் சுதிந்திரா ஷிண்டேவை பெங்களூர் போலீசார் கைது செய்தனர்.
    பெங்களூர்:

    கர்நாடகா மாநிலத்தில் நடந்த கர்நாடக பிரீமியர் லீக் (கே.பி.எல்.) கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த மேட்ச் பிக்சிங் புகார் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பெங்களூர் போலீசார் இந்த சூதாட்ட புகார் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மேட்ச் பிக்சிங் தொடர்பாக முன்னணி வீரர்களான சி.எம்.கவுதம், அப்ரார் மற்றும் பாந்தர்ஸ் அணியின் உரிமையாளர் அஷ்பக் அலிதர் உள்பட 8 பேர் கைதாகி இருந்தனர்.

    இந்த நிலையில் கே.பி.எல். சூதாட்டம் தொடர்பாக கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினர் சுதிந்திரா ஷிண்டேயை பெங்களூர் போலீசார் இன்று கைது செய்தனர்.

    நேற்று முன்தினம் அவரது வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தோதனை நடத்தினர். இதன் அடிப்படையில் அவர் கைதானார்.

    39 வயதான சுதிந்திரா ஷிண்டே 19 வயதுக்குட்பட்ட கர்நாடக அணியின் பயிற்சியாளராக உள்ளார். கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாக பிரிவில் உறுப்பினராக இருக்கிறார். பெல்காவி பாந்தர்ஸ் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஆவார்.

    ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் ஸ்மித்தை பின்னுக்குத் தள்ளி மீண்டும் முதல் இடம் பிடித்தார் விராட் கோலி.
    ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் விராட் கோலி முதல் இடத்தில் இருந்தார். ஓராண்டு தடைக்குப்பின் டெஸ்ட் போட்டியில் களம் இறங்கிய ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் ஆஷஸ் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    இதனால் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி முதல் இடம் பிடித்தார். வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்ஆப்பிரிக்கா தொடரில் விராட் கோலி சிறப்பாக விளையாடாததால் மீண்டும் முதல் இடத்தை பிடிக்க முடியவில்லை.

    ஆனால் வங்காளதேச அணிக்கெதிரான ஆட்டத்தில் சதம் அடித்தார். இதனால் ஸ்மித்திற்கும் (131) விராட் கோலிக்கும் (128) இடையில் மூன்று புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் இருந்தது.

    பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஸ்மித் சிறப்பாக விளையாடவில்லை.  இதனால் 131 புள்ளிகளில் இருந்து 8 புள்ளிகளை இழந்து 123 புள்ளிகள் பெற்றார். விராட் கோலி 128 புள்ளிகளில் இருந்ததால் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    பாகிஸ்தானுக்கு எதிராக முச்சதம் அடித்த டேவிட் வார்னர் 12 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார். கேன் வில்லியம்சன் 877 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். அதேபோல் புஜாரா 791 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளார்.

    ரகானே 759 புள்ளிகளுடன் 6-வது இடத்திற்கு சரிந்துள்ளார். ஜோ ரூட் 4-வது இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த மிக்கி ஆர்தர், தற்போது இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட இருக்கிறார்.
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் மிக்கி ஆர்தர். இவரது தலைமையில் பாகிஸ்தான் ஐசிசி சாம்பியன்ஷிப்பை வென்றது. டி20 கிரிக்கெட்டில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தது. மேலும் குறிப்பிடத் தகுந்த சில வெற்றிகளை பெற்றது.

    ஆனால் இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் தலைமை பயிற்சியாளர் பதவில் இருந்து நீக்கப்பட்டார்.

    இந்நிலையில் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட இருக்கிறார். இவரது பதவிக்காலம் இரண்டு ஆண்டுகளாகும். இலங்கை அணி ஏற்கனவே கிராண்ட் பிளவரை பேட்டிங் பயிற்சியாளராகவும், டேவிட் சாகரை பந்து வீச்சு பயிற்சியாளராகவும், ஷான் மெக்டெர்மோட்-ஐ பவுலிங் கோச்சராகவும் நியமித்துள்ளது.

    மிக்கி ஆர்தர் இந்த மாதம் இறுதியில் பாகிஸ்தான் சென்று விளையாடுகிறது. அப்போது இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிவை ஏற்பார்.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்டில் 16 வயதில் களம் இறங்கிய நசீம் ஷா பாகிஸ்தான் U-19 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
    பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியா சென்று விளையாடியது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் பிரிஸ்பேனில் நடைபெற்றது. இந்த டெஸ்டில் பாகிஸ்தான் அணியில் 16 வயதேயான நசீம் ஷா அறிமுகம் ஆனார். ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக நசீம் ஷாவால் ஜொலிக்க முடியவில்லை.

    ஆனால் முன்னணி வீரர்களுக்கு எதிராக அவருக்கு சிறப்பான அனுபவம் கிடைத்தது. இந்த நிலையில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    ‘‘19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக கோப்பையில் எங்களது முக்கிய ஆயுதமே நசீம் ஷா-தான்’’ என்று பயிற்சியாளர் இஜாஸ் அகமது தெரிவித்துள்ளார்.
    தெற்காசிய விளையாட்டு போட்டியில் ஒரே நாளில் இந்தியாவுக்கு 15 தங்கம், 16 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 40 பதக்கம் கிடைத்துள்ளது.
    காத்மாண்டு:

    13-வது தெற்காசிய விளையாட்டு போட்டி நேபாளத்தில் உள்ள காத்மாண்டு போக்ஹராவில் நடந்து வருகிறது.

    இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்பட 7 நாடுகள் பங்கேற்கின்றன.

    நேற்று ஒரே நாளில் இந்தியாவுக்கு 15 தங்கம், 16 வெள்ளி, 9 வெண்கலம் ஆக மொத்தம் 40 பதக்கம் கிடைத்தது.

    துப்பாக்கி சுடும் போட்டியில் 10 மீட்டர் ஏர்ரைபிள் அணிகள் பிரிவில் தங்கம் கிடைத்தது. மெஹுலிகோஸ் தனிநபர் பிரிவில் 253 புள்ளிகளுடன் தங்கம் வென்றார். ஆடவர் தனிநபர் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் சைன் சிங் முதலிடத்தை பிடித்தார்.

    இதே போல் சென்டர் பையர் பிரிஸ்டல் பிரிவில் யோகேஷ்சிங், குர்ப்ரீத் சிங் ஆகியோர் தங்கம் வென்றனர்.

    தடகளத்தில் 4 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

    பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன் தங்கப்பதக்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 11.8 வினாடியில் கடந்தார்.

    இதேபோல உயரம் தாண்டுதலில் ஜிஸ்னா மேத்யூ தங்கம் வென்றார்.

    ஆண்கள் கைப்பந்து பிரிவில் தங்கப்பதக்கம் கிடைத்தது. இந்திய அணி இறுதிப்போட்டியில் 20-15, 25-15, 25-17, 29-27 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

    பெண்கள் கைப்பந்து பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய அணி 25-17, 23-25, 21-25, 25-20, 15-6 என்ற செட் கணக்கில் நேபாளத்தை கடும் போராட்டத்துக்கு பிறகு வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது.

    டேபிள் டென்னிஸ் இரு பிரிவிலும் தங்கம் கிடைத்தது. ஆண்கள் அணி 3-0 என்ற கணக்கில் நேபாளத்தையும், பெண்கள் அணி 3-0 என்ற கணக்கில் இலங்கையையும் வீழ்த்தியது.

    டேக்வாண்டோ மகளிர் 57 கிலோ பிரிவில் காஷிஸ் மாலிக் தங்கம் வென்றார்.

    நேற்றைய போட்டி முடிவில் நேபாளம் 23 தங்கம், 10 வெள்ளி, 13 வெண்கலம் ஆக மொத்தம் 46 பதக்கத்துடன் முதலிடத்தில் உள்ளது.

    இந்தியா 17 தங்கம், 16 வெள்ளி, 9 வெண்கலம் ஆக மொத்தம் 42 பதக்கத்துடன் 2-வது இடத்தில் உள்ளது. இலங்கை 48 பதக்கத்துடன் 3-வது இடத்திலும் (5 தங்கம், 15 வெள்ளி, 28 வெண்கலம்) உள்ளன.

    பாகிஸ்தான் 4-வது இடத்திலும், வங்காளதேசம் 5-வது இடத்திலும், மாலத்தீவு 6-வது இடத்திலும், பூடான் 7-வது இடத்திலும் உள்ளன.
    2019 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடிய நியூசிலாந்து அணியின் தன்னம்பிக்கையான அணுகுமுறையை பாராட்டி ‘ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட்’ விருது வழங்கப்பட்டுள்ளது.
    லண்டன்:

    இந்த ஆண்டு ஜூன் - ஜூலை மாதங்களில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவராலும் மறக்க முடியாத ஒரு தொடர் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாத தொடராக இருந்தது. லீக் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. 

    ஆஸ்திரேலியா இங்கிலாந்து இடையே நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிய மற்றொரு அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தபோது மழை குறுக்கிட்டது. ஆனால் போட்டி கைவிடப்படாமல் மறுநாள் நடைபெற்றது. ஜடேஜா மற்றும் மகேந்திர சிங் டோனியும் இறுதிவரை போராடியும் அந்த ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியை தழுவி தொடரில் இருந்து வெளியேறியது. 

    இதையடுத்து, ஜூலை 14ம் தேதி லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பேட் செய்த இங்கிலாந்து அணி இன்னிங்சில் சில குளறுபடிகள் நடந்தது. கடைசி கட்டத்தில் இங்கிலாந்து அணியின் வீரர் பென் ஸ்டோக்ஸ் ரன் எடுக்க ஓடிய போது நியூசிலாந்து அணி வீரர் ஸ்டம்பை நோக்கி பந்தை எறிந்தார். ஆனால் பந்து எதிர்பாராத விதமாக ஸ்டோக்ஸின் பேட்டில் பட்டு பவுண்டரிக்குச் சென்றது. இதற்கு ரன் ஏதும் கொடுக்க வேண்டுமா என்ற நிலையில் நடுவர் ரன்களுடன் பவுண்டரியும் கொடுத்தார்.

    கேன் வில்லியம்சன் மற்றும் மோர்கன்

    இறுதியில் இங்கிலாந்து அணியும் 241 ரன்கள் எடுக்க ஆட்டம் ‘டிரா’வில் முடிந்தது. இதையடுத்து சூப்பர் ஓவர் நடந்தது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 15 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பேட் செய்த நியூசிலாந்து அணியும் ஒரு ஓவரில் 15 ரன்களே எடுக்க மேலும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இரு அணிகளுக்கும் கோப்பை பகிர்ந்தளிக்கப்படும் என அனைவரும் எண்ணிய நிலையில் அதிக பவுண்டரிகள் அடித்துள்ளதாக கூறி இங்கிலாந்து அணிக்கு உலகக்கோப்பை வழங்கப்பட்டது.

    இது நியூசிலாந்து அணியினருக்கு மட்டுமன்றி கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் ஏமாற்றமாக அமைந்தது. இறுதி வரை மன உறுதியுடன் முழுத்திறமையை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணிக்கே கோப்பை கிடைத்திருக்க வேண்டும் என பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்தனர்.

    ஆனால் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனும் மற்ற வீரர்களும் இரண்டாம் இடத்தை எவ்வித மனக்கலக்கமுமின்றி ஏற்றுக்கொண்டனர். இந்த ஆட்டத்திற்கு பிறகு பென் ஸ்டோக்சும், அந்த ஆட்டத்தின் நடுவரும் விமர்சிக்கப்பட்டனர். பேட்டை குறுக்கே வைத்தது எதிர்பாராத விதமாக நடந்தது, அதற்காக  நியூசிலாந்து அணியிடம் மன்னிப்பு கேட்கிறேன் என நியூசிலாந்தை பூர்வீகமாகக் கொண்ட பென் ஸ்டோக்ஸ் தெரிவித்தார்.

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி

    இந்நிலையில், உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடிய நியூசிலாந்து அணியின் திடமான மனப்பாங்கை பாராட்டி அந்த அணிக்கு இவ்வாண்டின் கிரிக்கெட்டின் மன உறுதி (ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட்) எனும் சிறப்பு விருதை லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மேரிலிபோன் கிரிக்கெட் கிளப் வழங்கி கௌரவித்துள்ளது.

    ‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியின் விளையாட்டுத்திறன், பணிவு மற்றும் தன்னலமற்ற தன்மை ஆகியவை வெளிப்பட்டது. அந்த அணியின் வீரர்கள் இவ்விருதிற்கு தகுதியானவர்கள்’ என மேரிலிபோன் கிரிக்கெட் கிளப்பின் தலைவர் குமார் சங்கக்கரா தெரிவித்தார்.
    அகமதாபாத்தில் கட்டப்பட்டு வரும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் போட்டி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
    மும்பை:

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் புதிய ஸ்டேடியம் கட்டப்பட்டு வருகிறது.

    1982-ம் ஆண்டு அகமதாபாத்தில் உள்ள மொதேராவில் சர்தார்பட்டேல் கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்பட்டது. இங்கு 12 டெஸ்ட் மற்றும் 24 ஒருநாள் போட்டிகள் நடத்தப்பட்டது.

    இந்த ஸ்டேடியத்தை இடித்து 63 ஏக்கர் பரப்பளவில் புதிய ஸ்டேடியம் கட்டும்பணி நடந்து வருகிறது. இதற்கான பணிகள் விரைவில் முடிகிறது. தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்று வருகின்றன.

    அகமதாபாத்தில் உள்ள இந்த கிரிக்கெட் மைதானம் உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமாக கருதப்படுகிறது.

    ரூ.700 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்த ஸ்டேடியத்தில் 1 லட்சத்து 10 ஆயிரம் ரசிகர்கள் அமரலாம். இதனால் இது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமாக கருதப்படுகிறது.

    ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் மைதானம் தான் இதற்கு முன்பு பெரிய ஸ்டேடியமாக இருந்தது. அங்கு 90 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வகையில் இருக்கைகள் உள்ளன.

    அகமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய ஸ்டேடியத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய்ஷா ஆகியோர் நேரில் பார்த்து ஆய்வு செய்தனர். அவர்கள் 2 மணி நேரம் அந்த ஸ்டேடியத்தை சுற்றி பார்த்தனர்.

    ஸ்டேடியத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து குஜராத் மாநில சங்க நிர்வாகிகள், கங்குலிக்கு எடுத்துரைத்தனர்.

    இந்த ஸ்டேடியத்தில் தொடக்க ஆட்டமாக ஆசிய லெவன்- உலக லெவன் அணிகள் மோதும் காட்சி போட்டியை நடத்த கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

    இதற்கான அனுமதியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) கேட்டுள்ளதாக கங்குலி தெரிவித்தார். ஐ.சி.சி. ஒப்புதல் அளித்தால் இந்த போட்டி மார்ச் மாதம் இந்த ஸ்டேடியத்தில் நடத்தப்படும்.

    இந்த ஸ்டேடியத்தில் 70 கார்ப்பரேட் பாக்ஸ், 4 டிரெஸ்சிங் அறை (வீரர்கள் இருக்கும் பகுதி), ஒரு கிளப் ஹவுஸ் மற்றும் நீச்சல் குளம் உள்ளிட்ட பல நவீன வசதிகள் உள்ளன.
    ஒவ்வொரு தொடரிலும் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் நடத்த வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி விருப்பம் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் முதல் முறையாக பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியது. கொல்கத்தாவில் வங்காளதேசத்துக்கு எதிராக நடந்த இந்த பிங்க் நிற பந்து டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. சில ஆண்டுகளாக இந்திய அணி பகல்-இரவு டெஸ்டில் விளையாட தயக்கம் காட்டி வந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலியின் முயற்சியால் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது.

    இந்த நிலையில் கங்குலி அளித்த ஒரு பேட்டியில், ‘பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் எனக்கு மிகுந்த நம்பிக்கையும், உற்சாகமும் அளிக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டை முன்னெடுத்துச் செல்ல இந்த போட்டி அவசியமாகும். ஒவ்வொரு டெஸ்டும் பகல்-இரவு போட்டியாக இருக்க வேண்டியதில்லை. ஒரு தொடரில் குறைந்தது ஒரு டெஸ்ட் பகல்-இரவு மோதலாக இருக்க வேண்டும். பகல்-இரவு டெஸ்டை நடத்தியதில் எனது அனுபவங்களை கிரிக்கெட் வாரியத்தின் மற்ற நிர்வாகிகளுடன் பகிர்ந்து கொள்வேன். மற்ற இடங்களிலும் பிங்க் பந்து டெஸ்டை நடத்த முயற்சிப்போம். இப்போது ஒவ்வொரு வீரரும் இத்தகைய போட்டியில் விளையாட தயாராக இருக்கிறார்கள். வெறும் 5 ஆயிரம் ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடுவதை யாரும் விரும்பவில்லை’ என்றார்.

    அதே சமயம் இந்திய கேப்டன் விராட் கோலி, பகல்-இரவு டெஸ்ட் போட்டி என்பது எப்போதாவது மட்டுமே நடக்க வேண்டுமே தவிர வழக்கமாகி விடக்கூடாது என்று கூறியிருந்தது நினைவு கூரத்தக்கது. 
    ×