என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸில் செரீனா வில்லியம்ஸ் 3-வது சுற்றில் சீன வீராங்கனையிடம் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார்.
    கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. 5-ம் நாளான இன்று பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லே பார்டி (ஆஸ்திரேலியா) - எலனா ரைபாகிளா (ரஷியா) மோதினர்.

    இதில் ஆஷ்லே பார்டி 6-3, 6-2 என்ற நேர்செட் கணக்கில் எளிதாக வென்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். தற்போதைய ஆஸ்திரேலிய ஓபனில் ஆஷ்லே பார்டி முதல் நபராக 4-வது சுற்றுக்கு நுழைந்துள்ளார்.

    மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா)- குயாங் வாங்க் (சீனா) பலப்பரீட்சை நடத்தினர். இதில் செரீனா முதல் செட்டை 4-6 என்ற கணக்கில் இழந்தார்.

    2-வது செட்டிலும் 2-4 என்ற கணக்கில் பின்தங்கி இருந்தார். அதன்பின் சுதாரித்துக்கொண்ட செரீனா 7 (7)-6 (2) என்ற கணக்கில் கைப்பற்றி பதிலடி கொடுத்தார். வெற்றிக்கான 3-வது செட்டிலும் செரீனாவுக்கு குயாங் வாங்க் கடும் சவால் அளித்தார். இருவரும் வெற்றிக்காக கடுமையாக போராடினர்.

    இந்த செட்டை குயாங் வாங்க் 7-5 என்ற கணக்கில் கைப்பற்றினர். இதனால் குயாங் வாங்க் 6-4, 6(2) - 7(7), 7-5 என்ற செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

    24-வது கிராண்ட்சிலாம் பட்டத்தை குறிவைத்து இருந்த செரீனா வில்லியம்ஸ் 27-ம் நிலை வீராங்கனையான குயாங் வாங்க்கிடம் சரண் அடைந்து ஏமாற்றம் அடைந்தார்.

    மற்றொரு 3-வது சுற்று ஆட்டத்தில் 7-ம் நிலை வீராங்கனை கிவிட்டோவா (செக்குடியரசு) 6-1, 6-2 என்ற செட் கணக்கில் அலெக்சாண்ட்ரோவாவை (ரஷியா) தோற்கடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
    நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
    ஆக்லாந்து:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஐந்து 20 ஓவர் போட்டி, 3 ஒருநாள் ஆட்டம் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 20 ஓவர் போட்டித் தொடர் இன்று தொடங்கியது. முதல் 20 ஓவர் ஆட்டம் ஆக்லாந்தில் இன்று நடக்கிறது. 

    இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில், இந்திய அணி கேப்டன் விராட் கோலி வெற்றி பெற்று பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்றும், புதிய பந்தில் விரைவில் விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என்றும் விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    கோப்பையுடன் கோலி, வில்லியம்சன்

    ஆனால், 50-50 என்ற அடிப்படையிலேயே வாய்ப்புகள் இருக்கும் என்று நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் கூறினார். ஆனால், முதலில் பேட்டிங் செய்வதால், அதிக ஸ்கோர் எடுத்து இந்திய அணிக்கு இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

    இந்திய அணி: ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), விராட் கோலி (கேப்டன்), ஷ்ரேயாஸ் அய்யர், மணீஷ் பாண்டே, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், யுஸ்வேந்திர சாகல், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா.

    நியூசிலாந்து அணி: மார்ட்டின் குப்தில், கொலின் முன்றோ, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டிம் சீபெர்ட் (விக்கெட் கீப்பர்), கொடிலன் டி கிராண்ட்ஹோம், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, ஐஷ் சோதி, பிளேர் டிக்னர், ஹமிஷ் பென்னட்.

    இந்தியா கடைசியாக ஆடிய ஐந்து 20 தொடர்களில் 4 தொடரை கைப்பற்றியது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 2 முறையும் (3-0, 2-1), வங்காளதேசம் (2-1), இலங்கை (2-0) அணிகளுக்கு எதிராக தலா ஒரு முறையும் வென்றது. தென்னாப்பிரிக்கா உடனான தொடரை சமன் (1-1) செய்தது. இதனால் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் வீரர்கள் சிறப்பாக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
    போர்ச்சுகல் நாட்டில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டியில் இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன.
    கோன்டோமர்:

    ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதத்தில் நடக்கிறது. இந்த போட்டிக்கான டேபிள் டென்னிஸ் அணிகளுக்கான தகுதி சுற்று போட்டி போர்ச்சுகல் நாட்டில் உள்ள கோன்டோமர் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் நேரடியாக 2-வது சுற்றில் விளையாடிய இந்திய அணி, லக்சம்பர்க் அணியை சந்தித்தது. இந்திய அணி 3-0 என்ற கணக்கில் லக்சம்பர்க்கை வீழ்த்தியது. ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் சத்யன், சரத்கமல் தங்கள் ஆட்டங்களில் வெற்றி பெற்றனர். இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சரத் கமல்-ஹர்மீத் தேசாய் ஜோடி வெற்றி கண்டது.

    பெண்கள் பிரிவில் இந்திய அணி, சுவீடனை எதிர்கொண்டது. பரபரப்பாக அரங்கேறிய இந்த போட்டியில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் சுவீடனை வீழ்த்தியது. ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் மனிகா பத்ரா 2 ஆட்டத்திலும், அர்ச்சனா காமத் ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்றனர். இந்திய வீராங்கனை முகர்ஜி அய்கா ஒற்றையர் ஆட்டத்தில் தோல்வி அடைந்தார். இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அர்ச்சனா காமத்-முகர்ஜி அய்கா இணை தோல்வியை சந்தித்தது.

    இன்று நடைபெறும் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்களில் இந்திய ஆண்கள் அணி, சுலோவேனியாவையும், இந்திய பெண்கள் அணி ருமேனியாவையும் எதிர்கொள்கிறது. இந்த ஆட்டங்களில் இந்திய அணிகள் வெற்றி பெற்றால் ஒலிம்பிக் போட்டியில் முதல்முறையாக தடம் பதித்த வரலாறு படைக்கும்.

    சென்னையில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் ஜாம்ஷெட்பூர் அணியை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சென்னை அணி.
    சென்னை:

    10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    சென்னை ஜவகர்லால் நேரு மைதானத்தில் இன்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி, ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே சென்னை அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆட்டத்தின் 13வது நிமிடம் மற்றும் 43 வது நிமிடத்தில் சென்னை அணி வீரர்கள் கோல் அடித்தனர். இதனால் முதல் பாதி முடிவில் சென்னை 2-0 என முன்னிலை வகித்தது.

    தொடர்ந்து இரண்டாவது பாதியிலும் சென்னை வீரர்கள் அபாரமாக ஆடினர். 74 மற்றும் 87வது நிமிடத்தில் தலா ஒரு கோல் அடித்து அசத்தினர்.

    ஜாம்ஷெட்பூர் அணி 71வது நிமிடத்தில் ஒரு கோல் மட்டுமே அடித்தது. இறுதியில், சென்னை அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி 18 புள்ளிகள் பெற்று ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. ஜாம்ஷெட்பூர் 16 புள்ளிகளுடன் 7வது இடத்திலும் உள்ளது.
    இலங்கை அணிக்கெதிராக கடைசி நாள் முழுவதும் தோல்வியை தவிர்க்க போராடிய நிலையில், 13 ஓவர்கள் இருக்கும் நிலையில் தோல்வியை சந்தித்தது.
    ஜிம்பாப்வே - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஹராரேயில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் ஜிம்பாப்வே 358 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பின்னர் இலங்கை முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 515 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

    பின்னர் ஜிம்பாப்வே 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் ஜிம்பாப்வே விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் எடுத்திருந்தது.

    இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. ரன்கள் அடிப்பதை விட எப்படியாவது இன்றைய நாளை கழித்து விட்டால் போட்டியை டிரா செய்து விடலாம் என்ற நோக்கத்தில் ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்கள் விளையாடினர்.

    டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சராசரியாக 50 பந்துக்கு மேல் சந்தித்தனர். இறுதியாக விக்கெட் கீப்பர் சகப்வா 142 ரன்கள் பந்துகள் சந்தித்து கடைசி நபராக ஆட்டமிழந்தார். அப்போது ஆட்டம் முடிய 13 ஒவர்களே இருந்தது. ஆனால் 13 ரன்களே முன்னிலைப் பெற்றிருந்தது.

    பின்னர் இலங்கை 3 ஓவரில் 14 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி  பெற்றது. 92 ஓவர்கள் தாக்குப்பிடித்த ஜிம்பாப்வே, மேலும் 13 ஓவர்களை தாக்குப்பிடிக்க முடியாமல் தோல்வியை சந்தித்தது.
    ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முன்னணி வீராங்கனைகளான சிமோனா ஹாலெப், சுவிட்டோலினா, கிகி பெர்ட்டன்ஸ் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.
    ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இந்த வருடத்திற்கான முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கடந்த 20-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்றன. ஒரு ஆட்டத்தில் 5-ம் நிலை வீராங்கனையான எலினா சுவிட்டோலினா லாரென் டேவிஸ்-ஐ எதிர்கொண்டார். முதல் செட்டை சுவிட்டோலினா 6-2 என எளிதில் கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டில் டேவிஸ் கடும் சவாலாக விளங்கினார். இதனால் ஆட்டம் டை பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் சுவிட்டோலினா 7(8)-6(6) என வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் 4-ம் நிலை வீராங்கனையான ருமேனியாவன் சிமோனா ஹாலெப் தரநிலை பெறாத பிரிட்டனின் ஹாரியட் டார்ட்-ஐ எதிர்கொண்டார். இதில் ஹாலெப் 6-2, 6-3 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    9-ம் நிலை வீராங்கனையான கிகி பெர்ட்டன்ஸ் 6-3, 7-5 என வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். ஏஞ்சலிக் கெர்பர் 6-3, 6-2 என வெற்றி பெற்றார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு உறுப்பினர் பதவிக்கு சிவராமகிருஷ்ணன், ராஜேஷ் சவுகான், அமேய் குரேசியா ஆகியோர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
    இந்திய கிரிக்கெட் அணிக்கான தேர்வுக்குழுவில் எம்எஸ்கே பிரசாத் (தெற்கு மண்டலம்), ககன் கோடா (மத்திய மண்டலம்), சரண்தீப் சிங் (வடக்கு மண்டலம்), ஜட்டின் பரஞ்பே (மேற்கு மண்டலம்) ஆகியோர் உள்ளனர்.

    இதில் எம்எஸ்கே பிரசாத் (தெற்கு மண்டலம்), ககன் கோடா (மத்திய மண்டலம்) ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது. மற்ற இருவரின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் ஓராண்டு இருக்கிறது.

    இந்நிலையில் முன்னாள் வீரர்களான சிவராமகிருஷ்ணன், ராஜேஷ் சவுகான், அமேய் குரேசியா ஆகியோர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

    54 வயதாகும் சிவராமகிருஷ்ணன் இந்திய அணிக்காக 9 டெஸ்ட் மற்றும் 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவருடன் வெங்கடேஷ் பிரசாத் மற்றம் பாங்கர் ஆகியோரும் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்ட இளம் வீரரான ஜெய்ஸ்வால் பற்றி அற்புதமான விஷயங்களை கேள்விப்பட்டேன் என்று ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித். ஐபிஎல் தொடரில் இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த முறை 2-வது பாதி நேரத்தில் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த சீசனில் முழுநேர கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட இருப்பது உணர்ச்சிகரமானது என்கிறார் ஸ்டீவ் ஸ்மித்.

    இதுகுறித்து ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில் ‘‘மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட இருப்பது உணர்ச்சிகரமானது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆனால், தொடக்கத்தில் இருந்தே அந்த பணியை ஏற்பேன் என்று நினைக்கவில்லை. ஆகையால் நான் அதுபற்றி உற்சாகமாக உள்ளேன்.

    நாங்கள் மிகவும் சிறந்த அணியை பெற்றுள்ளோம். சில சிறந்த இந்திய பேட்ஸ்மேன்கள், சில அபாயகரமான வெளிநாட்டு வீரர்களுடன் அனுபவம் மற்றும் இளைஞர்களை கொண்ட சரியான கலவை அணியை பெற்றுள்ளோம். இந்த வருடத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன். நாங்கள் தொடரை சிறப்பாக தொடங்கி, அந்த உத்வேகத்தை அப்படியே நீட்டித்து இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்று நம்புகிறேன்.

    நாங்கள் இளம் வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் பற்றி அற்புதமான விஷயங்களை கேள்வி பட்டேன். நாங்கள் ராபின் உத்தப்பாவை எடுத்துள்ளோம். அவருக்கு ஐபிஎல் தொடரில் அதிகமான அனுபவம் உள்ளது. பிக் பாஷ் தொடரில் அசத்தி வரும் டாம் கர்ரன் உள்ளார். டேவிட் மில்லர் ஐபிஎல் தொடரில் அவர் யார் என்பதை நிரூபித்துள்ளார். கடந்த சீசனில் ஒஷானே தாமஸ் சிறப்பாக விளையாடினார்’’ என்றார்.
    நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடும்போது உலக கோப்பை அரையிறுதி தோல்விக்கு பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் வராது என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதன்பின் இந்தியா - நியூசிலாந்து அணிகள் தற்போது விளையாட இருக்கின்றன. அந்த தோல்விக்கு தற்போது பழிக்குப்பழி வாங்குவீர்களா? என்ற விராட் கோலியிடம் கேட்கபட்டது.

    அதற்கு பதில் அளித்த விராட் கோலி, ‘‘நீங்கள் அவர்களை பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்று விரும்பினால் கூட, நியூசிலாந்து வீரர்கள் நல்லவர்கள். அவர்களுக்கு எதிராக உங்களுக்கு அந்த எண்ணம் வராது. அவர்களுடன் நாங்கள் சிறந்த முறையில் மைதானத்தில் போட்டியிடுகிறோம். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் அணிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அவர்கள் விளங்கினர் என்பதை இங்கிலாந்து உலக கோப்பை தொடரின்போதே கூறியிருந்தேன்.

    ஒவ்வொரு பந்திற்கும், ஒவ்வொரு போட்டியிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புவார்கள். ஏற்றுக்கொள்ள முடியாத எந்த சைகையையும் அவர்கள் மைதானத்தில் செய்ய மாட்டார்கள்’’ என்றார்.
    கேப்டன் பதவியை துறக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ள நிலையில், எதற்கும் தயார் என கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
    மூன்று வகை கிரிக்கெட்டிலும் நியூசிலாந்து அணி கேப்டனாக கேன் வில்லியம்சன் உள்ளார். சமீபத்தில் ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் செய்திருந்த நியூசிலாந்து டெஸ்ட் தொடரை 0-3 என இழந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று போட்டிகளிலும் ஈடுகொடுக்க முடியாமல் திணறினர். கேன் வில்லியம்சனும் ரன்கள் குவிக்கவில்லை.

    இதனால் குறைந்தபட்சம் டி20 கிரிக்கெட் கேப்டன் பதவியையாவது ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில் அணிக்கு உதவும் என்றால் கேப்டன் பதவியை துறக்க தயார் என்று கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
    பாகிஸ்தானுக்குச் செல்கிறோம், உங்களுடைய பிரார்த்தனையில் எங்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்ற வங்காளதேச வீரரின் டுவிட் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    வங்காளதேசம் கிரிக்கெட்  அணி  பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து  இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள்  ஒருநாள் போட்டி கொண்ட  தொடரில் விளையாட உள்ளது. முதலில் டி20 தொடர் நடக்கிறது. அதன்பின் ஒரு டெஸ்ட் போட்டி நடக்கிறது. இறுதியாக ஒருநாள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டி நடக்கிறது. பாதுகாப்பு காரணத்திற்காக இப்படி நடத்தப்படுகிறது.

    முன்னதாக பாகிஸ்தானில் பாதுகாப்பு நிலைமை மோசமாக இருப்பதால் வங்காள தேச கிரிக்கெட் வீரர்கள் இந்த தொடருக்காக பாகிஸ்தானுக்கு செல்ல விரும்பவில்லை. முஷ்பிகுர் ரஹிம் போன்ற மூத்த வீரர்கள் தனிப்பட்ட காரணங்களைக் கூறி பாகிஸ்தான் செல்ல தயங்கினர். அதன்பிறகு, வங்காளதேச இளம் வீரர்களும்  சுற்று பயணத்திலிருந்து வெளியேற இருந்தனர்.

    இருப்பினும், இரு அணிகளின் அதிகாரிகளும் துபாயில் பலகட்ட ஆலோசனை நடத்தினர். அதன் பிறகு   வங்காளதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி) தங்கள் அணியை கிரிக்கெட் தொடருக்கு அனுப்ப ஒப்புக்கொண்டது. ஆனால் நிர்பந்தம் செய்ய மாட்டோம் என வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு தெரிவித்தது.

    இந்த நிலையில் நேற்று வங்காளதேச அணி வீரர்கள் பாகிஸ்தான் புறப்பட்டு சென்றனர். அதற்கு முன்  முஸ்டாபிஜூர் ரஹ்மான் செய்த ட்விட் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது

    அணி புறப்படுவதற்கு முன்னர் தனது அணியினருடன் சேர்ந்து ஒரு செல்ஃபி எடுத்த ரஹ்மான் அதில் டுவிட்டரில் பதிவிட்டு  தம்மைப் பின்பற்றுபவர்களிடம் அவர்களுக்காக பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொண்டார்: அதில் "பாகிஸ்தானுக்குச் செல்கிறோம், உங்கள் பிரார்த்தனைகளில் எங்களை நினைவில் கொள்ளுங்கள்’’ என கூறி உள்ளார்.

    பாகிஸ்தானின் பாதுகாப்பு காரணத்தை சுட்டிக்காட்டிதான் இப்படி டுவிட் செய்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
    இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான ஏழு மணி நேர வேறுபாட்டை அனுசரித்துக் கொள்வது மிகவும் கடினம் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. 3-வது மற்றும் கடைசி போட்டி பெங்களூருவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (19-ந்தேதி) நடைபெற்றது.

    இந்த போட்டி முடிந்த உடன் இந்தியா நியூசிலாந்து புறப்பட்டுச் சென்றது. நியூசிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நாளை (24-ந்தேதி) தொடங்குகிறது. ஆஸ்திரேலியா தொடருக்கும் நியூசிலாந்து தொடருக்கும் இடையில் நான்கு நாட்கள் மட்டுமே இடைவெளி இருக்கிறது. இதற்குள் இந்தியா நியூசிலாந்து செல்ல வேண்டும்.

    இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான நேர வித்தியாசம் 7 மணி நேரமாகும். நான்கு நாட்களுக்குள் ஏழு மணி நேர வேறுபாட்டை அனுசரித்துக் கொள்வது மிகவும் கடினம் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘இதுபோன்று பயணம் செய்து வரும்போது இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான ஏழு மணி நேர வித்தியாசத்தை உடனடியாக அனுசரித்துக் கொள்வது மிகவும் கடினம். வரும் காலத்தில் இதுபோன்று நடக்காத வண்ணம் ஆலோசிக்கப்படும் என்பதை என்னால் உறுதியாக கூற இயலும்.

    நியூசிலாந்து பயணத்துக்கு முன் நாங்கள் ஆஸ்திரேலியாவுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடினோம். அப்போது நாங்கள் அதிக நேரம் மைதானத்தில் செலவழித்தோம். ஆனால், அதற்கு முன் சில டி20 போட்டிகளில்தான் விளையாடினோம். டி20-யை விட அதிகமான போட்டிகளில் விளையாடியதால் இங்கே தயாராகுவதற்கான நேரமை் குறைவான இருந்தாலும் எளிதான வழியை கண்டு பிடிப்போம்.

    இந்த தொடரை நான் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன். ஏனென்றால் இந்த வருடம் உலக கோப்பை தொடர் இருப்பதால் ஒவ்வொரு டி20 போட்டியும் முக்கியமானது.

    இந்த சீதோஷ்ண நிலையில் நியூசிலாந்து மிக மிக வலிமையான அணி. சொந்த மண்ணில் அவர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பது தெரியும். ஆடுகளம் எப்படி செயல்படும் உள்ளிட்ட முக்கியம்சங்களை அவர்கள் புரிந்து வைத்திருப்பார்கள்.

    சொந்த மண்ணில் அவர்கள் விளையாடுவது சற்று சாதகமாக இருந்தாலும், நாங்கள் நியூசிலாந்து மண்ணில் அதிகமான போட்டிகளில் விளையாடியுள்ளோம். கடந்த முறை நாங்கள் இங்கே இரண்டு தொடர்களையும் வென்றுள்ளோம். அதனால் நம்பிக்கையுடன் தொடரை எதிர்கொள்வோம்’’ என்றார்.
    ×