என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்தியாவில் விளையாடியது போன்றே வெலிங்டனில் விளையாடியதால் அவர்கள் மோசமான தோல்வியை சந்திக்க நேரிட்டது என நியூசிலாந்து முன்னாள் பேட்ஸ்மேன் கிரேக் மெக்மில்லன் தெரிவித்துள்ளார்.
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் வெலிங்டனில் நடைபெற்றது. இதில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. முதல் இன்னிங்சில் 165 ரன்களும், 2-வது இன்னிங்சில் 191 ரன்களும் மட்டுமே எடுத்தது.

    அத்துடன் 4-வது நாள் முதல் செசனுக்குள் ஆட்டம் முடிந்து விட்டது. இந்நிலையில் உலகின் நம்பர் ஒன் அணியான இந்தியா நான்கு நாட்களுக்குள் சரணடையும் என பார்க்கவில்லை என்று முன்னாள் பேட்ஸ்மேன் கிரேக் மெக்மில்லன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மெக்மில்லன் கூறுகையில் ‘‘அவர்கள் விளையாடிய விதத்தை பார்க்கும்போது, நியூசிலாந்து சூழ்நிலைக்கு ஏற்ப அவர்களை சரிசெய்து கொள்ளவில்லை. அவர்கள் இந்தியாவில் எப்படி பேட்டிங் செய்தார்களோ, அதேபோன்று வெலிங்டனிலும் பேட்டிங் செய்தார்கள்.

    பந்து மூட்டுக்கு மேல் பவுன்சராகாத போது, சில ஷாட்டுகளை கையை முன்னால் நீட்டி எளிதாக அடிக்கலாம். ஆனால் நியூசிலாந்தில் நீங்கள் அப்படி விளையாட முடியாது. அனுபவ வீரர்களான டிரென்ட் போல்ட், டிம் சவுத்தி பந்து வீச்சில் அசத்தினார்கள். வெலிங்கடன் டெஸ்ட் போன்று பந்து ஸ்விங் ஆகும்போது டிரென்ட் போல்ட் மற்றும் டிம் சவுத்தி மேதைகள். உலகின் நம்பர் ஒன் அணியான இந்தியா நான்கு நாட்களுக்குள் சரணடையும் என நான் பார்க்கவில்லை’’ என்றார்.
    போட்டிக்கு போட்டி ஆடும் லெவனை மாற்றினால், வீரர்கள் திறன் பாதிக்கும் என அணி நிர்வாகம் மீது கபில்தேவ் குற்றம்சாட்டியுள்ளார்.
    வெலிங்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இரண்டு இன்னிங்சிலும் (165 மற்றும் 191) 200 ரன்களுக்கு உள்ளாகவே சுருண்டது. மயங்க் அகர்வால் மட்டுமே சிறப்பாக விளையாடினார்.

    மேலும் போட்டி நான்கு நாட்களிலேயே முடிந்தது. இந்நிலையில் இந்தியாவின் படுதோல்விக்கு அணி நிர்வாகமே காரணம் என கபில்தேவ் குற்றம்சாட்டியுள்ளார்.

    இதுகுறித்து கபில்தேவ் கூறுகையில் ‘‘நியூசிலாந்து சிறப்பான கிரிக்கெட் ஆட்டத்தை விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்களை பாராட்ட வேண்டும். மூன்று ஒருநாள் போட்டி, வெலிங்டன் டெஸ்டில் அவர்கள் செய்தது மிகவும் அற்புதம்.

    இந்த போட்டி குறித்து ஆராய்ந்து பார்த்தோம் என்றால், இந்திய அணியில் ஏன் இத்தனை மாற்றம் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் ஏறக்குறைய புதிய அணி விளையாடுவது போன்றே இருக்கிறது. நிரந்தரமாக அணியில் யாரும் இல்லை. அணியில் அவர்களுக்கான இடத்திற்கு பாதுகாப்பு இல்லை என்றால், அது வீரர்களின் ஆட்டத்திறனை பாதிக்கும்.

    பேட்டிங் ஆர்டரில் தலைசிறந்த சில வீரர்கள் உள்ளனர். இரண்டு இன்னிங்சிலும் 200 ரன்களுக்கு மேல் கூட அடிக்கமுடியவில்லை என்றால், அவர்களால் அங்குள்ள சூழ்நிலையை எதிர்த்து வெல்ல முடியவில்லை என்பதை காட்டுகிறது. இந்திய வீரர்கள் ஆட்டத்திற்கான திட்டம் மற்றும் யுக்தி மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்.

    நாங்கள் விளையாடிய காலத்திலும், தற்போது நிகழ்ந்து வருவதற்கும் இடையில் ஏராளமான வேறுபாடு உள்ளது. இதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அணியை கட்டமைக்கும்போது, வீரர்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும். நீங்கள் ஏராளமான மாற்றங்களை உருவாக்கினால், அதில் எந்த அர்த்தமும் இல்லை.

    அணி நிர்வாகம் அந்தந்த வகை கிரிக்கெட் பிரிவுக்கான வீரர்களை நம்புகிறது (புஜாரா டெஸ்ட் வீரர்). கேஎல் ராகுல் தற்போது சிறந்த பார்மில் உள்ளார். ஆனால் அவருக்கு டெஸ்ட் அணியில் இடமில்லை. இதில் எந்த அர்த்தமும் இல்லை. அவர்கள் சிறந்த பார்மில் இருக்கும்போது, அவர்கள் விளையாடுவது அவசியம் என நம்புகிறேன்’’ என்றார்.
    டாக்காவில் நடைபெற்ற ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முஷ்பிகுர் ரஹிம் இரட்டை சதம், நயீம் ஹசன் ஐந்து விக்கெட் வீழ்த்த வங்காளதேசம் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
    • ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 265 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
    •  வங்காளதேசம் 6 விக்கெட் இழப்பிற்கு 560 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
    • 2-வது இன்னிங்சில் ஜிம்பாப்வே 189 ரன்னில் சுருண்டது,

    டாக்காவில் வங்காளதேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த 22-ந்தேதி (சனிக்கிழமை) தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் கேப்டன் எர்வின் (107) சதமும், தொடக்க வீரர் மஸ்வாயுர் (64) அரைசதமும் அடிக்க ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 265 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. வங்காளதேசம் அணி சார்பில் அபு ஜாயத், நயீம் ஹசன் ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    பின்னர் வங்காளதேசம் முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் கேப்டன் மொமினுல் ஹக் (132) சதமும், அனுபவ வீரர் முஷ்பிகுர் ரஹிம் (203 அவுட் இல்லை) இரட்டை சதமும் விளாச வங்காளதேசம் 6 விக்கெட் இழப்பிற்கு 560 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    பின்னர் 295 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஜிம்பாப்வே 2-வது இன்னிங்சை தொடங்கியது. முதல் ஓவரிலேயே அந்த அணி இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் ஜிம்பாப்வே இரண்டு விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்திருந்தது.

    தைஜுல் இஸ்லாம் விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் வங்காளதேசம் வீரர்

    இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய ஜிம்பாப்வே 189 ரன்னில் சுருண்டது. இதனால் வங்காளதேசம் இன்னிங்ஸ் மற்றும் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஜிம்பாப்வே அணியில் எர்வின் 43 ரன்களும், மருமா 41 ரன்களும், ஷிகந்தர் ரசா 37 ரன்களும் சேர்த்தனர்.  வங்காளதேசம் அணி சார்பில் நயீம் ஹசன் ஐந்து விக்கெட்டும், தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட்டும் வீழ்த்தினர். இரட்டை சதம் அடித்த முஷ்பிகுர் ரஹிம் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
    மோடி என்ற ஒற்றை நபரால் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான உறவு முற்றிலும் சிதைக்கப்பட்டுள்ளது என அப்ரிடி குற்றம்சாட்டியுள்ளார்.
    இந்தியாவில் மோடி அதிகாரத்தில் இருக்கும் வரை, இரு நாடுகளுக்கு இடையிலான  உறவு மேம்படாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தானின் இணையதளம் ஒன்றிற்கு பேட்டி அளித்த அப்ரிடியிடம், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் தொடர் மீண்டும் எப்போது நடக்கும் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

    அக்கேள்விக்கு பதிலளித்த அப்ரிடி இந்திய பிரதமர் மோடியை கடுமையாக சாடினார்.  அப்ரிடி இதுகுறித்து பேசுகையில் ‘‘மோடி ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் வரை இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை காண ரசிகர்கள் காத்திருந்துதான் ஆக வேண்டும்.

    இந்த நேரத்தில்தான் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உறவு மிகவும் மோசமாக இருந்து வருகிறது. ஐசிசி தொடரை தவிர்த்து விளையாட ஒன்றிரண்டு வாய்ப்புகள் மட்டுமே உள்ளன.

    ஷாகித் அப்ரிடி, விராட் கோலி

    மோடி அதிகாரத்தில் இருக்கும் வரை, இந்தியாவிடம் இருந்து பதில் எதுவும் கிடைக்கும் என நான் நினைக்கவில்லை. மோடி சிந்திப்பதை இந்தியர்கள் உள்ளபட நாம் அனைவரும் அறிந்துள்ளோம்.  எதிர்மறை விஷயங்களை சார்ந்தே அவரது சிந்தனை இருக்கிறது.  ஒரே ஒரு நபரால் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவு  சிதைக்கப்பட்டுள்ளது. நாம் எதிர்பார்ப்பது இது இல்லை.

    எல்லையில் இருபுறமும் உள்ள மக்கள்  இங்குள்ளவர்கள் அங்கேயும், அங்கே உள்ளவர்கள் இங்கேயும் பயணிக்க விரும்புகின்றனர். மோடி என்ன விரும்புகிறார், அவரது திட்டம் என்ன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்றார்.
    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி. அணி கடைசி லீக் ஆட்டத்தில் கவுகாத்தியுடன் இன்று மோத உள்ளது.
    சென்னை:

    6-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.) போட்டி தொடர் கடந்த அக்டோபர் மாதம் 20-ந்தேதி தொடங்கி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    சென்னையின் எப்.சி., ஆட் லெடிசோ டி கொல்கத்தா, எப்.சி. கோலா, பெங்களூரு எப்.சி., மும்பை சிட்டி, ஒடிசா எப்.சி., கேரளா, ஜாம்‌ஷட்பூர் நார்த்ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), ஐதராபாத் ஆகிய 10 அணிகள் பங்கேற்றது.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின. இதுவரை நடந்த 89 லீக் ஆட்டங்கள் முடிவில் கோவா, கொல்கத்தா, பெங்களூர், சென்னை ஆகிய 4 அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்று விட்டன. மற்ற 6 அணிகள் வெளியேற்றப்பட்டன.

    இன்று 90-வது மற்றும் கடைசி லீக் ஆட்டம் கவுகாத்தியில் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இப்போட்டியில் சென்னையின் எப்.சி.- கவுகாத்தி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    சென்னையின் எப்.சி. 17 ஆட்டத்தில் 8 வெற்றி, 4 டிரா, 5 தோல்வியுடன் 28 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் சென்னை வெற்றி பெற்றால் 3-வது இடத்துக்கு முன்னேறும். இதனால் வெற்றி பெறும் முனைப்பில் சென்னை அணி உள்ளது.

    ஏற்கனவே அரை இறுதி வாய்ப்பை இழந்து விட்ட கவுகாத்தி ஆறுதல் வெற்றிக்காக போராடும். அந்த அணி 17 ஆட்டத்தில் 2 வெற்றி, 7 டிரா, 8 தோல்வியுடன் 13 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளது.
    நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் விராட் கோலி சொதப்பியதே இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறியுள்ளார்.
    வெலிங்டன்:

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டன்னில் நடந்தது. இதில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

    இந்த தோல்விக்கு இந்திய வீரர்களின் பேட்டிங்கே காரணமாக அமைந்தது. மயங் அகர்வால், ரகானேவைத் தவிர மற்ற வீரர்கள் பொறுப்புடன் விளையாடவில்லை. இதனால் மோசமான தோல்வியை இந்தியா சந்தித்தது.

    இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் தோற்றதற்கு இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கில் சொதப்பியதே முக்கிய காரணம் என்று இந்திய முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறியுள்ளார்.

    நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் கேப்டன் விராட் கோலி இரு இன்னிங்ஸ்சிலும் விரைவில் அவுட் ஆனதே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. கோலி ரன்களை குவித்து இருந்தால், அது எதிரணியால் திட்டங்களை செயல்படுத்த முடியாமல் போயிருக்கும். நியூசிலாந்து அணி வீரர்கள் தங்களது திட்டங்களை செயல்படுத்த முடியாமல் திணறி இருப்பார்கள்.

    ஆனால் யாரும் எதிர் தாக்குதல் நடத்தி போராடவில்லை. இந்த காரணங்களால் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இவ்வாறு அவர் கூறினார். கோலி முதல்-இன்னிங்சில் 2 ரன்னிலும் இரண்டாவது இன்னிங்சில் 19 ரன்னிலும் அவுட் ஆனார்.

    நேற்று போட்டி முடிந்த பிறகு கோலி கூறும்போது, நான் நல்ல நிலையில் இருக்கிறேன். எனது பேட்டிங் நன்றாக இருக்கிறது. ரன் குவிக்காததால் எனது பேட்டிங் திறன் பாதிக்கப்படவில்லை. சில சமயங்களில் பேட்டிங்குக்கு தகுந்த மாதிரி ஸ்கோர் அமையாமல் போவது உண்டு.

    விமர்சகர்கள் எங்கள் மன நிலையை மாற்ற முயற்சிக்கிறார்கள். ஆனால், அது நடக்காது. ஒரு தோல்வியால் எங்களது தன்னம்பிக்கை சிதைந்துவிடாது என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    2022-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்தியாவில் காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல், வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்படும் என்று காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனம் அறிவித்துள்ளது.
    லண்டன்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் 2022-ம் ஆண்டு ஜூலை 27-ந் தேதி முதல் ஆகஸ்டு 7-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இருந்து துப்பாக்கி சுடுதல் மற்றும் வில்வித்தை போட்டிகள் நீக்கப்படுவதாக போட்டி அமைப்பாளர்கள் கடந்த ஆண்டில் அறிவித்தனர். இதற்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியாவுக்கு பதக்க வாய்ப்பு உள்ள இந்த இரு பந்தயங்களையும் போட்டியில் சேர்க்காவிட்டால் காமன்வெல்த் விளையாட்டு போட்டியை இந்தியா புறக்கணிக்க நேரிடலாம் என்று எச்சரிக்கை விடுத்தது.

    இதனையடுத்து காமன்வெல்த் விளையாட்டு சம்மேளன நிர்வாகிகள் கடந்த ஆண்டில் இந்தியா வந்து, இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் மற்றும் வில்வித்தை போட்டியை இந்தியாவில் நடத்த வேண்டும் என்றும் அதில் பதக்கம் வெல்லும் நாடுகளின் பெயரை காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் இறுதிபதக்க பட்டியலுடன் சேர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. தற்போது இந்த பிரச்சினைக்கு முடிவு காணப்பட்டுள்ளது.

    காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனத்தின் செயற்குழு கூட்டம் லண்டனில் நடந்தது. இந்த கூட்டத்தில் இந்தியாவின் கோரிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. 2022-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்தியாவில் (சண்டிகரில்) காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் மற்றும் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியை நடத்த அனுமதி அளிப்பது என்றும் அதில் பதக்கம் வெல்லும் நாடுகளின் பட்டியலை, காமன்வெல்த் விளையாட்டு போட்டி முடிவடைந்த ஒரு வாரத்தில் பதக்கபட்டியலுடன் இணைத்து இறுதி பட்டியலை வெளியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனம் நேற்று அறிவித்துள்ளது.

    துப்பாக்கி சுடுதல் போட்டிக்கான செலவுகளை தேசிய ரைபிள் சங்கமும், வில்வித்தை போட்டிக்கான செலவுகளை மத்திய அரசும் ஏற்கும் என்று ஏற்கனவே தெரிவித்து இருந்தது நினைவிருக்கலாம். காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனத்தின் இந்த முடிவை இந்திய ஒலிம்பிக் சங்கம், தேசிய ரைபிள் சங்கம் ஆகியவை வரவேற்று இருக்கின்றன.

    ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இரட்டைச்சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை, பத்து ஆண்டுகளுக்கு முன்பு இதே தினத்தில் தான் சச்சின் டெண்டுல்கர் தன்வசமாக்கினார்.
    மும்பை:

    பிரிட்டனில் விளையாடப்பட்ட கிரிக்கெட் விளையாட்டு, 19ம் நூற்றாண்டில் உலகம் முழுவதிலும் பரவத் தொடங்கியது. இந்த போட்டிக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக ஆசியா, ஆப்பிரிக்கா கண்டங்களில் உள்ள நாடுகளும் இப்போட்டியை விளையாட ஆரம்பித்தன. சுதந்திரம் அடைந்த பின்னர், இந்தியாவும் கிரிக்கெட் விளையாட்டின் மீது அதிக ஆர்வம் காட்டியது.

    முதலில் 5 நாட்கள் தொடர்ந்து விளையாடும் டெஸ்ட் போட்டிகள் மட்டுமே உலக நாடுகளிடையே நடைபெற்று வந்தது. அதன் பின்னர் 60 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் போட்டிகளாக விளையாடப்பட்டது. ஒருநாள் போட்டி 50 ஓவர்களாக குறைக்கப்பட்ட பின்னர் மக்களிடையே அதிக வரவேற்பு பெற்றது. 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிகளும் தொடங்கப்பட்டன. அதன் பின்னர் நடைபெற்று வந்த அனைத்து போட்டிகளிலும் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என அனைத்திலும் சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வந்தன.

    அவ்வகையில், ஒருநாள் போட்டிகளில் தனிநபராக அதிகபட்ச ரன்கள் (194) எடுத்த வீரர்களின் வரிசையில் நீண்டகாலமாக முதலிடத்தில் இருந்தவர் பாகிஸ்தானின் சயீத் அன்வர். அவரது சாதனையை யார் முறியடிப்பார் என கிரிக்கெட் ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்த நேரம் அது.

    சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்பு இதே தினத்தில் (பிப்ரவரி 24, 2010) குவாலியர் மைதானத்தில் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் ஒருநாள் ஆட்டத்தில் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற அப்போதைய இந்தியக் கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விரேந்திர சேவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கர் களமிறங்கினர்.

    சச்சின் மற்றும் டோனி

    அதிரடியாக விளையாடக்கூடிய சேவாக் 4-வது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். இதையடுத்து, இந்திய அணி துரிதமாக ரன் குவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்நிலையில், அனுபவ வீரராக சச்சின் டெண்டுல்கர் துரிதமாக ரன் குவித்து விளையாடினார். தினேஷ் கார்த்திக்கும் அவருக்கு நல்ல ஒத்துழைப்பைத் தந்தார். இந்த இன்னிங்ஸின் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 50 ஓவர்களும் பேட்டிங் செய்த சச்சின் டெண்டுல்கர் 147 பந்துகளில் இரட்டைச் சதம் அடித்து அசத்தினார்.

    இதன்மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் ஆடவர் ஒருநாள் ஆட்டத்தில் இரட்டைச் சதம் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை சச்சின் படைத்தார். இந்த கிரகத்தில் 200 ரன்கள் எட்டிய முதல் மனிதர், இவர் இந்தியாவை சேர்ந்த சச்சின் டெண்டுல்கர். 147 பந்துகளில் 200 ரன்கள். டேக் எ பவ் மாஸ்டர்,” என்று சச்சின் டெண்டுல்கர் 200 ரன்கள் எட்டியவுடன் அப்போதைய வர்ணனையாளர் ரவி சாஸ்திரி கூறினார்.

    சச்சினின் இரட்டை சதத்துக்கு பின்னர் ஏழு இரட்டை சதங்கள் விளாசப்பட்டன. இந்திய வீரர்களான வீரேந்தர் சேவாக் ஒரு இரட்டை சதமும் மற்றும் ரோஹித் ஷர்மா மூன்று இரட்டை சதங்களையும் குவித்துள்ளனர். மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெய்ல், நியூசிலாந்தின் மார்ட்டின் குப்டில் மற்றும் பாகிஸ்தானின் ஃபக்கர் ஜமான் ஆகியோர் இந்த மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
    பெர்த்தில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வங்காளதேசம் அணியை 18 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி 2-வது வெற்றி பெற்றது இந்தியா.
    ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பெர்த்தில் இன்று நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற வங்காளதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. விக்கெட் கீப்பர் பாட்டியா 2 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் ஷபாலி வர்மா அதிரடியாக விளையாடி 17 பந்தில் 4 சிக்ஸ், 2 பவுண்டரியுடன் 39 ரன்கள் விளாசினார். ரோட்ரிக்ஸ் அவர் பங்குக்கு 34 ரன்கள் சேர்த்தார். வேதா கிருஷ்ணமூர்த்தி 11 பந்தில் 20 ரன்கள் அடிக்க இந்தியா 20 ஓவரில் 142 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 143 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களம் இறங்கியது. தொடக்க வீராங்கனை முஷிதா கதுன் 30 ரன்களும், விக்கெட் கீப்பர் நிகர் சுல்தானா 35 ரன்களும் அடித்தனர். மற்ற வீராங்கனைகள் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க வங்காளதேசம் அணியால் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    ஜம்முவில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ஜம்மு-காஷ்மீரை கடைசி நாளில் 167 ரன்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது கர்நாடகா.
    ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரின் காலிறுதி ஆட்டங்கள் கடந்த 20-ந்தேதி தொடங்கின. ஜம்முவில் நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் ஜம்மு-காஷ்மீர் - கர்நாடகா அணிகள் மோதின. டாஸ் வென்ற கர்நாடகா பேட்டிங் தேர்வு செய்தது. முதல்நாளில் மழைக்காரணமாக 6 ஓவர்கள் மட்டுமே விளையாடிய கர்நாடகா 2 விக்கெட் இழப்பிற்கு 14 ரன்கள் எடுத்திருந்தது. 2-ம் நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

    3-வது நாள் ஆட்டத்தில் தொடர்ந்து பேட்டிங் செய்த கர்நாடகா சித்தார்த்தின் (76) அரைசதத்தால் முதல் இன்னிங்சில் 206 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஜம்மு-காஷ்மீர் 192 ரன்னில் சுருண்டது.

    பின்னர் 14 ரன்கள் முன்னிலையுடன் கர்நாடகா 2-வது இன்னிங்சில் விளையாடியது. நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் கர்நாடகா 4 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்திருந்தது. இன்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. சித்தார்த் 98 ரன்கள் அடித்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். தொடக்க வீரர் சமர்த் 74 ரன்கள் சேர்த்தார். இதனால் கர்காடகா 316 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

    முதல் இன்னிங்சில் 14 ரன்கள் முன்னிலைப் பெற்றதால் ஜம்மு-காஷ்மீர் அணிக்கு 331 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. கிருஷ்ணப்பா கவுதம் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஜம்மு-காஷ்மீர் 163 ரன்னில் சுருண்டது. இதனால் 167 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கர்நாடகா அரையிறுதிக்கு முன்னேறியது. கவுதம் 18.4 ஓவரில 54 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    பெங்கால் - ஒடிசா இடையிலான ஆட்டம் டிரா ஆனதால் முதல் இன்னிங்ஸில் முன்னிலைப் பெற்ற பெங்கால் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.  அதேபோல் சவுராஷ்டிரா - ஆந்திரா இடையிலான ஆட்டம் டிரா ஆனதால் முதல் இன்னிங்சில் முன்னிலைப் பெற்ற சவுராஷ்டிரா அரையிறுதிக்கு முன்னேறியது.

    அரையிறுதி ஆட்டங்கள் வருகிற 29-ந்தேதி தொடங்குகின்றன. ராஜ்கோட்டில் நடைபெறும் முதல் அரையிறுதியில் குஜராத் - சவுராஷ்டிரா அணிகளும், கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெறும் ஆட்டத்தில் பெங்கால் - கர்நாடகா அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    பெர்த்தில் நடைபெற்ற ஐந்தாவது லீக் போட்டியில் இலங்கைக்கு எதிராக 122 ரன்னை சேஸிங் செய்து ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனான போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியா முதல் ஆட்டத்தில் இந்தியாவிடம் தோல்வியடைந்திருந்தது.

    இந்நிலையில் இன்று இலங்கைக்கு எதிராக மோதியது. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனை ஹாசினி பெரேரா ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். மற்றொரு வீராங்கனை சமாரி அடப்பட்டு ஜெயங்கனி சிறப்பாக விளையாடி 38 பந்தில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இவர் ஆட்டமிழக்கும்போது இலங்கை 14 ஓவரில் 91 ரன்கள் அடித்திருந்தது. அதன்பின் 36 பந்தில் 31 ரன்களே சேர்க்க 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் அடித்தது.

    பின்னர் 123 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. முதல் மூன்று வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 10 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது திணறியது.

    பின்னர் 4-வது விக்கெட்டுக்கு கேப்டன் லானிங் உடன் ஜோடி சேர்ந்த ஹெய்னஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஹெய்னஸ் 47 பந்தில் 60 ரன்கள் விளாசினார். லானிங் ஆட்டமிழக்காமல் 41 ரன்கள் அடிக்க ஆஸ்திரேலியா 19.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    டாக்காவில் நடைபெற்று வரும் ஜிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் முஷ்பிகுர் ரஹிம் இரட்டை சதமும், மொமினுல் ஹக் சதமும் விளாசினர்.
    டாக்காவில் வங்காளதேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் கேப்டன் எர்வின் (107) சதமும், தொடக்க வீரர் மஸ்வாயுர் (64) அரைசதமும் அடிக்க வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 265 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    பின்னர் வங்காளதேசம் முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் வங்காளதேசம் 3 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்திருந்தது. மொமினுல் ஹக் 79 ரன்களுடனும், முஷ்பிகுர் ரஹிம் 32 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹிம் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் சதம் விளாசினர். மொமினுல் ஹக் 132 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஆனால் முஷ்பிகுர் ரஹிம் சதத்தை இரட்டை சதமாக மாற்றினார்.

    மொமினுல் ஹக்

    வங்காளதேசம் 6 விக்கெட் இழப்பிற்கு 560 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. முஷ்பிகுர் ரஹிம் 203 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

    பின்னர் 295 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஜிம்பாப்வே 2-வது இன்னிங்சை தொடங்கியது. முதல் ஓவரிலேயே அந்த அணி இரண்டு விக்கெட்டுக்களை இழந்துள்ளது.
    ×