என் மலர்tooltip icon

    விளையாட்டு

    நியூசிலாந்துக்கு எதிரான வெலிங்டன் டெஸ்டில் சொதப்பியதால் ஐசிசி பேட்டிங் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு சரிந்தார் விராட் கோலி.
    ஐசிசி-யின் டெஸ்ட் போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் இடத்தை பிடிக்க ஸ்மித், விராட் கோலி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஆஷஸ் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் விராட் கோலியை பின்னுக்குத்தள்ளி ஸ்மித் முதல் இடத்தை பிடித்தார்.

    அதன்பின் வங்காளதேசம் அணிக்கெதிராக சதம் அடிக்க மீண்டும் விராட் கோலி முதல் இடத்தை பிடித்தார். இதற்கிடையே பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்மித் சிறப்பாக விளையாடவில்லை.

    இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான வெலிங்டன் டெஸ்டில் விராட் கோலி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் மீண்டும் 2-வது இடத்திற்கு சரிந்துள்ளார். ஸ்மித் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    ஸ்மித் 911 புள்ளிகளும், விராட் கோலி 906 புள்ளிகளும் பெற்றுள்ளனர். கேன் வில்லியம்சன் 853 புள்ளிகளுடன் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மார்னஸ் லபுஸ்சேன் 827 புள்ளிகளுடன் 4-வது இடத்திற்கு சரிந்துள்ளார். பாபர் அசாம் (800), டேவிட் வார்னர் (793) ஐந்தாவது மற்றும் 6-வது இடத்தை பிடித்துள்ளனர்.

    ஜோ ரூட் (764) 7-வது இடத்திலும், ரகானே (760) 8-வது இடத்திலும், புஜாரா (757) 9-வது இடத்திலும், மயங்க் அகர்வால் (727) 10-வது இடத்திலும் உள்ளனர்.
    பெண்களுக்கான டி20 உலக கோப்பையில் கேப்டன் ஹீதர் நைட் சதம் அடிக்க தாய்லாந்தை 98 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து.
    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பெண்களுக்கான டி20 உலக கோப்பையில் கான்பெர்ராவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து - தாய்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற தாய்லாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணியின் எமி ஜோன்ஸ், டேனி வியாட் ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கினர்.

    இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்கள். இதனால் 7 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு ஸ்கிவர் உடன் கேப்டன் ஹீதர் நைட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக ஹீதர் நைட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 66 பந்தில் 108 ரன்களும், ஸ்கிவர் 52 பந்தில் 59 ரன்களும் அடிக்க இங்கிலாந்து 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது.

    பின்னர் 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தாய்லாந்து களம் இறங்கியது. தாய்லாந்து அணி ரன்கள் குவிக்க தவறினாலும் ஆல்அவுட் ஆகவில்லை. அந்த அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் இங்கிலாந்து 98 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    உலகையே அச்சுறுத்தியுள்ள கொரோனா வைரஸ் கட்டுக்குள் வராவிடில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற ஜூலை 24-ம் தேதி முதல்   ஆகஸ்டு 9-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    அதேவேளையில், சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது.  ஒலிம்பிக் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஜப்பானையும் கொரோனா வைரஸ் தாக்கம் விட்டு வைக்கவில்லை. இதனால், வரும் ஜூலை மாதம் ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானில் திட்டமிட்டபடி நடத்தப்படுமா? என்று கேள்விகள் எழுந்தன.

    இந்த நிலையில், மே மாதத்திற்குள் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வராவிடில் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர் கூறியதாக அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனம் மேற்கூறிய தகவலை வெளியிட்டுள்ளது.

    டோக்கியோ ஒலிம்பிக்கை வேறு இடத்திற்கு மாற்றவோ, ஒத்திவைக்கவோ திட்டமில்லை எனவும்  ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
    தடுப்பாட்டத்தில் அதிக கவனம் செலுத்தினால் போதிய பலன் கிடைக்காது என்று இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
    நியூசிலாந்துக்கு எதிராக வெலிங்டனில் நடந்த முதலாவது டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்த பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    ஒரு பேட்டிங் குழுவாக நாம் என்ன விஷயங்களை பகிர்ந்து கொள்கிறோம் என்பதில் சரியாக இருக்க வேண்டும். எச்சரிக்கை அணுகுமுறையை (தடுப்பாட்டம்) கையாள்வதினாலோ அல்லது அச்சத்துடன் விளையாடுவதினாலோ எந்த பலனும் கிடைக்காது. அது உங்களது வழக்கமான ஷாட்டுகளை ஆடுவதை கெடுத்து விடலாம்.

    இத்தகைய சீதோஷ்ண நிலையில் ஒன்றிரண்டு ரன் வீதம் கூட எடுக்க முடியாவிட்டால், எப்படி ஆட வேண்டும் என்ற சந்தேகம் உங்களுக்கு வந்து விடும். அதன் பிறகு அடிப்பதற்கு ஏற்ற நல்ல பந்து வரும் வரை காத்திருப்பீர்கள். அது போன்ற பந்து வராத நிலையில் நெருக்கடி ஏற்பட்டு விக்கெட்டை இழந்து விடுவீர்கள். சரி, நல்ல பந்தில்தான் ஆட்டம் இழந்தோம் என்று நீங்கள் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் நான் அந்த மாதிரி சிந்திப்பவன் அல்ல.

    என்னை பொறுத்தவரை எந்த சூழ்நிலையில் இறங்குகிறேன் என்று முதலில் பார்ப்பேன். ஆடுகளம் புற்கள் நிறைந்து காணப்பட்டால் அதன் பிறகு பேட்டிங்கில் தாக்குதல் ஆட்டத்தை தொடுக்க முயற்சிப்பேன். அப்போதுதான் அணியை முன்னெடுத்து செல்ல முடியும். அது கைகூடாவிட்டாலும், நமது முயற்சி சரியே என்று ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அதீத எச்சரிக்கையுடன், குறிப்பாக வெளிநாடுகளில் அந்த பாணியில் ஆடும்போது அது பலன் அளிக்காது என்று நம்புகிறேன்.

    இதேபோல் ஆடுகளத்தன்மை மற்றும் சீதோஷ்ண நிலை குறித்து அளவுக்கு அதிகமாக சிந்தித்துக் கொண்டிருந்தால், உங்களது இயல்பான பேட்டிங்கில் முழுமையாக கவனம் செலுத்த முடியாமல் போய் விடும்.

    நாம் சில சமயங்களில் பேட்டிங் நுணுக்கங்கள் குறித்து அதிகமாக விவாதிக்கிறோம். ஆனால் மனநிலை தெளிவாக இருந்தால், எந்த சீதோஷ்ண நிலையும் எளிதுதான். நேர்மறையான எண்ணத்துடனும், நம்பிக்கையுடனும் பேட்டிங் செய்தால், ‘களத்தில் பந்தின் தாக்கம் இருக்கிறது அல்லது பந்து வீச்சு கடினமாக இருக்கிறது’ என்ன எண்ணம் தோன்றாது. நாங்கள் எப்போதும் போட்டிக்கு உகந்த நல்ல மனநிலையுடன்தான் இறங்குவோம். ஆனால் இந்த ஆட்டத்தில் இதை சரியாக செய்ய இயலவில்லை. அவ்வாறு செய்தால் எங்களால் சாதிக்க முடியும்.

    இவ்வாறு கோலி கூறினார்.

    2-வது இன்னிங்சில் இந்திய வீரர் புஜாரா 81 பந்துகளை எதிர்கொண்டு 11 ரன் எடுத்தார். ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. சதாநேரமும் பேட்டை மேல்வாக்கில் தூக்கிக்கொண்டே இருந்த மற்றொரு இந்திய வீரர் ஹனுமா விஹாரி 79 பந்தில் 15 ரன் எடுத்தார். இவர்களின் ஆமைவேக தடுப்பாட்டத்தைத்தான் கோலி மறைமுகமாக குறை கூறியிருக்கிறார்.
    வெலிங்டன் டெஸ்டில் இந்திய அணி குறைந்த ரன்னில் சரண் அடைந்தது ஆச்சரியம் அளிக்கிறது என்று நியூசிலாந்து பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
    நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டீட் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நாங்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு இடைவிடாது நீண்ட நேரம் நெருக்கடி கொடுத்ததே குறைந்த ரன்னில் ஆல்அவுட் ஆக காரணம். உள்ளூர் சூழலில் டிம் சவுதி, டிரென்ட் போல்ட் ஆகியோரின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது.

    குறிப்பாக 8 வார ஓய்வுக்கு பிறகு புத்துணர்ச்சியுடன் களம் திரும்பிய போல்டின் பந்து வீச்சில் ‘பொறி’ பறந்தது. உலகின் வேறு எந்த இடத்தையும் விட நியூசிலாந்தில் விளையாடுவதுதான் கடினம் என்பதை எல்லா அணிகளும் நினைக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதுதான் எங்களுக்கு பெருமையாகும்.

    அடுத்த டெஸ்டில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். தரம் வாய்ந்த வீரர்களை கொண்டுள்ள இந்திய அணி பதிலடி கொடுக்க தீவிரம் காட்டும். இதுதான் எங்களது பந்து வீச்சாளர்களுக்கு சவாலான விஷயமாக இருக்கும்.

    குழந்தை பிறந்ததால் முதலாவது டெஸ்டில் ஆடாத வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னர் அணிக்கு திரும்பும்போது, யாரை சேர்ப்பது, யாரை நீக்குவது என்ற தர்ம சங்கடம் ஏற்படும். நீல் வாக்னர் வரும்போது நிச்சயம் ஆடும் லெவன் அணியில் இடம் பெறுவார். அதே சமயம் அறிமுக வீரராக இறங்கிய கைல் ஜாமிசனும் முதலாவது டெஸ்டில் பிரமாதப்படுத்தி விட்டார்.

    எனவே 2-வது டெஸ்டில் பிரதான சுழற்பந்து வீச்சாளர் இன்றி 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இறங்குவது குறித்து பரிசீலிப்போம். இவ்வாறு கேரி ஸ்டீட் கூறினார்.

    இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 29-ந்தேதி கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்குகிறது.
    ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி வருகிற 2-ந்தேதி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பயிற்சியை தொடங்க இருக்கிறார்.
    சென்னை:

    13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் (மார்ச்) 29-ந்தேதி தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சுடன் மோதுகிறது. இந்த போட்டிக்கு தயாராவதற்கு வசதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி வருகிற 2-ந்தேதி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பயிற்சியை தொடங்க இருக்கிறார்.

    அந்த சமயத்தில் சென்னை அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களில் யாரெல்லாம் மற்ற போட்டிகள் இன்றி ஆயத்தமாக இருக்கிறார்களோ அவர்களும் பயிற்சியில் இணைந்து ஈடுபடுவார்கள் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் நேற்று தெரிவித்தார். மார்ச் 19-ந்தேதி தொடங்கும் பயிற்சி முகாமின்போது அனைத்து வீரர்களும் அணியுடன் இணைந்து விடுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆடிய பிறகு டோனி எந்தவித சர்வதேச போட்டியிலும் ஆடவில்லை. இதனால் அவர் கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார். ஓய்வு பெறுவாரா? அல்லது தொடர்ந்து விளையாடுவாரா? என்பதில் 38 வயதான டோனி தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தனது ஆட்டத்திறன் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை பொறுத்தே அவர் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை குறித்து முடிவு செய்ய திட்டமிட்டு இருக்கிறார். டோனி 2 வாரங்கள் பயிற்சியில் ஈடுபடுவார் என்று தெரிகிறது. ஏற்கனவே சுரேஷ் ரெய்னாவும், அம்பத்தி ராயுடுவும் கடந்த 3 வாரங்களாக இங்கு பயிற்சி மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
    ஜிம்பாப்வே அணிக்கெதிராக இரட்டை சதம் அடித்த முஷ்பிகுர் ரஹிம் பாகிஸ்தான் சென்று விளையாட வேண்டும் என வங்காளதேச கிரிக்கெட் தலைவர் நஸ்முல் ஹசன் வலியுறுத்தியுள்ளார்.
    வங்காளதேசம் கிரிக்கெட் அணி சமீபத்தில் பாகிஸ்தான் சென்று விளையாடியது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்  வங்காளதேசம் விளையாட திட்டமிட்டுள்ளது. பாதுகாப்பு காரணத்தால் இரண்டு போட்டிகளையும் பிரித்து பிரித்து வைக்கப்பட்டுள்ளது.

    முதல் டெஸ்டில் வங்காளதேசம் படுதோல்வியடைந்தது. இதனைத் தொடர்ந்து ஜிம்பாப்வே வங்காளம் வந்து ஒரு டெஸ்டில் விளையாடியது. இன்றுடன் முடிந்த இந்த போட்டியில் முஷ்பிகுர் ரஹிம் இரட்டை சதம் அடித்தார். இதனால் வங்காளதேசம் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் முஷ்பிகுர் ரஹிம் பாகிஸ்தான் சென்று விளையாட வேண்டும் என்று வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு தலைவர் நஸ்முல் ஹசன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நஸ்முல் ஹசன் கூறுகையில் ‘‘பாகிஸ்தானுக்கான 2-ம் கட்ட சுற்றுப் பயணத்தில் கலந்து கொள்வது குறித்து முஷ்பிகுர் ரஹிம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. ஆனால், அவர் பாகிஸ்தானுக்கு செல்வார் என்று நம்புகிறேன்.

    ஒப்பந்தத்தில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் பாகிஸ்தான் செல்ல வேண்டும். ஒவ்வொருவருக்கும் குடும்பம் முக்கியமானது. ஆனால், நாடு அதைவிட முக்கியமானது’’ என்றார்.
    விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா விக்கெட்டுதான் குறி என ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட இருக்கும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டாம் கர்ரன் தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் 2020 சீசன் அடுத்த மாதம் தொடங்குகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இங்கிலாந்து அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் டாம் கர்ரன் இடம் பிடித்துள்ளார்.

    இவர் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடினார். 2-வது போட்டியில் இங்கிலாந்து இரண்டு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார். கடைசி ஓவரை வீசி சிறப்பாக கட்டுப்படுத்தினார்.

    இவர் ஐபிஎல் தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். ஐபிஎல் போட்டியின்போது விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்துவதே குறி என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து டாம் கர்ரன் கூறுகையில் ‘‘ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் உலகின் தலைசிறந்த வீரர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் பந்து வீச்சாளர்கள் அவர்களின் திட்டத்தை சரியான வகையில் செயல்படுத்துவதைத்தான் எதிர்நோக்குவார்கள்.

    அதனால் நான் அவர்களை விட என்னுடைய திறமையைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இது மிகப்பெரிய சவாலாக இருக்கும். அதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்’’ என்றார்.
    மொரேடா மைதானத்தில் நேற்று நடைபெற்ற நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியின்போது சச்சின் தெண்டுல்கர் பெயரை டொனால்டு டிரம்ப் தவறாக உச்சரித்தார்.
    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரண்டு நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக கட்டப்பட்டுள்ள மொடேரா மைதானத்திற்குச் சென்றார். அங்கு பேசும்போது இந்த நாடு (இந்தியா) தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களான சூச்-சின் தெண்டுல்-கெர் மற்றும் விரோட் கோலி ஆகியோரை கொடுத்துள்ளது’’ என்றார்.

    இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானாக திகழ்ந்த சச்சின் தெண்டுல்கர் உலகளவில் பிரபலமானாவர். இவர் பெயரை டிரம்ப் தவறாக உச்சரித்திருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து டுவிட்டர்வாசிகள் பல்வேறு கருத்துக்களை எழுதி வருகின்றனர்.

    டிரம்ப் சூச்-சின் தெண்டுல்-கெர் எனக் கூறிய நிலையில் இங்கிலாந்து முன்னாள் பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சன் டுவிட்டரில் ‘‘FFS, PiersMorgan, தயது செய்து உங்களை சேர்ந்தவர்களுடன் லெஜண்ட் பெயரை எப்படி உச்சரிப்பது என்று கேளுங்கள்’’ என்று பதிவிட்டுள்ளார்.

    மைக்கேல் வாகன் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘இன்று எப்படி இருக்கிறீர்கள் சூச்-சின்’’ என்று பதிவிட்டுள்ளார்.

    இதற்கிடையில் நீயூசிலாந்து வீரர் ஜிம்மி நீசம் ‘‘இதற்கு முன் சில பெயர்களை அறியாதவர்கள் தவறாக உச்சரித்தால் ஏன் வெறுக்கும் அளவில் பேசுகிறீர்கள்?’’ என்று பதிவிட்டுள்ளார்.
    19 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் தொடரில் அருணாச்சல பிரதேசம் அணிக்கெதிராக சண்டிகர் வீராங்கனை 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.
    பெண்களுக்கான 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சண்டிகர் - அருணாச்சல பிரதேசம் அணிகள் கடப்பாவில் நடைபெற்ற ஆட்டத்தில் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த சண்டிகர் 50 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் அடித்தது. பின்னர் 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் அருணாச்சல பிரதேசம் அணி களம் இறங்கியது. சண்டிகர் அணியின் காஷ்வீ  கவுதம் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அருணாச்சல பிரதேசம் 25 ரன்னில் சுருண்டது.

    இதில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த காஷ்வீ கவுதம் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனைப் படைத்தார். ஆட்டத்தின் முதல் ஓவரை காஷ்வீ வீசினார். இந்த ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார். அடுத்த ஓவரில் மூன்று விக்கெட்டுகளையும், அதற்கு அடுத்த ஓவரில் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

    இதனால் அருணாச்சல பிரதேசம் 10 ரன்களை எட்டுவதற்குள் ஏழு விக்கெட்டுக்களை இழந்தது. அடுத்த ஓவரில் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆல்அவுட் ஆக்கினார். அருணாச்சல பிரதேசம் அணி 9 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்தது. 8 வீராங்கனைகள் டக்அவுட் ஆனார்கள். அதில் நான் பேர் முதல் பந்திலேயே வெளியேறினர்.
    வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ள ஆசிய லெவன் அணியில் விராட் கோலி, கேஎல் ராகுல் உள்பட ஆறு இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
    வங்காளதேசம் நாட்டின் தந்தை என்று அழைக்கப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் வங்காளதேசம் ஆசிய லெவன் - உலக லெவன் அணிகளுக்கு இடையில் டாக்கா மைதானத்தில் இரண்டு டி20 போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளது.

    இந்நிலையில் ஒரு போட்டிக்கான ஆசிய லெவன் மற்றும் உலக லெவன் அணியை இன்று வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ளது.

    ஆசிய லெவன் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. கேஎல் ராகுல், 2. ஷிகர் தவான், 3. தமிம் இக்பால், 4. விராட் கோலி, 5. லிட்டோன் தாஸ், 6. ரிஷப் பண்ட், 7. முஷ்பிகுர் ரஹிம், 8. திசாரா பெரேரா, 9. ரஷித் கான், 10. முஷ்டாபிஜுர் ரஹ்மான், 11. சந்தீப் லாமிச்சேன், 12. லசித் மலிங்கா, 13. முகமது ஷமி, 14. குல்தீப் யாதவ், 15. முஜீப் உர் ரஹ்மான்.

    உலக லெவன் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. அலெக்ஸ் ஹேல்ஸ், 2. கிறிஸ் கெய்ல், 3. டு பிளிசிஸ், 4. நிக்கோலஸ் பூரன், 5. ராஸ் டெய்லர், 6. பேர்ஸ்டோவ், 7. பொல்லார்டு. 8. அடில் ரஷித், 9. ஷெல்டன் காட்ரெல், 10. லுங்கி நிகிடி, 11. அண்ட்ரூ டை, 12. மெக்கிளேனகன்.
    இந்தியாவில் விளையாடியது போன்றே வெலிங்டனில் விளையாடியதால் அவர்கள் மோசமான தோல்வியை சந்திக்க நேரிட்டது என நியூசிலாந்து முன்னாள் பேட்ஸ்மேன் கிரேக் மெக்மில்லன் தெரிவித்துள்ளார்.
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் வெலிங்டனில் நடைபெற்றது. இதில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. முதல் இன்னிங்சில் 165 ரன்களும், 2-வது இன்னிங்சில் 191 ரன்களும் மட்டுமே எடுத்தது.

    அத்துடன் 4-வது நாள் முதல் செசனுக்குள் ஆட்டம் முடிந்து விட்டது. இந்நிலையில் உலகின் நம்பர் ஒன் அணியான இந்தியா நான்கு நாட்களுக்குள் சரணடையும் என பார்க்கவில்லை என்று முன்னாள் பேட்ஸ்மேன் கிரேக் மெக்மில்லன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மெக்மில்லன் கூறுகையில் ‘‘அவர்கள் விளையாடிய விதத்தை பார்க்கும்போது, நியூசிலாந்து சூழ்நிலைக்கு ஏற்ப அவர்களை சரிசெய்து கொள்ளவில்லை. அவர்கள் இந்தியாவில் எப்படி பேட்டிங் செய்தார்களோ, அதேபோன்று வெலிங்டனிலும் பேட்டிங் செய்தார்கள்.

    பந்து மூட்டுக்கு மேல் பவுன்சராகாத போது, சில ஷாட்டுகளை கையை முன்னால் நீட்டி எளிதாக அடிக்கலாம். ஆனால் நியூசிலாந்தில் நீங்கள் அப்படி விளையாட முடியாது. அனுபவ வீரர்களான டிரென்ட் போல்ட், டிம் சவுத்தி பந்து வீச்சில் அசத்தினார்கள். வெலிங்கடன் டெஸ்ட் போன்று பந்து ஸ்விங் ஆகும்போது டிரென்ட் போல்ட் மற்றும் டிம் சவுத்தி மேதைகள். உலகின் நம்பர் ஒன் அணியான இந்தியா நான்கு நாட்களுக்குள் சரணடையும் என நான் பார்க்கவில்லை’’ என்றார்.
    ×