search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஞ்சி கோப்பை கிரக்கெட்
    X
    ரஞ்சி கோப்பை கிரக்கெட்

    ரஞ்சி டிராபி: ஜம்மு-காஷ்மீரை 167 ரன்னில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது கர்நாடகா

    ஜம்முவில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ஜம்மு-காஷ்மீரை கடைசி நாளில் 167 ரன்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது கர்நாடகா.
    ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரின் காலிறுதி ஆட்டங்கள் கடந்த 20-ந்தேதி தொடங்கின. ஜம்முவில் நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் ஜம்மு-காஷ்மீர் - கர்நாடகா அணிகள் மோதின. டாஸ் வென்ற கர்நாடகா பேட்டிங் தேர்வு செய்தது. முதல்நாளில் மழைக்காரணமாக 6 ஓவர்கள் மட்டுமே விளையாடிய கர்நாடகா 2 விக்கெட் இழப்பிற்கு 14 ரன்கள் எடுத்திருந்தது. 2-ம் நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

    3-வது நாள் ஆட்டத்தில் தொடர்ந்து பேட்டிங் செய்த கர்நாடகா சித்தார்த்தின் (76) அரைசதத்தால் முதல் இன்னிங்சில் 206 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஜம்மு-காஷ்மீர் 192 ரன்னில் சுருண்டது.

    பின்னர் 14 ரன்கள் முன்னிலையுடன் கர்நாடகா 2-வது இன்னிங்சில் விளையாடியது. நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் கர்நாடகா 4 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்திருந்தது. இன்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. சித்தார்த் 98 ரன்கள் அடித்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். தொடக்க வீரர் சமர்த் 74 ரன்கள் சேர்த்தார். இதனால் கர்காடகா 316 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

    முதல் இன்னிங்சில் 14 ரன்கள் முன்னிலைப் பெற்றதால் ஜம்மு-காஷ்மீர் அணிக்கு 331 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. கிருஷ்ணப்பா கவுதம் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஜம்மு-காஷ்மீர் 163 ரன்னில் சுருண்டது. இதனால் 167 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கர்நாடகா அரையிறுதிக்கு முன்னேறியது. கவுதம் 18.4 ஓவரில 54 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    பெங்கால் - ஒடிசா இடையிலான ஆட்டம் டிரா ஆனதால் முதல் இன்னிங்ஸில் முன்னிலைப் பெற்ற பெங்கால் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.  அதேபோல் சவுராஷ்டிரா - ஆந்திரா இடையிலான ஆட்டம் டிரா ஆனதால் முதல் இன்னிங்சில் முன்னிலைப் பெற்ற சவுராஷ்டிரா அரையிறுதிக்கு முன்னேறியது.

    அரையிறுதி ஆட்டங்கள் வருகிற 29-ந்தேதி தொடங்குகின்றன. ராஜ்கோட்டில் நடைபெறும் முதல் அரையிறுதியில் குஜராத் - சவுராஷ்டிரா அணிகளும், கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெறும் ஆட்டத்தில் பெங்கால் - கர்நாடகா அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    Next Story
    ×