search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கபில்தேவ்
    X
    கபில்தேவ்

    ஒவ்வொரு போட்டிக்கும் புதிய அணியா?: அணி நிர்வாகம் மீது கபில்தேவ் பாய்ச்சல்

    போட்டிக்கு போட்டி ஆடும் லெவனை மாற்றினால், வீரர்கள் திறன் பாதிக்கும் என அணி நிர்வாகம் மீது கபில்தேவ் குற்றம்சாட்டியுள்ளார்.
    வெலிங்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இரண்டு இன்னிங்சிலும் (165 மற்றும் 191) 200 ரன்களுக்கு உள்ளாகவே சுருண்டது. மயங்க் அகர்வால் மட்டுமே சிறப்பாக விளையாடினார்.

    மேலும் போட்டி நான்கு நாட்களிலேயே முடிந்தது. இந்நிலையில் இந்தியாவின் படுதோல்விக்கு அணி நிர்வாகமே காரணம் என கபில்தேவ் குற்றம்சாட்டியுள்ளார்.

    இதுகுறித்து கபில்தேவ் கூறுகையில் ‘‘நியூசிலாந்து சிறப்பான கிரிக்கெட் ஆட்டத்தை விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்களை பாராட்ட வேண்டும். மூன்று ஒருநாள் போட்டி, வெலிங்டன் டெஸ்டில் அவர்கள் செய்தது மிகவும் அற்புதம்.

    இந்த போட்டி குறித்து ஆராய்ந்து பார்த்தோம் என்றால், இந்திய அணியில் ஏன் இத்தனை மாற்றம் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் ஏறக்குறைய புதிய அணி விளையாடுவது போன்றே இருக்கிறது. நிரந்தரமாக அணியில் யாரும் இல்லை. அணியில் அவர்களுக்கான இடத்திற்கு பாதுகாப்பு இல்லை என்றால், அது வீரர்களின் ஆட்டத்திறனை பாதிக்கும்.

    பேட்டிங் ஆர்டரில் தலைசிறந்த சில வீரர்கள் உள்ளனர். இரண்டு இன்னிங்சிலும் 200 ரன்களுக்கு மேல் கூட அடிக்கமுடியவில்லை என்றால், அவர்களால் அங்குள்ள சூழ்நிலையை எதிர்த்து வெல்ல முடியவில்லை என்பதை காட்டுகிறது. இந்திய வீரர்கள் ஆட்டத்திற்கான திட்டம் மற்றும் யுக்தி மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்.

    நாங்கள் விளையாடிய காலத்திலும், தற்போது நிகழ்ந்து வருவதற்கும் இடையில் ஏராளமான வேறுபாடு உள்ளது. இதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அணியை கட்டமைக்கும்போது, வீரர்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும். நீங்கள் ஏராளமான மாற்றங்களை உருவாக்கினால், அதில் எந்த அர்த்தமும் இல்லை.

    அணி நிர்வாகம் அந்தந்த வகை கிரிக்கெட் பிரிவுக்கான வீரர்களை நம்புகிறது (புஜாரா டெஸ்ட் வீரர்). கேஎல் ராகுல் தற்போது சிறந்த பார்மில் உள்ளார். ஆனால் அவருக்கு டெஸ்ட் அணியில் இடமில்லை. இதில் எந்த அர்த்தமும் இல்லை. அவர்கள் சிறந்த பார்மில் இருக்கும்போது, அவர்கள் விளையாடுவது அவசியம் என நம்புகிறேன்’’ என்றார்.
    Next Story
    ×