என் மலர்tooltip icon

    விளையாட்டு

    வதோதராவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் போலீஸ்காரர்களுக்கு பதான் சகோதரர்கள் வைட்டமின் சி மாத்திரைகள் வழங்கினர்.
    கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் பணியில் டாக்டர்கள், நர்ஸ்கள், தூய்மைப்பணியாளர்கள், போலீஸ்காரர்கள் ஆகியோர் முன்னிலை வகித்து பணியாற்றி வருகிறார்கள்.

    அவர்களின் உடல்நலத்தை பற்றி கவலைப்படாமல் நோய் தொற்று தாக்கியவர்களை குணமாக்குவதிலும், அவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு தொற்று பரவாமல் தடுக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    போலீஸ்காரர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ‘வைட்டமின் சி’ மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இர்பான் பதான், யூசுப் பதான் ஆகியோர் வதோதரா போலீஸ் கமிஷனரிடம் ‘வைட்டமின் சி’ மாத்திரைகள் நன்கொடையாக வழங்கியுள்ளனர். இந்த தகவலை டுவிட்டரில் பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளது வதோதரா போலீஸ்.
    ஸ்பெயின் கால்பந்து லீக்கான ‘லா லிகா’ அடுத்த மாதம் தொடங்கப்படும் என போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
    கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஸ்பெயினில் நடைபெற்று வந்த புகழ்பெற்ற ‘லா லிகா’ லீக் கால்பந்து போட்டி கடந்த மார்ச் 12-ந்தேதி முதல் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஸ்பெயின் அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை கொண்டு வந்துள்ளது. இதனால் வருகிற திங்கட்கிழமையில் இருந்து ‘டாப்-2’ டிவிசன் போட்டிகளில் விளையாடி வரும் கால்பந்து அணிகள் பயிற்சியை தொடங்க இருக்கின்றன.

    அதற்கு முன்னதாக ஸ்பெயின் நாட்டின் சுகாதாரத்துறை சார்பில் வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட இருக்கிறது. முதலில் வீரர்கள் தனித்தனியாக பயிற்சியில் ஈடுபடுவார்கள். அதன்பிறகு சில வாரங்கள் கழித்து அணியாக கூட்டு பயிற்சியில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். ஜூன் மாதத்தில் ‘லா லிகா’ போட்டியை மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டு இருக்கிறது என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
    பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு கவுதம் கம்பிர், விராட் கோலி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
    காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஹந்த்வாரா என்ற இடத்தில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 2 ராணுவ அதிகாரிகள் உள்பட பாதுகாப்பு படையினர் 5 பேர் பலியானார்கள்.

    பயங்கரவாதிகளுடனான மோதலில் வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படையினருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி, முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும், டெல்லி எம்.பி.யுமான கவுதம் கம்பிர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக விராட் கோலி தனது டுவிட்டர் பதிவில், ‘‘எந்தவொரு சூழ்நிலையிலும் கடமையை மறக்காதவர்கள்தான் உண்மையான ஹீரோக்கள். அவர்களின் தியாகத்தை மறக்கக்கூடாது. ஹந்த்வாரா சம்பவத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினருக்கு நான் தலைவணங்குகிறேன். அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

    இதேபோல் கவுதம் கம்பிர், ‘‘உண்மையான ஹீரோ யார்? நடிகரோ, விளையாட்டு வீரரோ, அரசியல்வாதியோ கிடையாது. எப்பொழுதும் ஒரு உண்மையான ஹீரோ ராணுவ வீரர்தான். அவர்களின் பெற்றோர்களுக்கு சல்யூட். இந்த பூமியில் உலவும் துணிச்சலான ஆன்மாக்கள்’’ என்று தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய போட்டி தொடர் நடக்காமல் போனால் பேரிழப்பு ஏற்படும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் லபுஸ் சேன் தெரிவித்தார்.
    சிட்னி:

    உலகையே நிலைகுலைய வைத்துள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் 13-ந் தேதிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. ஆஸ்திரேலியாவை பொறுத்தமட்டில் செப்டம்பர் 30-ந் தேதி வரை அந்த நாட்டு எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் நடைபெற இருக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி அரங்கேறுமா? என்ற சந்தேகம் நிலவி வருகிறது. அத்துடன் இந்திய கிரிக்கெட் அணி வருகிற அக்டோபர் மாதம் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர், 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளது. இந்த போட்டி தொடரும் நடைபெறுமா? என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான இந்த போட்டி தொடர் ரத்து செய்யப்பட்டால் அது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு பெரும் வருவாய் இழப்பாக அமையும். ஏற்கனவே நிதி பிரச்சினையில் சிக்கி தவிக்கும் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கு மேலும் இடியாப்ப சிக்கலை ஏற்படுத்தும் எனலாம்.

    இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்சேன் ஆன்லைன் மூலம் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    இந்தியாவுக்கு எதிரான போட்டி தொடர் நடைபெற முடியாமல் போனால் அது எனக்கு மட்டுமின்றி, அணியினருக்கும், நாட்டுக்கும் பேரிழப்பாகும். கொரோனா தடுப்பு பணிகளை ஆஸ்திரேலியா சுகாதார அமைப்புகள் மிகவும் சிறப்பாக செய்து வருகின்றன. இதனால் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. அரசு எடுத்து வரும் சிறப்பான நடவடிக்கை காரணமாக இந்திய அணியினர் வரும் காலத்திற்கு முன்பாக நிலைமை சீராகி விடும் என்று நம்புகிறேன். எல்லா விஷயங்களும் வேகமாக மாறி வருகின்றன. எனவே நாங்கள் திட்டமிடுகிற மாதிரி எதிர்காலம் அமையும் என்று நினைக்கிறோம். நாங்கள் நினைத்தபடி எல்லாம் நடந்தால் நன்றாக இருக்கும். ஆனால் அப்படி நடக்காமல் போனால் அது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கும்.

    கடந்த ஆண்டு எதிர்பாராத வகையில் சிறப்பாக அமைந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதேநேரத்தில் எனது ஆட்டத்தில் மேலும் முன்னேற்றம் காண்பது குறித்து கவனம் செலுத்தி வருகிறேன். கொரோனா பிரச்சினை முடிந்து களம் திரும்புகையில் அடுத்த நிலைக்கு முன்னேறுவதற்கு முயற்சி செய்ய தயாராக இருக்கிறேன். ஒருநாள் போட்டியை பொறுத்தமட்டில் கடைசி கட்டத்தில் அடித்து ஆடும் விஷயத்தில் முன்னேற்றம் காண வேண்டும் என்று விரும்புகிறேன். குறுகிய வடிவிலான போட்டியில் மேலும் அதிக ஓவர்கள் பந்து வீசும் அளவுக்கு ஏற்றம் அடைய நினைக்கிறேன். ஆட்டத்தில் எந்தவொரு நிலைக்கு உயர்ந்தாலும் அதில் திருப்தி அடையாமல் மேலும் ஏற்றம் காண வேண்டும் என்ற நோக்கில் செயல்பட வேண்டியது அவசியமானதாகும். தற்போதைய நேரம் மிகவும் முக்கியமானது. இதற்கு முன்பு இதுமாதிரி ஒருபோதும் நடந்ததில்லை. உங்கள் ஆட்டம் குறித்து மறுஆய்வு செய்வதற்கும்., சிறந்த வீரராக உருவெடுக்க நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டியது என்ன? என்பதை புரிந்து கொள்வதற்கும் இந்த தருணம் நல்லதொரு வாய்ப்பாகும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் தொடங்கிய பின்னர் தென்ஆப்பிரிக்கா அணிக்காக மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாட விரும்புகிறேன் என டு பிளிஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
    தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டனாக இருந்தவர் டு பிளிஸ்சிஸ். இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை தொடருக்குப்பின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் உள்ளார்.

    இரண்டு வடிவ கிரிக்கெட்டிலும் குயிண்டன் டி காக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணிக்கு யாரை கேப்டனாக நியமிக்கலாம் என தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு ஆலோசித்து வருகிறது.

    இதனால் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் டு பிளிஸ்சிஸ் விளையாடமாட்டார் எனக் கருதப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இனிமேல் எப்போது கிரிக்கெட் தொடங்கும் என உறுதியாக தெரியவில்லை. ஐபிஎல் தொடரும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் 2020-2021 சீசன் முழுவதும் தென்ஆப்பிரிக்கா அணிக்காக மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் விளையாட விரும்புவதாக 35 வயதாகும் டு பிளிஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து டு பிளிஸ்சிஸ் கூறுகையில் ‘‘தென்ஆப்பிரிக்கா அணிக்காக கிரிக்கெட் விளையாடுவதை தற்போது வரை விரும்புகிறேன். அணிக்கு என்னால் பெருமை சேர்க்க முடியும் என்பதை பார்க்கிறேன்.

    மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் விளையாட மிகவும் உத்வேகமாக இருக்கிறேன். தற்போது கிரிக்கெட் இல்லாமல் வீட்டில் இருக்கும் இந்த நேரம், இன்னும் அதிகமாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற பசியை தூண்டியுள்ளது’’ என்றார்.
    வீரர்கள் போட்டிக்கு தயாராகும் நிலையை எட்டவில்லை என்றால் டி20 உலக கோப்பையை தள்ளி வைக்கலாம் என ஜேசன் ராய் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக செப்டம்பர் மாதம் வரை எல்லை மூடப்பட்டுள்ளது. அதன்பின் அக்டோபர் 3-வது வாரத்தில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது.

    கொரோனா வைரஸ் தொற்று இன்னும் முடிவுக்கு வராததால் போட்டி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் ஐசிசி இதுவரை போட்டியை நடத்தும் எண்ணத்தில்தான் உள்ளது.

    இந்நிலையில் ஒருவேளை வீரர்கள் போட்டிக்கு தயாராகவில்லை என்றால் தொடரை தள்ளி வைப்பதில் அர்த்தம் உள்ளது என்று இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஜேசன் ராய் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜேசன் ராய் கூறுகையில் ‘‘சரியான வகையில் வீரர்கள் தயாராகாமல் ஆஸ்திரேலியா செல்ல முடியாத நிலை ஏற்பட்டால், அப்போது டி20 உலக கோப்பையை தள்ளி வைப்பதற்கான அர்த்தம் உள்ளது.

    ஆனால் விளையாட வேண்டும் என்றால், வீரர்களின் வேலை கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதுதான். டி20 போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் குறைந்தது மூன்று வாரங்கள் தேவைப்படும். நாம் தயாராகுவதற்கு இந்த நாட்கள் தேவை என்பதை அனைத்து வீரர்களும் வலியுறுத்த வேண்டும்’’ என்றார்.
    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் சுமூகமாக செல்ல கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் மிகப்பெரிய அளவில் உதவியாக இருந்தார் என அக்சார் பட்டேல் தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் இடது கை சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் அக்சார் பட்டேல். ஐந்து ஆண்டுகளாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடிய அக்சார் பட்டேல், கடந்த சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மாறினார். ஐந்து கோடி ரூபாய் கொடுத்து அந்த அணி வாங்கியது.

    புதிய அணியுடன் சுமூகமாக செல்ல கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் மிகப்பெரிய அளவில் உதவியாக இருந்தார் என அக்சார் பட்டேல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அக்சார் பட்டேல் கூறுகையில் ‘‘நான் இந்திய அணிக்காக விளையாடும்போது ஷ்ரேயாஸ் அய்யர் உடன் இணைந்து விளையாடியுள்ளேன். நான் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு வரும்போது, மிகவும் எளிதாக இருந்தது. ஏனென்றால், நாங்கள் ஒருவருக்கு ஒருவரை நன்றாக தெரிந்து வைத்துள்ளோம்.

    ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட் உடன் அக்சார் பட்டேல்

    மைதானத்தில் எனக்கு சுதந்திரம் கொடுத்து நான் விரும்பும் வகையில் பீல்டிங் அமைக்க வழிவகை செய்தார். அவர் மிகவும் அமைதியானவர். அவருக்கு கீழ் மிகவும் மகிழ்ச்சியாக விளையாடி வருகிறேன்’’ என்றார்.
    ஜெர்மனியில் வருகிற 16-ந்தேதி முதல் கால்பந்து போட்டிகள் தொடங்க வாய்ப்புள்ள நிலையில், பொருஸ்சியா டார்ட்மண்ட் அணி அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்துள்ளது.
    கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று. கடந்த மார்ச் 13-ந்தேதி கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஜெர்மனியின் முதன்மை கால்பந்து தொடரான பண்டேஸ்லிகா நிறுத்தப்பட்டது.

    ஊரடங்கை பிறப்பிக்காமல் அதிவேக பரிசோதனை மூலம் கொரோனா தொற்றின் பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வந்ததுள்ளது ஜெர்மனி. வருகிற 16-ந்தேதியில் இருந்து கால்பந்து போட்டிகளை தொடங்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் பண்டேஸ்லிகாவில் விளையாடும் பொருஸ்சியாக டார்ட்மண்ட் அணி தனது ஸ்டாஃப் மற்றும் வீரர்களை என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்தது. இதில் அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை எனத் தெரிய வந்துள்ளது.

    மிகப்பெரிய அளவில் உறுதித் தன்மையை அறிந்து கொள்ள இன்னும் பரிசோதனை தேவைப்படுகிறது என அந்த கிளப் தெரிவித்துள்ளது.
    மேட்ச் பிக்சிங்சில் ஈடுபட்டு கிரிக்கெட் வாழ்க்கையை தொலைத்த முகமது ஆசிப் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மீது குற்றம்சாட்டியுள்ளார்.
    பாகிஸ்தான் அணி லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடும்போது அந்த அணியின் கேப்டன் சல்மான் பட், வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஆசிப், முகமது அமிர் ஆகியோர் மேட்ச் பிக்சிங் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டனர்.

    பின்னர் ஐசிசி-யால் தண்டனை பெற்றனர். முகமது ஆசிப்புக்கு 7 வருடங்களும் சல்மான் பட், முகமது அமிர் ஆகியோருக்கு தலா ஐந்து வருடங்களும் தடைவிதிக்கப்பட்டன.

    முகமது அமிர் தடைக்குப்பின் மீண்டும் சர்வதேச அணிக்கு திரும்பினார். சல்மான் பட் சர்வதேச அணிக்கு திரும்பவில்லை என்றாலும் பாகிஸ்தான் பிரிமீயர் லீக்கில் விளையாடினார்.

    முகமது ஆசிப்புக்கு மட்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு என்னை இன்னும் சிறப்பான வகையில் கையாண்டிருக்கலாம் என முகமது ஆசிப் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முகமது ஆசிப் கூறுகையில் ‘‘ஒவ்வொருவரும் தவறு செய்தனர். நானும் செய்தேன்.  எனக்கும் முன்பும், எனக்கு பின்பும் கூட மேட்ச் பிக்சிங் நடைபெற்றுள்ளது. எனக்கு முன்பு உள்ளவர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டில் பணிபுரிந்து வருகிறார்கள். எனக்கு பின்பு ஈடுபட்டவர்கள் தற்போது அணியில் விளையாடி வருகிறார்கள்.

    ஒவ்வொருவருக்கும் 2-வது வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் என்னைப் போன்ற சில பேருக்கும் மட்டும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. உலகளவில் தலைசிறந்த பந்து வீச்சாளராக இருந்த என்னை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு காப்பாற்ற எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை’’ என்றார்.

    முகமது ஆசிப் 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 106 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
    மணிக்கு சீராக 150 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் பந்து வீசும் அவரது வீச்சை எப்படி கொள்வது என்று சிந்தித்துக் கொண்டே இருப்பேன் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
    சமூக வலைதளம் மூலம் கலந்துரையாடலில் இணைந்திருந்த இந்திய கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் ரோகித் சர்மாவிடம் ஆரம்ப காலத்தில் உங்களை மிரட்டிய பவுலர்கள் யார் என்று கேட்கப்பட்டது.

    அதற்கு அவர் கூறுகையில், ‘‘நான் இந்திய அணிக்குள் நுழைந்தபோது ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ உலகின் அதிவேக பவுலராக திகழ்ந்தார். 2007-ம் ஆண்டு ஒரு நாள் தொடரின்போது, மணிக்கு சீராக 150 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் பந்து வீசும் அவரது வீச்சை எப்படி கொள்வது என்று சிந்தித்துக் கொண்டே இருப்பேன். இதனால் எனது தூக்கத்தையும் தொலைத்து இருக்கிறேன்.

    பிரெட் லீ

    இதேபோல் தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் நல்ல வேகத்துடன் பந்தை ஸ்விங் செய்வார். அவரது பந்து வீச்சு நம்ப முடியாத அளவுக்கு இருக்கும். அதனால் அவரது பந்து வீச்சை ஒருபோதும் சந்திக்கக் கூடாது என்று நினைப்பேன்.

    டேல் ஸ்டெயின்

    எனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கியபோது, இவர்கள் இருவரது பந்து வீச்சையும் எதிர்கொள்ள கடினமாக இருந்தது.

    ரபடா

    தற்போதைய காலக்கட்டத்தில் ரபடா (தென்ஆப்பிரிக்கா), ஜோஷ் ஹசில்வுட் (ஆஸ்திரேலியா) ஆகியோர் கட்டுக்கோப்புடன் பந்து வீசுகிறார்கள். குறிப்பாக துல்லியமாக பந்து வீசும் ஹசில்வுட்டை டெஸ்ட் கிரிக்கெட்டில் சந்திக்க விரும்பமாட்டேன்’’ என்றார்.

    ஹசில்வுட்

    ஒரு நாள் கிரிக்கெட்டில் மூன்று முறை இரட்டை சதம் விளாசியுள்ள ரோகித் சர்மாவிடம் உங்களது சிறந்த இரட்டை சதம் எது? என்று கேட்டபோது, ‘‘எனது இரட்டை சதங்கள் அனைத்தும் ஒவ்வொரு வகையிலும் சிறப்பு வாய்ந்ததுதான்’’ என்று பதில் அளித்தார்.
    வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான அந்த்ரே ரஸல், கடைசி ஐபிஎல் போட்டி வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரும், ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருபவருமான 32 வயதான ஆந்த்ரே ரஸ்செல் ஆன்-லைன் உரையாடலில் கூறியதாவது:-

    ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடும்போது நான் உண்மையிலேயே சிலிர்த்து போகிறேன் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். கரீபியன் பிரிமியர் லீக் போட்டியின் போதும் இதே போன்று உத்வேகம் ஏற்படுகிறது.

    ஆனாலும் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதுவும் கொல்கத்தா ஈடன் கார்டனில் ஆடுவதற்கு நிகர் எதுவும் கிடையாது. கொல்கத்தா அணிக்காக 6 சீசனில் விளையாடி வருகிறேன். ஒவ்வொரு தருணத்தையும் ரசித்து அனுபவித்து ஆடியிருக்கிறேன்.

    எனது கடைசி ஐபிஎல் போட்டி வரை கொல்கத்தா அணிக்காக விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். 2 ஆட்டங்களில் சோபிக்காமல், அடுத்து 3-வது ஆட்டத்தில் இறங்கும் போதும் கூட ரசிகர்களின் ஆரவாரமும், வரவேற்பும் ஒரே மாதிரியே இருக்கும். இது என்னை மிகவும் கவர்ந்த விஷயம்.

    இவ்வாறு ரஸல் கூறினார்.
    ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வான வீரர்கள் பயிற்சி பெறும் வகையில் விளையாட்டு மையங்கள் படிப்படியாக மே மாதம் இறுதிக்குள் திறக்கப்படும் என கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
    இந்திய விளையாட்டு ஆணையத்தின் (சாய்) பயிற்சி மையங்களில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றவர்களும், ஒலிம்பிக் தகுதி சுற்றுக்கு தங்களை தயார்படுத்தி வந்த வீரர், வீராங்கனைகளும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். கொரோனா வைரஸ் அச்சத்தால் கடந்த மார்ச் மாதம் பயிற்சி அனைத்தும் நிறுத்தப்பட்டது. ஊரடங்கு காரணமாக முன்னணி வீரர், வீராங்கனைகள் போதிய பயிற்சி இன்றி வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

    இந்த நிலையில் இந்த மாத இறுதிக்குள் மீண்டும் படிப்படியாக தேசிய பயிற்சி முகாமை தொடங்க திட்டமிட்டுள்ளதாக மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ நேற்று தெரிவித்தார். முதற்கட்டமாக பெங்களூரு மற்றும் பாட்டியாலாவில் உள்ள சாய் மையங்களில் பயிற்சி தொடங்கும் என்று அவர் குறிப்பிட்டார். 
    ஒலிம்பிக் வாய்ப்பு இல்லாத மற்ற வீரர், வீராங்கனைகளுக்கான பயிற்சி முகாம்கள் தொடங்குவதற்கு செப்டம்பர், அக்டோபர் வரை காத்திருக்க வேண்டியது இருக்கும். இப்போதைக்கு எந்த போட்டிகளும் நடக்க வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார்.
    ×