என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பாகிஸ்தான் மூன்று உலக கோப்பையை இழக்க வாசிம் அக்ரம்தான் காரணம் என அமிர் சோஹைல் குற்றம்சாட்டியுள்ள நிலையில், அக்ரம் பதிலடி கொடுத்துள்ளார்.
    வாசிம் அக்ரம் குறித்து அமிர் சோஹைல் ‘‘இது மிகவும் எளிது. ஒருபக்கம் 1992 உலக கோப்பையை வைத்துவிட்டு, 1996-ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பையை பற்றி பேசலாம். 1995-ல் ரமீஸ் ராஜா கேப்டனாக இருந்தார். அதற்கு முன் சலீம் மாலிக் கேப்டனாக இருந்தார். அவர் மிகவும் வெற்றிகரமாக திகழ்ந்தார். அவர் இன்னும் ஒரு வருடம் கேப்டனாக இருந்திருந்தால் வாசிம் அக்ரமால் கேப்டனாகியிருக்க முடியாது.

    2003 வரை என்ன நடந்தது என்று நீங்கள் உற்று நோக்கினால், ஒவ்வொரு உலக கோப்பைக்கும் முன் கேப்டன்கள் நீக்கப்பட்டிருப்பார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். அதில் வாசிம் அக்ரம் முக்கிய பங்காற்றியிருப்பார்.

    பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்த வாசிம் அக்ரம், 1992-ம் ஆண்டுக்குப்பின் உலக கோப்பையை பாகிஸ்தான் வெல்லாமல் இருப்பதை உருவாக்கினார். அக்ரம் பாகிஸ்தானுக்காக நேர்மையாக இருந்திருந்தால், 1996, 1999 மற்றும் 2003 உலக கோப்பைகளை வென்றிருக்கலாம்.

    இந்த காரணத்திற்காகத்தான் அனைத்து நாடகமும் நடந்தன. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். இதற்கெல்லாம் பின்னால் உள்ள குற்றவாளியை முன்னணியில் கொண்டு வரவேண்டும்’’ எனக் கூறியிருந்தார்.

    இந்நிலையில் அவர்களை பிரபலப்படுத்த என் பெயரை பயன்படுத்துகிறார்கள் என்று வாசிம் அக்ரம் பதிலடி கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து வாசிம் அக்ரம் கூறுகையில் ‘‘என்னைப்பற்றி இப்படி எதிர்மறையாக விஷயங்களை கேட்கும்போதெல்லாம் மிகவும் கவலையாக உள்ளது. ஓய்வு பெற்று 17 ஆண்டுகள் ஆன பின்பும், சில வீரர்கள் அவர்களை பிரபலப்படுத்துவதற்காக என்னுடைய பெயரை பயன்படுத்துகிறார்கள்.

    அவர்களை பற்றி என்னாலும் எதிர்மறையான கருத்துக்களை உருவாக்க முடியும். அது என்ன நோக்கத்திற்கு உதவும். அதனால்தான் நான் அமைதியாக இருக்கிறேன். ஓய்வு பெற்று 17 ஆண்டுகள் ஆனப்பிறகு கூட நான், பெற்ற மரியாதை மற்றும் ரசிகர்களிடம் இருந்து கிடைத்த அன்பு ஆகியவற்றை பற்றி சிந்திக்கிறேன்’’ என்றார்.
    ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் நடத்தப்பாட்டால் நிச்சயமாக மேஜிக் காணாமல் போகும் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்றால் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் உள்ளன. கொரோனா வைரஸ் தொற்று ஜூன் மாதத்திற்குள் கட்டுக்குள் வந்துவிடும் என்று நினைத்தனர். ஆனால் இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்காத நிலையில் நீண்ட காலம் நீடிக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

    இதனால் ஒரு பக்கம் கொரோனா வைரஸ் இருக்க மறுபக்கம் தற்பாதுகாப்புடன் மக்கள் தங்களுடைய அன்றாட வேலைகளை கவனிக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    விளையாட்டு போட்டிகள் ரசிகர்கள் ஆரவாரத்துடன் நடைபெறும். தற்போதைய நிலையில் அதற்கு வாய்ப்பில்லை. முதலில் ஒவ்வொரு கிரிக்கெட் போர்டும் யோசி்த்த நிலையில், தற்போது ரசிகர்கள் இல்லாமல் வெறிச்சோடிய மைதானத்தில் போட்டிகள் நடத்தப்பட்டாலும் பரவாயில்லை என்ற மனநிலைக்கு ஒவ்வொரு வீரர்களும் வந்துள்ளனர்.

    இந்நிலையில் ரசிகர்கள் இல்லாவிடில் நிச்சயமாக மேஜிக் தருணம் காணாமல் போகும் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘தற்போதுள்ள சூழ்நிலை வெறிச்சோடிய மைதானத்தில் போட்டியை நடத்தும் நிலையில்தான் உள்ளது. இது உறுதியாக நடக்கும். என்னைப் பொறுத்தவரைக்கும் ஒவ்வொருவரும் இதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்று தெரியவில்லை. ஏனென்றால், பேரார்வம் கொண்ட மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தின் நடுவே நாம் அனைவரும் விளையாடி பழக்கப்பட்டுள்ளோம்.

    இந்திய அணி கேப்டன் விராட் கோலி

    பழைய மாதிரி தீவிரத்துடன்தான் விளையாடுவாரக்ள். ஆனால் ரசிகர்கள் இருக்கும்போது அவர்களுக்கும் வீரர்களுக்கும் இடையிலான தொடர்பு, போட்டி சென்று கொண்டிருக்கும் சூழ்நிலையில் டென்சனாக இருப்பது போன்ற எமோசனை வெளிப்படுத்துவது மிகக்கடினம்.

    ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் செல்லலாம். ஆனால், மைதானத்திற்கு உள்ளே நடக்கும் மேஜிக் நிகழ்வுகள் நடக்குமா? என்பது சந்தேகம்தான். ஏனெனில் சூழ்நிலை அப்படி உருவாக்கிவிடும். கிரிக்கெட் போட்டியை நாங்கள் சிறப்பாக விளையாடி விடுவோம், ஆனால், மேஜிக் தருணங்கள் அதனுடன் சேர்ந்து பயணிப்பது மிகவும் கடினம்’’ என்றார்.
    வீரர்கள் தொடர்ச்சியாக ஏராளமான போட்டிகளில் விளைாட இருப்பதால், ஐந்து மாற்று வீரர்களுக்கு கால்பந்து கூட்டமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
    கொரோனா காரணமாக கால்பந்து, கிரிக்கெட், டென்னிஸ் உள்ளிட்ட உலக விளையாட்டிகள் முடங்கி போயுள்ளன. தற்போது மீண்டும் போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கொரோனா காரணமாக முடங்கிய பல்வேறு கால்பந்து தொடர்கள் விரைவில் தொடங்க உள்ளன. ஜெர்மனியின் முன்னணி பண்டேஸ்லிகா கால்பந்து தொடர் இம்மாதத்தில் தொடங்கப்பட உள்ளது.

    இந்நிலையில், அடுத்தடுத்து போட்டிகள் நடப்பதால் வீரர்களுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்படும். இதனால் வீரர்களுக்கு காயம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் சர்வதேச கால்பந்து சங்கத்தின் (ஐஎப்ஏபி) சார்பில், மாற்று வீரர்கள் விதியில் தற்காலிக மாற்றம் செய்ய, சர்வதேச கால்பந்து கூட்டமைப்புடன் ஆலோசித்தது.

    இதன்படி, இனிமேல் ஒவ்வொரு போட்டியிலும் ஐந்து மாற்று வீரர்களுக்கு அனுமதி தரப்படும். இந்த மாற்றங்கள் 2020 - 2021 சீசன் முழுவதும் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    தேவைப்பட்டால் ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்திக் கொள்வார்கள் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
    இந்திய கிரிக்கெட் அணி டிசம்பர் - ஜனவரியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து நான்கு டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தத் தொடர்கள் நடைபெறாமல் போனால் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு சுமார் ரூ. 1,480 கோடி (196 மில்லியன் டாலர்) நஷ்டம் ஏற்படும்.

    எனினும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா, ஆஸ்திரேலிய அரசிடம் தொடர்ந்து இதுகுறித்து விவாதித்து வருகிறது. இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யவிருந்தால் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளும் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

    இந்த வருட இறுதியில் ஆஸ்திரேலியாவில் விளையாட்டுப் போட்டிகள் மீண்டும் தொடங்கும் என விளையாட்டுத்துறை மந்திரி ரிச்சர்ட் கோல்பெக் கூறினார். இந்தியாவும் ஆஸ்திரேலியா தொடரை இழக்க விரும்பாது. ஒருவேளை தொடரை காப்பாற்றுவதற்காக இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியாவில் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்திக் கொள்வார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது,

    இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொருளாளர் அருண் துமல் கூறியதாவது:-

    கிரிக்கெட் ஆட்டங்கள் மீண்டும் தொடங்கப்பட வேண்டும். ஆஸ்திரேலியாவில் இரு வாரங்கள் தனிமைப்படுத்திக்  கொள்ள வேண்டிய நிலைமை எல்லோருக்கும் உள்ளது. ஊரடங்கிலிருந்து வெளியே வந்து இன்னொரு நாட்டில் இரு வாரங்கள் தனிமைப்படுத்திக் கொள்வது என்பது நல்ல விஷயம்தான். ஊரடங்கு முடிந்த பிறகு என்ன நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பது இனிமேல்தான் தெரிய வரும்.

    டிம் பெய்ன், விராட் கோலி

    இரு அணிகளும் 5 டெஸ்டுகள் விளையாட வேண்டும் என்பது ஊரடங்குக்கு முன்னால் பேசப்பட்டது. ஊரடங்கால் நிறைய நஷ்டம் ஏற்பட்டதால் ஒருநாள், டி20 ஆட்டங்களை அதிகமாக நடத்தி கூடுதல் வருமானம் பார்க்க வேண்டும் என்றுதான் கிரிக்கெட் வாரியங்கள் முடிவு எடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    அடுத்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ரத்து செய்யப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக ஆஸ்திரேலிய டென்னிஸ் சங்க செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
    மெல்போர்ன்:

    ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆண்டுதோறும் ஜனவரி மாதம் மெல்போர்னில் நடத்தப்படுகிறது. இன்னும் 8 மாதங்கள் இருந்தாலும் அடுத்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ரத்து செய்யப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக ஆஸ்திரேலிய டென்னிஸ் சங்க செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    ‘ஆட்கொல்லி நோயான கொரோனா பரவலை தடுக்க ஆஸ்திரேலிய அரசு ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டி உள்ளது. உள்ளூர் ரசிகர்கள் மட்டுமே அனுமதி மற்றும் வெளிநாட்டு வீரர்களை தனிமைப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால் போட்டியை ரத்து செய்ய நேரிடலாம். ஆனாலும் திட்டமிட்டபடி நடத்துவதற்கு எல்லாவிதமான அம்சங்களையும் கவனத்தில் கொண்டு தீவிர முயற்சி எடுப்போம்’ என்றும் அவர் கூறினார்.
    இந்திய கிரிக்கெட் அணியுடன் மனநல ஆலோசகர் எப்போதும் இருக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் டோனி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    சென்னை:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான தமிழகத்தை சேர்ந்த எஸ்.பத்ரிநாத் தனது நண்பருடன் இணைந்து, விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ளும் மனஅழுத்தத்தை சமாளித்து சாதிக்க உதவுவதற்காக ‘எம்போர்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளார். இந்த அமைப்பு சார்பில் பல்வேறு விளையாட்டுகளை சேர்ந்த பயிற்சியாளர்களுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டிக்கு பிறகு கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கி இருப்பவருமான 38 வயது டோனி காணொலி காட்சி மூலம் பேசுகையில் கூறியதாவது:-

    ‘இந்தியாவை பொறுத்தமட்டில் மனநலம் சார்ந்த சில பலவீனங்கள் ஏற்பட்டால் அதனை ஏற்றுக்கொள்வது இன்னும் பெரிய பிரச்சினையாக இருந்து வருவதாகவே நான் நினைக்கிறேன். ஆனால் பொதுவாக நாம் அதனை மனநோய் என்று குறிப்பிடுகிறோம். பேட்டிங்கின் போது முதல் 5-10 பந்துகளை எதிர்கொள்ளும் போது எனது இதயத்துடிப்பு எகிறும். அப்போது எனக்கு நெருக்கடியும், லேசான பயமும் ஏற்படும். எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் இதுபோல் இருக்க தான் செய்யும். ஆனால் இந்த உண்மையை யாரும் சொல்வதில்லை. அதனை எப்படி சமாளிப்பது என்று எல்லோரும் யோசிப்பது உண்டு.

    இது ஒரு சிறிய பிரச்சினை தான். ஆனால் பல சமயங்களில் இதனை பயிற்சியாளரிடம் சொல்ல நாம் தயக்கம் காட்டுவோம். இதனால் தான் எந்தவொரு விளையாட்டிலும் வீரருக்கும், பயிற்சியாளருக்கும் இடையிலான உறவு என்பது மிகவும் முக்கியமானதாகும். மனநல ஆலோசகர் என்பவர் 10, 15 நாட்கள் மட்டும் அணியுடன் இருப்பவராக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அவரால் அனுபவத்தை மட்டுமே பகிர்ந்து கொள்ள முடியும். மனநல ஆலோசகர் எப்போதும் அணியுடன் நிலையாக இருக்க வேண்டியது அவசியமானதாகும். அப்போது எந்தெந்த விஷயங்களினால் ஒரு வீரரின் ஆட்டத்திறன் பாதிக்கப்படுகிறது என்பது அறிந்து அதற்கு தகுந்தபடி ஆலோசனைகளை வழங்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    பெண்கள் எப்பொழுதும் ஒரு கவனச்சிதறலாக தான் பார்க்கப்படுகிறார்கள் என சானியா மிர்சா வேதனை தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனைகள் ஜெமிமா ரோட்ரிக்ஸ், மந்தனா ஆகியோருடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாடுகையில் கூறியதாவது:-

    ‘இந்த ஆண்டு நடந்த பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீராங்கனை அலிசா ஹீலியின் ஆட்டத்தை நேரில் பார்க்க அவரது கணவரும், ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளருமான மிட்செல் ஸ்டார்க் சென்று இருந்ததை எல்லோரும் பாராட்டினார்கள். ஆனால் அதுபோல் நமது கண்டத்தில் நடந்து இருந்தால் பொண்டாட்டி தாசன் என சொல்லி இருப்பார்கள் என்று நான் வேடிக்கையாக தான் டுவிட்டரில் குறிப்பிட்டேன்.

    இந்த பிரச்சினையில் என்னையும், அனுஷ்கா சர்மாவையும் (விராட்கோலி மனைவி) விட வேறு யாருக்கும் அதிகம் தொடர்பு இருக்க முடியாது. எங்கள் கணவர்கள் சிறப்பாக செயல்படுகையில், அதற்கு அவர்கள் தான் காரணம் என்றும், அதேநேரத்தில் அவர்கள் மோசமாக செயல்பட்டால் அதற்கு நாங்கள் தான் காரணம் என்று சொல்லும் கருத்தை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. நாங்கள் இதனை நகைச்சுவைக்காக தான் கூறுகிறோம்.

    ஆனாலும் இதில் ஆழமான பிரச்சினை இருப்பதாக நான் நினைக்கிறேன். அந்த ஆழமான பிரச்சினை என்னவென்றால் பெண்கள் எப்பொழுதும் ஒரு கவனச்சிதறலாக தான் பார்க்கப்படுகிறார்கள். பலமாக பார்க்கப்படுவதில்லை. இது நாம் சந்திக்க வேண்டிய ஒரு கலாசார பிரச்சினையாகும். உங்களுடன் மனைவி அல்லது காதலி இருப்பதால் கவனச்சிதறல் ஏற்படும் என்று சொல்வதில் எந்தவித அர்த்தமும் இல்லை’.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கராச்சியில் குண்டு வெடிப்பு நடந்ததால் ஓட்டல் அறையில் தங்கியிருந்த நியூசிலாந்து வீரர்கள் பயத்தில் கண்ணீர் விட்டதை கண்டேன் என இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
    நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி 2002-ல் பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. முதல் டெஸ்ட் லாகூரில் நடைபெற்றது. இந்த டெஸ்ட் முடிவடைந்ததும். 2-வது டெஸ்ட் கராச்சி தேசிய மைதானத்தில் நடைபெற இருந்தது.

    இந்த போட்டியில் விளையாடுவதற்காக இரண்டு அணி வீரர்களும் கராச்சியில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்தனர். அப்போது திடீரென கராச்சியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.

    குண்டு வெடிப்பு காரணமாக வீரர்கள் தங்கியிருந்து ஓட்டலின் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின. இதுகுறித்து இன்சமாம் உல் ஹக் நினைவு கூர்ந்துள்ளார்.

    பயங்கரமான அந்த சம்பவம் குறித்து இன்சமாம் உல் ஹக் கூறுகையில் ‘‘நாங்கள் கராச்சிக்கு சென்றிருந்த போது அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. லாகூர் போட்டி முடிந்த பின்னர் இந்த நிகழ்வு நடைபெற்றது. எந்தவொரு வீரருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால் கடவுளுக்கு நன்றி சொல்லியாக வேண்டும். அது பயங்கரமான நாள்.

    குண்டு வெடிப்பு நடந்த திசையில் என்னுடைய அறை இருந்தது. அந்த பக்கம் இருந்து கண்ணாடி உடைந்து மறுபக்கத்தில் உள்ள சுவரில் மோதியது. அந்த பக்கத்தில் இருந்த ஓட்டலின் அனைத்து அறைகளிலும் இதுபோன்று நடந்தன. நான் படிக்கட்டு வழியாக கீழே இறங்கி வந்தேன். அப்போது நீச்சல் குளம் அருகில் நியூசிலாந்து வீரர்கள் அழுது கொண்டு இருப்பதை நான் பார்த்தேன்.

    சொந்த நாடு திரும்பும் நியூசிலாந்து வீரர் பிளெமிங் (பழைய படம்)

    நான் கண்ணாடி உடைந்து சிதறுவதை பார்த்துக் கொண்டிருக்கும்போது போலீஸ்காரர் என்னிடம் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. உடனடியாக கீழே இறங்குங்கள் என்றார். நியூசிலாந்து வீரர்கள் உடனடியாக தொடரை ரத்து செய்து கொண்டு சொந்த நாடு திரும்பினார்கள். எங்கள் வீரர்கள் ஒரு வாரத்திற்கு தூங்கியிருக்க மாட்டார்கள்’’ என்றார்.
    ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 லீக்கை மேலும் பிரபலப்படுத்த நியூசிலந்தை சேர்ந்த அணிகளையும் சேர்க்க வேண்டும் என மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு சார்பில் ஆண்டுதோறும் பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. டிச்மபர் - ஜனவரியில் நடைபெறும் இந்தத் தொடரில் 8 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. தற்போது கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை பிக் பாஷ் டி20 லீக் ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு முதல் கிரிக்கெட் தொடராகக்கூட இருக்கலாம். வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்கள் எந்த அளவிற்கு கலந்து கொள்ள முடியும் என்பதை இதுவரை தெளிவாக வரையறுக்க முடியாத நிலை உள்ளது.

    இந்த சூழ்நிலையில் தொடரை மேலும் பிரபலப்படுத்த நியூசிலாந்தில் உள்ள சில அணிகளையும் சேர்க்க வேண்டும் என நியூசிலாந்தின் அதிரடி பேட்ஸ்மேன் பிரெண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரெண்டன் மெக்கல்லம் கூறுகையில் ‘‘தற்போது சர்வதேச கிரிக்கெட் விளையாட்டுகள் இல்லாததால் பிக் பாஷ் லீக் தொடருக்கு நான் சொன்ன கருத்து மிகப்பெரிய வாய்ப்பாக அமையும். ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு போட்டியை கொண்டு சேர்க்கும்போது நியூசிலாந்து அணிகளும் இருந்தால் கூடுதல் ஆதரவாக இருக்கும்.

    ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளிநாட்டு வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வருவதில் சங்கடம் இருக்கலாம். இதனால் நியூசிலாந்து வீரர்களை உள்ளூர் வீரர்கள் போன்று பயன்படுத்திக் கொள்ளலாம். இதைப்பற்றி சிந்தித்தால் சில நியூசிலாந்து வீரர்கள் மேலும் வாய்ப்புகளை பெற்று நாடு முழுவதும் பிரபலம் அடைவார்கள்’’ என்றார்.
    இங்கிலாந்தில் தொடங்கப்பட்டுள்ள ‘நூறு பந்து’ லீக்கில் முதலீடு செய்ய இருக்கிறது என்ற செய்தி வெளியானது குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சிஇஓ விளக்கம் அளித்துள்ளார்.
    ஐபிஎல் தொடரில் விளையாடும் அணிகளில் ஒன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இந்த அணியின் உரிமையாளர்கள் பல்வேறு இடங்களில் முதலீடு செய்து வருகின்றனர். கடந்த 2015-ல் கரீபியன் பிரிமீயர் லீக்கில் விளையாடும்  அணிகளில் ஒன்றான டிரினாட்டை விலைக்கு வாங்கியது.

    இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டு நூறு பந்து கிரிக்கெட் லீக்கை (The Hundred) நடத்த இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் முதலீட்டிற்கு தடைவிதித்துள்ளது.

    தற்போது 300 மில்லியன் பவுண்டுகள் இழப்பை இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு எதிர்கொள்ள இருக்கிறது. இதனால் தங்களது முதலீடு கொள்கையில் மாற்றம் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ‘நூறு பந்து’ தொடரில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருவதாக செய்திகள் வெளியாகின.

    இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சிஇஓ வெங்கி மைசூர் இதுகுறித்து கூறுகையில் ‘‘நாங்கள் முதலீடு செய்ய இருப்பதாக வெளிவந்துள்ள செய்திகளை நான் அறிவேன். நான் சொல்லும் செய்தி என்னவென்றால், அவர்கள் எங்களை அணுகினால், முதலீடு செய்வது குறித்து ஆலோசிப்போம். அது குறித்து மதிப்பீடு செய்வோம்.

    ஐபிஎல்-லில் நாங்கள் மிகப்பெரிய பிராண்ட் ஆக இருக்கிறோம். நாங்கள் மட்டுமே கிரிக்கெட்டில் உலகளாவிய பிராண்ட். உலகளவில் நடைபெறும் லீக்குகள் நைட் ரைடர்ஸ் பிராண்ட்-ஐ சேர்த்துக் கொள்ள ஆர்வம் காட்டி வருவதை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது’’ என்றார்.
    ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடிய இந்திய, ஆஸ்திரேலிய வீரர்களை கொண்டு எல்லா காலக்கட்டத்திலும் சிறந்த ஆடும் லெவன் அணியை வார்னர் தேர்வு செய்துள்ளார்.
    ஐபிஎல் கிரிக்கெட்டில் இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஆஸ்திரேலிய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.

    அதிரடி பேட்ஸ்மேனான இவர் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா வீரர்களை கொண்டு எல்லா காலக்கட்டத்தில் தலைசிறந்த ஆடும் லெவன் அணியை தேர்வு செய்துள்ளார்.

    பேட்டிங் வரிசையில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஐந்தாவது இடத்தையும், கிளென் மேக்ஸ்வெல்லுக்கு 6--வது இடத்தையும் வழங்கியுள்ளார். எம்எஸ் டோனியை விக்கெட் கீப்பராக தேர்வு செய்துள்ள வார்னர், அவருக்கு 7-வது இடத்தை ஒதுக்கியுள்ளார்.

    தொடக்க வீரராக அவரையும், ரோகித் சர்மாவையும் தேர்ந்தெடுத்துள்ளார். 3-வது இடத்திற்கு விராட் கோலியையும், 4-வது இடத்திற்கு ரெய்னாவையும் தேர்வு செய்தள்ளார்.

    மிட்செல் ஸ்டார்க், பும்ரா, ஆசிஷ் நெஹ்ரா ஆகியோரை வேகப்பந்து வீச்சாளராக தேர்வு செய்தள்ளார். சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவ் அல்லது சாஹல் ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்யலாம் எனத் தெரிவித்துள்ளார்.
    கரீபியன் பிரிமீயர் லீக் அணியான செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் ராபின் சிங், பிராத்வைட் ஆகியோரை விடுவித்துள்ளது.
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு ஆண்டுதோறும் கரீபியன் பிரிமீயர் லீக் என்ற பெயரில் டி20 கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. இதில் செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணியும் இடம்பிடித்து விளையாடி வருகிறது.

    இந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் இந்தியாவைச் சேர்ந்த ராபின் சிங். 2020 சீசனில் ராபின் சிங்கை நீக்கி விட்டு சைமன் ஹெல்மோட்டை தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது. அதேபோல் பிராத்வைட்டை நீக்கிவிட்டு ரயாத் எம்ரிட்டை கேப்டனாக நியமித்துள்ளது.

    வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் ராம்தினை வாங்கியுள்ளது. ராம்தின் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 2017 மற்றும் 2019-ல் கோப்பயை வெல்லும்போது அந்த அணியில் இருந்தவர். ராம்தின் ஏற்கனவே கயானா அணிக்காகவும் விளையாடியுள்ளார்.

    எவின் லிவிஸ், ஷெல்டன் காட்ரெல், பேபியன்  ஆலன், அல்ஜாரி ஜோசப், டொமினிக் டிரேக்ஸ் ஆகியோரை தக்கவைத்துள்ளது.
    ×