search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இன்சமாம் உல் ஹக்
    X
    இன்சமாம் உல் ஹக்

    நியூசிலாந்து வீரர்கள் பயத்தில் கண்ணீர் விட்டதை கண்டேன்: இன்சமாம்-உல்-ஹக்

    கராச்சியில் குண்டு வெடிப்பு நடந்ததால் ஓட்டல் அறையில் தங்கியிருந்த நியூசிலாந்து வீரர்கள் பயத்தில் கண்ணீர் விட்டதை கண்டேன் என இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
    நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி 2002-ல் பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. முதல் டெஸ்ட் லாகூரில் நடைபெற்றது. இந்த டெஸ்ட் முடிவடைந்ததும். 2-வது டெஸ்ட் கராச்சி தேசிய மைதானத்தில் நடைபெற இருந்தது.

    இந்த போட்டியில் விளையாடுவதற்காக இரண்டு அணி வீரர்களும் கராச்சியில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்தனர். அப்போது திடீரென கராச்சியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.

    குண்டு வெடிப்பு காரணமாக வீரர்கள் தங்கியிருந்து ஓட்டலின் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின. இதுகுறித்து இன்சமாம் உல் ஹக் நினைவு கூர்ந்துள்ளார்.

    பயங்கரமான அந்த சம்பவம் குறித்து இன்சமாம் உல் ஹக் கூறுகையில் ‘‘நாங்கள் கராச்சிக்கு சென்றிருந்த போது அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. லாகூர் போட்டி முடிந்த பின்னர் இந்த நிகழ்வு நடைபெற்றது. எந்தவொரு வீரருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால் கடவுளுக்கு நன்றி சொல்லியாக வேண்டும். அது பயங்கரமான நாள்.

    குண்டு வெடிப்பு நடந்த திசையில் என்னுடைய அறை இருந்தது. அந்த பக்கம் இருந்து கண்ணாடி உடைந்து மறுபக்கத்தில் உள்ள சுவரில் மோதியது. அந்த பக்கத்தில் இருந்த ஓட்டலின் அனைத்து அறைகளிலும் இதுபோன்று நடந்தன. நான் படிக்கட்டு வழியாக கீழே இறங்கி வந்தேன். அப்போது நீச்சல் குளம் அருகில் நியூசிலாந்து வீரர்கள் அழுது கொண்டு இருப்பதை நான் பார்த்தேன்.

    சொந்த நாடு திரும்பும் நியூசிலாந்து வீரர் பிளெமிங் (பழைய படம்)

    நான் கண்ணாடி உடைந்து சிதறுவதை பார்த்துக் கொண்டிருக்கும்போது போலீஸ்காரர் என்னிடம் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. உடனடியாக கீழே இறங்குங்கள் என்றார். நியூசிலாந்து வீரர்கள் உடனடியாக தொடரை ரத்து செய்து கொண்டு சொந்த நாடு திரும்பினார்கள். எங்கள் வீரர்கள் ஒரு வாரத்திற்கு தூங்கியிருக்க மாட்டார்கள்’’ என்றார்.
    Next Story
    ×