என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் கிரிக்கெட் விளையாட மூன்று ஆண்டுகள் விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளார்.
    பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல் (வயது 29), பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியின்போது சூதாட்டத்தில் ஈடுபட தன்னை அணுகிய சந்தேக நபர் குறித்து கிரிக்கெட் வாரியத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லாமல் மறைத்தது சர்ச்சையாக வெடித்தது. இதையடுத்து அவர் மீது இரண்டு பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

    இதுகுறித்து விசாரித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் பைசல் இ மிரான் சவுகான், உமர் அக்மலுக்கு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட 3 ஆண்டு தடைவிதித்து உத்தரவிட்டார்.

    இந்நிலையில் இந்த தடையை எதிர்த்து அக்மல் மேல் முறையீடு செய்துள்ளார். உமர் அக்மல் மேல் முறையீடு செய்துள்ளதை உறுதி செய்துள்ள பாகிஸ்தான் கிர்க்கெட் நிர்வாக குழு,  இந்த விவகாரத்தை சுதந்திரமாக விசாரிக்க குழு அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
    இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கின் 19 கால்பந்து கிளப்புகளை சேர்ந்த வீரர்களில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
    ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதற்குப் பின் ஜெர்மனியில் கடந்த சனிக்கிழமை முதன்முதலாக கால்பந்து போட்டிகள் நடைபெற்றன.

    இத்தாலி, ஸ்பெயின் கால்பந்து கிளப் அணிகளின் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கிலாந்தில் நடைபெறும் இங்கிலீஷ் பிரிமீயர் லீக் அடுத்த மாதம் 2-வது வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே 19 கிளப்புகளை சேர்ந்த 748 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டதில், 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற கிளப்புகள் இன்னும் முடிவை வெளியிடவில்லை. அதன்பின்தான் ஒட்டுமொத்த முடிவுகள் தெரியவரும்.

    இத்தாலியில் ஜூன் 14-ந்தேதி வரை போட்டிகளை நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. வீரர்கள் தயாராகி வருகின்றனர். அரசு அனுமதி கிடைத்ததும் போட்டிகள் தொடங்கப்படும்.
    இங்கிலாந்து சுற்று பயணத்துக்கு எந்த ஒரு வீரரையும், கட்டாயப்படுத்த மாட்டோம் என்று வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் தெரிவித்துள்ளார்.
    கிங்ஸ்டன்:

    கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் கிரிக்கெட் தொடர் பாதிக்கப்பட்டுள்ளது. தென்ஆப்ரிக்க அணி இந்திய பயணத்தை பாதியில் முடித்து கொண்டது. இங்கிலாந்து அணி இலங்கை பயணத்தை ரத்து செய்தது.

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

    இங்கிலாந்தில் வருகிற 1-ந் தேதி முதல் விளையாட்டு போட்டிகளுக்கு படிப்படியாக அனுமதி அளிக்கப்படுகிறது. அங்கு ஏற்கனவே ஜூலை 1-ந் தேதி வரை தொழில்முறை கிரிக்கெட் ஆட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

    தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு, 1-ந் தேதி முதல் பயிற்சி மற்றும் விளையாட்டுகள் தொடங்கப்படுகிறது. இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் சமீபத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்நிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து, டெஸ்டு தொடரில் விளையாடுகிறது. இதற்கான போட்டி அட்டவணை இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையில் இங்கிலாந்து சுற்று பயணத்துக்கு எந்த ஒரு வீரரையும், கட்டாயப்படுத்த மாட்டோம் என்று வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    அடுத்தகட்ட நடவடிக்கையில் ஈடுபடும், ஒவ்வொரு வீரரும், பாதுகாப்பை உணர வேண்டும். இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்காக விமானத்தில் பறக்கும்போது நல்ல சூழல் அமையவேண்டும். என்னை பொறுத்தவரை நான் யாரையும் கட்டாயப்படுத்த மாட்டேன்.

    பாதுகாப்பான சூழலில் மட்டுமே இங்கிலாந்துக்கு செல்வோம் என்று வெஸ்ட் இண்டீஸ் உறுதி அளித்துள்ளது.

    இவ்வாறு ஹோல்டர் கூறியுள்ளார்.
    தடகள உலகில் 10 ஆண்டுகள் கொடி கட்டி பறந்த ஜமைக்காவின் உசேன் போல்டுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
    கிங்ஸ்டன்:

    தடகள உலகில் 10 ஆண்டுகள் கொடி கட்டி பறந்தவர், ஜமைக்காவின் உசேன் போல்ட். 100 மீட்டர் ஓட்டத்தில் 9.58 வினாடிகளில் இலக்கை கடந்து உலக சாதனை படைத்தவர். ஒலிம்பிக்கில் 8 தங்கப்பதக்கமும், உலக தடகளத்தில் 11 தங்கமும் கைப்பற்றி வரலாறு படைத்த உசேன் போல்ட் 2017-ம் ஆண்டில் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

    மின்னல்வேக மனிதராக வலம் வந்த 33 வயதான உசேன் போல்ட், தனது காதலி 30 வயதான காசி பென்னட்டுடன் குடும்ப வாழ்க்கையில் இணைந்துள்ளார். இதைத் தொடர்ந்து கர்ப்பமடைந்த காசி பென்னட்டுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தந்தை அந்தஸ்தை எட்டிய உசேன் போல்ட்டுக்கு ஜமைக்கா பிரதமர் ஆன்ட்ரூ ஹோல்னெஸ் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    ஆஸ்திரேலிய அணிக்கு தலைமை தாங்கி 2 உலக கோப்பையை வென்று கொடுத்த பாண்டிங்குக்கு இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா புகழாரம் சூட்டியுள்ளார்.
    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரும், ஐ.பி. எல். போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமான ரோகித் சர்மா இன்ஸ்டாகிராம் உரையாடலில் கூறியதாவது:-

    ரிக்கி பாண்டிங் வேற்று கிரகத்தில் இருந்து வந்தவர் என்றே நான் கருதுகிறேன். ஒருவரிடம் உள்ள அபார திறமையை எப்படி வெளியே கொண்டு வருவது என்பதை செய்து காட்டுவதில் அவர் கைதேர்ந்தவர். அவர் ஆஸ்திரேலிய அணிக்கு தலைமை தாங்கி 2 உலக கோப்பையை வென்று கொடுத்து இருக்கிறார். எனவே பெரிய போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வது எப்படி? என்பது அவருக்கு நன்கு தெரியும்.

    2013ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி, பாண்டிங்கை ஏலத்தில் எடுத்தது. அந்த சீசனில் முதல் 6 ஆட்டங்களில் பேட்டிங்கில் ஜொலிக்கவில்லை என்பதால் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அத்துடன் என்னை அழைத்து கேப்டன் பதவியை ஒப்படைத்தார். அந்த சீசனில் அவர் கேப்டன், பயிற்சியாளர் ஆகிய இரு பணிகளையும் கவனித்தார். எனக்கு உதவி செய்ய அவர் எப்போதும் தயாராக இருந்தார். இளம் வீரர்களுக்கு நல்ல உத்வேகம் அளித்தார்.

    இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

    ரோகித் சர்மா தலைமையில் மும்பை அணி 4 முறை மகுடம் சூடியது குறிப்பிடத்தக்கது.
    இலக்கை வெற்றிகரமாக விரட்டிப்பிடிப்பது எப்படி என்பது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி பதில் அளித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி, வங்காளதேச வீரர் தமிம் இக்பாலுடன் இன்ஸ்டாகிராமில் உரையாடுகையில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    2013-ம் ஆண்டில் இருந்து இந்திய அணி வேகப்பந்து வீச்சை எதிர்கொள்வதில் நல்ல முன்னேற்றம் கண்டு இருக்கிறது என்றால் அதற்கு காரணம் உதவி பயிற்சியாளர் ராகவேந்திரா எனலாம். அவர் பயிற்சியின் போது ‘சைடு ஆர்ம்‘ உபகரணத்தை பயன்படுத்தி மணிக்கு 150-155 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் போது எங்களது கால் நகர்த்தல் மற்றும் பேட்டிங் அசைவு திறமையை வளர்க்க உதவுகிறது. அவருடன் பயிற்சியில் ஈடுபட்டு விட்டு போட்டிக்கு நுழையும் போது, பந்தை எதிர்கொள்ள நிறைய நேரம் கிடைப்பது போல் உணர முடிகிறது. போட்டி சூழ்நிலையில் எனது ஆட்டம் குறித்து நான் ஒருபோதும் சந்தேகப்படமாட்டேன். எப்பொழுதும் நம்பிக்கையுடன் செயல்பட வேண்டியது முக்கியமானதாகும். சிறுவனாக இருந்த போது, நான் பார்த்த போட்டிகளில் இலக்கை விரட்டும் போது இந்திய அணி தோல்வி அடைந்தால், நாம் இருந்து இருந்தால் போட்டியை வென்று கொடுத்து இருக்கலாம் என்று நினைத்தது உண்டு.

    380 ரன்கள் இலக்கை ‘சேசிங்’ செய்தாலும் என்னால் முடியாது என்று ஒருபோதும் நினைக்கமாட்டேன். ’மெகா இலக்கு’ என்றாலும் இயல்பான மனநிலையிலேயே விளையாடுவேன். 2011-ம் ஆண்டு ஹோபர்ட்டில் நடந்த இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 40 ஓவருக்குள் 320 ரன்கள் எடுத்தால் தான் இறுதிசுற்று வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்ற நிலைமை இருந்தது. அப்போது நான் இந்த போட்டியை இரண்டு 20 ஓவர் போட்டி என்று நினைத்து அணுகுமுறையை மேற்கொள்வோம் என்று சுரேஷ் ரெய்னாவிடம் சொன்னேன். அதுமாதிரி செயல்பட்டதால் தான் அந்த போட்டியில் வெற்றி பெற முடிந்தது. மற்ற வீரர்களை போல் நான் ஒரே மாதிரியாக பேட்டிங் செய்வதை விரும்புவது கிடையாது. சூழ்நிலைக்கு தகுந்தபடி எனது ஆட்ட அணுகுமுறையை அடிக்கடி மாற்ற முயற்சிப்பேன்.

    இவ்வாறு கோலி கூறினார்.

    கிரிக்கெட் போட்டியில் பந்தை பளபளப்பாக்க ‘எச்சில்’ பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டால் பந்து வீச்சாளர்களுக்கு மிகக்கடினம் என்று கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் ஒரு தொற்று நோய் என்பதால் ஒவ்வொருவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டியது கட்டாயத்தில் உள்ளோம். கிரிக்கெட் விளையாட்டின்போது பந்தை பளபளப்பாக்க பந்து வீச்சாளர்கள் எச்சில் மற்றும் வியர்வையை பயன்படுத்துவர்.

    தற்போதைய சூழ்நிலையில் ‘எச்சில்’ பயன்படுத்தினால் மற்ற வீரர்களுக்கு அதன்மூலம் நோய் பரவும் அபாயம் உள்ளதால், பயன்படுத்த ஐசிசி தடைவிதிக்க பரிந்துரை செய்துள்ளது.

    ‘எச்சில்’ பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டால் அது பந்து வீச்சாளர்களுக்கு கடினமான விஷயம் என்று கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கவுதம் கம்பிர் கூறுகையில் ‘‘எச்சில் பயன்படுத்த தடைவிதிப்பது பந்து வீச்சாளர்களுக்கு கடுமையான விஷயம். ஐசிசி அதற்கான மாற்று முறையை கொண்டு வர இருக்கிறது. பந்தை பளபளப்பாக்க முடியவில்லை என்றால், பந்துக்கும் பேட்டிற்கும் இடையில் சரியான போட்டியாக இருக்கும் என நான் நினைக்கவில்லை.

    நீங்கள் ‘எச்சில்’ பயன்படுத்த அனுமிக்கவில்லை என்றால், மாற்று ஏற்பாட்டை செய்ய வேண்டும். இது மிகவும் முக்கியமானதாக இருக்கும், இல்லையெனில் கிரிக்கெட்டைப் பார்ப்பது வேடிக்கையாக இருக்காது’’ என்றார்.
    ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸ் அடிக்கும்போது மிகவும் கோபமாக இருந்தேன் என யுவராஜ் சிங் நினைவு கூர்ந்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் உள்ளது. இந்த நேரத்தில் போட்டியின் போது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை முன்னாள் வீரர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

    கிரிக்கெட்டின் சாதனைப் பட்டியலை எடுத்துக் கொண்டால் அதில் இந்திய அணியின் யுவராஜ் சிங்கிற்கு முக்கிய இடம் உண்டு. 2007-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின்போது இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் தொடர்ச்சியாக ஆறு சிக்சர்கள் அடித்து சாதனைப் படைத்தார்.

    அந்த ஓவருக்கு முந்தைய ஓவரை பிளின்டாப் வீசினார். அப்போது எனக்கும் அவருக்கும் இடயில் காரசாரமான விவாதம் நடைபெற்றது என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து யுவராஜ் சிங் கூறுகையில் ‘‘ஆறு பந்தில் ஆறு சிக்சர்கள் அடிப்பதற்கு முந்தைய ஓவரை பிளின்டாஃப் வீசினார். முதல் இரண்டு பந்துகளை மிகவும் சிறப்பாக வீசினார் என்று நினக்கிறேன். அதற்கு அடுத்த பந்தை யார்க்கராக வீசினார். நான் அதை பவுண்டரிக்கு விரட்டினேன். அப்புறம் என்னிடம், டேஷ் ஷாட் (Dash Shot) என்று கூறிய பிளின்டாப், தொடர்ந்து பேச ஆரம்பித்தார்.

    அப்போது அவர் என்னிடம் உன்னுடய கழுத்தை அறுக்கப் போகிறேன் என்றார். அப்போது என்னுடைய கையில் இருக்கும் பேட்டை பாருங்கள்?. உங்களுடைய பந்தை இந்த பேட்டால் எந்தப்பக்கம் அடிக்கப்போகிறேன் என்று உங்களுக்கு தெரியுமா? என்றேன்.

    யுவராஜ் சிங், பிளின்டாஃப்

    ஸ்டூவர்ட் பிராட் பந்தில் 6 சிக்சர்கள் அடிக்கும்போது மிகவும் கோபமாக இருந்தேன். பந்துகளை விளாசிய பின்னர் டிமிட்ரி மாஸ்கரேனஸ், பிளின்டாஃப் ஆகியோரை பார்த்தேன். மாஸ்கரேனஸ் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் என்னுடைய பந்தில் ஐந்து சிக்ஸ் அடித்தார். இதனால் அவரை முதலில் பார்த்தேன். இந்த போட்டி எங்கள் எல்லோருக்கும் எப்போதும் நினைவில் இருக்கக் கூடியது’’ என்றார்.
    பாகிஸ்தான் அணியின் விராட் கோலி என்று கருதப்பட்ட நான், தற்போது சாதிக்க முடியாமல் தோல்வியடைந்து விட்டேன் என்று அகமது ஷேசாத் தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் தலைசிறந்த வீரராக இருக்கும் விராட் கோலியுடன் ஒப்பிட்டு பேசப்பட்டவர்களில் பாகிஸ்தான் அணியின் அகமது ஷேசாத்தும் ஒருவர். அறிமுகமான காலத்தில் அவரது பேட்டிங் திறமை அப்படி பேசவைத்தது. ஆனால் காலம் செல்லசெல்ல விராட் கோலி தலைசிறந்த வீரராக மாறிவிட்டார். 28 வயதாகும் அகமது ஷேசாத்தின் கிரிக்கெட் வாழ்க்கை சரிவை சந்தித்தது.

    இதற்கு அணி நிர்வாகத்திடம் இருந்து போதுமான ஆதரவு கிடைக்காததுதான் முக்கிய காரணம் என்று அகமது ஷேசாத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அகமது ஷேசாத் கூறுகையில் ‘‘சிறந்த வீரருடன் ஒப்பிட்டு பார்க்கும்போது நெருக்கடியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அவர்களுடைய பின்னணி தெரியாமல் நாம் இருவரை ஒப்பிட முனைகிறோம்.

    எந்வொரு வீரரும் வெற்றிபெற அவர்களுக்கு பயிற்சியாளர், கேப்டன், கிரிக்கெட் போர்டு ஆகியவற்றின் ஆதரவு தேவைப்படுகிறது. ஒரு வீரரோ, வீராங்கனையோ நம்பிக்கை பெற இது அவசியம்.

    விராட் கோலி, ரோகித் சர்மா, ஜோ ரூட், கேன் வில்லியம்சன், பாபர் அசாம் ஆகியோரின் பின்னணியை பார்த்தால் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். ஏராளமான தொடர்களை இழந்திருப்பேன். ஆனால், எம்எஸ் டோனி எனக்கு ஆதரவாக இருந்தேன் என்று விராட் கோலியை சொல்லியிருக்கிறார். ரோகித் சர்மாவுக்கும் இது நிலைதான். இருவர் மீதும் எம்எஸ் டோனி நம்பிக்கை வைத்திருந்தார்’’என்றார்.

    கடந்த 7 வருடத்ததிற்கு முன் பாகிஸ்தான் அணியில் அறிமுகமான அகமது ஷேசாத், 13 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். 2017-க்குப் பிறகு அணியில் இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    நான் சந்தித்ததிலேயே ரிக்கி பாண்டிங்தான் மிகவும் சிறந்த பயிற்சியாளர் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வரும் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார்.
    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம் பிடித்து இருக்கும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா இன்ஸ்டாகிராம் உரையாடலின்போது பேசியதாவது:-

    நான் சந்தித்ததிலேயே ரிக்கி பாண்டிங்தான் மிகவும் சிறந்த பயிற்சியாளர். கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிக்கு நான் திரும்புகையில் மிகவும் பதற்றமாக இருந்தேன். ஏறக்குறைய ஒரு அறிமுக வீரர் போலவே உணர்ந்தேன்.

    பயிற்சி முகாமுக்கு முதல் நாள் வருகையில் அவர் எனக்கு நிறைய நம்பிக்கை அளித்தார். நீங்கள் சீனியர் வீரர், இளம் வீரர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம் நீங்கள்தான் எனது முதல் தேர்வு என்றார்.

    இவ்வாடி இஷாந்த் சர்மா தெரிவித்தார்.
    சச்சின் தெண்டுல்கர் மூலம் பிசிசிஐ-யின் அனுமதி பெற்று தனி ஒருவனாக இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆதரவு தெரிவிப்பேன் என்று சுதிர் கவுதம் தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்குப் பிறகு சில நாடுகளில் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியுள்ளன. பாதுகாப்பு காரணத்திற்காக ரசிகர்கள் இன்றி வெறிச்சோடி மைதானத்தில் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

    கிரிக்கெட் போட்டிகளும் இப்படித்தான் நடக்கும் சூழ்நிலை உள்ளது. ஆனால் இந்திய அணி கிரிக்கெட் போட்டியில் விளையாடும்போது சச்சின் தெண்டுல்கரின் தீவிர ரசிகரான சுதிர் கவுதம் மைதானத்தில் இந்திய தேசியக்கொடியை கையில் ஏந்தி ரசிகர்களுக்கு மத்தியில் நின்று வீரர்களை உற்சாகப்படுத்துவார்.

    ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்ற சூழ்நிலை வரும்போது சுதிர் கவுதமால் மைதானத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படும். ஆனால் சச்சின் தெண்டுல்கர் உதவியுடன் மைதானத்திற்குச் செல்வேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    சச்சின் தீவிர ரசிகர் சுதிர் கவுதம்

    இதுகுறித்து சுதிர் கவுதம் கூறுகையில் ‘‘போட்டி மீண்டும் நடைபெறும்போது, நான் நிச்சயம் அங்கு செல்வேன். அங்கு என்னை அனுமதிக்காமல் கூட இருக்கலாம். நான் சச்சின் தெண்டுல்கர் அவர்களை தொடர்பு கொள்வேன். அவர் எனக்கு பிசிசிஐ-மூலம் அனுமதி பெற்றுத்தருவார். நான் ஸ்டேயத்தில் இருக்கும்போது நான் உற்சாகப்படுத்துபவர்களின் தலைவராக இருப்பேன்’’ என்றார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலியுடன் ஒப்பிட வேண்டாம் என பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
    பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் அளித்த ஒரு பேட்டியில், ‘‘என்னையும், விராட் கோலியையும் ஒப்பிட்டு பார்க்காமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

    நாங்கள் இருவரும் வெவ்வேறு வகையான வீரர்கள். எல்லா நேரங்களிலும் களம் இறங்குகையில் சிறப்பாக பேட்டிங் செய்து அணியின் வெற்றிக்கு உதவ வேண்டும் என்று நான் பாடுபடுகிறேன். பூட்டிய ஸ்டேடியத்தில் போட்டியை நடத்துவது ரசிகர்களுக்கும், எங்களுக்கும் சிறந்ததாக இருக்காது.

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி குறித்து எல்லா அம்சங்களையும் கருத்தில் கொண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முடிவு எடுக்கும் என்று நம்புகிறேன்.

    இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முழுமையான உறுதி அளித்தால் மட்டுமே வருகிற ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்று விளையாடும்’’ என்று தெரிவித்து இருக்கிறார்.
    ×