என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பந்தை எச்சிலால் தேய்ப்பது இயல்பாக நடக்கக்கூடியது என்பதால் அதை தடுப்பது கடினம் என்று ஆஸ்திரேலிய பவுலர் ஹசில்வுட் கூறியுள்ளார்.
    சிட்னி:

    எச்சில் மூலம் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து உள்ளதால், கிரிக்கெட் போட்டிகளின் போது பவுலர்கள் பந்தை எச்சிலால் தேய்ப்பதற்கு தடை விதிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) கிரிக்கெட் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. அதே சமயம் பந்தை வியர்வையால் தேய்க்க அனுமதி வழங்கப்படுகிறது. தற்காலிக நடவடிக்கையாக இந்த புதிய விதிமுறை விரைவில் அமலுக்கு வர உள்ளது.

    பொதுவாக பந்து ‘ஸ்விங்’ ஆக வேண்டும் என்பதற்காக வேகப்பந்து வீச்சாளர்கள் பந்தின் ஒரு பகுதியை கடினத்தன்மையுடன் வைத்துக் கொண்டு, இன்னொரு பகுதியை எச்சிலால் தேய்த்து பளபளப்பாக்குவார்கள். எச்சில் பயன்படுத்த தடை விதிப்பு, பவுலர்களுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹசில்வுட் இந்த விவகாரம் குறித்து நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘பந்தை எச்சிலால் தேய்த்து பளபளப்பாக்கி வீசுவதை நான் எப்போதும் விரும்புவேன். ஒரு பவுலராக இயல்பாகவே பந்து மீது எச்சிலால் தேய்ப்பது நடந்து விடும். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் பந்து மீது எச்சிலால் தேய்ப்பதை தடுப்பது கடினம். இதேபோல் அதை கண்காணிப்பதும் சிரமம்தான்.

    வியர்வையால் தேய்த்தால் பந்து கொஞ்சம் ஈரப்பதமாகி விடும் என்று நினைக்கிறேன். அதை சிறிதளவில் பயன்படுத்தினாலே போதும். ஏனெனில் வீரர்களின் கைகளிலேயே ஈரப்பதம் இருக்கத்தான் செய்யும். அவர்கள் பந்தை பிடிக்கும் போது சற்று ஈரம் ஒட்டிவிடும். வியர்வையால் பந்தை பளபளப்பாக்கும் உத்தியால் பெரிய அளவில் தாக்கம் இருக்கும் என்று நினைக்கவில்லை’ என்றார்.

    ‘நம்பர் ஒன்’ பவுலரான ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் கூறும் போது, ‘எச்சிலை உபயோகிக்க தடை விதித்தால், அதற்கு மாற்றாக வேறு வாய்ப்பு வழங்க வேண்டும். வியர்வை ஒன்றும் மோசமானது அல்ல. ஆனால் இதை விட இன்னும் சிறந்தது தேவைப்படுகிறது. பந்தை தொடர்ந்து பளபளப்பாக வைத்திருக்க ஏதாவது செயற்கை பொருளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார். 
    ஊரடங்கு காரணமாக சச்சின் தெண்டுல்கர் தனது மகனுக்கு முடி திருத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விளையாட்டு உலகமே ஸ்தம்பித்து போய் இருக்கிறது. பல்வேறு விளையாட்டுகள் மாற்று தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டும், சில விளையாட்டு ரத்து செய்யப்பட்டும் உள்ளன.

    பொது ஊரடங்கு காரணமாக  விளையாட்டு பிரபலங்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் விளையாட்டு பிரபலங்கள் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து இணையதளங்களின் மூலம் பல்வேறு விளையாட்டு சார்ந்த சவால்களில் ஈடுபட்டு தங்கள் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். ஊரடங்கு காரணமாக நகர் புறங்களில் இயங்கி வரும் முடி திருத்தும் மற்றும் அழகு சாதன கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படாததால் நகரவாசிகள் தவித்து வருகின்றனர்.
     
    இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கி கிடக்கிறார். இந்தநிலையில் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் தன் மகனும் குட்டி சச்சினுமான அர்ஜூனுக்கு முடி திருத்தும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  தற்போது இந்த புகைப்படம் இணையதளத்தில் நெட்டிசன்களால் வைரலாக்கப்பட்டு வருகின்றது. 
    கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை பெரிய போட்டிகள் எதுவும் நடக்க வாய்ப்பில்லை என இந்திய பேட்மிண்டன் வீரர் காஷ்யப் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய பேட்மிண்டன் வீரர் காஷ்யப் அளித்த ஒரு பேட்டியில், ‘கொரோனா வைரசை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப் படும் வரை உலகம் முழுவதும் பெரிய விளையாட்டு போட்டிகள் எதுவும் நடக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். ஏனெனில் எல்லோரும் சந்தேகத்துடனும், ஒருவித பயத்துடனும் தான் உள்ளனர்.

    பயணக்கட்டுப்பாடு, தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட நடைமுறைகள் இருக்கின்றன. அவை எந்த அளவுக்கு பயனுள்ளதாக அமையும் என்று தெரியவில்லை. கொரோனாவின் தாக்கம் எப்போது குறையும் என்பது தெரியாததால் விளையாட்டு அமைப்புகள் அனைத்தும் முடிவு எதுவும் எடுக்க முடியாமல் திணறி வருகின்றன’ என்றார்.
    அக்டோபர், நவம்பரில் ஐபிஎல் போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பு உருவாகும் என இந்திய கிரிக்கெட் வாரிய உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உயர்மட்ட கமிட்டி உறுப்பினர் அன்ஷூமான் கெய்க்வாட் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்குமா என்பது சந்தேகம் தான். உலக கோப்பை போட்டி தள்ளிவைக்கப்பட்டாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ மட்டுமே ஐ.பி.எல். போட்டி நடக்கும். அதற்குரிய காலக்கட்டமான அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஐ.பி.எல். போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பு உருவாகும். அதுவும் அப்போது இந்தியாவில் எந்த மாதிரியான சூழல் நிலவுகிறது என்பதை பொறுத்தே முடிவு செய்ய முடியும். ஆனால் இப்போதைக்கு ஐ.பி.எல். குறித்து எதுவும் சிந்திக்கவில்லை.

    இவ்வாறு கெய்க்வாட் கூறினார்.

    கொரோனா பாதிப்பால் ‘சாய்’ சமையல்காரர் மரணம் அடைந்தாலும் இந்திய ஹாக்கி அணியின் பயிற்சி முகாமை பெங்களூருவில் இருந்து மாற்ற முடியாது என்று ஹாக்கி இந்தியா அமைப்பு அறிவித்துள்ளது.
    பெங்களூரு:

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக்கி அணி மற்றும் குறிப்பிட்ட சில தடகள வீரர்கள் பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) மையத்தில் தங்கி பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த மார்ச் மாதம் 10-ந்தேதி முதல் சாய் மையம் மூடப்பட்டு இருந்தாலும், ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள வீரர்கள் மட்டும் சமூக இடைவெளியை பின்பற்றி உள்ளரங்கில் பயிற்சியில் ஈடுபட அனுமதி அளிக்கப்பட்டது. ஊரடங்கு விதிமுறையில் தளர்வு செய்யப்பட்டு இருப்பதால் கடந்த திங்கட்கிழமையில் இருந்து வீரர்கள் வெளிப்புற மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

    இதற்கிடையில் பெங்களூருவில் உள்ள சாய் மையத்தில் சமையல்காரராக வேலை பார்த்து வந்த ஒருவர் கடந்த திங்கட்கிழமை மரணம் அடைந்தார். தனது உறவினர் ஒருவருக்கு குழந்தை பிறந்து இருந்ததை பார்ப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு சென்று இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது. பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தது உறுதி செய்யப்பட்டது. முன்னதாக கடந்த வெள்ளிக் கிழமை நடந்த சாய் ஆலோசனை கூட்டத்தில் மரணம் அடைந்த அந்த சமையல்காரரும் பங்கேற்றதாக கூறப்படுவதால் சாய் மையத்தில் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு இருப்பதாகவும், அங்கு பணியாற்றும் பலரும் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின.

    இது குறித்து பெங்களூரு ‘சாய்’ மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கடந்த மார்ச் 10-ந்தேதி முதல் சமையல்காரர் உள்பட 60 ஊழியர்கள் வெளியில் உள்ள அவர்களது வீட்டில் தான் வசித்து வருகிறார்கள். கடைசியாக அந்த சமையல்காரர் மார்ச் 15-ந்தேதி சாய் மையத்துக்கு வந்தார். ஆனால் அவர் பிரதான நுழைவு வாயிலை தாண்டி உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாவலர் உள்பட 4-5 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சாய் வளாகம் 3 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது நுழைவு வாயில் பகுதி, 2-வது ‘ஏ’ பகுதி, 3-வது ‘பி’ பகுதியாகும். வீரர்கள் அனைவரும் ‘பி’ பகுதியில் முழுமையான பாதுகாப்புடன் உள்ளனர். நுழைவு வாயிலுக்கும், வீரர்கள் தங்குமிடத்துக்கும் ரொம்ப தூரம் உள்ளது. வீரர்கள் அனைவரும் கடந்த 2 மாதங்களாக தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொண்டு தான் வாழ்ந்து வருகிறார்கள். வீரர்கள் தங்கும் இடத்துக்கு சமையல்காரர் செல்வதற்கு அனுமதி கிடையாது. எனவே வீரர்கள் யாரும் பயப்பட தேவையில்லை’ என்றார்.

    இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து ஆக்கி இந்தியா அமைப்பின் தலைமை செயல் அதிகாரி எலினா நார்மன் கருத்து தெரிவிக்கையில், ‘பெங்களூரு சாய் மையத்தில் இருந்து இந்திய ஆக்கி அணியின் பயிற்சி முகாமை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கேள்வியே எழவில்லை. ஏனெனில் அங்கு தான் நாட்டின் சிறந்த பயிற்சி வசதிகள் இருக்கிறது. அங்கிருந்து வெளியேற நாம் நினைத்தால் கூட அதனை நடைமுறைப்படுத்துவது என்பது முடியாத காரியமாகும். ஏனென்றால் தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது’ என்று கூறினார். 
    டி20 கிரிக்கெட்டில் பேட்டிங் பயிற்சியாளராக வெற்றிபெற சர்வதேச கிரிக்கெட் அனுபவம் தேவையில்லை என்று கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.
    டி20 கிரிக்கெட்டின் பேட்டிங் கோச்சர் குறித்து கவுதம் கம்பிர் கூறுகையில் ‘‘டி20 கிரிக்கெட் போட்டிக்கென மாறுபட்ட பேட்டிங் பயிற்சியாளரை நியமிக்க முடியும். சர்வதேச அளவில் அதிகமான போட்டிகளில் விளையாடவில்லை என்றால் அல்லது போதுமான அளவு கிரிக்கெட் விளையாடவில்லை என்றால் வெற்றிகரமான பயிற்சியாளராக முடியாது என்று சிலர் சொல்கிறார்கள். இதில் உண்மையில்லை.

    டி20 கிரிக்கெட் போட்டியில் பயிற்சியாளர் செய்ய வேண்டியது உங்களது மனநிலையை சாந்தப்படுத்தி அமைதியாக வைத்திருத்தல், மனநிலை மற்றும் நீங்கள் எட்ட வேண்டிய இலக்கு, அதற்கான பிக் ஷாட்ஸ் ஆகியவற்றை சொல்லி கொடுப்பதுதான்.

    ரிவர்ஸ் லேப் ஷாட் (reverse lap shot), லேப் ஷாட் எப்படி அடிக்க வேண்டும் என்று உங்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டியதில்லை. எந்த பயிற்சியாளரும் அதை செய்யமாட்டார்கள். அப்படி பயிற்சியாளர் யாராவது வீரரை மாற்ற முயன்றால் வலியைத்தான் ஏற்படுத்தி கொடுக்க முடியும்.

    சிறந்த வெற்றி பயிற்சியாளராக ஏராளமான கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டியதில்லை. ஆனால் தேர்வாளர்களுக்கு அது தேவை’’ என்றார்.
    டெல்லியில் புகழ்பெற்ற பெரோஸ் ஷா கோட்லா மைதானம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான முகாமாக மாற்றப்பட்டுள்ளது.
    பொது முடக்கம் காரணமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்ப முடியாமல் தவித்தனர். மே1-ந்தேதியில் இருந்து அவர்கள் சொந்த மாநிலம் திரும்பி வருகின்றனர்.

    உத்தர பிரதேசம், பீகார் மற்றும் மத்திய பிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் திரும்பியுள்ளனர். இவர்களுக்காக சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு, அங்கு தங்க வைத்து, கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.

    இதற்காக புகழ்பெற்ற பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தை டெல்லி அரசு பயன்படுத்துகிறது. கடந்த மூன்று நாட்களாக புலம்பெயர் தொழிலாளர்கள் இங்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். நேற்று சுமார் 2500 தொழிலாளர்கள் இங்கிருந்து வெளியேறியுள்ளனர். அதன்பின் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது.

    ‘‘வரும் நாட்களில் அதிகமானோர் வருவார்கள். ஒரு நாளைக்கு இரண்டு முறை பேருந்து மூலம் தொழிலாளர்கள் அழைத்து வரப்படுகிறார்கள். அவர்களுக்கான உதவிகளை செய்து வருகிறோம்’’ என்று டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்கம் செயலாளர் ராஜன் மன்சண்டா தெரிவித்துள்ளார்.
    கேன் வில்லியம்சனின் டெஸ்ட் கேப்டன் பதவிக்கு ஆபத்து என்ற செய்தி உண்மையில்லை என்று நியூசிலாந்து கிரிக்கெட் போர்டு உறுதிப்படுத்தியுள்ளது.
    நியூசிலாந்து அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன். இவர் மூன்று வடிவிலான கிரிக்கெட் அணிக்கும் கேப்டனாக உள்ளார். இவரது தலைமையில் கடைசியாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை நியூசிலாந்து 2-0 எனக்கை கைப்பற்றியிருந்தது.

    இதற்கிடையில் கேன் வில்லியம்சனின் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவிக்கு ஆபத்து என செய்தி வெளியானது. இந்நிலையில் அந்த செய்தியில் உண்மையில்லை என்று நியூசிலாந்து கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

    இந்தியாவுக்கு எதிரான தொடருக்கு முன் நியூசிலாந்து ஆஸ்திரேலியா சென்று விளையாடியது. அப்போது நியூசிலாந்து படுதோல்வி அடைந்தது. அப்போது டெஸ்ட் அணிக்கான கேப்டன் பதவியை டாம் லாதமிடம் கொடுக்க பயிற்சியாளர் விரும்புகிறார். அப்படி கொடுத்தால் வில்லியம்சனின் ஒர்க்லோடு குறையும் என ஆலோசனை வழங்கியதாக செய்தி வெளியாகியிருந்தது. அதற்கு நியூசிலாந்து கிரிக்கெட் போர்டு பதில் அளித்துள்ளது.
    பந்தை பளபளப்பாக்க ‘எச்சில்’ பயன்படுத்த ஐசிசி கிரிக்கெட் கமிட்டி பரிந்துரை செய்யப்பட்டுள்ளதால், இரண்டு பக்கமும் புதிய பந்தை பயன்படுத்தலாம் என ஹர்பஜன் சிங் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
    மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பிக்கும்போது கொரோனா வைரஸ் தொற்று வீரர்களுக்கு இடையில் பரவி விடக்கூடாது என்பதில் ஐசிசி எச்சரிக்கையாக உள்ளது.

    போட்டியின்போது பந்தை பளபளப்பாக்க வீரர்கள் எச்சில் மற்றும் வியர்வையை பயன்படுத்துவர். இந்த எச்சில் மூலம் கொரோனா வைரஸ் பரவி விடக்கூடாது என்பதால் ஐசிசி கிரிக்கெட் கமிட்டி தடைவிதிக்க பரிந்துரை செய்துள்ளது.

    ‘எச்சில்’ பயன்படுத்தாவிடில் பந்து ஷைனிங் தன்மையை உடனடியாக இழந்துவிடும். அப்போது வேகப்பந்து வீச்சாளர்கள் திணற வேண்டியிருக்கும். இது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானதாகிவிடும். இதனால் இரண்டு பக்கத்திலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை போன்று புதுப்பந்துகளை பயன்படுத்தலாம் என ஹர்பஜன் சிங் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் ‘‘இரண்டு பக்கத்திலும் இரண்டு புதிய பந்துகளை பயன்படுத்த முடியும். ஒரு பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடியும். மற்றொரு பந்தை ஸ்விங் செய்ய முடியும். இரண்டு பந்துகளையும் 90 ஓவர்கள் வரை பயன்படுத்தக் கூடாது. 50 ஓவர்களுக்குப்பின் பந்துகளை மாற்ற வேண்டும். ஏனென்றால் இரண்டு பந்துகளும் 50 ஓவர்களில் பழையதாகிவிடும்.’’ என்றார்.

    இதற்கிடையில் பந்தை பளபளப்பாக மாற்று பொருட்களை பயன்படுத்த ஐசிசி திட்டமிட்டுள்ளது.
    பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் கிரிக்கெட் விளையாட மூன்று ஆண்டுகள் விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளார்.
    பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல் (வயது 29), பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியின்போது சூதாட்டத்தில் ஈடுபட தன்னை அணுகிய சந்தேக நபர் குறித்து கிரிக்கெட் வாரியத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லாமல் மறைத்தது சர்ச்சையாக வெடித்தது. இதையடுத்து அவர் மீது இரண்டு பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

    இதுகுறித்து விசாரித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் பைசல் இ மிரான் சவுகான், உமர் அக்மலுக்கு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட 3 ஆண்டு தடைவிதித்து உத்தரவிட்டார்.

    இந்நிலையில் இந்த தடையை எதிர்த்து அக்மல் மேல் முறையீடு செய்துள்ளார். உமர் அக்மல் மேல் முறையீடு செய்துள்ளதை உறுதி செய்துள்ள பாகிஸ்தான் கிர்க்கெட் நிர்வாக குழு,  இந்த விவகாரத்தை சுதந்திரமாக விசாரிக்க குழு அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
    இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கின் 19 கால்பந்து கிளப்புகளை சேர்ந்த வீரர்களில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
    ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதற்குப் பின் ஜெர்மனியில் கடந்த சனிக்கிழமை முதன்முதலாக கால்பந்து போட்டிகள் நடைபெற்றன.

    இத்தாலி, ஸ்பெயின் கால்பந்து கிளப் அணிகளின் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கிலாந்தில் நடைபெறும் இங்கிலீஷ் பிரிமீயர் லீக் அடுத்த மாதம் 2-வது வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே 19 கிளப்புகளை சேர்ந்த 748 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டதில், 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற கிளப்புகள் இன்னும் முடிவை வெளியிடவில்லை. அதன்பின்தான் ஒட்டுமொத்த முடிவுகள் தெரியவரும்.

    இத்தாலியில் ஜூன் 14-ந்தேதி வரை போட்டிகளை நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. வீரர்கள் தயாராகி வருகின்றனர். அரசு அனுமதி கிடைத்ததும் போட்டிகள் தொடங்கப்படும்.
    இங்கிலாந்து சுற்று பயணத்துக்கு எந்த ஒரு வீரரையும், கட்டாயப்படுத்த மாட்டோம் என்று வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் தெரிவித்துள்ளார்.
    கிங்ஸ்டன்:

    கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் கிரிக்கெட் தொடர் பாதிக்கப்பட்டுள்ளது. தென்ஆப்ரிக்க அணி இந்திய பயணத்தை பாதியில் முடித்து கொண்டது. இங்கிலாந்து அணி இலங்கை பயணத்தை ரத்து செய்தது.

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

    இங்கிலாந்தில் வருகிற 1-ந் தேதி முதல் விளையாட்டு போட்டிகளுக்கு படிப்படியாக அனுமதி அளிக்கப்படுகிறது. அங்கு ஏற்கனவே ஜூலை 1-ந் தேதி வரை தொழில்முறை கிரிக்கெட் ஆட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

    தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு, 1-ந் தேதி முதல் பயிற்சி மற்றும் விளையாட்டுகள் தொடங்கப்படுகிறது. இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் சமீபத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்நிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து, டெஸ்டு தொடரில் விளையாடுகிறது. இதற்கான போட்டி அட்டவணை இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையில் இங்கிலாந்து சுற்று பயணத்துக்கு எந்த ஒரு வீரரையும், கட்டாயப்படுத்த மாட்டோம் என்று வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    அடுத்தகட்ட நடவடிக்கையில் ஈடுபடும், ஒவ்வொரு வீரரும், பாதுகாப்பை உணர வேண்டும். இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்காக விமானத்தில் பறக்கும்போது நல்ல சூழல் அமையவேண்டும். என்னை பொறுத்தவரை நான் யாரையும் கட்டாயப்படுத்த மாட்டேன்.

    பாதுகாப்பான சூழலில் மட்டுமே இங்கிலாந்துக்கு செல்வோம் என்று வெஸ்ட் இண்டீஸ் உறுதி அளித்துள்ளது.

    இவ்வாறு ஹோல்டர் கூறியுள்ளார்.
    ×