என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்த காலகட்டத்தில் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட்கோலி என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கிரிக்கெட்டுக்குரிய பாரம்பரியமான ஷாட் மற்றும் அபாரமான உடல் தகுதியின் மூலம் இந்த காலகட்டத்தில் உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக விராட்கோலி விளங்குகிறார். விராட்கோலி, ஸ்டீவன் சுமித் (ஆஸ்திரேலியா), கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து), ஜோரூட் (இங்கிலாந்து) ஆகிய நால்வரில் விராட்கோலியே மூன்று வடிவிலான போட்டியிலும் சந்தேகத்துக்கு இடமின்றி சிறந்தவர் ஆவார். 3 வடிவிலான போட்டியிலும் விராட்கோலியின் சாதனை நம்ப முடியாத வகையில் இருக்கிறது. அதிலும் குறிப்பாக குறுகிய வடிவிலான போட்டியில் அவரது சாதனை அற்புதமானது.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இயான் சேப்பல்


    விராட்கோலியின் பேட்டிங் அணுகுமுறை எனக்கு ரொம்பவும் பிடித்ததாகும். கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலிய வந்து விளையாடிய போது விராட்கோலியை பேட்டி கண்டோம். அப்போது அவர் குறிப்பாக 20 ஓவர் போட்டியில் புதிய ஷாட்களை ஆடுவது இல்லை ஏன்? என்பது குறித்து விளக்கம் அளித்தார். அத்துடன் டெஸ்ட் போட்டியில் அதுபோன்ற ஷாட்கள் புகுவதை தான் விரும்பவில்லை என்றும் கூறினார். நான் விளையாடிய காலத்தில் சிறந்த அதிரடி ஆட்டக்காரர் விவியன் ரிச்சர்ட்ஸ் (வெஸ்ட்இண்டீஸ்). சாதாரணமான ஷாட்களையே ஆடும் அவர் இடைவெளி பார்த்து அந்த திசையில் பந்தை விரட்டுவார். வேகமாக ரன்களை சேர்ப்பார். அவரை போலத்தான் விராட்கோலியும் விளையாடுகிறார். பாரம்பரிய கிரிக்கெட் ஷாட்களை ஆடுகிறார். அதனை உண்மையிலேயே நன்றாக விளையாடுகிறார்.

    மற்றவர்களிடம் இருந்து விராட்கோலியை வேறுபடுத்தி தனித்துவமாக காட்டுவது அவரது உடல் தகுதி மற்றும் ரன்னுக்காக ஓடும் வேகம் ஆகியவையாகும். உடல் தகுதி அவரது ஆட்ட முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவரது சில செயல்பாடுகள் மிகவும் அருமையாக இருக்கிறது. கேப்டன்ஷிப்பை பொறுத்தமட்டில் விராட்கோலியின் சிறப்பம்சம் என்னவென்றால் தோல்வியை கண்டு அஞ்சமாட்டார். வெற்றி பெற முயற்சிக்கும் போது தோல்வி அடைந்தால் கூட அதனை பொருட்படுத்தமாட்டார். எந்த தருணத்திலும் வெற்றியையே முன்னிறுத்துவார். விராட்கோலியின் இந்த அணுகுமுறை எனக்கு பிடித்ததாகும். அந்த அணுகுமுறையை தான் எல்லா கேப்டனும் கடைப்பிடிக்க வேண்டும். கேப்டன் பதவியை ஏற்கையில் அவர் மிகவும் உணர்ச்சிகரமானவராக இருந்தார். அதனால் அவரது கேப்டன்ஷிப் பாதிக்கப்படும் என்று நான் நினைத்தேன். ஆனால் அவர் தனது இந்த குணத்தையே கேப்டன்ஷியில் சிறந்து விளங்க சாதகமாக பயன்படுத்தி கொண்டார். அவர் மிகவும் புத்திசாலித்தனமான கிரிக்கெட் வீரர்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ரசிகர்கள் இன்றி வெறிச்சோடிய மைதானத்தில் விளையாடுவது மணமகள் இல்லாத திருமணம் போன்றது என்று சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் இருந்து மெல்ல மெல்ல சகஜ நிலைக்கு திரும்பி வரும் நாடுகளில் விளையாட்டு போட்டிகள் ரசிகர்கள் இல்லாத வெறிச்சோடிய மைதானங்களில் நடைபெற்று வருகின்றன.

    தற்போது வரைக்கும் தென்கொரியா, ஜெர்மனி நாடுகள் கால்பந்து போட்டிகளை தொடங்கிவிட்டன. இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில் தயாராகி வருகின்றன.

    கிரிக்கெட் போட்டிகளும் ரசிகர்கள் இன்றிதான் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்திய அரசு ரசிகர்கள் இன்று மைதானங்களை திறக்கலாம் என்று தெரிவித்துள்ளது. பெரும்பாலானோர் இதற்கு ஆதரவு தெரிவித்தாலும், விராட் கோலி போன்ற சில வீரர்கள் சில விஷயங்கள் மிஸ் ஆகும் என்று தெரிவிக்கின்றனர்.

    இந்நிலையில் ரசிகர்கள் இன்றி கிரிக்கெட் போட்டி என்பது மணமகள் இல்லாத திருமணம் போன்றது என்று சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சோயிப் அக்தர் கூறுகையில் ‘‘ரசிகர்கள் இன்றி போட்டிகளை நடத்துவது கிரிக்கெட் போர்டுகளுக்கு சாத்தியமானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கலாம். ஆனால் மார்க்கெட் செய்ய முடியும் என்று நான் நினைக்கவில்லை. ரசிகர்கள் இன்றி கிரிக்கெட் என்பது மணமகள் இல்லாத திருமணம் போன்றது. போட்டிகளில் விளையாடுவதற்கு ரசிகர்கள் கூட்டம் தேவை. இன்னும் ஒரு வருடத்திற்குள் கொரோனா வைரஸ் சூழ்நிலை சரியாகிவிடும் என்று நம்புகிறேன்’’ என்றார்.
    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் மாதம் 10-ந்தேதி தொடங்க இருந்த டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. முன்னதாக 5-வது டி.என்.பி.எல் தொடர் ஜூன்10-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கூறியுள்ளது.
    கொரோனா வைரஸ் தொற்றுக்குப்பின் ஜெர்மனியில் கடந்த இரண்டு நாட்களாக வெற்றிகரமாக 8 கால்பந்து போட்டிகள் நடைபெற்றன.
    கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக மார்ச் 11-ந்தேதிக்குப்பின் ஜெர்மனியில் பண்டேஸ்லிகா கால்பந்து லீக் உள்பட விளையாட்டு போட்டிகள் அனைத்தும் நடைபெறாமல் இருந்தன.

    ஜெர்மனியில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கால்பந்து போட்டிகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டன.

    ரசிகர்கள் மைதானத்திற்குள் வரக்கூடாது, வீரர்கள் சந்தோசத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிக்கக்கூடாது. எதிரணி வீரர்களுடன் அதிக அளவில் உடல் அளவில் மோதல் சம்பவத்தில் ஈடுபடக்கூடாது போன்றவைகளும் அதில் அடங்கும்.

    நேற்று முன்தினம் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஆகிய இரு தினங்களில் 8 போட்டிகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டன. ரசிகர்கள் இல்லை. ஆனால் வீரர்கள் தங்களது சந்தோசங்களை வெளிப்படுத்தும்போது வழிமுறைகளை கடைபிடிக்க முடியாமல் போனது.

    டார்ட்மண்ட் அணியின் பயிற்சியாளர் லூசியன் ஃபேவ்ரி கூறுகையில் ‘‘ரசிகர்கள் இல்லாமல் போட்டியில் விளையாடியது விசித்திரமாக இருந்தது. ரசிகர்களின் சத்தத்தை கேட்க முடியவில்லை. கோல்கள் நோக்கி பந்தை அடித்த போதும், சிறந்த பாஸ் செய்த போதும், கோல் அடித்த போதும் மைதானம் மைதியாகவே இருந்தது’’ என்றார்.


    டார்ட்மண்ட் அணி வீரர்கள்

    ஹெர்தா பெர்லின் அணியின் வெடாட் இபிசெவிக் கோல் அடித்த சந்தோசத்தை சக வீரர்களுடன் பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘நான் வருந்துகிறேன். ஆனால் நாங்கள் பேரார்வம் கொண்ட கால்பந்து வீரர்கள். ரோபோக்கள் அல்ல.

    போட்டி தொடங்குவற்கு முன் எங்கள் அணி டாக்டரிடம் சந்தோசத்தை வெளிப்படுத்தினால் கோல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுமா? என்று கேட்டார். அவர் ஆமாம் என்று கூறினார். அது எனக்கு முக்கியமான விசயமாக இருந்தது’’ என்றார்.
    எம்எஸ் டோனிக்கு மாற்று வீரர் நானில்லை. அவர் அணியில் இருந்து ஓய்வு பெற்றதால் வாய்ப்பு கிடைத்தது என்று சகா தெரிவித்துள்ளார்.
    இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக இருப்பவர் சஹா. எம்எஸ் டோனி விளையாடிய காலத்திலேயே அணியில் இருந்தவர். எந்தவொரு தொடராக இருந்தாலும் மாற்று விக்கெட் கீப்பராக அழைத்துச் செல்லப்படுவார். ஆனால் வாய்ப்பு கிடைக்காது.

    டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆக எம்எஸ் டோனிதான் முக்கிய காரணம். ஆனால் எம்எஸ் டோனிக்கு மாற்று வீரர் நானில்லை என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சஹா கூறுகையில் ‘‘நான் எம்எஸ் டோனியின் இடத்தை நிரப்பவில்லை. டோனி ஓய்வு பெற்ற பிறகு எனக்கு டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நான் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான தினத்தன்று விவிஎஸ் லக்ஷ்மண் காயம் காரணமாக விளையாடவில்லை.

    அவருக்குப் பதிலாக ரோகித் ஷர்மாவை அணியில் சேர்த்தனர். அப்போது பயிற்சியில் நானும் ரோகித் ஷர்மாவும் எதிர்பாராத விதமாக ஒருவர் மீது மற்றொருவர் மோதிக் கொண்டோம். அதில் இருவரும் காயமடைந்தோம். ரோகித் விளையாட முடியாத அளவிற்குக் காயமடைந்தார்.

    பின்னர் போட்டி தொடங்கும் நேரம் வந்ததால் தென்னாப்பிரிக்க கேப்டனுடன் எம்எஸ் டோனியும் டாஸ் போட்டுவிட்டு வந்தார். வரும்போது என்னைப் பார்த்து நீ இன்று விளையாடுகிறாய் சாஹா என்றார். என்னால் நம்ப முடியவில்லை.

    ஏனென்றால் பயிற்சியாளர் என்னிடம் டோனி இருப்பதால் அணியில் இடம்பெற வாய்ப்பில்லை எனத் தெரிவித்திருந்தார். அப்போது எம்எஸ் டோனிதான் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். பின்னர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து தோனி ஓய்வு பெற்றுவிட, அந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஒரு கீப்பராக, பேட்ஸ்மேனாக, வேகமாக ஸ்டெம்பிங் செய்வது என எம்எஸ் டோனியிடம் கற்றுக்கொள்ள ஏராளமானவை இருக்கின்றன’’ என்றார்.
    ஜமைக்கா அணியில் இருந்து நீக்கப்பட்டதால் சர்வான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசிய கெய்ல் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்ததால் ஒழுங்கு நடவடிக்கையில் இருந்து தப்பினார்.
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல், கரீபியன் பிரிமீயர் லீக் (சி.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஜமைக்கா தல்லாவாஸ் அணிக்காக விளையாடி வந்தார். இந்த சீசனுக்கான ஜமைக்கா அணியில் அவரை அந்த அணி நிர்வாகம் தக்கவைக்க விரும்பாமல் கழற்றி விட்டது.

    இதையடுத்து அவரை செயின்ட் லூசியா அணி தேர்வு செய்தது. ஜமைக்கா அணியில் இருந்து தான் நீக்கப்பட்டதற்கு அந்த அணியின் பயிற்சியாளரும், முன்னாள் வீரருமான ராம்நரேஷ் சர்வான்தான் முக்கிய காரணம் என்று கெய்ல் பகிரங்கமாக குற்றம்சாட்டி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், ‘‘கொரோனாவைவிட கொடியவர், விஷப் பாம்பு, முதிர்ச்சி அற்றவர், நம்பிக்கை துரோகி’’ என்று சர்வானை சகட்டு மேனிக்கு கெய்ல் திட்டி தீர்த்தார்.

    ஆனால் கெய்லை நீக்கியது அணி உரிமையாளர்களின் முடிவே தவிர இதில் எனது பங்கு துளியும் கிடையாது என்று சர்வான் திட்டவட்டமாக மறுத்தார். இதற்கிடையே குறிப்பிட்ட அணியுடன் ஒப்பந்தத்தில் உள்ள வீரர் விதிமுறையை பின்பற்ற வேண்டும். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டுக்கும், சி.பி.எல். கிரிக்கெட்டுக்கும் களங்கத்தை ஏற்படுத்திய கெய்ல் தண்டனையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய தலைவர் ரிக்கி ஸ்கெரிட் கூறியிருந்தார்.

    இந்த நிலையில் 40 வயதான கிறிஸ் கெய்ல் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் நேற்று விடுத்துள்ள அறிக்கையில், ‘‘ஜமைக்கா அணியில் இருந்து நான் நீக்கப்பட்டதன் உண்மை நிலவரத்தை ரசிகர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக மட்டுமே அந்த வீடியோவை வெளியிட்டேன். ஜமைக்கா அணியில் இருந்து நான் 2-வது முறையாக விலக்கப்பட்டு இருக்கிறேன். என்னுடைய சி.பி.எல். கிரிக்கெட் வாழ்க்கையை ஜமைக்கா அணிக்காக, சபீனா பார்க் மைதானத்தில் என்னுடைய சொந்த ஊர் ரசிகர்களின் முன்னிலையில் முடித்துக் கொள்ள விரும்பினேன். ஏற்கனவே இரண்டுமுறை எனது தலைமையில் ஜமைக்கா அணி பட்டம் வென்றுள்ளது.

    அவர்கள் என்னை நடத்திய விதத்தால் ஏற்பட்ட மனக்கசப்பு இன்னும் உள்ளது. அந்த வீடியோவில் நான் பேசிய வார்த்தைகளில் உறுதியாக இருக்கிறேன். அவை எனது இதயத்தில் இருந்து வெளிப்பட்டவை. அதே நேரத்தில் எனது பேச்சின் சில பகுதிகள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டுக்கும், சி.பி.எல். கிரிக்கெட்டுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தியதை ஒப்புக் கொள்கிறேன். சி.பி.எல். கிரிக்கெட்டின் புகழுக்கு களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை. இந்த போட்டியின் மூலம் 7 ஆண்டுகளாக கரிபீயன் ரசிகர்கள் முன் விளையாடும் அதிர்ஷ்டத்தை பெற்று இருக்கிறேன். அதற்காக நன்றி. இந்த போட்டியில் உற்சாகமாக மட்டையை சுழட்டியதோடு மட்டுமின்றி அது வளரவும் உதவி இருக்கிறேன். இந்த ஆண்டு புதிய அணிக்காக களம் காண ஆர்வமுடன் உள்ளேன்’’ என்று கெய்ல் அதில் கூறியுள்ளார்.

    கெய்ல் தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்ததால் திருப்தி அடைந்த சி.பி.எல். நிர்வாகம், ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி அமைக்கத் தேவையில்லை என்று கூறி இத்துடன் இந்த சர்ச்சையை முடித்து வைத்தது. இதனால் அபராதம் அல்லது தடை போன்ற நடவடிக்கைகளில் இருந்து கெய்ல் தப்பினார்.
    குவாலியர் மைதானத்தில் சச்சின் தெண்டுல்கர் ஒருநாள் போட்டியில் முதன்முறையாக 200 ரன்களை எடுப்பதற்கு முன் அவரை ஆட்டமிழக்கச் செய்தேன் என்கிறார் ஸ்டெயின்.
    தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின், இங்கிலாந்து பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சனுடன் நடந்த கலந்துரையாடலில் கூறியதாவது:-

    ஒரு நாள் போட்டி கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக இரட்டை சதத்தை இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் அடித்தார். அவர் எங்களுக்கு எதிராக 2010-ம் ஆண்டு குவாலியரில் நடந்த ஆட்டத்தில் அச்சாதனையை படைத்தார். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அவர் அந்த ஆட்டத்தில் 190 ரன்களை கடந்த பிறகு அவுட் ஆகியிருக்க வேண்டியது. எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. எனது பந்து வீச்சில் நல்ல எல்.பி.டபிள்யூ.வை வழங்க நடுவர் இயான் குட் மறுத்து விட்டார்.

    ஏன் அவுட் வழங்கவில்லை என்பதுபோல் நான் நடுவர் இயான் குட்டை பார்த்தேன். அப்போது அவர், சுற்றிப்பாருங்கள் இந்த சமயத்தில் (இரட்டை சதத்தை நெருங்கியபோது) நான் விரலை உயர்த்திருந்தால் ஓட்டலுக்கு திரும்பிச் செல்ல முடியாது (ரசிகர்களால் ஆபத்து நேரிடலாம் என்பதை சுட்டிகாட்டி) என்பதை உணர்த்தும் விதமாக என்னை நோக்கினார் என்று ஸ்டெயின் தெரிவித்தார்.

    அந்த ஆட்டத்தில் தெண்டுல்கர் முதல் ஓவரில் இருந்து கடைசி ஓவர் வரை களத்தில் நின்று 200 ரன்கள் குவித்து அமர்க்களப்படுத்தியதோடு இந்திய அணி 400 ரன்களை கடக்கவும் வித்திட்டார். இதில் ஸ்டெயின் பவுலிங்கில் தெண்டுல்கர் 31 பந்துகளை எதிர்கொண்டுள்ளார். ஆனால் எந்த பந்திலும் எல்.பி.டபிள்யூ. கேட்டு அப்பீல் செய்யவில்லை என்பது அந்த ஆட்டத்தை அலசி ஆராய்ந்தபோது தெரிய வந்துள்ளது.

    மேலும் தெண்டுல்கர் 190-களில் இருந்தபோது ஸ்டெயினின் ஓவரில் 3 பந்தை மட்டுமே சந்தித்துள்ளார். அந்த மூன்று பந்தும் பேட்டில் பட்டுள்ளது. ஸ்டெயின் எதை நினைவில் வைத்து இவ்வாறு சொன்னார் என்று ரசிகர்கள் அவரை வலைத்தளத்தில் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
    மைதானங்களை திறக்க மத்திய அரசு அனுமதி கொடுத்தாலும், வெகுவிரையில் ஐபிஎல் சாத்தியமற்றது என்று பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் விளையாட்டு போட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எந்தவொரு வீரரும், மைதானத்திற்கு சென்று பயிற்சி பெற முடியாத நிலை இருந்தது.

    இந்நிலையில் நாடு தழுவிய பொதுமுடக்கம் 4-வது முறையாக வருகிற 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சகம் தளர்த்தியுள்ளது. ரசிகர்கள் இல்லாமல் விளையாட்டு மைதானங்களையும், விளையாட்டு அரங்குகளையும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    இதனால் கடந்த 54 நாட்களாக வீட்டுக்குள்ளே முடங்கி கிடந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மைதானத்தில் சென்று வழிகாட்டு நெறிமுறையின்படி பயிற்சிகளை மேற்கொள்ளலாம். போட்டிகளையும் நடத்தலாம்.

    இதுகுறித்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய பொருளாளர் அருண் துமால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    விளையாட்டு மைதானங்கள் மற்றும் பயிற்சிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. விமான பயணங்களுக்கு வருகிற 31-ந்தேதி வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அதற்கு முன்பு வீரர்களுக்கு அனுமதி அளிக்க முடியாது. இதனால் கிரிக்கெட் வாரியம் வீரர்களின் பயிற்சிக்காக காத்திருக்கிறது.

    வீரர்கள் நலன் மிகவும் முக்கியமானது. வைரசை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசின் முயற்சிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் எந்த பாதிப்பும் ஏற்படுத்த மாட்டோம். வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி அந்தந்த மாநில அளவில் பயிற்சிகளை மேற்கொள்ள அறிவுரை வழங்கப்படும்.

    தற்போதைய நிலையில் ஐபிஎல் சாத்தியமில்லை. ஏனென்றால் பயணத்திற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. பயணம் செய்ய முடியாமல் எப்படி ஐபிஎல் போட்டியை நடத்த முடியும். மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை படித்துக் கொண்டிருக்கிறோம். மாநில அரசுகளின் வழிகாட்டுதல்களையும் படிக்க வேண்டும். அதனடிப்படையில் திட்டம் தீட்டுவோம்.

    இவ்வாறு அருண் துமால் தெரிவித்துள்ளார்.
    டி20 உலக கோப்பை தள்ளி வைக்கப்பட்டால் ஐ.பி.எல். போட்டிக்கு வாய்ப்பு ஏற்படும் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரசால் உலகம் முழுவதும் விளையாட்டுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஒலிம்பிக் போட்டி மற்றும் ஐரோப்பிய கால்பந்து ஆட்டம் இந்த வைரஸ் காரணமாக ஒரு ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது. இதேப்போல் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியும் ஒத்திவைக்கப்பட்டது. விம்பிள்டன் டென்னிஸ் ரத்தானது. இந்தியாவில் பணம் கொழிக்கும் விளையாட்டான ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி காலவரையின்றி. ஒத்திவைக்கப்பட்டது.

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி வரை நடத்த ஐசிசி திட்டமிடப்பட்டு உள்ளது.

    கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக செப்டம்பர் 30 தேதி வரை வெளிநாட்டினர் ஆஸ்திரேலியா வர அந்நாடு தடை விதித்துள்ளது. இதனால் 20 ஓவர் உலக கோப்பையின் நிலை கேள்விக்குறியாக இருக்கிறது.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வருகிற 28-ம்தேதி 20 ஓவர் உலக கோப்பை குறித்து விவாதிக்கிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் கருத்து இதில் முக்கியமாக எடுத்துக் கொள்ளப்படும். அதன் பிறகு ஐ.சி.சி. இந்த வி‌ஷயத்தில் இறுதி முடிவை எடுக்கும்.

    இந்த நிலையில் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டி ஒத்தி வைக்கப்பட்டால் ஐ.பி.எல். போட்டியை நடத்த வழிவகுக்கும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக மார்க் டெய்லர் கூறியதாவது;-

    20 ஓவர் உலக கோப்பை போட்டி தள்ளி வைக்கப்படவே அதிகமான வாய்ப்புகள் இருப்பதாக நான் கருதுகிறேன். 15 நாடுகள், 45 ஆட்டங்கள், 7 மைதானங்களுக்கு பயணம் போன்றவைகள் கடினமானது. 14 நாட்கள் வீரர்களை தனிமைப்படுத்துதல் என்பது இன்னும் கடினமானது. எனவே திட்டமிட்டபடி இந்தப் போட்டி நடைபெறாது என்றே நினைக்கிறேன்.

    20 உலகக் கோப்பையை ஐ.சி.சி .ஒத்திவைத்தால் ஐ.பி.எல். போட்டியை நடத்த வழிவகை ஏற்படும். இதற்கான சூழ்நிலையை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்படுத்தும்.

    20 ஒவர் உலக கோப்பையை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தள்ளிவைக்க பேசப்படலாம். ஆனால் அந்த காலக்கட்டத்தில் இந்தியா இங்கிலாந்து தொடர் நடைபெறுகிறது. இதனால் இதிலும் சிக்கல் உருவாகலாம்.

    அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டி நடைபெறுகிறது. இதனால் ஒரே ஆண்டில் இரண்டு உலகக்கோப்பை போட்டி நடத்தப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    இவ்வாறு டெய்லர் கூறியுள்ளார்.
    இந்தியாவுக்கு எதிராகவும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் பேசிய பாகிஸ்தான் முன்னாள் ஆல்-ரவுண்டர் அப்ரிடி ஒரு ஜோக்கர் எனவும் 16 வயதே நிரம்பிய சிறுவன் என்றும் கம்பிர் கடுமையாகச் சாடியுள்ளார்.
    பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதிக்குச் சமீபத்தில் சென்ற ஷாகித் அப்ரிடி உலகமே கொரோனா எனும் கொடிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது, இதைவிட மோசமானது மோடியின் மனமும் இதயமும். காஷ்மீரில் 7 லட்சம் ராணுவத்தினரை குவித்துள்ளார் என கூறினார்.

    இதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரரும் எம்பி.யுமான காம்பீர் பதிலடி கொடுத்துள்ளார் கம்பீர் இது தொடர்பாக ஏ.என்.ஐ.க்கு அளித்த பேட்டியில் ‘‘சிலருக்கு வயதுதான் ஆகிறதே தவிர மனதளவில் வளர்ச்சி ஏற்படுவதில்லை. அப்ரிடி இப்போதுதான் 16 வயது நபர் போல் பேசுகிறார்.

    உலகமே கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருக்கும்போது காஷ்மீர் பற்றி பேசுகிறார். பிரதமர் மோடியைப் பற்றி அவதூறாகப் பேசுகிறார். இது உங்களுடைய உங்கள் நாட்டுடைய எண்ணங்களை வெளிப்படுத்துகிறது. இது துரதிர்ஷ்டமானது.

    பாகிஸ்தானில் ஒருவர் மீது வெளிச்சம் விழ வேண்டுமென்றால் இந்தியாவையும் பிரதமரையும் திட்டினால் போதும். ஏழைகளுக்கு உணவு கொடுக்கச் சென்று விட்டு இப்படிப் பேசலாமா?. உங்கள் நாட்டு நிலையை பாருங்கள். அங்கு பணம் இல்லை மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் அரசியல் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.
    கொரோனா காலத்திலும் எல்லை வழியாக பயங்கரவாதிகளை அனுப்புகிறீர்கள். கொரோனா காலத்திலும் உங்கள் நாடு எல்லை தாண்டிய பயங்கரவாதம் செய்து வருகிறது.

    கிரிக்கெட்டில் கூட உங்களை யாரும் சீரியசாகப் பேசுவதில்லை, இப்போது இப்படியெல்லாம் பேசிக்கொண்டிருந்தால் உங்களை யாரும் மதிக்கப்போவதில்லை’’ என்று அப்ரிடிக்கு கடுமையாகப் பதிலடி கொடுத்தார்.

    இதனையடுத்து யுவராஜ் சிங், ‘‘மோடிக்கு எதிரான அப்ரிடியின் கருத்தை ஏற்க முடியாது. மனித நேய அடிப்படையில்தான் அவரது முயற்சிக்கு உதவச் சொன்னேன். இனி ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டோம்’’ என்று டுவீட் செய்ய, இதனை ரீ-டுவீட் செய்த ஹர்பஜன் சிங் ‘‘ஆம் இனி ஒருபோதும் இவருக்கு ஆதரவு கிடையாது’’ என்று டுவீட் செய்துள்ளார்.

    இதுபோல் ஷிகர் தவானும் தனது கண்டனத்தை தெரிவித்து உள்ளார்.
    ஜாம்பவானுக்கு விடுத்த சவால் தவறானது என்றும் கண்களை கட்டிக்கொண்டு பேட்டால் பந்தை அடிப்பதை இந்த வாரத்துக்குள் செய்ய முயற்சிப்பேன் என்றும் யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
    மும்பை:

    கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கியுள்ள இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பந்தை பேட்டின் விளிம்பால் மேல்வாக்கில் 25-க்கும் அதிகமான ஷாட்டுகள் இடைவிடாமல் அடித்து ஒரு வீடியோவை தனது டுவிட்டரில் வெளியிட்டார். இதை சவாலாக ஏற்று ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், ரோகித் சர்மா, ஹர்பஜன்சிங் ஆகியோரும் இதே போல் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டு இருந்தார்.

    இந்த நிலையில் அவரது சவாலை ஏற்று தெண்டுல்கர் சற்று வித்தியாசமாக களம் இறங்கி இருக்கிறார். தனது கண்களை கருப்பு துணியால் கட்டிக்கொண்டு பார்க்காமலேயே சிறிது நேரம் பேட்டின் விளிம்பால் பந்தை தொடர்ச்சியாக மேலே தட்டிவிட்டபடி அசத்தியுள்ளார். இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, ‘யுவராஜ்.... உங்களுக்கு சவாலை திருப்பி அனுப்புகிறேன். ஆனால் இங்கு ஒரு திருப்பம் வைத்துள்ளேன். நீங்கள் எனக்கு எளிதான வாய்ப்பை வழங்கினீர்கள். நான் கடினமான சவாலை அளிக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    சச்சின் தெண்டுல்கர்- ரோகித் சர்மா

    அதற்கு யுவராஜ் சிங், ‘ஜாம்பவானுக்கு (தெண்டுல்கர்) நான் விடுத்த சவால் தவறானது என்பதை அறிவேன். கண்களை கட்டிக்கொண்டு பேட்டால் பந்தை அடிப்பதை இந்த வாரத்துக்குள் செய்ய முயற்சிப்பேன்’ என்று கூறியுள்ளார்.

    இதற்கிடையே, ரோகித் சர்மா பேட்டின் கைப்பிடியால் பந்தை மேல்வாக்கில் அடிக்கும் வீடியோவை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு சக வீரர்கள் ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், ரஹானே ஆகியோரின் பெயரை குறிப்பிட்டு இந்த சவாலை ஏற்கும்படி கூறியுள்ளார். 
    ரசிகர்கள் இன்றி விளையாட்டு மைதானங்கள் இயங்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதால் விளைாட்டு வீரர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
    இந்தியாவில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இன்றுடன் 3-வது கட்ட ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. இதனைத் தொடர்ந்து நாடு தழுவிய பொது ஊரடங்கு வருகிற 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ஆனால், பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. அதில் ஒன்று ரசிகர்கள் இல்லாமல் விளையாட்டு மைதானங்களையும், விளையாட்டு காம்ப்ளக்ஸ்களையும் திறக்க அனுமதி அளித்துள்ளது.

    இதனால் கடந்த 54 நாட்களாக வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்த விளையாட்டு வீரர்கள் மைதானத்திற்குச் சென்று வழிகாட்டு நெறிமுறையின்படி பயிற்சிகளை மேற்கொள்ளலாம். போட்டிகளைக் கூட நடத்தலாம்.

    வீரர்கள் இல்லாமல் போட்டிகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் ஐ.பி.எல். போட்டிகளுக்கு சாத்தியமா?  என்ற கேள்வு எழுந்துள்ளது.

    ஆனால் சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை தொடர்வதால் வெளிநாட்டு வீரர்கள் இந்தியா வருவது சாத்தியம் இல்லாதது. அதையும் மீறி வந்தாலும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் கிரிக்கெட் போட்டிகள் விரைவில் நடைபெற சாத்தியம் இல்லை.
    ×