என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இங்கிலாந்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தும் நாட்களை நிறைவு செய்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, பயிற்சி ஆட்டத்திற்கு தயாராகிறது.
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.

    கொரோனா வைரஸ் தொற்றால் வெளிநாட்டில் இருந்து இங்கிலாந்து செல்பவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி கடந்த 9-ந்தேதி வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து சென்றடைந்தது. அங்குள்ள புகழ்பெற்ற மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டு கிரிக்கெட் மைதானம், அதன் அருகில் உள்ள ஓட்டலில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர்.

    14 நாட்கள் அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் இன்றில் இருந்து பயிற்சியை தொடங்க இருக்கிறார்கள். அவர்கள் மூன்று நாட்கள் கொண்ட வார்ம்-அப் மேட்சியில் விளையாட இருக்கிறார்கள்.

    இந்தத் தொடருக்கான பயிற்சியை மேற்கொள்ள 30 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 30 வீரர்கள் மற்றும் அணியுடன் செல்லும் ஸ்டாஃப்கள் என அனைவருக்கும் சவுத்தாம்ப்டனில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படும்.

    பரிசோதனை முடிவு வந்த பின், வியாழக்கிழமையில் இருந்து பயிற்சியை மேற்கொள்வார்கள். வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அதிகாரப்பூர்வ அணி அறிவிக்கப்பட்ட பின், இங்கிலாந்து அணி ஜூலை 1-ந்தேதி 3 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாட இருக்கிறது.

    இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 8-ந்தேதி தொடங்குகிறது.
    ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து சாதனைப் படைத்த வாசிம் ஜாபர், உத்தரகாண்ட் மாநில கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து விளையாடியவர் வாசிம் ஜாபர். தேசிய அணியில் தொடர்ந்து இடம் கிடைக்காததால் உள்ளூர் முதல்-தர போட்டிகளில் ஆர்வம் காட்டினார். ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் 42 வயது வரை விளையாடி, இந்த வருட தொடக்கத்தில் ஓய்வு பெற்றார்.

    ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்நிலையில் உத்தரகாண்ட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    தலைமை பயிற்சியாளராக பணியாற்ற இருக்கும் வாசிம் ஜாபர் இதுகுறித்து கூறுகையில் ‘‘முதல் முறையாக ஒரு அணிக்கு தலைமை பயிற்சியாளராகி உள்ளேன். இது மிகவும் சவாலானதாக இருக்கும். மேலும் எனக்கு இது புதிது. எனது கிரிக்கெட் விளையாட்டிற்குப் பிறகு உடனடியாக இதை எதிர்கொள்ள இருக்கிறேன்.

    உத்தரகாண்ட் புதிய  அணி. அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள். 2018-19 சீசனில் விதர்பா அணிக்கெதிராக காலிறுதி ஆட்டத்தில் விளையாடினார்கள். ஆனால், மீண்டும் குரூப் டி-க்கு சென்றுள்ளனர். ஆகவே, இந்த பதவி மிகவும் சவாலானதாக இருக்கும்.

    நான் இந்த பதவியை சாதாரண அணியில் இருந்து தொடங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எனக்கு மிகச் சிறந்த அனுபவமாக இருக்கும்’’என்றார்.

    முதலில் மகாராஷ்டிரா அணிக்காக விளையாடி வந்த வாசிம் ஜாபர், கடந்த மூன்று சீசனில் விதர்பா அணிக்காக விளையாடினார். இதில் இரண்டு முறை விதர்பா ரஞ்சி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
    ஏற்கனவே மூன்று வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான ஜோகோவிச்சும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக டென்னிஸ் போட்டிகள் முடங்கியுள்ளன. இதனால் பெரும்பாலான டென்னிஸ் வீரர்கள் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளனர். இவர்களுக்கு உதவுவதற்காக காட்சி டென்னிஸ் தொடரை உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான ஜோகோவிச் நடத்தினார்.

    இதில் பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டனர். நேற்று முன்தினம் இந்தத் தொடரில் கலந்து கொண்ட பல்கேரிய வீரர் டிமிட்ரோவ் தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் என்னுடன் நெருங்கி பழகியவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    அதனைத் தொடர்ந்து போர்னா கோரிக், விக்டர் டிரோய்க்கி ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்த மூன்று பேரும் அந்தத் தொடரில் பங்கேற்றவர்கள்தான்.

    மூன்று பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் இதற்கான பொறுப்பை ஜோகோவிச்தான் ஏற்க வேண்டும் என்ற விமர்சனம் எழும்பியது.

    மனைவியுடன் ஜோகோவிச்

    இந்நிலையில் ஜோகோவிச் குடும்பத்துடன் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதில் அவருக்கு பாசிட்டிவ் முடிவு வந்துள்ளது. இதனால் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள இருக்கிறார்.

    ‘‘நாங்கள் செர்பியா தலைநகர் பெல்கிரேடு வந்தபோது, டெஸ்டுக்கு உட்படுத்தப்பட்டோம். எனக்கும், எனது மனைவிக்கும் பாசிட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. ஆனால் எங்களுடைய குழந்தைகளுக்கு நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது’’ எனத் தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஆகஸ்ட் - செப்டம்பர் மாதம் நடைபெற இருந்த வங்காளதேசம் - நியூசிலாந்து தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருந்தது. இந்தத் தொடர் ஆகஸ்ட் - செப்டம்பர் மாதம்  நடைபெற இருந்தது.

    மார்ச் மாதம் தொடக்கத்தில் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நான்கு மாத காலத்தில் கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கையில் இதுவரை இந்தத்தொடர் ஒத்திவைக்கப்படாமல் இருந்தது.

    ஆனால் தற்போதுதான் இந்தியா, வங்காளதேசத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. மேலும், வங்காளதேச கிரிக்கெட் அணியின் மூன்று வீரர்கள் கொரோனாவில் பாதிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் தொடரை ஒத்திவைப்பதாக இருநாட்டு கிரிக்கெட் போர்டின் ஆட்சிமன்றக் குழுக்களும் முடிவு செய்துள்ளன.

    ‘‘தற்போதுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் சூழ்நிலையில் ஆகஸ்ட் மாதம் முழு கிரிக்கெட் தொடரையும் நடத்துவது மிகவும் சவாலானது’’ என்று வங்காளதேசம் தலைமை நிர்வாகி நிஜாமுதீன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
    இத்தாலி கோப்பையில் தோல்வியடைந்த நிலையில், செர்ரி ஏ லீக்கில் பொலோக்னா அணியை 2-0 என யுவென்டஸ் வீழ்த்தியது.
    இத்தாலி கோப்பை இறுதிப் போட்டி கடந்த வாரம் நடைபெற்றது. இதில் யுவென்டஸ் - நபோலி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கிறிஸ்டியானோ ரொனால்டோ, டைபாலோ போன்ற முன்னணி வீரர்கள் விளையாடிய போதிலும் யுவென்டஸ் அணியால் ஆட்டம் முடியும் வரை கோல் அடிக்க முடியவில்லை. இதனால் போட்டி டிராவில் முடிந்தது. கோரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை காரணமாக கூடுதல் நேரம் வழங்கப்படவில்லை.

    நாக்-அவுட் போட்டி என்பதால் பெனால்டி சூட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் நபோலி 4-2 என வெற்றி பெற்றது. டைபாலா பெனால்டி வாய்ப்பை தவறவிட்டார்.

    டைபாலா

    இந்நிலையில் இத்தாலியின் முதன்மை லீக்கான செர்ரி ஏ-யில் நேற்று பொலோக்னா அணியை யுவென்டஸ் எதிர்கொண்டது. கிறிஸ்டியானோ ரொனால்டோ, டைபாலா ஆகியோர் தலா ஒரு கோல் அடிக்க யுவென்டஸ் 2-0 என வெற்றி பெற்றது.

    கடந்த 8-ந்தேதி நடைபெற்ற இன்டர் மிலன் அணிக்கெதிரான ஆட்டத்திலும் 2-0 என வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. நேற்றைய வெற்றி மூலம் நான்கு புள்ளிகள் வித்தியாசத்துடன் முதல் இடத்தில் உள்ளது. லஜியோ அணி 2-வது இடத்தில் உள்ளது.
    இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் டெஸ்ட் போட்டிகளை வென்று சாதனைப் படைத்த ராகுல் டிராவிட்டுக்கு போதிய மதிப்பு கொடுக்கவில்லை என்று கம்பிர் தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் தடுப்புச்சுவர் என்று அழைக்கப்படுபவர் ராகுல் டிராவிட். ஏராளமான சாதனைகள் செய்தாலும் ராகுல் டிராவிட்டின் பெயர் வெளியில் மிகப்பெரிய அளவில் ஜொலிக்க முடியாத அவல நிலை ஏற்பட்டது.

    இந்திய கிரிக்கெட் அணி எந்தவொரு இக்கட்டான நிலையில் இருந்தாலும் அதில் இருந்து மீட்கும் வல்லமை பெற்றவர். அதேபோல் பந்தும் வீசுவார். விக்கெட் கீப்பர் பணியையும் செய்வார். இவரை கிரிக்கெட்டின் ஒரு ஆல்-ரவுண்டர் என்று சொல்லலாம்.

    கங்குலி கேப்டன் பதவியில் இருந்து விலகியபோது ராகுல் டிராவிட் கேப்டன் பதவியை ஏற்றார். 2007 உலக கோப்பை தோல்வி, கிரேக் சேப்பல் சொதப்பல் ஆகியவற்றால் ராகுல் டிராவிட்டின் கேப்டன் பதவி பறிபோனது.

    இருந்தாலும் 25 டெ்ஸ்ட் மற்றும் 79 ஒருநாள் போட்டிகளுக்கு தலைமை தாங்கியுள்ளார். 8 டெஸ்ட் மற்றும் 42 ஒருநாள் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இவரது தலைமையில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியை வென்று சாதனைப் படைத்தது.

    மேலும் சேஸிங்கில் 2-வது பேட்டிங் செய்து தொடர்ச்சியாக 17 போட்டிகளில் வெற்றி என்ற சாதனையை உடைத்தது.

    என்றாலும் ரசிகர்கள் கங்குலி, எம்எஸ் டோனி, தற்போது விராட் கோலிதான் சிறந்த கேப்டன்கள் என்று குறிப்பிடுகிறார்கள். ராகுல் டிராவிட்டிற்கு அந்த மதிப்பு கிடைக்கவில்லை என்று கம்பிர் கவலை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கவுதம் கம்பிர் கூறுகையில் ‘‘நான் கங்குலி தலைமையின் கீழ் ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனேன். ராகுல் டிராவிட் தலைமையின் கீழ் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனேன. ராகுல் டிராட்விட்டின் கேப்டன் பதவிக்கு நாம் போதுமான மதிப்பு கொடுக்கவில்லை என்பது துரதிருஷ்டவசமானது.

    நாம் சவுரவ் கங்குலி, எம்எஸ் டோனி, தற்போது விராட் கோலி ஆகியோரை மட்டுமே பற்றி பேசி வருகிறோம். ஆனால் ராகுல் டிராவிட் இந்திய அணிக்கு ஒரு அற்புதமான கேப்டனாக இருந்துள்ளார். அவருடைய சாதனைகள் இருந்தாலும் கூட, சராசரி வீரராகவே கருதப்பட்டார். அதேபோல்தான் கேப்டன் பதவியிலும். நாம் 14 அல்லது 15 போட்டிகளிலேயே வென்றிருக்கும் நிலையில், அவரது தலைமையில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்றோம்.

    ஒரு கிரிக்கெட்டராக அவரை நீங்கள் பார்த்தீர்கள் என்றால், டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்க கேட்டுக்கொண்டால், களம் இறங்கி விளையாடுவார். அதேபோல் 3-வது வீரராகவும், இந்தியாவுக்காக விக்கெட் வீழ்த்துபவராகவும், பினிஷராகவும், விக்கெட் கீப்பராகவும் இருந்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அல்லது அணி கேப்டன் அவரிடம் என்ன கேட்டாலும் அதற்கு ஏற்ப செயல்படுவார். இதுபோன்ற நபரைத்தான் ரோல் மாடலாக விரும்புவீர்கள்’’ என்றார்.
    ஆஷஸ் தொடருக்கு இணையான இந்தியா - பாகிஸ்தான் இடையிலான இருநாட்டு தொடர் மீண்டும் நடத்தப்பட வேண்டும் என சோயிப் மாலிக் தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இரு நாடுகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆஷஸ் என்று அழைக்கப்படுகிறது. இது கிரிக்கெட் டெஸ்டில் பாரம்பரியமிக்க தொடராகும். இதற்கு இணையான தொடராக இந்தியா - பாகிஸ்தான் இடையிலான தொடர் பார்க்கப்படுகிறது.

    ஆனால், எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதால் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக இருநாட்டு தொடரில் விளையாட மறுத்து வருகிறது.

    இந்நிலையில் மீண்டும் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான தொடர் நடத்தப்பட வேண்டும் என்று சோயிப் மாலிக் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சோயிப் மாலிக் கூறுகையில் ‘‘ஆஷஸ் உலக கிரிக்கெட்டுக்கு தேவை என்ற போதிலும், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான இருநாட்டு தொடர் மீண்டும் தொடங்குவது உலகிற்கு மிகவும் தேவை என்று நினைக்கிறேன்.

    ஆஷஸ் தொடர் இன்றி இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரை நினைத்து பார்க்க முடியுமா?. இரண்டு தொடரும் ஒரு மாதிரியான பேரார்வம் மற்றும் சிறந்த வரலாற்றுடன் விளையாடப்படுவது. அதனால் தற்போது நாம் விளையாடாமல் இருப்பது அவமானம்.

    இந்திய கிரிக்கெட் வீரர்களை மரியாதையுடன் பேசும் நண்பர்கள் எனக்கு உண்டு. அதேபோல் இந்தியாவில் விளையாடும்போது எனக்கும், பாகிஸ்தான் வீரர்களுக்கும் ரசிகர்கள் உள்ளனர். அதனால் இந்த நட்பை மீண்டும் பார்க்க விரும்புகிறேன்’’ என்றார்.
    ஐபிஎல் 2020 சீசன் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் சரியான முடிவு எடுக்கும் என்று ஐபிஎல் முன்னாள் தலைவர் ராஜீவ் சுக்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்றால் ஐபிஎல் 2020 சீசன் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் அக்டோபர் - நவம்பரில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடர் ஒத்திவைக்கப்பட்டால் பிசிசிஐ ஐபிஎல் 2020 தொடரை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் நாட்டின் நலம், கிரிக்கெட்டின் நலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பிசிசிஐ நல்ல முடிவு எடுக்கும் என ஐபிஎல் முன்னாள் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ராஜீவ் சுக்லா கூறுகையில் ‘‘ஐபிஎல்-ஐ பொறுத்தவரைக்கும் பிசிசிஐ அதன்பின் கவனம் செலுத்தி வருகிறார்கள். அதனால் சரியான முடிவு எடுப்பார்கள். நாம் நமது நாட்டின் நலனை பார்க்க வேண்டும். இருந்தாலும் நாடு மற்றும் கிரிக்கெட் ஆகியவற்றின் நலனையும் பார்க்க வேண்டும்.

    அதனால் சரியான முறையில் கவனமாக அடியெடுத்து வைப்பார்கள். அதில் எந்த பிரச்சினையும் இல்லை. எல்லாவற்றையும் மனதில் வைத்து சிறந்த முடிவை எடுக்க வேண்டும். முடிவு எடுப்பதற்கு முன் நான் எந்த கருத்தையும் கூறக் கூடாது’’ என்றார்.
    அதிகாரிகள் மற்றும் வீரர்கள் என கொரோனா பரிசோதனை செய்ததில் 7 பேருக்கு பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதாக தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
    கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. சாதராண நபரில் இருந்து நாட்டின் முக்கிய பொறுப்பில் இருக்கும் அரசியல்வாதி என பாகுபாடு இன்றி தாக்கி வருகிறது. தற்போது விளையாட்டு வீரர்களையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. டென்னிஸ் வீரர்கள், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள், வங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் நாட்டில் உள்ள அனைத்து கிரிக்கெட் அமைப்புகளில் உள்ள அதிகாரிகள், ஒப்பந்த வீரர்கள் என 100-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்ய தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு ஏற்பாடு செய்தது. இதில் ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளியிட மறுத்துவிட்டது.

    இந்த மாதம் இறுதியில் 3டிசி கிரிக்கெட் தொடர் நடைபெற இருந்தது. ஆனால் அரசு அனுமதி அளிக்காததால் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    ‘‘எங்களது மருத்துவ நெறிமுறையின்படி பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளியிட அனுமதி கிடையாது’’ என்று தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டின் சிஇஓ ஜேக்யூஸ் ஃபால் தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் Raise The Bat என அழைக்கப்பட இருக்கிறது.
    கொரோனா வைரஸ் தொற்றால் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. அதன்பின் முதன்முறையாக இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 8-ந்தேதி நடைபெற இருக்கிறது.

    இதுதான் கொரோனா தாக்கத்திற்கு பிறகான முதல் கிரிக்கெட் போட்டியாகும். இந்த போட்டியை உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் இங்கிலாந்தில் ஏராளமான கிரிக்கெட் கிளப்புகள் உள்ளன. இந்த கிளப்பில் உள்ளவர்கள் டாக்டர்கள், ஆசிரியர்கள், நர்ஸ்கள் என தொழில்களில் உள்ளனர். கொரோன வைரஸ் தொற்றின் இக்கட்டான நிலையில் இவர்களின் பங்கு மிகமிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இவர்கள்தான் முன்கள பணியாளர்களாக திகழ்ந்தனர்.

    இதனால் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த டெஸ்ட் தொடருக்கு ‘Raise The Bat’ என பெயர் சூட்டியுள்ளனர்.

    மேலும், உள்ளூர் கிளப்புகள் பரிந்துரை செய்த முன்கள பணியாளர்களின் பெயர்கள் பொறித்த டி-சர்ட் அணிந்து இங்கிலாந்து வீரர்கள் காட்சியளிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வீரர்களின் டி-சர்ட்டில் பொறிக்கப்பட்டுள்ள பெயரின் நபர் குறித்து டிஜிட்டல் போர்டில் தகவல்கள் தெரிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
    எம்எஸ் டோனியின் ஆதரவு இல்லையென்றால் விராட் கோலியின் டெஸ்ட் வாழ்க்கை 2014-ல் முடிந்து இருக்கும் என கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரரும், பா.ஜனதா எம்.பி.யுமான கவுதம் கம்பிர்  ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் முன்னாள் வீரர் வி.வி.எஸ். லட்சுமணுடன் உரையாடினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    2014-ம் ஆண்டு இங்கிலாந்து பயணம் எங்களுக்கு மோசமாக இருந்தது. அந்த தொடரில் நானும் விளையாடினேன்.
    அந்தத் தொடரில் டோனிக்கு நாம் பாராட்டு தெரிவித்தே ஆக வேண்டும்.

    கவுதம் கம்பிர்

    ஏனென்றால் நிறைய பேருடைய கிரிக்கெட் வாழக்கை முடிவுக்கு வந்து இருக்கும். குறிப்பாக டெஸ்ட் போட்டியில் டோனிதான்  வீராட் கோலியை மிகவும் ஆதரித்தார். இல்லையென்றால் கோலியின் டெஸ்ட் வாழ்க்கை அந்தத் தொடரோடு முடிந்து இருக்கும்.

    இவ்வாறு காம்பீர் கூறினார்

    வி.வி.எஸ். லட்சுமண்  கூறியதாவது:-

    அந்தத் தொடரில் கோலி சரியாக ஆடவில்லை. ஆனால் அடுத்த முறை இங்கிலாந்து சென்றபோது பர்மிங்காமில் முதல் இன்னிங்சில் அடித்த சதம் மறக்க முடியாதது. கோலியின் இன்னிங்ஸ்களில் எனக்குப் பிடித்த இன்னிங்ஸ்  இதுவாகும். இந்த ஆட்டம் மூலம்தான் உலக கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டாராக கோலி உருவானார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    2014-ம் ஆண்டு  இங்கிலாந்து பயணத்தில் விராட் கோலி 10 இன்னிங்சில் 134 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
    லா லிகா கால்பந்து போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.
    மாட்ரிட்:

    20 கிளப் அணிகள் இடையிலான லா லிகா கால்பந்து தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் 33 முறை சாம்பியனான ரியல் மாட்ரிட் கிளப், ரியல் சோசிடாட் அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தொடக்கம் முதலே கோல் அடிக்க தீவிரம் காட்டினாலும் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை.

    50-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனை பயன்படுத்தி அந்த அணியின் கேப்டன் செர்ஜியோ ரேமோஸ் அபாரமாக கோல் அடித்தார். இந்த சீசனில் அவர் அடித்த 9-வது கோல் இதுவாகும். இதன் மூலம் லா லிகா போட்டி வரலாற்றில் அதிக கோல்கள் (68 கோல்கள்) அடித்த பின்கள வீரர் என்ற பெருமையை செர்ஜியோ ரேமோஸ் தனதாக்கினார். இதற்கு முன்பு பார்சிலோனா கிளப் அணியை சேர்ந்த ரொனால்ட் கீமான் பின்கள வீரராக விளையாடி 67 கோல்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது.

    70-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணி 2-வது கோலை அடித்தது. அந்த அணியின் கரிம் பென்ஜிமா இந்த கோலை அடித்தார். ஆனால் பந்து அவரது கையில்பட்டு போனதாகவும், அது கோல் இல்லை என்று எதிரணியினர் நடுவரிடம் முறையிட்டனர். இதனை அடுத்து வீடியோவை ஆய்வு செய்த நடுவர் கோல் தான் என்று அறிவித்தார். பென்ஜிமா இந்த சீசனில் அடித்த 17-வது கோல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனை அடுத்து 83-வது நிமிடத்தில் ரியல் சோசிடாட் அணி பதில் கோல் திருப்பியது. அந்த அணி வீரர் மிகெல் மெரினோ இந்த கோலை அடித்தார். அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் ரியல் மாட்ரிட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ரியல் சோசிடாட் அணியை வீழ்த்தியது. கொரோனா பாதிப்பால் தடைப்பட்டு போட்டி தொடங்கிய பிறகு ரியல் மாட்ரிட் அணி தொடர்ச்சியாக பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். இந்த போட்டியில் ரியல் சோசிடாட் அணிக்கு பாதகமாக ‘ஆப்சைடு’ உள்பட சில முடிவுகளை நடுவர்கள் அளித்ததாக அந்த அணியினர் குற்றம் சாட்டினார்கள்.

    30-வது ஆட்டத்தில் ஆடிய ரியல் மாட்ரிட் அணி 19 வெற்றி, 8 டிரா, 3 தோல்வியுடன் 65 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் இருந்து முதலிடத்துக்கு முன்னேறியது. நடப்பு சாம்பியனான பார்சிலோனா அணி 30 ஆட்டத்தில் ஆடி 20 வெற்றி, 5 டிரா, 5 தோல்வியுடன் 65 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு சரிந்துள்ளது. இரு அணிகளும் சமபுள்ளிகள் பெற்றாலும் கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் ரியல் மாட்ரிட் அணி முதலிடத்தை பிடித்துள்ளது.

    வெற்றிக்கு பிறகு ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளர் ஜிடேன் அளித்த பேட்டியில், ‘நாங்கள் களத்தில் எதுவும் செய்யாதது போல் நடுவர்கள் முடிவு குறித்து மட்டுமே பேசுவது வருத்தம் அளிக்கிறது. மக்கள் சொல்வதை நாங்கள் கட்டுப்படுத்த முடியாது. களத்தில் சிறப்பாக செயல்பட்டு தான் நாங்கள் வெற்றி பெற்று இருக்கிறோம். இது தகுதியான வெற்றியாகும். எங்களுக்கு கொடுத்த பெனால்டி வாய்ப்பு முடிவு நியாயமானது. அதுபோல் பென்ஜிமா அடித்த கோலும் சரியானது. முடிவுகள் அளிப்பது நடுவர்களின் பணியாகும். நான் போட்டி குறித்து மட்டுமே பேச விரும்புகிறேன். மற்ற விஷயங்களுக்குள் செல்ல விரும்பவில்லை. நாங்கள் எப்பொழுதும் வெற்றி பெறவே விரும்புகிறோம்’ என்று தெரிவித்தார்.
    ×