என் மலர்tooltip icon

    விளையாட்டு

    எளிதில் வெல்ல முடியாத அணியாக மிடுக்குடன் வலம் வந்த வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி முதல்முறையாக உலக கோப்பைக்கு முத்தமிட்ட நாள் இன்று (ஜூன்.25).
    3-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 1983-ம் ஆண்டு இங்கிலாந்தில் அரங்கேறியது. 60 ஓவர்கள் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் பங்கேற்ற 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டன. ‘பி’ பிரிவில் அங்கம் வகித்த இந்திய அணி லீக் சுற்று முடிவில் 4 வெற்றி, 2 தோல்வி என்று 16 புள்ளிகளுடன் அரைஇறுதியை உறுதி செய்தது.

    லீக் சுற்றில் நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியாவை தலா ஒரு முறை இந்திய அணி வீழ்த்தினாலும், ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அந்த ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் இந்தியா 17 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை தாரைவார்த்து தத்தளித்த நிலையில் கேப்டன் கபில்தேவ் 6-வது வரிசையில் களம் புகுந்து ருத்ரதாண்டவமாடினார். ஜிம்பாப்வே பந்து வீச்சை பொளந்து கட்டிய அவர் 175 ரன்கள் (138 பந்து, 16 பவுண்டரி, 6 சிக்சர்) குவித்து பிரமிக்க வைத்தார். அவரது சரவெடியால் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அரைஇறுதி வாய்ப்பையும் தட்டிச் சென்றது. உலக கோப்பை போட்டியில் இந்திய கேப்டன் ஒருவரின் அதிகபட்சமாக இந்தநாள் வரை கபில்தேவின் ஸ்கோரே நீடிக்கிறது.

    அரைஇறுதியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தையும், வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும் விரட்டியது.

    ஜூன் 25-ந்தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியாவும், வெஸ்ட் இண்டீசும் மகுடத்துக்காக கோதாவில் குதித்தன. முதல் 2 உலக கோப்பையையும் வசப்படுத்தியிருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அசுர பலத்துடன் திகழ்ந்ததால் அந்த அணிக்கே கோப்பை என்பது தான் பெரும்பாலானவர்களின் கணிப்பாக எதிரொலித்தது.

    முதலில் ‘பேட்’ செய்த இந்திய அணி ஆன்டி ராபர்ட்ஸ், மைக்கேல் ஹோல்டிங், மால்கம் மார்ஷல், ஜோயல் கார்னர் ஆகிய சூறாவளி பந்து வீச்சாளர்களின் தாக்குதலில் நிலைகுலைந்தது. 54.4 ஓவர்களில் இந்திய அணி 183 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் 38 ரன்கள் (57 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தார்.

    ‘அற்ப ஸ்கோர்....நின்று ஆடினால் அதிரடி மன்னன் விவியன் ரிச்சர்ட்சே இந்த இலக்கை எட்ட வைத்து விடுவாரே?’ என்று வர்ணனையாளர்கள் கலாய்த்தனர். அப்போதே கோப்பையை வென்று விட்டது போன்ற மாயைக்குள் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மிதந்தனர்.

    இன்னொரு பக்கம் நம்பிக்கையற்று காணப்பட்ட இந்திய வீரர்களுக்கு கேப்டன் கபில்தேவ் புத்துயிர் ஊட்டினார். “வெஸ்ட் இண்டீஸ் நம்மை 183 ரன்னில் ‘ஆல்-அவுட்’ செய்துள்ளது என்றால், நம்மாலும் அதே போன்று செய்ய முடியும். அதை செய்யக்கூடிய திறமை நமது பந்து வீச்சாளர்களிடம் உண்டு. ஏற்கனவே லீக் போட்டியில் அவர்களை சாய்த்து இருக்கிறோம். அதனால் நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். குறைவான ஸ்கோர் என்றாலும் கடைசி வரை போராடுவோம்” என்ற கபில்தேவின் ஒவ்வொரு வார்த்தைகளும் வீரர்களுக்குள் உத்வேகத்தை கிளர்ந்தெழச் செய்தது.

    சுலபமான இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீசின் தொடக்க வீரர்களை இந்திய பவுலர்கள் எளிதில் காலி செய்தனர். அவர்களின் ஒரே குறி விவியன் ரிச்சர்ட்ஸ் தான். அதிரடி காட்டிய அவர் 7 பவுண்டரியுடன் 33 ரன்கள் (28 பந்து) எடுத்த நிலையில் மதன்லால் வீசிய பந்தை ‘மிட்விக்கெட்’ திசையில் தூக்கினார். கிட்டத்தட்ட 20 மீட்டர் ஓடிச்சென்று கபில்தேவ் பந்தை லாவகமாக பிடித்தார். அந்த கேட்ச்சே ஆட்டத்தின் திருப்பு முனை. அதன் பிறகு கேப்டன் கிளைவ் லாயிட் 8 ரன்னில் வெளியேற ஆட்டம் முழுமையாக இந்தியா பக்கம் திரும்பியது. சீதோஷ்ண நிலையை கனகச்சிதமாக பயன்படுத்தி இந்திய பவுலர்கள் ஸ்விங் செய்த விதம் வெஸ்ட்இண்டீஸ் பேட்ஸ்மேன்களை மிரள வைத்தது. 52 ஓவர்களில் வெறும் 140 ரன்னில் முடங்கினர்.

    இதன் மூலம் இந்தியா 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக உலக கோப்பையை உச்சிமுகர்ந்து வரலாறு படைத்தது.

    இந்த உலக கோப்பை போட்டிக்கு புறப்படுவதற்கு முன்பு இந்திய வீரர்கள் மத்தியில் பெரிய அளவில் நம்பிக்கையும் கிடையாது, எதிர்பார்ப்பும் கிடையாது. லீக் சுற்றோடு நடையை கட்டி விடுவோம் என்று கருதி சில வீரர்கள் அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டு இருந்தார்கள் என்று கூட சொல்லப்படுவது உண்டு. ஆனால் 24 வயதான அரியானா எக்ஸ்பிரஸ் கபில்தேவின் சாமர்த்தியமான கேப்டன்ஷிப் இந்திய கிரிக்கெட்டுக்கு உலக அரங்கில் புதிய அடையாளத்தை உருவாக்கி கொடுத்தது. இந்தியாவில் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு இந்த வெற்றியே அச்சாரம் என்றால், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கும் இதுவே முதல்படியாக அமைந்தது என்று கூறினால் மிகையாகாது.

    37 ஆண்டுகள் உருண்டோடி விட்ட போதிலும் அந்த மறக்க முடியாத நினைவுகளை நமது வீரர்களும், ரசிகர்களும் சமூக வலைதளம் மூலம் மீண்டும் ஒரு முறை அசைப்போட்டு வருகிறார்கள்...!!!
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் முகமது ஹபீசுக்கு தனியார் மருத்துவமனையில் நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பதை குறிக்கும் வகையில் ‘நெகட்டிவ்’ என முடிவு வந்துள்ளது.
    லாகூர்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 20 ஓவர் தொடரில் ஆடுவதற்காக வருகிற 28-ந்தேதி இங்கிலாந்துக்கு புறப்பட்டு செல்கிறது. இதையொட்டி பாகிஸ்தான் அணிக்கு தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கு அவரவர் இருப்பிடங்களுக்கே சென்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் ஆல்-ரவுண்டர் முகமது ஹபீஸ், வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ், முன்னணி பேட்ஸ்மேன் பஹார் ஜமான் உள்பட 10 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக கிரிக்கெட் வாரியம் தரப்பில் நேற்று முன்தினம் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஆல்-ரவுண்டரான 39 வயதான முகமது ஹபீஸ் தனது திருப்திக்காக லாகூரில் உள்ள மற்றொரு தனியார் ஆஸ்பத்திரியில் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதில் ஹபீசுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை குறிக்கும் வகையில் ‘நெகட்டிவ்’ என முடிவு வந்துள்ளது. இதே போல் அவரது குடும்பத்தினர் யாருக்கும் பாதிப்பு இல்லை. இந்த தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்பட்ட பரிசோதனை சரியானது தானா? என்ற குழப்பம் மற்ற வீரர்களுக்கு ஏற்பட்டு உள்ளது. எது எப்படி என்றாலும் இன்று அனைத்து வீரர்களுக்கும் மறுபடியும் கொரோனா சோதனை நடத்தப்பட இருக்கிறது.
    வங்காளதேச கிரிக்கெட் அணி இலங்கையில் அடுத்த மாதம் மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணம் ஒத்தி வைக்கப்படுகிறது என்று ஐ.சி.சி. அறிவித்து உள்ளது.
    கொழும்பு:

    வங்காளதேச கிரிக்கெட் அணி இலங்கையில் அடுத்த மாதம் சுற்றுப்பயணம் செய்து போட்டிகளில் விளையாட முடிவு செய்யப்பட்டு இருந்தது. 

    இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பின் எதிரொலியாக வங்காளதேச அணியின் இலங்கை சுற்றுப்பயணம் ஒத்தி வைக்கப்படுகிறது என ஐ.சி.சி. தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

    ஏற்கனவே, ஆகஸ்டு மற்றும் செப்டம்பரில் நடைபெற இருந்த நியூசிலாந்து, வங்காளதேச அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
    ஐபிஎல் 2020 லீக்கை நடத்துவதற்காக ஆசிய கோப்பை ரத்து செய்யப்படும் என்ற யூகத்திற்கு வாய்ப்பே இல்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்றால் அக்டோபர் - நவம்பர் மாதத்தில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை ரத்து செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அந்த நேரத்தில் ஐபிஎல் 2020 சீசனை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.

    இதற்கு முன் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது. இந்த சூழ்நிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற வாய்ப்பு இல்லை என்று சொல்லப்படுகிறது.

    ஆனால், ஐபிஎல் போட்டிக்குப் பதிலாக ஆசிய கோப்பை ரத்து செய்யப்படும் என்ற யூகத்திற்கு வாய்ப்பே இல்லை. ஆசிய கோப்பை தொடர் இலங்கை அல்லது ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த இருப்பதாக  பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாக இயக்குனர் வாசிம் கான் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து வாசிம் கான் கூறுகையில் ‘‘ஆசிய கோப்பை திட்டமிட்டபடி நடக்கும். இங்கிலாந்தில் இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி செப்டம்பர் 2-ந்தேதி திரும்பிவிடும். ஆகவே, செப்டம்பர் அல்லது அக்டோபரில் எங்களால் தொடரை நடத்த முடியும்.

    இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவு இல்லை என்பதால் அங்கு நடத்தப்படலாம். அவர்கள் முடியாது என்றால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எப்போதுமே தயாராக இருக்கிறது’’ என்றார்.
    விஸ்டன் இந்தியா ஆன்லைன் மூலம் நடத்திய ஆய்வில் சிறந்த இந்திய டெஸ்ட் பேட்ஸ்மேனாக ராகுல் டிராவிட்டை ரசிகர்கள் தேர்வு செய்துள்ளனர்.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்போது கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் உள்ளன. இதனால் கிரி்க்கெட் தொடர்பான இணைய தளங்கள் ரசிகர்களை தக்க வைத்துக் கொள்ள ஆன்லைன் மூலம் கேள்விகள் கேட்டும், ரசிகர்களை வீரர்களுடன் உரையாட வைத்தும் வருகின்றன.

    இந்நிலையில் விஸ்டன் இந்தியா கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் யார் என்ற கேள்விகயை ரசிகர்களிடம் கேட்டிருந்தது. 14 பேர் கொண்ட பேட்ஸ்மேன் பட்டியலில் இறுதியாக சச்சின் தெண்டுல்கர், ராகுல் டிராவிட், சுனில் கவாஸ்கர், விராட் கோலி ஆகியோர் தேர்வு பெற்றனர்.

    இதில் இருந்து ஒருவரை தேர்வு செய்ய 11,400 ரசிகர்கள் வாக்களித்தனர். ராகுல் டிராவிட் 52 சதவீத வாக்குகள் பெற்று சச்சின் தெண்டுல்கரை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளார். தொடக்கத்தில் ராகுல் டிராவிட் பின்தங்கியிருந்தார். அதன்பின் முதல் இடத்திற்கு முன்னேறினார்.

    ராகுல் டிராவிட் 1996 முதல் 2012 வரை 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13,288 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 52.31 ஆகும். இதில் இந்தியாவுக்கு வெளியே 94 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7690 ரன்கள் அடித்துள்ளார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5443 ரன்கள் அடித்துள்ளார். சராசரி சுமார் 52 ஆகும்.

    சச்சின் தெண்டுல்கர், ராகுல் டிராவிட்

    தெண்டுல்கர் 1989 முதல் 2013 வரை 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15,9221 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 53.78 ஆகும். 51 சதங்கள் அடித்துள்ளார். தெண்டுல்கர் இந்தியாவுக்கு வெளியே 106 டெஸ்ட் போட்டிகளில் 8705 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 54.74 ஆகும். இதில் 29 சதங்கள் அடங்கும். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக 56 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி சராசரி 49.79 வைத்துள்ளார்.
    கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் வீரர்கள் பலர் வீட்டிலேயே முடங்கியுள்ள நிலையில் புஜாரா, இஷாந்த் சர்மா பயிற்சியை தொடங்கியுள்ளனர்.
    இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து பல்வேறு கட்டங்களாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. மேலும் இப்போது பல்வேறு மாநிலங்களில் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமலில் இருக்கிறது. இதனால் இந்தியாவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் தடைப்பட்டுள்ளது. மிக முக்கியமாக ஐபிஎல் போட்டிகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இந்திய கிரிக்கெட் வீர்ரகள் பலரும் இந்த பொது முடக்க காலக்கட்டத்தில் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வீட்டில் இருந்தபடியே உரையாற்றி வருகின்றனர். பல கிரிக்கெட் வீரர்கள் இன்னும் வலைப்பயிற்சியை கூட தொடங்கவில்லை.

    கிரிக்கெட் வீரர்கள் மைதானத்துக்கு வந்து பயிற்சியை மேற்கொள்வதற்கான உத்தரவை பிசிசிஐ இன்னும் பிறப்பிக்கவில்லை.
    இந்நிலையில், வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா, இன்ஸ்டாகிராமில் தான் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும், அந்தப் பதிவில்‘‘நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ள தனிமனித இடைவெளியுடன் கூடிய பயிற்சி அவசியமாகிறது’’ என தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
    அதேபோல் டெஸ்ட் பேட்ஸ்மேன் புஜாராவும் பயிற்சியை தொடங்கியுள்ளார். இன்ஸ்டாகிராமில் பயிற்சி தயாராகும் படத்தை வெளியிட்டு ‘‘நீண்ட நாட்களுக்குப் பிறகு பயிற்சிக்கு செல்வதாக உணர்கிறேன். ஆனால், இங்கு வந்த பிறகு அது நேற்றுபோல் உணர்கிறேன்.’’ என்று தெரிவித்துள்ளார்.
    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான பயிற்சியை தொடங்க இருக்கும் இங்கிலாந்து வீரர்களுக்கு 2-வது முறையாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
    கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் கிரிக்கெட் உள்ளிட்ட அனைத்து விளையாட்டுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. பல போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் உள்ளன.

    இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே 3 மாதங்களுக்க்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக  இங்கிலாந்து சென்றுள்ளது. இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி  அடுத்த மாதம் (ஜூலை) 8-ந்தேதி சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ்பவுல் மைதானத்தில் தொடங்குகிறது. ஜூலை 28-ம் தேதியுடன் இந்த டெஸ்ட் தொடர் முடிகிறது.

    இந்த டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து வீரர்களின் முழுமையான பயிற்சி முகாம் நாளை தொடங்குகிறது. இதையொட்டி இங்கிலாந்து வீரர்களுக்கு 2-வது கட்டமாக  மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. வீரர்கள், ஊழியர்கள் என 30 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    கடந்த 10 தினங்களுக்கு முன்பு இங்கிலாந்து வீரர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் யாருக்கும் கொரோனா  இல்லை என்பது கண்டறியப்பட்டது.

    டெஸ்ட் தொடருக்கு முன்பு இங்கிலாந்து வீரர்கள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுவார்கள்.

    இதற்கிடையே இங்கிலாந்து சென்றிருந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் தனிமைக்காலம் முடிவடைந்தது. இதையொட்டி வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவார்கள்.

    டேரன் பிராவோ, ஹெட் மையர், கீமோ பால் ஆகியோர் கொரோனா வைரசுக்கு பயந்து இங்கிலாந்து செல்ல  மறுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    உலக பேட்மிண்டன் போட்டியில் மேலும் அதிக பதக்கங்கள் வெல்ல வேண்டும் என்பதில் ஆர்வமாக இருப்பதாக இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து கூறியுள்ளார்.
    ஐதராபாத்:

    சர்வதேச ஒலிம்பிக் தினத்தையொட்டி உலகம் முழுவதும் உள்ள முன்னணி வீரர், வீராங்கனைகள் ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் கலந்துரையாடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் உலக சாம்பியனும், 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவருமான இந்திய பேட்மிண்டன் வீராங்கனை 24 வயது பி.வி.சிந்து கலந்து கொண்டு பேசுகையில் கூறியதாவது:-

    சர்வதேச பேட்மிண்டன் போட்டி மீண்டும் தொடங்கும் போது போட்டி அட்டவணைக்கு தகுந்தபடி புத்திசாலித்தனமாக திட்டமிட வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான மனநிலையை கொண்டு இருப்பார்கள். ஆனாலும் இதுபோன்ற சோதனையான காலக்கட்டத்தில் நேர்மறையான எண்ணத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகும். இந்த ஆண்டில் அடுத்து வரப்போகும் பெரிய போட்டி சீனதைபேயில் செப்டம்பர் மாதம் நடைபெறப் போவதாகும். இந்த போட்டி நிச்சயம் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இந்த கடினமான நேரத்தில் புதிய விஷயங்களை மீண்டும் கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. முன்பெல்லாம் நேரம் கிடைக்காததால் நான் சமையலறை பக்கம் திரும்பியது கிடையாது. ஆனால் தற்போது சமையல் செய்ய கற்று கொண்டு வருகிறேன்.

    உலக பேட்மிண்டன் போட்டியில் இதுவரை 2 வெண்கலம், 2 வெள்ளி, ஒரு தங்கம் வென்று இருக்கிறேன். உலக போட்டியில் மேலும் அதிக பதக்கங்கள் வெல்ல வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறேன். எத்தகைய சவாலையும் சமாளித்து போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த கடினமாக பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறேன். உடல் தகுதியை பேணுவதற்காக வழக்கமான உடற்பயிற்சியுடன் யோகா மற்றும் தியானத்திலும் ஈடுபடுகிறேன். அது களத்தில் சவாலை எதிர்கொள்வதை எளிதாக்குவதாக உணருகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    இங்கிலாந்து தொடருக்கு செல்ல இருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களில் 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
    லாகூர்:

    கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. இதையொட்டி பாகிஸ்தான் அணிக்கு 29 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். வீரர்களும், மருத்துவ அதிகாரி உள்பட பயிற்சி குழுவினரும் வருகிற 28-ந்தேதி லாகூரில் இருந்து சிறப்பு விமானத்தில் லண்டனுக்கு புறப்படுகிறார்கள். இந்த தொடர் ஆகஸ்டு மாதம் தான் தொடங்குகிறது. என்றாலும் தனிமைப்படுத்துதல் மற்றும் பயிற்சிக்காக ஒரு மாதத்துக்கு முன்பே பாகிஸ்தான் அணி அங்கு செல்ல இருக்கிறது.

    இங்கிலாந்துக்கு தொடருக்கு கிளம்புவதற்கு முன்பாக தங்களது வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்ய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. முதற்கட்டமாக அவரவர் இருப்பிடங்களுக்கே சென்று நேற்று முன்தினம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இதன் முடிவில் ஆல்-ரவுண்டர் முகமது ஹபீஸ், வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ், புதுமுக பேட்ஸ்மேன் 19 வயதான ஹைதர் அலி, சுழற்பந்து வீச்சாளர் ஷதப் கான் மற்றும் பஹார் ஜமான், முகமது ரிஸ்வான், ஹாரிஸ் ரவுப், காஷிப் பாட்டி, முகமது ஹஸ்னைன், இம்ரான் கான் ஆகிய 10 வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அணியின் உதவியாளர் ஒருவரும் பாதிக்கப்பட்டு உள்ளார். சோதனைக்கு முன்பு வரை இவர்களுக்கு எந்த அறிகுறியும் தென்படவில்லை. இதையடுத்து இவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்ததும் அவர்கள் அணியுடன் இணைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி கொரோனா தாக்குதலுக்கு உள்ளான நிலையில் மேலும் 10 வீரர்கள் கொரோனாவில் சிக்கி இருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    பாதிப்பு இல்லாத மற்ற வீரர்கள் அனைவரும் இன்று லாகூரில் கூடுகிறார்கள். அவர்கள் அனைவரையும் உயரிய மருத்துவ பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வந்து நாளை மறுபடியும் சோதனை நடத்தப்படும்.

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாகி வாசிம்கான் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இங்கிலாந்து பயணம் திட்டமிட்டபடி தொடரும். டெஸ்ட் கிரிக்கெட் ஆடும் பிரதான வீரர்களில் அதிர்ஷ்டவசமாக விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் தவிர வேறு யாருக்கும் பாதிப்பு இல்லை. அதனால் அவர்கள் அங்கு சென்றதும் உடனடியாக பயிற்சியை தொடங்க முடியும்’ என்றார்.

    இதற்கிடையே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் விளையாட்டு மருத்துவ இயக்குனர் டாக்டர் சோகைல் சலீம் அளித்த பேட்டியில், ‘எல்லாவிதமான முன்னெச்சரிக்கை மேற்கொள்ளப்பட்டாலும் கொரோனா தாக்கத்துக்கு இடையே பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு பயணிப்பது ‘ரிஸ்க்’ இல்லை என்று சொல்ல முடியாது. நிச்சயம் இந்த பயணம் அபாயகரமானது தான். ஆனால் கிரிக்கெட் போட்டியை இப்போது மீண்டும் தொடங்க வேண்டும் என்றால், இந்த தொடர் அவசியமாகிறது. கொரோனாவினால் சிக்கித் தவிக்கும் இந்த நாடு அதில் இருந்து மீள்வதற்கு இந்த சுற்றுப்பயணமும் உதவிகரமாக இருக்கும்.

    இங்கிலாந்து சென்ற பிறகு அங்கு எந்த வீரருக்காவது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் அந்த வீரர் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார். பின்னர் 2-வது முறையாக அந்த வீரரை சோதிக்கும் போது, கொரோனா இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ வந்தால் அவர் மறுபடியும் அணியுடன் இணைவார். ஆனால் 2-வது சோதனையிலும் தொடர்ந்து கொரோனா இருப்பது கண்டறியப்பட்டால் அந்த வீரர் தாயகம் திருப்பி அனுப்பப்படுவார்.’ என்றார்.
    இங்கிலாந்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தும் நாட்களை நிறைவு செய்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, பயிற்சி ஆட்டத்திற்கு தயாராகிறது.
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.

    கொரோனா வைரஸ் தொற்றால் வெளிநாட்டில் இருந்து இங்கிலாந்து செல்பவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி கடந்த 9-ந்தேதி வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து சென்றடைந்தது. அங்குள்ள புகழ்பெற்ற மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டு கிரிக்கெட் மைதானம், அதன் அருகில் உள்ள ஓட்டலில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர்.

    14 நாட்கள் அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் இன்றில் இருந்து பயிற்சியை தொடங்க இருக்கிறார்கள். அவர்கள் மூன்று நாட்கள் கொண்ட வார்ம்-அப் மேட்சியில் விளையாட இருக்கிறார்கள்.

    இந்தத் தொடருக்கான பயிற்சியை மேற்கொள்ள 30 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 30 வீரர்கள் மற்றும் அணியுடன் செல்லும் ஸ்டாஃப்கள் என அனைவருக்கும் சவுத்தாம்ப்டனில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படும்.

    பரிசோதனை முடிவு வந்த பின், வியாழக்கிழமையில் இருந்து பயிற்சியை மேற்கொள்வார்கள். வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அதிகாரப்பூர்வ அணி அறிவிக்கப்பட்ட பின், இங்கிலாந்து அணி ஜூலை 1-ந்தேதி 3 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாட இருக்கிறது.

    இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 8-ந்தேதி தொடங்குகிறது.
    ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து சாதனைப் படைத்த வாசிம் ஜாபர், உத்தரகாண்ட் மாநில கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து விளையாடியவர் வாசிம் ஜாபர். தேசிய அணியில் தொடர்ந்து இடம் கிடைக்காததால் உள்ளூர் முதல்-தர போட்டிகளில் ஆர்வம் காட்டினார். ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் 42 வயது வரை விளையாடி, இந்த வருட தொடக்கத்தில் ஓய்வு பெற்றார்.

    ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்நிலையில் உத்தரகாண்ட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    தலைமை பயிற்சியாளராக பணியாற்ற இருக்கும் வாசிம் ஜாபர் இதுகுறித்து கூறுகையில் ‘‘முதல் முறையாக ஒரு அணிக்கு தலைமை பயிற்சியாளராகி உள்ளேன். இது மிகவும் சவாலானதாக இருக்கும். மேலும் எனக்கு இது புதிது. எனது கிரிக்கெட் விளையாட்டிற்குப் பிறகு உடனடியாக இதை எதிர்கொள்ள இருக்கிறேன்.

    உத்தரகாண்ட் புதிய  அணி. அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள். 2018-19 சீசனில் விதர்பா அணிக்கெதிராக காலிறுதி ஆட்டத்தில் விளையாடினார்கள். ஆனால், மீண்டும் குரூப் டி-க்கு சென்றுள்ளனர். ஆகவே, இந்த பதவி மிகவும் சவாலானதாக இருக்கும்.

    நான் இந்த பதவியை சாதாரண அணியில் இருந்து தொடங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எனக்கு மிகச் சிறந்த அனுபவமாக இருக்கும்’’என்றார்.

    முதலில் மகாராஷ்டிரா அணிக்காக விளையாடி வந்த வாசிம் ஜாபர், கடந்த மூன்று சீசனில் விதர்பா அணிக்காக விளையாடினார். இதில் இரண்டு முறை விதர்பா ரஞ்சி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
    ஏற்கனவே மூன்று வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான ஜோகோவிச்சும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக டென்னிஸ் போட்டிகள் முடங்கியுள்ளன. இதனால் பெரும்பாலான டென்னிஸ் வீரர்கள் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளனர். இவர்களுக்கு உதவுவதற்காக காட்சி டென்னிஸ் தொடரை உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான ஜோகோவிச் நடத்தினார்.

    இதில் பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டனர். நேற்று முன்தினம் இந்தத் தொடரில் கலந்து கொண்ட பல்கேரிய வீரர் டிமிட்ரோவ் தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் என்னுடன் நெருங்கி பழகியவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    அதனைத் தொடர்ந்து போர்னா கோரிக், விக்டர் டிரோய்க்கி ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்த மூன்று பேரும் அந்தத் தொடரில் பங்கேற்றவர்கள்தான்.

    மூன்று பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் இதற்கான பொறுப்பை ஜோகோவிச்தான் ஏற்க வேண்டும் என்ற விமர்சனம் எழும்பியது.

    மனைவியுடன் ஜோகோவிச்

    இந்நிலையில் ஜோகோவிச் குடும்பத்துடன் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதில் அவருக்கு பாசிட்டிவ் முடிவு வந்துள்ளது. இதனால் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள இருக்கிறார்.

    ‘‘நாங்கள் செர்பியா தலைநகர் பெல்கிரேடு வந்தபோது, டெஸ்டுக்கு உட்படுத்தப்பட்டோம். எனக்கும், எனது மனைவிக்கும் பாசிட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. ஆனால் எங்களுடைய குழந்தைகளுக்கு நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது’’ எனத் தெரிவித்துள்ளார்.
    ×