என் மலர்
விளையாட்டு
சென்னை:
13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் நடக்கிறது.
இந்த சீசனுக்கான ஐ.பி.எல். கோப்பையை வெல்லப்போகும் அணி யார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. ஏற்கனவே கோப்பையை வென்ற அணி சாம்பியன் ஆகுமா? அல்லது புதிய அணி பட்டம் பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேபிடல்ஸ், கிங்ஸ்லெவன் பஞ்சாப் ஆகிய 3 அணிகள் மட்டுமே இதுவரை ஐ.பி.எல். கோப்பையை வென்றது இல்லை.
ஒரு அணியின் வெற்றிக்கு கேப்டனின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் பெற்று இருக்கிறது. ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் 8 அணி கேப்டன்களின் சாதனை விவரம் வருமாறு:-
டோனி (சென்னை சூப்பர் கிங்ஸ்):- ஐ.பி.எல். போட்டியில் அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன் என்ற சாதனையில் டோனி உள்ளார். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெய்ண்ட் அணிகளுக்கு கேப்டனாக பணியாற்றி உள்ளார்.
டோனி 174 போட்டிக்கு கேப்டனாக இருந்து 104 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார். 69 போட்டியில் தோல்வி ஏற்பட்டுள்ளது. ஒரு ஆட்டம் முடிவு இல்லை. அவரது வெற்றி சதவீதம் 60.11 ஆகும். டோனி 3 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐ.பி.எல். கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.
விராட்கோலி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்):-
இந்திய அணிக்கு கேப்டன் பதவியில் சிறப்பாக பணியாற்றும் விராட்கோலியால் ஐ.பி.எல்.லில் சாதிக்க முடியவில்லை. அவரது தலைமையில் பெங்களூர் அணி கோப்பையை வெல்ல முடியாமல் இருப்பது மிகப் பெரிய ஏமாற்றமே.
கோலி 110 ஆட்டத்துக்கு கேப்டனாக இருந்துள்ளார். இதில் 49 வெற்றி கிடைத்துள்ளது. 55 போட்டியில் தோல்வி ஏற்பட்டது. 2 போட்டி டை ஆனது. 4 ஆட்டம் முடிவு இல்லை. வெற்றி சதவீதம் 47.16 ஆகும்.
ரோகித்சர்மா (மும்பை இந்தியன்ஸ்):-
ஐ.பி.எல். போட்டிகளில் அதிக கோப்பையை வென்ற கேப்டன் என்ற சாதனையில் ரோகித்சர்மா உள்ளார். அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 4 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்று புதிய வரலாறு படைத்துள்ளார்.
104 போட்டிக்கு கேப்டனாக இருந்து 60 வெற்றிகளை பெற்றுள்ளார். 42 போட்டிகளில் தோல்வி ஏற்பட்டது. 2 ஆட்டம் டை ஆனது. வெற்றி சதவீதம் 58.65 ஆகும். டோனிக்கு அடுத்தபடியாக வெற்றி சதவீதத்தில் ரோகித்சர்மா உள்ளார்.
தினேஷ் கார்த்திக் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்):-
விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மெனான தினேஷ் கார்த்திக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக உள்ளார். தமிழகத்தை சேர்ந்த அவர் ஏற்கனவே டெல்லி அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார்.
36 போட்டிக்கு தினேஷ் கார்த்திக் கேப்டனாக இருந்துள்ளார். இதில் 17-ல் வெற்றி. 18-ல் தோல்வி. ஒரு ஆட்டம் டை ஆனது. வெற்றி சதவீதம் 48.65 ஆகும்.
டேவிட் வார்னர் (சன்ரைசர்ஸ் ஐதராபாத்):-
இந்த சீசனுக்கான ஐதராபாத் அணியின் கேப்டனாக வார்னர் நியமிக்கப்பட்டுள்ளார். வில்லியம்சனுக்கு பதிலாக அவருக்கு மீண்டும் கேப்டன் வாய்ப்பு கிடைத்துள்ளது. வார்னர் முந்தைய சீசன்களில் டெல்லி அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார்.
வார்னர் தலைமையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 2016-ம் ஆண்டு ஐ.பி.எல். கோப்பையை வென்றது. அவர் 47 போட்டியில் கேப்டனாக இருந்துள்ளார். இதில் 26-ல் வெற்றி கிடைத்தது. 21 போட்டியில் தோல்வி ஏற்பட்டது. வெற்றி சதவீதம் 55.31 ஆகும்.
ஸ்டீவ் சுமித் (ராஜஸ்தான் ராயல்ஸ்):-
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஸ்டீவ் சுமித் ஐ.பி.எல். போட்டியில் 3 அணிகளுக்கு (புனே வாரியர்ஸ், ராஜஸ் தான் ராயல்ஸ், ரைசிங் புனேஜெயிண்ட்) கேப்டனாக பணியாற்றி உள்ளார். 29 போட்டிக்கு அவர் கேப்டனாக இருந்துள்ளார். இதில் 19 ஆட்டத்தில் வெற்றி பெற்றார். 9 போட்டியில் தோற்றார். ஒரு ஆட்டம் முடிவு இல்லை.
ஸ்ரேயாஷ் அய்யர் (டெல்லி கேபிடல்ஸ்):-
2018 ஐ.பி.எல். சீசனில் பாதி போட்டியில் இருந்து டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டனாக காம்பீருக்கு பதிலாக நியமிக்கப்பட்டார். அவர் 24 ஆட்டத்துக்கு கேப்டனாக இருந்துள்ளார். இதில் 13 வெற்றி கிடைத்தது. `10 ஆட்டத்தில் தோல்வி ஏற்பட்டது. ஒரு போட்டி டை ஆனது.
கே.எல்.ராகுல் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்):-
இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மென்களில் ஒருவரான கே.எல். ராகுல் முதல்முறையாக கேப்டனாக பணியாற்றுகிறார். அஸ்வினுக்கு பதிலாக பஞ்சாப் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். அஸ்வின் இந்த ஐ.பி.எல். சீசனில் டெல்லி அணிக்காக ஆடுகிறார்.
பாரிஸ்:
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட் சிலாம் டென்னிஸ் போட்டி நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் ஆண்கள் பிரிவில் ஜோகோவிச்சும் (செர்பியா), பெண்கள் பிரிவில் சோபியா கெனினும் (அமெரிக்கா) சாம்பியன் பட்டம் பெற்றனர்.
கொரோனா வைரஸ் காரணமாக விம்பிள்டன் போட்டி ரத்து செய்யப்பட்டது. தற்போது நடந்து முடிந்த அமெரிக்க ஓபனில் ஆண்கள் பிரிவில் டொமினிக் தீமும் (ஆஸ்தி ரியா), பெண்கள் பிரிவில் நமோமி ஒசாகாவும் (ஜப்பான்) சாம்பியன் பட்டம் பெற்றனர்.
மே மாதம் நடைபெற இருந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி கொரோனா வைரஸ் காரணமாக செப்டம்பர் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்த போட்டி வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது.
பிரெஞ்சு ஓபன் போட்டியை பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது நடந்து முடிந்த அமெரிக்க ஓபனில் ரசிகர்கள் இல்லாமல் காலி மைதானத்தில் போட்டி நடந்தது.
ஆனால் பிரெஞ்சு ஓபன் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கியதற்கு நடால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கொரோனா மருத்துவ தடுப்பு பாதுகாப்பில் ரசிகர்களை அனுமதிப்பது பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் கவலை தெரிவித்துள்ளார்.
நடாலின் இந்த எதிர்ப்பு காரணமாக போட்டி அமைப்பாளர்கள் ரசிகர்களுக்கு அனுமதியை மறுப்பார்களா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
34 வயதான நடால் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 13-வது முறையாக வெல்லும் ஆர்வத்தில் உள்ளார். அவர் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 12 தடவை கைப்பற்றி சாதனை புரிந்துள்ளார். 2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014, 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.
துபாய்:
இதுவரை நடந்த 12 ஐ.பி.எல் போட்டியிலும் எந்த ஒரு அணியும் தோல்வியை சந்திக்காமல் அனைத்து ஆட்டத்திலும் வென்று ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றியது இல்லை.
இந்தநிலையில் ஒரு போட்டியில் கூட தோற்காமல் அனைத்து ஆட்டத்திலும் வென்று ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்ற ஆர்வமாக இருப்பதாக ஸ்ரேயாஸ் அய்யர் தெரிவித்துள்ளார்.
டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டனான அவர் இது தொடர்பாக கூறியதாவது:-
ஐ.பி.எல் தொடரில் அனைத்து போட்டிகளிலும் வென்று கோப்பையை கைப்பற்றி சாதனை படைக்க விரும்புகிறேன். இதற்காக எங்கள் அணி வீரர்கள் அனைவரும் இந்த சீசனில் கடுமையாக போராடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஐ.பி.எல் போட்டியில் இறுதி ஆட்டத்துக்கு நுழையாத ஒரே அணி டெல்லி ஆகும். இந்த சீசனிலாவது அந்த அணி அதை மாற்றிக்காட்டுமா? என்று எதிர் பார்க்கப்படுகிறது.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி முடிவை தொடர்ந்து புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் (செர்பியா) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) நம்பர் ஒன் இடத்திலும், சிமோனா ஹாலெப் (ருமேனியா) 2-வது இடத்திலும் தொடருகின்றனர்.
அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்ற ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா 6 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்) 13 இடங்கள் ஏற்றம் கண்டு 14-வது இடத்தை பெற்றுள்ளார். அரைஇறுதியில் தோல்வி கண்ட செரீனா வில்லியம்ஸ் ஒரு இடம் பின்தங்கி 9-வது இடம் பெற்றுள்ளார். அரைஇறுதியில் தோற்ற அமெரிக்க வீராங்கனை ஜெனிபர் பிராடி 16 இடங்கள் உயர்ந்து 25-வது இடத்தை பிடித்து இருக்கிறார்.






