search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lewis Hamilton"

    பார்முலா1 கார் பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். #LewisHamilton #FormulaOne #WorldTitle
    மெக்சிகோ சிட்டி:

    இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இறுதி கட்டத்தை எட்டி விட்ட இந்த போட்டியில் 19-வது சுற்றான மெக்சிகோ கிராண்ட்பிரி போட்டி மெக்சிகோ சிட்டியில் நேற்று முன்தினம் நடந்தது. பந்தய தூரமான 305.354 கிலோமீட்டர் தூர இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர்.



    இதில் நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 1 மணி 38 நிமிடம் 28.851 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து முதலிடத்தை பிடித்து அதற்குரிய 25 புள்ளிகளை கைப்பற்றினார். அவரை விட 17.316 வினாடிகள் பின்தங்கிய ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் (பெராரி அணி) 2-வது இடத்தை பிடித்து 18 புள்ளிகள் பெற்றார்.

    பின்லாந்து வீரர் கிமி ராய்க்கோனென் (பெராரி அணி) 3-வது இடத்தை பெற்று 15 புள்ளிகளை தனதாக்கினார். நடப்பு சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 4-வது இடம் பிடித்து 12 புள்ளிகள் பெற்றார். இந்த போட்டியில் 7-வது இடத்துக்குள் வந்தாலே ‘சாம்பியன்’ பட்டத்தை தக்க வைத்து கொள்ள முடியும் என்ற நிலையில் களம் கண்ட லீவிஸ் ஹாமில்டன் 4-வது இடத்தை பிடித்ததன் மூலம் மீண்டும் ‘சாம்பியன்’ பட்டத்தை கைப்பற்றினார்.

    இன்னும் 2 சுற்று பந்தயங்கள் (பிரேசில் கிராண்ட்பிரி நவம்பர் 11-ந் தேதி, அபுதாபி கிராண்ட்பிரி நவம்பர் 25-ந் தேதி) எஞ்சி இருக்கும் நிலையில் லீவிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தி உள்ளார். 33 வயதான லீவிஸ் ஹாமில்டன் பார்முலா1 ‘சாம்பியன்’ பட்டத்தை வெல்வது இது 5-வது முறையாகும். அவர் ஏற்கனவே 2008, 2014, 2015, 2017-ம் ஆண்டுகளில் பட்டத்தை வென்று இருந்தார். அத்துடன் பார்முலா1 பட்டத்தை அதிக முறை வென்ற வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஜெர்மனியின் மைக்கேல் சூமாக்கருக்கு (7 முறை) அடுத்த 2-வது இடத்தை அர்ஜென்டினாவின் ஜூயன் மானுவேல் பான்ஜியோவுடன் (5 முறை) இணைந்து லீவிஸ் ஹாமில்டன் பெற்றார். #LewisHamilton #FormulaOne #WorldTitle 
    பார்முலா1 கார்பந்தயத்தில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான வாய்ப்பில் ஹாமில்டன் 331 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். #LewisHamilton #FormulaOne
    சுஜூகா:

    இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இறுதி கட்டத்தை நெருங்கி விட்ட இந்த போட்டியில் 17-வது சுற்றான ஜப்பான் கிராண்ட்பிரி பந்தயம் அங்குள்ள சுஜூகா ஓடுதளத்தில் நேற்று நடந்தது. பந்தய தூரமான 307.471 கிலோமீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் அதிவேகமாக சீறிப்பாய்ந்தனர்.



    இதில் முதல்வரிசையில் இருந்து புறப்பட்ட நடப்பு சாம்பியனான இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 27 நிமிடம் 17.062 வினாடிகளில் பந்தய தூரத்தை எட்டி முதலிடத்தை பிடித்து, அதற்குரிய 25 புள்ளிகளை தட்டிச்சென்றார். தொடர்ச்சியாக அவர் பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். மொத்தத்தில் இந்த சீசனில் ஹாமில்டனின் 9-வது வெற்றியாக அமைந்தது. அவரை விட 12.919 வினாடி பின்தங்கிய பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் (மெர்சிடஸ் அணி) 2-வதாக வந்து 18 புள்ளிகளை பெற்றார். ஹாமில்டனின் பிரதான எதிரியான 4 முறை சாம்பியன் ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் (பெராரி அணி) 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டதால் அவருக்கு 8 புள்ளிகளே கிடைத்தன.

    இதுவரை நடந்துள்ள 17 சுற்று முடிவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான வாய்ப்பில் ஹாமில்டன் 331 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். வெட்டல் 264 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், வால்டெரி போட்டாஸ் 207 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். 18-வது சுற்று போட்டி அமெரிக்காவில் வருகிற 21-ந்தேதி நடக்கிறது. #LewisHamilton #FormulaOne
    பார்முலா1 கார்பந்தயத்தில் ரஷிய கிராண்ட்பிரியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து வீரர் ஹாமில்டன், சக வீரரின் உதவியுடன் முதலிடத்தை பிடித்தார். #LewisHamilton #ValtteriBottas #FormulaOne
    சோச்சி:

    இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 16-வது சுற்றான ரஷிய கிராண்ட்பிரி அங்குள்ள சோச்சி நகரில் நேற்று நடந்தது. பந்தய தூரம் 309.745 கிலோ மீட்டர் ஆகும். வழக்கம் போல் இலக்கை நோக்கி 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரை மின்னல் வேகத்தில் இயக்கினர்.

    இதில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 27 நிமிடம் 25.181 வினாடிகளில் முதல் வீரராக இலக்கை கடந்து அதற்குரிய 25 புள்ளிகளை தட்டிச்சென்றார். இந்த சீசனில் ஹாமில்டன் பதிவு செய்த 8-வது வெற்றி இதுவாகும். ஒட்டுமொத்தத்தில் அவரது 70-வது வெற்றியாக இது அமைந்தது.



    தகுதி சுற்றில் வெற்றி பெற்று முதல்வரிசையில் இருந்து புறப்பட்ட பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் (மெர்சிடஸ் அணி) 2.545 வினாடி பின்தங்கி 2-வது இடத்தை பிடித்தார். ஆரம்பத்தில் போட்டாஸ், ஹாமில்டனை விட முந்திதான் சென்று கொண்டிருந்தார். இருவரும் ஒரே அணி என்பதாலும், ஹாமில்டன் சாம்பியன்ஷிப் பட்டத்தை நெருங்கியுள்ளதாலும் அவருக்கு வழிவிடும்படி அணி நிர்வாகம் உத்தரவிட்டதன் பேரில் அதற்கு கட்டுப்பட்டு ஒதுங்கினார். இல்லாவிட்டால் போட்டாஸ் தான் முதலிடத்தை பிடித்திருப்பார். அவருக்கு 18 புள்ளிகள் கிடைத்தன.

    முன்னாள் சாம்பியன்கள் ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் (பெராரி அணி) 3-வதாக வந்து 15 புள்ளிகளையும், பின்லாந்து வீரர் கிமி ரெய்க்கோனன் (பெராரி அணி) 4-வதாக வந்து 12 புள்ளிகளையும் மற்றும் நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 5-வதாக வந்து 10 புள்ளிகளையும் பெற்றனர். போர்ஸ் இந்தியா அணி வீரர்களான ஈஸ்ட்பான் ஒகான் (பிரான்ஸ்), செர்ஜியோ பெரேஸ் (மெக்சிகோ) முறையே 9-வது, 10-வது இடங்களை பிடித்தனர். இந்த போட்டியை கடைசி கட்டத்தில் நேரில் கண்டுகளித்த ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    16 சுற்று முடிவில் ஹாமில்டன் 306 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான வாய்ப்பில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். செபாஸ்டியன் வெட்டல் 256 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், போட்டாஸ் 189 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், ரெய்க்கோனன் 186 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளனர். அடுத்த போட்டி வருகிற 7-ந்தேதி ஜப்பானில் நடக்கிறது. #LewisHamilton #ValtteriBottas #FormulaOne
    பார்முலா1 கார்பந்தயத்தில் சிங்கப்பூர் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் முதலிடம் பிடித்தார். #LewisHamilton #SingaporeGrandPrix
    சிங்கப்பூர்:

    இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 15-வது சுற்றான சிங்கப்பூர் கிராண்ட்பிரி அங்குள்ள மரினா பே ஓடுதளத்தில் நேற்றிரவு நடந்தது. மின்னொளியின் கீழ் 308.706 கிலோ மீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர்.

    முதல்வரிசையில் இருந்து புறப்பட்ட நடப்பு சாம்பியனும், இங்கிலாந்து வீரருமான லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) ஒரு மணி 51 நிமிடம் 11.611 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்ததுடன், அதற்குரிய 25 புள்ளிகளையும் வசப்படுத்தினார். இந்த சீசனில் ஹாமில்டனின் 7-வது வெற்றி இதுவாகும். ஒட்டுமொத்தத்தில் அவர் ருசித்த 69-வது வெற்றியாகும்.



    அவரை விட 8.961 வினாடி மட்டுமே பின்தங்கிய நெதர்லாந்தின் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 2-வதாக வந்து 18 புள்ளிகளையும், முன்னாள் சாம்பியன் ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் (பெராரி அணி) 3-வதாக வந்து 15 புள்ளிகளையும் பெற்றனர். போர்ஸ் இந்தியா அணிக்காக பங்கேற்று வரும் மெக்சிகோவின் செர்ஜியோ பெரேஸ் 16-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். மற்றொரு போர்ஸ் இந்தியா அணி வீரர் பிரான்சின் ஈஸ்ட்பான் ஒகானின் கார் விபத்தில் சிக்கியதால் பாதியிலேயே விலகினார்.

    இதுவரை நடந்துள்ள 15 சுற்று முடிவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்துக்கான வாய்ப்பில் ஹாமில்டன் 281 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். செபாஸ்டியன் வெட்டல் 241 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், பின்லாந்து வீரர் கிமி ரெய்க்கோனன் 174 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

    அடுத்த சுற்று போட்டி வருகிற 30-ந்தேதி ரஷியாவில் நடக்கிறது.  #LewisHamilton
    பார்முலா 1 கார் பந்தயத்தின் இத்தாலி கிராண்ட் ப்ரிக்ஸில் மெர்சிடெஸ் வீரர் லெவிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார். #Hamilton
    பார்முலா 1 கார் பந்தயம் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்றன. இன்று இத்தாலி கிராண்ட் ப்ரிக்ஸ் நடைபெற்றது. இதில் முன்னணி வீரரும், மெர்சிடெஸ்  அணியின் வீரரும் ஆன லெவிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார்.

    பெர்ராரி வீரர் கே. ரெய்க்கொனன் 2-வது இடம் பிடித்தார். மற்றொரு மெர்சிடெஸ் வீரர் வி. போட்டாஸ் 3-வது இடம் பிடித்தார். பெர்ராரி வீரர் செபஸ்டியான் வெட்டல் 4-வது இடத்தையே பிடித்தார்.



    இதுவரை முடிந்துள்ள 14 கிராண்ட் ப்ரிக்ஸ் முடிவில் லெவிஸ் ஹாமில்டன் 256 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளார். செபஸ்டியான் வெட்டல் 226 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், கிமி ரெய்க்கொனன் 164 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார்.
    பார்முலா 1 பந்தயத்தின் ஹங்கேரி கிராண்ட் பிரிக்ஸில் மெர்சிடெஸ் அணியின் லெவிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார். #LewisHamilton
    ஒவ்வொரு ஆண்டும் ‘பார்முலா 1’ பந்தயம் 21 சுற்றுகளாக (கிராண்ட் பிரிக்ஸ்) நடைபெறும். ஒவ்வொரு சுற்றும் ஒவ்வொரு நாடுகளில் நடைபெறும். அதன்படி 12-வது சுற்று ஹங்கேரியில் இன்று நடைபெற்றது.

    ஹங்கேரி கிராண்ட் பிரிக்ஸ் என்று அழைக்கப்படும் இதில் மெர்சிடெஸ் அணி வீரர் லெவிஸ் ஹாமில்டன் முதல் இடம்பிடித்தார். பெர்ராரி வீரர் செபஸ்டியான் வெட்டல் 2-வது இடமும், மற்றொரு பெர்ராரி வீரர் கிமி 3-வது இடமும் பிடித்தனர்.

    இந்த வெற்றியின் மூலம் பார்முலா-1 சாம்பியனுக்கான புள்ளியில் லெவிஸ் ஹாமில்டன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.
    பார்முலா1 கார்பந்தயத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 32 நிமிடம் 29.845 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்தார். #LewisHamilton #Formula1
    ஹாக்கென்ஹீம்:

    இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 11-வது சுற்றான ஜெர்மனி கிராண்ட்பிரி அங்குள்ள ஹாக்கென்ஹீம் ஓடுதளத்தில் நேற்று நடந்தது. 306.458 கிலோ மீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர். இதில் 14-வது வரிசையில் இருந்து புறப்பட்ட நடப்பு சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 32 நிமிடம் 29.845 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்ததுடன், அதற்குரிய 25 புள்ளிகளை தட்டிச்சென்றார்.

    இந்த சீசனில் அவரது 4-வது வெற்றி இதுவாகும். அவரை விட 4.5 வினாடி பின்தங்கிய பின்லாந்தின் வால்டெரி போட்டாஸ் 2-வது இடம் பெற்றார். முதல்வரிசையில் இருந்து புறப்பட்ட உள்ளூர் வீரர் செபாஸ்டியன் வெட்டலின் கார் துரதிர்ஷ்டவசமாக 55-வது சுற்றின் போது விபத்துக்குள்ளாகி பாதியில் வெளியேற நேரிட்டது. போர்ஸ் இந்தியா அணிக்காக பங்கேற்றுள்ள செர்ஜியோ பெரேஸ் (மெக்சிகோ), ஈஸ்ட்பான் ஒகான் (பிரான்ஸ்) முறையே 7, 8-வது இடங்களை பிடித்தனர்.

    11 சுற்று முடிவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான வாய்ப்பில் ஹாமில்டன் 188 புள்ளிகளுடன் முதலிடத்திலும், செபாஸ்டியன் வெட்டல் 171 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். 12-வது சுற்று போட்டி வருகிற 29-ந்தேதி ஹங்கேரியில் நடக்கிறது. 
    பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸில் லெவிஸ் ஹாமில்டனை பின்னுக்குத் தள்ளி பெர்ராரி வீரர் செபஸ்டியான் வெட்டல் சாம்பியன் பட்டம் வென்றார். #BritishGP
    ஒவ்வொரு ஆண்டும் ‘பார்முலா 1’ பந்தயம் 21 சுற்றுகளாக (கிராண்ட் பிரிக்ஸ்) நடைபெறும். ஒவ்வொரு சுற்றும் ஒவ்வொரு நாடுகளில் நடைபெறும். அதன்படி 10-வது சுற்று பிரட்டனில் இன்று நடைபெற்றது. இது பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ் என்று அழைக்கப்படும் இதற்கான தகுதிச் சுற்று வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெற்றது.



    இதில் மெர்சிடெஸ் அணியின் லெவிஸ் ஹாமில்டன் போல் பொஷிசன் பெற்றார். இதனால் இன்று நடைபெற்ற போட்டியில் அவர் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெர்ராரி வீரர் செபஸ்டியான் வெட்டல் லெவிஸ் ஹாமில்டன் பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றார். அத்துடன் 171 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளார். லெவிஸ் ஹாமில்டன் 163 புள்ளிகள் பெற்று 2-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார்.
    ஆஸ்திரேலியா ஒயிட் வாஷ், பனமாவிற்கு எதிராக 6-1, பார்முலா 1-ல் லெவிஸ் ஹாமில்டன் வெற்றி என இங்கிலாந்துக்கு பொன்னான நாளாக அமைந்தது. #ENGvAUS #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. வார விடுமுறை நாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இங்கிலாந்து பனாமா அணியை எதிர்கொண்டது. இதில் கேப்டன் ஹாரி கேன் ஹாட்ரிக் கோலால் 6-1 என பனமாவை துவம்சம் செய்து நாக்அவுட் சுற்றை உறுதி செய்தது.

    அதேவேளையில் கிரிக்கெட்டில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான 5-வது மற்றும் கடைசி லீக் ஆட்டம் மான்செஸ்டரில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 205 ரன்னில் சுருண்டது.



    பின்னர் 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. 114 ரன்களுக்குள் எட்டு விக்கெட்டுக்களை இழந்த இங்கிலாந்து, ஜோஸ் பட்லரின் அபார சதத்தால் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    நேற்று பார்முலா 1 பந்தயத்தில் கனடா கிராண்ட் ப்ரிக்ஸ் நடைபெற்றது. இதில் மெர்சிடெஸ் பென்ஸ் அணியின் லெவிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார். இவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். கனடா கிராண்ட் ப்ரிக்ஸை வென்றதுடன் ஒட்டுமொத்தமாக இதுவரை நடைபெற்று முடிந்துள்ள போட்டிகளில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.



    இதன்மூலம் கால்பந்து, கிரிக்கெட, கார் பந்தயம் என இங்கிலாந்திற்கு நேற்று பொன்னான நாளாக அமைந்தது.
    பார்முலா 1 கார் பந்தயத்தின் ஸ்பெயின் கிராண்ட் பிரிக்ஸில் மெர்சிடெஸ் வீரர் லெவிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார். #SpainishGP #F1
    பார்முலா 1 கார் பந்தயம் 21 சுற்றுகளாக நடைபெற்று வருகிறது. ஐந்தாவது சுற்றான ஸ்பெயின் கிராண்ட் பிரிக்ஸ் இன்று ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் நடைபெற்றது. இதில் 66 சுற்றுகள் கொண்ட பந்தய தூரத்தை மெர்சிடெஸ் அணி வீரர் லெவிஸ் ஹாமில்டன் ஒரு மணி நேரம் 35 நிமிடம், 29.972 வினாடியில் கடந்து முதல் இடம் பிடித்தார்.

    மற்றொரு மெர்சிடெஸ் வீரரான வி. பொட்டாஸ் 2-வது இடம் பிடித்தார. ரெட் புல் அணியின் எம். வெர்ஸ்டாப்பன் 3-வது இடத்தையும், பெர்ராரி அணியின் வெட்டல் 4-வது இடத்தையும், மற்றொரு ரெட் புல் வீரர் ரிக்கியார்டோ 5-வது இடத்தையும் பிடித்தனர். லெவிஸ் ஹாமில்டனின் 2-வது கிராண்ட் பிரிக்ஸ் சாம்பியன் பட்டம் இதுவாகும்.

    ஐந்து சுற்றுகள் முடிவில் லெவிஸ் ஹாமில்டன் 95 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், செபாஸ்டியன் வெட்டல் 78 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், வால்ட்டெரி பொட்டாஸ் 58 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
    ×