என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இலங்கை தொடரில் விளையாடுவதற்காக ஐபிஎல் தொடரை புறக்கணித்த முஸ்டாபிஜூர் ரஹ்மானுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
    வங்காளதேச அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரஹ்மான். முதன்முதலாக ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். புவனேஷ்வர் குமார் உடன் இணைந்து தனது அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி அனைவரின் பார்வையையும் ஈர்த்தார்.

    இவருக்கு காயம் ஏற்பட ஐபிஎல் தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் வங்கதேச அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் என்பதால் இவரை ஐபிஎல்-லில் விளையாட அனுப்ப வங்காளதேச கிரிக்கெட் போர்டு விரும்பவில்லை.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இருந்து வெளியேறிய முஸ்தாபிஜூர் ரஹ்மான் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தார். அப்போது அவருக்கு காயம் ஏற்பட அணியில் இருந்து விலகினார். இதனால் அவருக்கு ஐபிஎல் தொடரில் விளையாட தடையில்லா சான்றிதழ் வழங்க வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு அனுமதி மறுத்து வந்தது.

    கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதனால் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். ஆஸ்திரேலியாவில் அக்டோபர்- நவம்பர் மாதத்தில் நடைபெற இருந்த டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டதால் அந்த இடத்தில் ஐபிஎல் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

    அக்டோபர்- நவம்பர் மாதங்கள் கிரிக்கெட் போட்டிகள் ஏதும் இல்லாததால் வங்காளதேச அணி இலங்கை சென்று டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட முடிவு செய்தது. இதனால் ஐபிஎல் ஏலத்தில் முஸ்தாபிஜூர் ரஹ்மான் இடம்பெற வாய்ப்பு இல்லாமல் போனது. அவரை மும்பை இந்தியன்ஸ் அல்லது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய இரண்டு அணிகளில் ஒன்று ஏலம் எடுக்க விரும்பியது.

    வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு தடையில்லா சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்ததால் அவரால் ஏலத்தில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. வங்காளதேச டெஸ்ட் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கை செல்ல இருந்த நிலையில் தற்போது டெஸ்ட் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இலங்கை அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்படி வங்காளதேச வீரர்கள் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்துதல்  வேண்டும் என இலங்கை கிரிக்கெட் போ்டு தெரிவித்தது. வங்காளதேச கிரிக்கெட் போர்டு 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் நடைமுறைக்கு ஒப்புக்கொள்ளவில்லை இதனால் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரை நம்பியிருந்த முஸ்தாபிஜூர் ரஹ்மான் ஐபிஎல் வாய்ப்பை இழந்துள்ளார்.

    ஐபிஎல்-லில் விளையாடியிருந்தால் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் எடுக்கப்பட்டிருப்பார். தற்போது தேசிய அணிக்கு விளையாட முடியாமலும் ஐபிஎல் போட்டியில் விளையாட முடியாமலும் வருமானத்தை இழந்த சோகத்தில் முஸ்தாபிஜூல் ரஹ்மான் உள்ளார். 2015-16-ல் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாட வங்காளதேசம் அனுமதிக்க வில்லை. ஆனால் அதற்கான இழப்பீட்டை (30 லட்சம் டாகா) வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு முஸ்தாபிஜூர் ரஹ்மானுக்கு வழங்கியது.

    தற்போது அதேபோல் வழங்க இயலாது என தெரிவித்துள்ளது. இதனால் சுமார் ஒரு கோடி டாக்கா வங்காளதேசம் பணத்தை அவர் இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ‘‘இலங்கை தொடர் தள்ளிப்போகும் என்று வங்காளதேசம் கிரிக்கெட் போர்டுக்கு தெரிந்திருந்தால் தடையில்லா சான்றிதழ் வழங்கி இருப்பார்கள். ஆனால் நடந்ததெல்லாம் நன்மைக்கே. ஐபிஎல்-லில் விளையாடி இருந்தால் வங்காளதேசம் பணத்திற்கு சுமார் ஒரு கோடி டாக்கா சம்பாதித்து இருப்பேன்’’ என வருத்தத்துடன் தெரிவித்தார் முஸ்தாபிஜூர் ரஹ்மான்.
    ஐபிஎல் தொடரில் 11 போட்டிகள் மட்டுமே முடிவடைந்த நிலையில், 8 அணிகளும் குறைந்தது ஒரு போட்டியிலாவது வெற்றி பெற்று அசத்தியுள்ளன.
    ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 19ஆம் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்று பலப்பரீட்சை நடத்தி வருகின்றன நேற்று நடைபெற்ற 11-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதல் வெற்றியை ருசித்துள்ளது.

    ஐபிஎல் தொடரில் இதுவரை 11 ஆட்டங்களில் முடிவடைந்துள்ளன. இதில் 8 அணிகளும் குறைந்தபட்சம் ஒரு வெற்றியாவது பெற்றுள்ளது சிறப்பம்சமாகும்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் முதலிரண்டு போட்டியில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியில் தோல்வியடைந்தது. இதன்மூலம் ரன்ரேட் அடிப்படையில் 2-வது இடத்தை பிடித்துள்ளதுது.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 3 போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் மூன்று போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்று 4-வது இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் மூன்றில் ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று ஐந்தாவது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஒரு வெற்றி மூலம் 6-வது இடத்திலும்.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரண்டு போட்டிகளில் தலா ஒரு வெற்றி ஒரு தோல்வி மூலம் 7 வது இடத்தில் உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் போட்டியில் வெற்றி பெற்று அடுத்த இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து கடைசி இடத்தில் உள்ளது.
    நேற்று நடந்த போட்டியில் ஐதராபாத் அணி 15 ரன்னில் டெல்லியை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது. இந்த வெற்றி பந்து வீச்சாளர்களால் கிடைத்தது என்று வார்னர் கூறியுள்ளார்.

    அபுதாபி:

    ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் அணி 15 ரன்னில் டெல்லியை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது. அபுதாபியில் நடந்த 11-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன் எடுத்தது.

    பேர்ஸ்டோவ் 48 பந்தில் 53 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் வார்னர் 33 பந்தில் 45 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), வில்லியம்சன் 26 பந்தில் 41 ரன்னும் (5 பவுண்டரி) எடுத்தனர். ரபடா, அமித் மிஸ்ரா தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    பின்னர் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்தது. இதனால் ஐதராபாத் அணி 15 ரன்னில் வெற்றி பெற்றது

    தவான் அதிகபட்சமாக 31 பந்தில் 34 ரன்னும் (4 பவுண்டரி), ரி‌ஷப் பண்ட் 28 ரன்னும் எடுத்தனர். ரஷீத்கான் 3 விக்கெட்டும். புவனேஷ்வர்குமார் 2 விக்கெட்டும், கலீல் அகமது, டி. நடராஜன் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    ஐதராபாத் பெற்ற முதல் வெற்றியாகும். அந்த அணி முதல் 2 ஆட்டங்களில் தோற்று இருந்தது. இந்த வெற்றி குறித்து ஐதராபாத் அணி கேப்டன் வார்னர் கூறியதாவது:-

    பந்து வீச்சாளர்களால் இந்த வெற்றி கிடைத்தது. கடைசி கட்டத்தில் (டெத் பவுலிங்) எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள்.

    ரஷித்கானும், புவனேஸ்வர்குமாரும் அபாரமாக பந்து வீசினார்கள். மிச்சேல்மாஸ் காயமடைந்தது துரதிர்ஷ்டவசமானது. இளம் வீரர் அபிஷேக் சிறப்பாக பந்து வீசினார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டெல்லி அணி முதல் தோல்வியை சந்தித்தது. அந்த அணி முதல் 2 ஆட்டத்தில் வெற்றி பெற்று இருந்தது. இந்த தோல்வி குறித்து டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறியதாவது:-

    163 ரன். எடுக்கக்கூடிய இலக்குதான். ஆனால் நாங்கள் சரியாக ஆடவில்லை. ஐதராபாத் அணி எங்களை விட மிகவும் சிறப்பாக செயல்பட்டது. அவர்களது பந்து வீச்சு மிகவும் அபாரமாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 4-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சை வருகிற 2-ந் தேதி துபாயில் சந்திக்கிறது. டெல்லி கேப்பிடல்ஸ் அடுத்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்சை 3-ந் தேதி எதிர்கொள்கிறது.

    மெதுவாக பந்துவீசியதற்காக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யருக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது.

    இந்த ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பந்துவீச நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக்கொண்டது. மெதுவாக பந்து வீசியதற்காக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் டெல்லி அணி செய்யும் முதல் தவறு என்பதால் கேப்டனுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    முன்னதாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது  மெதுவாக பந்துவீசியதற்காக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலிக்கு 15 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    கொல்கத்தாவை இன்று துபாயில் சந்திக்க உள்ள ராஜஸ்தான் அணி அதே அதிரடி பாணியை தொடுத்து ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
    ஸ்டீவன் சுமித் தலைமையிலான ராஜஸ்தான் அணி தங்களது ஐ.பி.எல். பயணத்தை கம்பீரமாக தொடங்கி இருக்கிறது. சென்னைக்கு எதிராக 216 ரன்கள் குவித்தும், பஞ்சாப்புக்கு எதிராக 224 ரன்களை ‘சேசிங்’ செய்தும் அசத்தியது. இரு ஆட்டங்களிலும் சுமித், சஞ்சு சாம்சன் அரைசதம் விளாசினர். ஆனால் இவ்விரு ஆட்டங்களும் சிறிய மைதானமான சார்ஜாவில் நடந்தது. கொல்கத்தாவை இன்று துபாயில் சந்திக்க உள்ள ராஜஸ்தான் அணி அதே அதிரடி பாணியை தொடுத்து ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    தனது முதல் ஆட்டத்தில் 49 ரன் வித்தியாசத்தில் மும்பையிடம் தோற்ற கொல்கத்தா அணி 2-வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை தோற்கடித்தது. சுப்மான் கில், மோர்கன், ரஸ்செல், வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் நல்ல நிலையில் உள்ளனர். கேப்டன் தினேஷ் கார்த்திக் முதல் 2 ஆட்டத்திலும் சோபிக்கவில்லை. அவரும் பார்முக்கு திரும்பினால், கொல்கத்தா மேலும் வலுவடையும். இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம திறமையுடன் மல்லுக்கட்டுவதால் ரசிகர்களுக்கு குதூகலமான விருந்து காத்திருக்கிறது என்றே சொல்லலாம்.
    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், பிளிஸ்கோவா முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.
    பாரீஸ்:

    ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் 8-ம் நிலை வீரர் பெரேட்டினி (இத்தாலி) 6-3, 6-1, 6-3 என்ற நேர் செட்டில் வாசெக் போஸ்பிசிலை (கனடா) தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-0, 6-2, 6-3 என்ற நேர் செட்டில் மிகைல் மிர்ரை (சுவீடன்) வீழ்த்தி எளிதில் வெற்றி பெற்றார். முன்னதாக 12 முறை சாம்பியனான ஸ்பெயினின் ரபெல் நடால் 6-4, 6-4, 6-2 என்ற நேர் செட்டில் ஜெராசிமோவை (பெலாரஸ்) வெளியேற்றி வெற்றியோடு தொடங்கினார். பிரெஞ்ச் ஓபனில் தனது 94-வது வெற்றியை பதிவு செய்த நடால் அடுத்து அமெரிக்காவின் மெக்கென்ஸி மெக்டொனால்டுவை சந்திக்கிறார்.

    பெண்கள் ஒற்றையரில் தரவரிசையில் 4-வது இடம் வகிக்கும் கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) முதல் தடையை கடப்பதற்கு 2 மணி 15 நிமிடங்கள் போராட வேண்டி இருந்தது. அவர், தகுதி சுற்று மூலம் பிரதான சுற்றை எட்டிய மயார் ஷெரிப்பை (எகிப்து) 6-7 (9-11), 6-2, 6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். 2017-ம் ஆண்டு சாம்பியனான ஜெலினா ஆஸ்டாபென்கோ (லாத்வியா) 6-2, 6-1 என்ற நேர் செட்டில் 62 நிமிடங்களில் மேடிசன் பிரிங்கிலை (அமெரிக்கா) துவம்சம் செய்தார்.

    மற்றொரு ஆட்டத்தில் 25-ம் நிலை வீராங்கனை அமெரிக்காவின் ஜெனிபர் பிராட்டி 4-6, 6-3, 7-9 என்ற செட் கணக்கில் 17 வயதான கிளாரா டாசனிடம் (டென்மார்க்) அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இந்த ஆட்டம் 2 மணி 45 நிமிடங்கள் நீடித்தது. சோபியா கெனின் (அமெரிக்கா), ரைபகினா (கஜகஸ்தான்), ஆன்ஸ் ஜாபெர் (துனிசியா), டேனியலி காலின்ஸ் (அமெரிக்கா) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.
    ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.
    அபுதாபி:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11-வது லீக் ஆட்டம் அபுதாபியில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் பேர்ஸ்டோவ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் இரண்டு போட்டிகளில் ஏமாற்றம் அளித்த இந்த ஜோடி இன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.3 ஓவரில் 77 ரன்கள் குவித்தது. டேவிட் வார்னர் 33 பந்தில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மணிஷ் பாண்டே 3 ரன்னில் ஏமாற்றம் அளித்தார்.
     
    அரைசதம் அடித்த பேர்ஸ்டோவ் 48 பந்தில் 53 ரன்கள் அடித்து ரபாடா பந்து வீச்சில் வெளியேறினார்.

    அதன்பின் களமிறங்கிய கேன் வில்லியம்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 26 பந்துகளை சந்தித்த வில்லியம்சன் 5 பவுண்டரிகள் உள்பட 41 ரன்கள் குவித்து வெளியேறினார். 

    இறுதியாக ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. 

    டெல்லி தரப்பில் ரபாடா, அமித் மிஸ்ரா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதையடுத்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஜோடி களமிறங்கினர். 

    5 பந்துகளை சந்தித்த பிரித்வி 2 ரன்கள் மட்டுமே எடுத்து புவனேஷ்குமார் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்துவந்த டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேஷ் ஐய்யர் 21 பந்தில் 17 ரன்கள் எடுத்து ரஷித்கான்
    பந்துவீச்சில் அவுட் ஆனார். 

    அடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட், ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஆனால், 31 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்த தவானை ரஷித்கான் வெளியேற்றினார்.

    அடுத்துவந்த ஹெட்மையர் 12 பந்தில் 21 ரன்கள் எடுத்து புவனேஷ் குமார் பந்து வீச்சில் கேட்ச் முறையில் அவுட் ஆகி வெளியேறினார். 2 சிக்சர்கள் உள்பட 27 பந்தில் 28 ரன்கள் குவித்திருந்த ரிஷப் பண்ட்டையும் ரஷித் கான் வெளியேற்றினார். 

    பின்னர் வந்த வீரர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடாததால் டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் மட்டுமே
    எடுத்தது. இதனால், 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.

    சிறப்பாக பந்துவீசிய ஐதராபாத் அணியின் ரஷித் கான் 4 ஓவர்களை வீசி 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். புவனேஷ்குமார் 2 விக்கெட்களை வீழ்த்தி வெற்றிக்கு வழிவகுத்தார். 
    பேர்ஸ்டோவ் அரைசதம் அடிக்க, டேவிட் வார்னர் (45), கேன் வில்லியம்சன் (41) பொறுப்பான ஆட்டத்தால் டெல்லிக்கு 463 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.
    சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 11-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதலில் பேட்டிங் செய்தது. டேவிட் வார்னர் - பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் இரண்டு போட்டிகளில் ஏமாற்றம் அளித்த இந்த ஜோடி இன்ற சிறப்பான ஆட்டத்தை வெபளிப்படுத்தியது.

    இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.3 ஓவரில் 77 ரன்கள் குவித்தது. டேவிட் வார்னர் 33 பந்தில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மணிஷ் பாண்டே 3 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். அரைசதம் அடித்த பேர்ஸ்டோவ் 48 பந்தில் 53 ரன்கள் அடித்தார்.

    டேவிட் வார்னர்

    அதன்பின் கேன் வில்லியம்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் ஸ்கோர் 150 ரன்னை நோக்கி சென்றது. 19-வது ஓவரில் 13 ரன்கள் அடித்தது. ஆனால் ரபடா வீசிய கடைசி ஓவரில் கேன் வில்லியம்சன், அப்துல் சமாத் ரன்கள் அடிக்க திணறினர். 4-வது பந்தில் கேன் வில்லியம்சன் 26 பந்தில் 41 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 4 ரன்கள் மட்டுமே அடிக்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் 4 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் அடித்துள்ளது.
    ஐதராபாத் அணிக்கெதிரான இன்றைய போட்டியிலும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் அஸ்வின் இடம் பெறவில்லை.
    ஐபிஎல் தொடரின் 11 ஆவது லீக் ஆட்டம் அபு தாபியில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் இரண்டு முறை வெற்றி பெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் இதுவரை வெற்றி பெறாத சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். டெல்லி அணியில் வேகப்பந்து வீச்சாளர் இசாந்த் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார். அஸ்வின் இன்னும் இடம்பெறவில்லை.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விவரம்:-

    1. டேவிட் வார்னர், 2. பேர்ஸ்டோவ், 3. கேன் வில்லியம்சன், 4. மணிஷ் பாண்டே, 5. அப்துல் சமாத், 6. அபிஷேக் ஷர்மா, 7. பிரியம் கார்க், 8. ரஷித் கான், 9. புவனேஷ்வர் குமார், 10, கலீல் அகமது, 11. டி. நடராஜன்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விவரம்:-

    1. பிரித்வி ஷா, 2. ஷிகர் தவான், 3. ரிஷப் பண்ட், 4. ஷ்ரேயாஸ் அய்யர், 5. ஹெட்மையர், 6. மார்கஸ் ஸ்டாய்னிஸ், 7. அக்சார் பட்டேல், 8. ரபடா, 9. இசாந்த் சர்மா, 10. நோர்ட்ஜ். 11. அமித் மிஸ்ரா.
    அதிரடி பேட்ஸ்மேனான டி வில்லியர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் வெற்றிக்காக விக்கெட் கீப்பர் பணியையும் சேர்த்து கவனிக்கிறார்.
    தென்னாப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேன் டி வில்லியர்ஸ் ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார் இவர் விக்கெட் கீப்பராக பணியாற்றுவது இல்லை. பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடி வருகிறார்.

    ஆனால் தற்போது பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் ஆர்சிபி அணி சற்று தடுமாற்றம் அடைந்து வருவதால் விக்கெட் கீப்பர் பணியையும் சேர்ந்து கவனிக்க தொடங்கி உள்ளார்.

    நேற்று மும்பை அணிக்கு எதிராக விக்கெட் கீப்பராக பணியாற்றினார். சூர்யகுமார் யாதவை சிறப்பாக கேட்ச் பிடித்து அவுட் ஆக்கினார். விக்கெட் கீப்பராக பணியாற்றுவதால் டி வில்லியர்ஸ் ஆர்.சி.பி. அணிக்கு கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் களமிறங்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளார் என்று வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார்.

    நேற்றை மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
    மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சூப்பர் ஓவரை வீசிய யார்க்கர் புகழ் பும்ரா, முதன்முறையாக தோல்வியை சந்தித்துள்ளார்.
    ஆர்சிபி - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 201 ரன்கள் சேர்த்தது. பின்னர் 202 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியனஸ் களம் இங்கியது.

    ஒரு கட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் தோல்வியை சந்திக்கும் நிலையில் இருந்தது. இஷான் கிஷன் 99 ரன்களும், கீரன் பொல்லார்டு 60 ரன்களும் விளாச மும்பை வெற்றியை நோக்கி சென்றது. இருந்தாலும் மும்பை இந்தியன்ஸ் 201 ரன்களே அடித்ததால் போட்டி டையில் முடிந்தது.

    சூப்பர் ஓவரில் மும்பை இந்தியன்ஸ் 7 ரன்கள் அடித்தது, பின்னர் 8 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி அணி களம் இறங்கியது. பும்ரா அந்த ஓவரை வீசினார். முதல் மூன்று பந்தில் 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. 3-வது பந்தை டி வில்லியர்ஸ் பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் ஆர்சிபி அணி வெற்றியை உறுதி செய்தது. கடைசி பந்தில் ஒரு ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் விராட் கோலி பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார்.

    டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ஆன பும்ரா இதுவரை மூன்று முறை சூப்பர் ஓவரில் பந்து வீசி உள்ளார். இதில் நேற்று மற்றுமே தோல்வியை சந்தித்துள்ளார்.

    2017-ம் ஆண்டு குஜராத் லயன்ஸ் அணிக்கெதிராக மும்பை சூப்பர் ஓவரை சந்தித்தது. 11 ரன்னுக்குள் கட்டுப்பத்தினால் வெற்றி என்ற நிலையில் 6 பந்தில் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். மெக்கல்லம், ஆரோன் பிஞ்ச் இருந்தும் கூட ஒன்றும் செய்ய இயலவில்லை.

    2019-ல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக முதலில் பந்து வீசி 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அதன்பின் மும்பை 3 பந்திலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

    தற்போது 7 ரன்னுக்குள் கட்டுப்படுத்த முடியாத நிலை பும்ராவிற்கு ஏற்பட்டு விட்டது,
    பெங்களூர் அணிக்கு எதிரான சூப்பர் ஓவரில் இஷான் கிஷனை களம் இறக்காதது ஏன்? என்று மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.
    துபாய்:

    ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் அணி சூப்பர் ஓவரில் மும்பையை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.

    துபாயில் நடந்த 10-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 201 ரன் குவித்தது.

    டிவில்லியர்ஸ் 24 பந்தில் 55 ரன்னும் (4 பவுண்டரி, 4 சிக்சர்) படிக்கல் 40 பந்தில் 54 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), ஆரோன்பிஞ்ச் 35 பந்தில் 52 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்), ஷிவம்துபே 10 பந்தில் 27 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். போல்ட் 2 விக்கெட்டும், ராகுல் சாஹர் 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் விளையாடிய மும்பை இந்தியன்சும் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 201 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டம் டையில் முடிந்தது.

    இஷான் கி‌ஷன் 58 பந்தில் 99 ரன்னும் (2பவுண்டரி , 9சிக்சர்), போலார்ட் 24 பந்தில் 60 ரன்னும் (3பவுண்டரி, 5சிக்சர்) எடுத்தனர். உதனா 2 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர், சாஹல், ஆடம் சம்பா தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    ஆட்டம் டை ஆனதால் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்ய சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது.

    சூப்பர் ஓவரில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது. முதலில் ஆடிய மும்பை அணி 1 விக்கெட் இழப்புக்கு 7 ரன்னே எடுத்தது. பெங்களூர் அணி 8 ரன் இலக்கை எடுத்து கடைசி பந்தில் வெற்றி பெற்றது. அந்த அணி விக்கெட் இழப்பின்றி 11 ரன்னை எடுத்தது.

    இந்த தொடரில் முடிந்த 2-வது சூப்பர் ஓவர் ஆகும். ஏற்கனவே டெல்லி அணி சூப்பர் ஓவரில் பஞ்சாப்பை வீழ்த்தி இருந்தது. பெங்களூர் அணி பெற்ற 2-வது வெற்றியாகும். மும்பை 2-வது தோல்வியை சந்தித்தது.

    இந்த வெற்றி குறித்து பெங்களூர் அணி கேப்டன் விராட்கோலி கூறியதாவது:-

    இந்த போட்டியின் இரு அணியிலும் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் இதில் டிவில்லியர்சின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. வெற்றி இரு அணிகளின் பக்கம் மாறிமாறி இருந்தது. கடைசியில் நாங்கள் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தோல்வி குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது:-

    எங்கள் அணியின் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அதே நேரத்தில் இஷான் கி‌ஷனும், போலார்ட்டும் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இஷான் கி‌ஷன் மிகவும் சோர்ந்த நிலையில் இருந்தார். அவர் நல்ல நிலையில் இல்லாததால் சூப்பர் ஓவரில் களம் இறக்கவில்லை.

    சூப்பர் ஓவரில் போதுமான ரன்னை எடுக்காததால் தோல்வியை தழுவினோம். இது ஒரு சிறந்த ஆட்டம் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பெங்களூர் அணி 4 -வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை வருகிற 3-ந்தேதி துபாயில் சந்திக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அடுத்த போட்டியில் கிங்ஸ்லெவன் பஞ்சாப்பை 1-ந்தேதி எதிர் கொள்கிறது.
    ×