என் மலர்
விளையாட்டு
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் ரபேல் நடால், டொமினிக் தீம், வாரிங்கா 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இஸ்னெர் தோல்வியடைந்துள்ளார்.
பிரெஞ்ச் ஒபன் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 2-ம் நிலை வீரரான ரபேல் நடால் அமெரிக்காவின் மெக்டொனால்டை எதிர்கொண்டார். நடாலும் ஆட்டத்திற்கு மெக்டொனால்டால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் நடால் 6-1, 6-0, 6-3 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு சுற்றில் 3-ம் நிலை வீரரான டொமினிக் தீம் அமெரிக்காவின் ஜேக் சோக்கை எதிர்கொண்டார். முதல் இரண்டு செட்டையும் டொமினிக் தீம் 6-1, 6-3 என நேர்செட் கணக்கில் கைப்பற்றினார். ஆனால் 3-வது சுற்றில் ஜேக் சற்று நெருக்கடி கொடுத்தார். இதனால் அந்த செட் டை பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் டொமினிக் தீம் 7(8), 6(6) எனக் கைப்பற்றி வெற்றி பெற்றார்.
16-ம் நிலை வீரரான வாரிங்கா ஜெர்மனியின் கோப்ஃபெர்-ஐ எதிர்கொண்டார். இதில் வாரிங்கா 6-3, 6-2, 3-6, 6-1 என வெற்றி பெற்றார்.
தரநிலையில் 21-ம் இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் இஸ்னெர் சக நாட்டு வீரரான கோர்டாவிடம் 4-6, 4-6, 6-2, 4-6 என வீழ்ந்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் ஆட்டத்தை பாலிவுட் நடிகர் ஷாருக் கான் நேரில் சென்று கண்டு ரசித்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவர் ஷாருக் கான். ஐபிஎல் போட்டிகள் நடைபெறும்போது கொல்கத்தா விளையாடும் போட்டிகளை நேரில் சென்று கண்டு ரசிப்பது வழக்கம். அப்போது ரசிகர்களையும், வீரர்களையும் உற்சாகப்படுத்துவார்.
தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐபிஎல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. விளையாட்டு வீரர்களுடன் அணி உரிமையாளர்களும் சென்றுள்ளனர்.
அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு அதன்பின் பாதுகாப்பு வளையத்திற்குள் வந்துள்ளனர். முக்கியமான நபர்கள் ஒவ்வொருவராக வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் ஷாருக்கான் இன்றைய போட்டியை பார்ப்பதற்கான மைதானத்திற்கு வந்திருந்தார். அப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்களை கைத்தட்டி உற்சாகப்படுத்தினார். ஷாருக் கானுடன் அவருடைய மகனும் வந்திருந்தார்.
King Khan is in the house, cheering for his lads.@iamsrk | #Dream11IPL#RRvKKRpic.twitter.com/1ZGZdrMOlt
— IndianPremierLeague (@IPL) September 30, 2020
ஐபிஎல் பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கு நடப்பு சாம்பியன், முன்னாள் சாம்பியன் அணிகளை தவிர்த்துவிட முடியாது என்று ஷேன் வார்னே தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடர் தொடங்கியதுமே எந்தெந்த அணிகள் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறும் என்பதை எளிதாக கணித்து விடலாம். ஆனால் இந்த முறை இதுவரை 11 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், 8 அணிகளுமே குறைந்தது ஒரு வெற்றியாவது பெற்றுள்ளன.
இதனால் பிளேஆஃப்ஸ் சுற்று வாய்ப்பை கணிப்பது கடினமானது எனத் தோன்றுகிறது. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவானும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகருமான ஷேன் வார்னே பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் குறித்து கணித்துள்ளது.
வார்னே பினேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் குறித்து கூறுகையில் ‘‘நான்கு அணிகள், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அதில் இடமுண்டு. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கடந்து செல்வது கடினமானது என்று நினைக்கிறேன். சென்னை சூப்பர் கிங்ஸ் எப்போதும் பிளே ஆஃப்ஸ் சுற்றில் இருக்கும். அல்லது இருந்திருக்கும்.
மும்பை இந்தியன்ஸ் அணியும் தகுதி பெறும். அவர்கள் மிகவும் பேலன்ஸ் அணியை கொண்டுள்ளனர். அடுத்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை நோக்கி சார்ந்திருக்க வேண்டும். ஏராளமான பையர்பவர் பெற்றுள்ளது. ஆகவே, 4-வது அணியாக அது இருக்கும்’’ என்றார்.
ஷுப்மான் கில்லை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடாததால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஷுப்மான் கில், சுனில் நரைன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
சுனில் நரைன் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நிதிஷ் ராணா ஷுப்மான் கில் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
10-வது ஓவரின் கடைசி பந்தில் நிதிஷ் ராணா 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் எடுத்திருந்தது.
சிறப்பாக விளையாடி வந்த ஷுப்மான் கில் 34 பந்தில் 47 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த அந்த்ரே ரஸல் 24 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 1 ரன்னிலும் ஆட்டமிழக்க கொல்கத்தாவின் ரன் விகிதம் குறைய ஆரம்பித்தது.
6-வது வீரராக களம் இறங்கிய மோர்கன் 23 பந்தில் 34 ரன்கள் அடிக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் அடித்துள்ளது. ஜாஃப்ரா ஆர்சர் சிறப்பாக பந்து வீசி 4 ஓவரில்18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றினார்.
பார்சிலோனா அணி உரிமையாளரிடம் மோதல் போக்கை கடைபிடித்து வந்த மெஸ்சி, தற்போது அணியின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
அர்ஜென்டினா கால்பந்து அணி வீரர் மெஸ்ஸி. இவர் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். இளம் வயதிலிருந்தே பார்சிலோனா அணிக்காக விளையாடி வரும் மெஸ்சி, ஏராளமான வெற்றிகளை தேடிக்கொடுத்துள்ளார்.
சாம்பியன்ஸ் லீக்கில் பார்சிலோனா பேயர்ன் முனிச் அணக்கெதிராக 2-9 என படுதோல்வி அடைந்தது. இதனால் மெஸ்சி மீது கடும் விமர்சன்ம எழுந்தது. இந்தத் தோல்வியால் பயிற்சியாளர் அதிரடியாக நீக்கப்பட்டு புது பயிற்சியாளராக ரொனல்டு கோமென் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இளம் வீரர்களை கொண்டு புதிய அணியை உருவாக்க முயற்சி செய்து வருகிறார். இவருக்கும் மெஸ்சிக்கும் இடையில் மோதல் ஏற்பட, மெஸ்சி பார்சிலோனாவில் இருந்து வெளியேற முடிவு செய்தார். பார்சிலோனா அணியில் இருந்து வெளியேற வேண்டும் என்றால் அதற்கான இழப்பீடு வழங்க வேண்டும் என்பதால் இந்த வருடம் அணியில் விளையாடுவது என்பது முடிவு செய்துள்ளார்.
இதற்கிடையில் லூயிஸ் சுவாரஸ்-ஐ அட்லடிகோ மாட்ரிட் அணிக்கு கொடுக்க பார்சிலோனா ஒப்பந்தம் செய்தது. இது மெஸ்சிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பார்சிலோனா உரிமையாளரை கடுமையாக விமர்சனம் செய்தார்.
இந்த நிலையில் தற்போது அணியுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளார். இதுகுறித்து மெஸ்சி கூறுகையில் ‘‘ஏராளமான விவாதங்களுக்குப் பிறகு, அவற்றை முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து, இதுவரை சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என கருத வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே திசையில் இழுக்க வேண்டும்.
என்னுடைய தவறுக்கு நான் பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன். அவர்கள் இருந்திருந்தால், அது மட்டுமு பார்சிலோனாவை சிறந்தது, வலிமையாக்கியிருக்கும்’’ என்றார்.
பஞ்சாப் அணியை வீழ்த்த வேண்டுமென்றால் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோரை தொடக்கத்திலேயே வீழ்த்த வேண்டும் என மும்பை இந்தியன்ஸ் பவுலிங் கோச்சர் ஷேன் பான்ட் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் தொடக்கம் நடப்புச் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்க்கு சிறப்பாக அமையவில்லை. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வியை சந்தித்தது. இரண்டாவது போட்டியில் கே.கே.ஆர். அணியை அதிக ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஆனால், மூன்றாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிடம் சூப்பர் ஓவரில் தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் நாளை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்துவது அவ்வளவு சுலபமானது அல்ல. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 3 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தாலும் அந்த அணியின் தொடக்க வீரர்களான கே.எல். ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இரண்டாவது போட்டியில் ஆர்.சி.பி.க்கு எதிராக கே.எல். ராகுல் சதம் விளாசினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக மயங்க் அகர்வால் சதம் அடித்தார். இவர்கள் விக்கெட்டை முன்னதாகவே வீழ்த்தினால் அது வெற்றிக்கான முக்கியமான வழி என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஷேன் பான்ட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஷேன் பான்ட் கூறுகையில் ‘‘கடந்த சில போட்டிகளில் கே.எல். ராகுல் எங்களுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்துள்ளார். அவர் ஒரு தலைசிறந்த வீரர். நாங்கள் இன்று எங்கள் பந்து வீச்சாளர்களுடன் ஆலோசனை நடத்தினோம். அப்போது சிறப்பாக விளையாடும் அணிக்கு எதிராக எங்களுடைய திட்டத்தை தீட்டினோம். கே.எல். ராகுல் டைனமிக் வீரர். அவர் மைதானத்தின் எல்லா பக்கத்திற்கும் பந்தை அடிக்க கூடியவர்.

அவர் மிடில் ஆர்டர் ஓவரில் பொதுவாக கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்வார் என்பது எங்களுக்கு தெரியும். அப்போது அவருக்கு நெருக்கடி கொடுத்து அவர் உடன் விளையாடும் வீரர்களுக்கும் அந்த நெருக்கடியை உண்டாக்கும் வாய்ப்பை தேடுவோம். நாங்கள் அவரை எப்படி அவுட்டாக வேண்டும் என்பதற்கான திட்டத்தை தீட்டி உள்ளோம். அவர் அடிக்கும் திசையில் ரன் கொடுக்காத அளவுக்கு நெருக்கடி கொடுப்போம். அவர் எக்ஸ்ட்ரா கவர் மற்றும் பைன்-லெக்கில் பகுதிகளில் ரன்கள் அடிப்பார்.
நாங்கள் தலைசிறந்த பவுலிங் யூனிட் வைத்துள்ளோம். எங்களால் அவர்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியும். பஞ்சாப் அணியின் இரண்டு பேட்ஸ்மேன்கள் இதுவரை சிறப்பாக விளையாடி வருகின்றனர். எங்களால் நெருக்கடி கொடுக்க முடியும் என்றால், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு அது நெருக்கடியாக அமையும். அவர்கள் ரன்கள் அடிப்பதை தடுத்து மிகப்பெரிய ஸ்கோரில் இருந்து எங்களை தற்காத்துக் கொள்ள முடியும்.
எங்களது பேட்ஸ்மேன் மீதான நம்பிக்கை போதுமான அளவு உள்ளது. அவர்களால் குறிப்பிட்ட அளவு ரன்கள் அடித்துள்ளனர். எங்களை தடுத்து நிறுத்துவதற்கான கடினமான பேட்டிங் ஆர்டரை வைத்துள்ளோம். இந்த மைதானத்தில் இரண்டு முறை விளையாடி உள்ளோம். அதனால் சீதோஷ்ண நிலை குறித்து எங்களுக்கு தெரியும். இது எங்களுக்கு கூடுதலாக உதவியாக இருக்கும்’’ என்றார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்மித் டாஸ் வென்று பந்து வீ்ச்சை தேர்வு செய்துள்ளார்.
ஐ.பி.எல். தொடரின் 12-வது லீக் ஆட்டம் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்மித் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விவரம்:-
1. சுனில் நரைன், 2. ஷுப்மான் கில், 3. தினேஷ் கார்த்திக், 4. மோர்கன் 5. ஆந்த்ரே ரஸல், 6. நிதிஷ் ராணா, 7. பேட் கம்மின்ஸ், 8. ஷிவம் மவி, 9. குல்தீப் யாதவ், 10, வருண் சக்ரவர்த்தி, 11. கம்லேஷ் நகார்கோட்டி.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விவரம்:-
1. ஜோஸ் பட்லர், 2. ஸ்மித், 3. சஞ்சு சாம்சன், 4. ராபின் உத்தப்பா, 5. ரியான் பராக், 6. ராகுல் டெவாட்டியா, 7. ஜாஃப்ரா ஆர்சர், 8. டாம் கர்ரன், 9. ஷ்ரேயாஸ் கோபால், 10. அங்கித் ராஜ்பூட், 11. ஜெய்தேவ் உனத்கட்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பேர்ஸ்டோவ் டெஸ்ட் போட்டிக்கான மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பேர்ஸ்டோவ். இவர் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டின் மத்திய ஒப்பந்தத்தில் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் இடம் பிடித்திருந்தார்.
ஆனால், கடந்த வருட ஆஷஸ் தொடரில் இருந்து இங்கிலாந்து அணி 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் ஒரு போட்டியில் மட்டுமே பேர்ஸ்டோவ் விளையாடியுள்ளார்.
இந்நிலையில் டெஸ்ட் போட்டிக்கான மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இளம் வீரர்களான ஒல்லி போப், ஜாக் கிராவ்லி, டாம் சிப்லி ஆகியோர் டெஸ்ட் போட்டிக்கான ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ஜாஃப்ரா ஆர்சர், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் அனைத்து வடிவிலான கிரிக்கெட் ஒப்பந்தத்திலும் இடம் பிடித்துள்ளனர்.
கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான பிரெஞ்ச் ஓபனில் இருந்து காயம் காரணமாக செரீனா வில்லியம்ஸ் விலகியுள்ளார்.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் முதன்மைச் சுற்று கடந்த 27-ந்தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் முதல் சுற்றில் சக நாட்டைச் சேர்ந்த கிரிஸ்டி அன்-ஐ எதிர்கொண்டார். இதில் செரீனா 7(7)-6(2), 6-0 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இன்று 2-வது சுற்றில் பல்கேரியா வீராங்கனை பிரோன்கோவை எதிர்கொள்ள இருந்தார். இந்நிலையில் குதிகால் காயத்தால் போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
தினேஷ் கார்த்திக், மோர்கன் மற்றும் மெக்கல்லம் ஆகியோரிடம் இருந்து கேப்டன் பதவிக்கான திறனை ஷுப்மான் கில் பெற்றுக் கொள்ள வேண்டும் என சைமன டவுல் தெரிவித்துள்ளார்.
19 வயதிற்கான இந்திய கிரிக்கெட் அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் ஷுப்பமான் கில். இவரை கடந்த முறை ஐபிஎல் ஏலத்தின்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்தது. ஆனால் முதல் தொடரில் தொடர்ந்து அவருக்கு தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கும் வாய்ப்பு கொடுக்கவில்லை.
இந்த தொடரில் அவருக்கு தொடர்ந்து முதல் இடம் கொடுப்பதாக தலைமை பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் தெரிவித்தார். மேலும், எங்களுடைய வழிநடத்தும் உறுப்பினர்களில் அவரும் ஒருவர் எனக் கூறியிருந்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் சிறப்பாக விளையாடவில்லை. ஆனால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். மேலும் அணி வெற்றி பெறும் வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்நிலையில் இன்னும் இரண்டு வருடத்திற்குள் ஷுப்மான் கில்லை கேப்டனாக பார்க்கலாம் என நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய பிரபல கிரிக்கெட் வர்ணனையாளருமான சைமன் டவுல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சைன் டவுல் கூறுகையில் ‘‘இன்னும் இரண்டு வருடத்திற்குள் ஷுப்மான் கில்லை ஐபிஎல் தொடரில் கேப்டனாக நாம் பார்த்தோம் என்றால், நான் அதிர்ச்சி அடைய மாட்டேன். அவர் தினேஷ் கார்த்திக் மற்றும் மோர்கன் ஆகியோருடன் ஏராளமான நேரத்தை செலவிட்டு அவர்களின் கேப்டன் திறனை பெற வேண்டும். மேலும் 8 வருடங்களாக கேப்டனாக திகழ்ந்த பிரெண்டன் மெக்கல்லமிடம் இருந்தும் கற்றுக்கொள்ள வேண்டும். இவர்களிடம் இருந்து ஏராளமானவற்றை கற்றுக் கொள்ள முடியும் என நான் நினைக்கிறேன்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக 62 பந்தில் 70 ரன்கள் அடித்தது சிறப்பான ஸ்கோர். இந்த தொடரில் அவர் முதல் போட்டியில் பெரிய அளவில் ரன்கள் அடிக்கவில்லை. 143 ரன்கள் என்ற இலக்கு என வரும்போது நீங்கள் உங்களது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அவர் இன்னும் களத்தில் நின்று அவருடைய முதிர்ச்சியை வெளிப்படுத்த வேண்டும். அவரால் முழுவதும் பேட்டிங் செய்து அணியை வெற்றி பெறச் செய்ய வைக்க முடியும். மோர்கன் சிறந்த பார்ட்னர்ஷிப். அவருடைய அனுபவம் அமைதியான சுபாவம் இளம் வீரர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்’’ என்றார்.
ஐதராபாத் டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடிக்கடி ஸ்டிரைக் ரொட்டேட் செய்து ரன்கள் குவித்தது, எங்களுடைய தோல்விக்கு முக்கிய காரணம் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
அபு தாபியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் பேர்ஸ்டோவின் அரைசதம் ஹைதராபாத் 162 ரன்கள் அடித்தது. டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தினால் கடுமையான பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 102 ரன்கள் எடுத்தது.
பின்னர் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி களமிறங்கியது. புவனேஷ்வர் குமார், ரஷித் கான், நடராஜன் ஆகியோரின் துல்லியமான பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் டெல்லி கேப்பி்ட்டல்ஸ் அணியின் பிரித்வி ஷா, தவான், ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் திணறினார்கள். இதனால் அந்த அணியால் 7 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
ஆகவே, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 15 ரன் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி தொடரில் முதல் வெற்றியை பெற்றது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றியை கோட்டை விட்டது குறித்து அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறுகையில் ‘‘சீதோஷ்ண நிலை மாறுபட்டதாக நான் நினைக்கவில்லை இந்த மைதானம் மிகவும் பெரியது. பவுண்டரி எல்லை பெரியது. ஆனால் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் எங்களை முற்றிலும் துவம்சம் செய்துவிட்டனர்.
எங்களுடைய சூப்பர் பார்மில் இருந்து சற்று தவறி விட்டோம். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அவர்கள் அடிக்கடி ஸ்டிரைக் ரொட்டேட் செய்தது சிறப்பானது. மேலும் அவர்களில் சில பெரிய ஸ்கோரை எட்டிவிட்டனர். இதுதான் போட்டியின் முக்கியமான வேறுபாடு.
எங்களது முக்கியமான பேட்ஸ்மேன்களில் ஒருவர் 60 அல்லது 70 ரன்கள் வரை எடுத்தால் நாங்கள் நிச்சயமாக அந்த போட்டியில் வெற்றி பெறுவோம். இந்தப் போட்டியை பார்த்தீர்கள் என்றால் நாங்கள் 15 ரன்களில் மட்டுமே தோல்வியடைந்தோம். இந்த தோல்வியால் நாங்கள் யாரையும் குற்றம் கூற விரும்பவில்லை. ஒரு அணியாக தோல்வியை சந்தித்தோம்’’ என்றார்.
இலங்கை தொடரில் விளையாடுவதற்காக ஐபிஎல் தொடரை புறக்கணித்த முஸ்டாபிஜூர் ரஹ்மானுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
வங்காளதேச அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரஹ்மான். முதன்முதலாக ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். புவனேஷ்வர் குமார் உடன் இணைந்து தனது அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி அனைவரின் பார்வையையும் ஈர்த்தார்.
இவருக்கு காயம் ஏற்பட ஐபிஎல் தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் வங்கதேச அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் என்பதால் இவரை ஐபிஎல்-லில் விளையாட அனுப்ப வங்காளதேச கிரிக்கெட் போர்டு விரும்பவில்லை.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இருந்து வெளியேறிய முஸ்தாபிஜூர் ரஹ்மான் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தார். அப்போது அவருக்கு காயம் ஏற்பட அணியில் இருந்து விலகினார். இதனால் அவருக்கு ஐபிஎல் தொடரில் விளையாட தடையில்லா சான்றிதழ் வழங்க வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு அனுமதி மறுத்து வந்தது.
கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதனால் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். ஆஸ்திரேலியாவில் அக்டோபர்- நவம்பர் மாதத்தில் நடைபெற இருந்த டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டதால் அந்த இடத்தில் ஐபிஎல் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
அக்டோபர்- நவம்பர் மாதங்கள் கிரிக்கெட் போட்டிகள் ஏதும் இல்லாததால் வங்காளதேச அணி இலங்கை சென்று டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட முடிவு செய்தது. இதனால் ஐபிஎல் ஏலத்தில் முஸ்தாபிஜூர் ரஹ்மான் இடம்பெற வாய்ப்பு இல்லாமல் போனது. அவரை மும்பை இந்தியன்ஸ் அல்லது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய இரண்டு அணிகளில் ஒன்று ஏலம் எடுக்க விரும்பியது.
வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு தடையில்லா சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்ததால் அவரால் ஏலத்தில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. வங்காளதேச டெஸ்ட் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கை செல்ல இருந்த நிலையில் தற்போது டெஸ்ட் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்படி வங்காளதேச வீரர்கள் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்துதல் வேண்டும் என இலங்கை கிரிக்கெட் போ்டு தெரிவித்தது. வங்காளதேச கிரிக்கெட் போர்டு 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் நடைமுறைக்கு ஒப்புக்கொள்ளவில்லை இதனால் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரை நம்பியிருந்த முஸ்தாபிஜூர் ரஹ்மான் ஐபிஎல் வாய்ப்பை இழந்துள்ளார்.
ஐபிஎல்-லில் விளையாடியிருந்தால் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் எடுக்கப்பட்டிருப்பார். தற்போது தேசிய அணிக்கு விளையாட முடியாமலும் ஐபிஎல் போட்டியில் விளையாட முடியாமலும் வருமானத்தை இழந்த சோகத்தில் முஸ்தாபிஜூல் ரஹ்மான் உள்ளார். 2015-16-ல் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாட வங்காளதேசம் அனுமதிக்க வில்லை. ஆனால் அதற்கான இழப்பீட்டை (30 லட்சம் டாகா) வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு முஸ்தாபிஜூர் ரஹ்மானுக்கு வழங்கியது.
தற்போது அதேபோல் வழங்க இயலாது என தெரிவித்துள்ளது. இதனால் சுமார் ஒரு கோடி டாக்கா வங்காளதேசம் பணத்தை அவர் இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ‘‘இலங்கை தொடர் தள்ளிப்போகும் என்று வங்காளதேசம் கிரிக்கெட் போர்டுக்கு தெரிந்திருந்தால் தடையில்லா சான்றிதழ் வழங்கி இருப்பார்கள். ஆனால் நடந்ததெல்லாம் நன்மைக்கே. ஐபிஎல்-லில் விளையாடி இருந்தால் வங்காளதேசம் பணத்திற்கு சுமார் ஒரு கோடி டாக்கா சம்பாதித்து இருப்பேன்’’ என வருத்தத்துடன் தெரிவித்தார் முஸ்தாபிஜூர் ரஹ்மான்.






