என் மலர்
விளையாட்டு
துபாய்:
பெண்களுக்கான 20 ஓவர் சேலஞ்ச் கிரிக்கெட் போட்டி நவம்பர் 4-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. ஐ.பி.எல். பிளே-ஆப் சுற்று நடைபெறும்போது இந்த போட்டி நடக்கிறது.
இந்திய வீராங்கனைகள் தலைமையில் 3 அணிகள் கலந்து கொள்ளும். இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். இதன் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேறும்.
நான்கு ஆட்டங்களையும் ஒரே மைதானத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அபுதாபி:
ஐ.பி.எல். போட்டியின் 13-வது லீக் ஆட்டம் அபுதாபியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் லோகேஷ் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப்-ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்றுள்ளன. இதனால் 2-வது வெற்றியை பெறப்போவது எந்த அணி என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
பஞ்சாப் அணி தொடக்க ஆட்டத்தில் டெல்லியிடம் சூப்பர் ஓவரில் தோற்றது. 2-வது போட்டியில் பெங்களூர் அணியை 97 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 3-வது ஆட்டத்தில் 223 ரன் குவிக்கும் ராஜஸ்தானிடம் தோற்றது.
பஞ்சாப் அணியில் கேப்டன் லோகேஷ் ராகுல் (222 ரன்), மயங்க் அகர்வால் (221) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். இந்த தொடரில் அவர்கள் இருவரும் தற்போது ரன் குவிப்பில் முதல் 2 இடங்களில் உள்ளனர். இந்த இருவரும் தான் இந்த சீசனில் சதம் அடித்து இருக்கிறார்கள்.
இது தவிர மேக்ஸ்வெல், நிக்கோலஸ் பூரன், முகமது ஷமி, ரவி பிஷ்னோய் போன்ற சிறந்த வீரர்களும் அந்த அணியில் உள்ளனர்.
கிறிஸ் கெய்லுக்கு இன்றைய ஆட்டத்திலாவது வாய்ப்பு கிடைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆட்டத்தில் ரன்களை வாரிக்கொடுத்த காட்ரெல் நீக்கப்படலாம். அவர் இடத்தில் கிறிஸ் கெய்ல் அல்லது சுழற்பந்து வீரர் முஜூபூர் ரகுமானுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் முதல் ஆட்டத்தில் சி.எஸ்.கே.விடம் 5 விக்கெட்டில் தோற்றது. 2-வது போட்டியில் கொல்கத்தாவை 49 ரன்னில் வீழ்த்தியது. 3-வது போட்டியில் பெங்களூரிடம் சூப்பர் ஓவரில் தோற்றது.
அந்த அணியில் கேப்டன் ரோகித் சர்மா, இஷான் கிசன், பொல்லார்ட், சூர்யகுமார் யாதவ், ஹர்த்திக் பாண்டியா, குயின்டன் டிபாக், பும்ரா, போல்ட், பேட்டின்சன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
இரு அணிகளும் தோல்வியில் இருந்து மீண்டு வெற்றி பாதைக்கு திரும்பும் ஆர்வத்தில் உள்ளன. ஐ.பி.எல். போட்டியில் இரு அணிகளும் 24 முறை மோதுகின்றன. இதில் மும்பை 13-ல். பஞ்சாப் 11-ல் வெற்றி பெற்றுள்ளன. கடந்த ஆண்டு இரு அணிகளும் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன.
துபாய்:
ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தி கொல்கத்தா அணி 2-வது வெற்றியை பெற்றது.
துபாயில் நடந்த 12-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன் எடுத்தது.
சுப்மன்கில் 34 பந்தில் 47 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்), மார்கன் 23 பந்தில் 34 ரன்னும் (1 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ஆர்ச்சர் 2 விக்கெட்டும், ராஜ்பூத், உனட்கட், டாம் கரண், திவேதியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் கொல்கத்தா அணி 37 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது
டாம் கரண் அதிகபட்சமாக 36 பந்தில் 54 ரன் (2 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். சஞ்சு சாம்சன், கேப்டன் ஸ்டீவ் சுமித் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். ஷிவம் மவி, நாகர்கோட்டி, வருன் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டும், சுனில் நரீன், கம்மின்ஸ், குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
கொல்கத்தா பெற்ற 2-வது வெற்றியாகும். அந்த அணி முதல் ஆட்டத்தில் மும்பையிடம் தோற்றது. 2-வது போட்டியில் ஐதராபாத்தை வீழ்த்தியது. இந்த வெற்றி குறித்து கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறியதாவது:-
பல்வேறு விஷயங்கள் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. சுப்மன் கில்,ரஸ்சல்,மார்கன் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தினார்கள். இளம் வீரர்களான மவி, கமலேஷ் நாகர்கோட்டி அபாரமாக பந்து வீசினார்கள். நம்ப முடியாத வகையில் சிறப்பாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் முதல் தோல்வியை தழுவியது. அந்த அணி முதல் 2 ஆட்டங்களில் சென்னை, பஞ்சாப்பை அணிகளை வீழ்த்தி இருந்தது.
இந்தத் தோல்வி குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ஸ்டீவ் சுமித் கூறும்போது, எங்களது திட்டம் எடுபடவில்லை. ஆனால் 20 ஓவர் சில சமயம் இப்படி நடைபெறலாம். தொடக்கத்திலே விக்கெட் இழந்ததால் ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட்டது என்றார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 4-வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்சை 3-ந் தேதி சார்ஜாவில் சந்திக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அடுத்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை அதே தினத்தில் அபுதாபியில் எதிர்கொள்கிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் டெல்லி கேப்பிட்டல்சுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணியின் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் ஸ்டம்பை குறி வைத்து யார்க்கராக போட்டு மிரட்டினார். குறிப்பாக அவர் தனது கடைசி இரு ஓவர்களில் (அணியின் 14 மற்றும் 18-வது ஓவர்) மட்டும் துல்லியமாக 10 யார்க்கர்களை வீசி திணறடித்தார். ஐதராபாத் அணியின் வெற்றியில் அவரது பந்து வீச்சும் முக்கிய பங்கு வகித்தது. அவரை பாராட்டியுள்ள இந்திய முன்னாள் வீரர் ஷேவாக், ‘நடராஜனின் பந்து வீச்சை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. கடைசி கட்டத்தில் மிகச்சிறப்பான முறையில் நேர்த்தியாக யார்க்கர் வீசினார்’ என்றார். ‘அற்புதம் நடராஜன்’ என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரெட்லீ தனது டுவிட்டர் பக்கத்தில் புகழ்ந்துள்ளார்.
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் அபாரமாக பந்து வீசி அதன் மூலம் ஐ.பி.எல். போட்டிக்குள் நுழைந்தவர், 29 வயதான நடராஜன். சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர். 2017-ம் ஆண்டு ஐ.பி.எல்.-ல் ரூ.3 கோடிக்கு பஞ்சாப் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட நடராஜன் அந்த ஐ.பி.எல்.-ல் பெரிய அளவில் (6 ஆட்டத்தில் 2 விக்கெட்) ஜொலிக்கவில்லை. இதன் பிறகு 2018-ம் ஆண்டில் ரூ.40 லட்சத்திற்கு ஐதராபாத் அணி அவரை வாங்கியது. ஆனால் 2018 மற்றும் 2019-ம் ஆண்டு சீசனில் ஒரு ஆட்டத்தில் கூட களம் இறக்கப்படவில்லை. என்றாலும் தமிழக அணிக்காக உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி தனது திறமையை வளர்த்துக் கொண்ட நடராஜன் இப்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்த ஆட்டத்தில் அவர் 4 ஓவர் பந்து வீசி 25 ரன் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
King Khan is in the house, cheering for his lads.@iamsrk | #Dream11IPL#RRvKKRpic.twitter.com/1ZGZdrMOlt
— IndianPremierLeague (@IPL) September 30, 2020






