என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கொரோனா பரவல் அதிகரிப்பு மற்றும் சில நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் காரணமாக இந்த தகுதி சுற்று அக்டோபர் மாதத்திற்கு தள்ளிவைக்கப்படுவதாக ஐ.சி.சி. அறிவித்தது.
    துபாய்:

    7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடக்கிறது. அதைத் தொடர்ந்து 8-வது 20 ஓவர் உலககோப்பை போட்டி அடுத்த ஆண்டு (2022) ஆஸ்திரேலியாவில் நடத்தப்படுகிறது. 2022-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கான ஆசியா ஏ மண்டலத்திற்கான தகுதி சுற்று அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை குவைத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

    இதில் பக்ரைன், குவைத், மாலத்தீவு, கத்தார், சவுதி அரேபியா ஆகிய அணிகள் பங்கேற்க இருந்தன. கொரோனா பரவல் அதிகரிப்பு மற்றும் சில நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் காரணமாக இந்த தகுதி சுற்று அக்டோபர் மாதத்திற்கு தள்ளிவைக்கப்படுவதாக ஐ.சி.சி. நேற்று அறிவித்தது. இதே போல் ஆப்பிரிக்க மண்டலத்திற்கான தகுதி சுற்று ஏ, பி என்று இரு வகையாக பிரிக்கப்பட்டு தென்ஆப்பிரிக்காவில் அடுத்த மாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த போட்டியும் அக்டோபர் மாதத்திற்கு ஒத்திபோடப்பட்டுள்ளது.
    இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    அகமதாபாத்:

    இந்தியா-இங்கிலாந்து மோதும் 4-வது 20 ஓவர் போட்டி அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

    இதன்படி நிர்ணயித்த 20 ஓவரில் இந்திய அணி 8 விக்கெட் இழந்து 185 ரன்கள் எடுத்தது. அதிகப்படியாக சூர்யகுமார் யாதவ் 57 ரன்கள் எடுத்தார்.

    இதனையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இங்கிலாந்து அணி களமிறங்கியது. துவக்க வீரர் ஜோசன் ராய் 40 ரன்னிலும் பட்லர் 9 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த வீரர் மலான் 17 ரன்னில் வெளியேறினார்.

    இந்நிலையில் பேர்ஸ்டோ மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஜோடி ஆட்டத்தை மாற்றினர். அந்த ஜோடி இந்திய அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டனர். பேர்ஸ்டோ 25 ரன்னிலும் அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே பென் ஸ்டோக்ஸ்சும் இரண்டாவது பந்தில் இயான் மோர்கனும் வெளியேற இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது.

    கடைசி ஓவரில் இங்கிலாந்து அணிக்கு 23 ரன்கள் தேவைப்பட்டது. இந்நிலையில் கடைசி ஓவரை சர்துல் தாகூர் வீசினார். முதல் பந்தில் ஜோர்டன் 1 ரன்னும் 2-வது பந்தில் ஆர்ச்சர் பவுண்டரியும் 3-வது பந்தில் சிக்சர் அடிக்க ஆட்டம் பரப்பரப்பானது. 4-வது பந்தில் 2 உதிரிகளை விட்டு கொடுத்தாலும் அடுத்த பந்தில் ஒரு ரன்னை மட்டுமே விட்டு கொடுத்தார். 5-வது பந்தில் ஜோர்டன் அவுட் ஆனார். கடைசி பந்தில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த பந்தில் ரன் ஏதும் எடுக்கப்படவில்லை. இதனால் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    5 போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளனர்.
    மூன்றாவது நடுவர் ஸ்லோ-மோஷனில் ரீப்ளே செய்து பார்த்தபோது, காட்சியை கூர்ந்து கவனித்தால், மாலனின் விரல்களுக்கு இடையில் பந்து தரையைத் தொட்டது தெளிவாக தெரிந்தது.
    அகமதாபாத்:

    இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 4-வது டி20 போட்டி, அகமதாபாத்தில் இன்று நடைபெறுகிறது. முதலில் ஆடிய இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்திருந்தது. அறிமுக வீரர் சூர்யகுமார் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 30 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அவரது அதிரடி தொடர்ந்தால் இந்திய அணி வலுவான ஸ்கோரை எட்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், 31வது பந்தை எதிர்கொண்ட அவர் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார். அவரை அவுட் ஆக்கிய விதம், மூன்றாவது நடுவரின் முடிவு கடும் சர்ச்சைக்குள்ளானது.

    சாம் குர்ரன் வீசிய அந்த பந்தை, சூர்யகுமார் யாதவ் லாவகமாக பவுண்டரிக்கு திருப்பினார். பந்து தரையை தொடும் நிலையில், டேவிட் மலன் டைவ் அடித்து பந்தை பிடித்தார். கள நடுவர் அனந்த பத்மநாபன், அவுட் கொடுத்தார்.  எனினும், இதை உறுதி செய்வதற்கு மூன்றாவது நடுவர் வீரேந்திர சர்மாவுக்கு பரிந்துரை செய்தார். 

    மூன்றாவது நடுவர் பல முறை ஸ்லோ-மோஷனில் ரீப்ளே செய்து பார்த்தார். முன்பகுதியை கூர்ந்து கவனித்தால், மாலனின் விரல்களுக்கு இடையில் பந்து தரையைத் தொட்டது தெளிவாக தெரிந்தது. இருப்பினும், சரியாக புலப்படவில்லை என நினைத்து கள நடுவரின் முடிவையே மூன்றாவது நடுவர் கூற, சூர்யகுமார் யாதவ் ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

    சூர்யகுமார் யாதவுக்கு அவுட் கொடுத்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மூன்றாவது நடுவரின் முடிவை முன்னாள் வீரர்கள், பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் விமர்சித்து, சமூக வலைத்தளங்களில் கண்டித்தனர். 

    சூர்யகுமார் யாதவ் அவுட் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. இருந்தும் இந்த முடிவு எப்படி வழங்கப்படுகிறது? மோசமான முடிவு. மூன்றாவது நடுவர் கண்ணை மூடிக்கொண்டு தீர்ப்பு கூறியிருக்கிறார் என  சரமாரியாக திட்டி தீர்த்தனர். மீம்ஸ்களையும் வெளியிட்டு கண்டனம் தெரிவித்தனர். டுவிட்டரில் #NotOut #SuryakumarYadav ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங் ஆனது.
    முதல் போட்டியிலேயே அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ், அரை சதம் கடந்து அசத்தினார்.
    அகமதாபாத்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்த இங்கிலாந்து அணி, தற்போது 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து மோதும் 4-வது 20 ஓவர் போட்டி அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. 

    இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. காயமடைந்த இஷான் கிஷனுக்கு பதில் சுர்யகுமார் யாதவ் அறிமுகம் செய்யப்பட்டார். இதேபோல் யுஸ்வேந்திர சாகலுக்கு பதில் ராகுல் சாகருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

    துவக்க வீரர் ரோகித் சர்மா 12 ரன்களிலும், கேஎல் ராகுல் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். விராட் கோலி ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். 

    ஆனால், அறிமுக போட்டியிலேயே அசத்திய சூர்யகுமார் யாதவ், பந்துகளை பவுண்டரி மற்றும் சிக்சர்களாக பறக்கவிட்டார். 28 பந்துகளில் அரை சதம் கடந்தார். இதன்மூலம் அறிமுக டி20 போட்டியில் அரை சதம் அடித்த ஐந்தாவது இந்திய வீரர் என்ற பெருமையை யாதவ் பெற்றார். அரை சதம் அடித்தபின்னர் சற்று நிதானமாக ஆடிய யாதவ், 57 ரன்களில் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார். 

    அதன்பின்னர் ரிஷப் பண்ட் 30 ரன்களும், ஹர்திக் பாண்டியா 11 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 37 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 4 ரன்களும் அடிக்க, இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது.
    இங்கிலாந்துக்கு எதிரான 4வது டி20 கிரிக்கெட் போட்டியில், சூர்யகுமார் யாதவ் அறிமுக வீரராக களமிறங்கினார்.
    அகமதாபாத்:

    இந்தியா-இங்கிலாந்து மோதும் 4-வது 20 ஓவர் போட்டி அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. காயமடைந்த இஷான் கிஷனுக்கு பதில் சுர்யகுமார் யாதவ் அறிமுகம் செய்யப்பட்டார். இதேபோல் யுஸ்வேந்திர சாகலுக்கு பதில் ராகுல் சாகருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

    துவக்க வீரர் ரோகித் சர்மா 12 ரன்களிலும், கேஎல் ராகுல் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். விராட் கோலி ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். 

    ஆனால், அறிமுக போட்டியிலேயே அசத்திய சூர்யகுமார் யாதவ், பந்துகளை பவுண்டரி மற்றும் சிக்சர்களாக பறக்கவிட்டார். 28 பந்துகளில் அரை சதம் கடந்தார். இதன்மூலம் அறிமுக டி20 போட்டியில் அரை சதம் அடித்த ஐந்தாவது இந்திய வீரர் என்ற பெருமையை யாதவ் பெற்றார். அரை சதம் அடித்தபின்னர் சற்று நிதானமாக ஆடிய யாதவ், 57 ரன்களில் ஆட்டமிழந்தார். 
    இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் சரிவில் இருந்து மீளும் உத்வேகத்தில் உள்ள இந்திய அணி இன்று (வியாழக்கிழமை) 4-வது ஆட்டத்தில் களம் இறங்குகிறது.
    ஆமதாபாத்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்த இங்கிலாந்து அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது மற்றும் 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்தும், 2-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதையடுத்து தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து மோதும் 4-வது 20 ஓவர் போட்டி ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடக்கிறது.

    ஒரே இடத்தில் 20 ஓவர் தொடர் நடந்த போதிலும் இந்திய அணியால் ஆடுகளத்தன்மையை இன்னும் துல்லியமாக அறிந்து கொள்ள முடியவில்லை. தோல்வியை தழுவிய இரு ஆட்டங்களிலும் ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் சொதப்பியது தான் (3 விக்கெட்டுக்கு 22 ரன், மற்றும் 3-24) வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களின் சாதுர்யமான வேகமும், பவுன்சும் நமது வீரர்களை நெருக்கடிக்குள்ளாக்கியது.

    இந்திய அணியில் கேப்டன் விராட்கோலி, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகிய இருவரின் பேட்டிங் மட்டுமே சீராக உள்ளது. தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் (1, 0, 0) மூன்று ஆட்டங்களிலும் மோசமாக ஆடினார். இதனால் இன்றைய ஆட்டத்தில் அவர் மாற்றப்பட வாய்ப்புள்ளது. ஆனாலும் அவருக்கு ஆதரவாக கேப்டன் விராட் கோலி நிற்கிறார். ‘இரண்டு ஆட்டங்களுக்கு முன்பு நான் கூட நன்றாக ஆடவில்லை. இத்தகைய நிலைமையை சீக்கிரமாகவே மாற்ற முடியும். லோகேஷ் ராகுல் எங்களின் சாம்பியன் கிரிக்கெட் வீரர். கடந்த 2-3 ஆண்டுகளில் அவரது ரன் குவிப்பை பார்த்தால், 20 ஓவர் கிரிக்கெட்டில் மற்றவர்களை காட்டிலும் அனேகமாக அவர் தான் சிறந்தவராக இருப்பார். ரோகித் சர்மாவுடன் டாப் வரிசையில் எங்களது பிரதான பேட்ஸ்மேன்களில் ஒருவராக அவர் இருப்பார். எனவே அவர் பற்றி கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை. 20 ஓவர் கிரிக்கெட்டை பொறுத்தவரை நம்பிக்கையுடன் விளையாடி, நாலைந்து ஷாட்டுகள் ‘கிளிக்’ ஆகி விட்டால் போதும். அதாவது 5-6 பந்துகளை அடிப்பது தான் விஷயமே. அவ்வாறு செய்து விட்டால் இயல்பான ஆட்டம் வெளிப்பட தொடங்கி விடும்’ என்று விராட் கோலி கூறினார். பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோரும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். ‘எந்த ஒரு பேட்ஸ்மேனுக்கும் இது போன்ற தடுமாற்றமான நிலை வரத் தான் செய்யும். 20 ஓவர் கிரிக்கெட்டில் கடந்த ஓராண்டில் எங்களது மிகச்சிறந்த பேட்ஸ்மேன் லோகேஷ் ராகுல் தான். 3 ஆட்டங்களில் சோபிக்கவில்லை என்பதற்காக இந்த உண்மை மாறி விடாது. நிச்சயம் இதில் இருந்து அவர் மீண்டு வருவார்’ என்று ரத்தோர் குறிப்பிட்டார்.

    ஒரு வேளை ராகுலை கழற்றி விட முடிவு செய்தால், அவருக்கு பதிலாக ஷிகர் தவான் அல்லது சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்படலாம். பந்து வீச்சாளர்களில் புவனேஷ்வர்குமார், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ஓரளவு சிக்கனமாக பந்து வீசியிருக்கிறார்கள். சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் ரன்களை வாரி வழங்கியுள்ளார். மறுபடியும் பந்து வீச தொடங்கிய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா 3 ஆட்டங்களில் ஒரு விக்கெட் கூட கைப்பற்றவில்லை. அதனால் பந்துவீச்சு துறையில் ஓரிரு மாற்றங்கள் இருக்கலாம்.

    இங்கிலாந்து அணியை பொறுத்தவரை 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றதன் மூலம் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்தை தக்க வைத்துக் கொண்டது. கடந்த ஆட்டத்தில் இந்தியா நிர்ணயித்த 157 ரன்கள் இலக்கை இங்கிலாந்து 10 பந்துகள் மீதம் வைத்து ஜோஸ் பட்லரின் (52 பந்தில் 83 ரன்) அதிரடியால் சிரமமின்றி எட்டிப்பிடித்தது. இதே ஆட்டத்தில் 40 ரன்கள் எடுத்த ஜானி பேர்ஸ்டோவும் பார்முக்கு திரும்பியுள்ளார். இங்குள்ள ஆடுகளத்தில் பந்து வெகுவாக ‘பவுன்ஸ்’ ஆகிறது. இந்த சூழலை வேகப்பந்து வீச்சாளர்கள் மார்க்வுட்டும், ஜோப்ரா ஆர்ச்சரும் நேர்த்தியாக பயன்படுத்தி இந்திய பேட்ஸ்மேன்களை மிரள வைக்கிறார்கள். இதே உற்சாகத்துடன் இன்றைய ஆட்டத்திலும் தாக்குதல் தொடுப்பார்கள்.

    இந்த தொடரில் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கிறது. மூன்று ஆட்டங்களிலும் ‘டாஸ்’ ஜெயித்து 2-வது பேட்டிங் செய்த அணியே வெற்றி கண்டிருக்கிறது. ஆனால் ‘டாஸ்’ என்ற மாயையை உடைத்தெறிந்து வெற்றி பெறும் வகையில் செயல்பட வேண்டும். அப்போது தான் ஆண்டின் கடைசியில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு சிறந்த முறையில் தயாராக முடியும் என்று இந்திய கேப்டன் கோலி ஏற்கனவே கூறியிருக்கிறார்.

    இந்த ஆட்டத்தில் தோற்றால் தொடரை இழக்க வேண்டியது வரும் என்பதால் இந்திய வீரர்கள் முழுவீச்சில் போராடுவார்கள் என்று நம்பலாம்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் அல்லது ஷிகர் தவான் அல்லது சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், விராட் கோலி (கேப்டன்), ரிஷாப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர், ஹர்திக் பாண்ட்யா, ஷர்துல் தாகூர் அல்லது நவ்தீப் சைனி அல்லது தீபக் சாஹர், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர்குமார், யுஸ்வேந்திர சாஹல் அல்லது அக்‌ஷர் பட்டேல்.

    இங்கிலாந்து: ஜாசன் ராய், ஜோஸ் பட்லர், டேவிட் மலான், பேர்ஸ்டோ, மோர்கன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், சாம் கர்ரன், கிறிஸ் ஜோர்டான், ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மார்க்வுட்.

    இரவு 7 மணிக்கு தொடங்கும் இ்ந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
    இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.
    புதுடெல்லி:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது ஆட்டத்தில் 73 ரன்கள் மற்றும் 3-வது ஆட்டத்தில் 77 ரன்கள் விளாசிய விராட் கோலி, டி-20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி 5-வது இடத்தில் உள்ளார்.

    ஏற்கனவே ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடம், டெஸ்ட் போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசையில் 5-வது இடம் பிடித்துள்ள விராட் கோலி, தற்போது டி-20 கிரிக்கெட்டிலும் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    இதன்மூலம் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் டாப்-5 தரவரிசைக்குள் இடம்பிடித்திருக்கும் ஒரே வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.

    மேலும், முதல் மூன்று ஆட்டங்களில் மொத்தமாக 1 ரன் மட்டுமே எடுத்திருந்தாலும், கேஎல் ராகுல் தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறார். ஷ்ரேயஸ் ஐயர் 32 இடங்கள் முன்னேறி 31-வது இடத்தில் உள்ளார். ரிஷப் பந்த் 80-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    பந்துவீச்சாளர்களைப் பொறுத்தவரை வாஷிங்டன் சுந்தர் 2 இடங்கள் முன்னேறி 11-வது இடத்தைப் பிடித்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர்கள் ஷர்துல் தாக்குர் 27-வது இடத்துக்கும், புவனேஷ்வர் குமார் 45-வது இடத்துக்கும் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
    ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் நேற்று தொடங்கியது. இதில் இந்தியாவின் சிந்து, சாய்னா உள்பட முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
    பர்மிங்காம்:

    நூற்றாண்டு காலம் பழமைவாய்ந்த ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காமில் நேற்று தொடங்கியது. மொத்தம் ரூ.6 கோடி பரிசுத்தொகைக்கான இந்த போட்டி வரும் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் உலக சாம்பியனும், ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவருமான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தனது முதல் சுற்றில் மலேசியாவின் சோனியா செக்கை சந்தித்தார். 

    ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய சிந்து முதல் செட்டை 21-11 என கைப்பற்றினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய சிந்து இரண்டாவது செட்டை 21-17 என கைப்பற்றி அசத்தினார்.

    இறுதியில், பிவி சிந்து 21-11, 21-17 என்ற நேர் செட்களில் சோனியாவை வென்றார். இந்த ஆட்டம் சுமார் 39 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
    டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
    அபுதாபி:

    ஆப்கானிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டி மற்றும் மூன்று டி-20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர் ஆட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்டில் ஜிம்பாப்வே அணி 10 விக்கெட் வித்தியாசத்திலும், 2வது டெஸ்டில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தன.

    இதைத் தொடர்ந்து இந்த இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 கிரிக்கெட் போட்டி அபுதாபியில் உள்ள சேக் சாயீத் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய குர்பாஸ் மற்றும் கரீம் ஜனத் ஆப்கானிஸ்தானுக்கு நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். கரீம் ஜனத் 26 ரன்களில் ஆட்டமிழந்ததையடுத்து, கேப்டன் அஸ்கர் ஆப்கானுடன், குர்பாஸ் ஜோடி சேர்ந்தார்.

    குர்பாஸ் 45 பந்துகளில் 87 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மறுபுறம் ஆப்கான் 38 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்து 19-வது ஓவரில் ஆட்டமிழந்தார். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து 199 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் தினாஷே கமுன்ஹுகாம்வே அரை சதத்தை நெருங்கிய நிலையில், 44 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் அடுத்து வந்தவர்களில் யாரும் நிலைத்து நின்று ஆடாததால் அணியின் ரன் ரேட் வெகுவாக குறைந்தது.

    இதனால் ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது ஒரு நாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.
    லக்னோ:

    இந்தியா-தென்ஆப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் 4 போட்டிகளில் ஏற்கனவே தென்ஆப்பிரிக்கா 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி லக்னோவில் இன்று காலை 9 மணிக்கு துவங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

    தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ப்ரியா புனியா மற்றும் ஸ்மிரிதி மந்தனா இருவரும் தலா 18 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஹர்மன்ப்ரீத் கவுர் 55 பந்துகளில் 30 ரன்கள் அடித்த நிலையில், காயம் காரணமாக வெளியேறினார்.

    கேப்டன் மிதாலி ராஜ் அரைசதத்தைக் கடந்து நம்பிக்கையளித்து வந்தார். எனினும் மற்ற வீராங்கனைகளிடமிருந்து ஒத்துழைப்பு இல்லாததால் இந்திய அணி 49.3 ஓவர்களில் 188 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மிதாலி ராஜ்(79 ரன்கள்) இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து 189 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தென்ஆப்பிரிக்க அணி களமிறங்கியது. தொடக்கத்திலேயே தென்ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகளை இழந்து சற்று தடுமாறியது. இருப்பினும் மிக்னான் டு பிரீஸ்(57)-அனி போஷ்(58) ஜோடி நிலைத்து நிதானமாக ஆடி தென்ஆப்பிரிக்க அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தது.

    இறுதியில் தென்ஆப்பிரிக்க அணி 48.2 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை ஏற்கெனவே வென்ற தென் ஆப்பிரிக்க, இன்றைய வெற்றியின் மூலம் 4-1 என்ற கணக்கில் கோப்பையை கைப்பற்றியது.
    ஒரு நாள் போட்டி, 20 ஓவரில் நான் இடம் பெறாதது குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்புகிறார்கள். நான் அதைப்பற்றி கவலைப்பட வில்லை.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் ஆர்.அஸ்வின். சென்னையை சேர்ந்த இவர் தற்போது டெஸ்ட் அணியில் மட்டுமே விளையாடி வருகிறார்.

    34 வயதான அஸ்வின் 2010-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆனார். அவர் 78 டெஸ்டில் விளையாடி 409 விக்கெட் கைப்பற்றினார். குறைந்த டெஸ்டில் 400 விக்கெட்டை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை அவர் சமீபத்தில் நிகழ்த்தி இருந்தார்.

    அஸ்வின் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் மிக அபாரமாக பந்து வீசினார். 4 டெஸ்டில் அவர் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி முத்திரை பதித்தார்.

    அஸ்வின் கடைசியாக 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவரில் விளையாடினார். அதன்பிறகு அவர் இந்த போட்டிகளில் ஆடவில்லை.

    டெஸ்ட் பந்து வீச்சாளர் என்று முத்திரை குத்தப்பட்டு ஒரு நாள் போட்டி, 20 ஓவர் ஆட்டத்திற்கான இந்திய அணியில் இருந்து அவர் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டார்.

    கேப்டன் வீராட் கோலி சமீபத்தில் அளித்த பேட்டியில், அஸ்வின் ஒரு நாள் போட்டி, 20 ஓவர் அணிக்கு திரும்ப வாய்ப்பு இல்லை. சுழற்பந்து ஆள் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் சிறப்பான நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.

    இந்த நிலையில் வாய்ப்பு வழங்கினால் ஒரு நாள் போட்டி, 20 ஓவர் ஆட்டத்தில் சாதித்து காட்டுவேன் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.

    ஒரு நாள் போட்டி, 20 ஓவரில் என்னால் சிறப்பாக செயல்பட முடியும், வாய்ப்பு வழங்கினால் ஆட்டத்தின் தன்மையை என்னால் மாற்றிக்காட்ட முடியும்.

    ஒரு நாள் போட்டி, 20 ஓவரில் நான் இடம் பெறாதது குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்புகிறார்கள். நான் அதைப்பற்றி கவலைப்பட வில்லை.

    இவ்வாறு அஸ்வின் கூறினார்.

    அஸ்வின் 111 ஒரு நாள் போட்டியில் விளையாடி 150 விக்கெட்டும், 46 இருபது ஓவர் ஆட்டத்தில் 52 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளார்.

    ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்குகிறது. இந்தியாவின் சிந்து, சாய்னா உள்பட முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
    பர்மிங்காம்:

    நூற்றாண்டு காலம் பழமைவாய்ந்த ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காமில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. மொத்தம் ரூ.6 கோடி பரிசுத்தொகைக்கான இந்த போட்டி வருகிற 21-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    கடந்த வாரம் நடந்த சுவிட்சர்லாந்து ஓபனில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரின் (ஸ்பெயின்) காயம் காரணமாக இந்த போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். கொரோனா பிரச்சினை காரணமாகவும், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்றாக இதன் முடிவு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்பதாலும் சீனா, கொரியா, சீன தைபேவை சேர்ந்த நட்சத்திர வீரர், வீராங்கனைகள் பலரும் இந்த போட்டியில் இருந்து ஒதுங்கி உள்ளனர்.

    இருப்பினும் கவுரவமிக்க இந்த போட்டியில் இந்தியா சார்பில் 19 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். உலக சாம்பியனும், ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவருமான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தனது முதல் சுற்றில் மலேசியாவின் சோனியா செக்கை சந்திக்கிறார். சுவிட்சர்லாந்து ஓபன் இறுதி ஆட்டத்தில் ஏமாற்றம் அளித்த சிந்து இந்த போட்டியில் சாதிக்க நல்ல வாய்ப்பு உருவாகியுள்ளது. ஆல் இங்கிலாந்து பேட்மிண்டனில் அரைஇறுதிக்கு மேல் தாண்டாத சிந்து இந்த முறை வாகை சூடுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஒகுஹரா (ஜப்பான்), யமாகுச்சி (ஜப்பான்), ராட்சனோக் இன்டானோன் (இந்தோனேஷியா) உள்ளிட்டோர் அவருக்கு கடும் சவாலாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    2015-ம் ஆண்டில் 2-வது இடத்தை பிடித்தவரான முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான இந்தியாவின் சாய்னா நேவால் முதல் சுற்றில் டென்மார்க்கின் மியா பிலிச்பெல்டுடன் மோதுகிறார். கடந்த 2 ஆண்டுகளில் சாய்னா 2 போட்டிகளில் மட்டுமே கால்இறுதியை எட்டி இருக்கிறார். அதனால் இந்த சாம்பியன்ஷிப்பில் அவரது தாக்கம் பெரிய அளவில் இருக்குமா? என்பது கேள்விக்குறி தான்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஸ்ரீகாந்த் முதல் சுற்றில் இந்தோனேஷியாவின் டாமி சுஜியார்டோவை எதிர்கொள்கிறார். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீரரான சாய் பிரனீத் தனது முதல் சுற்றில் பிரான்ஸ் வீரர் டோமா ஜூனியரை சந்திக்கிறார்.

    காமன்வெல்த் விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரரான காஷ்யப்புக்கு தொடக்க சுற்றிலேயே கடும் சோதனை காத்து இருக்கிறது. அவர் நம்பர் ஒன் வீரரும், உலக சாம்பியனுமான ஜப்பானின் கென்டோ மோமோட்டோவுடன் மல்லுக்கட்டுகிறார். கடந்த வருடம் நடந்த கார் விபத்தில் சிக்கி கண்ணில் அறுவை சிகிச்சை செய்துள்ள மோமோட்டோ அதன் பிறகு களம் காணும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும்.

    இந்த போட்டி தொடரில் இதுவரை இந்தியர்களில் பிரகாஷ் படுகோனே (1980), கோபிசந்த் (2001) ஆகியோர் மட்டுமே சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
    ×