என் மலர்
விளையாட்டு

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. பிரிஸ்டலில் நடந்த அந்த நாட்டு அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி போராடி ‘டிரா’ செய்தது. அறிமுக வீராங்கனையாக களம் இறங்கி இரு இன்னிங்சிலும் அரைசதம் விளாசிய (96 மற்றும் 63 ரன்) இந்திய இளம் புயல் ஷபாலி வர்மா ஆட்டநாயகி விருது பெற்றார்.
அடுத்து இந்தியா - இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. இதன் முதலாவது ஆட்டம் பிரிஸ்டலில் இன்று நடக்கிறது. டெஸ்ட் போட்டியை தொடர்ந்து சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டிலும் ஷபாலி வர்மா அறிமுக வீராங்கனையாக அடியெடுத்து வைக்கிறார்.

ஹீதர் நைட் தலைமையிலான உலக சாம்பியனான இங்கிலாந்து வலுவான அணிகளில் ஒன்றாக திகழ்கிறது. டாமி பீமோன்ட், நாட் சிவெர், அமே ேஜான்ஸ், அன்யா ஸ்ருப்சோலே, சோபி எக்லெஸ்டோன், கேத்தரின் புருன்ட் என்று திறமையான வீராங்கனைகள் நிறைய பேர் அந்த அணியில் உள்ளனர். அதுவும் உள்ளூர் சூழல் அவர்களுக்கு சாதகமாக இருக்கும்.
இவ்விரு அணிகளும் இதுவரை 69 ஒரு நாள் போட்டிகளில் மோதியுள்ளன. அதில் 30-ல் இந்தியாவும், 37-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டத்தில் முடிவில்லை. இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி டென்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


வெஸ்ட் இண்டீஸ்:
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் டெஸ்டில் 158 ரன் வித்தியாசத்திலும், 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 63 ரன் வித்தியாசத்திலும் அந்த அணி வெற்றி பெற்று இருந்தது.
வெஸ்ட் இண்டீஸ்-தென் ஆப்பிரிக்கா இடையேயான ஐந்து 20 ஓவர் போட்டி தொடரில் முதல் ஆட்டம் இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. டெஸ்ட் தொடரை இழந்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர் தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட இண்டீஸ் அணி 20 ஓவர் தொடரில் சிறப்பாக விளையாடக்கூடியது. இதனால் அந்த அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது.
இரு அணியிலும் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்கள் இருப்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி:
மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோற்றது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.
வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை வீழ்த்தி முதலாவது ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான 11 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள் தேர்வு குறித்து விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.
கூடுதல் பேட்ஸ்மேனுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் 2 சுழற்பந்து வீரர்களை தேர்வு செய்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும் ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக பந்து வீசிய வேகப்பந்து வீரர் முகமது சிராஜூக்கு வாய்ப்பு கொடுக்காதது குறித்து விமர்சனம் எழுந்துள்ளது.
இந்த நிலையில் உலக டெஸ்ட் இறுதி போட்டியில் ஜடேஜாவை தேர்வு செய்தது மிகப்பெரிய தவறு என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும், டெலிவிஷன் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சாடியுள்ளார்.
வானிலை மாற்றம் காரணமாக 2 சுழற்பந்து வீச்சாளர்களை இந்திய அணி தேர்வு செய்தது விவாதத்துக்குரிய முடிவாகும். ஜடேஜாவை சுழற்பந்து வீச்சுக்காக அல்லாமல் பேட்டிங்குக்காக தேர்வு செய்துள்ளார்கள். பேட்டிங்குக்காக ஜடேஜாவை தேர்வு செய்தது மிகப்பெரிய தவறாகும். இதை நான் எப்போதுமே எதிர்த்து வருகிறேன்.
சிறப்பு தகுதி கொண்ட வீரர்களை அணியில் தேர்வு செய்ய வேண்டும். ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்திருந்தால், அஸ்வின், ஜடேஜா ஆகிய இருவரையும் தேர்வு செய்தது சரியாக இருந்திருக்கும்.
ஆனால் ஜடேஜாவை அவருடைய பேட்டிங் திறமைக்காக தேர்வு செய்துள்ளார்கள். இது பெரும்பாலும் விளைவுகளையே உண்டாக்கும். விகாரியை தேர்வு செய்திருந்தால், இந்திய அணிக்கு கூடுதலாக ரன் கிடைத்திருக்கும். 170 ரன்கள் என்பது 220 அல்லது 230 ரன்களாக மாறி இருக்கலாம்.
கூடுதல் திறமை உள்ளதற்காக ஒருவருக்கு வாய்ப்பு கொடுப்பதை இனிமேலும் இந்தியா செய்யாது என்று நினைக்கிறேன். முக்கியமான ஆட்டங்களில் திறமை எப்போதாவதுதான் பயன் தரும்.
இவ்வாறு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.
லண்டன்:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் தோல்வி குறித்து கேப்டன் விராட் கோலி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது ‘உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிக்க இனி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடராக இறுதி ஆட்டம் நடத்த வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் கோலி கூறும்போது, அடிப்படையில் யார் சிறந்த டெஸ்ட் அணி என்பதை ஒரே ஒரு போட்டியை வைத்து தீர்மானிப்பதை நான் முழுமையாக ஏற்கவில்லை என்றார்.
உலக டெஸ்ட் இறுதிப்போட்டி தொடங்குவதற்கு முன்பே இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான வெற்றியாளரை ஒரே ஒரு டெஸ்ட் போட்டியை நடத்தி தீர்மானிப்பது சரியல்ல. 3 போட்டிகளாவது ஆட வேண்டும் என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் 3 இறுதிப்போட்டி என்ற விராட் கோலியின் யோசனையை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஏற்க மறுத்துள்ளார்.
அவரது கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக வாகன் கூறியதாவது:-
ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி குறித்து திட்டமிட எங்கே இடமிருக்கிறது. 3 டெஸ்ட் போட்டிகளுக்காக ஐ.பி.எல். தொடரை 2 வாரங்கள் குறைத்து கொள்வார்களா? என்பது சந்தேகமே.
இறுதி போட்டி என்றாலே ஒரே ஒரு ஆட்டம்தான். அந்த ஒரு போட்டியில் அணிகள் திறமையாக விளையாட வேண்டும். இது வீரர்களுக்கு தெரியும். அதுதான் அவர்களுக்கு சிறந்த வீரர்கள் என்பதை காட்டுகிறது.
இவ்வாறு வாகன் கூறியுள்ளார்.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டு வீரர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. திமுக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.
* விளையாட்டுக்கு தொடர்ந்து ஊக்கம் அளித்தால் அமெரிக்கா போன்ற நாடுகளை பின்னுக்கு தள்ளும் நாட்கள் தொலைவில் இல்லை.

* ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு அரசு சார்பில் ரூ.3 கோடி வழங்கப்படும்.
* வெள்ளி பதக்கம் வென்றால் ரூ.2 கோடியும், வெண்கல பதக்கம் வென்றால் ரூ.1 கோடியும் வழங்கப்படும் என்று கூறினார்.






