என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த மாதம் 23-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளது.
    டோக்கியோ:

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டித் தொடர் தற்போது தொடங்க உள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இன்னும் நீங்காத நிலையில் போட்டிகள் நடைபெற உள்ளது. 

    இதனால், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் 4 நாட்களில் இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் பெற்ற பிறகே ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் இடத்திற்குச் செல்ல அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    கொரோனா வைரஸ்

    இந்நிலையில், டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில்  இந்தியா உள்ளிட்ட  சில நாடுகளில் இருந்து ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள வரும் தடகள வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது.

    அதாவது, ஒரு வாரத்திற்கு தினமும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் நெகட்டிவ் என பெற்ற பிறகே ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. 
    இங்கிலாந்து மற்றும் இந்திய பெண்கள் அணிகளுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது.
    பிரிஸ்டோல்:

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி பிரிஸ்டோலில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற கேப்டன் ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான மந்தனா 10 ரன்னிலும், ஷபாலி 15 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து ஆடிய பூனம் 4 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் கேப்டன் மிதாலி ராஜ் நிலைத்து நின்று ஆடினார்.  பொறுப்புடன் ஆடிய அவர் அரை சதம் கடந்தார். 

    இங்கிலாந்தில் 50 ரன்களுக்கு மேல் அவர் எடுத்துள்ளது இது 13வது முறையாகும். அவருக்கு முன் சார்லட் எட்வார்ட்ஸ் 22 அரை சதங்கள் விளாசி முதல் இடத்தில் உள்ளார்.

    மிதாலி ராஜ் 72 ரன்னில் வெளியேறினார். அதன்பின் ஹர்மன்பிரீத் (1), தீப்தி (30), பூஜா (15) தன்யா (7) ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், இந்திய பெண்கள் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 201 ரன்கள் எடுத்திருந்தது.

    அரை சதம் கடந்த மிதாலி ராஜ்

    இங்கிலாந்து சார்பில் எக்ளெஸ்டோன் 3 விக்கெட்டும், கேத்தரின், ஆன்யா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து விளையாடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் லாரன் 16 ரன்னில் வெளியேறினார். கேப்டன் ஹீதர் நைட் 18 ரன்னில் ஆட்டமிழந்தார்.  

    மற்றொரு தொடக்க ஆட்ட வீராங்கனையான டேமி சிறப்பாக ஆடி அரை சதமடித்தார். அவருக்கு ஸ்சிவெர் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இருவரும் இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

    இறுதியில், இங்கிலாந்து அணி 34.5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டேமி 87 ரன்களும், ஸ்சிவெர் 74 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். 

    இதன்மூலம் ஒருநாள் தொடரில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகி விருது டேமி பியூமெண்டுக்கு அளிக்கப்பட்டது.
    ஜப்பானில் அடுத்த மாதம் தொடங்கும் டோக்கியோ ஒலிம்பிக்கில் அமெரிக்கா அணியில் இடம்பெற மாட்டேன் என டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
    அமெரிக்காவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ். பெண்கள் ஒற்றையர் பிரிவில் 23 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற செரீனா, இன்னும் ஒரு பட்டம் வென்றால் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வரலாற்றில் அதிக பட்டம் வென்றவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் மார்கரெட் சாதனையை சமன் செய்து விடுவார்.

    பிரெஞ்ச் ஓபனில் காலிறுதிக்கு முந்தைய சுற்றோடு வெளியேறினார். நாளை தொடங்கும் விம்பிள்டன் டென்னிஸில் களம் இறங்க இருக்கிறார். இதில் எப்படியும் சாம்பியன் பட்டத்தை வென்றுவிட வேண்டும் என்ற தீர்மானத்தோடு இருக்கிறார்.

    இந்த நிலையில் ஜப்பான் டோக்கியோ ஒலிம்பிக்கில் அமெரிக்கா அணியில் இடம்பெற மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
    சைக்கிள் பந்தையத்தின்போது திடீரென ரசிகர்கள் ஓடும்பாதைக்குகள் நுழைய போட்டியாளர்கள் வரிசையாக கீழே விழுந்து காயத்துடன் உயிர் பிழைத்த சம்பவம் பிரான்ஸில் நிகழ்ந்துள்ளது.
    பிரான்ஸ் நாட்டில் 45 கி.மீட்டர் தூரத்தை கடக்கும் சைக்கிள் போட்டி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான வீரர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் போட்டி தொடங்கியதும் சைக்கிளை ஓட்டி வேகமாக செல்ல முயன்றனர்.

    இந்த போட்டியை பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஏராளமான ரசிகர்கள், ரசிகைகள் கையில் பதாதைகள் ஏந்தி நின்றனர். டி.வி.யில் தங்களுடைய முகம் தெரிய வேண்டும் என்பதற்கான திடீரென ஓடும்பாதையின் அருகில் வந்துவிட்டனர். அப்படி வந்த ரசிகர் ஒருவர் டோனி மார்ட்டின் என்ற வீரர் சைக்களில் மீது மோதினார். இதனால் டோனி மார்ட்டின் தடுமாறி கீழே விழுந்தார். அதனைத் தொடர்ந்து வரிசையாக ஏராளமான வீரர்கள் சைக்கிளுடன் கீழே விழுந்தனர்.

    இதில் ஏராளமான வீரர்களுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. மேலும், சில வீரர்களும் எழும்பு முறிவும் ஏற்பட்டது. ரசிகர்களால் வீரர்கள் படுகாயம் அடையும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
    ஐபிஎல் 2021 2-ம் பகுதியில் பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கை வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    இந்தியாவில் ஐபிஎல் 2021 சீசன் நடைபெற்றது. சுமார் ஒருமாத ஆட்டத்திற்குப்பின் வீரர்களை கொரோனா வைரஸ் தொற்று தாக்கியதால், போட்டி ரத்து செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.

    மீதமுள்ள போட்டிகள் செப்டம்பர்- அக்டோபரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. சர்வதேச போட்டிகள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்று, உலக கோப்பைக்கு தயாராகுதல் போன்ற காரணத்தினால் வெளிநாட்டைச் சேர்ந்த சில வீரர்கள் கலந்து கொள்ள வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.

    இதற்கிடையில் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டி தொடர் ஜூலை 13-ந்தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், இலங்கை வீரர்கள் சில ஐபிஎல் கிரிக்கெட்டில் மாற்று வீரராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.

    தனுஷ்கா குணதிலகா

    இலங்கை வீரர்கள் சமீப ஆண்டுகளாக ஐபிஎல் கிரிக்கெட்டில் மிகப்பெரிய அளவில் பங்கேற்கவில்லை. கடந்த ஆண்டு வேகப்பந்து வீச்சாளர் உதானா இடம் பிடித்திருந்தார். சிறப்பாக பந்து வீசினாலும், ரன்கள் அதிக அளவில் விட்டுக்கொடுத்தார்

    இந்த வருடம் நடைபெற்ற முதல் பகுதி ஆட்டத்தில் இலங்கையை சேர்ந்த ஒரு வீரர்கள் கூட இடம் பெறவில்லை. இடது கை பேட்ஸ்மேன் குசால் பெரேரா, தனுஷ்கா குணதிலகா, வனிந்து ஹசரங்கா, துஷ்மந்தா சமீரா ஆகியோர் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது.
    உலக கோப்பை வில்வித்தையில் கலப்பு பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி- அட்டானு தாஸ் நெதர்லாந்து ஜோடியை வீழ்த்தி தங்க பதக்கம் வென்றது.
    பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உலக கோப்பை வில்வித்தை ‘ஸ்டேஜ்–3’ போட்டி நடக்கிறது. கலப்பு இரட்டையர் ‘ரிகர்வ்’ பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி- அட்டானு தாஸ் ஜோடி இறுதி போட்டியில் நெதர்லாந்து ஜோடியை எதிர்கொண்டது. இதில் தீபிகா குமாரி- அட்டானு தாஸ் 5-3 என வெற்றி பெற்று தங்க பதக்கம் வென்றனர்.

    இந்திய பெண்கள் அணி

    பெண்களுக்கான அணியில் தீபிகா குமாரி, அங்கிதா பகத், கோமலிகா பரி ஆகியோர் ரிகர்வ் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றனர். மெக்சிகோ அணியை 5-1 எனத் தோற்கடித்தது.

    ஏற்கனவே, ஆண்களுக்கான தனிநபர் ‘காம்பவுண்டு’ பிரிவில் அபிஷேக் வர்மா தங்கப்பதக்கம் வென்றிருந்தார்.
    முன்னணி வீரர்களான ரபெல் நடால் (ஸ்பெயின்), டொமினிக் தீம் ஆகியோர் இந்த போட்டியில் இருந்து விலகி உள்ளனர். வீராங்கனைகளில் நடப்பு சாம்பியனான ஷிமோனா ஹலேப் காயம் காரணமாக ஆடவில்லை.

    லண்டன்:

    உலகின் மிகவும் பழமையான கிராண்ட் சிலாம் டென்னிஸ் போட்டியான விம்பிள்டன் போட்டி கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

    இந்த ஆண்டுக்கான 3-வது கிராண்ட்சிலாம் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் லண்டன் நகரில் நாளை தொடங்குகிறது. ஜூலை 11-ந்தேதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது.

    முன்னணி வீரர்களான ரபெல் நடால் (ஸ்பெயின்), டொமினிக் தீம் (ஆஸ்திரியா) ஆகியோர் இந்த போட்டியில் இருந்து விலகி உள்ளனர். வீராங்கனைகளில் நடப்பு சாம்பியனான ஷிமோனா ஹலேப் காயம் காரணமாக ஆடவில்லை.

    நடப்பு சாம்பியனான ஜோகோவிச் (செக் குடியரசு) இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன் பட்டங்களை கைப்பற்றினார். ஒட்டுமொத்தமாக அவர் 19 கிராண்ட் சிலாம் பட்டம் வென்றுள்ளார்.

    ஜோகோவிச் 20-வது பட்டம் வென்று ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), நடால் ஆகியோரின் சாதனையை சமன் செய்வாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படு கிறது. இருவரும் அதிக கிராண்ட் சிலாம் பட்டம் வென்றவர்களில் முதல் இடத்தில் உள்ளனர்.

    கிராண்ட் சிலாம் வென்றதில் 2-வது இடத்தில் இருக்கும் ஜோகோவிச் தற்போது உலகின் நம்பர் ஒன் வீரராக திகழ்கிறார். விம்பிள்டன் போட்டியும் அவருக்கு சாதகமாக அமைய வாய்ப்பு இருக்கிறது.

    பெடரர், சிட்சிபாஸ், மெட்வதேவ் ஆகியோர் ஜோகோவிச்சுக்கு சவால் கொடுப்பார்களா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பெண்கள் பிரிவில் செரீனா வில்லியம்ஸ், ஆஸ்லிபார்டி, சபலென்கோ, சோபியா கெனின் ஆகியோர் பட்டம் பெறுவதற்கு கடுமையாக போராடுவார்கள்.

    நம்பர்-1 வீரர் என்ற அந்தஸ்துடன் களமிறங்கும் அமித் பங்கால், காலிறுதி வரை எந்தவொரு வலுவான சவாலையும் எதிர்கொள்ள வாய்ப்பில்லை.
    புதுடெல்லி:

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23ம் தேதி ஒலிம்பிக் போட்டி தொடங்கிறது. குத்துச்சண்டை போட்டிகள் ஜூலை 24ம்தேதி முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில், இந்தியா சார்பில் 9 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இவர்களில் ஆசிய சாம்பியனும், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவருமான அமித் பங்கால், உலகின் நம்பர்-1 வீரர் என்ற அந்தஸ்துடன் போட்டியில் களமிறங்குகிறார். இவர் ஆடவருக்கான பிளைவெயிட் 52 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்க உள்ளார்.

    அமித் பங்கால் தவிர, பிரான்சின் பிலால் பென்னாமா, அல்ஜீரியாவின் முகமது பிலிசிஇ சினாவின் ஹூ ஜியாங்குவான், உஸ்பெகிஸ்தான் வீரர் ஷகோபிதின் ஜாய்ரோவ் ஆகியோர் டாப்-5 இடங்களில் உள்ளனர். 

    இவர்களில், பென்னாமா, ஜியாங்குவானை தலா ஒரு முறை அமித் பங்கால் வீழ்த்தி உள்ளார். ஜாய்ரோவுடன் மோதிய 3 போட்டிகளிலும் பங்கால் தோல்வி அடைந்துள்ளார். 

    நம்பர்-1 என்ற தரவரிசையானது, பங்காலுக்கு ஒலிம்பிக்கில் சாதகமான சூழ்நிலையை உருவாக்கும். காலிறுதி வரை அவர் எந்தவொரு வலுவான சவாலையும் எதிர்கொள்ள வாய்ப்பில்லை. தரவரிசையில் முதல் எட்டு இடங்களில் உள்ள வீரர்கள், காலிறுதிக்கு முன்பு நேருக்குநேர் மோதமாட்டார்கள். 
    டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் நீச்சல் வீரர் சாஜன் பிரகாஷ் ஆவார். 27 வயதான அவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.

    புதுடெல்லி:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக்போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை நடக்கிறது.

    ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் வில்வித்தை, தடகளம், பேட்மின்டன், குத்துச்சண்டை, குதிரையேற்றம், வாள்வீச்சு, ஆக்கி, ஜிம்னாஸ்டிக், கோல்ப், ஜூடோ, துடுப்பு படகு, பாய்மர படகு, துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், பளு தூக்குதல், மல்யுத்தம் ஆகிய விளையாட்டுகளில் இருந்து 58 வீரர்களும், 48 வீராங்கனைகளும் ஆக மொத்தம் 106 பேர் தகுதி பெற்றிருந்தனர்.

    இந்த நிலையில் நீச்சல் போட்டியில் இருந்து ஒருவர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதன் மூலம் இந்தியாவின் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது.

    இத்தாலியின் ரோம் நகரில் நடந்த சர்வதேச நீச்சல் போட்டியில் இந்திய வீரர் சாஜன் பிரகாஷ் 200 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் ஒரு நிமிடம் 56.38 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்தார். இதன் மூலம் அவர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.

    ஒலிம்பிக்குக்கு நுழைய ஒரு நிமிடம் 56.48 வினாடிகளில் கடக்க வேண்டும். சாஜன் பிரகாஷ் அந்த இலக்குக்கு முன்பே தொட்டு ஒலிம்பிக் வாய்ப்பை பெற்றார்.

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் நீச்சல் வீரர் சாஜன் பிரகாஷ் ஆவார். 27 வயதான அவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.

    யூரோ கோப்பை கால்பந்தில் வேல்ஸ் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுத்திக்கு முன்னேறியது டென்மார்க் அணி.
    ஆம்ஸ்டர்டாம்:

    ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் ஆம்ஸ்டர்டாமில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் டென்மார்க் அணி, வேல்சை எதிர்கொண்டது.

    ஆட்டத்தின் 27-வது நிமிடத்தில் சக வீரர் டாம்ஸ் கார்டு தட்டிக்கொடுத்த பந்தை டென்மார்க்கின் கேஸ்பர் டோல்பெர்க் கோல் அடித்து அதிர்ச்சி அளித்தார்.

    பிற்பாதியில் 48-வது நிமிடத்தில் டென்மார்க் வீரர் டோல்பெர்க் மீண்டும் ஒரு கோல் அடித்தார். கடைசி கட்டத்தில் டென்மார்க்கின் ஜோகிம் மாலே 88-வது நிமிடத்திலும், பிராத்வெயிட் 90-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.

    இறுதியில், டென்மார்க் 4-0 என்ற கோல் கணக்கில் வேல்சை பந்தாடி காலிறுதிக்குள் நுழைந்தது.

    காலிறுதிக்குள் நுழைந்த இத்தாலி அணி

    இன்று அதிகாலையில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் இத்தாலி, ஆஸ்திரியா அணிகள் மோதின. வழக்கமான நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

    ஆட்டத்தின் 95வது நிமிடம் மற்றும் 105-வது நிமிடத்தில் இத்தாலி அணி தலா ஒரு கோல் அடித்தது. ஆஸ்திரியா அணி 114வது நிமிடத்தில் ஒரு கோல் மட்டுமே அடித்தது.

    இறுதியில், இத்தாலி அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
    நட்சத்திர வீரர் ரொனால்டோவின் கோல் வேட்டை இன்றைய ஆட்டத்திலும் தொடருமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.
    16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) தொடரில் லீக் சுற்று நிறைவடைந்து தற்போது 2-வது சுற்று போட்டிகள் (நாக்-அவுட்) தொடங்கிவிட்டன.

    இதில் இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு ஸ்பெயினின் செவில்லி நகரில் நடக்கும் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் போர்ச்சுகல் அணியும், ‘நம்பர் ஒன்’ அணியான பெல்ஜியமும் மல்லுகட்டுகின்றன.

    பெல்ஜியம் லீக் சுற்றில் ரஷியா, டென்மார்க், பின்லாந்து ஆகிய அணிகளை துவம்சம் செய்து 3 வெற்றிகளுடன் 2-வது சுற்றுக்கு வந்துள்ளது. பலமான அணியாக உருவெடுத்துள்ள பெல்ஜியம் இதுவரை உலக கோப்பை மற்றும் யூரோ கோப்பை எதையும் வென்றதில்லை. இந்த முறை அந்த சோகத்துக்கு விடைகொடுக்கும் முனைப்புடன் உள்ளது. சிறிய வாய்ப்பு கிடைத்தாலும் அதை கோலாக்கும் சாமர்த்தியசாலியான ரோம்லு லுகாகு (3 கோல்), ஈடன் ஹசார்ட், கெவின் டி புருன், ஆக்சல் விட்செல் ஆகியோர் அந்த அணியின் நட்சத்திர வீரர்களாக வலம் வருகிறார்கள்.

    உலக தரவரிசையில் 5-து இடம் வகிக்கும் போர்ச்சுகல் அணி லீக் சுற்றில் ‘குரூப் ஆப் டெத்’ எனப்படும் கடின பிரிவில் (எப் பிரிவு) இடம் பிடித்திருந்தது. ஹங்கேரியை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்த போர்ச்சுகல் அதன் பிறகு ஜெர்மனியிடம் 2-4 என்ற கோல் கணக்கில் அடிவாங்கியது. உலக சாம்பியன் பிரான்சுக்கு எதிரான கடைசி லீக்கில் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்து தனது பிரிவில் 4 புள்ளியுடன் 3-வது இடத்தை பிடித்து அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைத்துள்ளது.

    கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டாரான போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ அபாரமான பார்மில் உள்ளார். நடப்பு தொடரில் 5 கோல்கள் அடித்து முதலிடத்தில் உள்ள ரொனால்டோவுக்கு கோல் வேட்கை மட்டும் இன்னும் தணியவில்லை. இன்றைய ஆட்டத்தில் ஒரு கோல் திணித்தால் ஒட்டுமொத்த சர்வதேச போட்டிகளில் அதிக கோல்கள் அடித்தவரான ஈரானின் அலி டாயின் (109 கோல்) சாதனையை முறியடித்து விடுவார். அவருக்கு பெப்பே, ரபெல் குயரீரோ, பெர்னர்டோ சில்வா உள்ளிட்டோர் பக்கபலமாக இருக்கிறார்கள்.

    மொத்தத்தில் சரிசம பலத்துடன் இவ்விரு அணிகளும் வரிந்து கட்டுவதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. வெற்றி பெறும் அணி கால்இறுதிக்கு தகுதி பெறும்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 18 ஆட்டங்களில் நேருக்கு சந்தித்துள்ளன. இதில் 6-ல் போர்ச்சுகலும், 5-ல் பெல்ஜியமும் வெற்றி பெற்றன. எஞ்சிய 7 ஆட்டம் டிராவில் முடிந்தது. 1989-ம் ஆண்டுக்கு பிறகு பெல்ஜியம் அணி போர்ச்சுகலை வீழ்த்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது கடந்த 32 ஆண்டுகளில் போர்ச்சுகலுடன் 5 முறை மோதியுள்ள பெல்ஜியம் அதில் 3-ல் தோல்வியும், 2-ல் டிராவும் கண்டுள்ளது.

    முன்னதாக புடாபெஸ்ட் நகரில் இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் நெதர்லாந்து-செக்குடியரசு அணிகள் சந்திக்கின்றன. போட்டிகளை சோனி சிக்ஸ், சோனி டென் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா வென்றது.
    வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்துள்ள தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் தொடங்கியது. இந்திய நேரப்படி நள்ளிரவு நடைபெற்ற முதல் 20 ஓவர் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக வான் டெர் டுசன்56 ரன்னும், டி காக் 37 ரன்னும் எடுத்தனர்.

    அரை சதமடித்த டுசன்

    இதையடுத்து, 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது.

    தொடக்க ஆட்டக்காரரான பிளட்சர் 30 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் எவின் லெவிஸ் அதிரடியில் கலக்கினார். அவர் 35 பந்தில்  7 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 71 ரன் எடுத்து அவுட்டானார்.

    கெயில் 32 ரன்னும், ரசல் 23 ரன்னும் எடுக்க இறுதியில், 15 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    ஆட்ட நாயகன் விருது எவின் லெவிசுக்கு அளிக்கப்பட்டது.
    ×