என் மலர்
விளையாட்டு
அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டன்:
ஆண்டுதோறும் 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் ஆண்டில் 3-வது வருவதும், மிக உயரியதுமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
கொரோனா அச்சத்தால் கடந்த ஆண்டு விம்பிள்டன் தொடர் ரத்து செய்யப்பட்டதால் இந்த முறை கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதையொட்டி அங்கு முகாமிட்டுள்ள முன்னணி வீரர், வீராங்கனைகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்நிலையில், விம்பிள்டன் ஒற்றையர் பிரிவில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்றவரும், 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் காயத்தால் முதல் சுற்றிலேயே வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.
பெலாரஸ் நாட்டின் அலைக்சண்ட்ரா ஸஸ்னோவிச்சை எதிர்த்து செரீனா வில்லியம்ஸ் விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது, டென்னிஸ் களத்தில் கால் சறுக்கியதால் இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டு வலியால் துடித்தார்.
சிறிய முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு தொடர்ந்து விளையாட முயற்சித்தார். 34 நிமிடங்கள் ஆடி 3-3 என்ற கணக்கில் இருந்த நிலையில், வலி அதிகமானதால் போட்டியில் இருந்து ஓய்வு பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.
இதனால் முதல் சுற்றிலேயே நடப்பு விம்பிள்டன் தொடரில் இருந்து செரீனா வில்லியம்ஸ் வெளியேறினார். இதன் மூலம் 8-வது முறையாக விம்பிள்டன் பட்டம் வெல்லும் செரீனா வில்லியம்ஸின் கனவு தகர்ந்தது.
இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றி அசத்தியது.
இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை 42.3 ஓவரில் 185 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் குசால் பெராரா73 ரன்னும், ஹசரங்கா 54 ரன்னும் எடுத்தனர், மற்றவர்கள் நிலைத்து நிற்காமல் விரைவில் ஆட்டமிழந்தனர்.
இங்கிலாந்து அணி சார்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டும், வில்லே 3 விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து, 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பேர்ஸ்டோவ் அதிரடியாக ஆடி 43 ரன்னில் வெளியேறினார். லிவிங்ஸ்டோன் 9 ரன்னிலும், மார்கன் 6 ரன்னிலும், சாம் பில்லிங்ஸ் 3 ரன்னிலும், மொயீன் அலி 28 ரன்னிலும் அவுட்டாகினர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஜோ ரூட் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார்.
இறுதியில் இங்கிலாந்து அணி 34.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜோ ரூட் 79 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகன் விருது கிறிஸ் வோக்சுக்கு அளிக்கப்பட்டது.
டி20 ஓவர் உலக கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்த முடியுமா? என்பது குறித்து சூழ்நிலையை ஆய்வு செய்து முடிவெடுக்க ஜூன் 28-ந் தேதி வரை இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு, ஐசிசி காலஅவகாசம் அளித்தது.
புதுடெல்லி:
16 அணிகள் பங்கேற்கும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு டி20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்த மாற்று இடமாக ஐக்கிய அரபு அமீரகத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஏற்கனவே தேர்வு செய்து வைத்துள்ளது.
டி20 ஓவர் உலக கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்த முடியுமா? என்பது குறித்து சூழ்நிலையை ஆய்வு செய்து முடிவெடுக்க ஜூன் 28-ந் தேதி வரை இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு, ஐ.சி.சி. காலஅவகாசம் அளித்தது. இதற்கிடையே டி20 ஓவர் உலக கோப்பை போட்டி இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீகரத்துக்கு மாற்றப்பட இருக்கிறது என்றும் அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் இந்த போட்டி அக்டோபர் 17-ந் தேதி முதல் நவம்பர் 14-ந் தேதி வரை நடைபெற இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், டி20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் போட்டிகள் நடைபெறும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் தரவரிசையில் 4வது இடத்தில் இருக்கும் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.
லண்டன்:
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தரவரிசையில் 4-வது இடத்தில் இருப்பவரும், சமீபத்தில் நடந்த பிரெஞ்சு ஓபனில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியவருமான கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் 4-6, 4-6, 3-6 என்ற நேர் செட்டில் 57-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனும், 10-ம் நிலை வீராங்கனையுமான பெட்ரா கிவிடோவா (செக் குடியரசு) 3-6, 4-6 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்சிடம் தோல்வி கண்டு ஏமாற்றம் அளித்தார்.
இன்னொரு ஆட்டத்தில், உலக தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா 6-1, 6-4 என்ற நேர் செட்டில் ருமேனியாவின் மோனிகா நிகுலெஸ்சை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.
மற்ற ஆட்டங்களில் கார்பின் முகுருஜா (ஸ்பெயின்), மேடிசன் கீஸ் (அமெரிக்கா) ஆகியோர் வெற்றியை ருசித்தனர்.
யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் குரோஷிய அணிக்கு எதிரான போட்டியில் ஸ்பெயின் அணி 5 கோல் அடித்து அசத்தியது.
கோபன்ஹேகன்:
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் கோபன்ஹேகன் நகரில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் அணி, குரோஷியாவை எதிர்கொண்டது.
ஆட்டத்தின் முதல் பாதியில் 20-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி வீரர் பெட்ரி சுய கோல் அடித்தார். இதனால் குரோஷியாவுக்கு முதல் கோல் வந்தது.
அதன்பின், ஆக்ரோஷமாக ஆடிய ஸ்பெயின் அடுத்தடுத்து 3 கோல்கள் அடித்தது. அந்த அணியின் பாப்லோ சராபியா 38-வது நிமிடத்திலும், சீசர் 57-வது நிமிடத்திலும், பெர்ரன் டோரஸ் 76-வது நிமிடத்திலும் கோலடித்து முன்னிலை தேடிக் கொடுத்தனர்.
கடைசி 5 நிமிடத்தில் குரோஷியா 2 கோல்களை போட்டது. அந்த அணியின் மிஸ்லாவ் ஒர்சிச் 85-வது நிமிடத்திலும், மரியோ பாசாலிச் 90-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இதனால் இந்த ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

இதையடுத்து வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க கூடுதலாக 30 நிமிடம் ஒதுக்கப்பட்டது. கடைசி கட்டத்தில் அபாரமாக செயல்பட்ட ஸ்பெயின் வீரர்கள் அல்வரோ மோராடா 100-வது நிமிடத்திலும், மிகெல் 103-வது நிமிடத்திலும் கோலடித்தனர்.
இறுதியில் ஸ்பெயின் அணி 5-3 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது
இன்று அதிகாலை நடந்த மற்றொரு ஆட்டத்தில் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. முதல் பாதியில் சுவிட்சர்லாந்து அணி 15-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் அதிரடியாக ஆடிய பிரான்ஸ் 57, 59 மற்றும் 75-வது நிமிடத்தில் தலா ஒரு கோல் அடித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் சுவிட்சர்லாந்து 81 மற்றும் 90-வது நிமிடத்தில் தலா ஒரு கோல் அடித்தது.
இதனால் ஆட்டம் 3-3 என சமனிலை வகித்தது.
வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி கார்னார் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதில் சுவிட்சர்லாந்து அணி 5-4 என்ற கணக்கில் பிரான்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் பட்டம் வென்றால் 20-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற பெருமைக்கு உரியவராவார்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் இங்கிலாந்தின் லண்டன் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டியில் நடப்பு சாம்பியன் மற்றும் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச் மற்றும் இங்கிலாந்து நாட்டின் ஜேக் டிராப்பர் ஆகியோர் மோதினர்.
முதல் செட்டை டிராப்பர் 6-4 என கைப்பற்றினார். இதையடுத்து, அதிரடியாக ஆடிய ஜோகோவிச் 2,3 மற்றும் 4வது செட்களை வென்று அசத்தினார்.
இறுதியில், 4-6, 6-1, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற ஜோகோவிச் 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ரஹி சர்னோபத் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
ஓசிஜெக்:
குரோஷியாவில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவுக்கான போட்டி நடைபெற்றது. இதில், இந்திய வீராங்கனை ரஹி சர்னோபத் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவின் முதல் தங்கப்பதக்கம் இதுவாகும்.
இறுதிச்சுற்றில் சர்னோபத் 39 புள்ளிகள் பெற்றார். பிரான்ஸ் வீராங்கனை மதில்தே லமோலே, 31 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மற்றொரு இந்திய வீராங்கனை மனு பாகெர், 7வது இடத்திற்கு பின்தங்கி ஏமாற்றம் அளித்தார்.
முந்தைய போட்டிகளில் ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.
2-வது போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தென் ஆப்பிரிக்கா பதிலடி கொடுத்தது. அந்த அணி முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று இருந்தது.
செயின்ட்ஜார்ஜ்:
வெஸ்ட் இண்டீஸ்- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 2-வது 20 ஓவர் போட்டி செயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் நேற்று நடந்தது.
முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன் எடுத்தது. இதனால் வெஸ்ட் இண்டீசுக்கு 167 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
கேப்டன் பவுமா 33 பந்தில் 46 ரன்னும் (5பவுண்டரி, 1 சிக்சர்), ஹென்டிரிக்ஸ் 30 பந்தில் 42 ரன்னும் (5பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். மெக்காய் 3 விக்கெட்டும், கெவின்சின் கிளையர் 2 விக்கெட்டும் எடுத்தனர்.
167 ரன் இலக்குடன் விடையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 150 ரன் எடுத்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா 16 ரன்னில் வெற்றி பெற்றது.
பிளட்சர் அதிகபட்சமாக 35 ரன்னும், பேபியன் ஆலன் 34 ரன்னும் எடுத்தனர். ரபடா 3 விக்கெட்டும், லிண்டி 2 விக்கெட்டும், நிகிடி, நோர்ட்ஜே, ஷம்சி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
இந்த வெற்றி மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தென் ஆப்பிரிக்கா பதிலடி கொடுத்தது. அந்த அணி முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று இருந்தது.
5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது. 3-வது ஆட்டம் நாளை நடக்கிறது.
“ பி “ பிரிவில் உள்ள பிரேசில்- ஈக்வடார் அணிகள் மோதின. இந்த ஆட்டம் 1--1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.
கொய்னியா:
47-வது கோபா அமெரிக்க கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் நடைபெற்று வருகிறது.
இந்திய நேரப்படி அதிகாலை 2.30 மணிக்கு நடந்த ஆட்டத்தில் “ பி “ பிரிவில் உள்ள பிரேசில்- ஈக்வடார் அணிகள் மோதின. இந்த ஆட்டம் 1--1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. பிரேசில் அணியில் மிலிட்டோவும் (37-வது நிமிடம் ), ஈக்வடார் அணியில் மெனாவும் (57-வது நிமிடம்) கோல் அடித்தனர்.
இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் பெரு-வெனிசூலா அணிகள் மோதின. இதில் பெரு 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். பெரு அணிக்காக கேரில்லோ 48-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
“பி” பிரிவில் லீக் ஆட்டங்கள் முடிந்து விட்டன. பிரேசில் 3 வெற்றி, ஒரு டிராவுடன் 10 புள்ளிகள் பெற்று முதலிடத்தையும், பெரு 7 புள்ளியுடன் 2--வது இடத்தையும் (2 வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வி), கொலம்பியா 4 புள்ளியுடன் 3-வது இடத்தையும் (ஒரு வெற்றி, ஒரு டிரா, 2 தோல்வி), ஈக்வடார் 3 புள்ளிகளுடன் 4--வது இடத்தையும் (3 டிரா, ஒரு தோல்வி ) பிடித்து கால் இறுதிக்கு தகுதி பெற்றன.
வெனிசுலா 2 டிரா, 2 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தை பிடித்து வாய்ப்பை இழந்தது. அர்ஜென்டினா- பொலிவியா ‘ஏ’ பிரிவில் நடக்கும் கடைசி ஆட்டத்தில் அர்ஜென்டினா-பொலிவியா, உருகுவே-பராகுவே அணிகள் மோதுகின்றன. அர்ஜென்டினா 2 வெற்றி, ஒரு டிராவுடன் 7 புள்ளிகள் பெற்று உள்ளது. பொலிவியா தான் மோதிய 3 ஆட்டங்களிலும் தோல்வியை தழுவியிருந்தது. இந்த பிரிவில் இருந்து அர்ஜென்டினா, பராகுவே, சிலி, உருகுவே ஆகிய அணிகள் ஏற்கனவே கால்இறுதிக்கு தகுதி பெற்றிருந்தன.
இதுவரை 19 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள ஜோகோவிச் இந்த முறையும் கோப்பையை கையில் ஏந்தினால் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவர்களான ரோஜர் பெடரர், ரபெல் நடால் ஆகியோரின் சாதனையை சமன் செய்து விடுவார்.
லண்டன்:
ஆண்டுதோறும் 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் ஆண்டில் 3-வது வருவதும், மிக உயரியதுமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் இன்று தொடங்கி அடுத்த மாதம் (ஜூலை) 11-ந்தேதி வரை நடைபெறுகிறது. கொரோனா அச்சத்தால் கடந்த ஆண்டு விம்பிள்டன் தொடர் ரத்து செய்யப்பட்டதால் இந்த முறை கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதையொட்டி அங்கு முகாமிட்டுள்ள முன்னணி வீரர், வீராங்கனைகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபனை வென்ற ‘நம்பர் ஒன்’ வீரரும், நடப்பு சாம்பியனுமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) இங்கு மீண்டும் பட்டம் வெல்ல பிரகாசமான வாய்ப்பு உள்ளது. சூப்பர் பார்மில் உள்ள அவர் முதல் சுற்றில் இங்கிலாந்து ‘வைல்டு கார்டு’ வீரர் ஜாக் டிராப்பருடன் மோதுகிறார்.
இதுவரை 19 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள ஜோகோவிச் இந்த முறையும் கோப்பையை கையில் ஏந்தினால் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவர்களான ரோஜர் பெடரர், ரபெல் நடால் ஆகியோரின் சாதனையை (தலா 20 கிராண்ட்ஸ்லாம்) சமன் செய்து விடுவார். காயம் மற்றும் உடல்தகுதி பிரச்சினையால் ஸ்பெயினின் ரபெல் நடால், ஆஸ்திரியாவின் டொமினிக் திம் ஆகியோர் விலகி உள்ள நிலையில் மெட்விடேவ் (ரஷியா), சிட்சிபாஸ் (கிரீஸ்), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா), பாடிஸ்டா அகுட் (ஸ்பெயின்), ஸ்வாட்ஸ்மேன் (அர்ஜென்டினா), பெரேட்டினி (இத்தாலி) ஆகியோர் கடும் சவால் அளிக்க காத்திருக்கிறார்கள்.
8 முறை சாம்பியனான 39 வயதான ரோஜர் பெடரரின் (சுவிட்சர்லாந்து) ஆட்டத்திறன் முன்பு போல் இல்லை. இருப்பினும் புல்தரையில் நடக்கும் விம்பிள்டனில் எப்போதும் நன்றாக ஆடுவார். அதனால் மீண்டும் ஆதிக்கம் செலுத்துவாரா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர். பெடரர் தனது முதலாவது சுற்றில் 42-ம் நிலை வீரர் அட்ரியன் மனரினோவை (பிரான்ஸ்) எதிர்கொள்கிறார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் சிமோனா ஹாலெப் (ருமேனியா) காயத்தாலும், 2-ம் நிலை வீராங்கனை நவோமி ஒசாகா (ஜப்பான்) மனரீதியான பாதிப்பாலும் விம்பிள்டனில் இருந்து ஒதுங்கி விட்டனர். அதனால் ‘நம்பர் ஒன்’ மங்கை ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா), முன்னாள் சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), அரினா சபலென்கா (பெலாரஸ்), பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான பார்போரா கிரெஜ்சிகோவா (செக்குடியரசு), சோபியா கெனின் (அமெரிக்கா), பியான்கா ஆன்ட்ரீஸ்கு (கனடா), பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு), ஸ்வியாடெக் (போலந்து), ஸ்விடோலினா (உக்ரைன்) உள்ளிட்டோர் மீது கவனம் திரும்பி உள்ளது. இதில் ஆஷ்லி பார்ட்டிக்கு பட்டம் வெல்லும் வாய்ப்பு அதிகமாக தெரிகிறது. அவர் தனது முதல் சுற்றில் சுவாரஸ் நவரோவுடன் (ஸ்பெயின்) மோதுகிறார்.
குழந்தை பெற்றுக்கொண்ட பிறகு எந்த கிராண்ட்ஸ்லாம் பட்டமும் வெல்லாத 39 வயதான செரீனா வில்லியம்சுக்கு, பெண்கள் ஒற்றையரில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவரான ஆஸ்திரேலியாவின் மார்கரேட் கோர்ட்டின் சாதனையை (24 கிராண்ட்ஸ்லாம்) சமன் செய்ய இன்னும் ஒரு பட்டம் தேவையாகும். அதற்காக தொடர்ந்து போராடும் அவருக்கு விம்பிள்டனிலாவது வெற்றி கனியுமா? என்பதை பார்க்கலாம். செரீனா முதல் ரவுண்டில் பெலாரசின் சாஸ்னோவிச்சை சந்திக்கிறார்.
இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.360 கோடியாகும். இது முந்தைய சீசனை விட 7.85 சதவீதம் குறைவாகும். ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்வோருக்கு ரூ.17½ கோடியும், 2-வது இடத்தை பிடிப்பவர்களுக்கு ரூ.9¼ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும். இரட்டையர் பிரிவில் வாகை சூடும் ஜோடிக்கு ஏறக்குறைய ரூ.5 கோடி கிடைக்கும்.
இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட்1, செலக்ட்2 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. முதல் நாளில் ஜோகோவிச், சிட்சிபாஸ், சபலென்கா, சோபியா கெனின் உள்ளிட்டோர் களம் இறங்குகிறார்கள்.
இலங்கைக்கு எதிரான தொடர் இந்திய இளம் வீரர்கள் உள்பட அனைவரும் திறமையை வெளிப்படுத்த அருமையான வாய்ப்பாக இருக்கும் என்று கேப்டன் ஷிகர் தவான் கூறியுள்ளார்.
மும்பை:
டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. இதனால் ஷிகர் தவான் தலைமையில் 2-ம் தர இந்திய அணி உருவாக்கப்பட்டு இந்த அணி இலங்கையில் 3 சர்வதேச ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், வருண் சக்ரவர்த்தி, இஷான் கிஷன், பிரித்வி ஷா உள்ளிட்டோரும் இந்த அணியில் அங்கம் வகிக்கிறார்கள். இந்தியா-இலங்கை இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 13-ந்தேதி கொழும்பில் நடக்கிறது.
இந்திய அணியினர் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்த தனிமைப்படுத்தும் நடைமுறை முடிந்து இந்திய வீரர்கள் இன்று இலங்கைக்கு புறப்படுகிறார்கள். ரவிசாஸ்திரி இங்கிலாந்தில் இருப்பதால் இலங்கை தொடருக்கான இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் செயல்பட உள்ளார்.
இலங்கை தொடரையொட்டி இருவரும் ஆன்லைன் வாயிலாக நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது கேப்டன் ஷிகர் தவான் கூறுகையில், ‘இது மிகவும் சிறந்த அணி. எங்கள் அணிக்குள் நம்பிக்கையும், நேர்மறை எண்ணமும், சாதிக்கும் உத்வேகமும் இருக்கிறது. நன்றாக செயல்படுவோம் என்று ஒவ்வொருவரும் நம்புகிறார்கள். இது ஒரு புதிய சவால். அதே சமயம் களத்தில் எங்களது திறமையை வெளிப்படுத்த இது அருமையான வாய்ப்பு. 13-14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் கழிந்து விட்டது. எனவே எப்போது களம் இறங்கி அடித்து நொறுக்குவோம் என்று வீரர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். இந்த தொடருக்கு தயாராக எங்களுக்கு 10-12 நாட்கள் இருக்கிறது.
இது அனுபவமும், இளமையும் கலந்த அணி. சாதுர்யமாக உழைத்து வரும் எங்களது வீரர்கள், போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்’ என்றார்.
பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறுகையில், ‘தற்போதைய அணியில் உள்ள நிறைய வீரர்கள் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பிடிக்கும் முனைப்புடன் உள்ளனர். ஆனால் எங்களது பிரதான இலக்கு, இலங்கை தொடரை வெல்வது தான். அது குறித்து விவாதித்துள்ளோம். வாய்ப்பு பெறும் வீரர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன். 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்பாக இந்திய அணி விளையாடும் கடைசி 20 ஓவர் போட்டிகள் இது தான்.
அணியில் அதிகமான இளம் வீரர்கள் உள்ளனர். ஒரு வேளை களம் இறங்க வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் கூட, தவான், புவனேஷ்வர்குமார், ஹர்திக் பாண்ட்யா போன்ற சீனியர் வீரர்களுடன் பழகுவதற்கு இளம் வீரர்களுக்கு இதை நல்லதொரு வாய்ப்பாக பார்க்கிறேன். அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள முடியும்’ என்றார்.
யூரோ கோப்பை கால்பந்தில் நெதர்லாந்து அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது செக் குடியரசு அணி.
புடாபெஸ்ட்:
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் புடாபெஸ்ட் நகரில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் செக் குடியரசு, நெதர்லாந்து அணிகள் மோதின.
ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியின் 68-வது நிமிடத்தில் செக் குடியரசின் தாமஸ் ஹோல்ஸ் ஒரு கோல் அடித்தார். அவரை தொடர்ந்து 80-வது நிமிடத்தில் பாட்ரிக்ஸ் ஷிக் கோல் அடித்தார்.
முன்னதாக 55-வது நிமிடத்தில் கோல் பகுதியில் வைத்து பந்தை கையால் தடுத்ததால் நெதர்லாந்து வீரர் மாத்திஸ் டி லிட் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் எஞ்சிய நேரம் 10 வீரர்களுடன் ஆடியதால் நெதர்லாந்தின் பின்கள தடுப்பு பலவீனமடைந்தது.
இறுதியில், செக் குடியரசு அணி 2-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

இன்று அதிகாலை நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம், போர்ச்சுக்கல் அணிகள் மோதின. முதல் பாதியின் 42வது நிமிடத்தில் பெல்ஜிய வீரர் தோர்கன் ஹசார்ட் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலை பெறச் செய்தார்.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
இறுதியில், பெல்ஜியம் அணி 1-0 என்ற கணக்கில் போர்ச்சுக்கல்லை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.






