என் மலர்
விளையாட்டு



முனிச்:
ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் பங்கேற்ற “யூரோ” கோப்பை கால்பந்து போட்டி கடந்த 11-ந் தேதி தொடங்கியது.
24 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டி ஐரோப்பாவில் உள்ள 11 நகரங்களில் நடந்தது. கடந்த 23-ந் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன.
இதன் முடிவில் இத்தாலி, வேல்ஸ், சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், டென்மார்க், நெதர்லாந்து, ஆஸ்திரியா, உக்ரைன், இங்கிலாந்து, குரோஷியா, செக் குடியரசு, சுவீடன், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, போர்ச் சுக்கல், ஆகிய 16 அணிகள் 2-வதுசுற்றுக்கு முன்னேறின.
துருக்கி, பின்லாந்து, 1960-ம் ஆண்டு சாம்பியனான ரஷியா,வட மாசிடோனியா, ஸ்காட்லாந்து, சுலோவாக்கியா, போலந்து ஆகிய 8 நாடுகள் வெளியேற்றப்பட்டன.
2-வது சுற்று ஆட்டங்கள் கடந்த 26-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை நடைபெற்றது. இதன் முடிவில் டென்மார்க், இத்தாலி, செக் குடியரசு பெல்ஜியம், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து இங்கிலாந்து, உக்ரைன் ஆகிய 8 நாடுகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றன.
3 முறை சாம்பியனான ஜெர்மனி, 2 தடவை யூரோ கோப்பையை வென்ற பிரான்ஸ், நடப்புச் சாம்பியன் போர்ச்சுக்கல், 1988-ம் ஆண்டு பட்டம் பெற்ற நெதர்லாந்து, வேல்ஸ், ஆஸ்திரியா, குரோஷியா, சுவீடன் ஆகியவை 2-வது சுற்றில் வெளியேற்றப்பட்டன.
2 நாள் ஓய்வுக்குப் பிறகு கால்இறுதி ஆட்டங்கள் நாளை ( வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
ரஷியாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு நடைபெறும் முதல் கால்இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின்- சுவிட்சர்லாந்து அணிகள் மோதுகின்றன.
3 முறை சாம்பியனான ஸ்பெயின் அணி லீக் ஆட்டங்களில் சுலோவாக்கியாவை வென்றது. சுவீடன், போலந்துடன் டிரா செய்தது. 2-வது சுற்றில் 5-3 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தியது. இந்த போட்டி தொடரில் ஸ்பெயின் அணி இதுவரை 11 கோல்கள் போட்டுள்ளது. 4 கோல்கள் வாங்கியுள்ளது.
சுவிட்சர்லாந்து லீக் ஆட்டங்களில் துருக்கியை தோற்கடித்தது. வேல்சுடன் டிரா செய்தது. இத்தாலியிடம் தோற்றது. 2-வது சுற்றில் பிரான்சை பெனால்டி ஷூட்அவுட்டில் தோற்கடித்தது. 7 கோல்கள் போட்டுள்ளது. 8 கோல்கள் வாங்கியுள்ளது.
ஜெர்மனியில் உள்ள முனிச் நகரில் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் 2-வது கால் இறுதி போட்டியில் பெல்ஜியம்-இத்தாலி அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை. இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.
உலக தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் பெல்ஜியம் லீக் ஆட்டங்களில் ரஷியா, டென்மார்க் பின்லாந்து அணிகளை வீழ்த்தியது. 2-வது சுற்றில் போர்ச்சுக்கலை 1-0 என்ற கணக்கில் தோற்கடித்தது. பெல்ஜியம் அணி 8 கோல்கள் போட்டுள்ளது. ஒரே ஒரு கோல் மட்டுமே வாங்கியுள்ளது.
1968-ம் ஆண்டு சாம்பியனான இத்தாலி லீக் ஆட்டங்களில் துருக்கி, சுவிட்சர்லாந்து, வேல்ஸ் அணிகளை தோற்கடித்தது. 2-வது சுற்றில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தியது. 9 கோல்கள் போட்டுள்ளது. ஒரு கோல் வாங்கி உள்ளது.
3-ந் தேதி நடைபெறும் 3-வது மற்றும் 4-வது கால் இறுதி ஆட்டங்களில் டென்மார்க்-செக்குடியரசு (இரவு 9.30 மணி), இங்கி லாந்து-உக்ரைன் (நள்ளிரவு 12.30 மணி) அணிகள் மோதுகின்றன.
சென்னை:
5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் தொடரை ஜூலை 19-ந் தேதி முதல் ஆகஸ்டு 15-ந் தேதி வரை நடத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டுள்ளது. தமிழக அரசின் அனுமதியை பொறுத்து போட்டி நடத்தப்படும்.
இதில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ், திருச்சி வாரியர்ஸ், சேலம் ஸ்பார்ட்ன்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த போட்டிக்கான வீரர்கள் ஒதுக்கீடு நிகழ்ச்சி நேற்று நடந்தது. மொத்தம் 40 வீரர்கள் அணிகளுக்கு ஒதுக்கப்பட்டனர். இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முன்னணி வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் வாரியர், நிலேஷ் சுப்பிரமணியம், எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோரை தேர்வு செய்தது.
இந்த சீசனில் கேரளா அணியில் இருந்து தமிழக அணிக்கு இடம் மாறிய சந்தீப் வாரியரை தேர்வு செய்ததன் மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் பந்து வீச்சு தாக்குதல் மேலும் வலுவடையும் என்று அந்த அணியின் கேப்டன் கவுசிக் காந்தி தெரிவித்தார். சந்தீப் வாரியர் தற்போது இலங்கை தொடருக்கான இந்திய அணியில் வலைப்பயிற்சி பவுலராக இருப்பதும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடுவதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சீசனுக்கான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வருமாறு:-
பி.அருண், விஜய்குமார், ஆர்.சதீஷ், ராம் அர்விந்த், ஜெகநாத், சீனிவாஸ், சந்தான சேகர், எம்.சித்தார்,சுஜய், ஹரிஷ்குமார், அருண்குமார், பிரதீஷ் ஆகாஷ், சாய் கிஷோர், ஆர்.ஜெகதீசன், சாய் பிரகாஷ், கவுசிக் காந்தி, அலெக்சாண்டர், சசிதேவ், சோனு யாதவ், டி.ராகுல், சந்தீப் வாரியர், நிலேஷ் சுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன்.
இத்தாலி தலைநகர் ரோமில் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்று சர்வதேச நீச்சல் போட்டி நடந்தது. இதன் கடைசி நாளில் தனியாக நடத்தப்பட்ட தகுதி நேர போட்டியில் ஆண்களுக்கான 100 மீட்டர் பேக்ஸ்டிரோக் பந்தயத்தில் இந்திய வீரர் ஸ்ரீஹரி நடராஜ் 53.77 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய தேசிய சாதனை படைத்தார்.
அத்துடன் அவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான ‘ஏ’ தர தகுதி இலக்கையும் (53.85 வினாடி) எட்டினார். இதர போட்டியாளர்கள் இன்றி நடைபெறும் தகுதி நேர போட்டியில் இலக்கை எட்டுபவர்களுக்கு சர்வதேச நீச்சல் சம்மேளனத்தின் அங்கீகாரம் அவசியமானதாகும். ஸ்ரீஹரி நடராஜனின் தகுதி நேரத்துக்கு சர்வதேச நீச்சல் சம்மேளனம் நேற்று அதிகாரபூர்வமாக அங்கீகாரம் அளித்தது. இதனை தொடர்ந்து பெங்களூருவை சேர்ந்த 20 வயதான ஸ்ரீஹரி நடராஜ் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கும் 2-வது இந்திய நீச்சல் வீரர் ஸ்ரீஹரி நடராஜ் ஆவார். ஏற்கனவே கேரளாவை சேர்ந்த 27 வயதான சஜன் பிரகாஷ் 200 மீட்டர் பட்டர்பிளை பந்தயத்தில் தகுதி பெற்று சாதித்து இருந்தார்.
புதுடெல்லி:
விளையாட்டு வீரர்களுக்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் உயரிய விருது ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதாகும்.
இந்த ஆண்டுக்கான கேல்ரத்னா விருதுக்கு இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவரும், தமிழக கிரிக்கெட் வீரருமான அஸ்வின் மற்றும் வீராங்கனை மிதாலிராஜ் ஆகியோரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த இருவரது பெயரையும் மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை செய்துள்ளது. மிதாலிராஜ் இந்திய பெண்கள் அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக உள்ளார்.
இதே போல தவான், கே.எல்.ராகுல், பும்ரா ஆகியோரது பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
செயின்ட் ஜார்ஜ்:
வெஸ்ட் இண்டீஸ்- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 3-வது 20 ஓவர் போட்டி செயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் நேற்று நடந்தது.
முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன் எடுத்தது. இதனால் வெஸ்ட் இண்டீசுக்கு 168 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
தொடக்க வீரர் குயிண்டன் டி காக் 51 பந்தில் 71 ரன்னும் (5பவுண்டரி, 2 சிக்சர்), வான்டர் டூசன் 24 பந்தில் 32 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் மெக்காய் 4 விக்கெட்டும், பிராவோ 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன் எடுத்தது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 1 ரன்னில் வெற்றி பெற்றது.
ஆட்டத்தின் கடைசி ஓவரில் வெஸ்ட் இண்டீசுக்கு 15 ரன் தேவைப்பட்டது. ரபடா வீசிய அந்த ஓவரில் முதல் பந்து வைடானது. அடுத்த பந்தில் ரன் எடுக்கவில்லை. 2-வது பந்தில் ஆலன் பவுண்டரி அடித்தார். 3-வது பந்தில் ரன் கொடுக்கவில்லை. 4-வது பந்தில் 2 ரன் எடுத்தார். இதனால் கடைசி 2 பந்தில் 8 ரன் தேவைப்பட்டது. 5-வது பந்தில் ரபடா அபாரமாக யார்க்கர் வீசி ரன் கொடுக்கவில்லை. கடைசி பந்தில் ஆலன் சிக்சர் அடித்தார்.
இந்த வெற்றி மூலம் 5 போட்டிக்கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசும், 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்று இருந்தது. 4-வது போட்டி நாளை நடக்கிறது.
லண்டன்:
கிராண்ட்சிலாம் போட்டியில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
உலகின் 6-ம் நிலை வீரரும், 20 கிராண்ட்சிலாம் பட்டம் வென்று சாதனை படைத்தவருமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) தொடக்க சுற்றில் பிரான்சை சேர்ந்த அட்ரியன் மனாரினோவை எதிர் கொண்டார்.
இருவரும் தலா 2 செட்டுகளை கைப்பற்றி இருந்தனர். முடிவை நிர்ணயம் செய்யும் 5-வது செட்டில் மனாரினோ காயத்தால் விலகினார். இதனால் பெடரர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். அவருக்கு அதிஷ்ர்டம் இருந்தது.
மற்ற ஆட்டங்களில் 2-ம் நிலை வீரரான மெட்வதேவ் (ரஷ்யா), 4-வது வரிசையில் உள்ள சுவரேவ் (ஜெர்மனி) வெற்றி பெற்றனர்.
மற்ற ஆட்டங்களில் முதல் நிலை வீராங்கனை ஆஸ்லே பார்டி (ஆஸ்திரேலியா), மெர்டன்ஸ் (பெல்ஜியம்) ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.







