என் மலர்tooltip icon

    விளையாட்டு

    யூரோ கோப்பை கால்பந்தில் செக் குடியரசை வீழ்த்திய டென்மார்க், 1992-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக அரையிறுதிக்குள் நுழைந்தது.
    பாகு:

    ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நேற்று நடந்த 3-வது காலிறுதியில் டென்மார்க்- செக் குடியரசு அணிகள் சந்தித்தன.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் டென்மார்க் அணி 2 கோல்கள் போட்டது. அந்த அணியின் தாமஸ் டெலானி 5-வது நிமிடத்தில் தலையால் முட்டி கோலடித்தார். 42-வது நிமிடத்தில் சக வீரர் மாலே தட்டிக்கொடுத்த பந்தை கேஸ்பர் டோல்பெர்க் கோலாக்கினார்.

    பிற்பாதியில் செக் குடியரசு வீரர் பாட்ரிக் சீக் 49-வது நிமிடத்தில் கோல் அடித்தார். நடப்பு தொடரில் அவரது 5-வது கோல் இதுவாகும். மேலும் ஒரு கோல் போட்டு ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வர முனைப்பு காட்டிய செக் குடியரசின் போராட்டத்துக்கு பலன் கிட்டவில்லை.

    இறுதியில், டென்மார்க் அணி 2-1 என்ற கோல் கணக்கில் செக் குடியரசை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது.

    இன்று அதிகாலை நடந்த மற்றொரு போட்டியில் இங்கிலாந்து, உக்ரைன் அணிகள் மோதின. 

    கோல் அடித்ததைக் கொண்டாடும் இங்கிலாந்து வீரர்கள்
     
    தொடக்கத்தில் இருந்தே இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக ஆடினர். முதல் பாதி முடிவில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை வகித்தது.

    இரண்டாவது போட்டியில் அதிரடியாக ஆடிய இங்கிலாந்து மேலும் 3 கோல்கள் அடித்து அசத்தியது. உக்ரைன் அணியினரால் பதிலுக்கு ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

    இறுதியில், இங்கிலாந்து 4-0 என்ற கோல் கணக்கில் உக்ரைனை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்துள்ளது.
    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் டி காக், மார்கிராம் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 128 ரன்கள் குவித்தது.
    செயிண்ட் ஜார்ஜ்:

    வெஸ்ட் இண்டீஸ்- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 5-வது 20 ஓவர் போட்டி செயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் நடந்தது.

    டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய கேப்டன் பவுமா டக் அவுட்டானார்.

    மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டி காக் உடன் மார்கிராம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை பதம்பார்த்தது. இதனால் ரன் வேகம் அதிகரித்தது.

    இருவரும் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தனர். அணியின் எண்ணிக்கை 128 ஆக இருக்கும்போது டி காக் 60 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து மார்கிராம் 70 ரன்னில் வெளியேறினார்.

    அரை சதமடித்த டி காக்

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து, 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் எவின் லெவிஸ் ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதமடித்து அவுட்டானார். மற்றவர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் நிகிடி 3 விக்கெட்டும், ரபாடா, மூல்டர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 3-2 என்ற கணக்கில் டி 20 தொடரை கைப்பற்றி அசத்தியது. ஆட்டநாயகன் விருது மார்கிராமுக்கும், தொடர் நாயகன் விருது தப்ராஸ் ஷம்சிக்கும் அளிக்கப்பட்டது.
    இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்தியாவின் மிதாலி ராஜ் சிறப்பாக ஆடி அரை சதமடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.
    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய பெண்கள் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. முதல் 2 போட்டிகளில் இங்கிலாந்து வென்று 2-0 என தொடரை கைப்பற்றியுள்ளது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. மழை காரணமாக 47 ஓவராக குறைக்கப்பட்டது.

    டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவர்களில் இங்கிலாந்து அணி 219 ரன்களில் ஆல் அவுட்டானது.

    அந்த அணியில் அதிகபட்சமாக நடாலிசீவர் 49 ரன்னும், கேப்டன் ஹீதர் நைட் 46  ரன்னும், வின்பீல்டு ஹில் 36 ரன்னும் எடுத்தனர்.

    விக்கெட் வீழ்த்திய தீப்தி சர்மாவை பாராட்டும் சக வீராங்கனைகள்

    இந்தியா சார்பில் தீப்தி சர்மா 3 விக்கெட் வீழ்த்தினார். மற்றவர்கள் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷபாலி வர்மா 29 ரன்னில் அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா 49 ரன்னில் வெளியேறி அரை சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

    அடுத்து இறங்கிய கேப்டன் மிதாலி ராஜ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். 75 ரன்கள் எடுத்த அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில், இந்தியா 46.3 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 220 ரன்கள் எடுத்து ஆறுதல் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது கேப்டன் மிதாலி ராஜுக்கு அளிக்கப்பட்டது.

    இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது. 
    மிகப்பெரிய உள்நாட்டுத் தொடரான ரஞ்சிக் கோப்பை தொடர், வரும் நவம்பர் 16ம் தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி வரை நடைபெற உள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் 2021-22ம் ஆண்டில் நடைபெறும் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களுக்கான அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 12ம் தேதி மகளிர் ஒருநாள் லீக் தொடருடன் இந்த ஆண்டின் உள்நாட்டு சீசன் தொடங்குகிறது. அதன்பின்னர் அக்டோபர் 20ம் தேதி உள்நாட்டு டி20 லீக் தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடர் தொடங்குகிறது. இதன் இறுதிப்போட்டி நவம்பர் 12ம் தேதி நடைபெற உள்ளது. 

    இதேபோல் மிகப்பெரிய தொடரான ரஞ்சிக் கோப்பை தொடர், வரும் நவம்பர் 16ம் தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. 

    50 ஓவர் லீக் தொடரான விஜய் ஹசாரே கோப்பை தொடர், பிப்ரவரி மாதம் 23ம் தேதி தொடங்கி மார்ச் 26ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த சீசனில் அனைத்து ஆடவர், மகளிருக்கான தொடர்களில் மொத்தம் 2127 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. 

    அனைவரின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து, உள்நாட்டு சீசன் போட்டிகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்படும் என பிசிசிஐ நம்பிக்கை தெரிவித்துள்ளது. 
    கோபா அமெரிக்க கால்பந்து போட்டியின் கால் இறுதியில் பிரேசில்-சிலி அணிகள் மோதின. இதில் பிரேசில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    ரியோ டி ஜெனீரோ:

    47-வது கோபா அமெரிக்க கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் நடைபெற்று வருகிறது. கால்இறுதி ஆட்டங்கள் இன்று தொடங்கியது.

    இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.30 மணிக்கு நடந்த கால் இறுதியில் பிரேசில்-சிலி அணிகள் மோதின. இதில் பிரேசில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    46-வது நிமிடத்தில் லுகாஸ் பகியூட்டோ கோல் அடித்தார். இந்த ஆட்டத்தின் 48-வது நிமிடத்தில் முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்டதற்காக பிரேசில் வீரர் கேப்ரியல் ஜீசஸ் சிவப்பு அட்டை காட்டப்பட்டு நடுவரால் வெளியேற்றப்பட்டார். இதனால் ஆட்டத்தின் இறுதிவரை 10 வீரர்களுடன் விளையாடி பிரேசில் இந்த வெற்றியை பெற்றது.

    முன்னதாக நடந்த கால் இறுதியில் பெரு-பராகுவே அணிகள் மோதின. ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளும் தலா 3 கோல்கள் போட்டு இருந்தன. கூடுதல் நேரத்திலும் இதே நிலையே நீடித்தது. இதனால் முடிவை நிர்ணயிக்க ‘பெனால்டி ஷூட் அவுட்’ கடைபிடிக்கப்பட்டது.

    இதில் பெரு 4-3 என்ற கோல் கணக்கில் பராகுவேயை தோற்கடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்றது. 6-ந் தேதி நடைபெறும் முதல் அரையிறுதியில் பிரேசில்-பெரு அணிகள் மோதுகின்றன.

    நாளை அதிகாலை நடைபெறும் கால்இறுதி ஆட்டங்களில் உருகுவே- கொலம்பியா, அர்ஜென் டினா-ஈக்வடார் அணிகள் மோதுகின்றன.

    உலகின் முதல்நிலை வீரரும், 19 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவருமான ஜோகோவிச் 3-வது சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த டெனிஸ் குட்லாவை எதிர்கொண்டார்.
    லண்டன்;

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

    உலகின் முதல்நிலை வீரரும், 19 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவருமான ஜோகோவிச் (செர்பியா) 3-வது சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த டெனிஸ் குட்லாவை எதிர்கொண்டார். இதில் ஜோகோவிச் 6-4, 6-3, 7-6 (9-7) என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்ற ஆட்டங்களில் 5-ம் நிலை வீரரான ஆந்த்ரே ருபலே (ரஷ்யா), அகுட் (ஸ்பெயின்) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) தோற்றார். காயத்தால் நீண்ட இடைவெளிக்கு பிறகு களம் இறங்கிய அவர் 4-6, 2-6, 2-6 என்ற கணக்கில் கனடா வீரர் டெனிசிடம் தோற்றார்.

    இதைப்போல 9-வது வரிசையில் உள்ள டியாகோ ஸ்வார்ட்ஸ்மேன் (அர்ஜென்டினா) 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 13-வது வரிசையில் உள்ள மெர்ட்டன்ஸ் (பெல்ஜியம்), 11-வது இடத்தில் உள்ள முகுருஜா (ஸ்பெயின்) ஆகியோர் அதிர்ச்சிகரமாக தோற்றனர்.

    மேடிசன் கெய்ஸ் (அமெரிக்கா), ரைபகினா (கஜகஸ்தான்) ஆகியோர் வெற்றிபெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
    1968-ம் ஆண்டுக்குப் பிறகு கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றில் முழுமையான இரு இந்திய ஜோடிகள் நேருக்கு நேர் மோதியது இதுவே முதல் முறை ஆகும்.
    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவின் முதலாவது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- சானியா மிர்சா ஜோடி, மற்றொரு இந்திய இணையான ராம்குமார்-அங்கிதா ரெய்னாவை சந்தித்தது.

    வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஆட்டத்தில் அனுபவம் வாய்ந்த போபண்ணா-சானியா ஜோடி 6-2, 7-6 (7-5) என்ற நேர் செட்டில் 69 நிமிடங்களில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.
    சுவிட்சர்லாந்துடனான ஆட்டத்தில் பெனால்டி ஷூட் முறையில் 3 - 1 என்ற கணக்கில் ஸ்பெயின் அணி அபார வெற்றி பெற்று அரையிறுதியில் நுழைந்தது.
    செயின்ட்பீட்டர்ஸ்ப்ர்க்:

    ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்ட்கில் நேற்று நடந்த முதலாவது கால்இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் அணி, சுவிட்சர்லாந்தை எதிர்கொண்டது.

    தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணிக்கு 8-வது நிமிடத்தில் கோல் வந்தது. கார்னரில் இருந்து வந்த பந்தை ஸ்பெயின் அணி வீரர் ஜார்டி ஆல்பா கோல் வலையை நோக்கி அடித்தார். அந்த பந்து சுவிட்சர்லாந்து நடுகள வீரர் டெனிஸ் ஜகாரியா காலில் பட்டு கோல் வலைக்குள் புகுந்து சுய கோலானது.

    68-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணி பதில் கோல் திருப்பியது. அந்த அணி கேப்டன் ஹெர்டான் ஷாகிரி இந்த கோலை அடித்தார். இதனால் சமநிலை (1-1) ஏற்பட்டது. 77-வது நிமிடத்தில் எதிரணி வீரரின் காலில் பலமாக மிதித்த சுவிட்சர்லாந்து வீரர் ரெமோ புருலெர் நடுவரால் சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றப்பட்டதால் அதன் பிறகு அந்த அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டியதானது.

    வெற்றி பெற்ற மகிழ்ச்சியில்  ஸ்பெயின் வீரர்கள்

    வழக்கமான 90 நிமிடம் முடிவில் சமநிலை நீடித்ததால் கூடுதலாக 30 நிமிடம் ஒதுக்கப்பட்டது. அதிலும் முடிவு கிடைக்கவில்லை. இதனை அடுத்து வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ‘ஷூட்-அவுட்’ முறை கடைபிடிக்கப்பட்டது.

    பரபரப்பான பெனால்டி ஷூட்-அவுட்டில் ஸ்பெயின் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    இன்று அதிகாலை நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் இத்தாலி, பெல்ஜியம் அணிகள் மோதின.

    முதல் பாதியில் இத்தாலி அணி 2 கோல்களை அடித்தது. பெல்ஜியம் சார்பில் 47-வது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்கப்பட்டது. அதன் பின் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

    இறுதியில், இத்தாலி அணி  2-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
    உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றதும் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், இந்திய கேப்டன் விராட் கோலியின் நெஞ்சோடு சாய்ந்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

    எதிரணி கேப்டனை அரவணைத்தது ஏன் என்பது குறித்து வில்லியம்சன் அளித்த சுவாரஸ்யமான பேட்டி வருமாறு:

    இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றது மிகச் சிறந்த தருணம். இந்தியாவுக்கு எதிராக எப்போது கிரிக்கெட் விளையாடினாலும் அது கடினமாக இருக்கும் என்பது தெரியும். அதனால் கடும் முயற்சியை வெளிப்படுத்த வேண்டி இருந்தது.

    விராட் கோலி - கேன் வில்லியம்சன்

    போட்டி முழுவதும் ஒரு கத்தியின் விளிம்பில் இருப்பது போல் உணர்ந்தேன். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு கோப்பை அதிர்ஷ்டம் எங்களுக்கு கிட்டியது. ஆட்டம் முடிந்ததும் கோலியின் தோளோடு ஏன் சாய்ந்தேன் என்று கேட்கிறீர்கள்.

    எனக்கும், கோலிக்கும் இடையிலான நட்புறவு பல ஆண்டுகளுக்கு முன்பாக ஏற்பட்டது. எங்களது நட்புறவு கிரிக்கெட்டை விட ஆழமானது. அது எங்கள் இருவருக்கும் தெரியும். அதன் வெளிப்பாடு தான் அந்த இனிமையான கட்டித்தழுவல் என்றார்.
    10 அணிகள் பங்கேற்றுள்ள இப்போட்டி தொடரில் கால் இறுதிக்கு அர்ஜென்டினா, உருகுவே, பராகுவே, சிலி (ஏ பிரிவு), ஈக்வெடார் (பி பிரிவு) அடங்கிய அணிகள் தகுதி பெற்றன. பொலிவியா, வெனிசுலா அணிகள் வெளியேற்றப்பட்டன.

    47-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இப்போட்டி தொடரில் கால் இறுதிக்கு அர்ஜென்டினா, உருகுவே, பராகுவே, சிலி (ஏ பிரிவு), ஈக்வெடார் (பி பிரிவு) அடங்கிய அணிகள் தகுதி பெற்றன. பொலிவியா, வெனிசுலா அணிகள் வெளியேற்றப்பட்டன.

    கால்இறுதி ஆட்டங்கள் நாளை தொடங்குகிறது. இந்திய நேரப்படி அதிகாலை நடக்கும் முதல் கால் இறுதியில் ‘பி’ பிரிவில் 2-ம் இடம் பெறவும். ‘ஏ’ பிரிவில் 3-ம் இடம் பிடிக்க பராகுவேவும் மோதுகின்றன.

    அதேபோல் காலை 5.30 மணிக்கு தொடங்கும் மற்றொருகால் இறுதியில் ‘பி’ பிரிவில் முதலிடம் பிடித்த பிரேசில், ‘ஏ’ பிரிவில் 4-ம் இடம் பிடித்த சிலி பலப்பரீட்சை நடத்துகின்றன.

     

    உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா தோற்றதால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    லண்டன்:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. சவுத்தம்டனில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்திடம் இந்தியா தோல்வி அடைந்தது.

    அடுத்து இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

    இதில் முதல் டெஸ்ட் போட்டி வருகிற ஆகஸ்ட் 4-ந் தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது. 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் செப்டம்பர் 10-ந் தேதி தொடங்குகிறது.

    உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா தோற்றதால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    இந்த நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணி திணறும் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அலஸ்டர் குக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    இந்திய அணி சிறந்த வீரர்களை கொண்டது. ஆனால் பந்துவீச்சில் பந்து நகர்ந்ததால் எப்போதுமே அந்த வாய்ப்புகளை இங்கிலாந்து அதிகமாக பயன்படுத்தி கொள்ளும். ஆகஸ்ட் மாதத்தில் நிலைமைகள் ஈரப்பதத்துடன் இருந்தால், இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து நன்கு நகரும் வகையில் பந்துவீசும். இந்திய அணி உலகத்தரம் வாய்ந்த பேட்டிங் பிரிவை கொண்டது.

    ஆனால் அவர்களது பெரிய பலவீனம் நகரும் பந்து. அதே போல் நிலைமை இருந்தால் அந்த வாய்ப்பை அவர்களுக்கு எதிராக எப்போதும் நீங்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணியின் மாயாஜால பந்து வீச்சாளர் பிராவோ இந்திய அணியை இரண்டு முறை 1 ரன்னில் தோல்வியடைய வைத்துள்ளார்.
    இந்திய அணி 2006-ம் ஆண்டு 4 டெஸ்ட் போட்டி மற்றும் 5 ஒருநாள் தொடர் கொண்ட போட்டியில் பங்கேற்பதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றது. ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணியில் ராகுல் டிராவிட்(கேப்டன்), எம் எஸ் டோனி, முகமது கைப், ஹர்பஜன் சிங், அஜித் அகார்கர், முனாப் படேல், இர்பான், பதான், ரமேஷ் பவார், சுரேஷ் ரெய்னா, ஸ்ரீ சாந்த், ஆர்பிசிங், ராபின் உத்தப்பா, யுவராஜ் சிங், வேணுகோபால் ராவ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

    ஒருநாள் தொடர் முதலில் நடைபெற்றது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த போட்டியிலும் கடைசி பந்தில் தான் இந்திய அணி வெற்றது. இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக சர்வான் 138 பந்துகளில் 98 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் இர்பான் பதான் 3 விக்கெட்டும் அஜித் அகர்கர், ரமேஷ் பவார் 2 விக்கெட்டும் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் 1 விக்கெட் வீழ்த்தினர்.

    வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்

    இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். ஒரு பக்கம் யுவராஜ் சிங் மட்டும் நிலைத்து ஆடி அரை சதம் அடித்தார். கடைசி ஒரு ஓவரில் இந்திய அணிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது. கடைசி ஓவரை வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிராவோ வீசினார். முதல் பந்தை முனாப் படேல் சந்தித்தார். பிராவோ முதல் பந்தை யார்கர் முறையில் வீச அதனை படேல் தடுத்து ஒரு ரன் எடுத்தார். 2-வது மற்றும் 3-வது பந்தில் யுவராஜ் சிங் பவுண்டரி அடித்து அசத்தினார். கடைசி 3 பந்தில் 2 ரன் மட்டுமே தேவைப்பட்டது. ரசிகர்கள் கண்டிப்பாக இந்தியா வெற்றி அடைந்து விடும் என நம்பிக்கையோடு இருந்தனர். 

    இந்திய அணி பேட்டிங்

    தொடர்ந்து இரண்டு பவுண்டரிகள் அடித்ததும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் லாரா பிராவோவிடம் வந்து ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து 4-வது பந்தை போட பிராவோ தயாரானார். ஒரு விக்கெட் எடுத்தால் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி. 2 ரன்கள் எடுத்தால் இந்திய அணி வெற்றி என்ற நிலையில் பிராவோ 4-வது பந்தை மெதுவாக (solw ball)வீசினார். அந்த பந்தில் யுவராஜ் போல்ட் ஆனார். 

    யுவராஜ் சோகத்துடன் மைதானத்தில் இருந்த காட்சி

    இதனால் வெஸ்ட் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விக்கெட்டை இழந்த யுவராஜ் சிறிது நேரம் களத்திலேயே சோகத்துடன் உட்கார்ந்து இருந்தார். போட்டி முடிந்து அடுத்த நாள் பேட்டியில் யுவராஜ் சிங் போட்டி முடிந்த நாள் இரவில் தூக்கத்தை இழந்ததாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த போட்டியில் பிராவோவால் இந்திய அணி 1 ரன்னில் தோல்வியடைந்த நிலையில் 10 வருடம் கழித்து இதே மாதிரி ஒரு போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்தினார் பிராவோ. இதே மாதிரி ஒரு ரன்னில் இந்திய அணியை தோல்வி அடைய வைத்துள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள்

    வெஸ்ட் இண்டீஸ் இந்திய அணிகள் 4 டெஸ்ட் மற்றும் 2 டி20 போட்டியில் களந்து கொள்ள அமெரிக்கா சென்றது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதனையடுத்து முதல் டி20 போட்டி நடைபெற்றது. டாஸ் ஜெயித்த இந்திய அணியின் கேப்டன் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். 

    20 ஓவர் முடிவில் வெண்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக லீவிஸ் 49 பந்தில் 100 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் ஜடேஜா பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

    இதனையடுத்து இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா - ரஹானே களமிறங்கினார். ரஹானே 7, விராட் கோலி 16 எடுத்து வெளியேறினார். இந்நிலையில் ரோகித் - ராகுல் ஜோடி சிறப்பாக ஆடினர். ரோகித் 28 பந்தில் 68 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனையடுத்து ராகுல் - டோனி சிறப்பாக ஆடி 19 ஓவரில் 238 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரில் 8 ரன்கள் மட்டுமே தேவைபட்டது. கடைசி ஓவரை மாயஜால பந்து வீச்சாளர் பிராவோ வீசினார். 

    முதல் 5 பந்துகளில் 6 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்தார். கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்படும் நிலையில் டோனி களத்தில் இருந்தார். எப்படியும் டோனி வெற்றி பெற வைத்து விடுவார் என்ற நம்பிக்கையில் இருந்தாலும் ஒரு பக்கம் பந்து வீசுபவர் பிராவோ என்பதால் கொஞ்சம் பீதியாக தான் இருந்திருக்கும். அதுபடியே நடந்தது. கடைசி பந்தை மெதுவாக (slow ball)வீசி டோனியை கேட்ச் என்ற முறையில் அவுட் ஆக்கினார். 

    கேஎல் ராகுல் சோகத்துடன் மைதானத்தில்  இருந்த காட்சி

    அன்று யுவராஜ் சோகத்துடன் இருந்தது போல இந்த போட்டியில் கேஎல் ராகுல் இருந்தார். அவர் 51 பந்தில் 110 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். வெற்றி பெற்றிருந்தால் அவருக்கு தான் சிறந்த ஆட்டக்காரருக்கான விருது வழங்கப்பட்டிருக்கும்.

    10 வருடத்துக்கு அப்புறம் மீண்டும் இந்திய அணியை வெஸ்ட் இண்டீஸ் வீரர் 1 ரன்னில் தோல்வி அடைய வைத்திருக்கிறார்.
    ×