என் மலர்
விளையாட்டு




புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான ரவிசாஸ்திரி பயிற்சியாளராக உள்ளார். அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பையோடு அவரது பதவி காலம் முடிவடைகிறது.
இதற்கிடையே இலங்கை சென்றுள்ள இந்திய அணிக்கு ராகுல்டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இந்திய அணிக்கு பயிற்சியாளராக ரவிசாஸ்திரிக்கு பதிலாக டிராவிட் நியமிக்கப்பட வேண்டுமா? என்று முன்னாள் கேப்டன் கபில்தேவிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-
இதைபற்றி தற்போது பேச வேண்டிய தேவையில்லை. இலங்கை தொடர் முடியட்டும். அங்கு வீரர்கள் வெளிப்படுத்திய செயல் திறனை அறிந்து கொள்வோம். ஒரு புதிய பயிற்சியாளரை நியமிக்க முயற்சி செய்யலாம். அதில் எந்த தவறும் இல்லை.
தற்போது ரவிசாஸ்திரி தனது பயிற்சியாளர் பதவியில் சிறப்பாகதான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இதனால் அவரை நீக்குவதற்கு எந்த காரணமும் இல்லை.
இங்கிலாந்து தொடருக்காக கூடுதல் வீரர்களை சேர்த்து ஏற்கனவே உள்ளவர்களை அவமதிக்க வேண்டாம். இதுபோன்ற முடிவு சரியானது அல்ல. அணி தேர்வில் கேப்டனுக்கும், நிர்வாகத்துக்கும் தொடர்பு இருக்க வேண்டும்.
இவ்வாறு கபில்தேவ் கூறியுள்ளார்.


லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் முதல்நிலை வீராங்கனையான ஆஸ்லே பார்டி (ஆஸ்திரேலியா) 6-3, 7-5 என்ற செட் கணக்கில் சினி கோவாவை (செக்குடியரசு) தோற்கடித்து 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
2-ம் நிலை வீரரான டேனில் மெட்வதேவ் (ரஷியா) 6-7 (3-7), 3-6, 6-3, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் கடும் போராட்டத்துக்கு பிறகு குரோஷியாவை சேர்ந்த சிலிச்சை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
சென்னை:
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 8-ந்தேதி வரை நடக்கிறது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா சார்பில் இதுவரை 63 வீரர்களும், 52 வீராங்கனைகளும் ஆக மொத்தம் 115 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
வில்வித்தை, தடகளம், பேட்மின்டன், குத்துச்சண்டை, குதிரையேற்றம், வாள்வீச்சு, கோல்ப், ஜிம்னாஸ்டிக், ஜூடோ, துடுப்பு படகு, பாய்மரப் படகு, துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், பளு தூக்குதல், மல்யுத்தம் ஆகிய 18 விளையாட்டுகளில் இந்தியா பங்கேற்கிறது.
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி வருகிற 14-ந்தேதி டோக்கியோ புறப்பட்டு செல்கிறது. இதை இந்திய ஒலிம்பிக் சங்க செயலாளர் ராஜீவ் மேத்தா சென்னையில் நடந்த விழா ஒன்றில் தெரிவித்தார்.
115 வீரர்-வீராங்கனைகளும், பயிற்சியாளர்களும், அதிகாரிகளும் முதல் கட்டமாக செல்ல இருப்பதாக அவர் கூறினார். பயிற்சியாளர், அதிகாரி என மொத்தம் 66 பேர் ஒலிம்பிக் போட்டிக்கு செல்கிறார்கள்.
டோக்கியோ சென்றடைந்ததும் இந்திய அணியினர் 4 நாட்கள் தனிமைபடுத்தப்படுவர்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு குறைந்தபட்சம் 10 பதக்கங்கள் கிடைக்கும் என்று எதிர் பார்ப்பதாகவும் ராஜீவ் மேத்தா தெரிவித்தார்.
கொய்னியா:
47-வது கோபா அமெரிக்கா கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் நடைபெற்று வருகிறது. இதன் கால்இறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கியது.
பிரேசில் 1-0 என்ற கோல் கணக்கில் சிலியையும், பெரு பெனால்டி ஷூட்டில் பராகுவேயையும் தோற்கடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்று இருந்தன.
இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு நடந்த கடைசி கால்இறுதியில் அர்ஜென்டினா- ஈக்வடார் அணிகள் மோதின. இதில் அர்ஜென்டினா 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.
அர்ஜென்டினாவின் வெற்றிக்கு கேப்டனும், உலகின் தலைசிறந்த வீரருமான லியோனல் மெஸ்சி முக்கிய காரணமாக இருந்தார். அவரது ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. முதல் 2 கோல் அடிக்க அவர் உதவியாக இருந்தார். 3-வது கோலை அவர் அடித்தார்.
40-வது நிமிடத்தில் ரோட்ரிக்கோ டி பவுலும், 84-வது நிமிடத்தில் மார்டினசும், 93-வது நிமிடத்தில் பிரீ கிக் மூலம் மெஸ்சியும் கோல் அடித்தனர். இந்த ஆட்டத்தில் ஈக்வடார் வீரர் ஹின்கேப், 92-வது நிமிடத்தில் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
அர்ஜென்டினா அரை இறுதியில் கொலம்பியாவுடன் மோதுகிறது. முன்னதாக நடந்த கால் இறுதியில் கொலம்பியா பெனால்டி ஷூட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் உருகுவேயை தோற்கடித்தது. ஆட்டத்தின் முடிவிலும், கூடுதல் நேரத்திலும் கோல் விழாததால் பெனால்டி ஷூட் கடை பிடிக்கப்பட்டது.
பிரேசில்-பெரு அணிகள் மோதும் முதல் அரை இறுதி 6-ந்தேதியும், அர்ஜென்டினா- கொலம்பியா மோதும் 2-வது அரை இறுதி 7-ந்தேதியும் நடக்கிறது.






