search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சஞ்சய் மஞ்ச்ரேக்கர் - ஜடேஜா
    X
    சஞ்சய் மஞ்ச்ரேக்கர் - ஜடேஜா

    ஜடேஜாவை தேர்வு செய்தது மிகப்பெரிய தவறு - சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சனம்

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான 11 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள் தேர்வு குறித்து விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

    புதுடெல்லி:

    மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோற்றது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.

    வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை வீழ்த்தி முதலாவது ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான 11 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள் தேர்வு குறித்து விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

    கூடுதல் பேட்ஸ்மேனுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் 2 சுழற்பந்து வீரர்களை தேர்வு செய்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும் ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக பந்து வீசிய வேகப்பந்து வீரர் முகமது சிராஜூக்கு வாய்ப்பு கொடுக்காதது குறித்து விமர்சனம் எழுந்துள்ளது.

    இந்த நிலையில் உலக டெஸ்ட் இறுதி போட்டியில் ஜடேஜாவை தேர்வு செய்தது மிகப்பெரிய தவறு என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சாடியுள்ளார்.

    வானிலை மாற்றம் காரணமாக 2 சுழற்பந்து வீச்சாளர்களை இந்திய அணி தேர்வு செய்தது விவாதத்துக்குரிய முடிவாகும். ஜடேஜாவை சுழற்பந்து வீச்சுக்காக அல்லாமல் பேட்டிங்குக்காக தேர்வு செய்துள்ளார்கள். பேட்டிங்குக்காக ஜடேஜாவை தேர்வு செய்தது மிகப்பெரிய தவறாகும். இதை நான் எப்போதுமே எதிர்த்து வருகிறேன்.

    சிறப்பு தகுதி கொண்ட வீரர்களை அணியில் தேர்வு செய்ய வேண்டும். ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்திருந்தால், அஸ்வின், ஜடேஜா ஆகிய இருவரையும் தேர்வு செய்தது சரியாக இருந்திருக்கும்.

    ஆனால் ஜடேஜாவை அவருடைய பேட்டிங் திறமைக்காக தேர்வு செய்துள்ளார்கள். இது பெரும்பாலும் விளைவுகளையே உண்டாக்கும். விகாரியை தேர்வு செய்திருந்தால், இந்திய அணிக்கு கூடுதலாக ரன் கிடைத்திருக்கும். 170 ரன்கள் என்பது 220 அல்லது 230 ரன்களாக மாறி இருக்கலாம்.

    கூடுதல் திறமை உள்ளதற்காக ஒருவருக்கு வாய்ப்பு கொடுப்பதை இனிமேலும் இந்தியா செய்யாது என்று நினைக்கிறேன். முக்கியமான ஆட்டங்களில் திறமை எப்போதாவதுதான் பயன் தரும்.

    இவ்வாறு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.

    Next Story
    ×