என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சிமோனா ஹாலெப் 2019-ம் ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸில் செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றவர்.
    ரோமானியா நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை சிமோனா ஹாலெப். கடந்த மாதம் ரோம் நகரில் நடைபெற்ற டென்னிஸ் தொடரில் விளையாடினார். 2-வது சுற்றில் ஏஞ்சலிக் கெர்பரை எதிர்த்து விளையாடும்போது காயத்தால் வெளியேறினார்.

    அதன்பின் பிரான்ஸில் நடைபெற்ற பிரெஞ்ச் ஓபனிலும் விளையாடவில்லை. வருகிற திங்கட்கிழமை (28-ந்தேதி) விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் தொடர் தொடங்குகிறது. காயம் முழுமையாக குணமடையாததால் விம்பிள்டன் டென்னிஸில் இருந்தும் சிமோனா ஹாலெப் விலகியுள்ளார்.

    கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விம்பிள்டன் டென்னிஸ் நடைபெறவில்லை. 2019-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் சிமோனா ஹாலெப் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸை 6-2, 6-2 என நேர்செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
    10 அணிகள் பங்கேற்றுள்ள 47-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி தொடர் பிரேசிலில் நடந்து வருகிறது.

    பிரேசிலியா:

    10 அணிகள் பங்கேற்றுள்ள 47-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி தொடர் பிரேசிலில் நடந்து வருகிறது.

    இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2.30 மணிக்கு நடந்த லீக் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள உருகுவே- பொலிவியா அணிகள் மோதின.

    இரு அணிகளும் சம பலத்துடன் போராடின. 40-வது நிமிடத்தில் பொலிவியா வீரர் ஜெய்ரோ குயின் டெரோஸ் சுய கோல் அடித்தார். அவர் பந்தை தடுக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக கோல் கம்பத்துக்குள் சென்றது.

    அதன் பிறகு 2-வது பாதி ஆட்டத்தில் உருகுவேயின் நட்சத்திர வீரர் கவானி 79-வது நிமிடத்தில் கோல் அடித்தார். ஆட்ட நேர முடிவில் உருகுவே 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    உருகுவே பெற்ற முதல் வெற்றி இதுவாகும். அந்த அணி, அர்ஜென்டினாவிடம் தோற்றது, சிலி அணியுடன் டிரா செய்தது.

    இன்று அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கிய மற்றொரு ஆட்டத்தில் சிலி- பராகுவே (ஏ பிரிவு) மோதின. இதில் சிலியிடம் பந்து அதிகம் நேரம் இருந்தாலும் பராகுவே முதல் கோலை அடித்தது.

    33-வது நிமிடத்தில் பராகுவே வீரர் பிரையன் சாமுடியோ கோல் அடித்தார். அதன்பின் 58-வது நிமிடத்தில் பராகுவே 2-வது கோலை அடித்தது.

    பெனால்டி வாய்ப்பில் மிக்வெல் அல்மிரோன் கோல் அடித்தார்.

    கடைசி வரை சிலி அணியால் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்ட நேர முடிவில் பராகுவே 2-0 என்ற கோல் கணக்கில் வென்று சிலிக்கு அதிர்ச்சி அளித்தது. பராகுவே பெற்ற 2-வது வெற்றி (3 ஆட்டம்) இதுவாகும்.

    சிலி முதல் தோல்வியை (4 ஆட்டம்) சந்தித்தது. ஏற்கனவே அந்த அணி ஒரு வெற்றி, 2 டிரா பெற்று உள்ளது.

    ஐரோப்பிய கால்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தின் முடிவில் துருக்கி, பின்லாந்து, ரஷியா, வடக்கு மாசிடோனியா, ஸ்காட்லாந்து, ஸ்வோவக்கியா, போலந்து, ஹங்கேரி ஆகிய 8 அணிகள் வெளியேற்றப்பட்டன.

    ஆம்ஸ்டர்டாம்:

    16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 11-ந்தேதி தொடங்கியது. 24 நாடுகள் பங்கேற்ற இந்த தொடர் 11 நாடுகளில் நடந்து வருகிறது.

    24 அணிகள் ஆறு பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம் பெற்றன. ஒவ்வொரு அணியும் தன் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும்.

    இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்கள் பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு (நாக்- அவுட்) முன்னேறும். அதே போல் அனைத்து பிரிவிலும் 3-ம் இடம் பிடித்த அணிகளில் சிறந்த நான்கு அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். நாக்அவுட் சுற்றில் மொத்தம் 16 அணிகள் விளையாடும்

    நேற்றுடன் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன. இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த இத்தாலி, வேல்ஸ் (ஏ பிரிவு), பெல்ஜியம், டென்மார்க் (பி), நெதர்லாந்து, ஆஸ்திரியா (சி), இங்கிலாந்து, குரோஷியா (டி), சுவீடன், ஸ்பெயின் (இ), பிரான்ஸ், ஜெர்மனி (எப்) ஆகிய 12 அணிகளும் 3-ம் இடம் பிடித்த அணிகளில் சிறந்த நான்கு அணிகளாக சுவிட்சர்லாந்து (ஏ), உக்ரைன் (சி), செக்குடியரசு (டி), போர்ச்சுக்கல் (எப்) ஆகிய 4 அணிகளும் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன.

    துருக்கி, பின்லாந்து, ரஷியா, வடக்கு மாசிடோனியா, ஸ்காட்லாந்து, ஸ்வோவக்கியா, போலந்து, ஹங்கேரி ஆகிய 8 அணிகள் வெளியேற்றப்பட்டன.

    16 அணிகள் மோதும் 2-வது சுற்று ஆட்டங்கள் நாளை தொடங்குகிறது. வருகிற 29-ந்தேதி வரை நடக்கும் 2-வது சுற்றில் 8 போட்டிகள் நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி கால் இறுதிக்கு முன்னேறும்.

    நாளை இவு 9.30 மணிக்கு ஆம்ஸ்டர்டாமில் நடக்கும் ஆட்டத்தில் ஏ மற்றும் பி பிரிவுகளில் முறையே 2-ம் இடத்தை பிடித்த வேல்ஸ்-டென்மார்க் அணி கள் மோதுகின்றன.

    அதே போல் நள்ளிரவு 12.30 மணிக்கு லண்டனில் தொடங்கும் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் முதலிடம் பிடித்த இத்தாலியும், ‘சி’ பிரிவில் 2-ம் இடம் பிடித்த ஆஸ்திரியாவும் பலப் பரீட்சை நடத்துகின்றன.

    இலங்கைக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
    கார்டிப்:

    இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி 20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    முதல் டி 20 போட்டியில் வென்ற இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி கார்டிப்பில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    இங்கிலாந்து வீரர்களின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. குசால் மெண்டிஸ் 39 ரன்னும், குசால் பெராரா 21 ரன்னும் எடுத்தனர்.

    விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இங்கிலாந்து வீரர்கள்

    இங்கிலாந்து சார்பில் மார்க் வுட், அடில் ரஷித் தலா 2 விக்கெட்டும், சாம் கரன், கிறிஸ் ஜோர்டான் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். 36 ரன்களுக்குள்  4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    சாம் பில்லிங்சும், லிவிங்ஸ்டோனும் தாக்குப்பிடித்து நின்றனர். அப்போது மழை குறுக்கிட்டது. இதனால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இங்கிலாந்துக்கு 18 ஓவரில் 103 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 

    இறுதியில், இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்தது. லிவிங்ஸ்டோன் 29 ரன்னுடனும், சாம் கரன் 16 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 2-0 என டி 20 தொடரை கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருது லிவிங்ஸ்டோனுக்கு அளிக்கப்பட்டது.
    பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதிப்போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியது.
    அபுதாபி:

    பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஆண்டுதோறும் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. கொரோனா தொற்று தாக்கம் இருந்த நிலையில் 2021 சீசன் ரசிகர்கள் இன்றி நடைபெற்றது.

    பயோ-பபுள் தோல்வியடைந்து வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. 
    அதன்பின் ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டியை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தீர்மானித்தது. கடந்த 9-ம் தேதி முதல் இப்போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது.

    இந்நிலையில், பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் மொகமது ரிஸ்வான் தலைமையிலான முல்தான் சுல்தான்ஸ், வஹாப் ரியாஸ் தலைமையிலான பெஷாவர் சல்மி அணிகள் மோதின. டாஸ் வென்ற பெஷாவர் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 

    அதன்படி, முதலில் பேட் செய்த முல்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது. ஷோயப் மக்சூத் 35 பந்துகளில் 3 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 60 ரன்கள் எடுத்தார். அதிரடியாக ஆடிய 
    ரசோவ் 21 பந்துகளில் 3 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 50 ரன்கள் எடுத்தார். 

    பெஷாவர் அணி சார்பில் சமீன் குல், மொகமது இம்ரான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெஷாவர் அணி களமிறங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் பெஷாவர் அணி 9 விக்கெட்டுக்கு 159 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 47 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

     ஒரே ஓவரில் 3 விக்கெட் வீழ்த்திய தாஹிர்

    பெஷாவர் அணியில் அதிகபட்சமாக ஷோயப் மாலிக் 48 ரன்னும், கம்ரான் அக்மல் 36 ரன்னும் ரோவான் பாவெல் 23 ரன்னும் எடுத்தனர்.

    முல்தான் அணி சார்பில் தாஹிர் 3 விக்கெட்டும், இம்ரான் கான், முசாராபானி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதன்மூலம் முல்தான் சுல்தான்ஸ் அணி முதல் முறையாக பாகிஸ்தான் சூப்பர் லீக் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. 

    ஷோயப் மக்சூத் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது வென்றார்.
    உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் சென்னையை சேர்ந்த அஸ்வின் அதிக விக்கெட் கைப்பற்றி முதல் இடத்தை பிடித்தார். அவர் 14 டெஸ்டில் விளையாடி 71 விக்கெட் சாய்த்தார்.


    உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் சென்னையை சேர்ந்த அஸ்வின் அதிக விக்கெட் கைப்பற்றி முதல் இடத்தை பிடித்தார். அவர் 14 டெஸ்டில் விளையாடி 71 விக்கெட் சாய்த்தார். அவருக்கு அடுத்தபடியாக கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா) 70 விக்கெட்டும், பிராட் (இங்கிலாந்து) 69 விக்கெட்டும், சவுத்தி (நியூசிலாந்து) 56 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    ஆஸ்திரேலிய வீரர் லபுசேன் 13 டெஸ்டில் 1675 ரன் எடுத்து முதல் இடத்தை பிடித்தார். ஜோரூட்டுக்கு (இங்கிலாந்து) 2-வது இடம் கிடைத்தது. அவர் 1660 ரன் எடுத்தார்.

    போர்ச்சுக்கல் அணியில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெனால்டி மூலம் 2 கோல்களை (31 மற்றும் 60-வது நிமிடம்) அடித்தார்.

    முனிச்:

    ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் பங்கேற்ற “யூரோ” கோப்பை கால்பந்து போட்டி கடந்த 11-ந் தேதி தொடங்கியது. 24 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியில் நேற்றுடன் லீக் ஆட்டங்கள் முடிந்தன.

    “எப்” பிரிவில் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு புடாபெஸ்டில் நடந்த ஆட்டத்தில் பிரான்ஸ்- போர்ச்சுக்கல் அணிகள் மோதின. இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

    போர்ச்சுக்கல் அணியில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெனால்டி மூலம் 2 கோல்களை (31 மற்றும் 60-வது நிமிடம்) அடித்தார். பிரான்ஸ் அணிக்காக கரீம் பென்சிமா இரண்டு கோல்களை (45-வது நிமிடம் பெனால்டி மற்றும் 47-வது நிமிடம்) அடித்தார்.

    ஜெர்மனி-அங்கேரி அணிகள் முனிச் நகரில் மோதிய மற்றொரு ஆட்டமும் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. ஜெர்மனி அணியில் ஹாவர்ட்சும் (66-வது நிமிடம்), கோரட்ஸ்காவும் (84) அங்கேரி அணியில் ஆடம் சலாயும் (11-வது நிமிடம்), ஸ்காபரும்(68) கோல் அடித்தனர்.

    “எப்” பிரிவில் 5 புள்ளிகளுடன் பிரான்ஸ் முதல் இடத்தை பிடித்து 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த அணி ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றது. 2 போட்டியில் டிரா செய்தது.

    ஜெர்மனி, போர்ச்சுக்கல் ஒரு வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வியுடன் தலா 4 புள்ளிகள் பெற்றுள்ளன. கோல்கள் அடிப்படையில் ஜெர்மனி 2-வது இடத்தை பிடித்து நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

    போர்ச்சுகல் அணி 3-வது இடத்தை பிடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறியது. ஒவ்வொரு பிரிவிலும் 3-வது இடத்தை பிடிக்கும் 4 சிறந்த அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும். இதில் போர்ச்சுகல் முதல் இடத்தை பிடித்தது.

    ‘இ’ பிரிவில் நடந்த ஆட்டத்தில் ஸ்பெயின் அணி 5-0 என்ற கோல் கணக்கில் சுலோவாகியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் சுவீடன் 3-2 என்ற கணக்கில் போலந்தை வீழ்த்தியது.

    இந்த பிரிவில் சுவீடன் முதல் இடத்தையும் ஸ்பெயின் 2-வது இடத்தையும் பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.

    2-வது சுற்றில் நுழைந்த நாடுகள் வருமாறு:-

    இத்தாலி, வேல்ஸ், சுவிட்சர்லாந்து (‘ஏ’ பிரிவு), பெல்ஜியம், டென்மார்க் (‘பி’ பிரிவு ), நெதர்லாந்து, ஆஸ்திரியா, உக்ரைன் (‘சி’ பிரிவு ), இங்கிலாந்து, குரோஷியா, செக்குடியரசு (‘டி’ பிரிவு) சுவீடன், ஸ்பெயின் (‘இ’ பிரிவு), பிரான்ஸ், ஜெர்மனி, போர்ச்சுக்கல் (‘எப்’ பிரிவு).

    துருக்கி, பின்லாந்து, ரஷியா, வடமாசிடோனியா, ஸ்காட்லாந்து, சுலோவாகியா, போலந்து, அங்கேரி ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன.

    நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் 26-ந் தேதி தொடங்குகிறது. 


    உலக டெஸ்ட் இறுதிப்போட்டிக்கான 11 பேர் கொண்ட இந்திய வீரர்கள் தேர்வு விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சவுத்தம்டன்:

    முதலாவது ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பட்டத்தை நியூசிலாந்து அணி கைப்பற்றி சாதனை படைத்தது.

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடந்தது.

    இந்தியா முதல் இன்னிங்சில் 217 ரன்னும், நியூசிலாந்து 249 ரன்னும் எடுத்தன. இந்திய அணி 2-வது இன்னிங்சில் 170 ரன்களில் சுருண்டது. இதனால் நியூசிலாந்துக்கு 53 ஓவர்களில் 139 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    அந்த அணி 45.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 140 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது. கேப்டன் வில்லியம்சன் (52ரன்), முன்னாள் கேப்டன் ரோஸ் டெய்லர் (47 ரன்) சிறப்பாக ஆடி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தனர்.

    இந்திய அணி இறுதிப்போட்டியில் தோற்றது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது. 2-வது இன்னிங்சில் கூடுதலாக ஒரு மணி நேரம் தாக்குப்பிடித்து இருந்தால் தோல்வியை தவிர்த்து இருக்கலாம். மேலும் உலக டெஸ்ட் இறுதிப்போட்டிக்கான 11 பேர் கொண்ட வீரர்கள் தேர்வு விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே இந்த போட்டியில் சிறந்த அணியைத்தான் தேர்வு செய்தோம் என்று கேப்டன் விராட் கோலி தனது முடிவை நியாயப்படுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    உலக டெஸ்ட் இறுதிப் போட்டியில் சிறந்த அணியைத்தான் (11 பேர்) நாங்கள் தேர்வு செய்தோம். இதே அணிதான் பல்வேறு வகையான ஆடுகளத்தில் வெற்றியை பெற்றிருக்கிறது.

    முதல்நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இதனால் ஆட்டம் தொடங்கிய போது மிகவும் கடினமான சூழல் ஏற்பட்டது. இதனால் 3 விக்கெட்டுகளை நாங்கள் இழந்தோம்.

    தடைகள் இல்லாமல் இருந்திருந்தால் நாங்கள் அதிக ரன்களை குவித்து இருக்க முடியும். நியூசிலாந்து பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். நாங்கள் 30 முதல் 40 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டோம்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றுவதற்கு நியூசிலாந்து அணி தகுதியானதுதான். அந்த அணியின் ஒட்டு மொத்த வீரர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    அவர்கள் தங்களது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு மூலம் எங்களுக்கு நெருக்கடியை கொடுத்தனர்.

    சிறந்த டெஸ்ட் அணியை முடிவு செய்ய குறைந்தபட்சம் 3 இறுதிப்போட்டிகளை வைத்திருக்க வேண்டும். ஒரு போட்டியை வைத்து மட்டும் முடிவு செய்ய இயலாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முதல் இன்னிங்சில் 26 ஓவர்கள் வீசி 57 ரன்களும், 2-வது இன்னிங்சில் 10.4 ஓவர்கள் வீசி 35 ரன்களும் விட்டுக்கொடுத்த பும்ராவால் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியவில்லை.
    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இங்கிலாந்து சவுத்தம்டனில் நடைபெற்றது.

    இங்கிலாந்தில் போட்டி என்றதுமே, இந்தியாவுக்கு ஆகாது என்பது தேதி அறிவித்த அன்றைக்கே ரசிகர்களுக்கும், விமர்சகர்களுக்கும் தெரிந்த விஷயம் என்றாலும், நியூசிலாந்து கூட போட்டியிடும் என நினைச்சாங்க.

    போட்டியும் 18-ந்தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் கெத்தாக போட்டிக்கு முந்தைய நாளே இந்திய அணி ஆடும் லெவனை அறிவித்தது.

    ஆடும் லெவனில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, இஷாந்த், பும்ரா ஆகியோர் இடம் பிடித்ததால் விமர்சகர்களும், ரசிகர்களும் இங்கிலாந்தில் இந்தியா இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள், இன்-ஸ்விங் வேகப்பந்து 

    வீச்சாளர்கள் இல்லாமல் களம் இறங்கப் போகிறதே, என்ன பாடுபடப் போகிறதோ என முணுமுணுத்தனர். இருந்தாலும் நன்றாக வெயில் அடித்தால் 4-வது மற்றும் ஐந்தாவது நாள் சுழற்பந்து வீச்சாளர்கள் அசத்துவார்கள் என சின்ன திருப்தி.

    நியூசிலாந்து தந்திரமாக ஆடும் லெவனை அறிவிக்கவில்லை. அந்த அணி 4 வேகப்பந்து வீச்சாளர்கள், ஒரு சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாட இருந்தது.

    திடீரென வியாழக்கிழமை இரவில் இருந்து பெய்த மழை, போட்டி தொடங்கும் வெள்ளிக்கிழமையும் விடவில்லை. 

    மேலும் நான்கு நாட்கள் சவுத்தம்டனில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

    உடனே விமர்சகர்கள், இந்தியா ஆடும் லெவனை மாற்றலாம். முகமது சிராஜ், ஷர்துல் தாகூர் போன்ற இன்-ஸ்விங் பந்து வீச்சாளர்களை களம் இறக்கலாம். இரண்டு ஸ்பின்னர்கள் தேவையில்லை என்றார்கள்.

    ஆனால், அணி நிர்வாகம் நாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பது போன்று அதே ஆடும் லெவன் அணியோடு களம் இறங்கியது. இந்திய அணி செய்த முதல் தவறு இதுதான்.

    ஆனால் நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளரை களம் இறக்காமல் ஐந்து வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. 

    விராட் கோலி

    டாஸ் நம்ம கையில் இல்லங்க.. மேலும், டாஸ்க்குக்கும் விராட் கோலிக்கும் எதிரும் புதிரும் என்பதால் அதில் தோல்வி.

    மிகவும் கடினமான ஆடுகளத்தில் ரோகித் சர்மா- சுப்மான் கில் ஜோடி 20.1 ஓவர் வரை தாக்குப்பிடித்து 62 ரன்கள் சேர்த்தார்கள்.

    விராட் கோலி, ரஹானே தாக்குப்பிடித்து விளையாடினர். ரிஷாப் பண்ட் 4 ரன்னில் தேவையில்லாமல் வெளியில் சென்ற பந்தை அடித்து அவுட்டானார். இந்திய அணியின் 2-வது மிகப்பெரிய தவறு இதுதான். ரிஷாப் பண்ட் நிலைத்து நின்றிருக்க வேண்டும்.

    அதுமட்டுமல்ல... பொறுமையாக விளையாடிய ரஹானே 49 ரன்னில் தேவையில்லாமல் டீப் மிட்விக்கெட் நோக்கி புல்ஷாட் அடிக்க ஆசைப்பட மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து தேவையில்லாமல் ஆட்டமிழந்தது இந்தியாவின் அடுத்த தப்பு.

    வழக்கம்போல் டெய்லெண்டர்ஸ்களாக கருதப்படும் கடைசி 4 விக்கெட் 35 ரன்னுக்குள் போக இந்தியா 217 ரன்னில் ஆல்அவுட்.

    நியூசிலாந்து முதல் இன்னிங்சில் முதல் விக்கெட்டுக்கு 34.2 ஓவர்கள் விளையாடிவிட்டது. பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா ஆகியோரால் நியூ பாலில் ஒன்றும் செய்ய முடியவில்லை. மூன்று பேரும் இன்-ஸ்விங் செய்யமாட்டார்கள். 

    அப்போதுதான் இந்திய அணி, ஸ்விங் பவுலரை தேர்வு செய்யாதது தவறு என உணர்ந்தது.

    நியூசிலாந்து அணி வீரர்கள்

    அஸ்வின் முதல் விக்கெட்டை வீழ்த்த, அதன்பின் நியூசிலாந்து ஆட்டம் காண ஆரம்பித்தது. 162 ரன்னிற்குள் 6 விக்கெட்டை இழந்த நியூசிலாந்து எப்படியும் 200-க்குள் ஆல்-அவுட் ஆகிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நியூசிலாந்து டெய்லெண்டர்ஸ்கள் கடைசி நான்கு விக்கெட்டுக்கு 87 ரன்கள் எடுத்துவிட்டனர். இவர்களை அடிக்க விட்டதுதான் இந்தியாவிற்கு மிகப்பெரிய இழப்பு. அத்துடன் நியூசிலாந்து 32 ரன்கள் லீட் வைத்துவிட்டது.

    கடைசி நாளான நேற்று வெயில் நன்றாக இருந்தது. ஆகவே, ஸ்விங் பெரிய அளவில் இல்லை. ஆனால் நியூசிலாந்து பவுலர்கள் பவுன்சர், குட் லெந்த் யுக்தியை கடைபிடித்து விராட் கோலி, புஜாரா, ரஹானே ஆகியோரை சொற்ப ரன்களில் சாய்த்துவிட்டனர்.

    ரிஷாப் பண்ட் 4 ரன்னில் அவுட்டாவதில் இருந்து தப்பினார். அதன்பின் முழு பொறுப்பும் அவர் மீது விழுந்தது. அவரும் அணியை சரியான திசையில் எடுத்துச் சென்றார். நியூசிலாந்து பவுலர்களால் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை.

    41 ரன்கள் எடுத்த நிலையில் டிரென்ட் பவுல்ட் வீசிய பந்தை லாங்-ஆன் திசையில் தூக்கி அடிக்க முயற்சி செய்து தேவையில்லாமல் ஆட்டமிழந்தார். இது மிகப்பெரிய தவறு.

    ரிஷாப் பண்ட் கூடுதலாக ஐந்து ஓவர்கள் நின்றிருந்தால் போட்டியின் நிலையே மாறியிருக்கும். அதன்பின் என்ன?.. 14 ரன்னுக்குள் கடைசி 3 விக்கெட்டை இழக்க இந்தியா 170 ரன்னில் சுருண்டது.

    138 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற முடிந்தது. 2-வது இன்னிங்சிலும் அஸ்வினால்தான் விக்கெட் வீழ்த்த முடிந்தது. வேகப்பந்து வீச்சாளர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

    போட்டி விறுவிறுப்பாகத்தான் சென்று கொண்டிருந்தது. நியூசிலாந்து 84 ரன்கள் எடுத்திருக்கும்போது பும்ரா பந்தில் ராஸ் டெய்லர் எளிதாக முதல் ஸ்லிப்பில் நின்றிருந்த புஜாராவிடம் கேட்ச் கொடுத்தார். அல்வா மாதிரியான கேட்சை புஜாரா தவறவிட்டார். அவர் தவற விட்டது கேட்சை மட்டுமல்ல. இந்தியாவின் போட்டியையும்தான்.

    அப்போது நியூசிலாந்துக்கு 55 ரன்கள் தேவையிருந்தது, புது பேட்ஸ்மேன் வந்திருந்தால் பந்துகளை வேஸ்ட் செய்ய வைத்திருக்கலாம். இந்தியாவின் அடுத்த மிகப்பெரிய தவறு இது. 

    கடைசி ஒரு மணி நேரம் அல்லது 15 ஓவர் இதில் 35 ரன்கள் நியூசிலாந்துக்கு தேவைப்பட்டது. ஒரு மணி நேரத்தில் 12  ஓவர்கள் வீசலாம். டெஸ்ட் போட்டியில் 12 ஓவரில் 35 ரன்கள் எளிதானது அல்ல. லெக் சைடு சென்றால் வைடு கிடையாது. லெக் சைடு பந்துகளை தொடர்ச்சியாக வீசி போட்டியை டிரா ஆக்க முயற்சி செய்திருக்கலாம். ஆனால் 7.5 ஓவரில் இலக்கை எட்ட வைத்து விட்டார்கள். இதற்கிடையில் 12 ரன்கள் தேவை என்றபோது, பும்ரா கேன் வில்லியம்சன் கொடுத்த கேட்சை பிடிக்க தவறிவிட்டார்.

    இந்த தவறுகள் எல்லாம் சேர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்தியா தோல்வியை சந்திக்க காரணமாக அமைந்துவிட்டது.

    போட்டி தொடங்குவதற்கு ஒருவாரத்திற்கு முன்னதாகவே டுவிட்டரில் பும்ரா வேண்டாம். முகமது சிராஜ்-யை அணியில் சேருங்கள் என ஹேஷ்டேக் உருவாக்கி டிரெண்ட் ஆக்கினார்கள். அது இந்திய அணி நிர்வாகத்தின் கண்ணில் படவில்லை.

    முதல் இன்னிங்சில் 26 ஓவர்கள் வீசி 57 ரன்களும், 2-வது இன்னிங்சில் 10.4 ஓவர்கள் வீசி 35 ரன்களும் விட்டுக்கொடுத்த பும்ராவால் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியவில்லை. இரண்டு இன்னிங்சிலும் டக் அவுட். இதுதான் மிச்சம்.
    வருங்கால போட்டிகளுக்கு அணியை தயார்படுத்தும் விதம் பிடிக்காததால் யூனிஸ்கான் பதவியை துறந்துள்ளதாக கூறப்படுகிறது.
    கராச்சி:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் 43 வயதான யூனிஸ்கான் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். 2022-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டி வரை அவரது ஒப்பந்தம் இருந்தது.

    இந்த நிலையில் அவர் திடீரென பேட்டிங் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார். கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாக ஒதுங்கிய அவர் அதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. வருங்கால போட்டிகளுக்கு அணியை தயார்படுத்தும் விதம் பிடிக்காததால் அவர் பதவியை துறந்துள்ளதாக கூறப்படுகிறது.

    வருகிற 25-ந்தேதி இங்கிலாந்துக்கு புறப்படும் பாகிஸ்தான் அணி அங்கு 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடர் முடிந்ததும் வெஸ்ட் இண்டீசுக்கு பயணித்து ஐந்து 20 ஓவர் போட்டி மற்றும் 2 டெஸ்டுகளில் ஆடுகிறது. பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு பேட்டிங் பயிற்சியாளர் இன்றி செல்லும் என்றும், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பேட்டிங் பயிற்சியாளர் நியமிப்பது குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தியதன் மூலம் 144 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சாம்பியன்ஷிப் பட்டத்தை நியூசிலாந்து பெற்றுள்ளது.
    சவுத்தம்டன்:

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இந்தியா 217 ரன்களும், நியூசிலாந்து 249 ரன்களும் எடுத்தன.

    32 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்த நிலையில், 5வது நாள் ஆட்டம் நிறைவடைந்தது. புஜாரா 12 ரன்னுடனும், கோலி 8 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 6வது நாளான இன்று தொடர்ந்து ஆடிய இந்தியா, விரைவில் விக்கெட்டுகளை இழந்தது.

    கேப்டன் கோலி 13 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். புஜாரா 15 ரன்கள், ரகானே 15 ரன்கள், ஜடேஜா 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். மிகவும் பொறுமையாக ஆடிய ரிஷப் பண்ட், 41 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இந்தியா 170 ரன்களில் சுருண்டது.

    இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 53 ஓவர்களில் 139 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. குறைவான ஸ்கோர் என்பதால் நியூசிலாந்து வீரர்கள் நம்பிக்கையுடன் பேட்டிங் செய்தனர். தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரையும் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வெளியேற்றினாலும் அதன் பிறகு அனுபவம் வாய்ந்த கேப்டன் கேன் வில்லியம்சனும், ராஸ் டெய்லரும் பொறுமையாக ஆடி வெற்றிப்பாதைக்கு பயணிக்க வைத்தனர். பிரதான வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீச்சு எடுபடாதது இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.

    வில்லியம்சன்-டெய்லர்


    நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 45.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 140 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதோடு, கோப்பையையும் வசப்படுத்தியது. கேப்டன் வில்லியம்சன் 52 ரன்களுடனும் (89 பந்து, 8 பவுண்டரி), ராஸ் டெய்லர் 47ரன்னுடனும் (100 பந்து, 6 பவுண்டரி) களத்தில் இருந்தனர்.

    2-வது இன்னிங்சில் மட்டும் இந்திய அணி கூடுதலாக ஒரு மணி நேரம் தாக்குப்பிடித்திருந்தால் இந்த டெஸ்ட் டிராவில் முடிந்து கோப்பையை பகிர்ந்திருக்கலாம். அவ்வாறு தான் நடக்கப்போகிறது என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களை நமது நட்சத்திர பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்பி வெறுப்பேற்றிவிட்டனர்.

    இந்த வெற்றியின் மூலம் 144 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில்  சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் அணி என்ற சாதனையை நியூசிலாந்து பெற்றுள்ளது. கடந்த 2015 மற்றும் 2019ம் ஆண்டு  நடைபெற்ற உலகக் கோப்பை ஒருநாள் போட்டிகளில் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வி அடைந்திருந்த நிலையில், இந்த வெற்றி அந்த அணிக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.  இதற்கு முன்பு கடந்த2000ம் ஆண்டில் இந்தியாவை வீழ்த்து சாம்பியன்ஸ்  கோப்பையை கைப்பற்றியதே நியூசிலாந்து அணியின் சிறப்பான பங்களிப்பாக பார்க்கப்பட்டது.

    இந்த வெற்றியின் மூலம் கடைசியாக ஆடிய 9 போட்டிகளில் ஒரு தோல்வியை கூட பெறவில்லை என்ற சிறப்பையும் நியூசிலாந்து அணி பெற்றுள்ளது. கடைசியாக ஆடிய 9 போட்டிகளில் 8 வெற்றியையும் ஒரு ட்ராவையும் அந்த அணி கண்டுள்ளது.

    வாகை சூடிய நியூசிலாந்து அணிக்கு கதாயுதத்துடன் ரூ.11¾ கோடியும், 2-வது இடம் பிடித்த இந்திய அணிக்கு ரூ.5¾ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

    கொரோனா தொற்று எதிரொலியாக அவருடன் நெருக்கமாக இருந்த மற்றவர்களும் ஜூலை 3-ந்தேதி வரை தனிமைப்படுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தல்.
    டோக்கியோ:

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக ஜப்பான் சென்றடைந்த 9 பேர் கொண்ட உகாண்டா அணியில் பயிற்சியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. உடனடியாக அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.

    இந்த நிலையில் உகாண்டா அணியில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக உள்ளூர் சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த நபரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரது பெயர் விவரம் வெளியிடப்படவில்லை. கொரோனா தொற்று எதிரொலியாக அவருடன் நெருக்கமாக இருந்த மற்றவர்களும் ஜூலை 3-ந்தேதி வரை தனிமைப்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர்.
    ×