என் மலர்
விளையாட்டு
கடைசி லீக் ஆட்டத்தில் நாங்கள் தோல்வி அடைந்த விதம் சற்று ஏமாற்றம் அளித்தது. ஆனாலும் நான் அதை பற்றி பெரிதாக கவலைப்படவில்லை. ஏனென்றால் அது நல்ல விஷயமென்று நான் நினைக்கிறேன்.
அந்த தோல்வி இறுதிப் போட்டிக்கான தகுதி சுற்றில் விளையாட்டை எப்படி மேம்படுத்த வேண்டும் என்று டெல்லி அணி வீரர்கள் சிந்திக்க ஒரு வாய்ப்பு அளிக்கும். தோல்வியை மறந்துவிட்டு அடுத்த போட்டியில் கவனத்தை செலுத்த தொடங்க வேண்டும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தை பார்த்தால் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. அதேபோல் மும்பைக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
ஆனாலும் அப்போட்டிகளில் நாங்கள் வெற்றிபெற்றோம். அந்த ஆட்டங்களை விட இன்று நாங்கள் சிறப்பாக விளையாட வேண்டும். அதை நான் நிச்சயமாக எதிர்பார்க்கிறேன். லீக் ஆட்டங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நாங்கள் 2 முறை வீழ்த்தி இருக்கிறோம்.
இதனால் நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் பிளே-ஆப் சுற்று ஆட்டங்கள் முற்றிலும் வேறுபட்டவை. எனவே எங்களுக்கான சவால் இப்போதுதான் தொடங்குகிறது.
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள் சரியான மனநிலையில் இருப்பதை உறுதி செய்கிறோம். சென்னை அணியும் பலம் வாய்ந்ததாகும். அவர்கள் போட்டி முழுவதும் புள்ளிகள் பட்டியலில் எங்களோடு சமநிலையாக இருந்தனர்.ஆகையால் நாங்கள் மதிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் சென்னை-டெல்லி அணிகள் இன்று மல்லுகட்டுகின்றன.
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லீக் சுற்று நேற்று முன்தினம் நிறைவடைந்தது. புள்ளி பட்டியலில் டாப்-4 இடங்களை பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறியது. நடப்பு சாம்பியன் மும்பை, பஞ்சாப், ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் வெளியேறின.
இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று துபாயில் இன்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) அரங்கேறுகிறது. இதில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த டெல்லி கேப்பிட்டல்சும், சென்னை சூப்பர் கிங்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டோனி தலைமையிலான சென்னை அணி லீக் சுற்றில் 14 ஆட்டங்களில் விளையாடி 9-ல் வெற்றியும், 5-ல் தோல்வியும் சந்தித்தது. இதில் கடைசி 3 ஆட்டங்களில் (ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப்புக்கு எதிராக) தொடர்ச்சியாக தோல்வியை தழுவியது சென்னை அணியின் உத்வேகத்தை சற்று பாதித்துள்ளது. இதே மைதானத்தில் பஞ்சாப்புக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் சென்னை அணி 134 ரன்னில் அடங்கியதும், இந்த இலக்கை அவர்கள் 13 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்ததும் கவனிக்கத்தக்கது.
எனவே மீண்டும் எழுச்சி பெற வேண்டும் என்றால் ஒருங்கிணைந்த பேட்டிங் அவசியமாகும். தொடக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் கெய்க்வாட்டும் (533 ரன்), பாப் டு பிளிஸ்சிஸ்சும் (546 ரன்) திருப்திகரமான தொடக்கம் தருகிறார்கள். மிடில் வரிசையில் சுரேஷ் ரெய்னா, மொயீன் அலி, கேப்டன் டோனியின் சீரற்ற பேட்டிங் பெரும்பாலும் சறுக்கி விடுகிறது. இதே போல் பந்து வீச்சிலும் அவ்வப்போது தான் நன்றாக செயல்படுகிறார்கள். ஆனாலும் நெருக்கடியான தருணங்களை கையாள்வதில் கெட்டிக்காரரான டோனியின் கேப்டன்ஷிப் அணிக்கு உதவிகரமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏற்கனவே டெல்லியிடம் லீக்கில் தோற்று இருப்பதால் அதற்கு பதிலடி கொடுக்க இதைவிட கச்சிதமான சந்தர்ப்பம் அமையாது. இதில் வெற்றி பெற்றால் சென்னை அணி 9-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதிக்கும்.
டெல்லி கேப்பிட்டல்சை எடுத்துக் கொண்டால் நடப்பு தொடரில் எல்லாவிதமான மைதானங்களிலும் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை (10 வெற்றி, 4 தோல்வியுடன் 20 புள்ளி) வெளிப்படுத்தியுள்ளது. தோற்ற 4 ஆட்டங்களில் கூட நெருங்கி வந்து தான் வெற்றியை கோட்டைவிட்டிருக்கிறார்கள். அந்த அணியில் ஷிகர் தவான் (544 ரன்), பிரித்வி ஷா (401 ரன்), கேப்டன் ரிஷாப் பண்ட் (362 ரன்), ஸ்ரேயாஸ் அய்யர் (6 ஆட்டத்தில் 144 ரன்) பேட்டிங்கில் சூப்பர் பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் அவேஷ்கான் (22 விக்கெட்), அக்ஷர் பட்டேல் (15 விக்கெட்), அன்ரிச் நோர்டியா, ரபடா, அஸ்வின் வலு சேர்க்கிறார்கள். குறிப்பாக நோர்டியா ஓவருக்கு சராசரியாக 5.59 ரன்னும், அக்ஷர் பட்டேல் 6.43 ரன்னும் விட்டுக்கொடுத்து சிக்கனத்தையும் காட்டியுள்ளனர். தசைப்பிடிப்பால் கடந்த 5 ஆட்டங்களில் ஆடாத ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளது.
இந்த சீசனில் இரண்டு லீக்கிலும் 7 விக்கெட், 3 விக்கெட் வித்தியாசங்களில் டெல்லி அணி, சென்னையை புரட்டியெடுத்தது. அது மட்டுமின்றி கடந்த ஆண்டும் இரண்டு லீக்கிலும் இவர்களிடம் சென்னை உதை தான் வாங்கியது. இதனால் டெல்லி வீரர்களின் நம்பிக்கை நிச்சயம் அதிகரித்து இருக்கும். அவர்களது பயிற்சியாளர் ரிக்கிபாண்டிங்கின் திட்டமிட்ட வழிநடத்துதலும் டெல்லி அணியின் வீறுநடைக்கு பக்கபலமாக இருக்கிறது.
கடந்த ஆண்டு முதல்முறையாக இறுதி ஆட்டத்திற்கு வந்து தோல்வி அடைந்த டெல்லி அணி, இந்த சீசனில் முதல்முறையாக கோப்பையை உச்சிமுகர்ந்து விட வேண்டும் என்பதில் கங்கணம் கட்டி நிற்கிறது. அதற்குரிய முதற்படிக்கட்டாக இன்றைய ஆட்டம் அமைந்துள்ளது.
மொத்தத்தில் நிறைய இளம் வீரர்களை உள்ளடக்கிய டெல்லியின் கம்பீரம் தொடருமா? அல்லது அனுபவத்தின் உருவமாக தென்படும் 3 முறை சாம்பியனான சென்னை அணியின் கை ஓங்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்த ஆண்டு துபாயில் நடந்த 10 ஆட்டங்களில் 2-வது பேட்டிங் செய்த அணியே 7 முறை வெற்றி கண்டிருக்கிறது. பனியின் தாக்கமும் இருப்பதால் ‘டாஸ்’ வெல்லும் அணி 2-வது பேட்டிங் செய்யவே விரும்பும்.
இந்த ஆட்டத்தில் ஜெயிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும். தோற்கும் அணி வெளியேறாது. அந்த அணிக்கு இறுதிப்போட்டியை எட்ட இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும். அதாவது நாளை நடக்கும் வெளியேற்றுதல் சுற்றில் (பெங்களூரு-கொல்கத்தா) வெற்றி பெறும் அணியுடன் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் விளையாடும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
டெல்லி: பிரித்வி ஷா, ஷிகர் தவான், ரிஷாப் பண்ட் (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், ஹெட்மயர், மார்கஸ் ஸ்டோனிஸ் அல்லது ரிபால் பட்டேல், அக்ஷர் பட்டேல், அஸ்வின், ரபடா, அன்ரிச் நோர்டியா, அவேஷ் கான்.
சென்னை: ருதுராஜ் கெய்க்வாட், பிளிஸ்சிஸ், மொயீன் அலி, அம்பத்தி ராயுடு, உத்தப்பா அல்லது சுரேஷ் ரெய்னா, டோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, வெய்ன் பிராவோ, ஷர்துல் தாக்குர், தீபக் சாஹர், ஹேசில்வுட்.
இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
அதிக சிக்சர், பவுண்டரி அடித்த அணிகள்
இந்த தொடரில் அதிக சிக்சர் விளாசிய அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் திகழ்கிறது. அந்த அணி இதுவரை 100 சிக்சர் நொறுக்கியுள்ளது. டெல்லி அணி குறைவான சிக்சர் அடித்த அணியாக (54 சிக்சர்) வலம் வந்தாலும் பவுண்டரி எண்ணிக்கையில் (212) முதலிடத்தை ஆக்கிரமித்துள்ளது.
இஸ்லாமாபாத்:
20 ஓவர் உலக கோப்பை போட்டி வருகிற 17-ந் தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.
உலக கோப்பையில் பங்கேற்கும் அணிகளில் மாற்றம் செய்ய நாளை கடைசி நாளாகும். இந்தநிலையில் 20 ஓவர் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் 3 வீரர்கள் மாற்றப்பட்டு உள்ளனர்.
ஏற்கனவே அணியில் இடம் பெற்ற பேட்ஸ்மேன் குஷ்தில் ஷா, துணை விக்கெட் கீப்பர் அசம்கான், வேகப்பந்து வீச்சாளர் முகமது ஹஸ்சைன் ஆகியோர் நீக்கப்பட்டு உள்ளனர்.
ஹைதர் அலி, சர்பராஸ் அகமது, பஹர் ஜமான் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
தற்போது பாகிஸ்தானில் நடைபெற்று வரும் தேசிய 20 ஓவர் போட்டித்தொடரில் வீரர்களின் செயல்பாடு அடிப்படையில் உலக கோப்பை அணியில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
துபாய்:
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் துபாயில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை பெங்களூர் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 164 ரன் எடுத்தது.
இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணி 55 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்தது. பின்னர் கே.எஸ்.பரத்-மேக்ஸ்வெல் ஜோடி சிறப்பாக ஆடியது.
பெங்களூர் அணி வெற்றிக்கு கடைசி பந்தில் 5 ரன் தேவைப்பட்டது. ஆவேஷ்கான் வீசிய அந்த பந்தில் கே.எஸ்.பரத் சிக்சர் அடித்தார். இதனால் பெங்களூர் த்ரில் வெற்றி பெற்றது. கே.எஸ்.பரத் 78 ரன்னும், மேக்ஸ்வெல் 51 ரன்னும் எடுத்தனர்.
வெற்றி குறித்து பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-
இது நம்ப முடியாத வெற்றியாக இருந்தது. இந்த போட்டியால் நாங்கள் எதையும் இழக்க மாட்டோம் என்பது தெரியும். புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடுவது நல்லதாகும்.
இந்த சீசனில் அவர்களை (டெல்லி) நாங்கள் 2 முறையும் தோற்கடித்து உள்ளோம். டிவில்லியர்ஸ், கே.எஸ்.பரத் ஜோடி முதலில் நன்றாக விளையாடியது. பின்னர் மேக்ஸ்வெல்-கே.எஸ்.பரத் ஜோடியின் பாட்னர்ஷிப் அருமையானது.
கே.எஸ்.பரத் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 3-வது வீரராக களம் இறங்கி சிறப்பாக விளையாட முடியும் என்பதை நாங்கள் அறிவோம். அவர் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக நன்றாக விளையாட கூடியவர்.
புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேற 163 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பது மிகவும் கடினமானது என்பதால் நாங்கள் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தோம். ரன் இலக்கை நோக்கி விளையாடி வெற்றி பெறுவது பிளே-ஆப் சுற்றுக்கு செல்லும் போது உங்களுக்கு பலவிதமான நம்பிக்கையை அளிக்கும்.
இந்த போட்டித்தொடரில் நாங்கள் அதிகமாக ரன் சேசிங் செய்யவில்லை. இதனால் 2-வது பேட்டிங்கின் போது நாங்கள் சிறப்பாக விளையாடுவது முக்கியமானதாக இருந்தது.
நாங்கள் பீல்டிங்கில் முன்னேற்றம் காண வேண்டும் என்று நான் கண்டிப்பாக நினைக்கிறேன். ஏனென்றால் பிளே-ஆப் சுற்றுக்கு வரும் போது எந்த அணியும் உங்களுக்கு 2-வது வாய்ப்பை வழங்காது.
இவ்வாறு கோலி கூறினார்.










