என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்திய அணியில் வாய்ப்பில்லாததால் ரஞ்சி டிராபி தொடரில் பங்கேற்க ருதுராஜ் அவரது சொந்த மாநிலம் திரும்புவார் என கூறப்படுகிறது.
    அகமதாபாத்:

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் தொடரில் பங்கேற்பதற்காக ஆமதாபாத் வந்த இந்திய அணி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் இந்திய அணி வீரர்கள் தவான் , ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்ட வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

    இதனால் இவர்களால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் பங்கேற்க முடியாத நிலை உருவானது.கொரோனா பாதிப்புக்கு ஆளான தவன் மற்றும் ஸ்ரேயஸ் அய்யர் ஆகியோர் ஏற்கெனவே குணமடைந்துவிட்டனர். 

    இந்த நிலையில், தற்போது மற்றொரு துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டும் தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டார்.

    எனினும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் மூத்த தொடக்க வீரர் ஷிகர் தவான் துவக்க வீராக களம் இறங்குவார் என கேப்டன் ரோஹித் சர்மா ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் இந்த போட்டியில் பங்கேற்பது குறித்து பரிசீலிக்கப்படவில்லை என தெரிகிறது.

    நியூசிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணியில் ருதுராஜ் தேர்வு செய்யப்பட்டிருந்தார். எனினும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அவருக்கு விளையாட வாய்ப்பளிக்கப்படவில்லை. 

    இந்நிலையில் ரஞ்சி டிராபி தொடரில் பங்கேற்க ருதுராஜ்  அவரது சொந்த மாநிலமான மகாராஷ்டிரா திரும்புவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான தீபக் ஹூடா, விராட் கோலி கையால் அறிமுக தொப்பியை பெற்றது பெருமை எனக் குறிப்பிட்டுள்ளார்.
    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. தவான், ஷ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்ட வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் இஷான் கிஷன், தீபக் ஹூடா போன்ற வீரர்களுக்கு களம் இறங்கும் வாய்ப்பு கிடைத்தது.

    மூன்று போட்டிகளும் அகமதாபாத்தில் நடைபெறுகிறது. முதல் போட்டி கடந்த 6-ந்தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் ஹரியானாவைச் சேர்ந்த தீபக் ஹூடா ஆடும் லெவன் அணியில் இடம் பிடித்தார். இதன்மூலம் இந்திய அணியில் அறிமுகமானார்.

    இவர் கடந்த சில ஆண்டுகளாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் தற்போதுதான் இடம் கிடைத்துள்ளது. இந்திய அணியில் இடம் பிடிக்கும்போது, விராட் கோலி அல்லது டோனி ஆகியோரில் ஒருவரிடம் இருந்து அறிமுகம் ஆகும்போது வழங்கப்படும் இந்திய அணியின் தொப்பியை பெறுவதுதான் கனவு என்றார்.

    இந்த நிலையில் முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகும் போது விராட் கோலியிடம் இருந்து தொப்பியை பெற்றார்.

    இதுகுறித்து தீபக் ஹூடா கூறுகையில் ‘‘நான் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானது, மிகவும் அற்புதமான உணர்வு. இந்திய அணியின் ஒரு பகுதியாக இருப்பதை பாக்கியமாக கருதுகிறேன். விராட் கோலி அல்லது எம்.எஸ். டோனி ஆகிய ஒருவரிடம் இருந்து இந்திய அணியின் தொப்பியை பெற வேண்டும் என்பது, என்னுடைய சிறு வயது கனவு. விராட் கோலியிடம் இருந்து தொப்பியை பெற்றது அற்புதமான உணர்வு. கவனச்சிதறலை அப்புறப்படுத்திவிட்டு, என்னுடைய செயலில் கவனம் செலுத்தினேன்.

    விராட் கோலி, ரோகித் சர்மா, ராகுல் டிராவிட் ஆகியோருடன் வீரர்களை அறையை பகிர்ந்து கொண்ட சிறந்த தருணம். அவர்களிடம் இருந்து எப்போதுமே கற்றுக் கொள்ள முடியும். அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள விரும்புகிறேன். வெளியில் இருந்து வரும் விமர்சனத்தை கண்டு கொள்ளாமல், என்னுடைய செயலில் கவனம் செலுத்துவதையே இலக்காக நிர்ணயித்துள்ளேன்’’ என்றார்.

    முன்னாள் கேப்டன்கள் டெய்லர், ரிக்கி பாண்டிங் மற்றும் மேத்யூ ஹைடன் ஆகியோர் லாங்கருக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்திருந்தனர்.
    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஜஸ்டின் லாங்கர் விலகினார். 6 மாத கால பதவி நீட்டிப்பை நிராகரித்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    லாங்கர் ராஜினாமா தொடர்பாக முன்னாள் வேகப்பந்து வீரர் ஜான்சன் டெஸ்ட் கேப்டன் கம்மின்சை கடுமையாக விமர்சித்து இருந்தார்.

    இதேபோல முன்னாள் கேப்டன்கள் டெய்லர், ரிக்கி பாண்டிங் மற்றும் மேத்யூ ஹைடன் ஆகியோர் லாங்கருக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்திருந்தனர்.

    இந்த விவகாரத்தில் கம்மின்ஸ் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவருக்கு முன்னாள் கேப்டன் கிளார்க் ஆதரவு தெரிவித்தார். இந்த நிலையில் இந்த விவகாரத்தில் கம்மின்ஸ் மவுனம் கலைத்தார். அவர் முன்னாள் வீரர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக கம்மின்ஸ் கூறியதாவது:-

    ஜஸ்டின் லாங்கருடன் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. தனது பயிற்சி பணி தீவிரமானது என அவரே ஒப்புக்கொண்டுள்ளார். இதற்காக லாங்கர் வீரர்களிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார். மன்னிப்பு தேவையற்றது என நான் நினைக்கிறேன்.

    அவரது அணுகுமுறையால் எங்களுக்கு பிரச்சினை இல்லை. இந்த விவகாரத்தில் கிரிக்கெட் வாரியம் துணிச்சலான முடிவை எடுத்தது. ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு சேவை செய்வதே எங்களது முதல் கடமையாகும். நீங்கள் (முன்னாள் வீரர்கள்) எப்படி உங்கள் சக வீரர்களுக்காக போராடுகிறீர்களோ அதுபோல் நானும் போராடுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் போட்டியின் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் 873 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.
    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒருநாள் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு இருந்தது.

    பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் 873 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 828 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 807 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார்.

    விராட் கோலியை, ரோகித் சர்மா நெருங்கியுள்ளார். அவரை விட 21 ரேங்கிங் புள்ளிகள் மட்டுமே பின் தங்கி இருக்கிறார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு பிறகு ரோகித் சர்மா 2-வது இடத்துக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    முதல் போட்டியில் ரோகித் சர்மா அபாரமாக ஆடினார். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் அவரது ஆட்டம் மோசமாக இருந்தது. கடைசி போட்டியில் திறமையை வெளிப்படுத்தினால் அவரால் 2-வது இடத்திற்கு முன்னேற முடியும். அதே நேரத்தில் விராட் கோலி முதல் 2 போட்டியிலும் சரியாக ஆடவில்லை. கடைசி போட்டியில் ரன்களை குவித்தால் அவர் 2-வது வரிசையை தக்கவைத்துக் கொள்ளலாம்.
    பிரசித் கிருஷ்ணாவின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. இப்படி ஒரு அபாரமான பந்துவீச்சை நான் பார்த்ததில்லை என கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
    அகமதாபாத்:

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 237 ரன் எடுத்தது.

    சூர்யகுமார் யாதவ் 64 ரன்னும் (5 பவுண்டரி), லோகேஷ் ராகுல் 48 பந்தில் 49 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். அல்ஜாரி ஜோசப், ஓடியன் சுமித் தலா 2 விக்கெட்டும், கேமர் ரோச், ஹோல்டர், ஹூசைன், பேபியன் ஆலம் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 46 ஓவர்களில் 193 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 44 ரன்னில் வெற்றி பெற்றது.

    புரூக்ஸ் அதிகபட்சமாக 44 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்), அகீல் ஹூசைன் 34 ரன்னும் (3 பவுண்டரி), ஓடியன் சுமித் 20 பந்தில் 24 ரன்னும் (1 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.

    பிரசித் கிருஷ்ணா மிகவும் அபாரமாக பந்து வீசி 12 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். 6- வது போட்டியில் ஆடிய அவருக்கு இது சிறந்த பந்துவீச்சாகும். இதற்கு முன்பு கடந்த ஆண்டு மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக புனே மைதானத்தில் 54 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றியது சிறந்ததாக இருந்தது.

    ‌ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டும், முகமது சிராஜ், யசுவேந்திர சாஹல், வாஷிங் டன் சுந்தர், தீபக்ஹூடா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    நேற்றைய போட்டியில் ரோகித் சர்மாவுடன் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரி‌ஷப்பண்ட் தொடக்க வீரராக களம் இறங்கினார். இந்த பரிசோதனை தோல்வியில் முடிந்தது.

    மிடில் ஆர்டரில் விளையாடும் ரி‌ஷப்பண்ட் 34 பந்துகளை சந்தித்து 18 ரன்களே எடுத்தார். இதேபோல ரோகித் சர்மாவும் எளிதில் ஆட்டம் இழந்தார். தொடக்க ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

    வழக்கமாக தொடக்க வரிசையில் ஆடும் தவான் உடல் தகுதியுடன் இல்லை. மயங்க் அகர்வால் தொடக்க வரிசையில் ஆடக்கூடியவர். இதேபோல 4-வது வரிசையில் களம் இறங்கிய லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக ஆடக்கூடியவர்.

    இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிபெற்று விட்டதால் தொடக்க வீரர் வரிசை குறித்து விவாதிக்கப்படவில்லை. ஆனாலும் கவாஸ்கர் இதுகுறித்து விமர்சனம் செய்திருந்தார்.

    இந்த நிலையில் ரி‌ஷப்பண்ட் தொடக்க வீரரராக விளையாடியது தற்காலிக பரிசோதனையே அது நிரந்தரம் இல்லை என்று இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    மாறுபட்ட முறையில் சிந்தனை செய்து ரி‌ஷப்பண்ட் தொடக்கவீரராக களம் இறக்கப்பட்டார். இதை அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றிருப்பார்கள். இது தற்காலிக முயற்சியே நிரந்தரமானது அல்ல. அடுத்த போட்டியில் ஷிகர் தவான் விளையாடுவார். ஒரே ஒரு போட்டிக்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரை கைப்பற்றியது. சிறந்த உணர்வாக கருதுகிறேன். அவர்கள் சில வகைகளில் சவால் கொடுத்தனர். லோகேஷ் ராகுலும், சூர்யகுமார் யாதவும் நல்ல பார்ட்னர்ஷிப்பை கொடுத்தனர். இருவரிடமும் நல்ல முதிர்ச்சி தெரிந்தது.

    அனைத்து பந்துவீச்சாளர்களும் சிறப்பாக பந்து வீசினார்கள். பிரசித் கிருஷ்ணாவின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. இப்படி ஒரு அபாரமான பந்துவீச்சை நான் பார்த்ததில்லை. 6-வது பந்து வீச்சாளராக தீபக் கூடா பயன்படுத்தப்பட்டார். எப்போதுமே பந்துவீச்சாளர்களை சுழற்சி முறையில் பயன்படுத்துவது அவசியமானது.

    இவ்வாறு ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    இந்த வெற்றி மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. முதல் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இருந்தது.

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது.
    தனது இரண்டாவது சர்வதேசப் போட்டியில் விளையாடிய இந்திய இளம் வீரர் ஜுக்ராஜ் சிங் ஹாட்ரிக் சாதனை படைத்தார்
    போட்செஃப்ஸ்ட்ரூம்:

    சர்வதேச ஹாக்கி சம்மேளனம் நடத்தும் புரோ லீக் ஹாக்கிப் போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகின்றன.

    போட்செஃப்ஸ்ட்ரூம் நகரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா,  தென்னாப்பிரிக்காவை எதிர் கொண்டது. விறுவிறுப்பாக விளையாடிய இந்திய வீரர்கள் அடுதடுத்து கோல் அடித்து தென்னாப்பிரிக்காவை நிலை குலைய செய்தனர். 

    இந்திய இளம் வீரர் ஜுக்ராஜ் சிங் தொடர்ந்து மூன்று கோல் அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்தார். இந்திய வீரர்கள் குர்சாஹிப்ஜித் சிங் ,தில்ப்ரீத் சிங்  ஹர்மன்பிரீத் சிங் , அபிஷேக் , மன்தீப் சிங் ஆகியோரும் கோல் அடித்து இந்தியாவை முன்னிலை படுத்தினர்.

    தென்னாப்பிரிக்க தரப்பில் 2 கோல்கள் அடிக்கப்பட்டன. ஆட்ட நேர முடிவில் இந்தியா, தென்னாப்பிரிக்காவை 10-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
    இந்தியா இரண்டாவது ஆட்டத்தில் வரும் சனிக்கிழமை பிரான்சை எதிர்கொள்கிறது.



    இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் இஷாந்த், சாஹா உள்ளிட்டோரும் இடம் பெற மாட்டார்கள் என பி.சி.சி.ஐ. உயர் அதிகாரி உறுதிப்படுத்தி உள்ளார்.
    இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் 25ம் தேதி தொடங்குகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டி வரும் 25ம் தேதி முதல் மார்ச் 1ந் தேதி வரை பெங்களூருவில் நடைபெறுகிறது.

    இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் இஷாந்த் ஷர்மா, விருத்திமான் சாஹா, அஜிங்க்யா ரஹானே மற்றும் சேதேஷ்வர் புஜாரா ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படாது என இந்திய கிரிக்கெட் வாரிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த தொடரில் தேர்வாளர்கள் சில புதிய வீரர்களை களமிறக்க விரும்புகிறார்கள், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் அணி நிர்வாகத்தின் மற்ற மூத்த உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்த பிறகு முடிவு எடுக்கப் பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ. உயர் அதிகாரி உறுதிப்படுத்தி உள்ளார். 

    அணியில் இடம் இல்லை என்பது தேர்வாளர்களால் தனித்தனியாக நான்கு பேரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ரஞ்சி போட்டியில் அவர்களது செயல் திறனை பொறுத்து புஜாரா மற்றும் ரஹானேவுக்கு இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைக்கலாம் என கருதப்படுகிறது. 

    ஆனால் இஷாந்த் மற்றும் சாஹா எதிர்காலத்தில் இந்திய அணிக்கு தேர்வு செய்ய பரிசீலிக்கப்பட மாட்டார்கள் என்று பிசிசிஐ தகவல்கள் உறுதிபடுத்தி உள்ளன.

    கோவா அணியின் ஜார்ஜ் ஓர்டிஸ் ஹாட்ரிக் கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்
    கோவா:

    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் 86-வது லீக் ஆட்டம் கோவாவின் திலக் மைதானத்தில் நடைபெற்றது. இதில் எஃப்சி கோவா அணியும், சென்னையின் எஃப்சி அணியின் மோதின. 

    ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய கோவா வீரர்கள்  தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி கோல் அடித்தனர். 

    முதல் பாதியில் அந்த அணி 4 கோல்களுடன் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் அந்த அணி மேலும் ஒரு கோல் அடித்து 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 

    இந்த ஆட்டத்தில் கோவா வீரர் ஜோர்ஜ் ஒர்டிஸ் ஹாட்ரிக் கோல் அடித்தார். மேலும் அந்த அணியை சேர்ந்த மாகன் சோட்டே மற்றும் நாராயண் தாஸ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

    சென்னை அணி தொடர்ச்சியாக 2வது தோல்வியை சந்தித்துள்ளது. முன்னாள் சாம்பியனான சென்னை அணி 16 போட்டிகளில் 19 புள்ளிகளுடன் தொடர்ந்து பட்டியலில் எட்டாவது இடத்தைப் பிடித்தது.

    ஒயிட்-பால் கிரிக்கெட்டில் கோலி பின்தங்கியிருப்பதை நம்ப முடியவில்லை என்று முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் குறிப்பிட்டுள்ளார்.
    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நேற்று அகமதாபாத்தில் உள்ள மோடி கிரிக்கெட் மைதானத்தில்  நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 18 ரன்னிலும் அவுட்டானார். 

    ஒடியன் ஸ்மித் பந்தை ஆட முயன்ற போது கோலி ஆட்டமிழந்த விதம் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் விமர்சித்துள்ளார். 

    இந்த போட்டியில், அவரது கால் சரியான நேரத்தில் முன்னோக்கி வரவில்லை என்பதை நாங்கள் கண்டோம். கோலி தனது உச்சக் கட்டத்தில் இருந்த போது இது போன்ற பந்தை அவர் எல்லைக்கு அடித்திருப்பார் என்றும்,  ஒயிட்-பால் கிரிக்கெட்டில் பின் தங்கியிருப்பதை என்னால் நம்ப முடியவில்லை என்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

    கவர் டிரைவ் ஆட்டத்தில் சிறந்த வீரர்களில் கோலியும் ஒருவர் என்பது அனைவரும் அறிந்ததுதான். இந்த நேரத்தில் அவரது தன்னம்பிக்கை குறைவாக இருப்பது போல் தெரிகிறது என்றும் முகமது கைஃப்  தெரிவித்துள்ளார்.

    குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள பிராத்வெயிட், ஈடன் ரோஸ் பிராத்வெயிட் பெயரை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார்.
    வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் கார்லோஸ் பிராத்வைட். இவரது மனைவி ஜெசிகா பெலிக்ஸ். இந்த தம்பதிக்கு நேற்று பெண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தைக்கு ஈடன் ரோஸ் என்று பெயரிட்டுள்ளனர். தனது குழந்தைக்கு இந்திய மைதானத்தின் பெய்ரை வைத்ததற்கான காரணம் பின்வருமாறு:

    2016-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.

    கொல்கத்தாவின் ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 155 ரன்களை எடுத்தது.

    அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் சாமுவேல்ஸ் மட்டும் தாக்குப்பிடித்து 85 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    கடைசி ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் 4 பந்துகளை 4 சிக்சராக விளாசி அணியை வெற்றி பெற வைத்தார் பிராத்வெயிட். இதன்மூலம் டி20 உலக கோப்பையை இரண்டாவது முறையாக வென்றது வெஸ்ட் இண்டீஸ்.

    அதன்பின், பிராத்வெயிட் பெயர் உச்சரிக்கப்பட்டாலே அந்த 4 சிக்சர்தான் ரசிகர்கள் நினைவுக்கு வரும்.

    அந்த சரித்திர வெற்றியை நினைவுகூரும் விதமாகவே தனது மகளுக்கு ஈடன் ரோஸ் என பெயர் வைத்துள்ளார் பிராத்வெயிட். 
    இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்தியாவின் பிரசித் கிருஷ்ணா 9 ஓவர்கள் வீசி 3 மெய்டன், 12 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
    அகமதாபாத்:

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது. சூர்யகுமார் யாதவ் 64 ரன்னிலும் கே.எல்.ராகுல் 49 ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் 24 ரன்னிலும், தீபக் ஹூடா 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப், ஒடியன் ஸ்மித் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது.  இந்திய பந்துவீச்சாலர்கள் அசத்தலாக பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட்டுகள் சரிந்தது. 

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 46 ஓவரில் 193 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் ஷமார் புரூக்ஸ் 44 ரன்னும், அகேல் ஹொசைன் 34 ரன்னும், ஷாய் ஹோப் 27 ரன்னும், ஒடியன் ஸ்மித் 24 ரன்னும் எடுத்தனர்.

    இதன் மூலம் 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது.

    இந்தியா சார்பில் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட், ஷர்துல் தாக்குர் 2 விக்கெட் எடுத்தனர்.

    இந்திய அணியின் கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்தது.
    அகமதாபாத்:

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகளும் அகமதாபாத்தில் உள்ள மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், 2-வது ஒருநாள் போட்டி இன்று பகல் 1.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ரிஷ்ப் ப்ண்டும் களமிறங்கினர். ரோகித் சர்மா 5 ரன்னிலும், ரிஷப் பண்ட் 18 ரன்னிலும், விராட் கோலி 18 ரன்னிலும் அவுட்டாகினர். இதனால் 43 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்து இந்தியா தத்தளித்தது. 

    அடுத்து இறங்கிய கே எல் ராகுலுடன், சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 91 ரன்கள் சேர்த்த நிலையில், ராகுல் 49 ரன்னில் ஆட்டமிழந்தார். அரை சதமடித்த சூர்யகுமார் யாதவ் 64 ரன்னில் அவுட்டானார். வாஷிங்டன் சுந்தர் 24 ரன்னிலும், தீபக் ஹூடா 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப், ஒடியன் ஸ்மித் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    ×