என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பந்து வீச்சாளர்களுக்கான ஐ.சி.சி. தரவரிசையில் இந்தியாவின் ஜுலான் கோ ஸ்வாமி 7-வது இடத்தில் நீடிக்கிறார்.
    ஐ.சி.சி.யின் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையில் இந்திய வீராங்கனை மந்தனா தொடர்ந்து முதல் 10 இடங்களுக்குள் நீடிக்கிறார். 

    மகளிர் கிரிக்கெட்டில் ஐ.சி.சி.யின் ஒருநாள் போட்டி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் இந்திய வீராங்கனை மந்தனா 663 புள்ளிகளுடன் 10வது இடம் பிடித்துள்ளார்.

    இந்திய ஒருநாள் போட்டி அணியின் கேப்டன் மிதாலி ராஜ் (696) 9-வது இடத்தில் உள்ளார்.
    பாகிஸ்தானுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில், ஸ்மித் முதல் இன்னிங்சில் 59 ரன்கள், இரண்டாம் இன்னிங்சில் 27 ரன்கள் எடுத்துள்ளார்.
    லாகூர்:

    பாகிஸ்தான்-ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லாகூரில் நடைபெறுகிறது. இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் ஆடியபோது ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித், அதிவேகமாக 6000 ரன்கள் கடநத் வீரர் என்ற சாதனையை எட்டினார். 

    இலங்கை வீரர் குமார் சங்ககாரா 152 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் விளையாடி 6000 ரன்களை கடந்து முதலிடத்தில் இருந்தார். தற்போது 151வது இன்னிங்சில் அந்த சாதனையை ஸ்மித் முறியடித்துள்ளார். அதேபோல் டெஸ்ட் போட்டி எண்ணிக்கையைப் பொருத்தவரை, சங்ககாரா 91 போட்டிகளிலும், ஸ்மித் 85 போட்டிகளிலும் இந்த இலக்கை எட்டி உள்ளனர். 

    இந்தியாவின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர், 154 இன்னிங்ஸ்களில் 6000 ரன்கள் என்ற இலக்கை எட்டினார். 

    பாகிஸ்தானுக்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டியில், ஸ்மித் முதல் இன்னிங்சில் 59 ரன்கள், இரண்டாம் இன்னிங்சில் 27 ரன்கள் எடுத்துள்ளார்.  இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 351 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இரண்டாம் இன்னிங்சை விளையாடி வருகிறது. 4ம் நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 73 ரன்கள் எடுத்திருந்தது. நாளை கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது. பாகிஸ்தான் வெற்றி பெற இன்னும் 278 ரன்கள் தேவை.
    ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் பட்டியலில் சென்னை அணியை சேர்ந்த பிராவோ 2-வது இடத்தில் உள்ளார்.
    ஐ.பி.எல். போட்டியில் அதிக விக்கெட் சாய்த்தவர் மலிங்கா. இலங்கையைச் சேர்ந்த அவர் 122 இன்னிங்சில் 170 விக்கெட் வீழ்த்தி உள்ளார். 13 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியது அவரது சிறந்த பந்து வீச்சாகும். அவர் விளையாடிய 11 ஐ.பி.எல்.லிலும் மும்பை இந்தியன்ஸ் அணியிலேயே இடம் பெற்று இருந்தார்.

    பிராவோ அவரை விட 3 விக்கெட் பின்தங்கி 2-வது இடத்தில் உள்ளார். இந்த சீசனில் மலிங்காவின் சாதனை முறியடிக்கப்பட வாய்ப்பு உள்ளது. 

    அதிக விக்கெட் வீழ்த்திய ‘டாப்5’ வீரர்கள்:- முதல் இடத்தில் மலிங்கா 170 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். சராசரி 19.79, சிறந்த பந்து வீச்சு 5/13. இரண்டாவது இடத்தில் பிராவோ 167 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சராசரி 24.31 சிறந்த பந்து 4/22. 3-வது இடத்தில் அமித் மிஸ்ரா 166 விக்கெட்டுகள். சராசரி  23.95, சிறந்த பந்து வீச்சு 5/17. 4-வது இடத்தில் சாவ்லா 157 விக்கெட்டுகள். சராசரி 27.39 சிறந்த பந்து வீச்சு 4/17. 5-வது இடத்தில் ஹர்பஜன் சிங். சராசரி 26.86 சிறந்த பந்து வீச்சு 5/18 ஆகும்.

    சி.எஸ்.கே.வின் சிறப்பான செயல்பாட்டுக்கு டோனியின் தலைமை தான் காரணம் என்று கூறி வரும் நிலையில், கேப்டன் பதவியில் இருந்து அவர் விலகி இருக்கிறார்.
    ஐ.பி.எல் போட்டியில் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சிறந்த அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் திகழ்கிறது. வேறு எந்த அணியும் சாதிக்காத வகையில் சி.எஸ்.கே. 9 முறை இறுதி போட்டிக்கு நுழைந்து சாதனை படைத்துள்ளது. இதில் 4 தடவை (2010, 2011, 2018, 2021) ஐ.பி.எல் கோப்பையை வென்று மும்பைக்கு அடுத்த படியாக உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அதிகபட்சமாக 5 முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 முறை ஐ.பி.எல்.லில் பங்கேற்றுள்ளது. சஸ்பெண்டு காரணமாக 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதில் ஒரு தடவை தவிர தான் பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி முத்திரை பதித்தது. 2020-ல் மட்டும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் 7-வது இடத்தை பிடித்தது.

    டோனி

    4 முறை சாம்பியன், 5 தடவை 2-வது இடம் என யாரும் தொட முடியாத வகையில் சி.எஸ்.கே. உச்சநிலையில் இருக்கிறது. 2020-ல் பிளே ஆப் சுற்றுக்குள் நுழையாத அந்த அணி அதில் இருந்து மீண்டு கடந்த ஆண்டு கோப்பையை வென்றது பாராட்டதக்கதாகும்.

    சி.எஸ்.கே.வின் சிறப்பான செயல்பாட்டுக்கு டோனியின் தலைமை தான் காரணம் என்று கூறினால் அது மிகையாகாது. அணியை வழிநடத்தி செல்லும் விதம், முடிவுகள், யுக்தி, வீரர்கள் தேர்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் அவர் அபாரமாக திகழ்ந்து வந்தார். ஆனால், தற்போது சி.எஸ்.கே. அணியின் கேப்டன் பதவியில் இருந்து டோனி விலகி இருக்கிறார். இது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்திருக்கிறது. 

    ஜடேஜா - டோனி
    ஜடேஜா - டோனி

    5-வது முறையாக ஐ.பி.எல் கோப்பையை சி.எஸ்.கே. வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், கேப்டன் பதவியில் இருந்து டோனி விலகி இருப்பதால், கோப்பையை வெல்லுமா... என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. இருப்பினும் புதிய கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஜடேஜா தலைமையில், சி.எஸ்.கே.வின் ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆர்வமாகவும் இருக்கிறார்கள்.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து எம்.எஸ். டோனி விலகியுள்ளதால், ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    ஐ.பி.எல். 2022 மெகா ஏலத்திற்கு முன் அணி வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். அப்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 வீரர்களை தக்க வைத்துக் கொண்டது. அதில் முதல் வீரராக ஜடேஜாவை தக்கவைத்தது. இதனால் டோனி கேப்டன் பதவியில் நீடிப்பது குறித்து விவாதம் எழுந்தது.

    அப்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் டோனி கேப்டனாக செயல்படுவார் என்று தெரிவித்தது. நாளைமறுதினம் ஐ.பி.எல். 2022 சீசன் தொடங்குகிறது. இந்த நிலையில், இன்று டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார். இதை அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.

    இதனால் ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட இருக்கிறார். கேப்டன் பதவியில் இருந்த விலகினாலும் வீரராக அணியில் இடம் பிடித்து விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவின் வருங்கால கேப்டனாகும் வாய்ப்பு ஸ்ரேயாஸ் அய்யர், ரி‌ஷப் பண்ட், ராகுல் ஆகியோரில் யாருக்கு இருக்கிறது என்பதை இந்த ஐ.பி.எல். தொடரில் காணலாம் என ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.
    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவிசாஸ்திரி பயிற்சியாளராக ஆவதற்கு முன்பு வர்ணனையாளராக பணி புரிந்தார்.

    இந்திய அணி சென்ற 20 ஓவர் உலகக்கோப்பை மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பையில் ரவி சாஸ்திரியின் வர்ணனை ஆட்டத்தை பார்ப்பவர்கள் மத்தியில் மேலும் சுவாரசியத்தை ஏற்படுத்தியது.

    இந்திய அணிக்கு பயிற்சியாளர் பொறுப்பை ஏற்ற பிறகு அவரால் வர்ணனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ரவிசாஸ்திரி தற்போது பயிற்சியாளராக இல்லை. ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் தற்போது நடைபெற இருக்கும் ஐ.பி.எல். போட்டியில் ரவிசாஸ்திரி மீண்டும் வர்ணனையாளராக களம் இறங்க இருக்கிறார்.

    இந்தநிலையில் முட்டாள் தனமான விதிகளால் வர்ணனையை தொடர முடியவில்லை என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பி.சி.சி.ஐ.) ரவிசாஸ்திரி மறைமுகமாக பாய்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இது ஐ.பி.எல்.லின் 15-வது சீசன். இதில் முதல் 11 ஆண்டுகள் நான் வர்ணனை செய்தேன். ஆனால் சில முட்டாள்தனமான விதிகளால் கடந்த சில சீசன்களாக அதை என்னால் தெரடர முடியவில்லை.

    இந்திய அணியின் எதிர்கால கேப்டனாக பல வீரர்கள் தங்களை கண்டறிய ஐ.பி.எல். ஒரு வாய்ப்பாக உள்ளது. விராட் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். ரோகித் சர்மா ‘ஒயிட்பால்’ போட்டிகளுக்கு ஒரு சிறந்த கேப்டன். அதே நேரம் இந்தியாவின் வருங்கால கேப்டனாகும் வாய்ப்பு ஸ்ரேயாஸ் அய்யர், ரி‌ஷப் பண்ட், ராகுல் ஆகியோரில் யாருக்கு இருக்கிறது என்பதை இந்த ஐ.பி.எல். தொடரில் காணலாம்.

    இவ்வாறு ரவிசாஸ்திரி கூறினார்.
    மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் பெற்றி பெற்றது.
    கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடந்த 24-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதின. இங்கிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இங்கிலாந்து வீராங்கனைகளின் அபாரமான பந்து வீச்சால் பாகிஸ்தான் விக்கெட்டுகளை இழந்து திணறியது. பாகிஸ்தான் அணி 41.3 ஓவர்களில் 105 ரன்னில் சுருண்டது.

    தொடக்க வீராங்கனை ஹிதரா அமீன் அதிகபட்சமாக 32 ரன் எடுத்தார். அதற்கு அடுத்த படியாக ஹிதரா நவாஸ் 23 ரன் எடுத்தார். 3 வீராங்கனைகள் மட்டுமே இரட்டை இலக்கை தொட்டனர். இங்கிலாந்து தரப்பில் கேத்ரின் புருண்ட், ஷோபி எக்லெஸ்டோன் தலா 3 விக்கெட் வீழ்த்தினார்கள்.

    பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 19.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 107 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டேனி வயட் 68 பந்தில் 11 பவுண்டரியுடன் 76 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

    இங்கிலாந்து அணி பெற்ற 3-வது வெற்றியாகும். அந்த அணி 6 புள்ளியுடன் 4-வது இடத்தில் உள்ளது. இந்தியாவும் அதே புள்ளியுடன் உள்ளது. ஆனால் இங்கிலாந்து ரன்ரேட்டில் முன்னிலையில் இருக்கிறது. இங்கிலாந்து கடைசி லீக் ஆட்டத்தில் வங்காளதேசதத்தை எதிர் கொள்கிறது. பாகிஸ்தான் 5-வது தோல்வியை தழுவியது.
    கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்று வரும் டபிள்யூ.டி.டி. டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சரத்கமல் அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.
    தோகா:

    கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்று வரும் டபிள்யூ.டி.டி. டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சரத்கமல் அரைஇறுதிக்கு தகுதி பெற்றார். இதன்மூலம் அவருக்கு பதக்கம் உறுதியானது.

    சென்னையை சேர்ந்த சரத்கமல் கால் இறுதியில் 11-8, 11-7, 11-4 என்ற கணக்கில் குரோஷியாவை சேர்ந்த டோமிஸ்லாவ்வை வீழ்த்தினார். அவர் அரை இறுதியில் சீனாவை சேர்ந்த யுவான் லி சென்னை சந்திக்கிறார்.
    வெஸ்ட் இண்டீசுடன் மோதிய ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டதையடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. இதனால் புள்ளிகள் அடிப்படையில் தென் ஆப்பிரிக்கா அரை இறுதிக்கு தகுதி பெற்றது.
    கிறிஸ்ட்சர்ச்:

    12-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.

    மகளிர் உலக கோப்பையில் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் ரவுண்டு ராபின் முறையில் ஒரு முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

    வெலிங்டனில் இன்று காலை நடந்த 23-வது ‘லீக்’ ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.

    மழையால் இந்தப்போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை விட்டதும் போட்டி தொடங்கியது. இதனால் ஆட்டம் 26 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

    ‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் நேர்த்தியான பந்து வீச்சால் தென்ஆப்பிரிக்கா விக்கெட்டுகள் சரிந்தன.

    அந்த அணி 5.3 ஓவர்களில் 22 ரன் எடுப்பதற்குள் 4 விக்கெட்டை இழந்தது. தென்ஆப்பிரிக்கா 10.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 61 ரன் எடுத்து இருந்த போது ஆட்டம் மீண்டும் மழையால் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை நீடித்ததால் போட்டியை தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் ஆட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டது.

    இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டன. ஆஸ்திரேலியா 12 புள்ளியுடன் முதல் இடத்தில் உள்ளது. தென்ஆப்பிரிக்கா 9 புள்ளியுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலியா ஏற்கனவே அரை இறுதிக்கு தகுதி பெற்று இருந்தது. இன்றைய ஆட்டத்தின் மூலம் தென்ஆப்பிரிக்கா அரை இறுதிக்கு முன்னேறியது. தென்ஆப்பிரிக்கா கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் இந்தியாவை வருகிற 27-ந் தேதி எதிர்கொள்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி 7 புள்ளியுடன் 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு போட்டிகள் முடிந்து விட்டன. மற்ற அணிகள் ஆட்டத்தின் முடிவை பொறுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் அரை இறுதி நிலை இருக்கிறது.
    விரலில் காயமடைந்த சூர்யகுமார் யாதவ் அதில் இருந்து மீள்வதற்கான பயிற்சி முறைகளை பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மேற்கொண்டுள்ளார் என மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா கூறினார்.
    மும்பை:

    10 அணிகள் பங்கேற்கும் 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நாளை மறுதினம் (சனிக்கிழமை) மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. கொரோனா பரவலால் அதிகமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கும் பொருட்டு இந்த முறை அனைத்து ஆட்டங்களும் மராட்டிய மாநிலத்தில் நடத்தப்படுகிறது. மும்பை, நவி மும்பையில் 55 லீக் ஆட்டங்களும், புனேயில் 15 லீக் ஆட்டங்களும் இடம் பெறுகிறது.

    மும்பையில் பெரும்பாலான போட்டிகள் நடப்பதால் உள்ளூர் அணியும், 5 முறை சாம்பியனுமான மும்பை இந்தியன்சுக்கு அது கூடுதல் அனுகூலமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில் நேற்று ஆன்லைன் மூலம் பேட்டி அளித்த மும்பை கேப்டன் ரோகித் சர்மா இது தொடர்பான கேள்விக்கு அளித்த பதில் வருமாறு:-

    நீங்கள் ஏலத்தை பார்த்து இருப்பீர்கள். இது கொஞ்சம் புதிய அணி. அணிக்கு நிறைய பேர் புதிதாக வருகை தந்துள்ளனர். அதாவது அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களில் 70-80 சதவீதம் பேருக்கு இதற்கு முன்பு மும்பையில் விளையாடிய அனுபவம் கிடையாது. அதனால் மும்பையில் விளையாடுவது எங்களுக்கு கூடுதல் சாதகமாக இருக்கும் என்பதில் நம்பிக்கை இல்லை. தற்போதைய மும்பை அணியில் நான், சூர்யகுமார் யாதவ், பொல்லார்ட், இஷான் கிஷன், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் மட்டுமே மும்பை மண்ணில் விளையாடி இருக்கிறோம். அதுவும் கடந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரின் போது மற்ற அணிகள் எல்லாம் மும்பையில் விளையாடிய நிலையில், எங்களுக்கு இங்கு ஒரு ஆட்டத்தில் கூட ஆடுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. சொல்லப்போனால் நாங்களே இப்போது 2 ஆண்டுகள் கழித்து தான் மும்பையில் விளையாட உள்ளோம். எனவே எங்களுக்கு சாதகம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

    விரலில் காயமடைந்த சூர்யகுமார் யாதவ் அதில் இருந்து மீள்வதற்கான பயிற்சி முறைகளை பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மேற்கொண்டுள்ளார். அவர் நன்றாக குணமடைந்து வருகிறார். விரைவில் அணியுடன் இணைவார். ஆனால் அவர் தொடக்க ஆட்டத்தில் விளையாடுவாரா? மாட்டாரா? என்ற தகவலை உங்களிடம் சொல்ல முடியாது. முடிந்த அளவுக்கு அவரை சீக்கிரம் பெறுவதற்கு முயற்சிக்கிறோம். உடல்தகுதி பெற்று விட்டதற்கான ஒப்புதலை தேசிய கிரிக்கெட் அகாடமி வழங்கியதும் அணியுடன் இணைந்து விடுவார்.

    ‘மன்கட்’ முறையில் ரன்-அவுட் செய்யப்படுவது அதிகாரபூர்வமாகிறது. அதை நாம் பின்பற்றி தான் ஆக வேண்டும். எனவே பவுலிங் முனை பேட்ஸ்மேன்கள் கூடுதல் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம். பேட்ஸ்மேன் பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆகும் போது, எதிர்முனையில் உள்ள பேட்ஸ்மேன் முனை மாறினாலும் கூட புதிதாக வரும் பேட்ஸ்மேன் தான் அடுத்த பந்தை எதிர்கொள்ள வேண்டும் என்ற புதிய விதிமுறை வரவேற்கத்தக்கது. இது நல்ல உத்வேகத்துடன் பந்துவீசிக் கொண்டிருக்கும் போது பவுலருக்கு அடுத்த விக்கெட்டையும் வீழ்த்துவதற்கு கூடுதல் வாய்ப்பாக அமையும். அது மட்டுமின்றி எதிரணிக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுப்பதற்கும் நல்ல வாய்ப்பாக இருக்கும்.

    இதே போல் டி. ஆர்.எஸ்.-ன்படி இரு முறை அப்பீல் செய்யலாம் என்ற விதிமுறையும் சிறப்பானது. ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் டி.ஆர்.எஸ்.-ன்படி 2 முறை அப்பீல் செய்யும் போது, அது ஐ.பி.எல். போட்டியிலும் இருக்க வேண்டும். எனவே இது அருமையான முடிவு.

    இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

    மும்பை இந்தியன்ஸ் அணி தனது தொடக்க ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்சை 27-ந்தேதி சந்திக்கிறது. தொடக்க வீரராக தன்னுடன் இணைந்து இஷான் கிஷன் ஆடுவார் என்றும் ரோகித் சர்மா குறிப்பிட்டார்.

    ஐபிஎல் போட்டியில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி 25 சதவீதம் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மும்பை:

    ஐ.பி.எல். போட்டி அமைப்பு குழு சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘கொரோனா தொற்று காரணமாக ஒரு குறுகிய இடைவெளிக்கு பிறகு ஸ்டேடியத்துக்கு திரும்பும் ரசிகர்களை ஐ.பி.எல். போட்டி வரவேற்கிறது. 

    இந்த போட்டி மிகவும் முக்கியமான தருணமாக இருக்கும். மும்பை, நவிமும்பை, புனேயில் நடைபெறும் இந்த போட்டியில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி 25 சதவீதம் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    போட்டிக்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கியது.
    இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்காளதேச அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
    செஞ்சூரியன்:

    தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் வங்காளதேச அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டியில்  வங்காளதேச அணியும்,  2வது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியும் வெற்றி பெற்றிருந்தன.

    இந்நிலையில் 3வது ஒருநாள் போட்டி செஞ்சூரியனில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங்  செய்தது .

    தொடக்கம் முதலே வங்காளதேச அணி வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க வீரர்கள் தடுமாறினர். 

    37 ஓவர்கள் முடிவில் 154 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்கா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக அந்த அணியின் ஜனிமேன் மாலன் 39 ரன்கள் எடுத்தார். வங்காளதேச பந்து வீச்சாளர்  தஸ்கின் அகமது 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார் .

    பின்னர் 155 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய வங்காளதேச அணி 26.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. 

    கேப்டன் தமீம் இக்பால் 87 ரன்கள் குவித்து கடைசிவரை அவுட்டாகாமல் இருந்தார். இதையடுத்து  9 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றி பெற்றது .

    இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் வங்காளதேச அணி கைப்பற்றியதுடன்,  தென் ஆப்பிரிக்காவை சொந்த மண்ணில் முதல் முறையாக வீழ்த்தி சாதனை படைத்துள்ளது. 
    ×