என் மலர்
விளையாட்டு
- இந்த ஐபிஎல் போட்டிக்கான உரிமத்தை 4 பிரிவாக பிரித்து வழங்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
- இந்த ஏலத்தின் முடிவு நாளை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை:
அடுத்த 5 ஆண்டுகளுக்கான (2023-2027) ஐ.பி.எல். போட்டிக்குரிய டி.வி. ஒளிபரப்பு உரிமம் மற்றும் இணையவழி பயன்பாட்டுக்கான டிஜிட்டல் உரிமம் ஆகியவற்றுக்கான ஏலம் இன்று காலை 11 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
2018-ல் இருந்து 2022-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளுக்கு ரூ.16,347 கோடிக்கு டி.வி. ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பெற்றிருந்தது. இந்த உரிமம் நடந்து முடிந்த ஐ.பி.எல். 15-வது சீசனுடன் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் முதல்முறையாக மின்னணு ஏலம் மூலம் உரிமம் வழங்கப்பட இருக்கிறது. இந்த உரிமத்தை வாங்குவதற்காக டிஸ்னி-ஸ்டார், சோனி, ஜீ குழுமம், ரிலையன்ஸ் வியாகாம்18 உள்ளிட்ட பத்து முன்னணி நிறுவனங்கள் போட்டியிடுகின்றன.
இந்த முறை ஐ.பி.எல். போட்டிக்கான உரிமத்தை 4 பிரிவாக பிரித்து வழங்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதன்படி 'ஏ-பிரிவில்' இந்திய துணை கண்டத்துக்கு மட்டும் டி.வி. ஒளிபரப்பு உரிமம், 'பி-பிரிவில்' இந்திய துணை கண்டத்துக்கான டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம். 'சி-பிரிவில்' இந்திய துணை கண்டத்துக்கு மட்டும் ஐ.பி.எல். தொடக்க ஆட்டம், இறுதி சுற்று, பிளே-ஆப் உள்ளிட்ட குறிப்பிட்ட 18 ஆட்டங்களுக்கான டிஜிட்டல் உரிமம், கடைசியாக 'டி-பிரிவில்' உலக நாடுகளுக்கான டி.வி. ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் உரிமம் ஆகியவை தரப்படவுள்ளது.
இந்த 4 பிரிவுகளுக்கும் அடிப்படை விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்தையும் சேர்த்து மொத்தத்தில் ரூ.60 ஆயிரம் கோடி வரை வருவாய் கிடைக்கும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்த ஏலத்தில் கலந்துகொள்ளும் நிறுவனங்கள், தொகையை குறிப்பிட்டு ஏலம் கேட்பார்கள். இரண்டு அல்லது 3 ரவுண்டுகள் ஏலம் கேட்க வாய்ப்பு வழங்கப்படும். யார் அதிக தொகைக்கு கேட்கிறார்களோ அவர்களுக்கு உரிமம் ஒதுக்கப்படும். ஆனால் அதிக தொகை கேட்டுக் கொண்டே போனால் ஏலம் மறுநாள் கூட நீடிக்கும்.
இந்த ஏலத்திற்கான முடிவு நாளை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கிரிக்கெட் விளையாட்டு தொடர்ந்து பரிணாம வளர்ச்சி அடைந்து வருவதாக சவுரவ் கங்குலி தெரிவித்தார்.
- இன்று கிரிக்கெட் வீரர்கள் கோடிகளில் சம்பாதிப்பதாக தெரிவித்துள்ளார்.
மும்பை:
ஐ.பி.எல். தொடரின் 15-வது சீசன் நடைபெற்று முடிந்தது. இதில் இந்த ஆண்டு அறிமுகமான குஜராத் டைடன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடரை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அதேபோல கிரிக்கெட் வீரர்கள் மத்தியிலும் ஐ.பி.எல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. உலக அளவிலான சிறந்த வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் இ.பி.எல்-ஐ (இங்கிலிஷ் பிரீமியர் லீக்) விட ஐபிஎல் தொடர் அதிக வருமானத்தை பெறுவதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறியதாவது:-
கிரிக்கெட் போட்டி தொடர்ந்து பரிணாமவளர்ச்சி அடைந்து வருகிறது. என்னை போன்ற வீரர்கள் சில நூறுக்களை சம்பாதித்தோம். இன்று உள்ள வீரர்கள் கோடிக்களில் சம்பாதிக்கின்றனர். இந்த விளையாட்டு ரசிகர்களால், இந்திய மக்களால், பிசிசிஐயால் நடத்தப்பட்டு வருகிறது. இ.பி.எல்லை விட ஐ.பி.எல் அதிக வருமானத்தை பெறுகிறது. இந்த விளையாட்டு தொடர்ந்து வலுவடைந்து வருவது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.
இவ்வாறு கங்குலி தெரிவித்தார்.
- 2011 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் தோற்றவுடன் எங்கள் தேசமே சோகத்தில் ஆழ்ந்தது என கூறினார்.
- பாகிஸ்தான் அணி நிர்வாகம் செய்த நியாயமற்ற செயலால், நாங்கள் தோற்றுவிட்டோம் என கூறினார்.
இஸ்லாமாபாத்:
இந்தியா -பாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டிகளுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் அதிகம். குறிப்பாக உலகக்கோப்பை போட்டியில் இரு அணிகள் மோதுகிறது என்றால் பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழும். இந்நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி போட்டியில் எம்.எஸ்.டோனி தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்த்து விளையாடியது.
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன்பின் இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்திய இந்தியா 28 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது. அந்த போட்டியில் பாகிஸ்தானை சேர்ந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் உடற்தகுதி காரணமாக இடம் பெறவில்லை. இந்நிலையில் அந்த போட்டியில் தனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தால் பாகிஸ்தான் இந்தியாவை தோற்கடித்திருக்கும் என அக்தர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சோயப் அக்தர் கூறியதாவது:-
2011 உலகக் கோப்பை அரையிறுதியில் பாகிஸ்தான் அணியின் நிர்வாகம் செய்த செயல் நியாயமற்றது. என்னுடைய கிரிக்கெட் பயணத்தில் கடைசி 2 ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளது என்று எனக்கு தெரியும். அதனால் உலகக் கோப்பையை வென்றுவிட்டு விடை பெறலாம் என்று ஆசைப்பட்டேன். ஆனால் உடற்தகுதியை காரணம் காட்டி அணி நிர்வாகம் எனக்கு வாய்ப்பு தரவில்லை.
ஒருவேளை அரையிறுதிப் போட்டியில் நான் விளையாடியிருந்தால் நிச்சயம் சச்சின் மற்றும் சேவாக்கை அவுட் செய்து இந்தியாவுக்கு தோல்வியை பரிசளித்திருப்பேன். ஆனால் நான் இல்லாமல் பாகிஸ்தான் தோற்றுவிட்டது. அந்த ஆட்டத்தை பார்த்து வேதனையாக இருந்தது. அதேபோல்தான் எனது தேசமும் இருந்தது.
இவ்வாறு சோயப் அக்தர் கூறினார்.
- ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆப்கானிஸ்தானின் ஷஷாய், ரஹ்மதுல்லா குர்பாஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 83 ரன் எடுத்தது.
- ஆப்கானிஸ்தானின் நஜிபுல்லா சட்ரன் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
ஹராரே:
ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது.
முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. சிக்கந்தர் ராசா அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்தார்.
ஆப்கானிஸ்தான் சார்பில் நிஜத் மசூத் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷஷாய் 45 ரன்கள் எடுத்தார். ரஹமதுல்லா குர்பாஸ் 33 ரன்கள் எடுத்தார்.
கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய நஜிபுல்லா சட்ரன் 25 பந்தில் 3 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 44 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார்.
இறுதியில், ஆப்கானிஸ்தான் 19.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 160 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என ஆப்கானிஸ்தான் முன்னிலை பெற்றுள்ளது.
- ரொனால்டோவுக்கு எதிரான பாலியல் வழக்கு லாஸ் வேகாஸ் நகர கோர்ட்டில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
- அமெரிக்காவை சேர்ந்த கேத்ரின் மேயோர்க்கா என்பவர் ரொனால்டோவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார்.
லாஸ் ஏஞ்சல்ஸ்:
போர்ச்சுக்கல் கால்பந்து நட்சத்திர வீரர் ரொனால்டோவுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கை அமெரிக்க கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
2009ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த கேத்ரின் மேயோர்கா என்பவர், பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ லாஸ்வேகாஸ் ஓட்டலில் வைத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு தொடுத்து இருந்தார். ஆனால் இதனை ரொனால்டோ மறுத்து வந்தார்.
இந்த வழக்கு லாஸ் வேகாஸ் நகர கோர்ட்டில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ரொனால்டோவுக்கு எதிரான சாட்சியங்கள் நம்பகத்தன்மை இல்லாமல் இருக்கிறது என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்,
- நியூசிலாந்தின் மிட்செல், பிளெண்டல் ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 236 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
- டெஸ்டில் 5-வது விக்கெட்டுக்கு நியூசிலாந்து ஜோடியின் சிறந்த பார்ட்னர்ஷிப் இதுதான்.
நாட்டிங்காம்:
இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது.
முதலில் பேட் செய்த நியூசிலாந்து தொடக்க நாளில் 4 விக்கெட் இழப்புக்கு 318 ரன்கள் எடுத்திருந்தது. டேரில் மிட்செல் 81 ரன்னுடனும், விக்கெட் கீப்பர் டாம் பிளெண்டல் 67 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்நிலையில், 2-வது நாளான நேற்று மிட்செல், பிளெண்டல் இருவரும் தங்களது சதத்தை நிறைவு செய்தனர். அணியின் ஸ்கோர் 405-ஆக உயர்ந்த போது பிளன்டெல் 106 ரன்னில் ஆட்டமிழந்தார்.
டெஸ்டில் 5-வது விக்கெட்டுக்கு நியூசிலாந்து ஜோடியின் சிறந்த பார்ட்னர்ஷிப் இதுதான். இதற்கு முன் நாதன் ஆஸ்டில், கிரேக் மெக்மில்லன் ஜோடி 2000-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக 222 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.
இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டேரில் மிட்செல் 190 ரன்னில் ஆட்டமிழந்தார். பிரேஸ்வெல் 49 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 553 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 3 விக்கெட்டும், பிராட், பென் ஸ்டோக்ஸ், ஜாக் லீச் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்துள்ளது. அலெக்ஸ் லீசு 34 ரன்கள் மற்றும் ஒல்லி போப் 51 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
- இந்த வெற்றி மூலம் இந்திய அணி புள்ளி பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது
- நெதர்லாந்து 31 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
ஆன்ட்வெர்ப்:
புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 9 நாடுகளை சேர்ந்த ஆக்கி அணிகள் பங்கேற்றுள்ளன. இந்தியா-பெல்ஜியம் இடையிலான லீக் ஆட்டம் பெல்ஜியத்தின் ஆன்ட்வெர்ப் நகரில் நேற்றிரவு நடந்தது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முதல் பாதியில் பெல்ஜியம் 3 கோல்களும் இந்தியா ஒரு கோலும் அடித்திருந்தன. பின்னர் இரண்டாவது பாதியில் இந்திய வீரர்கள் ஹர்மன்பிரீத் சிங் 52-வது நிமிடத்திலும், ஜர்மன்பிரீத் சிங் 58-வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் அடித்தனர். இதனால் ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
இதையடுத்து பெனால்டி ஷூட்-அவுட் முறையில் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்டது. இதில் இந்தியா 5-4 என்ற கோல் கணக்கில் ஒலிம்பிக் சாம்பியனான பெல்ஜியத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.
13-வது லீக் போட்டி முடிவில் இந்தியா 10 வெற்றி, 3 தோல்வி என்று 29 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. பெல்ஜியம் 28 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறது. நெதர்லாந்து 31 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
- 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் அவனி லெகாரா முதல் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார்
- 2வது முறையாக தங்கம் வென்ற அவனிக்கு, பிரதமர் மோடி பாராட்டு
சாட்டௌரோக்ஸ்:
பிரான்சின் சாட்டௌரோக்ஸ் நகரில் பாரா உலக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 50மீ ரைபிள் பிரிவில், இந்தியாவின் இளம் பாராலிம்பிக் சாம்பியன் அவனி லெகாரா தங்கம் வென்றார்.
இறுதிப் போட்டியில் அவனி 458.3 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். ஸ்லோவாக்கியாவின் வெரோனிகா வடோவிகோவா (456.6) மற்றும் ஸ்வீடனின் அன்னா நார்மன் (441.9) ஆகியோர் முறையே வெள்ளி மற்றும் வெண்கால பதக்கங்களை வென்றனர்.
முன்னதாக செவ்வாயன்று நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் அவனி லெகாரா உலக சாதனையுடன் தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார். நேற்றைய போட்டியில் அவர் 2வது முறையாக தங்கம் வென்றுள்ளதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்:
அவனி லெக்ரா மற்றொரு தங்கத்தை வென்றதற்காக பெருமைப்படுகிறேன். புதிய உயரங்களை எட்டுவதற்கான அவரது உறுதிப்பாடு குறிப்பிடத்தக்க ஒன்று. இந்த சாதனைக்கு நான் அவளை வாழ்த்துகிறேன், மேலும் அவள் எதிர்காலம் சிறந்ததாக இருக்க வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- இன்றைய போட்டியை காண வரும் ஒடிசா ரசிகர்கள் முக கவசம் அணிவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- டிக்கெட்டுகளில் 'நோ மாஸ்க் நோ என்ட்ரி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்டாக்:
பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே ஐந்து 20 ஓவர் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. டெல்லியில் நடந்த முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையே 2-வது 20 ஓவர் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இன்று நடக்கிறது. முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு ரிஷப்பண்ட் தலைமையிலான இந்திய அணி பதிலடி கொடுக்கும் என்று இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.
இதனிடையே, கட்டாக்கில் இன்று மழை பெய்யாது என்று உறுதியாகச் சொல்ல முடியாது என மாநில வானிலை ஆய்வு மையத்தின் புவனேஸ்வர் பிரிவு இயக்குனர் பிஸ்வாஸ் தெரிவித்துள்ளார்.
வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், இருப்பினும், போட்டியை பாதிக்கக்கூடிய கனமழை இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், மழை பெய்தாலும் நிலைமையை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக ஒடிசா கிரிக்கெட் சங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இரண்டரை வருட இடைவெளிக்குப் பிறகு ஒடிசாவில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் போட்டி என்பதால், இன்றைய போட்டி கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா அரசு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், போட்டியைக் காண வரும் விளையாட்டு ரசிகர்கள் வெப்ப அலை போன்ற சூழ்நிலைகளில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முககவசம் அணியாத யாரும் மைதானத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கட்டாக காவல்துறை ஆணையர் எஸ் கே பிரியதர்ஷி தெரிவித்துள்ளார். போட்டிக்கான டிக்கெட்டுகளில் 'நோ மாஸ்க் நோ என்ட்ரி' என்று தெளிவாக எழுதப்பட்டுள்ளதாகவும், பார்வையாளர்கள் கத்திகள் உள்ளிட்ட பிற பொருட்களை கொண்டு வர வேண்டாம் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
- இந்திய அணி அடுத்ததாக ஹாங்காங் அணியுடன் மோதுகிறது
- ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் விளையாட இந்திய அணி தகுதி பெற்றது.
கொல்கத்தா:
ஆசிய கோப்பை தகுதிச் சுற்று கால்பந்து போட்டியின் 3வது சுற்று ஆட்டம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது.
போட்டியின் 83வது நிமிடத்தில் இந்திய கால்பந்து நட்சத்திர வீரர் சுனில் சேத்ரி கோல் அடித்து அணியை முன்னிலை பெறச் செய்தார். ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் ஜுபைர் அமிரி தலையால் முட்டி கோல் அடிக்க ஆட்டம் சம நிலை ஆனது.
இதையடுத்து போட்டி நிறைவடைய சில நொடிகள் இருந்த போது இந்திய வீரர் சாஹல் அப்துல் சமத் ஒரு கோல் அடித்தார். இதனால் 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்று விளையாடுவதை இந்திய அணி உறுதி செய்துள்ளது. தகுதி சுற்று போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி நாளை மறுநாள் ஹாங்காங் அணியை எதிர்கொள்கிறது.
- நார்வே செஸ் தொடரில் வென்று மீண்டும் இந்தியாவுக்கே அவர் புகழ் சேர்த்துள்ளார்
- இன்னும் பல உலக சாதனை படைத்து இந்திய மண்ணிற்கு பெருமை சேர்க்க வாழ்த்து
நார்வேயில் நடைபெற்ற குரூப் ஏ ஓபன் செஸ் போட்டித் தொடரில் தமிழகத்தை சேர்ந்த இந்திய இளம்வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார். மொத்தம் 9 சுற்றுக்கள் நடைபெற்ற இந்த போட்டியில் 6 போட்டிகளில் வெற்றி, 3 போட்டிகளில் டிரா என 7.5 புள்ளிகள் பெற்று பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரக்ஞானந்தாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது டுவிட்டர் பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது:
சில மாத இடைவெளியில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை இரு முறை வீழ்த்தி, உலகை வியப்பில் ஆழ்த்திய நம் சென்னைச் சிறுவன் பிரக்ஞானந்தா, தற்போது நார்வே செஸ் தொடரில் வென்று மீண்டும் இந்தியாவுக்கே புகழ் சேர்த்துள்ளார். வெற்றிகளும் புகழ்மாலைகளும் மென்மேலும் குவியட்டும்
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இது போல் தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
நார்வே செஸ் குரூப் ஏ ஓபன் செஸ் தொடரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று தமிழ்நாட்டிற்கும் நம் இந்திய மண்ணிற்கும் பெருமை சேர்த்த செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இன்னும் பல உலக சாதனை படைத்து இந்திய மண்ணிற்கு பெருமை சேர்க்க எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இலங்கையின் சனகா, சமீகா கருணரத்னே ஜோடி 7வது விக்கெட்டுக்கு 60 ரன்களுக்கு மேல் சேர்த்தது.
- இலங்கை வீரர் சனகா அதிரடியாக ஆடி 25 பந்தில் 54 ரன்கள் குவித்து வெற்றிக்கு வழிவகுத்தார்.
பல்லேகலே:
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலியா அணி டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த இரு டி20 போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி பல்லேகலேயில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 39 ரன்னில் அவுட்டானார். ஸ்மித் 37 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஸ்டோய்னிஸ் 38 ரன்கள் எடுத்தார்.
இலங்கை சார்பில் தீக்ஷனா 2 விக்கெட், ஹசரங்கா, ஜெயவிக்ரமா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. கேப்டன் டாசன் சனகா மட்டும் ஓரளவு போராடினார்.
நிசங்கா 27 ரன்னும், அசலங்கா 26 ரன்னும் எடுத்தனர். சனகா கடைசிவரை போராடி அணியை வெற்றிபெறச் செய்தார்
இறுதியில், இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. சனகா 54 ரன்னுடனும், கருணரத்னே 14 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இலங்கைக்கு எதிரான டி20 தொடரை ஆஸ்திரேலியா அணி 2-1 என கைப்பற்றியது.






